உச்சவழு- கடிதம்

IMG_1118

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உச்சவழு கதையை வாசித்தேன். ஒரு மனிதனின் மரணத் தேடல் அவன் மனதை காட்டை நோக்கி ஈர்க்கிறது. இத்தனை வருடங்களாக சிந்தையைக் கவராத காடு இன்று அவனுள் உறைவதை உணர்கிறான். காட்டின் அடர்த்தியும், இருளுமே அவனுக்குப் புலப்படுகின்றன. நினைத்தாலே நெஞ்சை உலுக்கும் பெரிய கரிய உருவை எதிர்கொள்ள விழைகிறான் அதற்காக அவன் காத்திருக்கிறான் அதுவும் அவனுக்காக காத்திருப்பதாக உணர்கிறான். அதன் அருகாமையை ஏனோ அவன் மனம் நாடுகின்றது.

புலப்படும் ஒவ்வொன்றும் தங்களின் பிம்பங்களை எல்லாம் எதையோ ஒன்றை மட்டுமே உருவகப்படுத்தி நின்று நோக்கிக் கொண்டிருப்பதை தான்அறியாமல் உணர்கிறான். வாழ்வு தீரப்போகும் தருவாயில், ஆழத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கும், வெளித் தேவைகளின் பூசல் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்ட உள்ளார்ந்த உணர்வுகளை மீட்டெடுத்து மனவெளியில் அலையவிட்டு அதன் அழுத்தத்திலிருந்து விடுபட்டு கரை சேர அவன் மனம் முயல்கிறது. காட்டை அவன் சிந்தையோடு பொருத்துகிறான்.

ஒளி ஓங்கியிருந்த போதிலும் காட்சிகளின் தெளிவின்மை அவன் வாழ்வனுபவதை குறிப்பிடுகின்றது. ஒளி கம்மி பகல் உடனே இரவாக இருள் மெல்ல சூழ அவன் அறிந்த அவனின் அனைத்தும் அதனுள் அந்த காடு போல் கரைவதைக் காண்கிறான். அதை அவன் தரிசிக்கிறான். அதனுள் தானும் கரைய காத்திருக்கிறான். அது ஒரு தரிசனம் தான் என்று உறுதியூட்டிக் காத்திருக்கிறான். கூட்டிச்செல்ல வந்தது அந்த கரிய பெரிய உருவம்.

இவ்வாறாக அந்த வாசிப்பு ஓர் அனுபவமாயிற்று !

நன்றி.


சாலினி

அன்புள்ள சாலினி

காட்டின் கரு என்று ஒரு உருவைச் சொல்லலாம் என்றால் யானைதான். அது இருட்டு.

இருட்டு வந்து தன்னை ஏந்திச்செல்லவேண்டுமென்ற விழைவு

நல்ல வாசிப்பு. நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைசூரியதிசைப் பயணம் – 6
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22