ராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன்

O

சென்னைவரும் போது தான் கண்டிப்பாக புலிகாட் செல்லவேண்டும் என ராய் லண்டனில் இருந்து கிளம்பும் முன்னரே சொல்லியிருந்தார்.

செவ்வாய் இரவு சிறில் வீட்டில் ராய்க்கு புலிகாட் பயணத் திட்டத்தை விளக்கினேன்.

1

Ok, First you know why I want to go there?
The birds? sorry,but I am not well versed with the birds.
That’s OK, I am not an expert either. But there is more!!
Ya, ya, the cemetery.
Yes, yes, they are really old !!!

ராய் இங்கிலாந்தில் ’உலகெங்கும் உள்ள பழைமையான கல்லறைகளைப் பற்றி’ ஆராயும் ஒரு அமைப்பின் உறுப்பினர். காலனிய வரலாற்று சுவடுகளை சென்று பார்ப்பதில் பெரும் ஆர்வலர் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சரி, வெயில் மற்றும் ட்ராஃபிக் அதிகமாகும் முன்பே சென்றால் நல்லது என்று விளக்கினேன். 7 மணிக்கு நொளம்பூரிலுள்ள சிறில் வீட்டிலிருந்து கிளம்புவதாகத் திட்டம்.

சொன்னபடி, சரியாக 6.30 மணிக்கு கோடம்பாக்கத்திலுள்ள என் வீட்டு வாசலில் வந்து நண்பர் யோகா மாஸ்டர் சௌந்தர் தன் அவெஞ்சர் பைக்கில் அழைத்துச் சென்றார்.

சிறில் வீட்டில் காலையுணவிற்கு பரிமாறப்பட்ட இடியாப்பம் குருமாவை ருசித்து சாப்பிட்டுவிட்டு ஏழு நாப்பதுக்கு புலிக்காட் கிளம்பினோம். ராயின் பயணத்திற்காக சென்னை நண்பர் கோவிந்த் அவர்கள், தன் காரை, டிரைவருடன் அனுப்பி வைத்திருந்தார்.

2

சென்னையிலிருந்து புலிகாட் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. இரண்டிலும் சுமார் 56 கிமீ. ஒன்று புழல், பொன்னேரி வழியாக, மற்றொன்று மணலி, மீஞ்சூர் வழியாக. நாங்கள் யாரும் இதன் முன் புலிகாட் சென்றதில்லை. டிரைவரும் சென்றதில்லை என்றார். இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது எனக் குழப்பம். சிறிது குழப்பத்திற்குபின் மீஞ்சூர் வழியில் கூகுள் மேப் துணையுடன் பயணத்தை துவங்கினோம். சிறிலுக்கு மாலை 6 மணிக்கு க்ளையண்ட் கால் இருப்பதால் அதற்குள் திரும்பிவிடவேண்டுமென சொன்னார்.

கோவை அருகே முதுமக்கள் தாழி செப்பேடுகள் உட்பட பல தமிழக தொல்லியல் சான்றுகள் நிறைந்த தளங்கள் உள்ளது என நண்பர் ராஜமாணிக்கம் சொல்லியிருந்தார். அடுத்த நாள் கோவை பயணத்தில் அங்கு செல்ல விரும்புகிறீர்களா என சிறில் விசாரித்தார். ராய் ”நோ, நாட் ரியலி” என்றார். ‘பெரியாரைப் பார்க்கவேண்டுமென்றார். (பெரியாறு அணை)
3

மீஞ்சூர் செல்லும் வழியில் தான் எண்ணூர் துறைமுகம் செல்லும் வழியும் உள்ளது. வழியெங்கும் கண்டெயினர் லாரிகள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல். எண்ணூருக்கு செல்லும் பாதை கிளைபிரிந்தபின்தான் வேகமாகச் செல்ல முடிந்தது.

செல்லும் வழியிலேயே புலிகாட் பறவைகள் சரணாலய வரவேற்பு பலகைகளை கண்டு நெருங்கிவிட்டோம் என ராய் அறிவித்தார். மீன் பாடி வண்டிகள், மீன் விற்கும் பெண்கள், காற்றில் மீன் வாசம் என புலிகாட் சரியான மீனவ சிற்றூர்.

4

புலிகாட் பயணத்திட்டத்தை சொல்லி ஏற்கனவே சொல்புதிது குழும நண்பர்களிடம் உதவி கோரியிருந்தேன். சிவாத்மாவின் ஆர்க்கிடெக்ட் நண்பர் ’சேவியர் பெனடிக்ட்’ அங்குள்ள தனது ஆர்டே பவ்ண்டேசனின் – புலிகாட் இண்டர்ப்ரடேசன் செண்டர்” என்ற தன் அலுவலகத்தை தொடர்பு கொள்ள சொல்லியிருந்தார். 9 மணிக்கெல்லாம் இடத்தை அடைந்துவிட்டோம். பூட்டியிருந்தது.

ஊரில் நுழைந்த உடன் ஒரு மாதா கோவில் அதைத் தொடர்ந்து வரிசையாக பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள். ஜங்சனில் இடது புறம் திரும்பி சேவியரின் ஆர்டே ஃபவுண்டேசன் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் 200 அடி முன்னரே ராய் பார்க்க விரும்பிய டச்சு கல்லறைகள் இருந்தன. அவை இந்திய தொல்லியல் துறையால் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு, இரண்டடுக்கு கம்பி கேட் போட்டு பாதுகாக்கப் பட்டிருந்தன.

5

கல்லறை வளாகத்தில் பல கல்லறைகள் பெரிய கிடைமட்டமான மேடைகள். சில கல்லறைகள் 10 அடி உயரமுள்ள ஸ்தூபிகள், இரண்டு கூம்பு வடிவ கோபுரங்கள் 20-30 அடி உயரமுள்ளவை.

கல்லறை வளாகத்தின் சாவி, அருகிலுள்ள டெய்லர் கடையில் இருக்கும் என சேவியர் சொல்லியிருந்தார். அவரும் இன்னும் கடைதிறக்கவில்லை. அதன் வாசலிலேயே காரை நிறுத்தி, சுற்றிப் பார்த்துவிட்டு, டீ குடிக்க சென்றோம்.

5

புலிக்காட் ஜஞ்சன் சாலை நெடுக அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்த நாளுக்காக ஏகப்பட்ட ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. டீக்கடை விவாதத்தில் ராய், “I don’t know how people vote for these leaders, they look like some Gundas. None of them look like anyone you see on the street” என்றார்.

Ms.காந்தி (இந்திரா) நல்ல தலைவர், இந்தியாவிற்கு நிறைய நன்மைகள் செய்தவர் என்றார். நான் ”எனக்கு அவரைப் பிடிக்காது அவர் சர்வாதிகாரி, ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்” என்றேன். “Ya…, She went too far, but she did a lot for India, you know” என்றார்.

இதற்குள் இண்டர்ப்ரடேசன் செண்டரை திறந்திருந்தார்கள். சிறிய கூடம். அதன் பொறுப்பாளர் பீவி அங்கு பனைஓலையில் கைவினைப் பொருட்கள் செய்து கொண்டிருந்தார். சேவியரின், AARDE Foundation அங்கு புலிகாட் நகரின் பழைய புதிய வரைபடங்கள், டச்சுக் காரர்களின் கட்டிடங்கள், கல்லறைகள், பழைமையான் இரு ஆலயங்கள், ஒரு சர்ச் ஆகியவற்றின் படங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.

ராய் ஆர்வத்துடன் அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு எங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். புலிகாட் முதலில் போர்ச்சுகீசு காலனியாகவும் பின்னர் டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டு 1809 முதல் 90 வருடங்கள் டச்சு காலனியாக இருந்துள்ளது. அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்துள்ளது.

போர்ச்சுகீசியர் மற்றும் டச்சு இருவரும் பிரிட்டிஷாரை விடக் கொடுமையானவர்கள் என்றார். இங்குள்ள மக்களைப் பிடித்துக் கப்பலில் அடிமைகளாகக் கொண்டு சென்று விற்றிருக்கின்றனர். பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய பஞ்சங்களால் ஆயிரக்கணக்கில் மக்கள் அடிமைகளாக கப்பலேறியிருக்கின்றனர்.

6

டச்சுக் காரர்களின் மிகப் பெரிய கோட்டை ஒன்று புலிக்காட்டில் இருந்திருக்கிறது. புலிகாட்டை கைப்பற்றிய உடன் அதை பிரிட்டிஷார்கள் உடைத்து சிதைத்திருக்கிறார்கள். நாங்கள் நின்றிருந்த ’MSS பில்டிங்’கின் எதிரே கருவேல முள் மண்டிய காட்டைக் காட்டி இங்கு தான் கோட்டை இருந்தது என்றார் பீவி, நம்ப முடியவில்லை.

போனில் சேவியரும் அதையே சொன்னார். தொல்லியல் துறையின் உதவியுடன் கருவேலங்காட்டை சுத்தப் படுத்தி கோட்டையின் எச்சங்களை மீட்க முயன்றிருக்கிறார்கள். மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. பார்வையாளர் வருகைப்பதிவேட்டை வாங்கிப்பார்த்து ராய் கையெழுத்திட்டார்.

10 மணியளவில் மீண்டும் கல்லறை வளாகத்திற்கு வந்தோம். இன்னும் டெய்லர் கடையைத் திறக்க வில்லை. இதற்குள் சேவியர் ஏற்பாட்டில் ஒரு மீனவ நண்பர் எங்களை பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்ல வழிகாட்டியாக வந்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து காரில் படகுத்துறைக்கு சென்றோம். புலிகாட்டின் பறவைகள் சரணாலயமத்தைப் பார்க்க புலிகாட் ஏரிக்குள் படகில் செல்லவேண்டும். உள்ளே பல சிறிய தீவுகள் உள்ளன. சில தீவுகள் பல கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டவை.

8

விசைப்படகில் ஏரிக்குள் சென்றோம். புலிக்காட் ஏரி, வங்காளவிரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர் ஏரி மற்றும் சூழியல் பகுதி. இதில் சுமார் 450 கிமீ சுற்றளவில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

ஏரிக்குள் சிறிது தூரம் செல்லும் போதே சுற்றிலும் உள்ள நீல நிற நீர்ப்பரப்பால் கடலுக்குள் செல்லும் உணர்வு. ஏரியெங்கும் பல மீன்பிடிப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஏரி ஆழமற்றது. பொதுவாக ஒரு மூன்று அடி ஆழம், சில இடங்களில் ஓரடி மட்டுமே ஆழம்.

9

படகோட்டியிடம் சொல்லி அருகே சென்று மீன்பிடிப்பதைப் பார்த்தோம். விதவிதமான மீன்பிடி முறைகள், வலைகளை பயன்படுத்துகிறார்கள். ஓரிடத்தில் சுமார் 200-300 அடி நீளத்திற்கு மிகப்பெரிய வலையை விரித்து, சுமார் 10 பேர் வட்ட வடிவில் நின்று வலையின் முனைகளில் கட்டப்பட்ட மூங்கில் கழிகளால் ஒரே நேரத்தில் உயர்த்திப்பிடித்து படகை நோக்கி நடக்கிறார்கள்.

அனைவரும் படகின் அருகில் வருகையில் உள்ளே சிக்கிய மீன்களை அப்படியே வலையின் மையத்தில் குவித்து வலையை மூடி படகில் ஏற்றிவிடுகிறார்கள். நாங்கள் பார்க்கையில் சுமார் 10 கிலோ வரை மீன் கிடைத்திருக்கலாம். அது மிகக் குறைவு என்றார்கள்.

10

படகைக் கிளப்பி அருகில் இருந்த தீவிற்கு சென்றோம். 1 கிமீ தொலைவிலேயே பறவைகள் தெரிந்தன. எங்கள் படகோட்டி, நரி இருக்குது பாருங்க சார் என்றார். தூரத்தில் பார்க்கையில் நரியா, நாயா எனத் தெரியவில்லை. சற்று முன் சென்றதும் இரண்டு நரிகளும் தெரிந்தன. சுமார் இருநூறு பறவைகள் இருந்தன. செங்கால் நாரைகள், கொக்குகள், நீர்க்காகங்கள், எனப் பலவித பறவைகள்.

ராய் தன் பறவைகள் கையேட்டைத் திறந்து படங்களைக் காட்டி விளக்கினார். தன் பைனாக்குடலரைக் கடன் கொடுத்து பார்க்க சொன்னார். அதன் பின்னர் தான் என்னால் அவர் விளக்கிய பறவைகளில் எது எந்த பறவை என அடையாளம் காண முடிந்தது. சிறில் தன் கேமராவால் பறவைகளை சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்.

11
அதன் பின் வேறு திசையில் சென்று மேலும் சில பறவைக் கூட்டங்களைப் பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிய உடன் ஏரி நீர் மிகத்தூய்மையாக கண்ணாடி போல் தெரியத்துவங்கியது. படகோட்டி அங்கிருந்து கடல் எல்லை தொடங்குகிறது என்றார். அதன் அருகில் இருந்த சிறு மணல் திட்டில் இறங்கி, நடந்து சென்றோம். தனுஷ்கோடியை நினைவுறுத்தும் மணல் தீவு, ஆனால் சிறியது. ஒரு கரையில் வரிசையாக மீன்பிடி படகுகள், நாங்கள் இறங்கி சிறிது தூரம் நடந்து சுற்றிவிட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

படகோட்டி தூரத்தில் தெரிந்த இன்னொரு தீவைக் காட்டி அதனுள் ஸ்ரீஹரிஹோட்டா ஏவுதளம் உள்ளது என்றார். இத்துடன் தமிழக எல்லை முடிந்தது, அது ஆந்திரா என்றார். கடும் காவல் இருக்கும். உள்ளே நுழைந்தால் சுட்டு விடுவார்கள் என்றார். சிறில், “எல்லை தாண்டினா நம்ம நாட்டுக்காரனே சுடுறான், ஸ்ரீலங்காக்காரன் சுடமாட்டானா” என்றார்.
12

படகோட்டி வரும் வழியில் ஒரு தீவில் நிறுத்தி இங்கு சவுக்குத் தோப்புடன் கூடிய ஒரு அழகிய கடற்கரை உள்ளது, புத்தாண்டு சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் அங்குவந்து டெண்ட் கட்டி களித்திருப்பார்கள் என்றார். உச்சி வெயிலில் நாங்கள் ஆஃப் பாயில் ஆகியிருந்தோம். ராய், தான் அதிக நேரம் வெயிலில் இருக்க இயலாது, தன் தோல் வெடித்து காயம் ஏற்படும் என்றார். ராய் கிட்டத்தட்ட அசோகமித்ரன் வயதுக்காரர், தோற்றத்திலும் அவரைப்போலவே இருக்கிறார். சரி, போதும் என படகை கரையை நோக்கித் திருப்பினோம்.

திரும்புகையில் போட்டோக்களை வாட்ஸாப்பில் தட்டிவிட்டு என் நண்பர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தேன். ராய் “Cyril, you should bring your children here, they will learn better here than at school” என்றார். ’சென்னைக்கு மிக அருகில்’ ஒரு மணி நேர பயணத்தில் இவ்வளவு அழகான வரலாற்று, சூழியல் சுற்றுலாத்தளம், இதுவரை வந்ததில்லை, தெரியவும் இல்லை, என்ன அபத்தம் என எண்ணிக் கொண்டேன்.

கரையில் பல மீன்பிடிப்படகுகள் கவிழ்த்து காயப் போடப்பட்டிருந்தன. படகுகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களைப் பார்த்தே அங்குள்ள மக்களை ஓரளவு புரிந்து கொள்ளமுடியும் எனத் தோன்றியது. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவக் கடவுள்களின் படங்கள் கொண்ட படகுகள் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் கலந்து கிடந்தன.

கரைக்கு வந்து ஒரு செட்டிநாடு உணவகத்தில் வஞ்சிரமீன் வறுவலுடன் மதிய உணவருந்திவிட்டு 1 மணி அளவில் மீண்டும் கல்லறை வளாகத்திற்கு சென்றோம். டெய்லர் கடை இன்னும் பூட்டியே இருந்தது. எங்கள் வழிகாட்டி தான் சென்று அந்த டெய்லர் வீட்டில் சாவியை வாங்கி வருவதாகவும் அதுவரை எங்களை அருகில் காத்திருக்குமாறும் சொன்னார். சரி போய் வாங்கி வாருங்கள். அதற்குள் நாங்கள் சர்ச்சுக்கு சென்று வருகிறோம் எனக் கிளம்பினோம். ராய் பதற்றத்துடன் “Whats happening?“ என்றார்.

7
கோட்டைக்குப்பத்தில் உள்ள மகிமைமாதா சர்ச்சிற்கு வழி விசாரித்து சென்றோம். 1515ல் கட்டப்பட்ட அதன் மூல வடிவத்தை ஒட்டி மிகப்பெரிய முகப்புடன் தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் ஏரிக்குள் படகில் செல்லும் போதே தெரிந்தது, உள்ளே சிறிய பிரார்த்தனைக் கூடம், சுவரில் மகிமைமாதாவின் தொன்மக் கதைகளை விளக்கும் புகைப்படங்கள். 10 நிமிடத்தில் சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம்.

வழிகாட்டி “கல்லறைக் காப்பாளரான டெய்லருக்கு நிவாகம் ஒழுங்காக சம்பளம் தராததால், கோவித்துக் கொண்டு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார். சாவியையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார், வீட்டில் யாரும் இல்லை” என்றார். தலையில் அடித்துக் கொண்டு, வழிகாட்டிக்கு படகுப் பயணத்துக்கு 1000 ரூபாயும், மேற்கொண்டு 200 ரூபாய் வழிகாட்டியதற்கும் கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

ஆனால் ராய் மிகவும் மனவருத்தம் அடைந்திருந்தார். கல்லறை வளாகத்தின் வெளியே இருந்தே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். கல்லறை வளாகத்தின் வாசலின் இருபுறமும் இரு எலும்புக் கூடுகள் நல்ல நிலையில் அப்படியே இருக்கின்றன. கல்லறைகள் சுமார் 400 ஆண்டுகள் பழைமையானவை. சிலுவை வைக்காமல் எழும்புக்கூடு வைக்கும் வழக்கம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இறக்கவேண்டியவதான் என்பதை நினைவுபடுத்தத்தான், இது ”தனிச்சிறப்பானது, அரியது” என்றார்.
6
அத்துடன் கிளம்ப வேண்டியதுதான்.. ஆனால் கிளம்பும் முன் இடிபாடுகளாகக் கிடக்கும் இரு பழைய இந்துக் கோவில்களையும், ஒரு பள்ளிவாசலில் உள்ள சூரிய நிழல் கடிகாரத்தையும் பார்த்துவிட்டு கிளம்பினோம். ஆதிநாராயணப் பெருமாள் கோவில் மற்றும் சமய ஈஸ்வர் கோவில் இரண்டும் பிரம்மாண்டமான நுழைவு வாயிலும், அதேயளவிற்கு மரக்கதவும் கொண்டிருந்தன. ராய் அவற்றை புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பெருமாள் கோவில் பெரிய வளாகத்தை உடையது. கட்டிடங்கள் பெரும்பாலும் சிதைந்து செங்கல் குவியலாய் இருந்தன. சமய ஈஸ்வரர் கோவிலை உள்ளூர் மக்கள் புதிப்பிக்கத் எண்ணி சிமெண்ட் பூசி ’நவீன’ கோவிலாக மாற்றத் தொடங்கியிருந்தனர். அரசு தலையிட்டு நிறுத்தி வைத்துள்ளது.

download

நாட்டிலேயே குஜ்ராத் தான் தொல்லியல் சின்னங்களை மிகச் சிறந்த முறையில் பராமரித்து வருகிறது என்றார். ’அருகர்களின் பாதை’ அனுபவத்தில் அது சரி என்றே தோன்றியது.

டச்சுக்காரர்களின் கட்டிடங்களில் எஞ்சியது கல்லறை மட்டுமே. ராய், அதை இங்கிலாந்திலேயே அறிந்து கொண்டு வந்திருந்தார். இவ்வளவு தூரம் வந்து அதையும் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் ராய்க்கு. ”தமிழகத்தில் மட்டும் தான் இத்தகைய ஒழுங்கின்மைகள், வேறெங்கும் இப்படி நிகழ்வதில்லை, நான் கலெக்டருக்கு கடிதம் எழுதுவேன்” என்றார்.

மதியம் இரண்டு மணிக்கெல்லாம் சென்னை கிளம்பி விட்டோம். திட்டமிட்டதைவிட விரைவில் கிளம்ப முடிந்ததால் சிறில் “ஐயம் ஹாப்பி அண்ணாச்சி”ன்னார்.

டிரைவர், சார் “ பழவேற்காட்டிற்கு செல்கிறோம் என சொல்லியிருக்கக் கூடாதா, புலிக்காட் என்றதால் குழம்பிவிட்டேன்”, இப்போப்பாருங்க என்றார். பொன்னேரி, புழல் ஹைவேயில் வண்டி பறந்தது. எனக்கு தூக்கம் கண்ணைக் கட்டியது.

முந்தைய கட்டுரைராய் கடிதம்
அடுத்த கட்டுரைராய் கோவைச்சந்திப்பு -வெ.சுரேஷ்