‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 55

பகுதி 11 : முதற்தூது – 7

என்ன நடக்கப்போகிறது என்று சாத்யகி பார்த்துக்கொண்டிருந்தான். கணிகர் எழமுடியாமலிருந்தது அவனுக்கு உவகை அளித்தது. முதலில் எவர் பேசப்போகிறார் என ஒவ்வொருவரும் கூர்ந்த விழிகளுடன் அமைதியாக இருந்தனர். அவையில் ஒரு கருத்து அனைவராலும் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபின்னர் அந்த அமைதி எழுவதை அவன் குலச்சபைகளிலேயே கண்டிருந்தான். தான் ஏற்ற கருத்துக்கு வலுவான மாற்றுக்கருத்து ஒன்று வரக்கூடும் என ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். வந்தால் எப்படி மறுமொழி சொல்வது என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

துச்சாதனன் மெல்ல அசைந்ததும் மொத்த அவையின் விழிகளும் அவனை நோக்கின. அவன் அறியாமல் உடலை அசைத்திருந்தமையால் திகைத்து குழப்பத்துடன் தலைசரித்து காலால் தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரிக்கம்பளத்தை நெருடத்தொடங்கினான். எங்கோ எவரோ செருமியது அவை முழுக்க மெல்லிய அலையை கிளப்பியது. சாத்யகி உள்ளூர புன்னகை செய்தான். எவர் பேசப்போகிறார் என்று, எது சொல்லப்படப்போகிறது என உய்த்துணரவே முடியவில்லை. ஆனால் அத்தருணத்தில் ஏற்றோ மறுத்தோ சொல்லப்படும் ஒற்றை வரி பெரும் வல்லமை கொண்டது என்று தெரிந்தது.

குடித்தலைவர் ஒருவர் அந்த இறுக்கத்தை வெல்லும்பொருட்டு உடலை எளிதாக்கினார். விழிகள் அவரை நோக்கியதும் திகைத்து உடனே எழுந்து கைகூப்பி உரத்தகுரலில் “ஆம், அங்கநாட்டரசர் சொல்வதே உகந்த வழி என நான் நினைக்கிறேன். இத்தனை மண்ணாசையுடன் நம் இளவரசர் வாளேந்தி நிற்க முடியாது. தருமருக்கு அஸ்தினபுரியை அளிக்காமலும் இருக்கமுடியாது… எனவே…” என்று சொல்லி அருகே இருந்தவரை நோக்கினார். அவர்தான் இவரது மாறா எதிரி என சாத்யகி எண்ணினான். அவன் எண்ணியது சரி என்பது போல அவர் எழுந்து “அனைத்தும் சரிதான். ஆனால் என்னதான் இருந்தாலும் அஸ்தினபுரியின் அரசனே குருகுலத்தை தொடர்பவன். தருமர் வெளியே நிற்பவரே” என்றார்.

அவை பறவைகள் நிறைந்த குளத்தில் கல்லெறிந்தது போல கலைந்து சலசலக்கத் தொடங்கியது. “ஆனால் அஸ்தினபுரியின் மணிமுடியை ஏற்பதில்லை என்று தருமர் உறுதிகொண்டிருக்கிறார்” என்றது ஒரு குரல். ”அந்தக் கூற்று ஒரு மங்கலக்கூற்றே. துரியோதனர் சென்று மணிமுடியை தருமருக்குக் கொடுத்தால் மறுக்கவா போகிறார்?” என்றார் இன்னொருவர். “ஏன் கொடுக்கவேண்டும்? கொடுப்பதாக எங்காவது துரியோதனர் சொன்னாரா?” என்றார் வேறொருவர். “கொடுத்தாலென்ன? தருமர் கொடுக்கிறாரே? தருமர் அளித்த அஸ்தினபுரியை துரியோதனர் மீண்டும் தருமருக்கே அளிக்கட்டுமே” என்றார் மற்றொருவர். “மணிமுடியை எவரேனும் விட்டுக்கொடுப்பார்களா?” என ஒருவர் கேட்க ”வெல்வதல்ல விடுவதே சான்றோரின் வழி” என்றார் பிறிதொருவர்.

“ஆம், அஸ்தினபுரியை அளித்தால் துரியோதனரை அயோத்தியை ஆண்ட ராகவராமனின் இளையோன் என சூதர் பாடுவார்களே!” “ராகவபரதனுக்கு மணிமுடி உரிமையே இல்லை… அதை தெரிந்துகொள்ளும்!” “எவருக்கு மணிமுடி உரிமை இல்லை? அரசகுலத்தில் அத்தனை பேருக்கும் மணிமுடி உரிமை உள்ளது என்பதே நூல்நெறி. இக்கட்டுகளில் எவரும் மணிமுடிசூடலாம்.” ”அப்படியென்றால் பீமன் முடிசூடட்டுமே. அவரல்லவா தருமனுக்கு இளையோன்?” “இதென்ன பேச்சு? அப்படி பார்க்கப்போனால் மணிமுடிக்குத் தகுதியானவர் பார்த்தர். அவர் முடிசூடட்டும்.” “மிகைப்பேச்சு எதற்கு? நாம் இங்கு இருவரில் எவருக்கு அஸ்தினபுரி உரிமை என்றே பேசிக்கொண்டிருக்கிறோம்.”

யார் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாமல் அவை அருவியென கொப்பளித்தது. பின்னர் அதன் விசை மெல்ல குறைந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் பேசியதன் பொருளின்மையை எங்கோ உணர்ந்து மீண்டு வந்து தாங்கள் கொண்ட முதற்கருத்தையே அடைந்ததுபோல அமைதியடைந்தனர். ஒரு குடித்தலைவர் “அங்கமன்னரின் திட்டத்தை ஏற்கவேண்டியவர் தருமரின் தூதராக வந்துள்ள யாதவர். அவர் பேசட்டும். நாம் பேசுவதனால் எப்பொருளும் இல்லை” என்றார். அனைவரும் கிருஷ்ணனை நோக்க அவன் புன்னகையுடன் சகுனியை நோக்கினான்.

அந்தச் சலசலப்பு அவையிலிருந்த அனைவரையும் எளிதாக்கிவிட்டிருந்ததை சாத்யகி கண்டான். கர்ணன் சொன்னதை நோக்கி சென்றதும் அம்முடிவை எளிதில் அடைந்துவிட்டோமோ என்று ஐயம் கொண்டிருந்தனர். அத்தனை குரல்களும் ஒலித்தடங்கியதும் அனைத்தும் பேசப்பட்டுவிட்டன என்றும் அதன்பின்னரும் கர்ணன் சொன்னதே வலுவாக நீடிக்கிறது என்றும் தெரிவதாக உணர்ந்தமை அவர்களை நிறைவடையச்செய்தது. கிருஷ்ணன் சொல்லும் ஓரிரு சொற்களுடன் அவைக்கூட்டமே முடிந்துவிடுமென உணர்ந்தபோது அவன் எழாமலிருந்தது திகைப்பை அளித்தது. அவன் சகுனியை நோக்க மொத்த அவையும் சகுனியை நோக்கி திரும்பியது.

சகுனி கணிகரை நோக்கி சிலகணங்கள் தயங்கியபின்னர் “எந்தெந்த ஊர்களை யாதவ அரசியின் மைந்தருக்கு அளிப்பது என்பதும் சிந்திப்பதற்குரியது…” என்று தொடங்கியதுமே கோல்பட்ட முரசென அவை உறுமி எழுந்தது. ஒரு முதிய குடித்தலைவர் உரக்க “இதில் பேச்சே இல்லை. அஸ்தினபுரியின் முடியை தருமரே இளையவருக்கு அளிப்பாரென்றால் அவர் கேட்கும் அத்தனை ஊர்களையும் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்… அதைப்பற்றி பேசுவதே இழிவு” என்றார்..

“ஆனால்” என்று சகுனி சொல்வதற்குள் அனைத்து குடித்தலைவர்களும் எழுந்துவிட்டனர். “நாம் சூதாடவில்லை காந்தாரரே, அறம்பேசுகிறோம்” என்று ஒருவர் கைநீட்டி கூவினார். “இது அஸ்தினபுரி. பாலைநிலத்தில் கூடிவாழும் கொள்ளையர் நகரமல்ல” என்று இன்னொருவர் கூவினார். “அறம் தானாகவே நெஞ்சில் தோன்றவேண்டும்…” “பாலைவன ஓநாயின் பசியடக்க யானையின் ஊனும் போதாது” என்றெல்லாம் குரல்கள் கலைந்து எழுந்தன. அத்தனை முகங்களிலும் எழுந்த கடும் வெறுப்பைக் கண்டு சகுனி திகைத்துப்போய் கணிகரை நோக்கியபின் கிருஷ்ணனை நோக்கினார். அவரது புண்பட்ட கால் துடித்தது. அவர் எழுந்துசெல்லவிழைந்தது போல உடல் சற்றே அசைந்தது. ஆனால் எழமுடியவில்லை.

”அஸ்தினபுரியின் முடியுரிமையை விட்டுக்கொடுப்பதாக இன்னமும் யுதிஷ்டிரர் முடிவு சொல்லவில்லை” என்று விதுரர் சொன்னார். “நாம் இன்னமும் பேசி முடிக்கவில்லை.” கர்ணன் எழுந்து உரக்க “என்ன பேச்சு அது அமைச்சரே? அஸ்தினபுரியின் முடியுரிமையைத் துறப்பதாக யுதிஷ்டிரர் சொன்ன பேச்சுடன்தான் இந்த அவையே கூடியது. எவர் சொன்னது அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று? ஒப்புக்கொள்ளவில்லை என்றால் யாதவர் சொல்லட்டும்” என்றான். மீண்டும் அனைத்து விழிகளும் கிருஷ்ணனை நோக்கி திரும்பின.

சாத்யகியின் விழிகளிடம் கணிகரை விட்டுவிடும்படி சொல்லிவிட்டு கிருஷ்ணன் “இத்தனை சிக்கலானதாக இது ஆகுமென நான் எண்ணவில்லை அவையீரே. நான் வந்தது இந்த அஸ்தினபுரியில் உடன்பிறந்தோர் குருதிசிந்தலாகாது, அவர்களின் வழித்தோன்றல்கள் வாளெடுக்கலாகாது என்பதற்காகவே. அதற்காகவே தான் முடிதுறப்பதாகவும் இளையோனுக்கு அரசை அளிப்பதாகவும் யுதிஷ்டிரர் சொன்னார். ஆனால் பாதிநாட்டை அளிக்கையில் இரண்டாமிடத்தை அவர் ஏற்பாரா என்பதை நான் எப்படி சொல்லமுடியும்?” என்றான். அதுவரை இருந்த அனைத்து அக எழுச்சிகளும் அடங்கி அமைந்தது அவை. அனைத்தும் முதல்புள்ளிக்கே சென்றுவிட்டன என்று தோன்றியது.

“இது வெறும்பேச்சு. யுதிஷ்டிரரின் நோக்கம் அமைதி என்றால் இதையன்றி எதையும் ஏற்கமுடியாது. இருசாராரும் நிலத்தை அடைகிறார்கள். இருவரும் அரசரின் பெருங்குடைக்கீழ் மைந்தராகவும் இருக்கப்போகிறார்கள். வேறென்ன விழைவதற்கு?” என்று கர்ணன் சொன்னான். “இரண்டாமிடத்தில் அமையக்கூடாதென்று யுதிஷ்டிரர் எண்ணுவாரென்றால் அவரே இங்கு போரை தொடங்குகிறார் என்றுதான் பொருள். இங்கு எவரும் அவரை இரண்டாமிடத்திற்கு செலுத்தவில்லை. இந்த நாட்டின் மணிமுடியை அவருக்குத்தான் அளிக்கிறோம். வென்று அதை ஈந்து அவர் செல்கிறார். அவர் குடி முதல்வராக அல்ல அதற்கும் மேலே குலச்சான்றோராக வணங்கப்படுவார்.”

“அது உண்மை” என்று கிருஷ்ணன் சொன்னான். “அவ்வண்ணமே பிற பாண்டவர்களும் உணர்வார்களா என்பதே நான் கொள்ளும் ஐயம்.” கர்ணனின் விழிகளை நோக்கியபடி “அத்துடன் அதை பாஞ்சாலர் ஏற்கவேண்டும். அவர் மகள் ஏற்கவேண்டும்.” கர்ணன் உடலில் எழுந்த விதிர்ப்பை சாத்யகியால் அத்தனை தொலைவிலேயே காணமுடிந்தது. அவன் திருதராஷ்டிரரை நோக்கிவிட்டு மீண்டும் கிருஷ்ணனை நோக்கினான். அவனால் பேசமுடியவில்லை என உதடுகளின் பொருளற்ற சிறு அசைவு காட்டியது. அதை உணர்ந்தவன் போல துரியோதனன் “அப்படி பலகுரல்களில் அவர்கள் பேசுவதாக இருந்தால் நீர் தூது வந்திருக்கலாகாது யாதவரே… தூதன் ஒற்றைச்செய்தியுடன் மட்டுமே வரமுடியும்” என்று உரத்த குரலில் இடைபுகுந்தான்.

“நான் ஒற்றைக்குரலைத்தானே முன்வைத்தேன்? யுதிஷ்டிரர் அரசை துறக்கிறார் என்று… ஆனால்…” என்று கிருஷ்ணன் சொல்வதற்குள் ஓங்கி தன் இருக்கையின் பிடியில் அடித்து ஓசையிட்டபடி பலராமர் எழுந்து கைகளை விரித்து “என்ன ஓசை இது? எத்தனை நேரம்தான் பொருளில்லாமல் பேசிக்கொண்டிருக்க முடியும்? எனக்கு பசியே வந்துவிட்டது” என்று கூவினார். குடித்தலைவர் இருவர் வெடித்துச்சிரித்துவிட்டனர். “நாம் அங்கநாட்டரசர் சொன்னதுமே முடிவெடுத்துவிட்டோம். அதற்கு மாற்றான அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டன… இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை… போதும்” பலராமர் தொடர்ந்தார்.

“அஸ்தினபுரியின் முடியுரிமையை அரசர் யுதிஷ்டிரனுக்கு அளிப்பார். அவன் அதை என் மாணவனுக்கு அளித்து அவனே வந்து முடிசூடுவான். என் மாணவனும் நானும் சென்று யுதிஷ்டிரனை வணங்கி பாதிநாட்டை ஏற்றருளும்படி அவனிடம் மன்றாடுவோம். அவன் ஏற்பான். அவன் விரும்பும் ஊர்களெல்லாம் அளிக்கப்பட்டு தட்சிணகுரு நாடு பிறக்கும். இருநாடுகளும் அரசரின் குடைக்கீழ் ஒன்றாகவே இருக்கும் என்றும் வருங்காலத்திலும் எந்நிலையிலும் இருநாட்டுப்படைகளும் போர் புரியாது என்றும் இருசாராரும் கொற்றவைமுன் வாள்தொட்டு சூளுரைப்பார்கள். நீத்தாரும் வேதியரும் குலமூத்தாரும் குடித்தலைவரும் சான்றாக அச்சொல்லை ஓலையில் பொறித்துக்கொள்வார்கள். அவ்வளவுதான். அவை முடிந்தது. அரசர் அறிவிக்கட்டும். நாம் உணவுண்ண செல்வோம்.”

அவை நகைத்தது. அதன் நடுவே மெல்ல கணிகர் எழுந்ததை எவரும் காணவில்லை. “கணிகர் சொல்ல வருவதை கேட்போம்” என்று கிருஷ்ணன் சொன்னபின்னரே அனைவரும் திரும்பினர். கணிகரை நோக்கி திரும்பிய அனைத்து விழிகளிலும் இருந்த சினத்தைக் கண்டு சாத்யகியே அஞ்சினான். கணிகர் மெல்லியகுரலில் “அஸ்தினபுரி தட்சிணகுருவுக்கு அளிக்கும் நிலத்தில் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் இப்போதே பேசிவிடலாம். அவர்கள் போர்க்கோட்டையாக ஒரு நகரத்தை எழுப்புவார்கள் என்றால்…” என்று சொல்லத் தொடங்கவும் ஒரு குடித்தலைவர் “அவர்கள் அதை சுட்டு தின்பார்கள். அல்லது சுருட்டி இடுப்பில் ஆடையாகக் கட்டுவார்கள். நாம் அதை பேசவேண்டியதில்லை” என்று கூச்சலிட்டார்.

அதுவரையில் அந்த அவையில் நிகழ்ந்த அனைத்து முறைமைகளும் விலகிச்சென்ற அந்தத் தருணத்தை அவையே விரும்பியதென்பதையும் சாத்யகி கண்டான். கணிகர் மெல்லிய குரலில் “இல்லை, அவர்கள் யமுனையின் கரையில்…” என தொடங்கவும் “அவர்கள் அங்கே குடிலமைத்து தவம் செய்யவேண்டும் என்கிறீர்களா? என்ன பேசுகிறீர்கள்?” என்றார் இன்னொருவர். இளம்குடித்தலைவர் ஒருவர் “பேசுவதற்கு இந்த திரிவக்கிரர் யார்? இவருக்கு இங்கு அமரும் உரிமையை அளித்தவர் எவர்? முதலில் இந்த முடம் அவைவிட்டு வெளியேறட்டும். அதன்பின் பேசுவோம்” என்று கூச்சலிட்டார். இரண்டு குடித்தலைவர்கள் எழுந்து “இவரும் காந்தாரரும் இக்கணமே வெளியேறவேண்டும்… இல்லையேல் நாங்கள் வெளியேறுகிறோம். எங்கள் நாட்டைப்பற்றி எவரோ ஒருவரிடம் பேசும் நிலையில் நாங்களில்லை” என்று கூவினார்கள்.

துரியோதனன் சினத்துடன் கைதூக்கி “அவர்கள் என் தரப்பினர். என் மாதுலர்” என்று சொல்லி எழுந்தான். அதனால் சீண்டப்பட்டு உரத்தகுரலில் “அப்படியென்றால் நீங்களும் வெளியேறுங்கள். நாங்கள் அரசரிடம் பேசிக்கொள்கிறோம். இளவரசர் அரசரின் ஆணையை கடைபிடிப்பவர் மட்டுமே…” என்றார் முதிய குடித்தலைவர். “இப்போதே இந்த அயலவர் அஸ்தினபுரியின் மேல் கோல் செலுத்த முயல்கிறார்கள் என்றால் நாளை என்ன நிகழும்? வேண்டாம், அஸ்தினபுரியை தருமரே ஆளவேண்டும். இளையவர் ஆள நாங்கள் ஒப்பமாட்டோம்…” என்று இன்னொருவர் அவர் அருகே எழுந்து கூவ பிறர் ”ஆம், வேண்டாம்… யுதிஷ்டிரர் ஆளட்டும்” என்று சேர்ந்து குரலெழுப்பினர்.

கணிகர் திறந்த வாயுடன் பதைபதைத்த விழிகளுடன் நின்றார். அவர் முன் வெறுப்பு ததும்பும் முகங்களாக அவை அலையடித்தது. “முதலில் இந்த முடவனை கழுவிலேற்றவேண்டும்… இளவரசர் அதை செய்துவிட்டு வந்து எங்களிடம் பேசட்டும்… அதுவரை அவரை நாங்கள் ஏற்கமுடியாது” என்றார் ஒருவர். “இருமுடவர்களும் கழுவிலேற்றப்படவேண்டும்” என பின்னாலிருந்து ஒருகுரல் எழுந்தது. சாத்யகி என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல் திரும்பி கிருஷ்ணனை பார்க்க அவன் அதே புன்னகை முகத்துடன் திருதராஷ்டிரரை நோக்கிக்கொண்டிருந்தான். திருதராஷ்டிரர் கைகளை உரக்கத்தட்ட அவை அப்படியே பேச்சடங்கியது.

“அவையினரே, எவர் அவையிலிருக்கவேண்டுமென முடிவெடுப்பவன் நான். நான் முடிவெடுக்கவேண்டியதில்லை என எண்ணுவீர்கள் என்றால் அதை சொல்லுங்கள். நான் முடிதுறக்கிறேன்” என்றார். “இல்லை, அதை சொல்லவில்லை” என்றார் மூத்த குடித்தலைவர். “சொல்லுங்கள், இங்கே உங்கள் ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான் நான் அமர்ந்திருக்கவேண்டுமா?” இன்னொரு குடித்தலைவர் “இல்லை அரசே. இது உங்கள் நாடு. உங்கள் அரியணை. நாங்கள் உங்கள் குடிகள்” என்றார். “அவ்வண்ணமெனில் அமருங்கள்… என் பேச்சை கேளுங்கள்.” அனைவரும் அமர்ந்துகொண்டனர்.

“சகுனி என் மைத்துனர். இந்த அரசின் அவையில் என் மைந்தனின் கோலுக்குக் காவலாக அவர் என்றுமிருப்பார். அது என் விழைவு” என்றார் திருதராஷ்டிரர். “தங்கள் சொற்கள் இவ்வரசில் ஆணை என்றே கொள்ளப்படும் அரசே” என்றார் விதுரர். ‘ஆம் ஆம்’ என்று அவை ஓசையிட்டது. “கணிகர் காந்தாரரின் அமைச்சர். அவர் இனிமேல் இந்த அவையில் இருக்கமாட்டார். காந்தாரரின் தனிப்பட்ட அமைச்சராக மட்டும் அவர் பணியாற்றுவார்” என்ற பின்னர் திரும்பி “கணிகரே, அவை நீங்கும். இனி எப்போதும் அஸ்தினபுரியின் அவைக்கு நீர் வரவேண்டியதில்லை” என்றார்.

கணிகர் கையை ஊன்றி எழுந்து ஒன்றன் மேல் ஒன்றென உடல் மடிய நின்று பெருமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு எவரையும் நோக்காமல் தவழ்வது போல நடந்து வெளியேறினார். அவர் செல்வதை அவை அமைதியாக நோக்கியது. அவர் செல்லும் ஒலி மனிதர் நடப்பதுபோல கேட்கவில்லை. எதுவோ ஒன்று இழுத்துச்செல்லப்படும் ஒலியென கேட்டது. அவ்வொலியின் வேறுபாடே அங்கிருந்தவர்களை குன்றச்செய்தது. அவர்களின் விழிகளில் அருவருப்பு நிறைந்திருந்தது. அதை உணர்ந்தவர் போல கணிகரும் முடிந்தவரை விரைவாக கடந்துசெல்ல முயன்றார்.

அவர் தன்னையோ கிருஷ்ணனையோ நோக்குவார் என்று சாத்யகி எதிர்பார்த்தான். அவர் நோக்காமல் வாயிலைக் கடந்ததும் அவ்வாறுதான் நிகழும் என்ற உணர்வையும் ஒரு நிறைவையும் அடைந்தான். அவர் சென்றபின் வாயில் வாய் போல மூடிக்கொண்டதும் அப்பால் இடைநாழியில் தவழ்வதுபோல செல்லும் குறுகிய உருவத்தை அகக்கண்ணில் கண்டான். ஆழ்ந்த இரக்கவுணர்வு ஏற்பட்டது. திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அங்கே எதுவும் நிகழவில்லை என்பதைப்போல அவன் கர்ணனை நோக்கிக்கொண்டிருந்தான்.

”பிறகென்ன? முடித்துக்கொள்வோம்” என்றார் பலராமர். “அந்த முதியவர் சொல்வதென்ன என்று கேட்டிருக்கலாம். இத்தனைபேருக்கு இங்கே பேச இடமளிக்கப்பட்டது. ஆனால் அரசரின் ஆணை முடிவானது. ஆகவே அதை முடித்துக்கொள்வோம்.” கிருஷ்ணன் “நான் ஐயம்கொள்வது ஒன்றைப்பற்றி மட்டுமே. என் அத்தை யாதவ அரசி அஸ்தினபுரியின் மணிமுடியை தன் மைந்தன் சூடவேண்டுமென விழைந்தவர். அது இல்லையென்றாவதை அவர் விழைவாரா என தெரியவில்லை” என்றான். எரிச்சலுடன் கர்ணன் “எந்த உறுதியும் இல்லாமலா இங்கு தூதென வந்தீர்?” என்றான். “அவளிடம் நான் பேசுகிறேன். ஒரு அதட்டு போட்டால் கேட்கக்கூடியவள்தான்” என்றார் பலராமர்.

“இல்லை மூத்தவரே, அத்தை அப்படி பணிபவர் அல்ல. அது உங்களுக்கும் தெரியும்…” என்றான் கிருஷ்ணன். “நான் இங்கு வரும்போது என்னிடம் அத்தை சொன்னது இதைத்தான். அஸ்தினபுரியின் அரியணையில் தன் மைந்தன் அமரவேண்டுமென்பது அவர் கொண்ட சூள். அது மறைந்த மன்னர் பாண்டுவுக்கு அவரளித்த வாக்கு. அதை அவர் விடமாட்டார்.” பலராமர் சினத்துடன் “அப்படியென்றால் என்னதான் செய்வது? போரை ஆரம்பிக்கிறார்களா என்ன? வரச்சொல். நான் இவர்களுடன் நிற்கிறேன். நீ உன் தோழனுடன் படைக்கலமெடுத்து வா. உடன்பிறந்தாரின் போர் துவாரகையிலும் நிகழட்டும்” என்றார்.

விதுரர் “ஒன்று செய்யலாம். யாதவ அரசியின் விருப்பத்தை நிறைவேற்றலாம். தருமனே இங்கு அஸ்தினபுரியில் முடிசூடட்டும். அரியணை அமர்ந்து கோலேந்தி அன்னையிடம் வாழ்த்துபெறட்டும். அன்னையின் சொல்லும் நிலைபெறட்டும். அதன் பின் அவ்வரியணையை அவர் தன் இளையோனுக்கு அளித்தால் போதும். அதை அளிக்கமுடியாதென்று சொல்ல யாதவ அரசிக்கும் உரிமை இல்லை” என்றார். அவையில் இருந்து “ஆம், அதுவே வழி” என்று இருவர் சொன்னார்கள்.

சகுனி ஏதாவது சொல்வார் என சாத்யகி எதிர்பார்த்தான். ஆனால் மெல்லிய மீசையை முறுக்கியபடி அவர் பச்சைவிழிகளின் கனலை சாம்பல் மூடியிருக்க அமர்ந்திருந்தார். அவையினர் அவைகூடி நெடுநேரமானதனாலேயே முடித்துக்கொள்ள விழைந்தனர் என்று தோன்றியது. அந்தச்சலிப்பினாலேயே ஏதாவது ஒரு முடிவை அவர்கள் விழைந்தனர் என்றும் அத்தருணம் வரை அவர்களை கொண்டுவந்து சேர்ப்பவன் அவர்களைக்கொண்டு எதையும் செய்யலாம் என்றும் அவன் எண்ணிக்கொண்டான்.

கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்த கிருஷ்ணனை சாத்யகி கண்டான். எவரையாவது பேசவைக்க விரும்பினால் கிருஷ்ணன் அவரை கூர்ந்து நோக்குவதை அப்போதுதான் புரிந்துகொண்டான். கர்ணன் அமைதியற்று சற்று அசைந்தபின் “யுதிஷ்டிரர் அவையமர்வதென்றால்…” என்று தொடங்கியதும் கிருஷ்ணன் “ஆம், அது திரௌபதி அஸ்தினபுரியின் முடிசூடுவதேயாகும். அஸ்தினபுரியின் முடியை அவள் துரியோதனனுக்கு அளித்ததாகவும் பொருள்படும்” என்றான். துரியோதனன் சினத்துடன் ஏதோ சொல்ல எழுவதற்குள் கர்ணன் “அப்படியென்றால்…” என்று சொன்னதுமே திருதராஷ்டிரர் திரும்பி “அவள் அரியணை அமர்வதில் உனக்கு வருத்தமா அங்கநாட்டானே?” என்றார்.

தளர்ந்தவனாக “இல்லை, நான் இதில் முற்றிலும் அயலவன்” என்றான். “பிறகென்ன? துரியோதனா, உனக்கு அதில் எதிர்ப்புள்ளதா?” துரியோதனன் “இல்லை தந்தையே” என்றான். “அப்படியென்றால் யாருக்கு அதில் எதிர்ப்பு? திரைக்கு அப்பாலிருக்கும் உன் அன்னைக்கும் தங்கைக்குமா?” என்று திருதராஷ்டிரர் உரத்தகுரலில் கேட்டார். அவைக்கு அப்பாலிருந்த திரைக்குள் இருந்து துச்சளை உறுதியான குரலில் “பாஞ்சாலத்து இளவரசி அஸ்தினபுரியின் அரியணை அமர்வது நமக்கு பெருமையேயாகும் தந்தையே. அவர் பாரதவர்ஷத்தை ஆளப்பிறந்தவர் என்கிறார்கள் சூதர்கள். அவர் காலடிபட்டால் இந்த நகரம் ஒளிகொள்ளும்” என்றாள். அவை அதை ஏற்று ஒலியெழுப்பியது.

“நானே கோட்டைமுகப்புக்குச் சென்று அவரை வரவேற்று அழைத்துவருவேன். அரியணை அமரச்செய்து அருகே நிற்பேன்” என்று துச்சளை சொன்னாள். “ஆம், அவள் நம் முதற்குலமகள். அவள் இந்நகர் புகட்டும். தேவயானியின் மணிமுடியை சூடட்டும். அவள் கையால் என் மைந்தன் பெறும் மணிமுடி என்றும் நிலைக்கட்டும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். விதுரர் “தங்கள் சொற்களாலேயே சொல்லிவிட்டீர்கள். அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். திரும்பி அவையினரிடம் “எவரேனும் மாற்று சொல்லவிழைகிறீர்களா? முடிவெடுப்போமா?” என்று கேட்டார்.

“முடிவைத்தான் மும்முறை எடுத்துவிட்டார்களே… நாம் உணவுண்ணவேண்டிய நேரம் இது” என்றார் பலராமர் கையால் இருக்கையின் பிடியை பொறுமையில்லாது தட்டியபடி. விதுரர் புன்னகைத்து ”முடித்துவிடுவோம் யாதவரே” என்றார். “ஆக , இங்கே அரசரின் முடிவாக எட்டப்பட்டுள்ளது இது. அரசர் அஸ்தினபுரியின் முடியுரிமையை பாண்டுவின் மைந்தர் யுதிஷ்டிரருக்கு அளிப்பார். அதை அவரது மைந்தர்களே சென்று யுதிஷ்டிரருக்குச் சொல்லி அவரை அழைத்துவந்து அரியணையில் அமரச்செய்வார்கள்.”

”யுதிஷ்டிரரும் திரௌபதியும் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்வார்கள். குருவின் முடியை யுதிஷ்டிரரும் தேவயானியின் முடியை திரௌபதியும் சூடுவார்கள். அன்னையிடமும் அரசரிடமும் வாழ்த்து பெறுவார்கள். அதன்பின்னர் அவர்கள் தங்கள் இளையோனாகிய துரியோதனனுக்கு அஸ்தினபுரியின் முடியையும் கோலையும் உவந்தளித்து வாழ்த்துவார்கள்.”

விதுரர் தொடர்ந்தார் “தன் தமையனை அடிபணிந்து ஆட்சியை அடையும் துரியோதனர் தட்சிணகுருநிலத்தை அவர் காலடியில் வைத்து வணங்கி ஏற்கும்படி கோருவார். அவர்கள் விரும்பிய நிலமும் ஊர்களும் அளிக்கப்படும். அவர்கள் நகர் அமைப்பது வரை அஸ்தினபுரியிலேயே தங்குவார்கள். அவர்கள் நகரமைத்து தனிமுடி கொண்டபின்னரும் மாமன்னர் திருதராஷ்டிரரின் மைந்தர்களாக அவரது ஆணைக்குக்கீழேதான் அமைவார்கள். இருநாடுகளும் என்றும் எந்நிலையிலும் போர்புரிவதில்லை என்றும் ஒருநாடு தாக்கப்பட்டால் இன்னொருநாடு முழுப்படையுடன் வந்து உதவும் என்றும் நீத்தார் வைதிகர் மூத்தார் முன்னிலையில் முடிவெடுக்கப்படும்.”

அவை கைதூக்கி “ஆம், ஆம், ஆம்” என்றது. பலராமர் “ஒருவழியாக முடித்துவிட்டோம். இந்த முடிவை எடுக்க இத்தனை சொற்களா? ஒரு மற்போர் முடிந்த களைப்பு வந்துவிட்டது” என்று சிரித்து கிருஷ்ணனிடம் “நான் என்றால் வந்ததுமே இந்த முடிவை அறிவித்து ஊண்களத்துக்கு சென்றுவிட்டிருப்பேன்” என்றார். கிருஷ்ணன் புன்னகைத்தான். திருதராஷ்டிரர் “விதுரா, அந்த ஆணையை எழுதிவிடு. என் அரசகுறி அதற்குண்டு” என்றார். “அவ்வண்ணமே” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரர் கைகூப்பி “அவையமர்ந்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். அஸ்தினபுரியின் சான்றோரவை சிறந்தமுடிவையே வந்து அடையும் என மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வவைக்கூடத்தில் அரசனென்ற முறையில் நான் ஆணையிடும் சொற்களை சொல்லியிருந்தால் அவை என் சொற்களல்ல என் முன்னோரின் சொற்களென்று கொள்ளும்படியும் அவை எவர் உள்ளத்திலேனும் துயர் அளித்திருக்குமென்றால் என்னை பொறுத்தருளவேண்டும் என்றும் கோருகிறேன். எளியேன் இந்த அரியணை அமர்ந்து சொல்லும் ஒரு சொல்லும் என் நலன் குறித்ததாக அமையலாகாதென்றே எண்ணியிருந்தேன். இம்முறையும் அதுவே நிகழ்ந்தது என நம்புகிறேன்” என்றார்.

“குருகுலவேழம் வாழ்க!” என்று ஒரு குலமூத்தார் கூவ பிறர் “வாழ்க” என்று வாழ்த்தினர். “எப்போதும் என் மைந்தர் பூசலிடலாகாது என்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டது. என் வாழ்வின் எஞ்சும் ஒரே விழைவும் என் மைந்தருக்கு நானிடும் இறுதி ஆணையும் இதுவே. நான் நிறைவுடன் மண் மறைய தென்புலத்தாரும் தெய்வங்களும் அருளவேண்டும்” என்றபோது திருதராஷ்டிரர் தொண்டை இடறி குரல்வளை அசைய அழத்தொடங்கினார். சஞ்சயன் அவர் தோளை தொட்டான். அவர் கன்னங்களில் வழியும் நீருடன் மீண்டும் அவையை வணங்கி அவன் கைகளைப்பற்றியபடி நடந்து சென்றார்.

தளர்ந்த நடையுடன் அவர் செல்வதை அவை நோக்கி நின்றது. குடித்தலைவர் பலர் கண்ணீர் விட்டனர். பலராமர் கண்ணீருடன் திரும்பி “ஒரு தந்தை அதை மட்டுமே விழையமுடியும் இளையோனே. அவருக்காக நான் வஞ்சினம் உரைக்கவேண்டும் என என் அகம் பொங்கியது. இனி குருகுலத்தார் பூசலிட்டுக்கொண்டால் அத்தனைபேர் மண்டையையும் உடைப்பேன்” என்றார். கிருஷ்ணன் புன்னகை புரிந்தான். விதுரர் “அவைகூடிய அனைவரையும் வணங்குகிறேன்” என்றதும் சௌனகர் கைகாட்ட நிமித்திகன் முன்னால் வந்து வலம்புரிச்சங்கை ஊதினான். வெளியே பெருமுரசம் முழங்கி அவை நிறைவடைந்ததை அறிவித்தது.

அவைக்குத் தலைவணங்கி தனித்து தலைகுனிந்து சகுனி விடைகொண்டு சென்றார். துரியோதனன் கர்ணனின் தோளைத்தொட்டு மெல்ல ஏதோ சொன்னபடி வெளியேறினான். துச்சாதனனும் பிறரும் அவனை தொடர்ந்தனர். விதுரர் சௌனகரிடம் ஏதோ பேசத்தொடங்க குலத்தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு விலகிச்சென்ற முழக்கம் கூடத்தை நிறைத்தது.

கிருஷ்ணன் எழுந்தான். சாத்யகி அதுவரை அங்கே பேசப்பட்டவற்றை தொகுத்துக்கொள்ள முயன்றான். சகுனியுடன் கிருஷ்ணன் ஆடிய நாற்களப்பகடை போலவே எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாததாகத் தோன்றியது. நீர்ப்பெருக்கு போல எந்தவிதமான ஒழுங்கும் அற்றதாகவும் நீருக்குள் உறையும் பெருவிழைவால் இயக்கப்படுவதாகவும். என்னென்ன பேச்சுகள்! என்னென்ன உணர்வுகள்! எங்கெங்கோ சென்று எதையெதையோ முட்டி முடிவுமட்டும் முற்றிலும் கிருஷ்ணனுக்குச் சார்பாக வந்து நின்றது.

அவன் ஓரக்கண்ணால் கிருஷ்ணனை நோக்கினான். அதை அவன் இயற்றவில்லை. அவன் வெறுமனே அமர்ந்திருந்தான். அத்தனைபேரும் கூடி அதைச் செய்து அவன் காலடியில் படைத்தனர். அங்கு பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லும் அவன் விழைந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் அவன் திட்டமிட்டு வந்தவை. ஆனால்… பலராமர் உரக்க “அனைத்தும் நிறைவாக முடிந்தது இளையோனே” என்றார் . “ஆம்” என்றான் கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைஇந்தியாவின் மகள் -விவாதம்
அடுத்த கட்டுரைஅண்டத்திற்குள் அமிழ்ந்துவிடும் பிண்டத்தின் அலைக்கழிப்பு(விஷ்ணுபுரம் கடிதம் ஏழு)