‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 2

எரிபுகழ் பாடி முடித்த தென்னகத்துப் பாணன் தன் யாழ் தாழ்த்தி தலை வணங்கினான். அவனுடைய மூன்று மாணவர்களும் பன்னிரு செங்கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட எரிகுளத்தில் நெய்விறகில் எழுந்தாடிய தழலை பேணிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் மரப்பலகை இருக்கைகளில் பாண்டவர்கள் நால்வரும் அமர்ந்திருந்தனர். அப்பால் மரத்தில் சாய்ந்து மார்பில் கரம்கோர்த்து பீமன் நின்றிருந்தான்.

பாணன் புலித்தோல் இருக்கைவிட்டு எழுந்து விலகியதும் அவன் துணைவி தன் நந்துனியுடன் வந்து அதில் அமர்ந்தாள். பாணன் தோளில் விரித்திட்ட நீள் குழலை சுருட்டிக் கட்டி அதன் மேல் தோல்வார் இட்டு இறுக்கியபின் மான் தோல் மேலாடையை சரிசெய்தபடி எரிமுன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். தன் மாணவன் அளித்த நெய்க்குடுவையை வாங்கி தழலுக்குள் சொரிந்தான். நீரில் கூழாங்கல் விழுந்த ஒலியுடன் தீயின் நாக்குகளில் ஒன்று எழுந்து அதை கவ்விக்கொண்டது.

விறலி நுங்கு போன்ற இறுகிய பெருமுலைகளுக்கு நடுவே வளைந்திறங்கிய கல்மாலையும் தோள்தொட தழைந்த காதுமடல்களில் துடிபோன்ற வெள்ளிக்குழைகளும் அணிந்திருந்தாள். காட்டுச்சுனையென இருள் ஒளிர்ந்த விழிகளுடன் பெருந்தொடை திரண்டு ஒசிய கால்மடித்து அமர்ந்து நந்துனியை சிறிய கம்பியால் மீட்டினாள். சுழன்று பறக்கும் தேனீக்கூட்டமென அது ரீங்கரிக்கத் தொடங்கியது. அதன் சுதியுடன் இணைந்து அவள் குரலும் பறந்து சுழன்றது. ”ஓம்” என்று விறலி பாடத்தொடங்கினாள். “என் கதை கேளீரோ! ஊரின் கதையல்ல, உலகின் கதையல்ல! மக்கள் கதையல்ல, தெய்வக்கதையல்ல. காட்டின் கதையிது. காரிருளின் கதையிது.”

வைவஸ்வத மன்வந்தரத்தில் விந்தியமலை முடிகள் சூழ்ந்து அரணமைத்த காலகவனம் என்னும் பெருங்காட்டில் வாழ்ந்திருந்தனர் அரக்கர்குலத்தைச் சேர்ந்த தங்கையும் தமக்கையும். தங்கையின்பெயர் புலோமை. தமக்கை காலகை. மூத்தவள் கரும்பாறை நிறத்தவள். இளையவள் அப்பாறையை எதிரொளிக்கும் கருஞ்சுனை போன்றவள். காலகை குளிர்ந்தவள். சொல் மேல் சொல் அமர்ந்து சொல்லடங்கிச் சுருங்கி அமைந்தவள். புலோமை அனல் நிறைந்தவள். சொல்கலைந்து சொல் எழுந்த சுழல் கொண்டவள்.

காலகை மலையுச்சியில் நின்றிருக்கும் கனிமரம். மண்குவளையில் அள்ளிவைத்த தெளிநீர். அசைவறியாச் சொல். சொல்லுக்கு அப்பால் செல்லாத அகம். புலோமை புதர்மறைவுகளும் குகைவழிகளும் பின்னிச்செல்லும் நூறாயிரம் சிற்றடிப்பாதைகளும் கொண்ட காடு. பித்தெழுந்த அக்கரம் முளைத்த சதுப்பு. உயிர் கனலும் சொல். சொல் உடைந்து சொல் முளைக்கும் சித்தம்.

இருவரும் பிரம்மவனத்தில் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்து ஆயிரமாண்டுகாலம் தவமியற்றினர். உடல் மட்கி உதிர்ந்தது. உளம் மடிந்து வழிந்தது. சித்தமும் சித்தத்தைக் கடந்த ஆணவமும் புகையென விலகின. தெளிந்த வெளித்திரையில் பிரம்மன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ‘நிறைவு’ என இருவரும் விடை சொன்னார்கள். காலகையிடம் ‘குளிர்ந்தவளே, உன்னில் நீ நிறைக’ என்றார் பிரம்மன். புலோமையிடம் ‘எரிபவளே, உன்னில் இப்புவி நிறைக’ என்றார்.

மலையுச்சியில் ஏறிச்சென்ற காலகை அங்கே கரியதோர் பாறையாக மாறி அமர்ந்து காலத்தைக் கடந்தாள். இளையவள் புலோமை காடிறங்கி ஊர்வந்தாள். ஐந்து கணவர்களை மணந்து ஐந்தாயிரம் மைந்தர்களை அவள் பெற்றாள். அவள் குடிகள் வாழும் நகரம் புலோமபுரி எனப்பட்டது. அங்கே வாழ்ந்தவர்கள் புலோம குடியினர். அவர்களின் காமகுரோதமோகங்களின் அலகிலா விளையாட்டை நோக்கியபடி நகர்நடுவே எரியும் விழிகளுடன் புலோமையன்னை அமர்ந்திருந்தாள். தன் புதல்வியரில் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை பிறந்து இவ்வுலகை முடிவிலாது உண்டாள்.

புலோம நகரில் பிறந்தாள் கன்னிப் புலோமை ஒருத்தி. காராமணி போல, காட்டெருமை விழி போல ஒளிரும் கரிய அழகுடையவள். கனல் நிறைந்தவள். கனவுகளால் விளையாடப்பட்டவள். கற்றறிந்தவள். கனிந்தவள். தலைமுறைக்கு ஒரு புலோமையில் எழும் அன்னைப்புலோமை அவளை கன்னிப்பருவத்தில் குடிசூழ பலிதொழ வந்தபோது கண்டாள். அவள் கண்வழியாக உள்ளே குடியேறினாள். மயங்கி விழுந்து கண்விழித்து நோக்கிய புலோமை ”விடாய்” என முதல்சொல்லை சொன்னாள்.

புலோமபுரியின் இளம் புலோமை மண் நிறைக்கும் விதையின் கனல் கொண்டிருந்தாள். காரிருளிலும் மின்மினி என ஒளிவிட்டாள். நீராடி நீராடித் தீராதது அவள் உடல்வெம்மை. அவள் இரவுறங்கிய பாய் கருகியிருந்தது. அவள் உடலில் சுரந்த வியர்வைத்துளிகள் எரிந்தபடி மண்ணில் விழுந்து புகைவிட்டன. ஆனால் அவள் சூடிய மலர்களோ நீரிலெழுந்தவை என ஒளிவிட்டு வாடாமலிருந்தன.

அவள் உடலில் மலர்ந்த வாடாமலர்களைக் கண்டு பித்தானான் புலோமன் ஒருவன். அவள் நிழலென எங்கும் உடன்சென்றான். அவள் காலடி பட்ட மண்ணெல்லாம் தன் உள்ளமே என்று உணர்ந்தான். அவள் நிழல் விழுந்த சுனைகளில் நீந்தித்திளைத்தான். தன் நெஞ்சத்தின் ஆழத்தில் அவள் நிழல்சித்திரம் அசைவற்று நிற்கக் கண்டான்.

தொட்டதையெல்லாம் உண்டு எரிவது தழல். நின்றெரியும் பீடத்திலிருந்து நாற்றிசையும் கைநீட்டி தவித்தாடுவது. தழல் அறியும் பொருளெல்லாம் தழலைக் கொண்டுசெல்லும் புரவிகள் மட்டுமே. வெல்க என்று விண் விடுத்த ஆணையே தழல். செல்க என எழும் விழைவே தழல். தழல்வதெனும் நிகழ்வே அது.

தன்னருகே வந்த புலோமனை புலோமையின் கைகள் நீண்டு தழுவிக்கொண்டன. அத்தொடுகையில் வெந்து உருகி அவனும் அனலானான். எரிமயக்கில் தழைந்தாடி கனலெரிந்த உதடுகளால் ‘என் இருப்பும் மறைவும் எஞ்சுவதும் உனக்குரியவை’ என்று அவன் சொன்னான். அவ்வுதடுகளை கவ்விச் சுவைத்துண்டு ‘இன்னமும் வேண்டும் எனக்கு’ என்றாள் அவள். காட்டின் நடுவே எரியெழுப்பி அதை சான்றாக்கி அவள் அவன் கைப்பிடித்தாள். அவனுள் உறைந்த அனைத்தையும் எரிகொழுந்தாக எழச்செய்தாள்.

அவளுடனான காமம் அவனை அழித்தது. அவன் தசைகள் உருகி வழிந்து வெள்ளெலும்புகள் வெளித்தெரிந்தன. ஒவ்வொரு கணமும் உடலென உள்ளமென உள்ளாழமென கொண்ட அனைத்தும் எரியும் பெருவலியின் பேரின்பத்தில் அவன் திளைத்தான். அவன் அழிந்துகொண்டிருப்பதை அவன் குலமும் சுற்றமும் அறிந்தனர். அவன் சித்தமும் அதையறிந்தது. விலகு விலகு என அத்தனை குரல்களும் அஞ்சிப்பதைத்துக் கூவின. அவன் அகமோ இன்னும் இன்னும் என அவளருகே நெருங்க எழுந்தது. இளையோரே, சிற்றுயிர்களுக்கு சுடரே பிரம்மம்.

‘என்னை இக்காட்டுநகருக்கு அப்பால் கொண்டு செல்க!’ என்று அவள் சொன்னாள். ‘எங்கே?’ என்று அவன் கேட்டான். ‘அப்பால்… எல்லை என நான் காணும் எதற்கும் அப்பால்’ என்று அவள் கைநீட்டினாள். அவளை தன் தோளிலேற்றி புலோமன் காடுகளுக்கு மேல் பறந்தான். மலைகளை வளைத்து மக்கள் வாழும் பெருநகர்களை அடைந்தான். தொடுவான் எல்லையிட்ட மண் விரிவை அவள் முழுமையாகக் கண்டாள்.

அப்போது கங்கையின் கரையில் ஒரு செவ்விண்மீன் என நின்று அந்தியின் நீர்ச்செயல் செய்த பிருகு முனிவரை அவள் கண்டாள். கங்கையில் நீராட விழைவதாகவும் தன்னை இறக்கி விடும்படியும் அவள் அவனிடம் சொன்னாள். அவன் அவளை நீர்க்கரையில் இறக்கியபோது அப்பால் சென்று தனக்கு காவலிருக்கும்படி அவள் ஆணையிட்டாள். காட்டுமரம் ஒன்றின் கீழ் புலோமன் விழிகள் திருப்பி அமர்ந்ததும் நீர் வழியே மூழ்கி பிருகுமுனிவரின் முன்னால் நிறையுடலுடன் எழுந்தாள். கரிய தழலென நின்றசைந்தாள்.

பிரம்மனின் வேட்கையின் துளி எனப்பிறந்தவர் பிருகு. பிரம்மவேள்வியில் எரிகுளத்தில் பேரெழிலுடன் நின்றாடிய தழலின் வளைவுகளின் மென்மையில் பெண்ணெழிலைக் கண்டு பிரம்மனில் காமம் எழுந்தது. அவ்விழைவே செவ்வனலை ஒரு பெண்ணாக்கியது. படைப்பவனை அவி நிறைந்த கலமாக்கியது.

அவர்களின் காதலில் பிறந்த மைந்தனை கையிலெடுத்த பிரம்மன் வெம்மைதாளாமல் விட்டுவிட்டார். எரிவிண்மீன் என அக்குழந்தை கடலில் விழுந்தது. வருணனின் துணைவி சார்ஷணி அதை எடுத்து தன் நெஞ்சோடணைத்துக்கொண்டாள். அவள் கருணை முலைப்பாலாகியது. குழவி சற்றே குளிர்ந்து செவ்வைரமென ஒளிவிட்டது.

எரிவிண்மீனின் வெம்மை கொண்டிருந்த மைந்தனை அன்னையின் கரங்களன்றி எவரும் தொடமுடியவில்லை. அவன் சென்ற பாதையில் பசுமை கருகி தடமாயிற்று. அவன் அமர்ந்திருந்த பாறை உருகி குழிந்தது. அவன் தொட்டநீர்நிலைகள் கொப்பளித்துக் கொதித்தன. அவன் மீது விழுந்த மழை புகைமுகிலாக எழுந்தது. அவன் ஓதியபோது வேதம் பொன்னொளிமிக்க அலைகளாக கண்களுக்குத் தெரிந்தது.

எந்தப்பெண்ணும் அணுகமுடியாத இளைஞனாகிய பிருகுவைக் கண்டு சார்ஷணி வருந்தினாள். ‘உனக்குரிய துணைவியைத் தேடி அடைக மைந்தா. அவள் கருவில் எழும் உனது மைந்தனால்தான் நீ விண்ணவருலகில் நுழைய முடியும்’ என்றாள். அன்னையின் ஆணையை ஏற்று பிருகு மேல் கீழென விரிந்த பதினான்கு உலகங்களிலும் துணை தேடி அலைந்தார். அவர் விழிபட்டதுமே தேவகன்னியர் பொன்னிறப் புகையாக மாறி மறைந்தனர். அவரைக் கண்டதுமே கந்தர்வப்பெண்கள் நிழலுருக்களாயினர். அவர் நிழலைக் கண்டதுமே மானுடப்பெண்கள் எலும்புக்குவைகளாக மாறினர்.

தன் முன் எழுந்து வந்த புலோமையைக் கண்டு பிருகு வேதச் சொல்மறந்து வேட்கையை அறிந்தார். அவ்வேட்கையே சினமாக மாற திரும்பிக்கொண்டு ‘விலகு அரக்கியே. என் விழிதொட்ட எவரும் எரிந்தழிவர்’ என்றார். அவள் இதழ்குவிய நகைத்து ‘நான் எரிந்துகொண்டிருக்கிறேன் அழகனே’ என்றாள். மலர் விரியும் முதல் மணத்தை அவர் அறிந்தார். எரிமலரின் மணம் கந்தகச்சாயல் கொண்டிருந்தது. அவளை திரும்பி நோக்கியபோது அவர் நெஞ்சு அதிர்ந்தது. ’இவள் இவள் இவள்’ என தன் அகச்சொல் ஒலிப்பதை கேட்டார்.

ஆயினும் ஆணெனும் ஆணவம் முந்த குனிந்து கங்கையின் நீரை அள்ளி அனலெழும் வேதமந்திரம் சொல்லி அவள் மேல் வீசி ‘எரிந்தழிக!’ என்றார். அந்நீர்மணிகள் அவளுடைய கரிய உடலில் நீலமலரில் பனித்துளிகளென வழிவதைக் கண்டார். வெண்பல் ஒளிர நகைப்பொலி எழுப்பி அவள் அருகே வந்தாள். ‘இக்கங்கையையே அள்ளிச் சொரிந்தாலும் இத்தழல் அணையாது இளையவரே’ என்றாள். ‘அனலை அனலே அணைக்கமுடியும் என அறியாதவரா நீர்?’

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அனலாளும் அறிவனாகிய பிருகு முதல்முறையாக அச்சத்தை அறிந்தார். பின்னடைந்து ‘நில். அணுகாதே. நான் பிரம்மனின் மைந்தன். வருணனின் அறப்புதல்வன். தேவர்குலப்பெண்களும் கந்தர்வகன்னியரும் எண்ணமுடியாத என்னை அரக்கர்குலத்துப் பிறந்த நீ அணுகலாகாது’ என்றார். ‘அவர்கள் உங்கள் தவத்தைக் கண்டனர். நான் உங்கள் வேட்கையை மட்டுமே காண்பவள்’ என்றாள் புலோமை.

‘சீ, கல்லாக்களிமகளே, இது அறநெருப்பு. அறிவின் அனல்’ என்றார் பிருகு. காமம் ஒளிவிட்ட விழிகளுடன் ‘அறமும் அறிவும் அமைந்திருக்கும் பீடமென்ன என்று நான் அறிவேன். அது ஒன்றையே நான் விழைகிறேன்’ என்றாள் அவள். அஞ்சி வலக்கை நீட்டி இடக்கையால் முகம் மறைத்து பிருகு கூவினார் ‘உன் மாயத்தால் என்னை வெல்கிறாய். நீ சொல்வதெல்லாம் பொய்.’

சிரித்தபடி அவள் அருகே நின்றிருந்த குவளைமலர் ஒன்றைக் கொய்து காதருகே குழலில் சூடியபின் ‘அவ்வண்ணமெனில் இம்மலரில் ஓர் இதழையேனும் கருக்குக. முடிந்தால் நீர் சொல்வதெல்லாம் உண்மையென ஏற்கிறேன்’ என்றாள். அனல்குடிகொண்ட வலக்கையை நீட்டி மும்முறை வேதமோதியும் மலரிலிருந்த நீர்த்துளிகூட வற்றவில்லை என்பதை பிருகு கண்டார். இடக்கையால் அவளை வாழ்த்தி ‘ஆம், நான் தோற்றேன்’ என்றார்.

அவள் அவர் அருகே வந்து அவரது விரிந்த பொன்னிறத் தோள்களை தன் கரிய தாமரைக்கொடி போன்ற கரங்களால் வளைத்துக்கொண்டு ‘தோற்பதில் வெல்வதே காமம் வலியோனே’ என்றாள். ‘நான் தூய்மையிழந்தேன்’ என்றார் பிருகு. ‘தவத்தோனே, தூய்மையை இழந்து கனிதலைப் பெறுவதே காமம்’ என்றாள். துயருற்று ‘நான் அழிந்தேன்’ என்றார். ‘அழிவதன் மூலம் உயிர்ப்பதே காமம் செந்நிறத்தவனே’ என்று அவள் சொன்னாள்.

நிலவை முகிலென குழல் அவர் முகத்தை மூடியது. அவரது நடுங்கும் இதழ்களை தன் இதழ்களால் பெற்றுக்கொண்டாள். சினந்தெழுந்து கோட்டைவாயிலை முட்டும் களிறுகளாயின அவள் கருமுலைகள். அவள் இடை அவர் இடையை அறிந்தது. கால்கள் மரத்தை கொடியென சுற்றிக்கொண்டன. கரியிலெழுந்த எரி என அவள் உடல்மேல் அவர் உடல் அமைந்தது. இருளை அறியும் ஒளி என அவர் அவளது முடிவின்மையை அறிந்தார்.

தழலும் தழலும் என அவர்கள் தழுவியாடினர். அவளை தன் உடலில் எழுந்த தழல்சிறகாகக் கொண்டு அவர் விண்ணில் பறந்து தென்னகம் சென்றார். ஏழு பெருநிலங்களில் அவர்கள் காமத்திலாடினர். தீயை உண்ணுமா தீ? இளையோரே, அரசநாகம் பிற நாகங்களை உண்ணவில்லையா என்ன?

அணையா எரித்துளி என தன்னுள் மைந்தன் ஒருவனை புலோமை பெற்றுக்கொண்டாள். தனித்து கண்மூடிக்கிடக்கும்போது காட்டுத்தீயென ஒன்று நூறாகிப் பெருகி வென்று மேற்செல்லும் தன் மைந்தனை அவள் கனவில் கண்டாள். அவன் உடல் தழல்நிறத்தில் இருந்தது. கூந்தல் கரிப்புகை என நீண்டு பறந்தது. அவன் விரல்நுனிகள் வைரங்களாக ஒளிவிட்டன. தன்னுள் முளைத்த அனல் காலக்கரைகளைக் கடந்து நிலைக்காமல் பெருகி ஓடும் என்று அறிந்தாள்.

அவள் கருவயிற்றில் செவி வைத்து கேட்டு பிருகு சொன்னார் ‘அவன் சொல்லும் வேத மந்திரத்தை கேட்கிறேன். அக்னிதேவனுக்கு அவியளிக்கிறான்.’ அவள் மெல்லச் சரிந்து பருத்த பெருமுலைகள் ஒன்றன் மேல் ஒன்று அமைய படுத்து புன்னகைத்து ‘எப்போதும் அசைந்துகொண்டிருக்கிறான். அவனை சியவனன் என அழைக்கிறேன்’ என்றாள். ‘இனி இப்புவி உள்ளளவும் ஒருபோதும் அனல் தனித்தெரியாது. அதை என்றும் பேணும் ஒரு எரிகுலம் இங்கு என்னிலிருந்து பிறக்கிறது. என்றும் அழியாதது. அனைத்தையும் வெல்வது.’

விழிகனிந்து அவர் அந்த ஒளிமிக்க வயிற்றில் தன் முகத்தை வைத்தார். அவர் தலையை வருடி அவள் சொன்னாள் ‘நான் கொண்டவற்றை எல்லாம் பெருக்கி இதோ திருப்பியளிக்கிறேன்.’ பிருகு குரல் நெகிழ்ந்து அவள் உந்திக்குழியைத் தொட்டு வாழ்த்தினார் ‘சியவனனே, நீ வளர்க! உன் குருதி பிருகு குலமென்று அறியப்படுவதாக! பார்க்கவர்கள் இப்பாரதவர்ஷத்தை பதினெட்டு முறை வென்று சூழ்வார்கள். அவர்களின் விதைகள் இந்நிலத்தில் என்றும் முளைத்தெழுந்துகொண்டிருக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!’

விடியற்காலையில் அவள் தன் கருவில் உறைந்த கனலை கனவுகண்டு துயின்று கொண்டிருக்கையில் புலரியின் நீரளிப்புக்காக எழுந்த பிருகு எரிகுளம் அமைத்து அதை தன் சுட்டுவிரலால் தொட்டு நெருப்பை வரவழைத்தார். ‘அக்னிதேவனே, இங்கே அணையாது திகழ்க! என் துணைவிக்கு நீ காப்பாகுக!’ என்றபின் வெளியேறினார்.

புலோமையின் அருகே நின்றெரிந்த அக்னிதேவன் கைநீட்டி அவள் ஆடையைத் தொட்டார். எரிசுட அவள் திகைத்து எழுந்தபோது நாகமெனச் சீறி ‘உன் நெஞ்சுக்கும் நானே காப்பு. இக்கனவில் நீ சென்ற தொலைவுகளை நான் ஒப்பமுடியாது’ என்றார். புலோமை சினந்து ‘கைகொண்டதை உண்பதும் கைநீட்டித் தாவுவதுமே எரியின் அறம். பெண்ணின் அகத்தைத் தொட எவருக்கும் நெறியில்லை’ என்றாள். ‘ஏழு உலகங்களிலும் கன்னியருக்கும் குலமகள்களுக்கும் கற்பின் காவல் நானே’ என்றார் அக்னி.

சினந்து ‘நான் அரக்கி. என் கற்பு என் கருப்பையில் வாழ்கிறது. நான் கட்டற்றவள்’ என்று புலோமை சொன்னாள். ‘தவமுனிவனாகிய உன் கணவனும் உனக்கொரு பொருட்டு அல்லவா? அவன் அளித்த குடியறத்துக்கும் நீ கட்டுப்பட்டவள் அல்லவா?’ புலோமை சிரித்து ‘நீ பெண்ணின் விழிகளை மட்டுமே அறிந்திருக்கிறாய். அவள் கருப்பையை அறிந்திருந்தால் இதை கேட்டிருக்க மாட்டாய்’ என்றாள். ‘இப்புவியை உண்டு நிறைக என்ற ஆணையைக் கொண்டு இங்கு வந்தவள் நான். அதுவன்றி பிறிதல்ல என் அகம்.’

அக்னி சினந்து எழுந்து கூரை தொட தழல்கூத்தாடி ‘அவ்வண்ணமெனில் உன் கணவன் மீண்டு வரட்டும். அவனிடமே இந்நெறியின் அறமென்ன என்று கேட்கிறேன்’ என்றார். புன்னகையுடன் திரும்பிப்படுத்து கண்மூடி மீண்டும் தன் கனவுகளில் திளைக்கத் தொடங்கினாள் புலோமை.

அக்கனவில் அவள் புலோமனைக் கண்டாள். ‘தேவ, நான் இங்குள்ளேன்’ என்றாள். கங்கைக்கரையில் ஒரு கருங்கால் வேங்கை மரமாக மாறி அவளைக் காத்து நின்றிருந்த புலோமன் பேருருக் கொண்டான். இரு கைகளையும் காற்றில் வீசி இடியோசை எழுப்பி எழுந்து பறந்து அவள் துயின்ற குடிலுக்குள் நுழைந்தான்.

எரிகதிர் கை நீட்டி அவனைத் தடுத்தார் அக்னி. ‘அரக்கனே, என்னை காவலாக்கிச் சென்ற முனிவரின் சொல் கொண்டு ஆணை. இவளுக்கு நான் காப்பு’ என்றார். திகைத்து நின்ற புலோமன் புலோமையிடம் ‘இளையோளே, நீ சிறைவைக்கப்பட்டிருக்கிறாயா?’ என்று கூவினான். ‘நீ முன்னர் என்னை அனல் எழுப்பி சான்றாக்கி கரம்பற்றியவன். அச்சிறையில் இருந்து மீண்டு இங்கே கருவின் சிறையில் இருக்கிறேன்’ என்றாள் அவள்.

சினத்துடன் திரும்பிய புலோமன் ‘அக்னியே, மாறா நெறியே நீ என்கின்றன வேதங்கள். அது உண்மையென்றால் சொல். நான் இவளை உன்னைச் சான்றாக்கி மணந்தேன். இம்முனிவர் இவளை புனல்கரையில் அடைந்தார். எங்களில் எவருக்குரியவள் இவள்?’ என்றான். திகைத்து தழலடங்கி கனன்று ஓசையிட்டது நெருப்பு. ‘சொல்க, இருவரில் எவருக்கு இவள் அறத்துணைவி?’

அச்சுறுத்தப்பட்ட நாகம்போல சுருண்டு மெல்லச்சீறி பின் மெல்ல தலை தூக்கி நாபறக்க வளைந்தாடியது நெருப்பு. ‘சொல்… நெறிமீறி நீ சொன்னால் இக்கணமே நான் செல்கிறேன்’ என்றான் புலோமன். ‘எரி சான்றுடன் மணந்தவன் நீயே. உனக்கே இவள் மனைவி. நீ அறியாது இவளைக் கொண்டமையால் பிருகு கொண்டது முறைமணம் அல்ல’ என்றார் அக்னிதேவன். ‘அவ்வண்ணமெனில் விலகுக’ என ஆணையிட்டு புலோமன் கைநீட்ட எரிகுளத்து நெருப்பு அணைந்து புகையாகியது.

புலோமையை அவள் படுத்திருந்த பீடத்துடன் அகழ்ந்து எடுத்து தன் தோளில் தூக்கிக்கொண்டு புலோமன் வெளியே வந்தான். ‘நீ எனக்குரியவள்… ஒருபோதும் பிறர் தொட ஒப்பேன்’ என்று நகைத்தபடி விண்ணிலெழ முயன்றான். அவள் கருவிலிருந்த குழவியின் எடையால் அவன் தோள்கள் தெறித்தன. நூறுமுறை கால்களை உதைத்து எழுந்தும் அவனால் எழமுடியவில்லை. தன் குலமூதாதையரை முழுக்க எண்ணி அவன் உதைத்தெழுந்ததும் அவளுக்குள் இருந்து குழந்தை நழுவி பேரொலியுடன் மண்ணில் விழுந்தது. அது விழுந்த இடத்திலிருந்த புல்பொசுங்கி புகை எழுந்தது.

அஞ்சி திரும்பி நோக்கிய புலோமனைக்கண்டு புலோமை நகைத்தாள். அவன் அவளை அப்படியே விட்டுவிட்டு தாவி முகில்களில் ஏறி பறந்து மறைந்தான். கையில் குருதிசொட்டும் மைந்தனுடன் புலோமை அழுதுகொண்டு வாயிலில் நின்றிருக்க நீராடி வந்த பிருகு என்ன நிகழ்ந்தது என்று கேட்டார். ‘புலோமன் என்னும் அரக்கன் என்னை கவர்ந்துசெல்ல முயன்றான். இம்மைந்தனின் எடையால் அவனால் என்னை தூக்கமுடியவில்லை’ என்றாள் புலோமை.

கடுஞ்சினம் கொண்டு குடிலுக்குள் ஓடிய பிருகு ‘எழுக நெருப்பே! சொல்க, நான் உன்னை காவலாக்கிவிட்டுச் சென்றேன். கடமை மறந்தது ஏன்?’ என்று கூவினார். ஒளிச்சுடராக கைகூப்பி எழுந்த அக்னிதேவன் ‘என் பிழை பொறுத்தருள்க முனிவரே. அனல்சான்றுடன் அவளை மணந்தவன் அவ்வரக்கன் என்பதனால் என் நெறி என்னை காவலில் இருந்து விலக்கியது’ என்றார்.

சினத்தில் எரிந்து எழுந்த பிருகு ‘மாறா நெறியென்பது மூடத்தனமாகவே விளையும் என்றறியாதவனா நீ. பகுத்தறியும் சிந்தையிலேயே நெறி திகழவேண்டும். நன்று தீது அறியாது மயங்கிய நீ இன்றுமுதல் அனைத்தையும் உண்பவனாக ஆவாய்!’ என்றார். பதறியழுதபடி ‘முனிவரே, சொல் பொறுங்கள்’ என்று அக்னிதேவன் மன்றாடினார். ‘செல்க, பூவும் புழுவும் மணியும் மலமும் இனி உனக்கு ஒன்றென்றே ஆகுக!’ என்று அவர் திரும்பிக்கொண்டார். துயரால் கருமைகொண்டு புகைந்து மறையும் முன் அக்னிதேவன் புலோமையின் இதழ்களில் இருந்த சிறுநகையை கண்டார்.

மண்ணெலாம் பரவி மலினங்களை எல்லாம் உண்டு மாசடைந்தார் அக்னிதேவன். இழிமணம் நிறைந்து ஒளிமங்கி எடைமிகுந்து மண்ணில் பாம்பு போல் இழைந்தார். கழிவுநீரோடைகள் போல நெருப்பு ஓடக்கண்டனர் மானுடர். சிறுவர் அதை அள்ளி வீசி விளையாடினர். இளையோர் மிதித்து பந்தாடினர். நீராடியபின் தலைதுவட்டவும் இல்லத்தைக் கழுவியபின் துடைக்கவும் நெருப்பை பயன்படுத்தினர். நெருப்பிலிறங்கி நீந்தி விளையாடின சிற்றுயிர்கள்.

அக்னி என்பது இளிவரல் சொல்லாக ஆகியது அவர்களிடம். உலகின் அனைத்துக் கழிவுகளையும் அதில்கொண்டு கொட்டினர். மாசு மிகுந்து அக்னி சிறுத்தது. அதிலெழுந்த இழிமணத்தால் அதை பூசைகளிலிருந்து விலக்கினர். வேள்விகளில் வேதம் கேட்கும் தகுதியற்றது என்றனர். அக்னி அமர்ந்த தென்கிழக்குத் திசை அமங்கலமானது என்றனர். அங்கே வாயில்களோ சாளரங்களோ இல்லாமல் வீடுகளை கட்டிக்கொண்டனர்.

கண்ணீருடன் பிரம்மனை எண்ணி தவமிருந்தார் அக்னி. ஆயிரமாண்டுகாலத் தவம் முதிர்ந்து படைப்போன் எழுந்ததும் பாதங்களை பற்றிக்கொண்டு கண்ணீருடன் கேட்டார் ‘எந்தையே, சொல்க! நான் செய்த பிழை என்ன?’ பிரம்மன் புன்னகைத்து ‘பெண்மையின் மாயத்தை ஒருபோதும் அறைகூவலாகாது மைந்தா. அது தாய்மையின் பேராற்றலின் பிறிதுவடிவம்’ என்றார்.

‘என்னசெய்வேன் தந்தையே. என் இழிநிலையை அகற்றுக’ என்று அக்னி அழுதார். ‘முனிவரின் தீச்சொல் அழியாது. ஆனால் பிறிதொரு நற்சொல்லை நான் அளிக்கமுடியும். இனி நீ உண்பவை அனைத்தும் உண்ணும் கணத்திலேயே தூய்மையடையும். உன் தூய்மை ஒருபோதும் குன்றாது’ என்றார் பிரம்மன். மகிழ்ந்து வணங்கி அக்னி மீண்டார்.

சியவனன், பூதன், வஜ்ரசீர்ஷன், சுக்ரன், ஸவனன், சூசி எனும் ஆறு மைந்தருடன் அனலிருக்கையில் அமர்ந்திருந்த பேரன்னையை வந்து பாதம் பணிந்தார் அக்னி. ‘அன்னையே, உன் ஆழத்தை அளவிடும் அகம் எனக்கில்லை என்றறிந்தேன். என்னை பொறுத்தருள்க’ என்றார். அன்னை மகிழ்ந்து ‘ஒளிகுன்றாது வாழ்க. என் இளையமகள் சூசியை நீ கொள்க. இப்புவியை நீ தூய்மை செய்கையில் உன் கைகளாகவும் நாவாகவும் அவள் அமைவாள்’ என்றாள். மகற்கொடை பெற்று அக்னி மீண்டார்.

உண்பனவற்றை எல்லாம் தூய்மையாக்கும் தூயவனை வணங்குங்கள். அவன் இப்புவியெனும் குட்டியை பேரன்புடன் நக்கித் துவட்டும் பிரம்மமெனும் பசுவின் நாக்கு. பேரன்னையாகிய புலோமையை வாழ்த்துங்கள். அவள் பெற்ற மகளை போற்றுங்கள். இப்புவியில் என்றுமிருக்க விழையுங்கள். ஓம்!ஓம்!ஓம்!

கண்மூடி சிலகணங்கள் அமர்ந்திருந்த விறலியின் உடலில் ஓர் அலையென அசைவொன்று எழுந்து சென்றது. அவள் கரிய திரள்முலைகள் அசைந்தமைந்தன. விழிதிறந்து கூடியிருந்தவர்களை நோக்கியபின் அவள் கைகூப்பி எழுந்துகொண்டாள். பீமன் அசைந்த ஒலிகேட்டு தருமன் திரும்பி நோக்கினான். அவன் இருளில் விலகிச் செல்வது தெரிந்தது. பெருமூச்சுடன் அவன் மார்பில் கரங்களைக் கட்டியபடி பீடத்தில் தலைகுனிந்து அமர்ந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1
அடுத்த கட்டுரைஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்