ஏன் நம்மிடம் காகிதம் இருக்கவில்லை?

பாப்பிரஸ் பக்கம்
பாப்பிரஸ் பக்கம்

என்னுடைய குறுகிய வரலாற்று அறிவில், நான் நம்முடைய வரலாற்று ஆவணங்களைப்பற்றி கேள்விப்படுவதெல்லாம், ஓலைச்சுவடிகளைப்பற்றியும், கல்வெட்டுக்களைப்பற்றியும் தான்.

காகிதம், தோல், துணி இவற்றால் ஆன சுருள்களோ, புத்தக வடிவங்களோ உபயோகத்தில் இல்லையா அல்லது நமக்கு கிடைக்கப் பெறவில்லையா?

நாலாம் நூற்றாண்டுக்குள் சீனாவில் காகிதம் பரவலாக உபயோகத்தில் வந்து விட்டதாக அறிகிறோம். சீனாவுடன் வணிக பரிமாற்றம் இருந்தது. அப்படியானால், காகித உபயோகம் தமிழ் நாட்டில் எப்பொழுது வந்தது?

உங்களுக்கு சரித்திர ஆர்வமும் அறிவும் உண்டு என்பதை அறிவேன்.

விளக்கம் தந்தால் மிக்க நன்றி.

– கே ஆர் வைகுண்டம்

அன்புள்ள வைகுண்டம்

உண்மையில் இது வியப்புக்குரியதுதான். சீனர்களுக்கு நம்முடன் மிகமிகத் தொன்மையான காலம் முதலே வணிகம் இருந்துள்ளது. அவர்கள் இங்கு வருவது மிக எளிது. இங்குள்ள தச்சுக்கலையில் சீனாவின் செல்வாக்கு மிக அதிகம். மருத்துவத்திலும் வேதியியலிலும் சீனர்களின் பங்களிப்புண்டு. காகிதம் மட்டும் ஏன் வரவில்லை?

ஆனால் அதற்கு முன் சீனர்கள் உலகம் முழுக்கக் கொண்டுசென்று விற்பனை செய்த பாப்பிரஸும் இங்கு வரவில்லை. இங்குள்ள இலக்கியங்கள் எதிலும் அதைப்பற்றிய குறிப்புகள் இல்லை. இலக்கியச்சான்றுகளின்படி இங்கு இருந்த எழுதுபொருட்கள் பனையோலை, தாலியோலை,ஃபூர்ஜமரப்பட்டை, தோல் ஆகியவைதான்.ஆவணங்கள் செம்புத்தகடுகளில் எழுதப்பட்டன

ஓலை எதோ ஒருவகையில் இவர்களுக்குச் சிறப்பான எழுதுபொருளாக இருந்தமையால் பாப்பிரஸும் காகிதமும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் பாப்பிரஸை விளிம்புகள் சேர்த்து ஒட்டி காகிதம்போல ஆக்கி அதை நூலாகவும் ஆக்கியிருக்கிறார்கள். நாம் ஏன் ஓலையை சேர்த்து ஒட்டினால் காகிதம்போல அகலமாக ஆகும் என கண்டுபிடிக்கவில்லை? ஏன் நம்மிடம் புத்தகம் உருவாகவில்லை?

காகிதத்தை இங்கெ ஐரோப்பியர்தான் கொண்டுவந்தனர். டச்சுக்காரர்கள். அதுவரை இங்கிருந்தது பெரும்பாலும் ஓலைதான். ஆச்சரியமான சில விஷயங்கள் உண்டு. காகிதம் வந்தபின்னரும் நெடுங்காலம் ஓலை புழக்கத்தில் இருந்தது. ஏனென்றால் ஓலை மங்கலமானதாக கருதப்பட்டது. ஜாதகம் போன்றவை ஓலைகளிலேயே எழுதப்பட்டன. ஏன், அச்சிலிருந்தே நூலை திரும்ப ஓலைகளில் எழுதிக்கொண்டார்கள். அப்படி ஓலையில் நகல் எடுக்கப்பட்ட பைபிள் பற்றி அ.கா.பெருமாள் எழுதியிருக்கிறார்.

சிலசமயம் இதற்கு மிகமிக எளிமையான விடை ஏதேனும் இருக்கலாம். அல்லது நமது மொத்தப்பண்பாட்டையும் ஆராய்ந்துபார்க்கவேண்டியிருக்கலாம். முறையான விரிவான ஆய்வுக்குப்பின் ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைநினைவின் நதியில்- மோனிகா மாறன்
அடுத்த கட்டுரைஎம்டிஎம்மின் பதில்