பூமி சூக்தம்

அன்பின் ஜெ.மோ,

நலமா?  வேத மந்திரங்களை  உங்கள் புனைகதைகளிலும் (விஷ்ணுபுரம்..),  கட்டுரைகளிலும் free verse ஆக தமிழில் தருவது படிக்க எளிதாகவும்,  மந்திரங்களில் உள்ள கவிதைத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும்  உள்ளது..

இதனால் ஆர்வமூட்டப்  பெற்று, எனது சிறு முயற்சி –
பூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு [

http://www.tamilhindu.com/2010/04/bhumi-sukta-in-tamil/ ]

உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

அன்புடன்,

ஜடாயு



My blog:  http://jataayu.blogspot.com/

அன்புள்ள ஜடாயு

மொழியாக்கம் நன்று

பழைய சம்ஸ்கிருதப் பாடல்களின் மொழிஅமைப்பில் ஒரு பொதுத்தன்மை உள்ளது. சொல்லுக்கு சொல் இன்றைய இலக்கணப்படி மொழியாக்கம் செய்தால்

நாற்திசைகளுக்கும் பேரரசியான எவளிடத்தில்
அன்னமும் பயிர்களும் பிறக்கின்றனவோ,
எவள் பற்பல அசையும் உயிர்களையும் தன்மீது தாங்குகிறாளோ,
அந்த பூமி பசுக்களையும், அன்னத்தையும் நமக்கு வாரி வழங்கி
டுக

என்ற வகையில்தான் மொழியாக்கம் செய்ய முடியும். ‘யார்’ ‘எவள்’ ‘எது’ போன்ற சொல்லாட்சிகள் வந்தபடியே இருக்கும்.

ஆனால் இப்படி மொழியாக்கம் செய்வது ஒலிசார்ந்து ஒரு பொருத்தமின்மையை உருவாக்குகிறது. அதாவது இந்த மொழியமைப்பானது ஆங்கில சொற்றொடர்வடிவம் சம்ஸ்கிருத சொற்றொடர்வடிவை சந்திக்கும்போது உருவாவது. சம்ஸ்கிருத மந்திரங்களை இந்த அமைப்பில்தான் மொழியாக்கம் செய்தாகவேண்டுமென்பதில்லை. அம்மந்திரங்களின் அழகும் தொனி¢யும் வரவேண்டுமென்றால்

நான்கு திசைகளுக்கும் பேரரசி!
அவளிடத்தில் பிறக்கின்றன அன்னமும் பயிர்களும்!
அசையும் அசையா உயிர்களனைத்தையும் தாங்குபவள்!
செல்வங்களையும் அன்னத்தையும்
அவள் நமக்கு வாரி வழங்கிடுக!

என்று மொழியாக்கம்செய்யலாம்.

வேதங்களின் சம்ஸ்கிருத அமைப்பு பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. அவை மொழியிலக்கணம் சரியாக உருவாகாத  அதிதொன்மைக்காலத்தைச் சேர்ந்தவை. பல இடங்களில் தெளிவான எழுவாய்ப்பயனிலை அமைப்பு கூட அவற்றில் இல்லை. நிறைய வரிகள் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளப்பட வேண்டியவை. பல இடங்களில் சொல்லிணைப்புகள் இன்றைய இலக்கணப்படி பொருள் கொள்ளவே முடியாதவை

ஆகவே வேதங்களை மொழியாக்கம் செய்வது மிகக் கடினம். நேர்ச்சொல் எடுத்து மொழியாக்கம் செய்வது இன்னமும் கடினம். ஆகவேதான் நெடுங்காலம் வேதங்கள் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆரம்பகட்ட மொழியாக்க ஆசிரியர்களான வள்ளத்தோள் நாராயணமேனன் போன்றவர்கள் வெகுவாக திணறி பல இடங்களில் நெருடலாகவே மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்

[ரிக் வேத நிபுணரான இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு சொன்னார். வள்ளத்தோளின் மொழியாக்கம் மூலத்துக்கு நீதி செலுத்தியிருக்கிறது. மூலத்தை வாசித்த காலத்தில் எனக்கு எதுவும் புரியவில்லை. மொழியாக்கத்தை வாசித்தாலும் புரியவில்லை]

க்ரி·பித் போன்றவர்கள் ஆங்கிலத்தில் சுதந்திரம் எடுத்துக்கொண்டு மொழியாக்கம் செய்தார்கள். ஆங்கில மொழியின் சொற்றொடரமைப்பு அதற்கு ஒத்தும் வந்தது. ஆனால் தமிழில் அந்த சொற்றொடரமைப்பு நெருடுகிறது. ஆகவே வேதங்களின் சொல்லாட்சியை தமிழுக்குரிய சொல்லாட்சிக்கு கொண்டுவரும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஞாநியின் இரு நாடகங்கள்
அடுத்த கட்டுரைதிரைப்படத்தின் வெற்றி-தோல்வி