அறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)

”ஒவ்வொரு பரமாணுவும் பிரபஞ்சமே. எனவே மனிதனே பிரபஞ்சங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம்”
(வசுதன் விஸ்வகரிடம்)

அன்பு ஜெயமோகன்,

உடலுக்கு ஆதாரமாக இருக்கும் ஆற்றலை உயிர் எனச் சொல்வோம். அவ்வாற்றல் இல்லையென்றால் கண்ணுக்குத் தெரியும் உடலின் நகர்வோ, இயக்கங்களோ சாத்தியம் இல்லை என்பதும் நாம் அறிந்த செய்தியே. உயிரைக் குடைந்து பார்த்த அறிவியலாளர்கள் அது கண்ணுக்குத் தெரியாத அணுக்களின் தொகுப்பாக இருக்கிறது என்று அறிவித்தனர். மேலும், அவ்வணுக்களின் வளர்சிதை மாற்றங்களைப் பொறுத்தே உடலின் வாழ்நாள் தீர்மானிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். உயிரியல் எனும் பிரிவு வழியே உயிர்களின் மூலத்தைக் கண்டறிந்துவிட முயலும் அறிவியலின் முயற்சிகளை ஒருபோதும் நாம் மறுக்கவில்லை. அதேநேரம், அவற்றின் முடிவுகள் கொண்டு நாம் எவ்வித முழுமையான தெளிவையும் எட்டிவிட முடியாது என்றே சொல்லி வருகிறோம். மனித உடலின் ஒவ்வொரு இயக்கத்தையும் அறிவியலால் முன்கூட்டிச் சொல்லிவிட முடியும் என்பதாக நவீன சமூகம் இன்று நம்பவைக்கப்பட்டிருக்கிறது. மனிதனின் உடல், மன மற்றும் உயிர் தொடர்பான விளக்கங்களை அறிவியலால் நிச்சயம் தெரிந்துகொள்ள முடியும் என்பதான தோற்றமும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அத்தோற்றத்தின் மாயக்கவர்ச்சியால் இன்று நாம் தொடர்ந்து ஊசலாடிக்கொண்டிருக்கிறோம். அறிவியலுக்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்களன்று நாம் என்பதும், அறிவியலால் எல்லாவற்றையும் கண்டறிந்துவிட முடியாது என்பதை ஒப்புக்கொள்ளவே வலியுறுத்துகிறோம் என்பதும் எப்போது புரிந்துகொள்ளப்படுமோ?

அறிவை மூலமாகக் கொண்ட சொல்லே அறிவியல். அறிவு எப்போதுமே தனக்கு முன்பிருக்கும் ஒரு காட்சியை அப்படியே பார்க்கச் செய்யாது. அதாவது, காட்சி எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்குமாறு அனுமதிக்காது. மாறாக, தான் சேகரித்து வைத்திருக்கும் முந்தைய காட்சிகளோடு(காட்சியோடு) அதை ஒப்பிட்டே பார்க்க வைக்கும். ஒப்பிடலோடு நின்றுவிடாது. முந்தைய மற்றும் தற்போதைய காட்சிகளை மதிப்பிட்டு தரவரிசையையும் அளித்துவிடும். அத்தரவரிசையில் தற்போதைய காட்சி முதலிடத்தில் இருந்தால் அன்றி அதைக் கண்டுகொள்ளவே செய்யாது. காட்டாக மழையைச் சொல்லலாம். தற்போது பெய்து கொண்டிருக்கும் மழையை அறிவு முன்பு பெய்த மழையோடு ஒப்பிட்டே பார்க்கும். பிறகு, தற்போது பெய்யும் மழை முன்பு பெய்த மழையைப் போன்றதா அல்லது அதைவிடச் சிறப்பானதா என ஆராயத் துவங்கும். அவ்வாய்வின் முடிவிலே, முன்பெய்த மற்றும் தற்போது பெய்யும் மழைகளைக் குறித்த புள்ளிவிபரங்களை அறிவு சீரமைத்துவிடும். அதைக்கொண்டு மழை தொடர்பான சித்திரத்தை ஒரு வரையறை வடிவில் அளிக்க முயலும். அச்சித்திரத்தை ஒட்டியே நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்தவும் துவங்கி விடும். ஆக, அறிவியல் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையிலான பொதுவரையறை ஒன்றை முன்வைப்பதன் வழியாகத் தனது தரப்பை வலுவாக்கிக்கொள்கிறது. ஆனால் அது எப்போதும் நமக்கு கைகொடுக்குமா?

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசலாம். எல்லாவற்றையும் புரிந்து கொள்ளலாம் எனும்வரையில்கூட அறிவியலை நாம் வரவேற்கலாம். ஆனால், உலகையே மானுட சமூகத்தின் கைப்பாவையாக மாற்றிவிடலாம் எனும்படியிலான அதன் செயல்பாடுகல் நமக்கு அதிர்ச்சி அளிப்பவை. கண்டுபிடிப்புகள், சோதனைகள் எனும்பெயரில் அறிவியல் தொடர்ந்து ஒருவிதச் செயற்கை வாழ்வுக்கே நம்மை அடிமைப்படுத்தி வருகிறது. நாமும் எவ்விதக் குற்றவுணர்வும் இன்றி அவ்வாழ்வின் மாயவண்ணங்களில் திளைக்கத் துவங்கியும் பழகிவிட்டோம். பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளை மையப்படுத்தியே பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இயற்கையோடு இணைந்ததாக இருந்த நம் வாழ்வை இன்று முழுக்க தனித்துப் பிரித்து செயற்கையான ஒன்றாக மாற்றிவிட்டதில் பெரும்பங்கு அறிவியலையே சாரும். வேட்டை, மேய்ச்சல் சமூகக் காலகட்டங்களில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள் நாம். வேளாண் சமூகக் காலகட்டத்திலும் ஓரளவு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோம். என்றாலும், நிலைத்தகுடிகளாக வாழத்துவங்கிய அக்காலகட்டத்திலிருந்தே இயற்கையிலிருந்து நம் வாழ்வு விலகத்துவங்குகிறது. உற்பத்திச்சமூகக் காலகட்டத்தில் அவ்விலகல் இன்னும் அகலமாகிறது. நவீனச்சமூக காலகட்டமான இன்று நாம் இயற்கையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டோமோ என்று அஞ்சும்படியான சூழலைக் கண்ணுறுகிறோம்.

காலத்தின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு நம்மைத் தகவமைத்துக் கொள்வதே அறிவார்ந்த செயலாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் நமக்கில்லை. என்றாலும், அடிப்படையில் நாம் யார் என்பதை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு நம் வாழ்வை அமைத்துக்கொள்வது சரிதானா என்பதை யோசித்துப் பார்ப்பதும் அறிவுள்ள செயல்தானே? திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டாலும் நம் மூளையில் தங்குவதில்லை என்பதால் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. மனிதர்களான நாம் இவ்வுலகில் வசிக்கும் பிற உயிர்களைப் போன்ற உயிர்களே என்பதும், அவற்றிலிருந்து முழுக்க மாறுபட்டு தனித்துவ வடிவம் கொண்டவர்களல்ல என்பதும் நாம் தொடர்ந்து நினைவில் கொண்டிருக்க வேண்டியவை. உலகில் ஓரறிவு உயிரில் துவங்கிய பரிணாமத்தின் தொடர்ச்சி நிகழ்ந்திராவிட்டால் நம்மின் ஆற்றிவு பரிணாமம் சாத்தியப்பட்டே இராது. அவ்வகையில் நமக்கு முன்னோடிகளாக இருக்கும் ஐந்தறிவுவரை உள்ள உயிரின்ங்களை நாம் எவ்விதத்திலும் தாழ்வாக(குறைவாக) மதிப்பிட்டுவிடக்கூடாது. நமக்கு எப்படி நம் வாழ்வு முக்கியமோ அப்படி அவ்யுர்களுக்கு அவற்றின் வாழ்வு முக்கியம் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகம் தோன்றியிரா விட்டால் இங்கு உயிர்த்தோற்றம் சாத்தியப்பட்டு இருக்குமா எனும் கேளிவ்யும் அடுத்து நமக்கு எழ வேண்டும். உலகத்தின் தோற்றமும், ஐம்பூதங்களின் ஆகச்சரியான சேர்க்கையுமே நாம் இன்று மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கான விதைகள். உலகம் எனச் சொல்லப்படும் பூமிக்கோளின் தோற்றத்திற்கு அடிப்படையாக இருந்தது கதிரவன் எனப்படும் சூரியனே. கதிரவனில் நிகழ்ந்த அழுத்ததினால் அதிலிருந்து பிரிந்த பகுதிகளில் ஒன்றே நம் உலகம். ஆக, கதிரவனும் நம் இன்றைய வாழ்வுக்கு ஒருவிதத்தில் உதவி இருப்பது தெரிய வருகிறது. அப்படியே நம் சிந்தனையை விரித்துக் கொண்டே சென்றால் அது பேரண்டங்கள், அண்டங்கள், விண்மீன் குடும்பங்களை உள்ளடக்கிய வெட்டவெளியில் சென்று திகைத்து நிற்கும். ஏனென்றால் வெட்டவெளி(ஆதி மெய்ப்பொருள்) எனும் பரப்பு நம் ஊகத்திற்கு எவ்விதத்திலும் அடங்கிவிடாத கால,வெளி போன்ற எல்லைகள் இல்லதாது. ஆக, இன்று உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வுக்கு அடிப்படையான உயிருக்கும், உடம்புக்கும் மூலமாக இருப்பது வெட்டவெளியே எனத்தெரியவரும். இப்போது சொல்லுங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கையிலிருந்து பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட வாழ்வு முன்வைக்கும் வடிவம் உண்மையாகவே நாம்தானா? சந்தேகமே வேண்டாம். அது நிச்சயம் நாமன்று. ‘நாம்’ என்பதாக ‘நாம்’ கட்டமைத்திருக்கும் ஒரு செயற்கை உலகம். அவ்வுலகில் நம் சூழலில் நிகழ்வதாக நம்பும் நன்மை, தீமைகளை மட்டுமே கணக்கில் கொண்டு நம் வாழ்வைப் பார்க்கிறோம். அதுவே நம் சிக்கல்களுக்கு மூல காரணமாக இருக்கிறது. செயற்கைப் பரப்பிலிருந்து உடனே நம்மால் வெளிவந்துவிட இயலாது என்பதை எப்படி ஒப்புக்கொள்கிறோமோ அதைப்போன்றே முடிந்தவரை இயற்கையிடமிருந்து முழுக்க முரண்பட்டு நாம் வாழ்ந்துவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனை உடைத்துப் பார்த்தால் நாம் இதுகாறும் பேசிவற்றை ஓரளவு ஒருங்கிணைத்துப் பார்த்துவிட முடியும். மனிதனை உடைக்கும்போது அவன் உடலாக இருக்கிறான். உடலை உடைத்தால் மனமும், உயிராக இருக்கிறான். மனதை உடைத்தால் உயிராக மட்டும் இருக்கிறான். உயிரை உடைத்தால் ஐம்பூதங்களாக இருக்கிறான். ஐம்பூதங்களை உடைத்தால் பேரண்டமாக இருக்கிறான். பேரண்டங்களை உடைத்தால் அனைத்துக்கும் மூலமான வெட்டவெளியாக இருக்கிறான். வெறுமனே உலகவாழ்வை மட்டும் முன்வைத்து தருக்கங்களைப் பேசும் அறிவியலுக்கும், அனைத்துக்கும் மூலமான வெட்டவெளியில் நின்று உலகவாழ்வைக் கவனிக்கத்தூண்டும் சமயத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டியது இங்குதான். இன்று சமயங்களிலும் அறிவியலைப் புகுத்த முனைந்து நாம் திண்டாடிக்கொண்டிருக்கிறோம். தெளிவாக ஒன்றை நாம் இங்கு புரிந்து கொள்வோம். நம் அறிவை முழுக்க நம்மை மையப்படுத்திப் பார்க்கத் தூண்டுவது அறிவியல். கண்ணுக்குப் புலப்படாத கால-இட எல்லைகளற்ற வெட்டவெளியில் நின்று கொண்டு நம் வாழ்வைப் பார்க்கத் தூண்டுவது சமயம்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 75
அடுத்த கட்டுரைவெள்ளை யானையும் வரலாறும்