வலி,கோமல்:கடிதங்கள்

அன்புமிக்க ஜெயமோஹன்,

வணக்கம்.

சமீபத்தில் இரண்டு மூன்று முறைகள் உங்கள் பெயருக்கு எதிரேபச்சைப் பொட்டுத் தெரிந்துகொண்டிருந்தது. தெருவின் இந்தப் பக்கம்

போகிறபோது, எதிர்ச் சிறகில் போகிற உங்களைப் பார்த்துவிட்டுப் பேசாமல் போவதுபோல நான் அஞ்சல் பக்கத்திலிருந்து வெளியே

வந்தேன்.

*

சற்று முன்பு உங்களின் வலியறிந்தேன். உங்களின் வலி ஊடாககோமலின் வலியைச் சொல்லத் தொன்றியிருந்தது உங்களுக்கு.

உச்ச வலியையும் மகிழ்ச்சியையும் அனேகமாக வர்ணிக்க முடியாதேபோகிறது. என்னுடைய ஓவியர் நண்பர்,மறைந்த சக்தி கணபதி, “தேள்

கொட்டுனா விறுவிறுண்ணு சுகமா இருக்கும்” என்று சிரித்துக்கொண்டேசொன்ன நினைவு வருகிறது. அப்படியும் சொல்லலாம்,அது சிவத்தின்

ஒரு துளியெனவும்.இப்போது சற்றுக் குறைந்திருக்கிறதா?கவனித்துக் கொள்ளுங்கள்.

வண்ணதாசன்

***

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரை வாசித்தேன், கோமலின் நினைவுகள் என்னை மனம் நெகிழச்செய்தன. கோமல் 1990 வாக்கில் திருத்துறைப்பூண்டிக்கு முற்போக்கு இலக்கிய விழா ஒன்றுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு முதுகுவலி இருப்பதாகவும் உட்கார்ந்தாப்டி பேசுவார் என்றும் சொன்னார்கள். அவர் நகைச்சுவையுடன் பேசினார். தண்ணீர் தண்ணீர் படம் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார்கள். கோமலின் சிரிப்பு எனக்கு பிடித்திருந்தது. மீசை இல்லாமல் சற்றே வாய் கோணி சிரிப்பார் அவர். சுபமங்களா இதழை சில இலக்கங்கள் வாசித்திருக்கிறேன். நீங்கள் எழுதிய ரதம் என்ற கதையை அதில் வாசித்த நினைவு. அந்த கதைக்கு சியாம் உங்களையே படமாக போட்டிருப்பார். கோமல் தமிழில் செய்த சாதனை என்பது சுபமங்களா இதழ்தான். அவரது நினைவுக்கு அதுவே போதுமானதாகும்

செல்வகுமார்
பெங்களூர்

***

அன்புள்ள ஜெயமோகன்

கோமல் பற்றிய உங்கள் நினைவு என்னை நெகிழச்செய்தது. நாம் அஞ்சலிக் கட்டுரைகளுடன் ஆளை மறந்துவிடக்கூடியவர்கள். இப்போது நீங்கள் அவரை நினைவுகூர்ந்திருப்பது அபூர்வமானது. மனவலிமை மூலம் அவர் எப்படிபப்ட்ட துயரத்தை தாண்டி வந்திருக்கிறார் என்பதை நினைத்தால் மனம் கனக்கிறது. அவர் கைலாசமலையை பார்க்கப்போனதை கடவுளுக்கு விட்ட சவாலாகவே நான் எண்ணுகிறேன். கடவுளின் மலைக்கே ஏறிச்சென்று பார்த்தாயா நான் தோற்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதன்மூலம் மனிதமாண்பையே அவர் நிறுவியிருக்கிறார். அதை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்

சிவராஜன் கணேசமூர்த்தி

***

அன்புள்ள ஜெ,

கால் வலி எப்படி இருக்கிறது? இந்தியச்சூழலில் ஒரு இருசக்கரவாகன விபத்துக்கு ஆட்பட்டு கால்வலியை அறியாதவர்கள் சிலரே இருப்பார்கள். என் கால்கள் சிலவருடங்கள் முன்பு வலியை தெரிவித்து என்னை வேறு ஒரு மனிதனக ஆக்கின. சொல்லப்போனால் வீடு என்பது மனிதனுக்கு எத்தனை முக்கியம் என்பதை அப்போதுதான் அறிந்தேன். வீட்டை நேசிக்கவும் வீட்டில் நேரம்செலவிடவும் அதன்பிறகுதான் கற்றேன். அந்த காலகட்டத்தில்தான் நான் சங்க சித்திரங்களை ஆனந்தவிகடனில் படித்தேன். உங்களை அறிமுகம்செய்துகொண்டேன். உங்கள் எழுத்துக்கள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகின. இப்போது நீங்கள் எழுதியவற்றின் பெரும்பகுதியை படித்திருப்பேன் என்று எண்ணுகிறேன். முழுக்க படித்தவர் எவரும் இருக்கமாட்டார்கள் அல்லவா? வலி ஒரு ஆசான். பசியைப்போல. வள்ளலார் சொன்னதுபோல வலித்திரு தனித்திரு விழித்திரு என்று நாம் சொல்லிப்பார்க்கலாம்

ஸ்ரீராம்
சென்னை

***

அன்புள்ள ஜெயமோகன்

காலில் அடிபட்ட செய்தியை வாசித்தேன். பொதுவாக எனக்கு செண்டிமெண்டுகளில் நம்பிக்கை இல்லை என்றாலும் அந்தச்செய்தி வருத்தம் அளித்தது. நாம் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் மிக நெருக்கமான ஒருவராக ஆகி நம் உறவினர்கள் சொந்தங்களை விட மேலானவராக மாறிவிடுகிறார்.நான் எப்போதுமே உங்களிடம் விவாதித்துக் கொண்டிருப்பவன். மானசீகமாக. எந்நேரமும் உங்களுடன் ஒரு சப்ஜெக்ட் ஓடிக்கொண்டிருக்கும். இப்போது கால்வலியால் அவதிப்படும் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். get wel soon

ஜெயராமன்

**

எனது அன்புச் சகோதரர் ஜெயமோகன் !

தங்கள் “வலி” படித்து அதிர்ந்தேன்.

சார் !  உங்களுடைய கால் வலி தற்போது எப்படி இருக்கிறது?

தாங்கள் இந்த காயத்தினால் ஏற்பட்ட வலியை “கோமல்” சார் அவருடனான அனுபவத்தையும் இணைத்து எழுதியது, என்னை மிகவும் பாதித்துள்ளது.

ஜெயமோகன் !  நீங்கள் “நவீன தமிழ் இலக்கியத்தின், தமிழகத்தின் ஆகச்சிறந்த பொக்கிஷம்”,  தங்கள் உடல் நலத்தை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். 

இந்த உலகத்தையே, தமிழகத்தை நோக்கி, உங்கள் படைப்பின் மூலம் சாத்தியமாகச் செய்யும் வல்லமை கொண்ட நீங்கள், இனி மிக கவனமாக தங்கள் உடல் நலத்தை பேண வேண்டும் என்று தங்களது வாசகர்கள் சார்பாக வேண்டுகிறேன்.

நீங்கள் அதிவிரைவாக இந்த காயத்திலிருந்து விடுதலை பெற்று தங்கள் படைப்பாக்கத்தில் ஈடுபட வேண்டும் என்று இறையிடம் பிரார்த்திக்கிறேன்.

தீபாவளிக்கு “நான் கடவுள்” வருமென்று எதிர்பார்த்திருக்கிறேன். ஆனால் பொங்கலுக்குத்தான் “நான் கடவுள்” என்று ஒரு செய்தியும் கேள்விப்பட்டேன். நிஜமா? இசைஞானி இளையாராஜா, பாலாவுடனான உங்களின் இந்தப் படைப்பு மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
பேரன்புடன்

இரா. அனந்த்

**

அன்புள்ள ஜெயமோகன்

     உங்கள் பயணக் கட்டுரைகள், கீதை முதல் அத்தியாயம் மற்றும் எனது இந்தியா போன்ற கட்டுரைகளில் மனம் மிக நிறைந்திருந்ததால் எவ்வித கடிதமும் எழுத இயலாத நிலையில்  இருந்தேன். தங்களின் வலி என்னையும் வருத்தியது. வலி நல்லதுதான். வலி ந்ம் உடலின் மொழி அதன் அழுகுரல். அது அழாவிட்டால் நாம் அதற்கு பால் கொடுக்க மாட்டோம். ஆனால் வலி வரும்படி நாம் வைத்துக்கொள்வது தவறு. அடுத்தமுறை ஏணியில் ஏறும்போது  அல்லது மற்ற வீர விளையாட்டில்(!)  ஈடுபடுவதற்கு முன்னே உங்கள் எழுத்திற்கு,  தின்பண்டங்களுடன் வரும் அப்பாவின் வீடு திரும்பலுக்காக காத்திருக்கும் சிறு பிள்ளைகள் போல் காத்திருக்கும், எங்களையும் சற்று கவனத்தில் கொள்ளவும்.


அன்புடன் 

த.துரைவேல்.

***

அன்புள்ள ஜெயமோகன்,உங்கள் காலில் ஏற்ப்பட்ட காயமும் வலியும் வருத்தம் அளித்தாலும் வலியைக்கூட காவிய ரசனையோடு விவரிக்க ஒரு பிறவி எழுத்தாளனால் மட்டுமே முடியும் என்பபதை உணர்ந்து தங்களை நினைந்து பெருமை    கொள்கிறேன். படைப்பாளிக்கு ஏற்படும் எந்த ஒரு அனுபவமும் வாசகனுக்கு நேர்த்தியான படைப்பை எதிர்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.கோமலின்  இன்னொரு பக்கத்தை அறிய வும் அவர் பட்ட வலியைஉணரவும் உங்கள் கட்டுரை உதவியது.விரைவில் குணம் அடைய  வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலா

***

முந்தைய கட்டுரைஇந்தியா:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோமல், கடிதங்கள்