‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 11

பகுதி 4 : தழல்நடனம் – 1

அணுக்கச்சேவகன் அநிகேதன் வந்து வணங்கியதும் அர்ஜுனன் வில்லைத்தாழ்த்தினான். “இளையவர் சகதேவன்” என்றான். அர்ஜுனன் தலையசைத்ததும் அவன் திரும்பிச்செல்லும் காலடியோசை கேட்டது. அந்த ஒவ்வொரு ஒலியும் அளித்த உளவலியை தாளாமல் அர்ஜுனன் பற்களைக் கடித்தான். பின் வில்லை கொண்டுசென்று சட்டகத்தில் வைத்துவிட்டு அம்புச்சேவகனிடம் அவன் செல்லலாம் என கண்காட்டினான். தன் உடலெங்கும் இருந்த சினத்தை ஏதும் செய்யாமல் இருக்கும்போதுதான் மேலும் உணர்ந்தான்.

மரவுரியால் முகத்தைத் துடைத்துக்கொண்டு சென்று பீடத்தில் அமர்ந்தான். சகதேவன் வந்து “மூத்தவரை வணங்குகிறேன்” என்றான். வாழ்த்து அளித்தபின் பீடத்தைக் காட்டினான். அவன் அமர்ந்துகொண்டு “அன்னை தங்களிடம் பேசிவிட்டு வரும்படி என்னை அனுப்பினார்கள்” என்றான். அர்ஜுனன் பெருமூச்சுடன் உடலைத் தளர்த்திக்கொண்டு “சொல்” என்றான். சகதேவன் புன்னகையுடன் “அடவியை விட்டு அரண்மனைக்கு வந்துவிட்டோம். மீண்டும் அத்தனை அரசமுறைகளும் வந்து சேர்ந்துவிட்டன” என்றான்.

புன்னகைத்தபோது தன் முகத்தில் விரிசல்கள் விழுவதுபோல தோன்றியது. சகதேவனின் முகம் எப்போதுமே மலர்ந்திருப்பது. அவன் கண்களில் அனைத்தையும் அறிந்து விலகியவனின் மெல்லிய சிரிப்பு உண்டு. அர்ஜுனன் “அன்னை எங்கிருக்கிறார்கள்?” என்றான். தன் அகம் மலர்ந்துவிட்டதையும் சினம் விலகிவிட்டதையும் உணர்ந்து “எந்த உளநிலையில் இருக்கிறார்கள்?” என்றான்.

“அவர்களுக்கு கங்கைக்கரையிலேயே ஓர் அரண்மனையை அளித்திருக்கிறார் பாஞ்சாலர். அதன் மாடம் மீது மார்த்திகாவதியின் கொடியை பறக்கவிட்டிருக்கிறார்கள். நேற்றுதான் நானே அதை கண்டேன். அன்னையிடம் சொன்னேன், இது நம் அரசல்ல, நாம் இங்கு அரசமுறைப்படி வரவும் இல்லை என்று. விடையாக, பதுங்கியிருக்கும் வேங்கைதான் மேலும் வேங்கையாகிறது என்றார்கள். விடையை முன்னரே சிந்தனை செய்திருப்பார்கள் போலும்” என்றான்.

”பாஞ்சாலர் ஒரு நல்ல புலிக்கூண்டைச் செய்து அளித்திருக்கலாம்” என்றான் அர்ஜுனன். சகதேவன் சேர்ந்து நகைத்தபடி “அன்னை அரண்மனையில் முன்னும்பின்னும் நடந்த இடம் காலடிப்பாதை போல மரத்தரையின் வடுவாகி விட்டிருப்பதாக தோன்றியது. கொதிக்கும் செம்புக்கலம் போலிருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் விழிகளைச் சரித்து “அவர்களை நாம் ஒருபோதும் நிறைவுசெய்யப்போவதில்லை இளையோனே” என்றான்.

சகதேவன் “இன்றுகாலை மூத்தவர் பீமசேனரை சந்தித்திருக்கிறார்கள். அவர்களிடையே பெரும் பூசல் நிகழ்ந்திருக்கிறது” என்றான். அர்ஜுனன் தலையசைத்தான். “அன்னை மூன்றுநாட்களுக்கு முன்னால் மூத்தவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்கள். இளவரசியை எப்படியேனும் அஸ்வத்தாமனின் சத்ராவதிமேல் படைகொண்டுசெல்ல ஒப்புக்கொள்ள வைக்கும்படி. இளவரசியின் ஆணையை பாஞ்சாலம் மீறமுடியாது என எண்ணியிருக்கிறார். மூத்தவர் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.”

“ஆனால் அதை அவர் இளவரசியிடம் சொல்லவேயில்லை அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், எப்படி அதை உணர்ந்தீர்கள்?” என்றான் சகதேவன். “இளையோனே, கங்கை எற்றி எறிந்து கொண்டுசெல்லும் நெற்று போல சென்றிருப்பார் மூத்தவர்” என்றான் அர்ஜுனன் புன்னகையுடன். சகதேவன் சிரித்தபடி எழுந்து “ஆம், அதைத்தான் அன்னையும் சொன்னார்கள். அவள் கையில் பந்தெனத் துள்ளியிருக்கிறாய் மூடா என்று. முதலில் அன்னை தன்னிடம் சொன்னதென்ன என்றே அவருக்கு நினைவில் இல்லை. அதுவே அன்னையை சினவெறி கொள்ளச்செய்துவிட்டது. நான் கூடத்திற்கு அப்பால் இருந்தேன். மூடா, மந்தா, ஊன்குன்றே என்றெல்லாம் அன்னை வசைபாடும் ஒலி கேட்டு எழுந்து அறைக்குள் சென்று நின்றேன். என்னைக் கண்டதும் அன்னை தன்னை மீட்டுக்கொண்டார். மூச்சிரைத்துக்கொண்டு மேலாடையை முகத்தின் மேல் இழுத்துப்போட்டபடி பீடத்தில் அமர்ந்து விம்மி அழத்தொடங்கிவிட்டார்” என்றான்.

“மூத்தவர் அன்னையை நோக்கியபடி சிலகணங்கள் நின்றார். அவர் உடலில் ஓர் அசைவு எழுந்தது. அவர் ஏதோ சொல்லப்போவதாக எண்ணினேன். ஆனால் திரும்பி என்னை நோக்கி புன்னகைசெய்தார்” என்றான் சகதேவன். “மூத்தவரே, நீங்கள் அப்புன்னகையை பார்த்திருக்கவேண்டும். அத்தனை அழகிய புன்னகை. திருடிஉண்ட குழந்தையை பின்னால் சென்று செவிபிடித்தால் சிரிப்பதுபோல. அப்படியே சென்று அவரை அணைத்துக்கொள்ளவேண்டும் போல தோன்றியது.” அர்ஜுனன் சிரித்தபடி “மூத்தவர் ஓர் அழகிய குழந்தை. இறுதிவரை அப்படித்தான் இருப்பார். அவர் இருக்கும் வரை நம்முடன் காட்டுதெய்வங்களனைத்தும் துணையிருக்கும்” என்றான்.

”மூத்தவர் கைகளை விரித்தார்… ஏதோ சிந்திக்க முயல்கிறார் என்று தெரிந்தது. சொற்கள் ஏதும் சிக்கவில்லை. எனவே மீண்டும் பீடத்தில் அமர்ந்துகொண்டார். அப்பால் ஏதோ ஓசை. அது இளவரசியின் காலடி என்று தோன்றியிருக்கக் கூடும். அவர் திரும்பிப் பார்த்தபோது முகத்தில் இசை மீட்டும் கந்தர்வர்களின் மலர்ச்சி இருந்தது. பின்னர் திரும்பி அன்னையை நோக்கினார். நான் அவர் சொன்னவற்றிலேயே மூடத்தனமான சொற்களை கேட்டேன். மூத்தவரே, அதைச் சொன்னமைக்காக அவரை மீண்டுமொருமுறை உள்ளத்தால் தழுவிக்கொண்டேன்.”

சிரித்துக்கொண்டே சகதேவன் சொன்னான் “மூத்தவர் எழுந்து மண்டியிட்டு அன்னையருகே அமர்ந்து, ‘அன்னையே நான் உடனே சென்று இளவரசியிடம் அனைத்தையும் தெளிவாக பேசிவிடுகிறேன்’ என்று சொன்னார். அதைக்கேட்டதும் அன்னையின் அத்தனை கட்டுகளும் அறுந்து தெறித்தன. ’மூடா, மந்தா! நீ மனிதனல்ல, அறிவற்ற குரங்கு’ என்று கூவியபடி அவர் தலையிலும் தோளிலுமாக அடித்தார். உடனே என்னை உணர்ந்து திரும்பி நோக்கியபின் எழுந்து மேலாடையை இழுத்துவிட்டுக்கொண்டு வாயிலை நோக்கி சென்றார். அங்கு தாளாமல் நின்று திரும்பி ‘அறிவிலியே, வேங்கை உன்னை கிழித்து உண்ணும்போது எஞ்சியதை சொல்’ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.”

அர்ஜுனன் சிரிப்பை அடக்கியபடி எழுந்துவிட்டான். இளையவனின் விழிகளை நோக்காமல் திரும்பி உடல் முழுக்க அதிர மெல்ல சிரித்தான். “மூத்தவர் என்னிடம் ‘எந்த வேங்கையும் என்னை உண்ண முடியாது. நான் இடும்பனையும் பகனையும் கொன்றவன்’ என்றார்” என்று சகதேவன் சொன்னதும் அர்ஜுனனுக்கு அடக்கமுடியாதபடி சிரிப்பு பீறிட்டு விட்டது. சிரிப்பை அடக்கிய இருமலுடன் அவன் திணறினான்.

சகதேவனும் வாய்விட்டு சிரித்துக்கொண்டு எழுந்து “நான் சொன்னேன், ‘மூத்தவரே, இன்றுடன் உங்கள் முறை முடிகிறது’ என்று. அதற்கு அவர் திகைத்து, ‘மூன்றுநாட்கள் உண்டு அல்லவா?’ என்றார். நான் ‘மூத்தவரே, இன்றோடு மூன்றுநாள் ஆகிறதே’ என்றேன். உள்ளூர கணக்கிட்டார் என்று தோன்றியது. முன்னும் பின்னுமாக பல கோணங்களில் எண்ணிப் எண்ணிப்பார்த்தும் மூன்று மூன்றாகவே எஞ்சியிருக்கக் கண்டு சினமடைந்து தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு என்னிடம் ‘மூடா, நான் எனக்குத் தோன்றியதை சொல்வேன். என்னை எவரும் கட்டுப்படுத்தமுடியாது’ என்று கூவினார். சிரிக்காமல் நான் தலையசைத்தேன்” என்றான்.

அர்ஜுனன் சிரித்துக்கொண்டிருக்க சகதேவன் தொடர்ந்தான் “மூத்தவர் மேலும் சினம் அடங்காமல் ‘நான் மறக்க முடியாதபடி தன் சொற்களை அமைக்கத்தெரியாதது அன்னையின் பிழை! அதற்கு நானா பொறுப்பு?’ என்றார். மேலும் சினம் தாளாமல் அறைக்குள் சுழன்றார். சினம் கட்டுமீறிக்கொண்டே சென்றது. அவர் உடலில் மலைப்பாம்புகளும் மத்தகங்களும் பொங்கி எழுந்தன. கடும் சினத்த்தால் பற்களை கிட்டித்தபடி என்னை நோக்கி ‘நான் அடுமனைக்குச் செல்கிறேன். நீ வருகிறாயா? இங்கே அக்காரை என்றொரு அப்பம் செய்கிறார்கள்’ என்றார்.”

சிரிப்பில் அர்ஜுனன் கண்கள் கலங்கி விட்டன. சிரிப்பை நெறிப்படுத்துவதற்காக அவன் மீண்டும் வில்லை எடுத்துக்கொண்டான். “மூத்தவர் கடும் சினத்துடன் எதிர்ப்பட்ட அனைத்தையும் தட்டித்தள்ளியபடி நேராக அடுமனைக்குச் சென்று இடிபோல முழங்கினார் ‘கிஞ்சனரே, எடுத்துவையுங்கள் அக்காரையை’ என்று. முழங்கால் உயரத்துக்கு குவிக்கப்பட்ட அக்காரைகளை உண்டு நெடுநேரம் சென்றபின் அவருக்கு என் நினைவு எழுந்தது. திரும்பி நோக்கி ‘நீயும் அமர்ந்துகொள்… இது இப்பகுதிக்கே உரிய சிறந்த அப்பம்’ என்றார். நான் அமர்ந்துகொண்டதும் ஒவ்வொரு அப்பமாக எடுத்து முகர்ந்து அவற்றில் மிகச்சிறந்தவற்றை எடுத்து என் தாலத்தில் வைத்து ‘புசி… இது ஆற்றலை வளர்க்கும்’ என்றார்” என்றான் சகதேவன்.

அர்ஜுனன் சிரித்து அடங்கி “அனைத்தையும் உண்டபின் கங்கையில் குதித்திருப்பார்” என்றான். “ஆமாம், அப்போது சென்றவர் இதுவரை மீளவில்லை” என்றான் சகதேவன். அர்ஜுனன் “கங்கைக்கரைக்கு அப்பாலுள்ள காடுகளில் ஏதேனும் குரங்குகுல இளவரசியை மணந்து மைந்தனையும் பெற்று பெயர்சூட்டிவிட்டு திரும்பி வந்தால்கூட வியப்பில்லை” என்றான். சகதேவன் “நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் கங்கை வழியாகச் சென்று பாஞ்சாலநாட்டின் எல்லையையும் கடந்து கன்யாகுப்ஜத்திற்கு அருகே ஒரு சிறு துறையில் கரையேறி இலச்சினைமோதிரத்தை அளித்து பாய்மரப்படகு ஒன்றை வாங்கி மறுநாள் பின்காலையில்தான் திரும்பிவந்திருக்கிறார்கள்” என்றான்.

அர்ஜுனன் தலையசைத்தான். “அன்னை அதைத்தான் உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்” என்றான் சகதேவன். “உங்களிடம் நேரில் சொல்லமாட்டார்கள் என நீங்களே அறிவீர்கள்.” அர்ஜுனன் முகம் மாறி “சொல்…” என்றான். “நீங்கள் அஸ்வத்தாமனை வெல்லவேண்டும். இந்நகரிலிருந்து சத்ராவதிக்குத்தான் திரௌபதியுடன் நாம் செல்லவேண்டும். அங்கே திரௌபதி முடிசூடி அரியணையில் அமரவேண்டும்…” அர்ஜுனன் “அன்னையின் திட்டங்களை நான் அறிவேன். ஆனால் திரௌபதியைப்போன்ற ஒரு பெண்ணை சொல்லி திசைதிருப்பமுடியும் என அவர் நம்புகிறார் என்றால்…” என்றபின் கைகளை விரித்தான்.

“தங்களால் முடியும் என்று அன்னை சொன்னார். தங்களிடம் சொல்லவேண்டாமென்பதே அன்னையின் எண்ணமாக இருந்தது” சகதேவன் சொன்னான். “பாஞ்சால இளவரசர்கள் சத்ராவதியிடம் போர்புரியும் ஆற்றல் கொண்டவர்களல்ல. தாங்கள் படைநடத்தினால் மட்டுமே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். பாஞ்சாலத்தின் ஐங்குலங்கள் தாங்கள் படைநடத்த ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்கு திரௌபதி ஆணையிடவேண்டும்.”

“இதை ஒரு தூதனிடம் ஓலையாகக் கொடுத்தனுப்பலாமே? ஏன் நீயே வரவேண்டும்?” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் தங்களைச் சற்று சிரிக்கவைத்துவிட்டு இதைச் சொல்ல தூதனால் முடியாதே” என்றான் சகதேவன். “மூடா” என்று திரும்பி செல்லமாக அவன் தோளில் அறைந்தான் அர்ஜுனன். ”நான் சினமாக இருக்கிறேன் என எவர் சொன்னது?” “சினமில்லையேல் திறந்த வெளியில் அல்லவா விற்பயிற்சி செய்வீர்கள்” என்றான் சகதேவன். அவன் விழிகளை அர்ஜுனன் நோக்கினான். தெளிந்த படிகவிழிகள்.

“இளையோனே, நீ உன் நிமித்தநூல் மூலம் மானுட வாழ்க்கையை எத்துணை தொலைவுக்கு அறியமுடியும்?” என்றான் அர்ஜுனன். “கற்க விழைகிறீர்களா?” என்றான் சகதேவன். “சொல்” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, நாம் மானுடர். ஆகவே மானுட வாழ்க்கையை மட்டுமே அறிகிறோம். அதில் நம் நாடு நம் குலம் நம் குடியை மட்டுமே கூர்ந்து நோக்குகிறோம். நம்மையும் நம்மைச்சார்ந்தவர்களையும் பற்றி மட்டுமே அக்கறைப்படுகிறோம். இங்கு நிகழ்வன எதையும் நம்மால் அறியமுடியாமைக்குக் காரணம் இதுவே.”

“நிமித்தநூல் என்பது இங்குள்ள வாழ்க்கையை ஒரு பெரும் வலைப்பின்னலாக நமக்குக் காட்டுகிறது. நம்மை விலக்கி நிறுத்தி அந்த வலையில் ஒவ்வொன்றும் எங்கெங்கே நிற்கின்றன என்பதைப் பார்க்கவைக்கிறது. அனைத்தையும் பார்க்க முடியுமா என்று நான் அறியேன். ஆனால் காவல்கோபுரம் மீதேறி நின்று நகரை நோக்குவதைப்போல ஊழாடலை நோக்க முடியும்.”

”நீ நோக்குகிறாயா?” என்றான் அர்ஜுனன். “இல்லை, தேவையானபோது மட்டும் நோக்குகிறேன். அத்துடன் நிமித்திகன் ஒருபோதும் தன் வாழ்க்கையை நோக்கக் கூடாது. அதன்பின் அவன் இங்கே இந்த பெருநாடகத்தில் ஒருவனாக நடிக்க முடியாது. இருத்தலின் அனைத்து உவகைகளையும் இழந்துவிடுவான்.” அர்ஜுனன் தலையசைத்து “நன்று” என்றான். பின் தன் கையில் இருந்த வில்லை இது என்ன என்பதுபோல நோக்கினான். அதை வைத்துவிட்டு திரும்பி “என் உள்ளம் நிலைகொள்ளவில்லை இளையவனே” என்றான். “இவை எதன் பொருட்டும் அல்ல அது.”

“சொல்லுங்கள்” என்றான் சகதேவன். “இந்தப்பெண்ணோ, மண்ணோ, புகழோ எனக்கொரு பொருட்டே அல்ல. நான் விழைவது என்னவென்றும் அறியேன். நான் என்னசெய்யவேண்டும் சொல்” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, தன் காதலனுக்காகக் காத்திருக்கும் பேதைப்பருவப் பெண்ணின் நிலைகொள்ளாமை தங்களுடையது. மண்ணில் எவரும் அருந்தாத பெருங்காதலின் அமுதை என்றோ ஒருநாள் தாங்கள் அருந்தக்கூடும். தங்களுக்குள் உள்ள அந்தத் தத்தளிப்பை அடைந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். அவர்களை தெய்வங்கள் தங்கள் ஆடலில் கருவாக்குகின்றன” என்றான் சகதேவன்.

“ஆகவே அந்த தத்தளிப்பு அங்கே இருக்கட்டும்… அதை சுவைத்துக்கொண்டிருங்கள்” என்று தொடர்ந்தான். “ஆனால் இத்தருணத்தின் சினம் வேறு ஒன்றினால்… அதை நான் உங்களிடம் சொல்லமுடியாது.” சகதேவன் புன்னகைத்து “சூதர்களிடம் சொல்லிவிட்டுச் செல்கிறேன்” என்றான். அர்ஜுனன் தலையசைத்து புன்னகைத்தான்.

“சரி, அன்னையின் இக்கோரிக்கை, இதில் நான் செய்யவேண்டியது என்ன?” என்றான் அர்ஜுனன். “அன்னையின் ஆணை இது. இதை நீங்கள் மீறலாகாது மூத்தவரே. உங்களால் முடிந்தவரை இதைச் செய்ய முயலுங்கள்” என்றான். அர்ஜுனன் அவன் விழிகளை நோக்கி “நான் வென்று துரோணருக்கு அளித்த மண் அது. அதை நான் மீண்டும் வென்றெடுப்பது முறையல்ல…” என்றான். “ஆம், நானறிவேன், அன்னை சொல்லும் தர்க்கங்களை. அவை நாம் சொல்வது. அவற்றை ஆசிரியர் ஏற்கவேண்டுமென்பதில்லை சூதர்கள் ஒப்பவேண்டுமென்பதில்லை.”

“ஆம், அந்த தர்க்கங்கள் எவையும் முழுமையானவை அல்ல” என்றான் சகதேவன். “ஆனாலும் அன்னையின் ஆணையை நீங்கள் நிறைவேற்றலாம்.” சிலகணங்கள் கழித்து “அது நிறைவேறப்போவதில்லை என்பதனால் உங்களுக்குப் பழி ஏதும் வராது” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “அச்சொற்களே போதும். அவ்வண்ணமே செய்கிறேன்” என்றான்.

சகதேவன் புன்னகையுடன் “இன்று ஏழாம் வளர்பிறை. தங்கள் நாள்” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்றான். சகதேவன் மேலே ஒன்றும் சொல்லாமல் வணங்கி பின்னால் சென்றான். அர்ஜுனன் அவனுக்கு வாழ்த்தளித்துவிட்டு படைக்கலச்சாலையின் நடுவே கைகளை இடைகோர்த்து நின்றான். பின்னர் திரும்பி வில்லை எடுத்து அதில் அம்பைப்பொருத்தி தொடுத்து சுழிமையத்தில் நிறுத்தினான். அதன்பின் அடுத்த அம்பால் முதல் அம்பை இரண்டாகப்பிளந்தான். அடுத்த அம்பால் அதை இரண்டாகப் பிளந்தான். அம்புகள் பிளந்து விழுந்தபடியே இருந்தன.

வில் தாழ்த்தியபோது அநிகேதன் பின்னால் வந்து நின்றிருந்தான். “நீராட்டறைக்கு சொல்” என்றான். அவன் திரும்பி ஓடினான். அர்ஜுனன் சென்று மேலாடையை அணிந்து குழலைக் கலைத்து தோளில் பரப்பிக்கொண்டு வெளியே சென்றான். குளிர்ந்த கங்கைக்காற்று பட்டு அவன் தோள்கள் சிலிர்த்தன. கால்களை சீராக எடுத்துவைத்து நடந்தான்.

மாளிகைக்குச் சென்றதும் அநிகேதனிடம் “நான் பாஞ்சால அரசரை சந்திக்க விழைகிறேன் என செய்தி அனுப்புக” என்றான். நீராட்டறையில் நீராட்டறைச் சேவகர் இருவர் அவனுக்காக நறுமணப்பொடிகளும் மூலிகை எண்ணைகளுமாக காத்திருந்தனர். ஒருசொல்கூடப் பேசாமல் அவன் நீராடி முடித்தான். வெண்ணிற ஆடையும் கச்சையும் அணிந்து வெளிவந்தபோது அரசர் அவரது தென்றலறையில் சந்திப்புக்கு நேரமளித்திருப்பதாக அநிகேதன் சொன்னான்.

முற்றத்துக்கு வந்து சிறியதேரில் ஏறி அரண்மனைக்குச் செல்ல ஆணையிட்டபின் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து சொற்களை கோர்க்கத் தொடங்கினான். “ஆம்” என்று சொன்னபடி அசைந்து அமர்ந்து பெருமூச்சுடன் அரண்மனையின் செங்கல்பரப்பப்பட்ட பெருமுற்றத்தையும் பின்னோக்கி ஒழுகிய ஏழடுக்கு மாளிகைகளையும் நோக்கினான். ரதம் சிறிய அதிர்வுடன் நின்றதும் இறங்கி சால்வையை சுற்றிக்கொண்டு அரண்மனை முகப்பை நோக்கி சென்றான்.

வாயிலிலேயே கருணர் நின்றிருந்தார். அவனைக்கண்டதும் ஓடிவந்து பணிந்து “அரசர் தென்றலறையில் இருக்கிறார். இட்டுச்செல்ல ஆணை” என்றார். “துணையுடன் இருக்கிறாரா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இளவரசர் தருமருடன் நாற்களம் ஆடிக்கொண்டிருக்கிறார்.” அர்ஜுனன் எதையும் வெளிக்காட்டாமல் “மூத்தவர் இங்கா இருக்கிறார்?” என்றான். “ஆம் இளவரசே, அரசருக்கு இப்போது அணுக்கக்கூட்டு என்பது மூத்த இளவரசர்தான். பகலெல்லாம் இருவரும் நாற்களமாடிக் களிக்கிறார்கள்.”

அர்ஜுனன் தன் சொற்களை மீண்டும் எண்ணத்தில் ஓட்டினான். பொருளற்ற மதிசூழ் சொற்கள். அவற்றையா அத்தனை நேரம் திட்டமிட்டு அமைத்தோம் என அவன் அகம் திகைத்துக்கொண்டது. வேறென்ன சொல்வது? அச்சூழலை அவனால் எண்ணத்தில் எழுப்பவே முடியவில்லை. ஒரு சொல்கூட எழுந்து வரவில்லை. அதற்குள் தென்றலறையின் வாயில் வந்துவிட்டது. கருணர் புன்னகையுடன் வாயிலைத் திறந்து “தாங்கள் பேசிக்கொண்டிருக்கலாம் இளவரசே” என்றபின் விலகினார். அவன் உள்ளே நுழைந்தான்.

தென்றலறை அப்பால் இருந்த விரிந்த மலர்ச்சோலையை நோக்கித் திறந்த உப்பரிகை கொண்டிருந்தது. பச்சைநிறமான திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடின. செம்மஞ்சள்நிற பாவட்டாக்கள் அறைமூலையில் காற்றில் திரும்பின. சுவர்கள் முழுக்க மயிற்பீலிவளையங்களால் அணிசெய்திருந்தனர். நடுவே குறுபீடத்தில் இருந்த இருவண்ணக் களத்தில் பொன்னாலும் தந்தத்தாலுமான காய்கள் காத்திருந்தன. துருபதனும் தருமனும் அவற்றை நோக்கி அமர்ந்திருந்தனர்.

முகவாயை வருடியபடி கணித்துக்கொண்டிருந்த துருபதன் திரும்பி “வருக இளவரசே” என்றார். தருமன் “இளையோனே, நீ வருகிறாய் என்று சற்றுமுன் சொன்னார்கள்… நான் இங்குதான் காலைமுதல் இருக்கிறேன்” என்றபின் புன்னகையுடன் குதிரைவீரனை முன்னால் கொண்டு வைத்து “தடைதாண்டிவிட்டேன்” என்றான். துருபதன் திகைத்து நோக்கி “ஓ” என்று கூவியபின் பெருமூச்சுடன் “அவ்வளவுதான்” என்றார். “இன்னொரு வழி உள்ளது… ஆனால் அதை நீங்களே கண்டடையவேண்டும்” என்றான் தருமன்.

துருபதன் அர்ஜுனனிடம் அமரும்படி கைகாட்டினார். அர்ஜுனன் அமர்ந்துகொண்டு துருபதனிடம் “அரசே, தங்களிடம் முதன்மையான அரசுச்செயல்பாடு ஒன்றை சொல்ல வந்துள்ளேன்” என்றான். துருபதன் விழிதூக்கினார். ”நாம் சத்ராவதியின்மேல் படைகொண்டு சென்று அதை கைப்பற்றவேண்டும். அஸ்வத்தாமனை களத்தில் வெல்வது என் கடன். சத்ராவதியை வென்று அதன் மேல் பாஞ்சாலக்கொடியை பறக்கவிடாதவரை காம்பில்யம் தன் மதிப்பை மீட்கமுடியாது என்பதை அறிவீர்கள். ஐம்பெருங்குலங்களுக்கும் அது கடமையும்கூட.”

தருமன் திகைப்புடன் “இளையோனே” என்று சொல்லத் தொடங்க அர்ஜுனன் தலைவணங்கி தொடர்ந்து சொன்னான். “எங்கள் அரசியை ஒரு நாட்டின் அரசியாகவே இங்கிருந்து அழைத்துச்செல்ல விழைகிறோம். அவளுக்கென அரியணையும் செங்கோலும் மணிமுடியும் தேவை. அது அவள் இழந்த சத்ராவதியாகவே இருக்கட்டும். அத்துடன்…”

ஒரு கணம் அவன் தயங்கினான். குரல் சற்றே தழைய “அந்தக் களத்தில் உங்கள் ஐங்குலப் படைவீரர் நடுவே நான் சத்ராவதியின் மணிமுடியைக்கொண்டுவந்து உங்கள் பாதங்களில் வைத்து பணிகிறேன். அன்று களத்தில் நான் செய்த பெரும்பிழையை அவ்வண்ணம் நிகர் செய்கிறேன். ஆணையிடவேண்டும்” என்றான்.

துருபதன் முகம் கனிந்தது. கைநீட்டி அர்ஜுனன் தொடைகளை தொட்டபின்னர்தான் அவருக்கு சொல்லெழுந்தது. “இளவரசே, அன்று அடைந்த அவமதிப்பின் பெருந்துயரை நான் மறுக்கவில்லை. எத்தனை நாட்கள்… இளவரசே, வஞ்சம் கொண்ட மனிதனுக்கு இன்பங்கள் இல்லை. சுற்றமும் சூழலும் இல்லை. தெய்வங்களும் அவனுடன் இல்லை. நஞ்சு ஒளிவிடும் விழிகள் கொண்ட பாதாளநாகங்கள் மட்டும் அவனைச்சூழ்ந்து நெளிந்துகொண்டிருக்கின்றன” என்றார். முகத்தை கைகளால் வருடி “அனைத்தையும் இழந்தேன். கற்றதையும் உற்றதையும் குலம் வழி பெற்றதையும்…” என்றார்.

“என்னுள் எழுந்த பெருவஞ்சத்தால் அனல்வேள்வி செய்து இம்மகளையும் பெற்றேன். ஆனால் ஈற்றறை வாயிலில் காத்திருந்தேன். என் மகளை கொண்டுவந்து எனக்குக் காட்டிய வயற்றாட்டி சொன்னாள் இருகால்களிலும் சங்கும் சக்கரமும் உள்ளன என்று. நான் அதைக் கேட்டு எப்பொருளையும் உள்வாங்கவில்லை. கருந்தழல் என நெளிந்த என் மகளைத்தான் நோக்கிக்கொண்டிருந்தேன். என்னிடம் அவளை நீட்டினர். கைகள் நடுங்க அவளை வாங்கி என் முகத்துடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன்.”

“என் பின்னால் நின்ற நிமித்திகர் அவளை வாங்கி கால்களை நோக்கி மெய்சிலிர்க்கக் கூவினார். இதோ பாரதவர்ஷத்திற்குச் சக்ரவர்த்தினி வந்துவிட்டாள் என்று. நான் ஒருகணம் கால் மறந்து தரையில் விழப்போனேன். என்னை கருணர் பற்றிக்கொண்டார். என்னை பீடத்தில் அமரச்செய்தனர். குளிர்கொண்டதுபோல என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சிலிர்த்து சிலிர்த்து துள்ளி அடங்கியது அப்போது ஒன்றை உணர்ந்தேன். பல்லாண்டுகாலமாக என்னுள் எரிந்துகொண்டிருந்த அனற்குவை மேல் குளிர்நீர் பெய்துவிட்டிருந்தது. ஆம், அனைத்தும் முழுமையாகவே அணைந்துவிட்டன”.

“அந்தப் பேரின்பத்தை நான் சொல்லி நீங்கள் உணரமுடியாது இளவரசே. இன்று நெஞ்சில் கைவைத்து ஒன்றை சொல்வேன். நீங்கள் எனக்கிழைத்தது பெரும் நன்மையை மட்டுமே. இல்லையேல் இவளுக்கு நான் தந்தையாகியிருக்கமாட்டேன். நான் அடைந்த வதையெல்லாம் முத்தைக் கருக்கொண்ட சிப்பியின் வலி மட்டுமே. அதற்காக இன்று மகிழ்கிறேன். எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்கிறேன். மாதவம் செய்தவர் அடையும் ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் காலத்தை கடந்துவிட்டேன். அவள் பெயருடன் என் பெயரையும் இனி இப்பாரதவர்ஷமே எண்ணிக்கொள்ளும்.”

”இத்தனை வருடம் அவளுக்குத் தந்தையென்று மட்டுமே இருந்தேன். பிறிது ஏதுமாக இல்லை. அரசனோ சோமககுலத்தவனோ அல்ல. துருபதன் கூட அல்ல. திரௌபதியின் தந்தை மட்டுமே. அவள் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலுக்கும் முத்தமிட்டு வளர்த்திருக்கிறேன். எத்தனை இரவுகளில் அவளை நெஞ்சிலேற்றி விண்மீன்களை நோக்கி நின்று கண்ணீர் வடித்திருக்கிறேன்… நான் என் மகளின் தந்தை அல்ல சேவகன். ஆம், கொல்வேல் கொற்றவை ஏறியமர்ந்த சிம்மம்.”

தன் சொற்பெருக்கை நாணியவர் போல அவர் சிரித்து மேலாடையால் கண்களை துடைத்துக்கொண்டார். பெருமூச்சுடன் “சொற்களால் எத்தனை சொன்னாலும் அங்கே செல்ல முடியவில்லை. ஆகவே அணிச்சொற்களை நாடுகிறேன்” என்று புன்னகைத்தபின் “இளவரசே, என் மகள் என்று என் கைக்கு வந்தாளோ அன்றே என் எண்ணங்கள் மாறிவிட்டன. அவள் செம்பாதங்களை தலைசூடி நான் எண்ணும் ஒரே எண்ணம்தான் இன்று என் அகம். அவள் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும். அதைவிட பிறிதொரு இலக்கு எனக்கு இல்லை” என்றார்.

“அவள் சக்ரவர்த்தினியாக ஆகவேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு அவளை மணம்புரிந்தளிக்க எண்ணினேன். உங்களால் மட்டுமே வெல்லப்படும்படியாக கிந்தூரத்தின் உள்ளே கலிங்கச் சிற்பிகளைக்கொண்டு பொறிகளை அமைத்தேன்” துருபதன் சொன்னார். “அவளை கைப்பிடிக்கப்போகிறவர் பாரதவர்ஷத்தில் மூன்று அஸ்வமேதங்களை செய்யப்போகும் மாபெரும் வில்வீரர் என்றனர் நிமித்திகர். அது நீங்கள் என்று நான் கணித்து அறிந்தேன்.”

திரும்பி தருமனை நோக்கி கைகாட்டி துருபதன் சொன்னார் “இது முற்றிலும் உங்கள் குடிக்குள் நிகழ்வது. முடிவெடுக்கவேண்டியவர் உங்கள் மூத்தவர். அவரது முடிவில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது இளவரசே.”

அர்ஜுனன் “ஆம் அரசே, அவரது படைக்கலங்களே நாங்கள்” என்றான். “இளவரசே, ஐங்குலங்களுக்கும் ஆணையிடும் வல்லமை எனக்கில்லை. ஆனால் இது அன்னையர் பூமி. திரௌபதி ஆணையிட்டால் அவர்கள் மீறமாட்டார்கள். நீங்கள் படைநடத்தலாம். திரௌபதி என் சொல்லை ஏற்பாள். ஆனால் நான் தங்கள் மூத்தவரின் ஆணையை மட்டுமே ஏற்பேன். அவரது அறச்சொல் தென்றிசை ஆளும் இறப்பிற்கரசின் சொல்லுக்கு நிகரானது” என்றார் துருபதன்.

அர்ஜுனன் தருமனை நோக்கியபடி காத்திருந்தான். தருமன் ”இளையோனே, அன்னை விழைவது ஒரு செய்தியை மட்டுமே. விதுரர் இங்கிருந்து செல்வதற்குள் அதை அனுப்பிவிட எண்ணுகிறார்” என்றான். “சத்ராவதி இன்று அஸ்தினபுரியின் துணைநாடு. அதை நாம் வென்று நம் தேவி முடிசூடுவது அஸ்தினபுரிக்கு எதிரான படைநீக்கம் மட்டுமே. அன்னை அதையே திருதராஷ்டிர மாமன்னருக்கு அறிவிக்க எண்ணுகிறார்.”

“ஆம்” என்றான் அர்ஜுனன். “அது ஒருபோதும் நிகழாது பார்த்தா. எந்நிலையிலும் நாம் எவரும் நம் பெரியதந்தைக்கு எதிராக எழப்போவதில்லை. மூதாதையருக்கு எதிராக பாண்டவரின் வில்லோ சொல்லோ எழாது.” சிலகணங்கள் அவன் நாற்களக் காய்களையே நோக்கியபடி இருந்தபின்  “தந்தையா தாயா என்ற வினா உச்சப்படும் என்றால் நான் தந்தையையே தேர்ந்தெடுப்பேன்” என்றான்.

அர்ஜுனன் சகதேவனை நினைத்துக்கொண்டான். பெருமூச்சுடன் எழுந்து “நான் இதை இளவரசியிடம் சொல்லவேண்டும் என அன்னை கோரினாள். பெண்ணிடம் அரசு சூழதலைப் பேச என் அகம் ஒப்பாது. எனவே அரசரிடமே பேசிவிடலாமென்று வந்தேன்” என்றான். “அது நன்று. நேராகச் செல்லும் அம்புதான் விசைமிக்கது” என்றான் தருமன். ”நான் சகதேவனிடம் சொல்லி அன்னைக்கு அறிவிக்கிறேன் இளையோனே” என்றபின் துருபதனிடம் நாற்களத்தைச் சுட்டி புன்னகை செய்து “உங்கள் முறை, பாஞ்சாலரே” என்றான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைஎரி எழல்
அடுத்த கட்டுரைபுராணமும் கதைகளும்- கடிதம்