ஜெகே கடிதங்கள்

ஆசிரியருக்கு,

நான் இதுவரை ஜெயகாந்தன் மறைவுக்குப் பிறகு சுமார் 10 கட்டுரைகளாவது படித்திருப்பேன் , தினமணிக் கதிர் ஒரு சிறப்பிதழும் வெளியிட்டிருக்கிறது.

ஒருவர் 50 ஆண்டுகளாகத் தனது சிந்தனைகளை எதிரில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார் , ஆனால் யாராலும் எதையும் குறிப்பிட்டு தொகுத்து பதிய முடியவில்லை , ஆல்லது பேச முடியவில்லை. அப்படி ஏதேனும் எழுதப் பட்டிருந்தால் எனக்கு சுட்டி அளிக்கவும்.

நமது சூழலில் சிந்தனையை உள்வாங்கிக் கொள்ளல், அதை மனதில் இருத்திக் கொள்ளல் , அதனுடன் முரண்பட்டு அல்லது சார்ந்து நமது சிந்தனையை வளர்த்துக் கொள்ளல் என்பது அனேகமாக இல்லை என்பதையே நான் காண்கிறேன். எந்த ஒரு நபரின் சிந்தனையை அவர் கூறியபடி தொகுத்து திரும்பக் கூறுபவர்களை நான் மிக மிக குறைவாகவே சந்தித்துள்ளேன். இது நமது அறிவுசார் சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம்.

உங்களுடைய கோவை உரை சிறந்தது என சொல்ல முடியாவிட்டாலும் தனிப் பேச்சில் ஜெயகாந்தனின் சிந்தனை என்ன என்பதைக் காட்டிவிட்டது. ‘சபையில்’ ஆண்டுகளாக தொடர்ந்து பங்கேற்ற அவரின் நண்பர்கள் குறைந்தது 100 ஐத் தாண்டும். அத்தனை பேருமே தோற்றுவிட்டார்களா அல்லது ஜெயகாந்தனின் சிந்தனை என்பது “அவர் சிங்கம் மாதிரி முடி வளர்த்திருப்பார், கர்ஜிப்பார் ” , “ரிக்க்ஷாக்காரன் முதல் பேராசிரியர் வரை சமமாக நடத்துவார்”, “அவர் பேசினால் பொழுது போவதே தெரியாது “, “அவர் பேச்சில் பல்வேறு திறப்புக்களும் தெறிப்புக்களும் வந்துகொண்டே இருக்கும் ” போன்ற பண்புநலன்களைத் தாண்டி எதுவுமே இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

நமது குழுமத்திலும் கூட இதுவரை தனி உரையாடலில் உங்கள் பேச்சை படம்பிடித்து இதுதான் ஜெயமோகனின் சிந்தனை என யாரும் எழுதியதாகவோ சொன்னதாகவோ எனக்கு நினைவில்லை. ஆக இப்போதைய நிலையில் உங்களுக்கும் இதே முடிவுதான்.

யாருக்காக அழுதான் ?

கிருஷ்ணன்.
=====================================================================================
அன்புள்ள ஜெயமோகன் சார்…
என்னுடைய நண்பர் ஒருவரின் அம்மா (90) இறந்தபோது அவரிடம் இருந்து ஒரு அழைப்பிதழ் வந்தது. “my mother joined the eternal bliss on ……. I am very happy about this. She has enjoyed her life with her sons, daughters, grand children till the age of 90. I would like to share the happiness with you over a cup of tea on…..” இதை மேற்கோள் காட்டியே jk இறந்த அன்று அன்புவிற்கு ஆறுதல் சொன்னேன். He has been the king of tamil literature till he dies, although he never written for the past 25 years.
இன்று உங்களின் கோவை அஞ்சலி பேச்சை படிக்கும்போது என் கண்களில் கண்ணீர் வடிவதை என்னால் தடுக்க இயலவில்லை..
நிஜ அஞ்சலி….Hats off sir!!!

அன்புடன்
இளம்பரிதி
====================================================================================================
”இருக்கட்டும் அதனால் என்ன? அவர் எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன? அதை ஆய்வாளர்கள் பார்த்துக்கொள்ளட்டும். அவர்கள் பாரதியின் வாழ்விலிருந்து கவிதை நோக்கிச் செல்கிறார்கள். நாம் பாரதியின் கவிதைகளில் இருந்து அவன் வாழ்வு நோக்கி செல்கிறோம். இலக்கியவாதி என்றமுறையில் அதுவே சரியான பாதையாகும். கேவலம் ஊனுடம்பு குருதி கொண்ட அந்த உடலா நமக்கு முக்கியம்? அதில் திகழ்ந்த ஊழிச்சுழலின் ஆற்றல் அல்லவா? அதிலிருந்து நாம் கொள்ளும் எழுச்சி அல்லவா? இது நாம் கற்பித்துக்கொள்ளும் உருவமாகவே இருக்கட்டும். ஆனால் அவனிலிருந்து இந்த எழுச்சிமிக்க உருவத்தை அடைந்தோம் என்பதே நமக்கு பெருமைசேர்ப்பதாக அமையட்டும்”

எனக்கு சு.ரா வின் குறுக்கல்கள் பற்றிய தகவல்கள் வரும்போதெல்லாம் இப்படித்தான் தோன்றியிருக்கிறது. என் மனதின் சு.ரா ஒரு நவீன வாதி. பகுத்தறிவாளர். மேன்மை ததும்பியவர். தன் பின்புலத்தை அவதூறு செய்யும் சமூகச் சூழ்நிலையிலும் நடுநிலை பேணியவர். தன் சமூகத்தின் மத பீடங்களின் தலைமைகளை முதன்மையாகச் சாடியவர் என்றுதான் கொள்கிறேன்.
ஒரு பிரச்சார இயக்கத்தைச் சாக்காக வைத்து மொத்த சமூகத்தையே வசை பாடும் மேட்டிமை அறிவுஜீவிகள் போலல்லாமல், இச்சமூகத்தில் முளைத்தெழும் வித்துக்களையெல்லாம். நீரூற்றி போஷித்தவர் என்று மட்டுமே கொள்கிறேன்.

ஜேகேயின் ஆதியும், ஹென்றியும் ஒரு புற ஆதர்சமெனில், ஜே ஜேயும் ஒரு ஆதர்சம்தான்..

இருவரையுமே நேரில் சந்திக்காமல் போனது ஒரு துயர் தான். இன்னொரு கோணத்தில் நல்லூழ் எனவும் கொள்ளலாம். எனக்குப் பிடித்தாற் போல சமைத்துக் கொள்ளலாம் அல்லவா?

பாலா
===================================================================================================
அன்புள்ள ஜெ

ஆலமர்ந்த ஆசிரியன் வாசித்தேன். ஹிண்டுவில் எழுதிய கட்டுரை அவர் இறந்த அன்றே எழுதப்பட்டது. அது சுருக்கமான செறிவான அறிமுகமாகவும் மதிப்பிடுதலாகவும் இருந்தது. இது உணர்ச்சிகரமான நினைவுறுதலாக இருந்தது. வெவ்வேறு தருணங்களை தெளிவாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள்.

இந்தக்கட்டுரையில் ஜெயகாந்தனின் தனிப்பட்ட ஆளுமை, அவரது பேச்சுமுறை, அவரது கருத்துக்கள் , அவரது அழகியல், அவர் படைப்புகளை வாசிக்கவேண்டிய முறை எல்லாமே ஒரே மொசைக்காக கலந்து நல்ல ஓட்டத்துடன் வெளிவந்துள்ளன. பலமுறை கவனித்து வாசிக்கவேண்டிய உரை. பல வரிகள் மன எழுச்சியையும் புன்னகையையும் அளித்தன

ஜெயராமன்
=======================================================================================================
அன்புள்ள ஜெ

ஜெயகாந்தன் நினைவுரை அபாரம். ஆனால் நீங்கள் ஜெகே பற்றி பல விஷயங்களை எழுதிவிட்டீர்கள். எல்லாம் சிதறிச்சிதறிக்கிடக்கின்றன என்று நினைக்கிறேன். சுரா நினைவின் நதியில் போல ஒரே நூலாக வந்திருந்தால் தான் அவை காலத்தில் முக்கியமாக நிற்கும். இன்றைக்கும் சுரா நினைவின்நதியில் ஒரு கிளாஸிக் ஆக நின்றுகொண்டிருக்கிறது. எனக்கென்னவோ சுரா பற்றிய எழுத்தில் புளியமரத்தின்கதை, ரத்னாபாயின் ஆங்கிலம் போன்ற ஒரு பத்து சிறுகதைகள், கநாசு செல்லப்பா கிருஷ்ணன்நம்பி நினைவுகள் ஆகியவையும் இந்த நினைவின்நதியில் நூலும்தான் முக்கியமானவை, அவை மட்டும்தான் காலத்தில் நிற்கும் என்று தோன்றுகிறது

சரவணக்குமார்
===================================================================================================
ஜெமோ

ஜெகே நினைவுரை மகத்தானது. அந்த உரையின் ஆடியோ கேட்டேன். சில இடங்களில் உணர்ச்சிகரமாக ஆகக்கூடாது என்பதற்காக அடக்கிக்கொள்கிறீர்கள். ஆனாலும் நா தடுமாறுகிறது. சிறந்த உரை. வாசித்தபோது மேலும் சிறந்த உரை

ஜெகேயின் பாரதி, சித்தர் பாடல் வாசிப்புகள் எந்த தளத்திலே இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. ‘நாமறிந்த சித்தரெல்லாம் செங்கொடி ஏந்தி தெருவோடு சென்றவர்’ என்ற வரி அவர் மனம் இருந்த விதத்தை அடையாளப்படுத்துகிறது. சித்தர் பாடல்களையே வேறு வகையில் காட்டிவிடுகிறது

சாமிநாதன்
=====================================================================================================
ஜெ,

அ மார்க்ஸ் மீது ஜெயகாந்தனுக்கு மதிப்பிருந்தது என எழுதியிருக்கிறீர்கள். அ.மார்க்ஸுக்கும் அவர் மேல் மதிப்பிருந்ததை வாசிக்க ஆச்சரியமாக இருந்தது. அ.மார்க்ஸின் இஸ்லாமிய அடிவருடித்தனமெல்லாம் ஜெயகாந்தனுக்குத்தெரியுமா?

சீனிவாசன்

அன்புள்ள சீனிவாசன்

அ.மார்க்ஸ் எழுதியவற்றை பெரும்பாலும் ஜெகே வாசித்ததில்லை.பொதுவாக ஜெகே வாசிக்ககூடியவர் அல்ல. ஆனால் அவர் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்காக களத்தில் சென்று நிற்கிறார் என்ற எண்ணம் இருந்தது. ஒரு குடிசைவாசிகள் விஷயத்தில் அ மார்க்ஸ் செய்ததை சிலாகித்துப்பேசிக்கொண்டிருந்ததை நினைவுறுகிறேன். ஜெயகாந்தன் குடிசைவாசிகளைப்பற்றிப் பேசும்போது ‘நாங்க’ என்று தன்னையும் சேர்த்தே சொல்லக்கூடியவர். [ஒருவர் அப்பார்ட்மெண்ட் கட்டுவதன் அருகே குடிசைவாசிகள் இருப்பதனால் கொசு அதிகம் என்று சொல்ல ‘..த்தா அப்டீன்னா எங்களையெல்லாம் சேத்து கொளுத்திருங்கடா….ஒண்ணா பிரச்சினைய முடிச்சிருங்க’ என்று அவர் கொந்தளிப்பதை கண்டிருக்கிறேன்]

அ.மார்க்ஸ் பற்றி ஒருமுறை பேசும்போது ‘அவன் அந்தோனிச்சாமி பையன். அவங்கப்பாவை நான் நாலஞ்சுவாட்டி பாத்திருக்கேன்’ என்றார். அந்தோனிச்சாமி மகன் இடதுசாரியாகவே இருப்பான் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதெல்லாம் பழைய ஆட்களின் மனநிலை என்று தோன்றுகிறது

கடைசியாக ஜெகேவுக்கு இஸ்லாமியர் மீது நெருக்கமான உறவே இருந்தது. அவர் அவர்களின் தீவிரவாத அணுமுறை போன்றவற்றை காணமறுப்பவராகவே கடைசிவரை இருந்தார். அவரது புரவலர்களிலும் இஸ்லாமியர் நிறைய இருந்தனர்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 80
அடுத்த கட்டுரைசிறியார்