விஷ்ணுபுரம் இரு புதியவர்கள்

vishnu-puram-2

அன்புள்ள ஜெ

புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் வாங்கினேன். போகும் வழியிலேயே வாசிக்க ஆரம்பித்து இப்போது முதல் காண்டத்தை கடந்துவிட்டேன். சீரியசான புத்தகம், வாசிக்கமுடியாத புத்தகம் என்றெலாம் சொல்லி ரொம்பவே பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் தொடங்கியது தெரியவில்லை. அப்படியொரு கனவு

சங்கர்ஷணன் காலையில் கண் விழித்து எழுந்து கண்டாகர்ணம் என்ற மணியைப் பார்க்கும் இடத்திலேயே நாவல் கனவுக்குள் போய்விட்டது. கீழெ தெரியும் பிரம்மாண்டமான கோயிலின் காட்சி. தெருக்கள். ரத்தச்சிவப்பான சோனா.

இனி கொஞ்சநாள் விஷ்ணுபுரத்திலேயே வாழலாம் என்று தோன்றியது

அருண் கே. ஆர்

அன்புள்ள அருண்

கடினமான புத்தகம் என ஒன்று இல்லை. யாருக்குக் கடினம் என்பதே பிரச்சினை. பொதுவாசகன் என்பவன் சராசரி அறிவுத்திறன் கொண்டவன். சராசரி மொழித்திறன் கொண்டவன் சராசரி ரசனையும் கொண்டவன் அவனுக்குத்தான் விஷ்ணுபுரம் கடினமானது

ஜெ

அன்புள்ள ஜெ,

நலமா. நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். சில வருடங்கள் உங்கள் வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசித்து கொண்டிருந்தேன்.

உங்களை ஆதர்சமாக பின்பற்றவேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறேன். வேறு ஒரு கடிதத்தில் அதை பற்றி நான் எழுதுகிறேன்.

வெகு நாட்களாக நான் விஷ்ணுபுரம் வாங்க வேண்டும் என்று எண்ணி இந்த புத்தக கண்காட்சியில் வாங்கி இப்போதுதான் முதல் அத்தியாயம் முடித்து இருக்கிறேன்.

இந்த கடிதம் எழுத காரணம், அதில் வரும் ஒரு வரி.

திருவடியிடம் மாமா தாம்பூலத்தை துப்பிவிட்டு சொல்லும் வார்த்தை.

“பிரம்மம் பிரம்மத்தில் துப்புகிறது.”

இதை படித்துவிட்டு நான் அப்படி விழுந்து விழுந்து சிரித்தேன். ஏன் என்றால் நான் வேதாத்திரி மகரிஷியின் தியான வகுப்பில் இது போன்ற பேச்சுக்களை சிலர் பேசுவதை கேட்டிருக்கிறேன்.

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. மீண்டும் மற்றொரு கடிதத்தில் சந்திப்போம்.

அன்புடன்

சிவா

அன்புள்ள சிவா

வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் நீண்ட இடைவேளைகளை விட்டுக்கொண்டு வாசிக்கக்கூடிய ஒன்றல்ல, தொடர்ச்சியான வாசிப்புதேவை. அதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜெ

விஷ்ணுபுரம் அனைத்துச்செய்திகளும் விமர்சனங்களும்

முந்தைய கட்டுரைகூந்தல்பனை- கடிதம்
அடுத்த கட்டுரைநிதிவலையின் செயல்முறை- தகவல்கள்