நிதிவலை- எத்தனை சமாளிப்புகள்!

நிதிப்பிள்ளை கட்டுரையில் ஒரு முக்கியமான விடுபடல் உள்ளது , அது நண்பர்கள் மத்தியில் உரையாடும் போது நான் எங்கும் கேள்விப்படுவது தான். இன்றைய உலகமயமாக்கலின் விளைவால் , அந்நிய நிதி தவிர்க்க இயலாதது , மேலும் ஒருவர் எந்த வகையில் ஊதியம் அல்லது நிதி பெற்றாலும் அதன் மூலம் அவருக்கு தெரிவதில்லை, அவ்வாறு நிதி பெரும் ஒருவர் மறைமுகமாக அவ்வாறு நிதி /ஊதியம் வழங்கும் அந்நிய நிறுவனத்தின் நோக்கங்களுக்கு ‘செயல் கை’ யாகவே இருக்கிறார் .

1. உதாரணமாக ஜெயமோகன் தான் ஊதியம் பெறும் திரைப்பட தயாரிப்பாளருக்கு அந்த நிதி எவ்வாறு வந்தது என்கிற ஆராய்ச்சியில் இறங்கி அது அந்நிய நிதி நிறுவனம் மறை நோக்கிற்காக அந்த தயாரிப்பாளருக்கு அல்லது இயக்குனருக்கு வழங்கப் பட்டது அல்ல எனத் தெரிந்து கொண்டு தான் திரைப்படத்தில் பணியாற்றுகிறாரா ?

2. ஒரு அந்நிய நிறுவனத்தில் ஊதியம் பெரும் தட்டச்சர் என்பவரும் அந்த நிறுவனத்தின் மறை நோக்கத்திற்காக செயல்படுபவர் தானே ?

3. பெரு நிறுவனங்களும் இந்திய அரசும் மேற்குலக நாடுகளுடன் தொடர்பு கொண்டு இணைந்து இந்தியாவை அடமானம் வைக்கிறது , இதில் ஒப்புநோக்க சொற்ப நிதி பெற்று எழுதும் எழுத்தாளனின் பங்கு என்பது பொருட்படுத்தத் தக்கதே அல்ல.

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்,

எவ்வளவு பரிதாபகரமான சமாளிப்புக்கள்!

தொழில்களில் வெளிநாடுகளுடன் உறவு பெரும்பாலும் உள்ளது. அந்தத் தொழில்நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள் எல்லாரும் அந்நிய நிதி பெறுபவர்களே- இல்லையா?

ஏன் அடுத்த வரிக்குச் செல்லக்கூடாது? அப்படி தொழில்நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களின் பணம் மளிகைக்கடைக்கும் வெற்றிலைபாக்குக் கடைக்கும் வருகிறது. ஆகவே அவர்களும் அந்நிய நிதி பெறுபவர்களே.

மொத்தமாக இந்திய மக்கள் அனைவருமே அந்நிய நிதி பெறுபவர்கள். ஆகவே அன்னிய நிதி பெற்று ஆராய்ச்சி செய்வது ஒன்றும் தப்பில்லை இல்லையா?

அட அட அட! என்ன தெளிவு. அந்நிய நிதி பற்றிய விவாதம் ஒன்றில் முன்பு ஒருவர் சொன்னார் “அப்டிப்பாத்தா நாம வச்சிருக்கிற ஓடஃபோன் கூட அந்நிய நிறுவனம்தானே பாஸ்?” அதைவிட இந்த விளக்கம் இன்னும் துல்லியம்.

இந்தியாவில் அந்நிய முதலீடு இல்லாத துறை இல்லை. அந்நிய நிறுவனங்கள் பங்கேற்காத தொழில் இல்லை. அவர்களின் கொள்கைகள் நடவடிக்கைகளுக்கு அதில் பணியாற்றுபவர்கள் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக்கொள்ளமுடியாது

ஏனென்றால் தன் உழைப்பையும் திறனையும் அளித்து கூலி பேசி பெற்று வாழ்வது அது. பணம் பெற்று ஆய்வுசெய்வதும் கருத்தியல்பிரச்சாரம் செய்வதும் கூலிவேலைதான் என்றா அவர்கள் சொல்கிறார்கள்? ஆம், அப்படித்தான். கூலிப்படைதான் அது

போர்டு பவுண்டேஷனின் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்யும் குமாஸ்தா தன் உழைப்பை அதற்கு விற்று கூலி பெறுகிறான். அது அவனுடைய தொழில். அதில் நிதிவாங்கி அவர்கள் அளிக்கும் நெறிப்படி சென்று ‘ஆய்வு’செய்யும் அறிவுஜீவி தன் நேர்மையை விற்கிறார்.

பெரும்பாலான விபச்சாரிகள் இதே தர்க்கத்தை சொல்வதைக் காணலாம். ஒரு கடையில் வேலைபார்ப்பவளும் தானும் சமம் என. அவள் உழைப்பை விற்கிறாள். இவள் தன்மானத்தை விற்கிறாள். இரண்டும் அவள் பார்வையில் சமம்தான்.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர், ஓர் அமைப்புடன் இணைந்துசெயல்படுபவர் அதை முழுமையாக அறிந்திருக்கவேண்டும் என்பதில்லை. அது சாதாரணமாக சாத்தியமும் அல்ல. தன் நோக்கத்திலும் தன் செயல்பாடுகளிலும் அவர் உண்மையாக இருப்பதொன்றே சாத்தியம்.

மட்டுமல்ல வணிகம் என்பது மிக வெளிப்படையானது. ஒரு தொழிலை தெரிந்தவர் தன் திறனை பொதுவில் வைக்கிறார். அதை சாத்தியமான அதிக கூலிக்கு விற்கிறார். இங்கே அத்தனைபேரும் செய்வது அதையே. அதுவும் கருத்தியல் செயல்பாடும் ஒன்றல்ல.

நிதிநல்கை நிறுவனத்தில் ‘தெரியாமல்’ எவரும் தொடர்புகொள்வதில்லை. அது என்ன, அதன் நோக்கம் என்ன என்று துல்லியமாகத் தெரிந்த அறிவுஜீவிகளே அதை அணுகுகிறார்கள்.அதற்குத் தேவையான அனைத்தையும் செய்கிறார்கள். அது எந்தெந்த தலைப்பை விரும்பும் எந்தெந்த கோணத்தில் செய்யவேண்டும் என நுணுகி அறிந்து அதைச்செய்கிறார்கள். விற்கப்படுவது நேர்மை, சுதந்திரம்.

ஆம், இந்தியாவின் அரசிலும் அரசியலிலும் பிரம்மாண்டமான அன்னிய ஊடுருவல் உள்ளது. கீழைநாடுகளெல்லாமே ஆயுத வணிகர்களின், தொழில்நுட்ப வணிகர்களின் வலைக்குள் சிக்கிய அரசுகளால் ஆனவைதான். அந்த ஆதிக்கத்தின் ஒரு சிறிய பகுதியே கருத்தியல் தளத்திற்கு நிதிக்கொடைகள் வழியாக ஊடுருவுகிறது

ஆனால் கருத்தியல்தள ஊடுருவல் இன்னமும் ஆபத்தானது. ஏனென்றால் அந்த ஆதிக்கத்தை அடையாளம் காணக்கூடிய கண்களையே மழுங்கடிக்கிறது. அதற்கு எதிராக என்றேனும் ஒரு மாற்றம் வரமுடியுமென்றால் அதை முளையிலேயே கிள்ளி அகற்றுகிறது

நிதிக்கொடைகளைப்பற்றி நான் சொல்லும் ஒரே வரி இதுதான். சிந்தித்துப்பாருங்கள். ஒரு தேசத்தின் சிந்தனையாளர்களில் பெரும்பகுதியினர் அந்த தேசத்தை சுரண்டும் தேசங்களில் இருந்து வரும் நிதியைப்பெற்றுக்கொண்டு அதற்கேற்ப சிந்திக்கிறார்கள், அச்சிந்தனைகளை பரப்பி அவற்றையே மையச்சிந்தனைகளாக நிலைநாட்டுகிறார்கள். இதை எவ்வகையில் நியாயப்படுத்தமுடியும்?
ஜெ

முந்தைய கட்டுரைதுக்கத்தால் கடையப்படும் உயிர்-கடிதம்
அடுத்த கட்டுரைஅந்நிய நிதி- தொகுப்புரை