கமல்

ஜெயன்,

வணக்கம். விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனருக்கான விருதை பாலாவுக்கு கொடுத்த கமல், நான் ஜெயமோகனின் ரசிகன் என்றார். மேலும், அவருக்கு நான் இப்போது ரசிகர்களை சேர்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார். கமலுடன் தங்கள் அறிமுகம் எப்போது/எப்படி நிகழ்ந்தது? கமல் உங்களுக்கு சேர்த்த ரசிகர்கள் யார்?

நன்றி,
வாசு

அன்புள்ள ஜெயமோகன்,

நேற்றிரவு விஜய் டிவியில் விருது வழங்கும் விழா பார்த்துக் கொண்டிருந்தேன். சிறந்த இயக்குநருக்கான விருதை பாலாவிற்கு கமல்ஹாசன் வழங்கினார். அப்போது கமல்ஹாசன் பேசுகையில் உங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.

“இந்தப் படத்தில் வேலை செய்த ஜெயமோகன் அவர்களுக்கும் என் பாராட்டைச் சொல்லிக்கொள்கிறேன். ஜெயமோகன் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர். நான் அவருக்கு ஒரு வாசிப்புப் பட்டாளத்தையே உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்”

என் இரு குருநாதர்கள் என உங்களையும் கமல்ஹாசனையும் வைத்திருக்கிறேன். உங்களுக்குள்ளும் இணைப்பு உள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
ஜெகதீசன்

அன்புள்ள நண்பருக்கு,

கமல்ஹாசன் அவர்களிடம் எனக்கு அதிக தொடர்பு ஏதும் இல்லை என்பதே உண்மை. எனக்கு திரையுலகில் தெரிந்தவர்கள் சிலரே. இலக்கியம் மீது கவனம் உடையவர் என்றமுறையில் கமல் பதிமூன்று வருடங்களுக்கு முன்னரே விஷ்ணுபுரத்தை வாசித்து அதைப்பற்றி சில பொதுவான நண்பர்களிடம் பேசியதை அறிந்திருக்கிறேன். ‘கொற்றவை’ நாவல் வெளிவந்தபோது அதை வாசித்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் நிறைய பேசினார். அவருக்கும் எனக்கும் நண்பர்ரான கு.ஞானசம்பந்தம் அவர்கள் தொடர்பு கொடுத்து அறிமுகம் செய்தார். அதன்பின்னர் கமல் அவர்களை நான் ஒரு முறைநேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவருக்கும் எனக்குமான உறவு என்பது என் நாவல்களை அவர் பதினைந்து வருடங்களாக வாசிக்கிறார் அவரது படங்களை நான் முப்பது வருடங்களாக பார்க்கிறேன் என்பதுதான்.

திரையுலகிலும் வெளியிலும் பலர் கமல் என்னுடைய கொற்றவை, இன்றைய காந்தி முதலிய நூல்களை அவர்களுக்கு அளித்து அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஇணைய தள மாற்றங்கள் குறித்து
அடுத்த கட்டுரைஉத்திஷ்ட ஜெயமோகனா !!