சூரியதிசைப் பயணம் – 14

நாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை என கோழிமுட்டையை வைத்தே அவர்கள் இந்தியாவை அளவிட்டிருப்பார்கள்.

பிரமிளின் ஒரு கதையில் ஒரு ஈழத்தவர் ‘அது எவ்வளவு பெரிய தேசம், போய்ட்டே இருக்கு’ என வியந்திருப்பார். வடகிழக்கில் ஒவ்வொரு தூரத்தையும் அந்தவகையான பிரமிப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. எவ்வளவு பெரிய தேசம். எவ்வளவு பிரம்மாண்டமான எல்லை

பயணங்களில் நாம் வரைபடங்களைச் சார்ந்து இடங்களை உருவகித்திருப்பதில்லை என்ற உண்மையை அறிகிறோம். வடகிழக்கு மாநிலங்கள் என்ற ஒற்றைச் சொல்லால் குறிப்பிடப்படும் இந்த நிலப்பகுதி ஒட்டுமொத்தமாக பல சிறிய மாநிலங்களின் தொகுதி என நம் மனதில் பதிந்திருக்கிறது. மேலும் இங்கே மக்கள் தொகை மிகக்குறைவு என்பதும் நம் அமனதில் சில சித்திரங்களை உருவாக்குகிறது. அந்த மனப்பதிவே இந்தத்திட்டத்தை கிருஷ்ணன் போட்டபோது பதிநான்கு நாட்களில் ஆறுமாநிலங்கள் என்று எண்ணச்செய்தது

ஆனால் பயணம் செய்யும்போது அந்த மனச்சித்திரம் உடைந்தது. இது மிகவிரிந்த நிலம். என்ற உண்மை பொட்டில் அறைந்தது. மேற்கு வங்கத்தை விட அஸாம் பெரியது என்பதோ அஸாமை விட அருணாச்சலப்பிரதேசம் பலமடங்கு பெரியது என்பதோ நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்? பெரும்பாலும் காடுகளால் ஆனது இந்நிலப்பகுதி. அசாமை கடந்தால் முழுக்கமுழுக்க மலைப்பாதை. நீண்டு நீண்டு செல்லும் சாலைகள் வழியாக மணிக்கணக்காகப் பயணம் செய்துதான் ஒரு இடத்தில் இருந்து இன்னொன்றைச் சென்றடையமுடியும்.

கடைகள் தகரக்கூரையிடப்பட்ட தாழ்வான கொட்டகைகள். வீடுகள் மூங்கில்மேல் நிற்கும் தகரக்குடில்கள். வடகிழக்கில் குளிர்காலம் என்பது ஜனவரியுடன் முடிகிறது. இப்போது இவர்களுக்குக் கோடைகாலம் தொடங்கிவிட்டது. ஆனால் பகலில் மட்டுமே வெயில். இரவு கொஞ்சம் கடந்ததும் குளிர். அதிலும் ஒரு வேறுபாடு. வடக்கே உள்ள மாநிலங்களில் குளிர் அதிகம். திரிபுராவில் நுழைந்ததும் குளிரே இல்லை என்ற உணர்வு வந்தது.

லோக்தக்கைப் பார்த்துவிட்டு ஜிர்ப்பாம் என்ற ஊரில் இரவு தங்கினோம். அதிகாலையிலேயே கிளம்பி திரிபுராவில் இருக்கும் உனக்கோட்டி என்ற ஊருக்குச் செல்லவேண்டும். இங்கே மிக முன்னதாகவே விடிந்துவிடுகிறது. ஆனால் குளிர் இருக்கிறது. நாங்கள் ஆறுமணிக்கே எழுந்து தயாராகிவிட்டாலும் ஓட்டுநர் தயாராக ஏழுமணி ஆகிவிடும். மிகக்கடுமையான பாதை ஆதலால் அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது.

இப்பகுதிகளில் இருவேளை உணவுதான். காலையில் ரொட்டி அல்லது சோறு. அதன்பின் பகல் முழுக்க டீ சமோசா. மாலையில் மீண்டும் ரொட்டி அல்லது சோறு. மீன்குழம்பு வங்கபாணியில் செய்யப்படுவது. மீனைப்பொரித்து குழம்பிலே போட்டு கடுகெண்ணை விட்டு செய்வார்கள். குமரிமாவட்டத்தைச் சேர்ந்த எனக்கும் வினோதுக்கும் மீனை எப்படிச்செய்தாலும் பிடிக்கும். சோறு சுவையானது. கொஞ்சம் வேகாத சுவை.

ஒரே நாளில் மணிப்பூரைக் கடந்து திரிபுராவுக்குள் நுழைந்தோம். வரைபடத்தை பார்க்கையில்தான் நாங்கள் வந்த தொலைவே தெரிந்தது. வங்கதேசம் என்ற நாட்டையை சுற்றிவந்திருக்கிறோம். பகல் முழுக்க சென்று கொண்டே இருந்தோம். மதிய உணவு இல்லை. ஒரு சிறிய சாலையோரக் கடையில் கொண்டைக்கடலைச் சுண்டல் சாப்பிட்டோம். எனக்கு மிகப்பிடித்தமான உணவு அது.

மிகமிக மோசமான சாலை. மணிப்பூரில் மெல்ல அமைதி திரும்பியபின் இப்போதுதான் சாலைகளைப்போட ஆரம்பித்திருக்கிறார்கள். நான்குவழிப்பாதைக்கானப் பணி நடைபெறுகிறது. எங்கும் புழுதி சேறு குண்டு குழி. லாரிகள் சென்றுகொண்டிருந்தன. இப்பகுதியில் இரவில் பயணம் செய்யமுடியாதென்பதால் லாரிகள் பகலில்தான் செல்கின்றன. ஓட்டுநர் ஒரு இடத்தில் மனம் உடைந்து இனிமேல் செல்லமுடியாது என்று சொன்னார்.

எதிரே வந்த காரில் விசாரித்தோம். பத்து கிலோமீட்டர் கடந்தால் திரிபுரா எல்லைவரும் அதற்குப்பின் சாலை நன்றாகவே இருக்கும் என்றார். ஓட்டுநரை தேற்றி மேலே செல்லவைத்தொம். நாங்கள் செல்லவேண்டிய இடம் உனக்கோட்டி. இந்தியாவின் முக்கியமான சைவ மையங்களில் ஒன்று இது. தென்னாடுடைய சைவர்கள் பார்த்தால் இது என்னவகை சைவம் என அதிர்ச்சியடையலாம். எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா என மகிழ்ச்சியும் கொள்ளலாம்.

வங்கமொழியில் ஏறத்தாழ ஒருகோடி என்று பொருள்வரும் உனக்கோட்டி ஒரு தாழ்வான மலை. இந்த மலைக்குமேல் கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய ரு பெரிய சைவ நகரம் இருந்திருக்கிறது. அப்படியே இடிந்து சரிந்து அந்தக்காடு முழுக்கச் சிதறிப்பரந்திருக்கிறது. ஒரு குட்டி ஆங்கோர்வாட் என்று சொல்லலாம். சிற்பக்கலையிலும்கூட கொஞ்சம் ஆங்கோர்வாட் சாயல் உண்டு- அல்லது அதற்கு முந்தைய கலைவடிவின் சாயல்.

திரிபுராவின் தனிமை காரணமாக இங்கே அனேகமாகச் சுற்றுலாப்பயணிகளே வருவதில்லை. ஒரே ஒரு கடை. அதில் கொஞ்ச பொருட்கள். நாங்கள் சென்றபோது வேறு எந்தப்பயணியும் இல்லை. சிறப்பாக படிகள் கட்டி அறிவுப்புகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் செல்லும் வழியில் எவரிடமும் உனக்கோட்டி என்று சொன்னால் தெரியாது. உனக்கோட்டி என்பது வங்காளமொழிச்சொல். திரிபுரா பழங்குடிகள் ஆளுக்கொரு வார்த்தை சொல்கிறார்கள்.

சுற்றுலா வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகையாளர் இன்மையால் கைவிடப்பட்டிருக்கின்றன. அனேகமாக காவலே இல்லை. இந்த பெரிய குன்றை காவல்காப்பதும் எளிதல்ல. யுனெஸ்கோ இதை ஏற்றெடுக்காவிட்டால் கொஞ்சநாளில் உனக்கோட்டி மேலும் அழிந்து மறைந்துவிட வாய்ப்புள்ளது

கல்படிகள் வழியாகச் சென்றால் பிரமிக்க வைக்கும் ஒரு சூழலைச் சென்றடைகிறோம். நீர் வழிந்துசெல்லும் பெரிய பாறையடுக்குகளை அப்படியே செதுக்கி சிற்பங்களாக ஆக்கியிருக்கிறார்கள். பேருருவம் கொண்ட புடைப்புச் சிற்பங்கள். செவ்வியல் சார்ந்த கலைத்திறன் கொண்டவை அல்ல. ஆனால் செவ்வியல் இந்துமதத்தின் நுணுக்கங்கள் உள்ளன

பெரும்பாலும் சிற்பங்களின் தலைகள் மட்டுமே செதுக்கப்படுள்ளன. மையமாக உள்ள சிவனின் தலைமட்டும் 30 அடி உயரமானது. இரு பக்கமும் சடைக்கற்றைகள் விரிந்திருக்கின்றன. அந்த சடைமுடிக்கற்றை மட்டுமே 10 அடி உயரம். அதில் கங்கை, நிலவு ஆகியவை உள்ளன.. இரு பக்கமும் இரண்டு பெண் கணதேவதைகள் நிற்கின்றன.

 

சிவனின் முகம் முழுக்கமுழுக்க ஒரு பழங்குடித்தெய்வம் போலிருக்கிறது. அத்தனை சிற்பங்களிலும் இந்திய மைய ஓட்ட சிற்பக்கலைக்கு முற்றிலும் அப்பாற்பட்ட வடகிழக்கின் பழன்குடித்தன்மை உள்ளது. கோகிமாவில் பார்த்த பழங்குடி வீடுகளில் மரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் அதே அழகியல். முப்பதடி உயரமான வீரபத்ரனின் முகம். இருபக்கமும் நாய்கள். இருபதடி உயரமான துர்க்கை. அவளுடைய இரு காவல் தேவதைகள்.

இவை ஏழாம் நூற்றாண்டைச் செர்ந்தவை. அன்று இக்குன்று ஒரு முக்கியமான நகரமாக இருந்திருக்கிறது. சிவனுக்குரிய குன்று. காடு முழுக்க பல உடைந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏழாம் நூற்றாண்டில்தான் தமிழகத்தின் கற்செதுக்குக் கலை தோன்றியது, மகேந்திரவர்மப்பல்லவனின் குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன என்பதை நாம் கணக்கில் கொள்ளவேண்டும்

உனக்கோட்டியின் சிற்பங்கள் ஒரு விசித்திரமான கனவுக்குள் சென்றுவிட்ட உணர்வை அளிப்பவை. உண்மையில் பிரம்மாண்டமான ஒரு பாறைசுவரில் செதுக்கப்பட்டிருந்த இச்சிற்பங்களின் நடுவே உள்ள இடைவெளி வழியாக ஆறு சென்றிருக்கிறது. ஆற்றின்பெருக்கு அந்த பெரும் பாறைச்சுவரை உடைத்து தள்ளிவிட்டது. அந்தப்பகுதியெங்கும் பிரம்மாண்டமான சிற்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.

எனக்கு வண்ணக்கடல் நாவலில் இளநாகன் சென்று பார்க்கும் அசுரர்களின் சிதைந்த நகரத்த அவை நினைவூட்டின. நான் கண்ட கனவின்மேல் நானே நடப்பது போலத் தோன்றியது. மண்ணில் பாதி புதைந்த மூக்கு. பாறையா ஆமையா யானையா என குழம்பபச்செய்யும் உடைந்த சிற்பங்கள்.

பெரிய பாறை ஒன்று பாதி அமிழ்ந்த நந்தியாக செதுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சிலை ஒன்றின் தலையணி மட்டும் பாதி புதைந்து மண்ணில் கிடக்கிறது. அப்பால் அச்சிலையின் ஒற்றைக் கண்ணும் மூக்கின் ஒரு பகுதியும் ஆற்றின் கீழ் உள்ள பாறை அடுக்கில். யானைமுகம் கொண்ட பூதகணங்கள் இருபக்கமும் நிற்க அமர்ந்திருக்கும் நாற்பதடி உயரமான பிள்ளையார்.

மேலும் கீழே காட்டுக்குள் வெவ்வேறு இடங்களில் சிற்பங்கள் கிடக்கின்றன. நான்கு முகம் கொண்ட சதுர்முக லிங்கத்தில் சிவனின் நான்குமுகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தென்னகத்தில் உமகேஸ்வரர் என் புகழ்பெற்ற மடியில் உமையை அமர்த்தி முலைதழுவி அமர்ந்திருக்கும் சிவன். அவர் இங்கே கல்யாணசுந்தரர் என்று சொல்லப்படுகிறார்..

வளைந்து மேலேறிச்சென்றால் ஒட்டுமொத்தமாக ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகளாக இச்சிற்பங்களைப் பார்ப்பது ஒரு திகைப்பூட்டும் அனுபவம். மேலே பலவகையான தாந்த்ரீகச் சிற்பங்கள் உள்ளன. யோனி விரித்த கோலத்தில் அமர்ந்த துர்க்கை. தன் தலையை தானே வெட்டும் யோகினி. தலைவெட்டுபட்ட யோகினி. துர்க்கையின் வெவ்வேறு கோலங்கள்.

மேலும் மேலேறிச்சென்றால் பிற்காலத்தைய தனிச்சிற்பங்களை அப்படியே போட்டுவைத்திருக்கிறார்கள். உனக்கோட்டி ஏழாம் நூற்றாண்டு முதல் பதினொரு நூற்றாண்டுக்காலம் காட்டுக்குள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறது. சிற்பங்கள் அரிக்கப்பட்டு கரைந்த மெழுகுச்சிலைகளாக உள்ளன. சுப்ரமணியன், உலகை வாலில் சுருட்டிச்செல்லும் அனுமார், இந்திரன் போன்ற சிலைகளை அடையாளம் காணமுடிந்தது. பத்தடி உயரமான சிலைகள். பிள்ளையார் சிலை முழுமையாகவே இருந்தது

பார்க்கப்பார்க்க உனக்கோட்டியில் சிலைகள் பெருகிக்கொண்டே போவதுதான் கனவுத்தன்மையை அளிக்கிறது என்று தோன்றியது. வெறும் கற்புடைப்பா சிற்பமா என்ற ஐயத்துடன் கண்கள் தொட்டுத்தொட்டுச் செல்ல ஒரு சிற்பத்தை அடையாளம் காண்பது ஒரு பெரிய பரவசம். நாமே அச்சிற்பத்தை பாறையில் இருந்து நம் விழிகளால் உருவாக்கி எடுப்பதுபோல.

உனக்கோட்டி பற்றி இரண்டு தொன்மங்கள் உள்ளன. வாராணசிக்குச் சென்றுகொண்டிருந்த சிவன் தன் ஒருகோடி பரிவாரங்களுடன் இங்கே தங்கியிருந்தார். தன்னை அதிகாலையில் எழுப்பும்படி சிவகணங்களிடம் சொன்னார். அவர்கள் தூங்கிவிட்டார்கள். ஆகவே அவர் மட்டும் கிளம்பிச்சென்றார். ஒருகோடிக்கு ஒன்று குறைவாக அங்கே சிற்பங்கள் அமைந்தன என்பது ஒருகதை

இதுவே இங்குள்ள இந்து மையமதத்தின் புராணம். இங்குள்ள இந்துமதம் என்பது அசாம், வங்காளம், ஒரியா வரை விரிந்து கிடக்கும் சாக்த மரபின் ஒரு வடிவம் ஆகும். இன்றும் திரிபுரா சாக்த பாரம்பரியம் கொண்டது. சாக்தத்தின் ஒருபகுதியாகவே சைவம் கருதப்படுகிறது

இன்னொரு தொன்மம் இங்குள்ள பழங்குடிகளுடையது. கல்லு கும்ஹார் என்ற குயவர் குலத்துச் சிற்பி இதைச் செதுக்கினார். அவர் பார்வதியின் பரமபக்தர். கைலாசத்துக்கு செல்ல அவர் விரும்பினார். பார்வதியும் சிவனிடம் அதை வற்புறுத்தினார். கல்லு கும்ஹாரிடம் சிவன் ஒரே இரவில் ஒருகோடி சிற்பங்களைச் செய்தால் கைலாயத்திற்கு அழைத்துக்கொள்வதாகச் சொன்னான். கல்லு பித்தனைப்போல வேலை செய்து அச்சிற்பங்களை செய்தார். கோடிக்கு ஒரு சிற்பம் குறைவாக இருக்கையில் விடிந்தது. சிவன் கல்லு கும்ஹாரை கூட்டிச்செல்லவில்லை

உண்மையில் இவ்விரு தொன்மங்களுமே பிற்காலத்தையவை. இக்காடெங்கும் சிதறிக்கிடக்கும் பல்லாயிரம் சிற்பங்களைக் கண்டு உருவாக்கப்பட்டவை. கல்லு கும்ஹாரின் கதையில் நின்றுவரை இங்குள்ள பழங்குடி இந்துக்களுக்கு இந்து மையப்பெருமதம் பற்றி இருக்கும் மிகப்பெரிய மனக்குறை பதிவாகியிருப்பதாகவே எண்ணுகிறேன்.

இங்கே ஆட்சிசெய்த கச்சாரி அரசர்களின் தலைநகராக உனக்கோட்டி இருந்திருக்கவேண்டும். குப்தர் காலத்தில் கச்சாரி அரசர்கள் குப்தர்களால் வெல்லப்பட்டார்க்ள். உனக்கோட்டி கைவிடப்பட்டு இடிந்து அழிந்தது. இதுதான் சுருக்கமான வரலாறு. மேலதிக வரலாற்றுக்கு உனக்கோட்டியில் பெரிய அளவில் அகழ்வாய்வுகள் நிகழவேண்டும். அவை இன்னமும் தொடங்கப்படவே இல்லை. இந்திய அரசு சமீபத்தில் 12 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. யுனெஸ்கோவிடம் இப்பகுதியை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும்படி இந்திய அரசு கோரியிருக்கிறது

சைவம் அடிப்படையில் மலைமக்களின் மதம். காஷ்மீரில் அது உருவானது. பின்னர்தான் அது தென்னகத்திற்கு வந்தது. சைவத்திற்கு வளமான ஒரு கிழக்கத்தி வடிவம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்று உனக்கோட்டி. இங்குள்ள சிற்பங்களின் அழகியல் முற்றிலும் மாறுபட்டது. அத்துடன் இங்கெ ஆதி சைவமும் சாக்தமும் ஒன்றாகவே உள்ளன. சைவமும் சாக்தமும் பின்னாளில்தான் ஒன்றாயின என்பதற்கு எதிரான சான்று இது

சைவம் சாக்தம் ஆகிய இரு மதங்களும் இந்தியா முழுக்க பல்வேறு வளர்ச்சியடைந்த வடிவங்களில் உள்ளன. அவற்றின் தொன்மையான வடிவம் எத்தகையது என்று அறிவதற்கான மிகச்சிறந்த சான்றாதாரங்கள் என்று காமாக்யா கோயிலையும் உனக்கோட்டி மலையையும் சொல்லமுடியும். ஏனென்றால் பிற்கால வளார்ச்சி நிகழாது மைய ஓட்டத்திலிருந்து விடுபட்டவை இவை.

இவ்வாலயங்களை ஒட்டி விரிவான அகழ்வாய்வுகள் தேவை. கூடவே இவற்றை சிற்பவியல் வழியாகவும் குறியீட்டியல் வழியாகவும் ஆராய்ந்து அறியவேண்டிய தேவையும் இன்றைய இந்து பண்பாட்டாய்வாளர்களுக்கு உள்ளது.

நாங்கள் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு சென்னைத் தமிழ்ப்பெண்கள் குழு அங்கே வந்தது. ஏதோ மாநாட்டுக்காக திரிபுரா வந்தவர்கள். முதிய பெண்கள். ஒரு பெண்மணி சென்னை அருங்காட்சியகத்தின் கியூரேட்டர். எந்தச்சிற்பத்தைப்பற்றியும் அவருக்கு எதுவும் தெரியாது என்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. சிற்பங்களைப்பற்றி எதையும் தெரிந்துகொள்ளக்கூடாது என்ற ஆழமான விரதத்துடன் அருங்காட்சியகத்தில் முப்பதாண்டுகளைக் கடத்திய முன்னுதாரணத் தமிழ்ப்பெண்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 29
அடுத்த கட்டுரைவெண்முரசு தகவல்கள்