‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 54

பகுதி 11 : முதற்தூது – 6

சூதர் பரிசு பெற்று எழுந்ததும் சற்றுநேரம் அவையில் அமைதி நிலவியது. சாத்யகி அந்த அமைதியை உணர்ந்ததும் ஒவ்வொரு முகத்தையாகப் பார்த்தான். சூதர்பாடலில் ஏதோ உட்பொருள் இருந்தது என்றும் அதை அவையமர்ந்திருந்த எவருமே விரும்பவில்லை என்றும் அக்காரணத்தாலேயே சூதருக்கு மேலும் அணிச்சொற்களும் மேலும் பரிசில்களும் வழங்கப்பட்டன என்றும் அவன் உய்த்துக்கொண்டான்.

அனைத்து முகங்களும் செயற்கையான அமைதியுடன் இருந்தாலும் துரியோதனன் முகம் மட்டும் கொந்தளிப்பை காட்டியது. அவன் கர்ணனை பலமுறை விழிதொட முயல்வதையும் கர்ணன் அதை முற்றிலும் தவிர்த்து இரும்புச்சிலை என அமர்ந்திருப்பதையும் கண்டான். சிந்தையிலாழ்ந்தவராக திருதராஷ்டிரர் அமர்ந்திருக்க அருகே சஞ்சயன் நின்றிருந்தான். அவருக்குப்பின்னால் கணிகர் அமர்ந்திருக்க முன்னால் வலப்பக்கம் விதுரரும் இடப்பக்கம் சௌனகரும் அமர்ந்திருந்தனர். பின்பக்கம் பட்டுத்திரைக்கு அப்பால் பெண்கள் அமர்ந்திருப்பது நிழலுருவாகத் தெரிந்தது.

திருதராஷ்டிரர் அந்த இறுக்கத்தை வென்று ”மீண்டும் ஒரு இன்னீர் பரிமாறப்படலாமே” என்றார். பலராமர் உரக்க “ஆம், நன்று, நானும் அதையே எண்ணினேன்” என்றார். “உண்மையில் நான் ராவண மகாப்பிரபுவைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இருபது பெரும்புயங்கள். அவருடன் ஒரு மற்போரிடுவது எத்தனை பேருவகையை அளிப்பதாக இருக்கும்!” அது அங்கிருந்த இறுக்கத்தை தளர்த்தியது. அதைப்பற்றிக்கொண்ட திருதராஷ்டிரர் “அதையே நானும் எண்ணினேன். மற்போரில் கைகள் போதவில்லை என்று உணராத மல்லன் உண்டா என்ன?” என்றார். “நாம் நாளை இருக்கும் இரண்டு கைகளால் பொருதுவோம் அரசே” என்றார் பலராமர். “நன்று நன்று” என்றார் திருதராஷ்டிரர்.

இன்னீர் வெள்ளிக்கோப்பைகளில் அனைவருக்கும் வந்தது. அதை அருந்தியபடி ஒவ்வொருவரும் அருகமர்ந்தவர்களிடம் பேசிக்கொண்டனர். மெல்ல அவை இயல்படைந்தது. சௌனகர் எழுந்து “மதுராபுரியின் அரசரும் இளையவரும் இங்கு வந்தது நிறைவளிக்கிறது. மதுராபுரி அஸ்தினபுரியின் எல்லையை ஒட்டியதென்பதனாலேயே நமக்கு அண்மையானது. நமது படைகளால் அது மகதத்தின் தாக்குதலில் இருந்து தன்னை காத்துள்ளது. என்றும் இந்த நட்பு இருநாடுகளுக்கும் நடுவே இருக்குமென இங்குள்ளோர் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.

அதன் உட்குறிப்பை சாத்யகி உடனே உணர்ந்துகொண்டான். கிருஷ்ணன் “ஆம், அமைச்சரே. அந்தவெற்றியால்தான் துவாரகை அமைந்தது. பாரதவர்ஷத்தின் நிகரற்ற கருவூலமும் கலநிரையும் படைப்பெருக்கும் அங்கு உருவாகியது. இன்று கூர்ஜரமும் மாளவமும் மகதமும் கூட துவாரகையைக் கண்டு அஞ்சுகின்றன. அந்தத் தொடக்கத்தை அளித்தது இளையபாண்டவராகிய பார்த்தனின் வில். பார்த்தனுக்கும் அவன் மணந்த பாஞ்சாலன் கன்னிக்கும் துவாரகை கொண்டிருக்கும் கடன் அளப்பரியது” என்றான்.

சௌனகரின் முகம் மாறியதை காணாதவன் போல “இங்கு நான் வந்ததும் அதன்பொருட்டே. அவர்களின் சொல்கொண்டு வந்து அரசரை சந்திப்பது என் கடன் என்று கொண்டேன்” என்றான் கிருஷ்ணன். திருதராஷ்டிரர் “சொல்லுங்கள் யாதவரே” என்றார். “நான் கிளம்பும்போது என்னிடம் யுதிஷ்டிரர் சொன்னதையே முறைமையான சொல்லென கொள்வேன்” என்றான் கிருஷ்ணன். “பாஞ்சாலமகளை மணந்து அங்கே தங்கியிருக்கும் யுதிஷ்டிரர் அஸ்தினபுரியின் மணிமுடியை விழையவில்லை. அனைத்து முறைமைகளின்படியும் அவருக்குரியதென்றாலும் அதை தன் இளையோனும் தார்த்தராஷ்டிர முதல்வனுமாகிய துரியோதனனுக்கே வழங்க எண்ணுகிறார்… அதை முறைப்படி தெரிவிக்கவே நான் வந்தேன்.”

“அதை ஏன் அந்த மூடன் தூதென அனுப்பினான்?” என்றார் திருதராஷ்டிரர். “இது அவன் நாடென்றால் வந்து என்னிடம் அவை நின்று அல்லவா சொல்லவேண்டும்?” கிருஷ்ணன் “இதையே நானும் சொன்னேன். ஆனால் அவர் இங்கு வர விரும்பவில்லை. தங்கள் முன் நின்று சொல்லும் விழி தனக்கில்லை என நினைக்கிறார். ஏனென்றால் தாங்கள் அவரிடம் அரசு ஏற்கவே ஆணையிடுவீர்கள் என்றார். அதை மறுக்க அவரால் முடியாது. ஆனால் தங்கள் உள்ளம் அதை சொல்லவில்லை என அவர் உள்ளம் அறியும். காரணம் எந்தத் தந்தையும் ஆழத்தில் வெறும் தந்தையே. தன் மைந்தனின் நலனை அன்றி பிறிதை அவர் விழையமாட்டார்” என்றான்.

ஒருகணம் அவை உறைந்தது போலிருப்பதை சாத்யகி கண்டான். தன் இருகைகளையும் ஒங்கி அறைந்தபடி திருதராஷ்டிரர் எழுந்தார். “அவன் சொன்னானா? அவனா சொன்னான்? பாண்டுவின் மகன் என்னைப்பற்றி அப்படியா சொன்னான்?” என்று உரத்த குரலில் கேட்டபடி அவர் முன்னால் வந்தார். “சௌனகரே, படைகளை கிளம்பச்சொல்லும். அவனை பிடித்துவந்து என் முன்னால் போடுங்கள். என் கைகளால் அவனை நெரிக்கிறேன்… மூடன் மூடன்.” படீரென்று தலையில் அறைந்துகொண்டு அவர் மெல்ல அமர்ந்தார். “என்ன சொல்லிவிட்டான்!” என்றார். அவரது முகம் நெளிவதை விழிகள் புண்ணெனச் சிவந்து நீரூறி வழிவதை சாத்யகி திகைப்புடன் நோக்கினான்.

“விதுரா, மூடா… அடேய் மூடா!’ என அவர் வீறிட்டார். “எங்கிருக்கிறாய்? அருகே வா!” விதுரர் எழுந்து அருகே சென்று அவர் கைகளைப்பற்றிக்கொண்டார். “என்ன சொற்கள் அவை… மூடா, உண்மையிலேயே அவன் அவற்றை சொன்னானா? மூடா… அப்படியென்றால் என் அன்பை அவன் அறியவே இல்லையா? அவனை என் நெஞ்சோடு அணைத்தபோதுகூட என் அகம் அவனை அடையவில்லையா?” உடைந்த குரலில் மெல்லிய கேவலுடன் அவர் முகத்தை மூடிக்கொண்டார். “நான் எப்படி சொல்வேன்…? என் இளையோனும் இன்று என்னை வெறுக்கிறானா என்ன?”

விதுரர் “அரசே, முதல்செவிக்கு அப்படித் தோன்றுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல” என்றார். “சற்று எண்ணிப்பாருங்கள். அவன் தங்கள் இளையோனின் குருதி. ஆகவேதான் அதை சொல்கிறான். அறியாமல்கூட தங்கள் உள்ளம் வருந்தலாகாது என எண்ணுகிறான். இன்றல்ல நாளை, என்றோ ஒருநாள் தாங்கள் சற்று உளம் வருந்த சிறு வாய்ப்பு இருக்கிறது என்றால் அதற்காக இன்றே தன் மணிமுடியைத் துறக்க சித்தமாக இருக்கிறான். நாளை ஃபுவர்லோகத்தில் உங்களை வந்தடையும் முதல் கங்கைநீர் அவனளிப்பதே. ஐயமே தேவையில்லை.”

திருதராஷ்டிரர் கண்ணீர்வழியும் விழிகளுடன் நிமிர்ந்து நோக்கினார். “ஆம், என்றும் அவனை அப்படித்தான் எண்ணியிருக்கிறேன். என் குலத்தின் அறச்செல்வனின் கையால் நீர் பெறுவதன்றி நான் அடையும் முழுமை என பிறிதில்லை.” கைகளை வீசி தலையை மெல்ல உருட்டியபடி அவர் சொன்னார் “அந்த மைந்தனுக்கன்றி எவருக்கு இவ்வரியணை மேல் உரிமை உள்ளது? யாதவா, சென்று சொல். அவனுக்குரியது இம்மணிமுடி. இந்நாடு அவனுக்காக காத்திருக்கிறது. எத்தனை ஆண்டுகளானாலும். நான் இறந்தால் என் மைந்தர் அவனுக்காக காத்திருப்பார்கள்.”

கையை ஓங்கித்தட்டியபடி பலராமர் எழுந்து முழங்கும் குரலில் “என்ன நீதி இது? திருதராஷ்டிரரே, ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். அரசு என்பது அரசனின் உடைமை அல்ல. அரசை வேள்விக்களம் என்கின்றன நூல்கள். நால்வகை மக்களும் ஐவகை நிலங்களைக் கறந்து அவியூட்டுபவர்கள். கோலேந்தி அருகேநிற்கும் வேள்விக்காவலன்தான் அரசன். வேள்வி என்பது அதற்குரிய முறைமைகள் கொண்டது. வேள்விமேல் அரசனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை” என்றார். மிகச்சிறப்பாக பேசிவிட்டோம் என்ற பெருமிதம் அவருக்கே ஏற்பட அவையை நோக்கி பலராமர் புன்னகை செய்தார். ”ஆகவே இந்நாட்டை எவருக்களிப்பதென்று முடிவெடுக்கவேண்டியவர் நீங்கள் அல்ல. எதுமுறைமையோ அது செய்யப்பட்டாகவேண்டும்.”

சாத்யகி பதைப்புடன் கிருஷ்ணனை நோக்க அவன் புன்னகைப்பதுபோல தோன்றியது. இல்லை அவன் முகத்தின் தசையமைப்பே அப்படித்தானா என்றும் ஐயமாக இருந்தது. பலராமர் அவையை நோக்கிச் சுழன்று கைகளை வீசி “என் மாணவன் இங்கே இருக்கிறான். இந்த பாரதவர்ஷம் கண்டவர்களில் அவனே நிகரற்ற கதைவீரன். ஆண்மையே அணியெனக்கொண்டவன். அவன் உள்ளம் என்ன விழைகிறதென நான் அறிவேன். பாரதவர்ஷத்தை ஆளப்போகும் சக்ரவர்த்தி என அவனை பெற்றெடுத்தீர்கள். சொல்லிச்சொல்லி அவனை வளர்த்தீர்கள். இன்று சில மழுங்கிய சொல்லணைவுகளால் அவனை வெறும் அரியணைக்காவலனாக ஆக்குகிறீர்கள் என்றால் அது நெறியோ முறையோ அல்ல” என்றார்.

“அவரது அரியணையை பறித்தவர் மானுடரல்ல யாதவரே” என்றார் விதுரர் எரிச்சலுடன். “அவரை இளையோனாக பிறக்கவைத்த தெய்வங்கள்.” “தெய்வங்களைப்பற்றி நாம் பிறகு பேசுவோம். எந்த தெய்வம் வந்தாலும் நான் என் கதாயுதத்துடன் முகமெதிர் நின்று போரிடவே விழைவேன்” என்றார் பலராமர். “சரி, மூத்தவன் அரியணையை மறுத்துவிட்டானே. அப்படியென்றால் இளையோனுக்கு மணிமுடி உரியதென்பதுதானே நூல்நெறி?”

விதுரர் “இங்கு இறுதிச்சொல் என்பது அரசருடையதேயாகும்” என்று கசப்புடன் சொல்லி விழிதிருப்பினார். “ அதை நான் ஒப்பமாட்டேன்” என்றார் பலராமர். “ஒப்பாமலிருக்க நீங்கள் யார்?” என்று தன்னை மீறிய சினத்துடன் விதுரர் கேட்டார். “நான் அவன் ஆசிரியன். நூல்முறைப்படி ஆசிரியன் தந்தைக்குரிய அனைத்து உரிமைகளும் கொண்டவன். நான் சொல்கிறேன், என் மாணவனுக்குரிய நிலம் அளிக்கப்பட்டாகவேண்டும். அதை அவனிடமிருந்து பறிக்கும் எந்தச்சதியையும் நான் எதிர்கொள்கிறேன். அவன் விழைந்தாலும் இல்லாவிட்டாலும் என் படைகளுடன் வந்து இந்நகரைச் சூழவும் சித்தமாக இருக்கிறேன்.”

பலராமர் அத்துமீறிவிட்டார் என்று எண்ணி சாத்யகி அவனை அறியாமலேயே எழப்போனான். ஆனால் கிருஷ்ணன் உடலிலும் முகத்திலும் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அங்கு நிகழாத ஏதோ ஒன்றை நோக்குபவை போன்ற விழிகள். கடந்துபோன இனியதொன்றை எண்ணி மலர்ந்தது போன்ற முகம். சாத்யகி படபடப்புடன் அவையை நோக்கினான். அத்தனை விழிகளும் மாறுதலடைந்திருந்தன. விதுரர் “நீங்கள் அஸ்தினபுரியின் பேரரசரின் அவையில் நின்று பேசுகிறீர்கள் என்பதை உணருங்கள் யாதவரே” என்றார். “ஆம் அதை நன்குணர்ந்தே பேசுகிறேன். நாளும் என் மாணவன் நலிந்து வருவதை பார்க்கிறேன். அதை நோக்கியும் நான் அரசமுறைமை பேசி வாளாவிருந்தால் நான் கோழையோ மூடனோ என்றே என் முன்னோர் எண்ணுவர்” என்றார் பலராமர்.

“யாதவரே, நீர் என் மைந்தனின் ஆசிரியர். ஆகவே இந்த அவையில் நீர் சொல்லக்கூடாததாக ஏதுமில்லை. என்றும் என் முடி உங்களுக்குப் பணிந்தே இருக்கும்” என்றார் திருதராஷ்டிரர். அவரது குரல் அடைத்தது போலிருந்தது. “ஆனால் அது என் மைந்தனின் விழைவு அல்ல. அவன் என் சொற்களை மீறி எதையும் எண்ணப்போவதில்லை.” பலராமர் கைகளைத்தட்டியபடி திருதராஷ்டிரரை நோக்கி சென்று வெடிக்குரலில் “அதை அவன் சொல்லட்டும். அவையெழுந்து அவன் சொல்லட்டும், அவனுக்கு மணிமுடி தேவையில்லை என்று” என்றவர் திரும்பி துரியோதனனை நோக்கி “மூடா, சொல். உன் ஆசிரியன் நான். என்னிடம் நீ மறைப்பதற்கேதுமில்லை. இப்போதே சொல். உனக்கு இந்த மணிமுடி தேவையில்லையா? சொன்னால் நான் அமர்ந்துவிடுகிறேன்” என்றார்.

எழுந்து நின்று கைகூப்பி விழிதாழ்த்தி தாழ்ந்த குரலில் “ஆசிரியர் அறியா அகமில்லை” என்று துரியோதனன் சொன்னான். “என் அகம் முழுக்க நிறைந்திருப்பது மண்ணாசையே. அஸ்தினபுரியின் மண்ணையும் முடியையும் விழையாமல் நினைவறிந்த நாள் முதல் இன்றுவரை ஒருகணம்கூட சென்றதில்லை.” பலராமர் ஏதோ சொல்ல கையை தூக்குவதற்குள் “ஆனால் என் தந்தை மண்ணில் என் இறைவன். நீங்கள் அவருக்கிணையானவர். உங்கள் ஆணையின்பொருட்டு நான் எதையும் துறப்பேன். எந்தை விழைந்தால் எஞ்சிய வாழ்நாளெல்லாம் யுதிஷ்டிரனுக்கு வாளேந்தி அரியணைக்காவல் நிற்கவும் தயங்கமாட்டேன்” என்றான்.

“உன் தந்தையின் ஆணையை மீறவேண்டும், இந்த நாட்டின் மணிமுடியை சூடவேண்டும் என நான் ஆணையிட்டால்?” என்றார் பலராமர். “வாளை எடுத்து என் கழுத்தில் பாய்ச்சுவதன்றி வேறு வழியில்லை” என்றான் துரியோதனன். பலராமர் திகைத்து திரும்பி கிருஷ்ணனை நோக்க அவன் ”வீண்சொற்களால் ஏன் நாம் விளையாடவேண்டும் மூத்தவரே? தாங்கள் ஆணையிடப்போவதுமில்லை, அவர் வாள்பாய்ச்சிக்கொள்ளப் போவதுமில்லை. நாம் தேவையானவற்றைப்பேசுவதே நன்று” என்றான். சினத்துடன் திரும்பிய பலராமர் ”வீண்சொல்லா? இதோ நான் ஆணையிடுகிறேன். துரியோதனா, நீ அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டிக்கொண்டாகவேண்டும். எவர் தடுத்தாலும் சரி. என் படைகளும் நானும் உன்னுடனிருப்போம்” என்று கூவினார்.

அவர் சொல்லி முடிப்பதற்குள் துரியோதனன் தன் இடையிலிருந்த வாளை உலோகம் உரசும் உறுமலோசையுடன் உருவி தன் கழுத்தில் பாய்ச்சப்போக துச்சாதனன் அதை பற்றிக்கொண்டான். அவ்வொலி சவுக்கடி போல திருதராஷ்டிரர் மேல் விழும் துடிப்பை காணமுடிந்தது. அரியணைவிட்டு இறங்கி தடுமாறும் காலடிகளுடன் துரியோதனனை நோக்கி சற்று தூரம் ஓடிய அவரை தொடர்ந்தோடிய சஞ்சயன் ”அரசே, பீடங்கள்…” என்று கூவினான். அவர் தள்ளாடி நிற்க அவரது வலக்கரத்தை அவன் பற்றிக்கொண்டான். “துரியோதனா…” என உடைந்த குரலில் அழைத்த திருதராஷ்டிரர் தன் கைகளை நீட்டினார்.

நடுங்கும் கைகளுடன் அதிரும் உதடுகளுடன் ”வேண்டாம், நான் என் ஆணையை மீட்டுக்கொள்கிறேன்” என்று சொன்னபின் திருதராஷ்டிரர் அங்கேயே அமரப்போகிறவர் போல கால்தளர்ந்தார். சௌனகர் முன்னகர்ந்து அவரைப்பற்றிக்கொள்ள இரு தோள்களால் தாங்கப்பட்டு தன் அரியணை நோக்கிச்சென்று விழுவதுபோல அமர்ந்துகொண்டார். அவை கடுங்குளிரில் உடல் இறுக்கி அமர்ந்திருப்பதுபோலிருந்தது. அவையின் சாளரங்களின் திரைச்சீலைகள் அசையும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. எவரோ இருமினர். திருதராஷ்டிரர் மூக்கை உறிஞ்சிய ஒலி உரக்க எழுந்தது.

அங்கு நிகழ்ந்தவை எதையும் எதிர்பாராத பலராமர் மீண்டும் திரும்பி கிருஷ்ணனை பார்த்துவிட்டு சிலகணங்கள் நீர்த்துளி போல தத்தளித்தார். மேற்கொண்டு அவரது சித்தம் செல்லவில்லை. திரும்ப வந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டு வெண்பளிங்குத்தூண் போன்ற பெரிய கைகளை பீடத்தின் கைப்பிடிகள் மேல் வைத்தார். துரியோதனன் தளர்ந்த தோள்களுடன் நின்றபின் தன் பீடத்தில் விழுந்து தலையை கைகளால் ஏந்திக்கொண்டான். குழல்கற்றைகள் சரிந்து விழுந்து அவன் முகம் மறைந்திருந்தது. அவையிலிருந்த அனைவரும் அவனையும் திருதராஷ்டிரரையும் மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தனர்.

சாத்யகி கர்ணனை நோக்கினான். அவன் விழிகளில் தெரிந்த கூரிய இடுங்கலை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. திரௌபதியின் மணநிகழ்வில் அவன் கண்ட கர்ணனாக அவன் தெரியவில்லை. அன்று அவன் உடலில் இருந்த கரியபொலிவு முழுமையாகவே மறைந்திருந்தது. முகம் ஒடுங்கி தாடியும் அடர்ந்திருந்தமையால் அவனை முதலில் அடையாளம் காணவே சாத்யகியால் முடியவில்லை. குழிந்த கண்களின் ஒளிதான் அவன் கர்ணன் என்று காட்டியது. அவன் ஒரு சொல்லும் பேசவில்லை. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் விழிகள் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தன.

மீண்டும் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆழ்ந்து அவையில் அமைதி நிலவியது. அதன் எடை தாளாமல் தன் உடலை சாத்யகி மெல்ல அசைத்தான். பலராமர் ஏதோ சொல்லி அதை உடைக்கப்போகிறார் என எண்ணினான். ஆனால் அவர் சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தார். அவன் எதிர்பாராத கணத்தில் கிருஷ்ணன் எழுந்து “அப்படியென்றால் நாம் இந்த அவைவிவாதத்தை முடித்துக்கொள்வோம். நான் யுதிஷ்டிரரின் தரப்பாக சொல்லவந்ததற்கு இணையாகவே அரசரும் முடிவெடுத்திருக்கிறீர்கள்” என்றான். “யுதிஷ்டிரர் முடிதுறக்கிறார். துரியோதனர் முடிசூட விழைகிறார். அரசருக்கு அதில் எதிர்ப்பில்லை என்பது நிறுவப்பட்டுவிட்டது. மேற்கொண்டு பேசவேண்டியதில்லை. இந்த அவையிலேயே துரியோதனர் முடிசூடட்டும்.”

கிருஷ்ணனின் விழி ஒருகணம் தன்னை வந்துதொட்டதும் சாத்யகி புரிந்துகொண்டு கணிகரை நோக்கினான். அவன் நோக்குவது அவருக்குத்தெரியவேண்டுமென்பதற்காக தலையை சற்றுத் திருப்பி அவ்வசைவை அவர் பார்த்தபின் அவர் விழிகளை சந்தித்தான். அவர் திகைத்து விழிவிலக்கி நிலத்தை பார்த்தார். அவரது உடல் பதைக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை அவர் நிமிர்ந்து நோக்கியபோது சாத்யகி புன்னகைசெய்தான். அவர் நாகம் தீண்டியதுபோல விதிர்த்து திரும்பிக்கொண்டார்.

திருதராஷ்டிரர் உடல்தவிக்க யானைச்செவி போன்ற தன் கைகளை விரித்து “நான் என்ன செய்வேன்…? நான் செய்வதென்ன என்று எனக்குத்தெரியவில்லை… விதுரா… மூடா, என்ன செய்கிறாய்? அங்கே என்னதான் செய்கிறாய்…? அருகே வாடா… உன் மண்டையை பிளக்கிறேன்” என்றார். விதுரர் “இங்கிருக்கிறேன் அரசே, சொல்லுங்கள். தாங்கள் உணர்வதென்ன?” என்றார். “நான் என்ன செய்வேன்? என் இளையோன் பாண்டுவுக்கு நான் வாக்களித்த மண்ணல்லவா இது? அவனோ தன் மைந்தன் முடிசூடுவான் என்ற எண்ணத்துடன் இவ்வுலகு நீங்கியவன். அவன் மைந்தன் மறுத்தமையால் முடியை என் மைந்தனுக்கு அளித்தேன் என்று நான் சொன்னால் அவன் ஏற்றுக்கொள்வானா?”

“ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்று விதுரர் சொன்னார். “அரசே, முடிதுறப்பவன் மூன்று அடிப்படைகளிலேயே அதை செய்யமுடியும். துறவுபூண்டு காடேகும்பொருட்டு முடிதுறப்பது உத்தமம். உடல்நலமில்லாமல் முடிதுறப்பது அநிவார்யம். அச்சத்தாலோ ஐயத்தாலோ முடிதுறப்பது அதமம். இங்கே பாண்டுவின் மைந்தன் துறவுபூணவில்லை. ஆகவே அவர் முடிதுறப்பதை பிற இரண்டிலேயே சேர்ப்பார்கள் சூதர். அவர் துறவுகொள்ளப்போகிறாரா என்று தூதர் சொல்லட்டும்.”

“இல்லை. அவர் பாஞ்சாலன் மகளை மணந்திருக்கிறார், நன்மைந்தரைப் பெறவும்போகிறார் என நாடறியும்” என்றான் கிருஷ்ணன். “இனிமேல் அவர் எந்த நாட்டையும் வென்று அரசமைக்கமாட்டாரா?’ என்றார் விதுரர். “அவர் அரசர். அரசியின் கணவர். நாடாள்வார் என்பதில் ஐயமே இல்லை. துவாரகையின் நிலத்தை அவருக்கு அளிக்கவும் எங்களுக்கு எண்ணமுள்ளது” என்று கிருஷ்ணன் சொன்னான். விதுரர் “அரசே, அவ்வண்ணமென்றால் அவர் நாடுதுறப்பது ஏற்கத்தக்கதல்ல. அது அஸ்தினபுரிக்கும் தங்களுக்கும் தீராப்பழியையே அளிக்கும்” என்றார்.

தொடர்ந்து “அரசே, இளையோனின் மைந்தனிடமிருந்து அவனுக்குரிய நாட்டை தாங்கள் கீழ்முறைகளின்படி கொண்டதாகவே இச்செயல் பொருள்படும் அவர் பிறிதொரு நாட்டை ஆளும்போது அது உறுதிப்படும். அவரது வழித்தோன்றல்கள் அதை நம்புவார்கள். நாளை நம் கொடிவழிமேல் தீராப்பகையும் கொள்வார்கள். தங்களுக்குரிய அரியணையென அவர்கள் அஸ்தினபுரியை எண்ணுவார்கள். படைகொண்டுவருவார்கள். அஸ்தினபுரியின் மண்ணில் உடன்பிறந்தார் போரிட்டு குருதி சிந்துவர்… ஐயமே தேவையில்லை” என்றார் விதுரர். “யுதிஷ்டிரனே முடிதுறந்தான் என நாம் சூதர்களை பாடச்செய்யலாம். ஆனால் நாம் சொல்லும் எதுவும் நிலைக்காது.”

“ஆம், உண்மை” என்று திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “அஸ்தினபுரியின் முடி யுதிஷ்டிரனுக்குரியது என நீங்கள் அறிவித்ததை நாடே அறியும். இன்று அதை நீங்கள் எப்படி மாற்றினாலும் அது உங்கள் மைந்தருக்காக செய்யப்பட்டது என்றே பொருள்படும்…“ என்று சௌனகர் சொன்னார். “மேலும் இந்த அவையில் யுதிஷ்டிரரின் சொற்களாக யாதவர் சொன்னதை அது நிறுவுவதாகவும் ஆகும். அரசே, அவையில் சொல்லப்படும் எச்சொல்லும் நாட்டுமக்களிடம் சொன்னதாகவே ஆகும். வழியில் எங்கும் அது தங்குவதில்லை.”

”நான் என்ன செய்வேன்…? எனக்கு ஒன்றுமே தெரியவில்லை சௌனகரே” என்று மீண்டும் திருதராஷ்டிரர் கைகளை விரித்தார். வான் நோக்கி இறைஞ்சுவதுபோல. சகுனி பெருமூச்சுடன் உடலை மெல்ல அசைத்து அமர்ந்து “அரசே, இது அஸ்தினபுரியின் மணிமுடி குறித்த பேச்சு. காந்தாரனாகிய நான் இதில் பேசலாகாது. ஆனால் என் மருகனின் குரலாக சில சொல்லலாம் என நினைக்கிறேன்” என்றார். “விதுரர் அஞ்சும் அனைத்தும் ஒரே செயலால் மறைந்துவிடும். யுதிஷ்டிரன் இங்கு வரட்டும். அவனுடைய கைகளாலேயே துரியோதனன் தலையில் மணிமுடி எடுத்து வைக்கட்டும். துரியோதனன் தன் தந்தையையும் ஆசிரியரையும் பணிந்தபின் தமையனைப் பணிந்து வாழ்த்துகொள்ளட்டும். அந்நிகழ்வைப்போற்றி ஒரு காவியம் எழுதச்செய்வோம். அதை சூதர் பாடித்திரியட்டும்” என்றார்.

சகுனி கணிகரை நோக்க அவர் மெல்ல உடலை அசைத்தார். கண்ணுக்குத்தெரியாத கட்டுகளை அறுத்து எழமுயல்பவரைப்போல. சாத்யகி அவரிடமிருந்து விழிகளை விலக்கவில்லை. மீண்டும் மீண்டும் சகுனி கணிகரை நோக்கினார். கணிகர் எழப்போகிறார் என சாத்யகி எண்ணினான். ஆனால் அவர் அறியாமல் திரும்பி சாத்யகியை பார்த்துவிட்டு உடல் தளர்ந்தார்.

சினத்தில் மூச்சடைக்க ”தருமன் வருவதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும்? அவன் அறச்செல்வன் என்பதை நாடறியும். அவனிடம் நீங்கள் ஆணையிட்டிருப்பீர்கள் அதை அவன் மீறவில்லை என்றே அதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார் விதுரர். “அல்லது மக்களிடம் நீங்கள் அப்படி சொல்வீர்கள்” என்று சகுனி சினம் கொண்ட ஓநாய் போல வெண்பற்கள் தெரிய சிரித்தபடி சொன்னார்.

“அரசே, இங்கு மூத்த யாதவர் சொன்னது என்ன? அவரது மாணவனுக்கு மண் வேண்டும் என்பதுதானே? அதை அளிப்போம். நாட்டை இரண்டாகப்பிரிப்போம். தட்சிணகுருநாட்டை இளவரசர் துரியோதனர் ஆளட்டும். அது அங்கநாட்டுக்கும் அண்மையானதென்பதனால் அவர் அதை விரும்புவார். தங்கள் சொல் பிழைக்காமல் அஸ்தினபுரியை யுதிஷ்டிரனே ஆளட்டும்” என்றார் விதுரர். “அவன் அஸ்தினபுரியை ஏற்காமலிருப்பது தங்களுடைய உள்ளம் வருந்தலாகாது என்பதற்காகவே. உங்கள் மைந்தனுக்கு பாதிநாட்டை கொடுக்கும்படி சொல்லுங்கள். அதை மகிழ்ந்து அளித்தபின் அவன் அஸ்தினபுரியின் முடியை ஏற்பான். அனைத்தும் நிறைவாக முடிந்துவிடும்.”

மலர்ந்த முகத்துடன் “ஆம், அதுவே உகந்தது. என் மைந்தர் இருவருமே நாடாளட்டும். எவர் விழைவும் பொய்க்கவேண்டியதில்லை” என்றபடி திருதராஷ்டிரர் எழுந்தார். “அஸ்தினபுரியை என் அறச்செல்வன் ஆளட்டும். அவன்கீழ் என் மைந்தர் நாடாள்வதும் நன்றே.” சகுனி சினத்துடன் “அரசே, மண் என்றால் அவர்களுக்கு விரிந்த காந்தாரமே இருக்கிறது. படைகொண்டு சென்று விரும்பிய நாட்டை வெல்லும் ஆற்றலும் எனக்கிருக்கிறது. என் மருகன் விழைவது ஹஸ்தி ஆண்ட நகரை. குரு சூடிய முடியை” என்றார். மீண்டும் சகுனி கணிகரை நோக்க அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். சாத்யகியின் விழிகளை நோக்கி சற்று திடுக்கிட்ட சகுனி மீண்டும் கணிகரை நோக்கியபின் விழிகளை விலக்கினார்.

”அஸ்தினபுரியை தருமனுக்கு அளித்தவர் பேரரசர். அவரது சொல் அழியாது வாழவேண்டுமென்பதைப்பற்றித்தான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் விதுரர். கர்ணன் எழுந்த அசைவை உணர்ந்து அவையே அவனை நோக்கி திரும்பியது. “அஸ்தினபுரியின் மணிமுடியை பேரரசர் யுதிஷ்டிரருக்கு அளிக்கட்டும். அதை இளவரசர் யுதிஷ்டிரர் தன் இளையோனாகிய துரியோதனருக்கு அளிக்கட்டும். அவ்வண்ணமென்றால் அனைவர் சொற்களும் நிலைநிற்கும். அதற்குப்பின் பாதிநாட்டை துரியோதனர் தன் தமையன் யுதிஷ்டிரரின் கால்களில் காணிக்கையாக வைத்து வாழ்த்துபெறட்டும்.”

பலராமர் உரக்க கைகளைத் தட்டியபடி “ஆம், ஆம், அதுவே உகந்தது. அனைவருக்கும் மகிழ்வு தருவது” என்றார். சாத்யகி அவரை எதற்காக கிருஷ்ணன் கூட்டிவந்தான் என்ற வியப்பை அடைந்தான். கர்ணன் “யுதிஷ்டிரர் தட்சிணகுருவின் முடிசூடியபின் அவரே வந்து நின்று முடிசூட்டியளிக்க அஸ்தினபுரியின் அரசை துரியோதனர் ஏற்பாரென்றால் எந்த எதிர்ப்பேச்சும் எழப்போவதில்லை. மாறாக தன் நாட்டை இளையோனுக்குப் பகிர்ந்தளித்தவன் என்று யுதிஷ்டிரர் புகழ்பெறுவார். தமையனுக்கு உகந்த இளையோன் என்று துரியோதனரும் அறியப்படுவார்” என்றான்.

சில சொற்கள் உடனே அவையின் முழு ஒப்புதலை அடைவதை சாத்யகி முன்னரே நோக்கியிருந்தான். கர்ணன் அதுவரை பேசாமலிருந்ததா அல்லது அவனுடைய ஆழ்ந்த குரலா எழுந்து பேசும்போது அவையனைத்தும் நிமிர்ந்து நோக்கும்படி ஓங்கிய அவன் உயரமா எது அதை நிகழ்த்தியதென்று தெரியவில்லை. எவரும் ஏதும் சொல்லவில்லை. அறிந்துகொள்ளும்படி எந்த ஒலியோ அசைவோ நிகழவில்லை. ஆனால் அவை அம்முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டதென்பதும் மேலும் ஒரு சொல்லும் சொல்லமுடியாதென்பதும் தெரிந்தது. சாத்யகி கணிகரை நோக்கினான். அவரது விழிகள் மின்னிக்கொண்டிருந்தன. அவர் ஏதோ சொல்வதற்காக இதழெடுத்தபின் சாத்யகியை நோக்கினார். சாத்யகி புன்னகைத்ததும் விழிதிருப்பி மெல்ல உடற்தசைகள் இறுகியபின் மீண்டும் தளர்ந்து உடைந்த உடலின் இருபகுதிகளும் தனித்தனியாக தரையில் அமைவதுபோல அமர்ந்துகொண்டார்.

முந்தைய கட்டுரைபறத்தல்
அடுத்த கட்டுரைஇரண்டாயிரத்துக்குப் பின் நாவல்- கடிதம்