அக்னிநதி, உப்புவேலி- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் ,

வணக்கம்.

உப்பு வேலி நூலை வாசிக்கும் முன்பு குர் அதுன் உல் ஹைதர் அவர்களின் அக்னி நதி நாவலை வாசிக்கும் வாய்ப்பும் மனநிலையும் வாய்த்தது.

நான் நான்கு ஆண்டுகளுக்கு சற்றொப்ப தில்லியில் வசித்தவன் என்கிற முறையில் வட இந்தியாவின் நிலவியல் எனக்கு பழக்கம் தான் இருந்த போதிலும் இந்த நூல் வட இந்தியாவின் நிலவியலை இந்தியாவின் தத்துவ மரபை அது காலம்தோறும் கொள்ளும் மாற்றங்களை முக்கியமாக கிழக்கிந்திய கம்பெனி இந்திய பொருளாதரத்தை திட்டமிட்டு சூறையாடிய வரலாற்றின் குறுக்கு வெட்டு தோற்றத்தை மிக கச்சிதமாக பதிவு செய்திருப்பதாக உணர்கிறேன்.

குறிப்பாக இந்திய விவசாயிகளின் துயரம் பல பக்கங்களுக்கு விரிகிறது.நிலவரி,மின்டோ மோர்லி சீர்திருத்தம் என்கிற பெயரில் நிகழ்ந்தேறிய கொடுமைகள் காலம்தோறும் போரும் அரசியலும் எளிய மக்களை எவ்வாறு தொரடர்ந்து அலைக்கழிக்கிறது ஒரு காலத்தில் தொழில்களின் கேந்திர ஸ்தானமாக இருந்த நாடு எவ்வாறு மெல்ல மெல்ல வேளாண்மைக்கான நாடாக மாற்றப்பட்டு பின்னும் சுரண்டப்படுகிற வரலாறு விரிகிறது.

இதில் ஆசிரியர் ஒரு மிக முக்கிய அவதானிப்பை செய்கிறார் இன்று இந்திய ஹிந்துக்கள் ஐரோப்பிய லிபரல் வாதத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு முன்னகர்கிற அதே வேளையில் முஸ்லீம்கள் இன்னும் feudal society அக தங்களை சுருக்கிக் கொண்டதையும் இதை சமூகம் என்கிற அளவில் ஹிந்துக்கள் கண்டு கொள்ளததையும் பதிவு செய்கிறார்.

இந்த இடத்தில் ஒரு இலக்கிய வாசகனாக இருந்தும் ஆசிரியர் நோக்கம் மீது ஐயம் எனக்கு ஏற்பட்டது உண்மை, அதை தொடர்ந்தே உப்பு வேலி நூலை வாசித்தேன்

அதில் ஒரு இடத்தில் ராய் ஒரு தரவை முன் வைக்கிறார் இசுலாமிய ஆட்சி உப்பின் மீதான் வரி இசுலாமியருக்கு 2.5 சதவிகிதம் ஹிந்துக்களுக்கு 5 சதவிகிதம்.

ராயிடம் என்னை கவர்கிற மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் வரலாறு என்கிற ஒரு அறிவுத்துறை தன்னளவில் தனித்து செயல் பட முடியாது என்கிற அவசியத்தை உணர்ந்தவராகவும் பிற அறிவுத்துறைகளோடு அவற்றை இணைத்து மிக தெளிவாக தான் சொல்ல வந்ததை உணர்த்துவதும்.

குறிப்பாக உப்பின் மீதான வரி மற்றும் அந்த வேலி அமைக்கும் முயற்சிகளை விவரிக்கும் போது எழக் சூடிய இயல்பான கேள்வி இந்த அளவுக்கு உப்பு தேவைப்படுவதற்கான அவசியம் என்ன? ஒரு உணவுப்பொருளாக உப்பு எப்படி ஒரு சுவையூட்டி மேலும் மருத்துவ ரீதியாக உப்பின்மை என்ன மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது ?

சக நாடுகளில் உப்பின் மீதான வரிகள் என்ன? வரலாற்று ரீதியாக அப்படி வரி விதிக்கப்பட்டதன் அவசியம் என்ன? சர்க்கரையின் மீது வரி விதிக்காமல் உப்பின் மீது மட்டும் வரி விதிப்பதன் உளவியல் பின்னணி என்ன?இந்திய நிலவுடமை சமூகம் நில வரியிலிருந்து தப்புவதற்காக இந்த அநீதியை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? என விளக்கிக் கொண்டே செல்கிறார்.

இன்னும் ஒரு மிக முக்கியமான விஷயம் நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை தன்னுடைய ஆராய்ச்சிக்கு அவர் பயன் படுத்திக் கொண்டிருக்கிற விதம் கண்டிப்பாக அவருடைய தேடல் வணக்கத்திற்குரியது.ஆனாலும் தன்னுடைய ஆராய்ச்சியை மிகவும் சீராக இன்றைய தொழில்நுட்பத்தோடு இணைத்துக் கொண்டதே அவருடைய வெற்றிக்கு அடிப்படை. நம்முடைய அறிவுத்துறைகள் வெகுவாக தேங்கி நிற்பதும் இதன் காரணமாகவே. நம்முடைய தலைமுறை அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கறது அனால் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான தேடலும் தெளிவும் நம்மிடம் இல்லை.

இன்றைக்கு நம்முடைய பொருளாதார படிப்பு உயர் கல்வி நிலயங்களிலும் கணிதத்தோடு இணைந்தே கற்று கொடுக்கபடுகிறது இதற்கான முதல் விதை ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் 1970 களில் செய்யப்பட்டது இது ஒரு definitive ரிசல்ட் என்பதை தாண்டி இதில் பொருளாதாரம் என்பது உளவியல்,சமூகம் கலாச்சாரம் ஆகிய கூறுகளை உள்வாங்கி கற்க பட வேண்டியது என்கிற தெளிவு இவர்களிடம் இல்லை.

காந்தியார் மிக சரியாக இந்த உளவியலை அறிந்து கொண்டதையும் அதற்கு அவர் எப்படி மிக சரியாக ஒரு போராட்ட வடிவத்தை வழங்கினார் என்றும் அறிய முடிந்தது.

என்னை பொறுத்தவரை ராயின் புத்தகத்தை படிப்பவர்கள் அக்னி நதி நாவலையும் ஒரு இலக்கிய பிரதியாக வாசிப்பது இதை மேலும் புரிந்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன்.

காலம் ஒரு விஷயத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறது தன்னுடைய உளவியலை பண்பாட்டை வரலாற்றை தத்துவத்தை அதன் அடிப்படையான மக்கள் திரளை நேசிக்காத பேண தெரியாத எந்த தேசிய இனமும் அழிந்து தான் போகும்.

அதை தான் ராயும் குர் அதுன் உல் ஹைதர் அவர்களும் தங்கள் பாணியில் சொல்லிக் கொண்டே இருகிறார்கள்.

அன்புடன்
சந்தோஷ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71
அடுத்த கட்டுரைகடிதங்கள்