‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 6

தேர்கள் புஷ்பகோஷ்டத்தின் முகப்பு முற்றத்தில் வந்து நிற்பதுவரை பூரிசிரவஸ் தவித்துக்கொண்டே இருந்தான். கூடத்தில் அமர்ந்திருக்கையில், பாண்டவர்கள் ஒவ்வொருவராக வந்தபோதும், எழுந்து வரவேற்று முகமன் சொல்லும்போதும், அவர்கள் சித்தமாகி வந்ததும் தருமனுடன் தேரில் ஏறிக்கொண்டபோதும் அவன் உள்ளே அந்த சிறிய சந்திப்பின் ஒவ்வொரு சொல்லும் மீண்டும் மீண்டும் சுழன்றுகொண்டிருந்தது. முகத்தைச்சுற்றி பறக்கும் ஈக்களை துரத்துபவன் போல அவன் அவற்றை அகற்ற முயன்றான். விலகி மீண்டும் அணுகின.

வியப்பாக இருந்தது. அந்த உரையாடல் நிகழும்போது அவன் பெரும்பாலும் அவர்கள் இருவரையும் பார்க்கவேயில்லை. அவர்கள் சொல்லில் இருக்கும் முள்பட்டதும் தன்னை மறந்து விழிதூக்கிப்பார்த்த சிலகணங்கள்தான். ஆனால் அவர்களின் தோற்றத்தின் ஒவ்வொரு நுட்பமும் அவன் நினைவில் இருந்தது. விழிகளில் இருந்த கூர்மை, உதடுகள் சுழித்ததில் கன்னங்கள் மடிந்ததில் இருந்த ஏளனம், மூக்குத்திகளின் வைரங்களுடன் இணைந்த பற்களின் ஒளி, தலையை ஒசித்தபோது கன்னத்தை தொட்டுத்தொட்டு ஆடிய குழைகள், நெற்றியிலும் செவிமுன்னும் அசைந்த சுரிகுழல்கீற்றுகள். அப்போதும் அவர்கள் அவன் முன் அமர்ந்து அச்சொற்களை சொல்லிக்கொண்டிருப்பதுபோல. அவன் பார்க்காதபோது அவர்கள் சொன்ன சொற்களை பார்த்த விழி எது?

வலுக்கட்டாயமாக தன் நோக்கை கடந்துசெல்லும் காட்சிகளில் நிலைக்கவைத்தான். ஒவ்வொன்றாகப் பார்த்து அவற்றுடன் இணைந்த நினைவுகளை மீட்டெடுத்தான். ஆனால் சிலகணங்கள் கூட அவை சித்தத்தில் நிற்கவில்லை. அள்ள அள்ள நழுவிச்சரிந்தபின் அச்சொற்களும் விழிகளும் சிரிப்புகளுமே எஞ்சின. அவற்றை கல்லில் பொறித்து எண்ணச்சுருள்களுக்குமேல் தூக்கி வைத்தது போல. இந்த எல்லைக்கு அப்பால் யானைக்கொட்டடிக்குச் செல்லும்பாதை. இதோ காவல்கோட்டம். புஷ்பகோஷ்டத்தில் இந்நேரம் இளவரசர் பதற்றத்துடன் காத்திருப்பார். ஆனால் மீண்டும் அந்த எண்ணம். அல்லது அவ்வெண்ணம் விலகவேயில்லை. அதன்மேல் இவையனைத்தும் வழிந்தோடுகின்றன.

இப்போது எங்குசெல்லப்போகிறேன்? இதோ நான் சென்றுகொண்டிருப்பது அஸ்தினபுரியின் ஒரு வரலாற்றுத்தருணம். நாளை சூதர்கள் பாடும் சந்திப்பு. ஆனால்… இல்லை, அதைப்பற்றியே எண்ணம்கொள். அதைப்பற்றி. அஸ்தினபுரியின் அரண்மனை முகப்பு. படிகள். இடைநாழி. உட்கூடம். மரப்படிகள் ஏறிச்சென்றடையும் இடைநாழி. அப்பால் தன் அறைக்குள் விப்ரருடன் பேரரசர் இருப்பார். விப்ரர் எப்போதும் அவருடன் இருக்கிறார். ஒரு சொல்கூட அவர் விப்ரரிடம் பேசுவதில்லை. பெரும்பாலும் தலையசைப்பும் விழியசைவும். என்ன நிகழும்? ஆனால் அவ்வெண்ணங்கள் நீடிக்கவில்லை. அவை வந்த விரைவிலேயே அழிந்தன. அந்தப்பேச்சு அந்தச்சிரிப்பு அந்தஉதட்டுச்சுழிப்பு அந்தப்புருவத்தூக்கல்…

புலிக்குருளைகள் தட்டித்தட்டி விளையாடிய காலொடிந்த முயல். அந்தத் தருணத்தை திரும்ப எண்ணியபோது உடல் பதறியது. ஏன் அப்படி இருந்தேன்? ஏன் என் ஆணவம் எழவில்லை? குத்தும் சொல் ஒன்றை சொல்லியிருந்தால்கூட அதன் நுனியில் எஞ்சும் குருதித்துளி இப்போது என்னை ஆறுதல்படுத்தியிருக்கும். ஆனால் விழிசரித்து உடல் வளைத்து அமர்ந்திருந்தேன். அசைவில் நோக்கில் சொல்லில் மன்றாடிக்கொண்டே இருந்தேன். அவர்கள் இருவரும் திட்டமிட்டே அங்கே வந்தார்கள். அவனை மட்டுமே நோக்கியபடி அவர்கள் உள்ளே நுழைந்தனர். வந்தமர்ந்ததுமே தேவிகை அவனுடன் சொல்லாடத் தொடங்கிவிட்டாள்.

பானுமதி துச்சளையைப்பற்றி சொன்னதை நினைவுகூர்ந்தான். ஏளனம் வழியாக கடந்து செல்கிறார்களா? கடந்தகாலத்தை உதறி தன் கணவனிடம் இணைந்துகொள்ள விழையும் பெண்ணின் மாயமா அது? இல்லை என்று உறுதியாகத்தெரிந்தது. அதற்குள் இருப்பது வஞ்சம்தான். வஞ்சமேதான். அவமதிக்கப்பட்டவர்கள்தான் வஞ்சம் கொள்கிறார்கள். அந்த நஞ்சு புளிக்கும்தோறும் கடுமையாவது. அவர்கள் நாகங்கள் என சூழ்ந்துகொண்டு அவனை மாறி மாறி கொத்தினார்கள். எந்த நரம்புமுடிச்சில் விரல் தொட்டால் அவன் துடிப்பான் என்று அறிந்திருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருந்த காதலினாலேயே அவனை அணுகி நோக்கிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

அவன் அவர்களை அவமதித்தானா? இல்லை என்று தோன்றியதுமே ஒருவகையில் ஆம் என்றும் தோன்றியது. இல்லை, தேவிகையை நான் அவமதிக்கவில்லை என அவன் உடனே மறுத்துக்கொண்டான். நான் என்ன செய்யமுடியும்? அவளை பீமசேனர் கவர்ந்துகொண்டு சென்றது அவனைமீறியது. அவன் சிபி நாட்டுக்குச் சென்றான். பெரும்பாலையில் கண்ணீருடன் விரைந்தான். அவளுக்காக விண்மீன்களுக்குக் கீழே துயிலிழந்து தவித்திருந்தான். அப்படியென்றால் விஜயை? அவளுக்காகவும் அவன் சென்றான். இல்லை, அது அவமதிப்பேதான். அரசியலாடலில் அவன் கை செய்த பிழை. ஆனால் பெண்ணெனும் நோக்கில் அவமதிப்புதான். அவள் சினந்திருப்பாள். இரவுகள் தோறும் எரிந்து எரிந்து வஞ்சம் கொண்டிருப்பாள்…

அப்படியென்றால் தேவிகையையும் அவன் அவமதிக்கவே செய்தான். சிபிநாட்டிலிருந்து திரும்பியபின் ஒரு செய்தியைக்கூட அவளுக்கு அனுப்பவில்லை. அவள் தந்தையிடம் பால்ஹிகநாட்டின் சார்பில் ஒரு மணத்தூது அனுப்பியிருக்கலாம். விஜயைக்கும் மணத்தூது அனுப்பியிருக்கலாம். சொல்லுறுதி பெற்றிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நிகழுமென நான் எப்படி எதிர்பார்த்திருக்கமுடியும்? ஒவ்வொன்றும் அவனை மீறி நிகழ்கிறது. அவனை திறனற்றவன் என்று சொல்லுங்கள். நேர்மையற்றவன் என்று சொல்லவேண்டாம். எவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் இந்த விளக்கங்களை? எவரை ஆறுதல்படுத்துகிறேன்?

தேர்கள் நின்றதும் அந்தக் கட்டற்ற எண்ணப்பெருக்கு அறுபட்டது. எரிபட்ட இடத்தில் குளிர்பட்டதுபோல ஆறுதல் கொண்டான். ஏவலர்கள் அணுகியதும் யுதிஷ்டிரன் “பால்ஹிகரே, இறங்குவோம்” என்றான். “எண்ணங்களில் வரும் வழியையே மறந்துவிட்டீர்.” பூரிசிரவஸ் நாணத்துடன் “ஆம், பழைய நினைவுகள்” என்றான். “உமது முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். பெருந்துயர் ஒன்று தெரிந்தது” என்றான் யுதிஷ்டிரன். “நான் சீர்செய்யக்கூடிய இடர் என்றால் என்னை உமது மூத்தவனாக எண்ணி நீர் சொல்லலாம். அது எதுவென்றாலும் செய்கிறேன். என் இரு இளையோர் நிகரற்ற ஆற்றல் கொண்டவர்கள். அவர்கள் செய்யமுடியாதது என ஏதுமில்லை இப்புவியில்” என்றான்.

பூரிசிரவஸ் கண்களில் எழுந்த கண்ணீரை மறைக்க தலைகுனிந்து “இல்லை அரசே…” என்றான். “எவராலோ அவமதிக்கப்பட்டிருக்கிறீர். அதை உணரமுடிகிறது. எந்த அரசன் என்று மட்டும் சொல்லும். பீமனை அவனிடம் பேசச்சொல்கிறேன். அவனே வந்து உம்மிடம் பிழைபொறுக்கும்படி கோருவான்.” பூரிசிரவஸ் “அரசே, அப்படி ஏதுமில்லை” என்றான். அந்த ஒருகணத்தை உடைந்து மண்ணில் சரிந்து அழாமல் கடந்துசென்றால் போதும்.

அதை உணர்ந்தவன் போல யுதிஷ்டிரன் அவன் தோளை மெல்ல அணைத்து “சரி, உளமிருக்கையில் சொல்லும்… வாரும்” என்றான். பின்னால் வந்த தேரில் இருந்து சகதேவனும் நகுலனும் இறங்கினர். “சிறியவனே, அவர்கள் எங்கே?” என்றான் யுதிஷ்டிரன். “இளைய யாதவரை அழைத்துக்கொண்டு வருவதாகச் சொல்லி மூன்றாமவர் சென்றார். பீமசேனர் தனித்தேரில் வந்துகொண்டிருக்கிறார்” என்றான் நகுலன். ”அவர் வந்ததே பிந்தித்தான். அதன்பின்னர்தான் உணவுண்ணத் தொடங்கினார்.”

அவர்கள் இருவரும் உருவும் நிழலும் என வருவதைக் கண்டதும் ஒரே கணத்தில் உள்ளத்தைச் சூழ்ந்த அனைத்தும் விலக பூரிசிரவஸ் புன்னகை செய்தான். அதைக்கண்ட யுதிஷ்டிரன் “அவர்கள் இரவும்பகலும் என்பார்கள் பால்ஹிகரே” என்றான். பூரிசிரவஸ் ”அழகர்கள்” என்றான். “ஆம், ஆனால் நான் அவர்களை பார்ப்பதில்லை. தந்தையர் விழிகளே மைந்தருக்கு முதல் கண்ணேறு என்பார்கள்.” தொலைவில் புரவிகளின் ஒலியும் முரசும் கேட்டது. “அது பீமன்… இத்தனை மெதுவாக அவன் மட்டுமே தேரோட்டுவான்… மூடன்” என்றான் யுதிஷ்டிரன்.

பீமனின் தேர் வந்து நின்றது. தேர்த்தட்டிலிருந்து இறங்கி நின்றதுமே கச்சையை இறுக்கியபடி திரும்பி அவனை நோக்கி ”நீர்தான் பால்ஹிகரா?” என்றான். ”ஆம் பாண்டவரே. என்பெயர் பூரிசிரவஸ். சோமதத்தரின் மைந்தன்” என்றான் பூரிசிரவஸ். “உம்மை காசியில் நான் இருளில் சரியாகப்பார்க்கவில்லை” என்று புன்னகைத்தபடி பீமன் அருகே வந்தான். “மிக இளைஞராக இருக்கிறீர். தெரிந்திருந்தால் அம்புகளால் அடித்திருக்க மாட்டேன். கையால் மண்டையில் ஒரு தட்டு தட்டியிருந்தாலே போதும்.”

பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். பீமன் தன் பெரிய கைகளை அவன் தோளில் வைத்து “ஆனால் அன்று அஞ்சாமல் போரிட்டீர்… நாம் முன்னரே சந்தித்திருக்கவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “இப்போது சந்திப்பதில் பெருமகிழ்ச்சி” என்றான். “முறைமைச்சொல் சொல்வது எனக்குப் பிடிக்காது. பலந்தரையை நீர் மணப்பதாக இருந்ததா?” பூரிசிரவஸ் “இல்லை, இளைய கௌரவர்” என்றான். பீமன் நகைத்து “நன்று… இப்போது அவன் மேலும் இளையவளை மணந்திருப்பதாக சொன்னார்கள்… பெரும்பாலும் காசிநாட்டு இளவரசியர் மீதான ஆர்வத்தை இழந்திருப்பான்” என்றபின் யுதிஷ்டிரனிடம் “மூத்தவரே, நாம் செல்லலாமே?” என்றான்.

“விஜயன் வரவேண்டுமே” என்றான் யுதிஷ்டிரன். “இளைய யாதவன் உடனிருப்பது நன்று என எனக்குத்தோன்றியது, இளையோனே. என் கைகள் இப்போதே நடுங்கிக்கொண்டிருக்கின்றன.” பீமன் மீசையின் ஓரத்தைப் பற்றி நீவியபடி “அஞ்சவேண்டியது அவர்கள்” என்றான். அவனுடைய மீசை துரியோதனன் மீசைபோல அடர்ந்ததாக இல்லாமல் மெல்லிய முடிகளால் ஆனதாக இருந்தது. “என்ன பார்க்கிறீர்?” என்று பீமன் கேட்டான். “உங்களைப்பார்க்க பால்ஹிகர் போலிருக்கிறது.” பீமன் நகைத்து “ஆம், என்னை நான் பால்ஹிகநாட்டவன் என்றே சொல்லிக்கொள்வது வழக்கம். என் தோள்கள் முதுபால்ஹிகர் போலிருப்பதாக சூதன் ஒருவன் சொல்லி அறிந்திருக்கிறேன். அவருடன் ஒருநாள் நான் மற்போரிடவேண்டும்” என்றான்.

”முதல் தோல்வியை அங்கே அடைவீர்கள் இளவரசே” என்றான் பூரிசிரவஸ். “அவரது தோள்கள் நாள்தோறும் வலிமைகொண்டுவருகின்றன. நான் கிளம்பும்போது அவர் புதிய மனைவி கருவுற்றிருந்தாள். மேலும் மனைவியர் உண்டா என்பது சென்றால்தான் தெரியும்.” பீமன் சிரித்து “நான் அந்த அளவுக்கு இல்லை இளையோனே” என்றான். “அவருடன் பொருதி தோற்று தாள்பணிவதும் ஒரு நல்லூழ் அல்லவா? நான் இன்னமும் பரசுராமருடனும் போர் புரிந்ததில்லை” என்றான். யுதிஷ்டிரன் “எங்குசென்றான்? இருவருமே பொறுப்பற்றவர்கள். இங்கே ஒன்றாக வந்துசேரவேண்டுமென பலமுறை அவனிடம் சொன்னேன்” என்றான். “வருவார்கள்… இளையயாதவர் தெற்கே பீஷ்மரின் சோலைக்கு அப்பால் தங்கியிருக்கிறார்” என்றான் பீமன்.

சௌனகர் தலைமையில் வேதியரும் மங்கல இசைக்குழுவினரும் அணிப்பரத்தையரும் ஏவலரும் எதிரேற்புக்காக அரண்மனையின் படிகளில் காத்து நின்றிருந்தனர். சௌனகர் அருகே நின்றிருந்த கனகர் கையை அசைத்து என்ன நடக்கிறது என்று கேட்டார். கிருஷ்ணன் வருகிறான் என்று அவன் கைகாட்டினான். அவர் நேரமாகிறது என்று கைகாட்டினார். பூரிசிரவஸ் சற்று பொறுங்கள் என்றான். இளவேனிற்காலம் தொடங்கிவிட்டிருந்தமையால் உச்சி வெயில் வெம்மை காயத்தொடங்கிவிட்டிருந்தது.

“அவர்கள் வரட்டும். நாம் ஏன் இங்கே நிற்கவேண்டும்?” என்றான் பீமன். “நான் துரியோதனனை சந்திக்கநேரலாம். எனக்கு அத்தருணத்தைக் கடக்க யாதவன் அருகே இருக்கவேண்டும்” என்றான் யுதிஷ்டிரன். பீமன் பூரிசிரவஸ்ஸை ஒருகணம் நோக்கிவிட்டு சிரித்தபடி “அவன் உங்களை மற்போருக்கா அழைக்கப்போகிறான்? அழைத்தால் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். “விளையாடாதே மந்தா!” பீமன் “மூத்தவரே, நம்மைவிட அவர்களுக்குத்தான் கூச்சமிருக்கும். அவன் அவையிலன்றி உங்கள்முன் வரமாட்டான்” என்றான்.

அதற்குள் அப்பால் காவல்கோட்டத்தில் முரசு முழங்கியது. “அவன்தான்” என்றான் யுதிஷ்டிரன். தேர்முகடும் கொடியும் தெரிந்தன. யாதவர்களின் கருடக் கொடி படபடத்து அணுகுவதை பூரிசிரவஸ் உள்ள எழுச்சியுடன் நோக்கிக்கொண்டிருந்தான். தேர் திரும்பி நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தவன் கிருஷ்ணன் என்பதைக் கண்ட பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். “இவன் ஏன் எப்போதும் தேரை ஓட்டுகிறான்?” என்றான் யுதிஷ்டிரன். “புரவிகளை கட்டுப்படுத்தும் கலையை விரும்புவதாக என்னிடம் சொன்னார்” என்றான் நகுலன். “தேரோட்டுபவர்களை பெண்கள் விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்” என்று சகதேவன் சொல்ல நகுலன் “பேசாமலிரு” என்றான்.

தேரிலிருந்து கிருஷ்ணன் இறங்கினான். அவன் சவுக்குடன் இறங்கி நிற்க அந்தக் காவலன் ஓடிவந்து சவுக்கை வாங்கிக்கொள்வதை பூரிசிரவஸ் கண்டான். அவன் தன்னை பார்ப்பான் என்று அவன் நோக்கினான். சிலகணங்களுக்குப்பின் அவன் திரும்பி அவன் விழிகளை சந்தித்தபின் திரும்பிச்சென்றான். பின்முகமே அவன் புன்னகைக்கிறான் என்பதை காட்டியது. “செல்வோம்” என்றான் யுதிஷ்டிரன். பூரிசிரவஸ் கைகாட்ட மங்கல இசை எழுந்தது. அஸ்தினபுரியின் அமுதகலசப்பொற்கொடியுடன் ஒரு வீரன் முன்னால் வர பின்னால் இசைச்சூதர் முழங்கியபடி வந்தனர். பொலித்தாலங்கள் ஏந்திய அணிப்பரத்தையர் வர நடுவே சௌனகர் நடந்துவந்தார்.

வேதியர் கங்கைநீர் தூவி வேதமோதி வாழ்த்தினர். மங்கல இசை சூழ அணுகி வந்த சௌனகர் மங்கலத்தாலம் நீட்டி முகமன் உரைத்தார். யுதிஷ்டிரன் திரும்ப மலர்ந்த முகத்துடன் முகமன் சொன்னான். சௌனகரும் அவனும் பேசிக்கொண்டவை சூழ்ந்து ஒலித்த இசையிலும் வாழ்த்துக்களிலும் மறைந்தன. பூரிசிரவஸ் திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அவன் கைகளை மார்பில் கட்டியபடி நிற்பதைக் கண்டதும் அவையை நினைவுகூர்ந்தான். கிருஷ்ணன் அவனைப் பார்த்து புன்னகைசெய்தான்.

பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் மங்கலம் காட்டி முகமன் சொன்ன சௌனகர் “இன்று மாலையில் நீங்கள் ஐவரும் அவைநுழையும்போது அனைத்து முறைமைகளும் செய்யப்படவேண்டும் என்பது அரசாணை. ஆனால் இதுவே முதல் அரண்மனை நுழைவென்பதனால் இந்த வரவேற்பு” என்றார். “நாங்கள் முறைமைகளை இப்போது எதிர்பார்க்கவில்லை அமைச்சரே. தந்தையைப் பார்த்து வணங்கவேண்டுமென்பதற்காகவே வந்தோம்” என்றான் யுதிஷ்டிரன். “ஆயினும் அரண்மனையின் இந்தச் சடங்கு மூதன்னை கனிந்த புன்னகையுடன் வா என்பதுபோலிருக்கிறது.” சௌனகர் “மூதன்னைதான். மாமன்னர் ஹஸ்தியால் கட்டப்பட்டது. பாரதவர்ஷத்திலேயே தொன்மையானது. நீங்களனைவரும் உறங்கிய தொட்டில்” என்றபின் ”வருக!” என்றார்.

அவர்கள் படிகளில் ஏறி இடைநாழியை அடைந்தபோது கிருஷ்ணன் “நாம் ஏன் மூத்த கௌரவரை நோக்கியபின் தந்தையை பார்க்கச் செல்லக் கூடாது?” என்றான். “என்ன சொல்கிறாய்? தந்தை நமக்காகக் காத்திருக்கையில்…” என்று யுதிஷ்டிரன் பதறினான். “மூத்தவரே, இல்லத்தில் ஒருவர் நோயுற்றிருக்கையில் அவரை நோக்குவதே முதற்கடன் என்பதே குடிமுறைமையாகும். மேலும் நோயுற்ற உடன்பிறந்தாரை பார்க்காமல் தன்னைப்பார்க்கவந்தமை குறித்து தந்தையும் எண்ணக்கூடும் அல்லவா?”

யுதிஷ்டிரன் “ஆனால்…” என்றான். பீமனை நோக்கித்திரும்பி “இளையோனே, நாம் இப்போது கௌரவரை சந்திப்பதென்றால்…” என தவித்தபின் “நாம் சந்திப்பதை அவர்களிடம் சொல்லவுமில்லை” என்றான். “நோய்நலம்நாட அப்படி சொல்லிச்செல்லவேண்டுமென்பதில்லை. துச்சாதனர் இப்போதும் எழுந்து நடமாடமுடியாதவராகவே இருக்கிறார். மூத்தவராகிய நீங்கள் சென்று ஒரு சொல் கேட்டுவருவதில் குறையொன்றுமில்லை.” யுதிஷ்டிரன் அர்ஜுனனை நோக்க அவன் “ஆம், அங்கே காந்தாரரும் இருக்கமாட்டார்” என்றான். பூரிசிரவஸ் அப்போதுதான் அதிலிருந்த தெளிவான திட்டத்தை உணர்ந்தான்.

அதை அக்கணமே சௌனகரும் உணர்ந்தார். “ஆம், முறைப்படி ஓர் இல்லத்தில் நுழைகையில் நோய் உசாவிவிட்டே முதியோரை காணவேண்டும். அவர்கள் பெருங்கூடத்தில்தான் இருக்கிறார்கள். பார்த்துவிட்டுச்செல்வோம்” என்றார். “யாரெல்லாம் இருக்கிறார்கள்?” என்றான் யுதிஷ்டிரன். “மூத்த கௌரவர் காலையிலேயே வந்தார். துச்சாதனரும் துச்சலரும் உடனிருக்கிறார்கள். அங்கநாட்டரசர் உணவுண்டு ஓய்வுக்குப்பின் மாலை அவைக்கு வருவதாக சொல்லிச் சென்றார்.” கிருஷ்ணன் “செல்வோம்” என்றான்.

சௌனகர் கனகரிடம் “பாண்டவர்கள் நோய் உசாவ வருவதாக இளவரசரிடம் சொல். இளைய யாதவரும் உடனிருக்கிறார்” என்றார். கனகர் உடல் குலுங்க ஓடினார். முனகலாக “எனக்கு இது உகந்ததா என்று தெரியவில்லை யாதவனே. அவர்களின் உள்ளம் என்ன என்று நாமறியோம்” என்றான் யுதிஷ்டிரன். அவர்கள் இடைநாழி வழியாக நடந்து கீழே உள்ள பெருங்கூடத்திற்குள் நுழைந்தனர். பூரிசிரவஸ்ஸின் உள்ளம் படபடத்தது. ஒரு கணம் விஜயையின் முகம் நினைவுக்கு வந்தபோது எங்கோ எப்போதோ என தோன்றியது.

பெருங்கூடத்தில் நின்ற கனகர் “உள்ளே வரச்சொன்னார்” என்றார். யுதிஷ்டிரன் திரும்பி கிருஷ்ணனை பார்த்தபின் சால்வையை சீரமைத்துக்கொண்டு உள்ளே செல்ல பீமன் சிறியவிழிகளை சற்றே தாழ்த்தியபடி வலக்கையால் இடத்தோளை நீவியபடி ஒருகணம் தயங்கி பின் தொடர்ந்தான். அர்ஜுனன் புன்னகையுடன் “வாரும் பால்ஹிகரே” என்றபின் உள்ளே சென்றான். நகுல சகதேவனும் கிருஷ்ணனும் உள்ளே சென்றபின் பூரிசிரவஸ் தொடர்ந்தான். அவனுக்குப்பின்னால் பெரிய வாயில் மூடிக்கொண்டது.

கூடத்தில் துச்சாதனன் தரையில் தோல்விரிப்பில் படுத்திருந்தான். துச்சலன் சாளரத்தருகே நின்றிருக்க அவர்களை வரவேற்பதற்காக துரியோதனன் எழுந்து நின்றிருந்தான். எதிர்பாராத அந்த வருகையால் அவர்கள் குழம்பிப்போயிருந்ததை முகங்களில் உடலசைவுகளில் உணரமுடிந்தது. கிருஷ்ணன் “மூத்தவரே, தாங்கள் உடல்நலமின்றி இருப்பதை பாண்டவ மூத்தவரிடம் சொன்னேன். முறைப்படி நோய் உசாவிச்செல்ல வந்திருக்கிறார்” என்றான். துரியோதனன் “ஆம், ஆனால் இப்போது நலமடைந்துவிட்டேன்” என்றான். துச்சாதனன் கையை ஊன்றி எழுந்து அமர முயல துச்சலன் குனிந்து அவனுக்கு உதவினான்.

யுதிஷ்டிரன் மெல்லிய குரலில் “இளையோன் இன்னமும் நலம்பெறவில்லையா?” என்றான். துச்சாதனனின் நிலை அவனை பதற்றமடையச்செய்திருப்பதை உணரமுடிந்தது. துரியோதனன் துச்சாதனனை நோக்கிவிட்டு “ஆம், இன்னும் இருமாதமாகலாம் என்றார் மருத்துவர்” என்றான். யுதிஷ்டிரன் மீண்டும் ஒரு முறை நோக்கி, தயங்கி “மருத்துவம் தொடர்கிறதல்லவா?” என்றான். “ஆம்… மருத்துவர் பார்க்கிறார்கள்” என்றான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்ளவில்லை. துரியோதனனின் பெரிய கரிய கைகள் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன. தசைகள் இறுகி நெளிந்து நெகிழ்ந்து மீண்டும் இறுகின. அவன் தாடையில் பற்கள் இறுகுவது தெரிந்தது. பார்வையை இருபக்கமும் மாறி மாறி திருப்பியபடி கைகளைப் பிசைந்தபடி நின்றான். யுதிஷ்டிரன் “விரைவில் நலமடையவேண்டும்…” என்றான். “நன்றி மூத்தவரே” என்றான் துரியோதனன். துச்சாதனன் எழுந்து நின்று துச்சலனின் தோளை பற்றிக்கொண்டான்.

கிருஷ்ணன் தன் இடக்கையால் துரியோதனனின் வலக்கையைப் பிடித்து “மீண்டும் கதை ஏந்தும் தோள்களுடன் காணவிழைகிறேன், மூத்தவரே” என்றான். “அதைத்தான் வரும்போது பார்த்தனிடமும் சொன்னேன்.” இயல்பாக அவன் தன் மறுகையால் யுதிஷ்டிரன் கையைப் பற்றினான். “நிகழ்ந்தது எதுவாக இருப்பினும் ஒரு நோய் என்றே அதைக்கொள்ளவேண்டும் என்றேன்.” அவன் துரியோதனன் கையை யுதிஷ்டிரன் கையுடன் பிணைத்து “உடன்பிறந்தவர் நோய் உசாவுவதைப்போல மருந்து ஏதுமில்லை” என்றான்.

துரியோதனன் உதட்டைக் கடித்து பார்வையை இளையவனை நோக்கி திருப்பினான். யுதிஷ்டிரனின் கையில் இருந்த அவன் கை தளர்வதைக் காணமுடிந்தது. சட்டென்று ஒரு சிறிய விம்மல் கேட்டது. வேறெங்கோ எவரோ என பூரிசிரவஸ் திகைக்க துரியோதனன் திரும்பி உடைந்த குரலில் யுதிஷ்டிரனிடம் “இது தண்டனை மூத்தவரே. தண்டனையைத் தரவேண்டியவர் தந்துவிட்டார்” என்றான். “நீங்களும் உங்கள் இளையவர்களும் எங்களை தண்டிக்க வேண்டும் மூத்தவரே. எந்தத் தண்டனைக்கும் நாங்கள் சித்தமாக இருக்கிறோம். உயிர்கொடுப்பதென்றால் கூட…”

யுதிஷ்டிரன் துடித்த உடலுடன் முன்னால் பாய்ந்து துரியோதனனை அள்ளி தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான். “என்ன இது? எதையாவது நான் சொன்னேனா?” என்றான். துரியோதனன் விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது. “தந்தையின் கையால் அடிவாங்கியபின்னர்தான் நான் நிறைவுடன் துயிலத் தொடங்கினேன் மூத்தவரே. நான்…”

யுதிஷ்டிரன் அவனை மெல்ல உலுக்கி “வேண்டாம், துரியா. நான் உன்னை அறிவேன். நீ வேழம். மத்தகம் தாழ்த்தலாகாது. அதை நான் விரும்பமாட்டேன்” என்றான். “இனி இதைப்பேசாதே. வானுறையும் முன்னோர் சான்றாகச் சொல்கிறேன். என் இளையோனாகிய நீ எப்பிழையும் செய்யவில்லை. எனக்கோ என் குடிக்கோ… மூத்தவனாகிய நான் அனைத்தையும் உன் பிள்ளை விளையாட்டென்றே கொள்கிறேன்…”

திரும்பி அர்ஜுனனை நோக்கி “இளையோனே, உன் தமையனின் காலடியை சென்னியில் சூடுக! அவர் அருளால் நீ வெற்றியும் புகழும் கொண்டவனாவாய்” என்றான். கண்களில் நிறைந்த நீருடன் நின்ற அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி முன்னால் சென்று குனிந்து துரியோதனன் கால்களைத் தொட்டான். துரியோதனன் அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். கண்கள் கலங்க சிரித்தபடி ”இத்தருணத்திற்காகவே இத்தனை துயரமும் என்றால் அது இன்னமும் வருக!” என்றான் யுதிஷ்டிரன்.

அர்ஜுனன் வந்து தன்னை வணங்கியபோது துச்சாதனன் விழிகளில் இருந்து வழிந்த நீரை கையால் துடைத்தபடி பேசாமல் நின்றான். “வாழ்த்துங்கள், மூத்தவரே” என்றான் துச்சலன். துச்சாதனன் தலையை மட்டும் அசைத்தான். ”தங்கள் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டேன், மூத்தவரே” என்றான் அர்ஜுனன். ஒரு பெரும் கேவலுடன் அவனை கைநீட்டி பற்றி இழுத்து அணைத்துக்கொண்ட துச்சாதனன் “என்னை கொடுநரகிலிருந்து காத்தாய் இளையோனே” என்று கூவினான். “என்னை இருளிலிருந்து காத்தாய்… என்னை வாழவைத்தாய்.”

ஒவ்வொரு உடலும் உருகி வழிந்துகொண்டிருப்பதாக தோன்றியது. கரைந்து உருவழிந்து ஒரேயுடலாக ஆகிவிடும் என. அனைத்து முகங்களும் ஒன்றுபோலிருந்தன. தன்னை வணங்கிய நகுலனையும் சகதேவனையும் இரு கைகளால் சுற்றிப்பிடித்து நெஞ்சோடு அணைத்து இருவர் தலையிலும் முகம் வைத்த துரியோதனன் “இளையோர்… வளர்ந்துவிட்டனர்” என்றான்.

“ஆம், மணமுடித்தும் விட்டனர்” என்றான் யுதிஷ்டிரன் புன்னகையுடன். துச்சலன் வந்து யுதிஷ்டிரன் கால்களை பணிந்தான். அவனைத் தூக்கி யுதிஷ்டிரன் அணைத்துக்கொண்டான். துச்சாதனன் யுதிஷ்டிரனை நோக்கி வந்தபடி கைநீட்டி அர்ஜுனனிடம் “இளையோனே, என்னைப்பிடி” என்றான். ”வேண்டாம் இளையோனே. உன் உடல்நிலை நோக்கவே வந்தோம். நீ பணியவேண்டாம்” என்று யுதிஷ்டிரன் கைநீட்டி சொன்னான். “தங்களை வணங்குவதனால் இறப்பேன் என்றால் அதுவல்லவா விண்ணுலகேகும் வழி?” என்றபடி அர்ஜுனனின் தோளைப்பற்றியபடி குனிந்து துச்சாதனன் யுதிஷ்டிரனை வணங்க அவன் அவனை கட்டிக்கொண்டான்.

பீமன் சென்று துரியோதனன் கைகளைப்பற்றிக்கொண்டு “நலம்பெறுக” என்றான். “ஆம். நலம்பெறவேண்டும். அதன்பின் ஒருமுறை நாம் தோள்பொருதவேண்டும்” என்றான் துரியோதனன். “அதையே நானும் விழைகிறேன். அதற்குமுன் பெரியதந்தையிடமும் ஒருமுறை தோள்கோக்கவேண்டும்” என்றான் பீமன். “உன் மைந்தனைப்பற்றி அறிந்தேன். இப்போதே அவனைப்பற்றிய கதைகள் பரவத்தொடங்கிவிட்டன.” பீமன் முகம் மலர்ந்து “கடோத்கஜனையா? அவனைப்பற்றி நானே ஊர்கள்தோறும் சூதர் பாடக்கேட்கிறேன்” என்றான். “பானைமண்டை என அவனுக்கு பெயரிட்டேன். கலங்களைப்போல நான் விரும்புவது வேறென்ன?”

துரியோதனன் பேரொலியுடன் நகைத்து “எனக்கும் ஒரு மைந்தன் பிறக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அவனுக்கு கதைமண்டையன் என்று பெயரிடுவேன்” என்றான். துச்சலன் யுதிஷ்டிரனின் கைகளைப்பற்றிக்கொண்டு “உங்களிடம் பீஷ்மபிதாமகரின் தோற்றம் வந்துவிட்டது மூத்தவரே” என்றான். “ஆனால் மனைவி இரண்டாகிவிட்டது” என்றான் துரியோதனன் நகைத்தபடி.

பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருப்பதை உண்ர்ந்தபோதுதான் கன்னங்களில் கண்ணீர் வழிந்து தாடைநுனியில் சொட்டிக்கொண்டிருப்பதை அறிந்தான். குளிர்ந்த கண்ணீரை கையால் துடைத்துக்கொண்டான். திரும்பி கிருஷ்ணனை பார்த்தான். அவன் புன்னகையுடன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

அவர்கள் ஒருவருக்கொருவர் உள்ள எழுச்சி தெரியும் வெற்றுச்சொற்களும் சிரிப்புமாக பேசிக்கொண்டனர். துச்சாதனனைக் காட்டி “இளையோன் படுத்தபடியே உண்ணும் கலையை பயின்றிருக்கிறான்” என்றான் துரியோதனன். “அதை நானும் பயில விழைகிறேன். இரவு நேரம் உணவில்லாது வீணாகிறது. துயிலில் எவராவது ஊட்டினால் நன்று அல்லவா?” என்றான் பீமன்.

துச்சாதனன் ”இளையபாண்டவரே, நம் பால்ஹிகருக்கு ஒரு பெண்ணை கவர்ந்துகொடுங்கள். தனிமையில் இருக்கிறார்” என்றான். பீமன் திரும்பி நோக்கி “ஆம், இவருக்கு ஒரு கடன் இருக்கிறது. இவர் கையிலிருந்துதானே கவர்ந்தேன்” என்றான். “கடன் எனக்கு…. என் பெண்ணை நீங்கள் கவர்ந்தீர்கள்” என்றான் துச்சாதனன். “அப்படிப்பார்த்தால் சேதிநாட்டு இளவரசிகள் கௌரவர்களுக்குரியவர்கள் அல்லவா?” என்றான் துரியோதனன். அவர்கள் மிகையாகவே ஒலியெழுப்பி சிரித்தனர். சிரிப்பதற்கான சிரிப்பு. உவகை என்பதற்கு அப்பால் வேறு பொருளே இல்லாதது.

சௌனகர் மெல்ல கதவைத் திறந்தார். சிரிப்பொலிகளை அவர் முன்னரே கேட்டிருந்தார் என முகம் காட்டியது. “இளவரசே, பேரரசர் காத்திருக்கிறார்.” துரியோதனன் “ஆம், தந்தை காத்திருக்கிறார். செல்லுங்கள்” என்றான். “அனைவரும் செல்வோம்…” என்றான் கிருஷ்ணன். “நாங்கள்…” என்ற துரியோதனன் “எங்களை அவர் சந்திப்பதில்லை” என்றான். “அவரை நான் பார்த்துக்கொள்கிறேன். வருக!” என்று கிருஷ்ணன் சொன்னான். துரியோதனன் தயங்கி பின் “உன்னை நம்புகிறேன் யாதவனே. நீ மானுட மனங்களை வைத்து விளையாடுபவன்” என்றான்.

அவர்கள் சிரித்துப்பேசிக்கொண்டே படிகளில் ஏறினர். அர்ஜுனன் “கண்ணா, இன்று நீ அளித்ததைப்போல் எதுவும் அளித்ததில்லை” என்றான். கிருஷ்ணன் ”இதை ஒன்றுமில்லை என்றாக்கும் சிலவற்றை நான் பின்னர் அளிப்பேன்” என்றான். “நீ என்ன நினைக்கிறாய்? மானுடர் எத்தனை சிறியவர்கள் என்றா?” என்று அர்ஜுனன் கேட்டான். கிருஷ்ணன் “இல்லை, மானுடம் எத்தனை இனியது என்று” என்றான். அர்ஜுனன் “சொல்லை வைத்து விளையாடுகிறாய்…” என்றான். “உண்மையை சொல்!” கிருஷ்ணன் புன்னகைசெய்தான்.

முந்தைய கட்டுரைசுஜாதா இலக்கியவாதி இல்லையா?- ஆர்வி
அடுத்த கட்டுரைபதாகை நாஞ்சில் சிறப்பிதழ்