நகைச்சுவையும் வன்முறையும்

அன்புள்ள ஜெமோ

இன்னொரு கோணத்தில் சார்லி ஹெப்டோ விஷயத்தை அணுகும் கட்டுரை இது.

ஜெயகிருஷ்ணன்
Mini_tirthankaras
அன்புள்ள ஜெயகிருஷ்ணன்,

வாசித்தேன். இந்தியாவில் நாம் நம்மை அருளாளர்களாகக் கருதிக்கொண்டு எழுதும் கேனத்தனமான கட்டுரைகளில் ஒன்று இது. இங்கே இந்த மனம் போடும் வேடம் உச்சகட்ட வன்முறையாளனுக்கும் அருளும் தேவதூத படைநாயகனாக தன்னைப் பாவித்துக் கொள்வது. ஆணவத்தின் உச்சம்

மானுடவரலாறு என்பதே பத்தாயிரம் ஆண்டுகளாக நடந்த ஒரே ஒரு மாற்றம் மட்டும்தான் – வன்முறை தவிர்த்தல். அதாவது, கட்டுப்பாடற்ற வன்முறையை கட்டுப்பாடுள்ள வன்முறையாக மாற்றிக்கொள்வது, நேரடி வன்முறையை குறியீட்டு வன்முறையாக மாற்றிக்கொள்வது, வன்முறைசர்ர்ந்த மோதலுக்கு பதிலாக கருத்து மோதலை முன்வைப்பது.

கடவுளின் காலடியில் உண்மையான தலையை வெட்டி வைத்துப் பலிகொடுப்பதில் இருந்து பதிலுக்குத் தேங்காயையோ பூசணிக்காயையோ வெட்டி வைப்பது வரை வந்துசேர நமக்கு மூவாயிரம் வருடகாலம் தேவைப்பட்டிருக்கிறது. முப்பதாயிரம் ஞானிகளின் சொற்களும் தேவைப்பட்டிருக்கலாம்.

எந்த சமூகமானாலும் வன்முறையைத் தவிர்ப்பதில் எந்த அளவுக்கு முன்னகர்ந்துள்ளது என்பதே அது நாகரீகமானதுதானா என்பதற்கான அளவுகோல். போட்டி விளையாட்டுக்கள், வணிகப்பேரம்பேசுதல்கள், ராஜந்தந்திரப் பேச்சுவார்த்தைகள் எல்லாமே குறியீட்டுப் போர்கள்தான்.

நேரடிப்போர்களை விட்டுவிட்டு இந்த குறியீட்டுப்போர்களை வந்தடையவே மனித சிந்தனை நூற்றாண்டுகளாகப் போராடியிருக்கிறது. இவ்வளவு ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. அது மானுடத்தின் சாதனை என்றே வரலாற்றை அறிந்த எவரும் சொல்வார்கள்.

இதைப் புரிந்துகொள்ளாத ஒருவருக்கு மானுடவரலாற்றின் ஆனாஆவன்னா தெரியாது என்றே பொருள். ‘எல்லாமே வன்முறைதானே , அவன் அப்படி பண்றான் இவனால முடிஞ்சது இப்டிப் பண்றான்’ என்று சொல்வதற்கு சிந்தனை என ஏதும் தேவை இல்லை.

‘தன் கருத்துக்களை மத்தவங்க மேலே கட்டாயப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தாரே காந்தி அது வன்முறை இல்லியா?” என்று எம்பிக்குதித்து தன் கருத்துக்களை ஏற்காதவர்களை கொன்றுகுவித்தவர்களை காந்திக்கு நிகராக வைத்து வாதிடும் சிந்தனைப்புயல்களை அன்றாடம் பார்க்கிறொம். அதன் இன்னொரு வடிவம் இது.

வன்முறையை முடிந்தவரை தவிர்ப்பதுதான் மானுடம் முன்னோக்கி நகர்வதன் அடையாளம். மூவாயிரம் வருடம் முன்னர் அதைக் கண்டு சொன்ன தீர்த்தங்காரர்களுக்கு வணக்கம்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசில் தொடங்குவது…
அடுத்த கட்டுரைபிரயாகை முடிவு