அங்காடி தெரு,கடிதங்கள் 3

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
                                            நான் தமிழகத்தின் கடைகோடி(கன்னியாகுமரி ) மாவட்டத்தில் வாழ்பவன். நேற்று “அங்காடித்தெரு ” படம் பார்த்தேன். படத்தின் மொழி பயன்பாடு (திருநெல்வேலி தமிழ் ) என்னை மிகவும் ஒன்ற செய்துவிட்டது. மிகவும் அருமையான  ஒரு திரைப்படம். தமிழ் திரையுலகம் இன்னும் உயிருடன் உள்ளதை மீண்டும் ஊர்ஜிதம் செய்த ஒரு படம். வசந்தபாலனின் உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. தங்களின் வசனங்கள் மிகக் கூர்மையாய் காட்சிக்குப் பொருத்தமானதாய் இருந்தது. நகைச்சுவை சொல்லவே தேவையில்லை. கின்டி கிழங்கு எடுத்துவிட்டீர்கள். 

 இந்த படம் வருடக் கணக்கில் அடைகாக்கப்பட்டு தாமதமாய் வெளியே வந்தாலும் “தங்ககுஞ்சாய்” வெளியே வந்துள்ளது. இந்த “தாமத” சாபக்கேடு வேறு  நல்ல படங்களுக்கும் வரகூடாது என்று பிராத்திக்கிறேன்.  மிகவும் நம்பிக்கையை ஊட்டிய ஒரு திரைப்படம். வசந்தபாலனின் அடுத்த படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருகிறேன் !! :)

பி கு :- அந்த ஊனமுற்றவரின் மனைவி அந்த குழந்தைப் பற்றி கூறும் காட்சி . நிஜமாகவே எனக்கு மயிர்கூச்சரிந்தன.  எப்படி இவ்வாறெல்லாம்  காட்சி யோசிக்கிறார்கள். மிகவும் அருமை. திரைஅரங்கில் கைதட்டு வெடித்தது.

நன்றி,
பிரவின் சி

அன்புள்ள ஜெ

அங்காடி தெரு படத்தை பார்த்து மகிழ்ந்து எழுதவில்லை. வருந்தி எழுதுகிறேன். ஒரு படம் படத்திலேயே முடிந்துபோனால் அது ஒரு விஷயம். ஆனால் இந்தப்படம் நம்மோடு வீட்டுக்கே வருகிறது. ராத்திரி தூங்குவதற்காக படுத்தால் பக்கத்திலேயே உக்காந்திருக்கிறது. மிகுந்த தொந்தரவுசெய்துவிட்டது ஜெ. எதுக்காக இந்த அளவுக்கு மனசை இது பாதிக்கிறது என்று நினைத்து பார்த்தேன். என்ன காரணம் என்றால் இன்றைக்குள்ள முக்கியமான ஒரு பிரச்சினையினை இந்தப்படம் காட்டுகிறது. அதாவது இப்போது தொழில்கள் வேகமாக வளர்கின்றன. பெரிய பெரிய கம்பெனிகள் வியாபாரத்துக்கு வந்துவிட்டன. கோடிக்கணக்கிலே வியாபாரம் ஆகிறது. சென்னையை சுத்தி முப்பது கார் கம்பெனிகள் இருக்கின்றன.

ஆனால் இதற்கு சமமாக மக்களுக்கு வளர்ச்சி இருக்கிறதா என்றால் கிடையாது. சென்னையிலே வாடகை கண்ணுக்கு எட்டாமல் போயிருக்கிறது. சம்பளத்திலே பாதியை கொடுத்தால்கூட இரண்டுரூம் வீடு கிடைக்காது. இது படித்தவர்களின் கதி. படிக்காதவர்களுக்கு அடிமைவேலைதான். கோயம்புத்தூரிலே இந்த கடைவேலையை விட பத்துமடங்கு கஷ்டப்படுகிறார்கள் பெண்கள். சுமங்கலி திட்டம் என்று ஒரு திட்டம். என்ன என்றால் பெண்கள் ஏழெட்டு வருஷம் இரவுபகல் பாராமல் வேலைசெய்தால் பத்துபவுனும் பட்டுப்புடவையும் கொடுப்பார்கள்.  ஆரம்பத்தில் ஒரு தொகை உண்டு. இந்தப்பணத்தை வட்டியுடன் கணக்குபோட்டல இது பெரிய மோசடி என்று தெரியும்.

ஆனாலும் சனங்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். என்ன காரணம் என்றால் இன்றைக்கு கிராமங்களிலே வேலை கிடையாது. விவசாயம் இல்லை. கொஞ்சம் படித்தால் எங்கே போவது என்று தெரியாது. இப்படி தமிழ் ஜனங்கள் எங்கேயெல்லாம் கிடக்கிறார்கள். எல்லாவற்றையும் சிந்திக்க வைத்துவிடுகிறது இந்தச் சினிமா. இப்படியே நம்முடைய நாடு வளர்ந்திகொண்டே போனால் பஞ்சப்பராரிகள் ஒருபக்கம் கோடீஸ¤வரர்கள் ஒருபக்கம் என்றுதான் இருப்பார்கள். அசுர வேகத்திலே போகக்கூடிய நம்முடைய நாட்டைப் பார்த்து போகிற திசை சரிதானா பார் என்று சொல்லுவதைப்போல இருக்கிறது அங்காடி தெரு. நான் உட்பட நம்முடைய இடதுசாரிகள் எல்லாம் பார்த்தாகவேண்டிய படம். செய்யவேண்டிய வேலை எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள உதவக்கூடிய படம்.

வசந்தபாலனுக்கும் உங்களுக்கும் நன்றி.

சரவணன் ,கோவை

அன்புள்ள ஜெயமோகன் அண்ணனுக்கு ,
                                           வணக்கம். நேற்று மற்றும் அதற்கு முந்தயநாள் இரவுக்காட்சி என “அங்காடி தெரு ” படத்தினை  இரண்டுமுறை பார்த்தாகிவிட்டது .  கடந்த  நான்கு மாதத்துக்கு பிறகு நான் பார்த்த தமிழ் படம் இது . நான் உங்களை எனக்கு மிகவும் நெருக்கமானவராக பலமுறை உணர்ந்திருக்கிறேன்.அந்த ஈர்போடுதான் நான் ( உங்கள் உரையாடல் என்பதால்) இந்த படத்துக்கு சென்றேன்.

      மிக சிறிய கதைகளத்தில்  ( ஜவுளி கடை, இட்ட மொழி கிராமம்) படம் மிக சிறப்பாக இயக்கப்பட்டுள்ளது.

     செரி பழத்தினை பிடுங்கி போட்டிபோட்டு உண்ணும் லிங்க் நண்பர்களுக்கு பின்புறமாக வளர்ந்திருக்கும் கள்ளி செடி….

     ப்ரஹமான வீட்டை விட்டு வெளியேறும் லிங்கு , கனி ..மற்றும் வயதுக்கு வந்த கனியின் தங்கை இவர்களுக்கு எதிராக  பச்சை ,வெள்ளை சீருடை அணிந்து  கையில் ஸ்கூட்டியோடு  வரும் மாணவிகள் ………

காலிழந்த கதாநாயகியை மணக்க சம்மதித்து கைபிடிக்கும் இருவரையும் கடந்துசெல்லும் உறவினரற்ற பெண் மற்றும் செவிலி… போன்ற ஒப்பீடுகள்.மிக அருமை…

கனியின் தகப்பனான விக்ரமாதித்தனின் இயலாமை……….  குள்ளர் ஒருவரின் கண்ணீர்…….  ……….சோபி..ஊத்தவாயன்..சங்கரபாண்டி….மாடியிலிருந்து  விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் சகோதரி..கண்ணில்லாத வியாபாரி..என அணைத்து பாத்திரங்களும் இதயம் முழுவதும் நிறைந்து கனக்கிறது…

மிகசிறப்பாகவும் ….. சிரத்தையுடனும் …..சமூக அக்கறையுள்ள படத்தினை செதுக்கி இருக்கிற வசந்த பாலனின் உழைப்பிற்கு  வாழ்த்துக்கள்  மற்றும் நன்றி..
சில மிகைப்படுத்தப்பட்ட ஜவுளி கடை காட்சிகள் இருக்கிறது………. சரி பரவாயில்லை..

உங்களின் வசனம் வெகு இயல்பாக சோடனையற்று  மிளிர்கிறது…. “காதல் கடிதத்தில் கடவுள் வாழ்த்து “…..”சில்லாடி” போன்ற சொல்லறிமுகம்…  ” எப்ப சங்கரபாண்டி காதலிக்கலைன்னு சொன்னானோ அப்பவே அவ செத்துடா ….விழுந்தது அவ பொணம்தான்”….இவை அனைத்திற்கும் மேலாக ….  ” கனி இருப்ப காய் கவர்ந்தற்று“..உங்கள் சிந்தனைக்கு  சிரம் தாழ்கிறேன் அண்ணாச்சி …

மிக்க நட்புடன்,
ப.சுதகார்.
பட்டுக்கோட்டை.

அன்புள்ள ஜெயமோகன்

அங்காடி தெருவை பார்த்தேன். நான் சினிமா அதிகமாகப் பார்ப்பதில்லை. என் தொழில் அப்படி. உங்கள் இணையதளத்தை வாசிப்பேன். மதிப்புரைகளை கண்டுதான் படம் பார்க்கப்போனேன். கடுமையான வெயிலில் அரங்குக்குள்ளே உட்கார்ந்து படம் பார்ப்பது கொடுமையாக இருந்தது. முடிந்தபிறகு பயங்கரமான தலைவலி இருந்தது. ஆனால் நல்ல கூட்டம் இருந்தது. மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக படத்தைப் பார்க்கிறார்கள். கண்ணீர்விட்டு அழுபவர்களைக்கூட பார்த்தேன். ஜனங்கள் அவர்களுடைய வாழ்க்கையை படத்திலே சொன்னால் அதைப் பார்க்கமாட்டார்கள் என்று இல்லை. சரியாகச் சொன்னால் பார்க்கத்தான் செய்வார்கள். படம் பார்க்கவந்தவர்களில் நிறையபேர் ஏழை ஜனங்கள் என்று தெரிந்தது.

எனக்கும்படம் நன்றாக பிடித்திருந்தது. முக்கியமான படம். சில குறைகள் என்றால் ஜாரிங் ஆன சிலஷாட்டுகளும் கட்டுகளும் இருந்தன. அவை படத்தை சுழுகமாக ஓடமுடியாமல் செய்தன. அப்புறம் பின்னணி இசை மிகவும் செயற்கையாக இருந்தது. சௌந்தரபாண்டி என்ற கதாபாத்திரம் அழும் காட்சி சரியாக வரவில்லை.  சில இடங்களில் அழுகை தொடர்ச்சியாக வந்தது மாதிரி இருந்தது. அதனால் சிலகாட்சிகள் எடுபடாமல் போய்விட்டன

மற்றபடி படத்தில் நடித்த எல்லாருமே அற்புதமாக நடித்திருந்தார்கள். கனி, லிங்கு,முதலாளி,கருங்காலி அந்த குண்டுப்பையன் எல்லாருமே நன்றாகச் செய்திருந்தார்கள். கனியின் அப்பா சொல்லும் வசனம் மனசை நெகிழச்செய்துவிட்டது. நான் இந்த வீட்டுவேலை ஒர்க்ஷாப் வேலைசெய்யும் பையன்களைப் பார்ப்பேன். நாக்குட்டி மாதிரி இருப்பார்கள். நாய் குட்டிகளை குப்பைக்கூடை அருகே கொண்டு போடுவதுமாதிரித்தானே கொண்டு போட்டுட்டு போகிறார்கள். மனசை மிகவும் பாதித்தது அந்த வரியும் அந்த பெரியவரின் அழுகையும்

நிறைய காட்சிகள் மனதை நெகிழ வைத்தன. எல்லாம் நம்ம ஊர் கருவாச்சி பையன்கள். ஆனால் அவர்கள் பௌடர் போடும் காட்சி சிரிப்புக்காக காட்டப்பட்டாலும் மனசை நெகிழச்செய்தது. பெரிய நகரத்தில் அவர்களுக்கு நிறமும் தோற்றமும் பெரிய காம்ப்ளெக்ஸைத்தான் கொடுக்கும். இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாகச் செய்திருக்கிறார்.

பலமான படம். இப்படி நிறைய படங்கள் வரவேண்டும்

பாலசுப்ரமணியம்

அங்காடி தெரு கடிதங்கள் 2

அங்காடித்தெரு கடிதங்கள்

அங்காடித்தெரு இன்று

முந்தைய கட்டுரைமரபும் வாசிப்பும்
அடுத்த கட்டுரைகுடி,சினிமா,கேரளம்