சொலல் வல்லன் சோர்விலன்

download

செல்லக்குமரன் நல்லமுத்து 2014 அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி ஜேம்ஸ் பர்கர் நியூயார்க்கில் காலமானதற்கு மறுநாள் அரசு மருத்துவமனையில் காலமானார். ஜேம்ஸ் பர்கர் ஒரு டாக்ஸி ஓட்டுநர். அவர் காலமானது அவரது குடும்பத்திற்கு மட்டும்தான் தெரியும். செல்லக்குமரன் நல்லமுத்து தன் விதவையையும் அவள் பெற்ற நான்கு பிள்ளைகளையும் விட்டுச்சென்றார். விதவை அவர் இறந்தபோதுதான் அப்படி ஆனாள் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லக்குமரன் நல்லமுத்து ஒரு மேடைப்பேச்சாளர். பட்டிமன்றங்கள் முதல் பேருரைகள் வரை சகாய ரேட்டில் நிகழ்த்திவந்தார். பஜாஜ் ஸ்கூட்டரும் எழுநூறு சதுர அடி புறநகர் வீடும் அருகிலேயே இன்னொரு காலிமனையும் வங்கியில் ஒன்றேகால் லட்சமும் மனைவியின் நாற்பத்தெட்டு பவுன் நகைகளும் அவர் பேசிப்பேசி ஈட்டியவை. அதேயளவுக்கு டாஸ்மாக்கிலும் செலவிட்டிருக்கிறார். செல்லக்குமரன் நல்லமுத்துவின் மேடையுரைகளில் பட்டிமன்றங்கள் பட்டிமன்றத்தலைவர் ரோமேன் சாலையா அவர்களின் முக்கல் முனகல்கள் பின்னணியில் ஒலிக்க ஒலிநாடா வடிவில் வெளிவந்துள்ளன. [ ”நடுவரவர்களே நன்றாக கவனித்துக்கேட்கவேண்டும்”. “கேட்டுக்கிட்டுத்தான்யா இருக்கேன் ஆஆஆஅங்ங்ங்ங்..”. சிரிப்பொலிகள்] .அவை எவையும் இன்று முக்கியமல்ல. இன்று எவையுமே முக்கியமல்ல..

செல்லக்குமரன் நல்லமுத்து அவர்கள் இறந்தபின் அவரது மனைவியால் கண்டெடுக்கப்பட்ட ஓர் ஆவணம் எதிர்காலச் சந்ததியினருக்கு முக்கியமானதாக இருக்கக் கூடும்.”தமிழக மேடை, பேச்சாளர் கையேடு” என்ற இந்நூலை அறிஞர்கள் விரும்பாவிட்டாலும் மேடைப்பேச்சை தொழிலென எடுக்கப்போகும் இளையதலைமுறையினர் பொன்னேபோல போற்றி கண்ணில் வைத்து பயிலக்கூடும். அதன் சாராம்சம் கீழே.

மேடைப்பேச்சாளர் என்பவர் பேசுபவர் அல்ல மேடையில் திகழ்பவர் என்பதை நினைவில் கொள்க. மேடையில் எதையுமே பேசாமல் வெறுமே முனகல்கள் வழியாக மட்டுமே கூட பெரும்புகழ் பெறமுடியும். மேடையில் திகழும் விதங்களில் பேச்சும் ஒன்று. அவற்றை சில பொதுத்தலைப்புகளில் தொகுக்கலாம்

2

1. வருகை

மேடைப்பாவனைகளில் மேடைக்கு வருவது மிக முக்கியமானது. மூன்று வகையில் மேடைக்கு வரலாம். இவை சார்த்தூல விக்ரீடிதம், மிருகநடனம், சர்ப்ப கமனம் என சம்ஸ்கிருத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழில் சிம்மநடை, மான்நடை, பாம்புநடை என்று சொல்லலாம்

சிம்மம் போல நடந்து வருபவர் அதற்கேற்ற உடை அணிந்திருக்கவேண்டும். மேலே வெள்ளையும் கீழெயும் வெள்ளையும் [இதை சொள்ளை என்பார்கள்] உகந்தது. வேட்டிசட்டை அணியலாம். ஆண்பால் கவிஞர் என்றால் வெள்ளைச் சுடிதார் நன்று. வேட்டி சட்டைக்கு மேலாடை அவசியம். சுடிதாருக்கு துப்பட்டா இதுவரை யாரும் போடவில்லை. ஆரம்பிக்கலாம். முடிச்சாயம் முகச்சுண்ணம் [பெண்பால் தவிர்க்கவும்] இன்றியமையாதது. உதட்டுச்சாயமும் தோதுபோல. விழிகள் சற்றே சிவந்திருக்க சமூகக் கோபம் அல்லது ஓட்கா உதவலாம்.. நிமிர்ந்த தலையுடன் இறுகிய வாயுடன் கழுத்தை நன்றாக இழுத்து இறுக்கி மிக மெல்ல நடந்து வரவேண்டும். கண்கள் அரைவாசி மூடியிருப்பது நன்று. சமூகக்கோபம் கொண்டவர்,அரசியலில் சீறி எழுந்தவர், ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதில்சொல்பவர் இம்முறையை கடைப்பிடிக்கலாம். சிம்மநடையுடன் சிம்மக்குரலும் இணைந்திருக்கவேண்டும்.

மான்நடை என்பது நகைச்சுவை பேச்சாளர்களுக்கு உகந்தது. “அடுத்தபடியாக இன்சுவைக் கன்னல் நன்னிலம் பொன்னனார் பேசுவார்கள்” என்று சொல்லி முடிப்பதற்குள்ளே மைக்கருகே பாய்ந்து வருவதை ரசிகர்கள் விரும்புவார்கள். ’நாங்கொஞ்சம் ஸ்பீடு… ஆமா’ என்று அதையே நகைச்சுவையாக ஆக்கிக் கொள்ளலாம். கையில் நோட்டுப்புத்தகம் குறிப்பேடு இருக்கலாம். பேசிக்கொண்டே சுருட்டிவிடத் தோதான கைகள் கொண்ட சட்டை நன்று. கணீர்க்குரல் கொண்டவர்களுக்குரிய பாவனை இது. இவ்வகை பேச்சில் ‘நச்சினார்க்கினியராக மெச்சினார் உரைகேட்டு உச்சியிலே அமர்ந்திருக்கும் தலைவர் கச்சிராப்பள்ளி காத்தவராயன் அவர்களே’ பாணி உரைத்தொடக்கங்கள் ஒவ்வாது. சட்டென்று அறுந்த சொற்றொடரில் “அதாவது சங்கதி என்னன்னாக்க இப்ப நம்மாளு இங்க சொன்னாரு…’ என்றவகையில் ஆரம்பிக்கவேண்டும்.

பாம்புநடை என்பது மேடையில் வருவது தெரியாமல் வருவது. பாம்பறியும் பாம்பின்கால் என்பதனால் கவனம் தேவை. மெல்ல வந்து பொல்லென நின்று ஆன்மா மட்டுமே வந்து நின்று பேசுகிறதோ என ஆரம்பிக்கவேண்டும். முதலிரு சொற்றொடர்கள் எவருக்குமே கேட்கக் கூடாது. நடுவில் எங்கோ ஒரு கனைப்பு. சட்டென்று உரத்த குரலில் “என்னய்யா நடந்திட்டிருக்குது இங்க?” என பொங்கலாம். தார்மீகக் கோபத்திற்கு உகந்தது இது. எப்படிவேண்டுமானாலும் உடையணியலாம். நன்றாக மட்டும் அணிந்திருக்கக் கூடாது.

3
2. குரல்

மேடைப்பேச்சில் குரல் முக்கியமானது. சிம்மக்குரல், தொண்டைக்குரல், பலகுரல் தனிக்குரல்,அவலக்குரல் என குரல்கள் பலவகை. சிம்மக்குரல் என்பது மூச்சொலியை முறையாக கலந்து எழுப்பப்படுகிறது. திருவிளையாடல் வசனத்தில் சிவாஜி ‘உண்மையாகே?” ‘சத்தியமாகே?’ என நாகேஷிடம் கேட்குமிடத்தில் விடும் மூச்சு போல. ‘நான் கேட்க ஆசைப்படுகின்றேன்…ஏஹ்! இந்தமேடையிலே நின்று கேட்கின்றேன் ஏஹ்! ’ என அது ஒலிக்கவேண்டும். சிம்மக்குரல் தொடர்ந்து அப்படியே ஒலிக்க மைக்குக்கு மிக அருகே வாயை வைத்துப்பேசவேண்டும்

தொண்டைக்குரல் என்பது நான்குநாள் பனியில் நின்றதுபோல பேசுவது. இவ்வகைப்பேச்சு ஒருவகை ஒப்பித்தல் தொனியிலமைந்திருக்கலாம். ‘நான்மாடக்கூடலிலே நான்குவழிச்சாலையிலே நாற்றமடிக்கும் சந்திலே நாநிலத்தோர் நாண நாத்தழும்பேற நாவடக்கமில்லாமல் பேசி நாடிவந்தவரை நாடிழக்கச்செய்து நாணல்போல் நின்றிருக்கும் நாய்களின் கூட்டமல்ல நாமென்று சொல்லிக்கொண்டிருக்கும் அதேவேளையிலே எத்தர்கள் எத்தனைபேர் எதிர்த்து வந்து நின்றாலும் ஏற்றமுற எடுத்தகால் பின்வைக்காமல் எஞ்சிய வாழ்நாளெல்லாம் எந்தமிழ்நாட்டினிலே…’ என்று போய்க்கொண்டே இருக்கும் பேச்சுக்கு இக்குரல் உகந்தது. சொற்றொடர்கள் முடிவடைவது இந்த வகை பேச்சில் விரும்பப் படுவதில்லை.

பலகுரல் பேச்சு எம்.ஆர்.ராதா அவர்களிடமிருந்து முளைத்தது. மையப்பேச்சுக்கு ஒரு குரல். அது முதலிருவகை குரலாக இருக்கலாம். நடுவே சம்பந்தமே இல்லாமல் ஒரு கீச்சுக்குரல் வந்து முதல் குரலை ‘காமெடி’ செய்துவிட்டு போகும். ‘தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன். தமிழெங்கள் அறிவுக்குத் தோள்! – அத தேள்னு பரிச்சையிலே எளுதி வைக்கான் நம்மாளு…ஆமா’ என்று செல்லும் உரையில் இரண்டாவது வரியைச் சொல்வது மறுகுரல். இந்த மறுகுரல் அனைத்துவகையான ஒழுங்குகளுக்கும் எதிரானது. விடலைத்தனமானது. மனைவியிடம் பூரிக்கட்டையால் அடிவாங்குவது. ’லேட்டாப்போனா திண்ணையிலதான் தூக்கம். மார்கழிப்பனி அய்யா மார்கழிப்பனி…ஆங்’

தனிக்குரல் என்பது அதுபாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கும். பேராசிரியர்களின் பேச்சுக்குரல் இது. இதை ரிஷபமூத்ரா என்று பாணினியோ அவரது மனைவி மாலினியோ சொல்லியிருக்கிறார்கள். வண்டிக்காளை மூத்திரமடித்துச்செல்வது என பொருள். அவலக்குரல் என்பது சமூக அவலங்களை தோலுரிப்பது. பெண்களுக்காக கண்ணீர் விடுவது. ‘அந்தப்பெண்தான் பாவம் என்ன செய்வாள். அவள் தமிழ்ப்பெண் அல்லவா?” என்றவகை பேச்சுக்கு உகந்தது

4
3 பாவனைகள்

மேடையில் பேச்சு எவ்வளவு முக்கியமோ அவவ்ளவு பாவனைகள் முக்கியமானவை. அவற்றின் விதிகளை கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்

மேடைக்கு வந்ததுமெ செய்யப்படும் சில அசைவுகள் முக்கியமானவை. பேச்சாளரை அரங்கு கூர்ந்து கவனிக்கும் நேரம் இது. அங்கே செய்யப்படும் ஒவ்வொன்றுக்கும் உட்பொருள் உண்டு. மைக்கின் கழுத்தை திருகி சரிசெய்தல் [சொல்லவிருப்பது மிக முக்கியமானது. அனைவருக்கும் கேட்கவேண்டும்] கழுத்துச்சால்வையை இருபக்கமும் இழுத்துச் சரிசெய்வது [ உணர்ச்சிக்கொந்தளிப்புட்ன் இருக்கிறார். நிதானமாக ஆகி பேசப்போகிறார்] உதவியாளரிடம் திரும்பி எதையாவது கேட்பது [ ஆணைகள் இடும் தலைமைப்பண்பு] தலையை தடவுவது மீசையை நீவுவது [ஆழமான சிந்தனை கிளம்பி வருகிறது]. ஆனால் மூக்குக்குள் கைவிட்டு நோண்டுவது. பல்லில் மாட்டிய பிரியாணியை எடுப்பது போன்றவை விரும்பத்தக்கதல்ல. பிற பேச்சாளர் பேசும்போது மேடையில் செய்யவேண்டியவை அவை.

பேச்சுடன் ஏராளமான கையசைவுகள் இருப்பது நல்லது. பாம்பு மகுடி நுனியை பார்ப்பதுபோல பேச்சாளரின் கையை பார்க்கும் வழக்கம் ரசிகர்களுக்கு உண்டு என்பதனால் அவர்கள் விலக மாட்டார்கள். பேராசிரியர்கள் சாக்பீஸ் டஸ்டர் போன்றவறை கையில் வைத்து சுழற்றிக்கொண்டு பேசலாம். பென்சில் பேனா நல்லது. இருகைகளும் கண்டபடி சுழல பேசும்போது பேச்சாளர் கடும் உழைப்பைச் செலுத்துவதாக ஒரு சித்திரம் எழுகிறது

பேச்சு நடுவே பலவிதமான பாவனைகள் சிறப்பான பொருளை அளிக்கும். எங்கே கைதட்டல் விழவேண்டுமோ அங்கே பேச்சை நிறுத்திவிட்டு சுட்டுவிரலை கீழ்நோக்கி கொத்துவதுபோல காட்டினால் கைதட்டவேண்டும் என தமிழ்மக்கள் பயின்றிருக்கிறார்கள். பொதுவாக சுட்டுவிரல் நாக்கு அளவுக்கே பேச்சில் முக்கியமானது. எச்சரிக்கை செய்யலாம்[ நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்]. சுட்டிக்காட்டலாம் [சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்] குற்றம்சாட்டலாம் [நீ யார் அதைக் கேட்க?] விரலை திருப்பிக்காட்டி ஒற்றைவிரல் சல்யூட் அடிப்பது இந்தியாவில் பிரபலமாகவில்லை. அது ஓட்டுபோட்டுவிட்டு பிரபலங்கள் காட்டும் சைகையாகவே இங்கே அறியப்படுகிறது

பொதுவாக அரங்குக்கு தோளைக்காட்டி சரிந்து நின்று பேசுவதே புரட்சிகரமானது. ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அறுபது பாகையில் மறுபக்கமாகத் திரும்புவது நாடகத்தனம். சால்வையை இருபக்கமும் வேகமாக இழுப்பது நடுத்தர நாடகத்தனம. இதில் உருவாகும் மின்சாரம் ஆற்றல் தருகிறது. முக்கியமான கருத்தைச் சொல்லிவிட்டு அப்படியே இறங்கி சென்றுவிடுவதுபோல ஒரு கணநேர அசைவைக் காட்டுவது அதிநாடகத்தனம். மெல்லிய குரலில் பேசிக்கொண்டெ சென்று உச்சக்குரலில் வெடித்தெழுவது தமிழ்மக்களை தட்டி எழுப்பும். உச்சக்குரல் முடிந்தபின் சற்றே மௌன இடைவெளிக்குப்பின் நாத்தழுதழுக்க பேச ஆரம்பிப்பது கண்ணீர் மல்கலை உருவாக்கும். விம்மி அழுவதும், தேம்பி தேம்பி அழுவதும், கேவுவதும் எல்லாருக்கும் பொருந்தாது. வேடிக்கையாக ஆகிவிடும். கருஞ்சாயக். கட்டைமீசையுடன் சிம்மக்குரலில் பேசுபவரே அதைச்செய்யவேண்டும். ஆனால் சர்ர்ர் என மூக்கைச் சிந்தக்கூடாது. நாசூக்காகச் செய்யவேண்டியது அது.

6
4 பேச்சின் உள்ளடக்கம்
அதெல்லாம் யாருக்கு வேண்டும்? உள்ளடக்கம் வேண்டுமென்றால் வாசித்துத் தெரிந்துகொள்ளவேண்டியதுதானே? எதற்கு மேடைப்பேச்சை கேட்கவரவேண்டும்?

முந்தைய கட்டுரையானை வணிகம்
அடுத்த கட்டுரைபெருமாள் முருகனுக்கு ஆதரவாக