விஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். விஷ்ணுபுரத்தை நான் முதன்முதலில் கையிலெடுத்தது கல்லூரி இரண்டாம் ஆண்டில் – மூன்று வருடம் முன்பு. வாசிப்பின் முதற்படிநிலையில் இருந்தேன். கதாபாத்திரங்களில் என்னை பொருத்திக்கொண்டு வாசிப்பதே என் வழக்கம். இந்நிலையில் என் கையில் விஷ்ணுபுரம். எல்லாவற்றையும் வாசித்துவிட வேண்டும் என்ற வேகம் அப்போது. வாசிக்கத் துவங்கினேன். புரியவில்லை. நான் விடாமல் முன் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக கதை துலங்கியது. பல்லைக் கடித்துக்கொண்டு வாசித்தேன் என்று சொல்லமுடியாது. ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் வாசித்தேன். ஸ்ரீபாதம் முடிந்தது. கௌஸ்தூபம் என்னுள் அமைய மறுத்தது. ஒரு புள்ளிக்கு மேல் இது வேறு ஏதோ எனப்பட்டது. வாசிப்பு நின்றது. நூலகத்தில் கொடுத்துவிட்டு. ஒரே வாரத்தில் எனக்கான பிரதியை வாங்கிக்கொண்டேன். ஆனால் அலமாரியில் உறங்கியது விஷ்ணுபுரம். அலமாரியைக் கடக்கையில், விஷ்ணுபுரம் கண்ணில் படுகையில் எல்லாம், தோரணவாயிலும், வண்டி நிறைய அப்பங்களும், பண்டாரங்களும், மலக்குவியலும், மரத்தடியில் நிற்கும் திருவடியும், பிங்கலனின் கனவும் என நினைவுக்கு வந்தது. ஆனாலும் எனக்கு விஷ்ணுபுரத்தை வாசிக்க இன்னும் காலமிருக்கிறதென்றே பட்டது. இதற்கிடையில், காடு, கொற்றவை, அறம் என வாசித்தேன். உங்கள் பகவத் கீதை விளக்க உரை படித்த போது, பெரும் திறப்புகள். தத்துவம் மெதுவாக என்னுள் காலடி எடுத்து வைத்தது. தளத்தில் பல கட்டுரைகள் வாசித்தேன்.

போன வாரம் திடீரென்று கையில் விஷ்ணுபுரத்துடன் அமர்ந்தேன். ஒரு வாரத்திற்கு வேறெந்த வேலையுமில்லை. வாசிப்பதும், வாசித்ததைக் குறித்து எழுதுவது மட்டுமே வேலை. இம்முறை ஆரம்பத்திலிருந்தே விஷ்ணுபுரம் எனக்கு அர்த்தப்பட்டது. நாத மண்டபத்தில் திருவடி கேட்கும் நாதம், முதலில் நீ ஒன்றுமில்லை..என்றும் பின் நீ பெருவல்லமை கொண்டவன் என்கிறது. இந்த ஊசலாட்டத்தை என்னுள்ளும் உணர்ந்திருக்கிறேன். இப்படி பல இடங்கள் பல அர்த்தங்கள் தந்தன. பிங்கலனும், அவன் கனவுகளும் எனக்கு ரொம்பவும் நெருக்கமானது. பிங்கலனின் அவஸ்தைகள் எல்லாம் இப்போது “காமத்தின் நிழல்” என்ற சொல்லாகவே எஞ்சுகிறது என்னுள். லட்சுமி அழுகையில் அவள் முலைகளின் பால் வடிவது, பிங்கலனை தாய்மையுடன் அநிருத்தா என அழைப்பது, பல்லி பூச்சியை உண்பது…. இப்படி உச்சங்கள் பல ஸ்ரீபாதத்தில். ஒவ்வொரு கதாபாத்திரம், அவர்களின் உளவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம். மொத்தமாக அலைக்கழிப்புகளாக, குழப்பங்களாக, மானுட துக்கங்களாக, மானுட வாழ்க்கையாக, ஒரு பெரும் கேள்வியாக ஸ்ரீபாதத்தை தொகுத்துக்கொண்டேன்.

அடுத்த பகுதியான கௌஸ்தூபம், இதற்கு விடை தேடுவது போல் அமைகிறது. தத்துவ விசாரங்கள் எல்லாம் ஒரு புள்ளியில் ஒரு சம்ரசத்தை உருவாக்கி அங்கு தேங்கி நிற்பதாகப் பட்டது. கால அடிப்படையில் கௌஸ்தூபம், ஸ்ரீபாதத்திற்கு பிந்தையாதாக இருப்பினும், இரண்டாவது பகுதியாக அமைந்து ஸ்ரீபாதத்தின் கேள்விக்கு விடை தேடுகிறது கௌஸ்தூபம். இரக்கமின்றி வாழ்வின் மீது கேள்வியை போட்டு போட்டு ஒரு புள்ளியில் சமரசத்தை தொட்டு நிற்கும் தேடலாக, கௌஸ்தூபத்தை தொகுத்துக்கொண்டேன்.

அடுத்து மணிமுடி. அப்பா அப்பா.. ஸ்ரீபாதத்தின் கதாபாத்திரங்கள் எல்லாம், தொன்மங்களாக, கதைகளாக வருவது பெறும் எழுச்சியை உண்டாக்கியது. சாருகேசியின் மகன் உத்தரன் கூட தொன்மமாகிறான். நேரில கண்டவர்கள் தொன்மங்களாக ஆகி நிற்பது ஒரு பெரும் கால வெளிப் பயணத்திற்குள் என்னைத் தள்ளியது. திருவடி ஆழ்வார் மடம், பிங்கல குரு மரபு, கீச்சுக் குரல் சுமந்திரனின் அங்கத நாடகம்…. ஸ்ரீபாதம்மும், மணிமுடியும் காட்டும் விஷ்ணுபுரம் இரு எல்லைகளாக உள்ளது. முன்னது பெரும் கூச்சலாகவும் பிந்தயது பெரும் அமைதியாகவும் உள்ளது. வல்லாளன் மரபில் வந்த பத்மன், சூரிய தத்தர் மரபில் வந்த ஆரியதத்தர், என கதாபாத்திரங்களும் பெருங்க்கூச்சல், பேரமைதி என இரு எல்லைகளுள் அமைகின்றனர். யோகவிரதனும், பாவகனும், வேததத்தனின் ஓவியத்தை சிதிலமடைந்த காவிய மண்டபத்தில் பார்த்த பின், சற்று முன் பார்த்த சோலை பைத்தியம் தானே என வியந்து யோஹவிரத்ன் “இது..”
“ஆம்”
“அப்பொது நாமெல்லாம்..”
“தெரியவில்லை”
என பாவகன் பதிலளிக்கும் காட்சி FANTASY யின் உச்சம்.
கால தரிசனமாக, மணிமுடியை தொகுத்துக் கொண்டேன்.

மொத்த நாவலில் வரும் பெரும்பான்மை பிரதான கதாபாத்திரங்கள் (ஞான சபையில் வென்ற அஜிதர் முதற்கொண்டு) யாவரும் குழம்பியவர்களாக உள்ளனர். பத்மாட்சியிடமும், சந்திரகீர்த்தியிடம் மட்டும் ஒரு வித தெளிவு தொனிக்கிறது. பத்மாட்சி பக்தியை மையப் படுத்துகிறாள். சந்திரகீர்த்தி அறத்தை. விஷ்ணுபுரம் நம் முன் வைக்கும் கேள்வி இவ்விரண்டையும் கடந்ததாக இருப்பினும், என்னால் சமரசப்படுத்திக்கொண்டு அடையக் கூடிய ஒரே தெளிவான பதில், அறம் மட்டுமே. எனக்கு பளிச்சென்று துலங்குகின்ற ஒரு பகுதியாக, அஜிதன் சந்திரகீர்த்தி உரையாடலைக் கொள்கிறேன். “உங்கள் ஞானம் விவேகமாக மாறி ஒளிவிட வேண்டும்”- இவ்வரியே தங்களை வாசித்ததிலிருந்து நான் எடுத்துக்கொண்ட சாரம்.

மொத்ததில் விஷ்ணுபுரம் ஒரு கனவு. ஒரு வரலாற்று அல்லது கால தரிசனம் . விஷ்ணுபுரம் ஒரு மகத்தான கேள்வி. மானுட வாழ்விலிருந்து உருவாகி வந்த, மானுடத்தின் முன் உள்ள மகத்தான கேள்வி. மீண்டும் மீண்டும் வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டிய படைப்பு. எனது மீள் வாசிப்பில் விஷ்ணுபுரம் மேளும் துலங்கும் என நம்புகிறேன்.மொத்ததில் எனக்கு விஷ்ணுபுரம் ஒரு மகத்தான அனுபவம்.
(மேலும் விஷ்ணுபுரம் வாசிக்கச் சிரமமாக இருப்பதாக, அது இலக்கியமே அல்ல என்று சொல்லும் லூசுகளிடம், திரும்ப வாசி என சொல்லிப்பார்த்துவிட்டேன். லூசுகள் லூசுகள்தான். கிடக்கட்டும். அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்)

இப்படிக்கு,
ஸ்ரீநிவாஸ்

அன்புள்ள சீனிவாஸ்

விஷ்ணுபுரத்தைப் பொறுத்தவரை அது அனைவரும் வாசிக்கவேண்டிய நாவல், வாசிக்கத்தக்க நாவல், வாசக சுவாரசியம் உடையது என அதன் பின்னட்டை உட்பட எந்த விளம்பரக்குறிப்பிலும் இருக்காது. கவனமாக படிக்கக்கூடிய நல்ல வாசகர்களுக்கு மட்டுமே உரியது என்றே எப்போதும் அதற்கு முன்னறிவிப்பு அளித்துவந்தேன்

ஆனால் அது வெளிவந்த 1998 முதல் இந்த 16 வருடங்களாக அது தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது. இரண்டாவது தலைமுறை வாசகர்களில்தான் அது மேலும் விரிவான வாசிப்பைப் பெற்று வருகிறது. அது இந்தியப்பண்பாட்டின், வரலாற்றின் உண்மையான சிக்கல்கள் சிலவற்றைப் பேசுகிறது என்பதே காரணம். ஏதோ ஒருவகையில் அச்சிக்கல்களை தாங்களும் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே அதை உள்வாங்கமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைபிச்சை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபேசாத பேச்செல்லாம்