பெரியார் அவதரித்த புனித மண்!

Perumal-Murugan

அன்புள்ள ஜெ ,
எழுத்தாளர் பெருமாள் முருகனை பற்றி கண்ணீர் மல்க கடிதம் எழுதலாம் சமுக வலை தளங்களில் ஆவேசம் அடையலாம் அவரின் முடிவை ஏளனம் செயலாம் ஆனால் திருசெங்கோடில் சாதி அமைப்புகள் எதிர்ப்பு அதன் வீரியம் பல பேருக்கு தெரியாது . இன்னும் சாதியின் மேன்மையை , சில தெருவுக்குள் , சிலர் வீட்டுக்குள் , சில திருமணத்திற்கும் சில மக்கள் வரவே கூடாது என்று நெனைக்கும் கொங்கு தேசத்தில் தனியாய் ( எழுத்தாளனுக்கு என்றும் குழு கிடையாது ) வாழ்ந்து போராடுவது கடினம் . நீங்கள் சொன்ன மாதிரி நம்முடைய எதிர்ப்பை இந்த புத்தக கண்காட்சியிலே காட்டலாம் . இதை விட அருமையான தருணம் வேறு எதுவும் இல்லை . இப்படியே போனால் பிற்காலத்தில் சாதி சார்புடைய , சாதி பலம் கொண்ட , சாதி , மதம் மட்டுமே எழுதி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் கூடம் மட்டுமே இருக்கும் … நாம் சிறுகூட்டம் தான் ஆனால் நல்ல தெளிவான எதிர்ப்பை காட்ட இது சரியான தருணம் …

ஊசூ

அன்புள்ள ஊ சூ

பெயர்சொல்லவும் அஞ்சும் உங்கள் நிலையை நான் புரிந்துகொள்கிறேன்

ஈவேரா அவர்கள் பிறந்த, பெரும்பாலும் பணியாற்றிய அவரது மண் அவர் மறைந்து இத்தனை நாட்களுக்குப்பின் எப்படி இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் போல காலம் கடந்து நிற்கும் சான்று இன்னொன்று இல்லை.

ஈவேரா பாடுபட்டது முழுக்க முழுக்க இந்த இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக என்பதே உண்மை. இவர்களிடம் தங்கள் சாதிப்பற்றைக் கைவிடும்படி அவர்கள் சொல்லவில்லை. மாறாக இவர்கள் தங்கள் ஆதிக்கச் சாதிவெறியை தக்கவைத்துக்கொள்ள மிகச்சிறந்த திரை ஒன்றை அவர் அமைத்துக்கொடுத்தார் – பிராமண வெறுப்பு.

ஆகவேதான் அவர்கள் அவரைக் கொண்டாடினர். பெரியார் பிறந்த மண் என தங்கள் மண்ணை மேடைமேடையாக முழங்கினர். பெருமாள் முருகனே அப்படி முழங்குவதைக் கேட்டிருக்கிறேன்.

ஈவேரா எந்த சாதியொழிப்பையும் கொண்டுவரவில்லை. எந்த மக்களிடமும் சிறிய அளவிலான மனமாற்றத்தையும் கொண்டுவரவில்லை. சாதிவெறியை திறமையாக மறைக்க, பிராமணர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மாய்மாலத்தைச் செய்ய இடைநிலைச்சாதிகளை கற்பித்தார்.

அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து அந்தத் திரை கொஞ்சம் விலகுகிறது. அதையும் மழுப்பவே பெரியாரியர்கள் முயல்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி உண்மை பல்லிளிக்கவே செய்யும்.

ஜெ

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் கடிதம்-2
அடுத்த கட்டுரைகருத்துச் சுதந்திரம்-மனுஷ்யபுத்திரன்