ஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

செந்தில் அவர்களுக்கு நீங்கள் எழுதிய இரு கடிதங்களும் எனக்கு நிறையவே தெளிவினை அளித்தன. நான் நெடுநாட்களாகவே இந்த மாதிரி சந்தேகங்களைக் கொண்டிருந்தேன். கீதையிலும் உபநிஷத்துக்கள் எல்லாவற்றிலும் ஆத்மாவைப்பற்றிய பேச்சு உள்ளது. ஆனால் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடாக காணப்படுகின்றது. ஆத்மா உடலை விட்டு நீங்குவதும் வானத்தில் மிதந்து கொண்டிருப்பதையும் இன்னொரு உடலை அது எடுப்பதையும் எல்லாம் நாம் ஒரு இடத்திலே காண்கின்றோம். மற்ற இடத்தில் ஆத்மா மனிதனுக்குள் இருந்து கொண்டு ஜாக்ரம் ஸ்வப்னம் துரியம் ஆகிய முந்நிலைகளில் தன்னை கண்டுகொண்டிருக்கும் ஒரு அகம் மட்டிலுமே என்ற சிந்தனை உள்ளது  என்பதைக் காண்கின்றோம். நம்முடைய நூல்கள் இரண்டையுமே மாறி மாறிச் சொல்கின்றன.

நீங்கள் அளித்த விளக்கம் பொருத்தமாக உள்ளது. அணு , குவாண்டம் போன்றவற்றைப்போலவே ஆத்மாவையும் ஒரு கருத்துக்கருவியாக, அதாவது intellectual tool ஆக , நம் மரபில் கையாண்டிருக்கிறார்கள். நான் என்ற கேள்விக்கு என்ன விடை இருக்க முடியுமோ அதுதான் இந்த பிரபஞ்சத்தின் அர்த்தம் என்ன என்ற கேள்விக்கும் விடையாக இருக்க முடியும். அங்ஙனம் ஒரே விடையாக இரண்டையும் பார்க்கும்போது உருவானதுதான் ஆத்மா என்ற கோட்பாடு — அது theory மட்டும்தான். நிரூபிக்கப்பட்ட  truth  அல்ல. நிருப்புக்கவும் முடியாது. ஒருவேளை உணர முடியலாம்– என்ற உங்கள் கருத்தைப்பற்றி நேற்றிரவெல்லாம் மீள மீளs சிந்தனை செய்துகொண்டிருந்தேன். ஆத்மா உண்டா என கேட்பதே பொருத்தமில்லாதது. ஆத்மா பொருத்தமான விளக்கமாக இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியே முக்கியமானது.

அப்படிப் பாக்க முனையும்போது ஆத்மாவின் அழிவில்லாமையும் மறுபிறப்பும் எல்லாம் இன்னும் விரிவான பொருளில் அர்த்தப்படுகின்றன. நம்முடைய  உடலில் கணம் தோறும் செல்கள் பிறக்கின்றன. கணம் தோறும் செல்கள் சாகின்றன. நாம் உயிருடன் தான் இருக்கிறோம். நாம் ஓவ்வொரு 15 நாளிலும் புதிதாக பிறந்து விடுகிறோம். இயற்கையின் சாரமாக உள்ள ஒரு அடிப்படை நோக்கம் அல்லது creative essence  என்று வைத்துக்கொள்ளுங்கள், அது மனிதனுக்குள் இருக்கிறது என்றால் அவனைக் கொன்றால் அது சாவதில்லை. அவன் அழிந்தாலும் அது அழிவதில்லை. அவனிடம் இருந்து அது மீண்டும் பிறக்கும். அந்த சாராம்சத்துக்கு மனித உடல்களும் மிருக உடல்களும் பூச்சி உடல்களும் கிருமி உடல்களும் தேவைப்படுகிறது. அந்த உடல்கள் வழியாக அது நிகழ்ந்தபடியே இருக்கும். ‘நா ஹன்யதே’ என்று கீதையானது சொல்லும் அந்த மரணமின்மை– கொல்லப்படாத தன்மை– இயற்கையில் அதன் ரகசியமான நோக்கமாக உள்ள அந்த very idea of nature தான் என்று சொல்லலாம். அப்படி எடுத்துக்கொண்டால் கீதையின் பிற்பகுதிகளில் வரக்கூடிய ஆத்மாக் கோட்பாட்டுக்கும் இந்த சாங்கிய யோகம் பகுதியிலே வரக்கூடியதான ஆத்மா கோட்பாட்டுக்கும் அருமையான இணைப்பு நிகழ்ந்து விடுகிறது

அருமை ஜெ, உண்மையாகச் சொல்கிறேன். இதுவரை இப்படி ஒரு கீதை விளக்கம் வாசிக்க நேர்ந்ததில்லை. பாண்டித்திய விளக்கங்களும் பக்தி உபன்னியாஸங்களும் கேட்டும் வாசித்தும் சலித்தே விட்டது. அனுபவம் quest இரண்டுமே ஈடுகலந்த உங்கள் விளக்கம் இன்றைய நவீன மனத்துக்கு உரியது. அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ராமகிருஷ்ணன்

88

 அன்புள்ள ஜெ:

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன். நலமா? அசோகவனம் வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டு நான் இங்கு உலகின் மறுகோடியில் உள்ளேன். முதுகலைப் பட்டப் படிப்பிற்காக. திங்கள் அன்று ராமச்சந்திரன் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். அவரது புகழ்பெற்ற “அழகனுபத்தின் உயிரியல் அடிப்படை” என்ற தலைப்பில் [The Biological Basis of Aesthetic Experience] பேசுவதற்காக. எங்கள் கல்லூரியின் புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவரிடம் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவர் புன்னகைத்தார். சாம்ஸிகியின் முன்னாள் மாணவர் அவர். எண்பதுகளின் தான் இதே போல் “The Cognitive Basis of Aesthetic Experience”] என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் மூலம் சினிமா மற்றும் ஓவியங்களை எல்லாம் structural பகுப்புகளின் மூலம் விளக்க முற்பட்டதையும், எப்படி இன்று தான் அவ்வகை நிலைபாட்டிற்கு நேர் எதிர் கோட்டில் நின்று கொண்டிருப்பதையும் (Constructivism) பற்றிக் கூறிச் சிரித்தார்.

அறிவியக்கத்தின் ஆதாரப் செயல்பாடு இதுவே. அதன் பாய்ச்சலுக்குக் முக்கியக் காரணம் இவ்வகை முரணியக்கமே.  அறிவியல் அறிஞர்கள் சொல்வது போல் அனுபவவாதமோ (empiricism), அறிவியல் முறைமையோ மட்டுமே அறிவியலின் பிரம்மிக்கத்தக்க பாய்ச்சலுக்குக் காரணம் அல்ல.

ஆனால் ஆராய்ச்சியாளரின் நிலைப்பாட்டோடு அவரது அடையாளமும் பின்னிப்படருவதால், உரையாடல்கள் பல சமயங்களில் தன்னகங்கார வெளிப்பாடுகளாக தடம் மாறிச் செல்கின்றன.  தன்னடையாளத்தையும், சுயநிலைப்பாடுகளையும் பிரித்தரியும் முறைமை சில காலமாக இருந்து வருகின்றது. ஆனால் அவை தோல்விகளாகவே முடிந்திருக்கின்றன. அடையாளமும், நிலைப்பாடுகளும், ஆராய்ச்சியும், தீவிர ஆவலுணர்வும் (passion) ஒன்றோடொன்று எப்போதும் கலந்தே இருந்திருக்கின்றன. ஒன்றின் தேவை மற்றொன்றின் இருப்பிற்கு அவசியம். இத்தகைய முரண்நோக்கை மதித்து, புரிந்து கொள்வதன் மூலமே இவற்றை தாண்டிச் சென்று சீரிய உரையாடல்களில் ஈடுபட முடியும். ஹாபர்மாஸ் போன்றோர் கூறும் “Communicative Action” போன்றவையும் இந்த திசை நோக்கி நகர வழி செய்யும் சில முயற்ச்சிகளே.

செந்தில் அவர்களின் மின்னஞ்சலைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? அவரிடம் A.I. குறித்து பேச சில விஷயங்கள் உள்ளது.

அன்புடன்,
அர்விந்த்

அன்புள்ள அரவிந்த்,

உங்கள் கடிதம். செந்திலின் மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறேன்.

எப்படி இருக்கிறீர்கள்?

அறிவுக்குரிய நிலம் என்று அழைக்கப்படும் ஒரு நாட்டில் இருக்கிறீர்கள். பண்டைக்கால காஞ்சி கடிகாஸ்தானம், நாளந்தா, தட்சசிலா போன்ற ஒரு இடத்தில். பொதுவாக இங்கிருந்து அங்கு செல்பவர்கள் தங்களை ‘சாதாரண’ உலகில் இருந்து துண்டித்துக்கொண்டு ஓர் அபூர்வ ஞானத்துக்கு உரியவர்களாக கண்டுகொண்டிருப்பதை கண்டிருக்கிறேன்- நம்முடைய ஐஐடிக்களின் வாசலை ஒருவர் தாண்டிவிட்டால் பிறகு அவர் இந்தியப்புழுக்களே என்று சிந்திக்க ஆரம்பித்து விடுவார். ஒரு இந்திய மரபார்ந்த மேதையைக்கூட எள்ளலும் நக்கலுமாகத்தான் அவரால் எதிர்கொள்ள முடியும். நம் முந்தைய தலைமுறையினரிடம் இருந்த அந்த மாயையைப்பற்றிய உங்கள் விழிப்புணர்வு எப்போதும் நல்லது.

காளிதாசனின் உவமை, விளக்கைச் சுற்றி நிழல் உண்டு. அறையைத் துலங்கவைக்கும் அதனால் தன்னைத் துலங்கச் செய்ய முடியாது. ஞானத்தின் ஆகபெரிய சுமையே ஞானம் மூலம் உருவாகும் அகங்காரம்தான்.

பொதுவாக உங்கள் கடிதம் பற்றி என்னுடைய சில அவதானிப்புகளைச் சொல்கிறேனே. நம் மனம் ஒட்டுமொத்த உண்மைக்கான ஒரு ஏக்கத்தில் உள்ளது. அப்படி ஓர் உண்மை தட்டுப்படுமென்றால் நாம் பரவசம் கொள்கிறோம். நமக்கே அது தட்டுபட்டால் அது உண்மையா இல்லையா என்ற கேள்வியை விட அது நம்முடையது என்ற விஷயம் முன்னுக்குச் சென்றுவிடுகிறது. அதன்பின் அதை நாம் நிரூபித்தாக வேண்டும்.

பொதுவாக முழுமைநோக்கு –ஹோலிஸ்டிக் அப்ரோச்- அறிவார்ந்த தளத்தில் செய்யப்படுகையில் மிகக் கவற்சியான ஒரு அறிவியக்கமாக ஆகிவிடுகிறது. கடலையே அள்ளும் ஒரு டீஸ்பூன்! ஆனால் அத்தகைய முழுமைஞானத்தை ஏதேனும் ஓர் உள்ளுணர்வால், ஒரு அகவய உண்மையாக, மட்டும்தான் அறியமுடியுமோ என்று இப்போது தோன்றிக்கொண்டிருக்கிறது. இது வயதாகிக்கொண்டேசெல்லும் ஒரு எழுத்தாளனின் மூளைச் சோர்வின் விளைவு என்று சொல்வீர்கள் என்றால் நான் வாதாடப்போவதில்லை, இருக்கலாம்.

முதல் முழுமையின் இதயத்தில் ஒரு முரண்பாடு பதுங்கியிருக்கிறது [There is a lurking paradox in the heart of Absolute] என்று நடராஜ குரு ஒரு இடத்தில் சொல்கிறார். அந்த முரண்பாட்டை எங்குமே காணமுடிகிறது. கவித்துவம் மூலமும் உயர்தளஅங்கதம் மூலமும் அதைத் தொடுவது போல தர்க்கத்தால் தொடமுடியுமா?

ஆனால் அறிவியலும் தத்துவமும் கொள்ளும் உச்சகட்ட எழுச்சிகளை நான் சற்றும் குறைத்து மதிப்பிட மாட்டேன். நான்குபக்கமும் கண்ணையும் கருத்தையும் திருப்பி பல்லாயிரம் வருடங்களாக எண்ணி எண்ணி அது உருவாக்கிய ஞானமே நம்மை இதுவரைக் கொண்டு சேர்த்திருக்கிறது. முழுக்க நிராகரிக்கப்பட்ட கோட்பாடுகள் உலக சிந்தனையில் எண்ணற்றவை. முழுக்கப் பயனற்றவை என்று ஒரு கோட்பாடுகூட கிடையாது. சிந்தனையின் எல்லா துளிகளுக்கும் அதற்கான பங்களிப்பு ஒன்று உண்டு. இன்று நரம்பியல், பரிணாம உயிரியல் சார்ந்து முன்வைக்கப்படும் பிரபஞ்ச விளக்கங்கள்  ஒன்றோடொன்று மோதி ஒன்றையொன்று நிராகரித்து விவாதித்து ஒன்றையொன்று  தின்றுக்கொண்டு, அந்த அறிவியக்கத்தின் விளைவாக பெரியதோர் முன்னகர்வை சாத்தியமாக்கக் கூடும்.

இந்தக் கடிதங்கள் விவாதங்களை அஜிதன் நேற்று அமர்ந்து படித்தான். அவனுக்கு 16 வயதுதான் இப்போது. அவன் மனம் அறிவியலின் எதிர்காலம் குறித்த கனவுகளால் விம்முவதைக் கண்டேன். ”நரம்பியலும், பரிணாமஉயிரியலும், கரிமவேதியியலும் இணைந்தால் அதன் பிறகு இந்தப் பாறையடிக்காட்டில் நமக்குத்தெரியாத ஒன்றும் இருக்காது அப்பா”என்றான்.  என்ன ஒரு நம்பிக்கை! வாழ்க. அப்படித்தானே ஒரு அப்பா சொல்லவேண்டும்?
ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஆத்மாவும் அறிவியலும்: ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைநகைச்சுவை:கடிதங்கள்