ஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்

நட்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கம் நலமாக இருக்கின்றீர்கள் என நம்புகின்றேன்.

இவ்வாறான ஒரு கடிதத்தை முன்பும் உங்களுக்கு எழுதி பின்பு அதைக் கட்டுரையாக்கி எனது வலைப்பதிவில் பதிவு செய்தேன். ஆனால் இம் முறை உங்களுக்கு எழுதுவது என்றே தீர்மானித்தேன். இதற்கு ஒரு பொதுநலமே காரணமாகும்.

பலர் பிரபல்யங்களைக் கண்டவுடன் ஓடி ஓடி அவர்களுடன் நின்று படம் எடுப்பார்கள். ஆனால் அவர்களின் பின்னால் அவர்களைப் பற்றி மிக மோசமாக விமர்சனம் செய்வார்கள். இவ்வாறு செய்பவர்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல கடுமையான விமர்சனமும் உள்ளது. ஒருவரின் மீது மதிப்பு இருந்து அவருடன் படம் பிடித்தால் அதே மதிப்புடன் விமர்சனங்களையும் ஆரோக்கியமாக நேரடியாகவே அவர் முன்வைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதுவே ஆரோக்கியமான பண்பு நிலை.

உங்களைப் போன்ற பிரபல்யமான எழுத்தாளர்களுக்கு படைப்பாளர்களுக்கு கடிதம் எழுதுவதோ அல்லது அவர்களுடன் நின்று படம் பிடிப்பதோ இப்பொழுதெல்லாம் அந்தளவு ஊக்கம் தருவதில்லை…

அதனால்தான் விமர்சனங்கள் இருந்தபோதும் கடந்தமுறை தமிழகம் வந்தபோது புத்தகக் கண்காட்சியில் பாலுமகேந்திராவை கண்டபோதும் ஓடிச் சென்று அவருடன் ஒரு படம் எடுக்க உணரவில்லை…. அவரது கடைசிப்படம் அந்தளவு தாக்கத்தை தரவில்லை என்பது வேறு… இதேபோல் நான் மிகவும் மதிக்கும் விவரணப் பட இயக்குனர் ஆனந்த பட்டவர்தன் ரொரன்டோ வந்திருந்தபோதும் அவருடன் கதைக்கவோ படம் பிடிக்கவோ உணரவில்லை. ஆனால் நீங்கள் இங்கு வந்தபோது உங்களை வந்து சந்தித்தோம். இதற்கு முக்கியமான காரணம் எனது காதலர் Shirley. அவர் உங்களது படைப்புகளை ஆர்வமாக வாசிப்பவர். உங்களது கட்டுரைகள் தொடர்பாக என்னுடன் அதிகம் உரையாடுவார். விமர்சனம் செய்வார். உங்கள் மீது விமர்சனத்துடனான மதிப்பு அவருக்கு உள்ளது. இதைவிட உங்கள் மீது மதிப்பு ஏற்படுவதற்கு வேறு காரணங்களும் உள்ளன.

உங்களை முதன் முதலாகக்கண்ட போது நீங்கள் எங்களுடன் முக்கியமாக டீசே இளங்கோவுடன் மிகச் சாதாரண மனிதராக எந்தவித பந்தாவுமில்லாமல் கதைத்தீர்கள். விமான பயண டிக்கட் தொடர்பான உங்கள் கஸ்டத்தை எங்களிடம் நீங்கள் கூறிய போது, நீங்கள் பிரபல்யமானவரே உங்களுக்கு பலர் உதவி செய்திருப்பார்களே என நாங்கள் கூறினோம். அதற்கு நீங்கள் நான் ஒரு பெயர் பெற்ற எழுத்தாளராக இருந்தபோதும் தமிழகத்தில் கொஞ்சப் பேருக்குத்தான் என்னைத் தெரியும் என்றீர்கள். மிகவும் படித்த முற்போக்கு கதைக்கின்ற சமூகம் மாற்றம் தொடர்பாக கதைக்கின்ற பல மனிதர்கள் இவ்வாறு கீழே இறங்கி வந்த எங்களைப் போன்றவர்களுடன் சாதாரணமாக கதைப்பதில்லை. ஆனால் சிலர் பிற்போக்கான கருத்துக்களை கொண்டிருந்தபோதும் சக மனிதர்களை மதித்து பண்புடன் உரையாடுவது மட்டுமல்ல நன்றாக உபசரிக்கவும் தெரிந்தவர்கள். முதலில் மனிதம். அதன்பின்தான் மற்றவை.

மேலும் இயல் விருதின் போது எஸ்பொவை வாழ்த்தி புகழ்ந்து பேசியபோது நான் மெய்சிலிருத்து புல்லரித்துப்போனேன். அப்படி ஒரு உரையை பல காலமாக தமிழில் கேட்கவில்லை. அடுத்த நாள் எஸ்பொ உடனான சந்திப்பின் போது எஸ்பொ மீது நீங்கள் உருவாக்கிய மதிப்பை அவரே போட்டு உடைத்தார் என்பது வேறு விடயம்.

இதைவிட நீங்கள் வாசகர்களுடன் தொடர்ந்தும் உரையாடுவது அவர்களுக்கு சளைக்காமல் பதில் போடுவது. உங்களது தேடல்கள், பயணங்கள், இவற்றில் ஒரு ஒழுங்கை கடைப்பிடித்து பதிவு செய்வது, நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துவது என்பன உங்கள் மீதான மதிப்பை அதிகம் ஏற்படுத்தின. இவை உங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை.

அதேவேளை உங்களது துணைவியார் தொடர்பாக நாம் இருவரும் கதைப்போம். முக்கியமாக Shirley கதைப்பார். உங்கள் துணைவியார் எப்படி இவரை ஏற்றுக் கொள்கின்றார்? அவருக்கு பயணிப்பது விருப்பமில்லையா? அவரை விட்டுவிட்டு இவர் மட்டும் எப்படி பயணம் செய்யலாம்? எனப் பல கேள்விகள் எங்களுக்கு உண்டு. இதை எல்லாம் உங்கள் துணைவியாருடன் சந்தித்து உரையாடவே Shirleyக்கு விருப்பம்.

இப்பொழுது இதை எழுதுவற்கு காரணம் நீங்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரையில் கையாளப்பட்ட மொழி, ஆண் மொழி தொடர்பாக உரையாடுவதற்கே. இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிட்ட உங்களுக்கு எழுதிய கடித்திலும் , கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருப்பேன்.

“ஜெயமோகன்> அவர்களுக்கு இருப்பதுபோலான> தனக்கான வரையறையையும் புரிந்து> உணர்ந்து கொண்டாரா என்பதே எனது கேள்வி? உதாரணமாக ஒரு ஈழ எழுத்தாளருக்கு (http://www.jeyamohan.in/?p=14933) என்ற இவரது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஒரு கதாபாத்திரத்தையோ> கதையையோ அதன் ஆசிரியன் கொஞ்சம் கூட மாற்ற முடியாதென்பதை எழுத்தாளன் சொன்னால் நல்ல வாசகன் கண்டிப்பாகப் புரிந்து கொள்வான் என்றே நம்புகிறேன்.”

இதிலுள்ள கருத்தல்ல மாறாக கையாளப்பட்ட சொற்களே கவனிக்கப்படவேண்டியது. இவ்வாறன சொற்களைப் போன்று இவரது மேற்குறிப்பிட்ட கட்டுiரையில் மேலும் பல ஆண்நிலைப்பட்ட சொற்கள் பரவிக்கிடக்கின்றன. இக் கட்டுரையானது பொதுவான ஒன்று என்பதுடன் ஜெயமோகன் என்கின்ற வாழ்கின்ற ஒரு பாத்திரத்தின் கூற்று. இன்றைய காலத்தில் இவ்வாறான கட்டுரைகளில் பொதுப்பால் எழுத்துக்கள் வருவதே பொருத்தமானது.

ஆனால் அவ்வாறு பொதுப்பால் சொற்கள் இல்லாது ஆண்பால் சார்ந்த சொற்கள் மட்டும் வந்திருப்பது ஜெயமோகனிடமிருக்கின்ற தந்தையாதிக்க (தந்தையம்) கருத்துக்களை பிரதிபலிக்கவில்லையா? பிரக்ஞைபூர்வமாக பகுத்தறிவுடன் எழுதும் தனது கட்டுரைகளிலையே இவ்வாறான சொற்களைக் கடக்க முடியாதவராகவே இவர் இருக்கின்றார் என்பதே எனது உணர்வும் விமர்சனமுமாகும்.”

இப்பொழுது மீண்டும் “எழுத்தாளன் சமூகத்தின் மீதான விமர்சனத்தால்தான் அவன் எழுதவே ஆரம்பிக்கிறான்.”

என ஆண்மொழியில் எழுதியிருக்கின்றீர்கள். இந்த இடத்திலும் பொது மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

இவற்றின் அடிப்படையில் உங்களிடம் சில கேள்விகள்.

பொதுவான விடயங்களையும் இவ்வாறு ஆண் மொழியில்தான் தொடர்ந்தும் எழுதுவீர்களா?

அதில் மாற்றம் ஏற்படாதா? உங்களைப போன்ற அதிகம் வாசகர்கள் உடையவர்கள் புகழடைந்தவர்கள் முன்மாதிரியாக புதிய எழுத்தை பின்பற்ற மாட்டீர்களா? வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த மாட்டீர்களா?

தமிழில் எழுதப்படும் பல சொற்கள் கணினி யுகத்திற்காக மாற்றப்பட்டதை நாம் அறிவோம். அதுபோல் நம் மீது திணிக்கப்பட்ட ஆண் மொழியை அகற்றி அதற்குப் பதிலாக பொது மொழியை அனைத்துப் பால்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மொழியைப் பயன்படுத்த முடியாதா?

இவ்வாறான ஆண்மைய அல்லது ஆணாதிக்க மொழி தொடர்பாக ரஞ்சகுமார் எழுதிய கலாதி என்ற காலச்சுவட்டில் வந்த கட்டுரை தொடர்பாகவும் ஒரு உரையாடலை முகநூலில் ஆரம்பித்தேன். இது தொடர்பாக பலரின் கருத்துக்களை அறிவதற்கு அந்த உரையாடலையும் இங்கு இணைக்கின்றேன். (http://tinyurl.com/ka9ylpg).
இக் கடிதத்திற்கு உங்கள் பதில் கண்ட பின் உங்களுடன் உங்களது பின்வரும் கட்டுரைகள் (http://www.jeyamohan.in/?p=35327 ) (http://www.jeyamohan.in/?p=3705 ) தொடர்பான உரையாடலையும் செய்ய விருப்பம் உள்ளது.

நன்றி
நட்புடன்
மீராபாரதி

basheer-drawing-by-josh-1s

அன்புள்ள மீராபாரதி

உங்கள் முந்தைய கடிதம் கிடைக்கவில்லை. பொதுவாக ஈழம் சம்பந்தமாக தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் கூட்டமின்னஞ்சல்களை தவிர்ப்பதற்காக பல சொற்களை வடிகட்டியில் போட்டு வைத்திருக்கிறேன். அதனால் உங்கள் மின்னஞ்சல் அழிக்கப்பட்டிருக்கலாம்.

நீங்கள் சொல்வதைப்பற்றி சிந்தித்துப்பார்த்தேன். இந்தியாவின் பெரும்பாலான மொழிகள் ஆண்பால் பெண்பால் விகுதிகளைப்பற்றிய சில மரபுகளைக் கொண்டுள்ளன. அஃறிணை பொருட்களுக்குக் கூட இங்கே ஆண்பால் பெண்பால் வேறுபாடுண்டு. சந்திரன் சூரியன் எல்லாமே ஆண்பால். மலைகளெல்லாமே ஆண்பால். நதிகளெல்லாமே பெண்பால். மின்னலுக்குரிய தெய்வம் ஆண்பால். கல்விக்குரியதெய்வம் பெண்பால்

இந்தி போன்ற மொழிகளில் அன்றாடப்புழக்கச் சொற்கள் கூட ஆண்பால் பெண்பால் வேறுபாடு கொண்டவை.

நீங்கள் சொல்வதுபோல ஆண்பால் பெண்பால் வேறுபாடுகளைக் களைந்து பொதுப்பால் சொற்களைக் கையாள ஆரம்பிக்கும்போது இந்த பண்பாட்டு அம்சம் இல்லாமலாகிறது அல்லவா? எனக்கு பொதுவாக எந்தவகையான சமநிலைப்படுத்தல்,பொதுப்படுத்தல் மீதும் அவநம்பிக்கையே உள்ளது. தனித்தன்மைகளைப் பேணுவதும், நுட்பங்களைத் தக்கவைத்துக்கொள்வதுமே இலக்கியத்தின் பணி என நினைக்கிறேன். பொதுமொழியை உருவாக்குவதல்ல தனிமொழிகளை நீடிக்கச் செய்வதும் உருவாக்குவதுமே அதன் வேலை

எழுத்தாளர்கள் மொழியைக் கையாள்வதைப்பற்றிய ஒரு புரிதல் நமக்குத்தேவை. சிறுவயதிலேயே மொழியில் அவர்களின் உள்ளம் தோயத் தொடங்குகிறது. மொழியைக்கொண்டு கனவுகாணத் தொடங்குகிறார்கள். மொழியில் உள்ள சொற்கள் பிறருக்கு அர்த்தங்களை அளிக்கும் அடையாளக்குறிகள். எழுத்தாளர்களுக்கு அவை கனவுகளைத் தூண்டுபவை. சொற்களின் ஒலி அவர்களுக்கு மிக முக்கியம்.

இதில் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவருக்கே உரிய ஒரு அனுபவங்கள் வழியாகச் சொற்கள் அர்த்தமேற்பு கொண்டிருக்கும். பெரும்பாலும் மிக இளமையிலேயே அது நிகழ்ந்திருக்கும். விரும்பிய வகையில் அவற்றை மாற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால் அது யோசித்துக் கையாளப்படுவதல்ல, யோசித்து மாற்றவும் முடியாது.

மாற்றினால் அச்சொல் அதன் கனவை இழந்துவிடும். முழுக்க அன்னியமாகிவிடும். தன் உணவின் மணம் சற்று மாறினால் குழம்பித்தவிக்கும் நாய் போல ஆகிவிடுவான் எழுத்தாளன்.இதுதான் சரியான உச்சரிப்பு, இதுதான் சரியான இலக்கணம் என்ற வரையறைகளை பொருட்படுத்திய சிறந்த எழுத்தாளர்கள் உலக அளவில் எவருமில்லை.மொழியின் சொற்களுக்கும் அவர்களுக்குமான உறவு என்பது அவர்களுக்கு அத்தனை அந்தரங்கமானது

பெரும்பாலும் எழுத்தாளர்களின் கனவுகளுடன் உரையாடும் வாசகர்கள் இதைப்புரிந்துகொள்கிறார்கள். சில சொற்களை,சிலவகையான திரிபுகளை அந்த எழுத்தாளரின் தனிப்பட்ட முத்திரையாகக்க்கூட வாசகர்கள் கொள்வதுண்டு. அவ்வெழுத்தாளரின் கனவைப் பகிர்ந்துகொள்ளாத இலக்கணவாதிகள், பொதுச்சம்பிரதாயவாதிகள் முன் வைக்கும் விமர்சனங்கள் அவர்களை ஒருவகையில் திகைக்கவும் எரிச்சலூட்டவும் செய்கின்றன. ஏனென்றால் அவர்கள் அவனுடைய கனவுக்குள் வரவில்லை என்றால் அவன் ஏன் செயல்படுகிறான் என்பதே அவர்களுக்குப் புரியாது. அவர்களிடம் விவாதிக்கவே முடியாது.

வைக்கம் முகமது பஷீரின் மொழி ‘இலக்கணப்பிழை’ மலிந்தது. அதை அவரது தம்பி அப்துல் காதர் வாசித்துவிட்டு “இதில் எழுவாய் பயனிலை எங்கே?” என்று கேட்டார். “போடா, இது மலையாளம் அல்ல,பஷீர்மொழி” என்று அவர் சொன்னார். [இன்னொரு கதையில் இதை இன்னும் வேடிக்கையாகச் சொல்கிறார். புல்லிங்கம் [பயனிலை] எங்கே என்கிறார் காதர். போடா லிங்கத்தை (ஆண்குறியை) நான் வெட்டிவிட்டேன் என்கிறார் பஷீர்]

ஒரு பொதுமொழியில் இம்மாதிரி சில ‘அரசியல்சரிகள்’ உருவாவது நல்லது என்றே நினைக்கிறேன். இடக்கரடக்கல்கள் போன்றவை நாகரீகத்தின் அடையாளங்கள். அவற்றை வரவேற்கிறேன். செய்திகள் அரசியல் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் அவ்வாறு அமையலாம்.

ஆனால் இலக்கியம் அரசியல்சரிகளால் மதிப்பிடப்படுமென்றால் அதன் உயிர் அழியும். அது ஒரு ‘நாகரீகமற்ற’ பிராந்தியமாகவே இருக்கவேண்டும். அங்கே ஒழுக்கம்,மரபு, இலக்கணம் என எந்த நெறியும் பேணப்படவேண்டியதில்லை. எழுத்தாளனின் ஆழ்மனவெளிப்பாடாக அமைய எந்தெந்த வகையில் மொழி உருமாறமுடியுமோ அதெல்லாமே அங்கே அனுமதிக்கப்படவேண்டும். அங்கே ‘இதையெல்லாம் கொஞ்சம் சரி பண்ணிடுங்க’ என்று நுழைந்து பேச ஆரம்பிக்கும் அன்னியக்குரலுக்கு எந்த இடமும் இல்லை.

இனி நீங்கள் சொன்ன விஷயம். ‘எழுத்தாளன்’ என்ற இச்சொல் எப்படி என்னில் வந்திருக்கும்? எனக்கு உடனடியாகத் தோன்றுவது சுந்தர ராமசாமியிடமிருந்து என்றே. முதிரா இளைஞனாக அவரைச் சந்தித்தேன். அவரது மொழியில் இருந்துதான் என் மொழியை பற்றவைத்துக்கொண்டேன். எனது பல சொல்லாட்சிகள் அவருடையவை. அவற்றில் பலவற்றுடன் என் நினைவுகள், அவருடனான என் அணுக்கங்கள் கலந்துள்ளன. அவை எழுப்பும் உணர்வெழுச்சிகளை, கனவுகளை அவற்றுக்குப் பதில் வேறு சொற்களை வைத்து அடையமுடியாது

சுந்தர ராமசாமிக்கும் அப்படி சில சொற்களில் சில கனவுகள் இருந்திருக்கலாம். அவர் பெருமதிப்புடன் சொல்லும்போது ‘அவன்’ என்பார். பாரதியை எப்போதும் அவன் என்றே சொல்வார். ஒருமுறை ஒரு தமிழறிஞர் பாரதியை அவர் என மதிப்புடன் சொல்லலாமே என்று சுந்தர ராமசாமியிடம் கேட்க ‘நான் சொல்றது வேற பாரதிய’ என்று அவர் மூக்கு சிவக்க பதில் சொன்னார்.
sura
‘கலைஞன்’ ‘எழுத்தாளன்’ போன்ற சில சொற்களை சுந்தர ராமசாமி மிகுந்த வாஞ்சையுடன் திரும்பத்திரும்பச் சொல்வதைக் காணலாம். அவர் உருவாக்கிய சில அடிப்படைக் கருத்துக்கள் மெல்ல திரண்டு அச்சொற்களில் படிந்துள்ளன. உணர்வுகளாக, கனவுகளாக. அவற்றையே நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

அவை ஓர் ஆண்பால் இருப்பை, ஒரு மனிதனைச் சுட்டுவன அல்ல. க.நா.சுவில் தொடங்கி ராமசாமி வழியாக வரும் ஒரு மரபின் கலைசார்ந்த அடிப்படை நம்பிக்கையும் அதுசார்ந்த உணர்வெழுச்சியும் அச்சொற்களில் உள்ளது. அவை ஒரு கருத்துநிலையைச் சுட்டுகின்றன. எங்கள் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு நாங்கள் என்ன சொல்கிறோம் என புரியும்.

அத்துடன் அச்சொல் மேலுமொரு அர்த்தமும் கொண்டுள்ளது. எழுத்தாளன் என ஒருமையில் சொல்லும்போது அது அந்தரங்கமாக என்னையும் குறிக்கிறது. நான் அதில் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது. இன்னொரு பெண்எழுத்தாளர் அச்சொல்லை பெண்பாலாக தன் கட்டுரை முழுக்க உபயோகப்படுத்தலாம். அவருக்கு அது அண்மையாக இருக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை சொற்கள் எல்லாமே ஆழமான மந்திரங்கள். என் மனம் செயல்படும் முறையே வேறு. நான் கருத்துக்களுக்குச் சொல்தேடுபவன் அல்ல. சொற்களை திரும்பத்திரும்ப சொல்லிச்சொல்லி உருவேற்றித்தான் கருத்துக்களையே சென்றடைகிறேன். எழுத்தாளன் என்ற சொல்லை ஆயிரம் முறை சொன்னபின்னர்தான் அந்தக் கட்டுரையையே எழுதியிருப்பேன். அதிலேயே பலமுறை அச்சொல் இருக்கும். பெரும்பாலும் கடைசி வாசிப்பில் குறைத்துவிடுவேன். ஆகவே சொற்களை மாற்றுவதெல்லாம் என்னால் பிரக்ஞைபூர்வமாகச் செய்யக்கூடுவது அல்ல

ஒன்று சொல்கிறேன். கூடுமான வரை பிரக்ஞைபூர்வமான எழுத்துக்களில் அத்தகைய பொதுப்பால் சொற்களைக் கையாள முயல்கிறேன். அது நிகழுமென்றால் நல்லதுதானே?

இது ஆணாதிக்க எழுத்து என்றால் இருந்துவிட்டுப்போகட்டும். இது பிற்போக்கு வகுப்புவாத சாதிவெறி இன்னபிற எழுத்து என ஏற்கனவே நூறு முத்திரைகள் இருக்கின்றன. கூடவே ஒன்று சேர்வதில் என்ன குறைந்துவிடப்போகிறது? இது நான், அவ்வளவுதான். அதுதான் எனக்கு முக்கியம்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2
அடுத்த கட்டுரைகோவையில் பூமணி