«

»


Print this Post

டெல்லி, கடிதங்கள்


அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் இணையத்தில் என்னைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

ஏதோ பழைய நாட்களுக்கே பயணித்து வந்தது போல உணர்ந்தேன்.

என்னுடைய வலைப்பூவை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.  வடக்கு வாசல் இணைய தளத்திலும் வருகிறது.  இதனை அறிமுகப்படுத்தி இருந்தால் இன்னும் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்திருக்கும்.  வணிக ரீதியாக எனக்குப் பயன் பட்டு இருக்கும்.

வடக்கு வாசல் இணைய தளத்தைப் பார்த்தீர்களா?

உங்கள் மடி ஆசாரங்களை சற்றுத் தள்ளி வைத்து எப்போதாவது நேரம் கிடைக்கும்போது வடக்கு வாசல் இதழுக்கு எழுதுங்களேன்.

நான் குடிப்பதை விட்டு சுமார் ஏழு வருடங்கள் ஆகின்றன.  நீங்களும் அருண்மொழியும் அடுத்த முறை தில்லி வரும்போது நான் நல்லவனா கெட்டவனா என்று நாயகன் பாணியில் கேள்வி கேட்டு பதில் கொடுத்துக்கொண்டிருக்கும் அவசியம் இருக்காது.

உங்கள் கட்டுரையை மிகவும் ரசித்தேன்.  மிக்க நன்றி ஜெயமோகன்.

பெண்ணேஸ்வரன்

Visit us at: http://www.vadakkuvaasal.com
http://www.sanimoolai.blogspot.com

அன்புள்ள பெண்ணேஸ்வரன்
மடி ஆசாரம் ஏதுமில்லை. இப்போது இணைய எழுத்து , திரைக்கதைகள் மற்றும் நாவலே என் நேரத்தை முழுமையாக எடுத்துக்கொள்கிறது. எழுத நேரமில்லை. கண்டிப்பாக எழுதுகிறேன்.
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? நாஞ்சில்நாடனும் குடியை நிறுத்திவிட்டார். அசைவத்தையும்.இப்படி குடிக்கிறவர்கள் எல்லாம் திருந்திக்கொண்டிருந்தால் டாஸ்மாக் என்ன ஆகிறது?
ஜெ

**** 

டெல்லி நினைவுகளைப் படித்தேன். உஙளை நான் டெல்லியில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.அப்போது நான் டெல்லி ஜெ என் யூவில் படித்துக்கொண்டிருந்தேன். அரவிந்தன், சத்யமூர்த்தி, மு.க.சந்தானம் போன்ற நண்பர்கள் அப்போது உங்களுடன் இருந்தார்கள். உங்கள் இலக்கிய பேச்சு அன்று மிக உற்சாகமாகவும் தீவிரமாகவும் இருந்தது. எனக்கு தமிழிலக்கியத்தின் வாசலை திறந்து தந்ததே அந்த கூட்டம்தான். இப்போது உங்கள் கட்டுரையில் அந்நினைவுகளைப் படித்த போது மலம் மலர்ந்தது

வேணுகோபால்
சூரத்

**

அன்புள்ள ஜெ,

டெல்லி இலக்கியச்சூழலைப்பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். வெவ்வேறு காலகட்டங்களில் டெல்லியில் நல்ல இலக்கியச்சூழல் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் கே.ஆர்.ச்ரினிவாசன் சுப்புடு என் எஸ் ஜெகன்னாதன் பூர்ணம் விஸ்வநாதன் போன்றவர்கள். பின்னர் கடுகு , ராஜாமணி போன்றவர்கள் அதன்பின் கணையாழி குழு. இந்திரா பார்த்த சாரதி, சுஜாதா, கஸ்தூரி ரங்கன். அதன்பின்னர் வெங்கட் சாமிநாதன், வாசந்தி , பாரதி மணி, செ ரவீந்திரன் தலைமுறை. அதன் பின்னர் பி.ஏ.கிருஷ்ணன் போன்றவர்கள். டெல்லியின் இலக்கிய வரலாற்றை யாராவது நினைவலைகளாக எழுதினால் நன்றாக இருக்கும். நான் கடைசிக்காலத்தில் 2000 வாக்கில் இரண்டுவருடம் டெல்லியில் இருந்தேன். இவர்கள் எவரையுமெ  எனக்கு பரிச்சயமில்லை. ராஜாமணியை தவிர. ஆனாலும் டெல்லி என் வாழ்க்கையின் மறக்க முடியாத ஒரு காலகட்டத்தின் நினைவாக மனதில் இருக்கிறது. உங்கள் கட்டுரை நினைவுகளை உருவாக்கியது நன்றி
சுகுமார்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: http://www.jeyamohan.in/699