வலியின் தேவதை

நேற்று அக்டோபர் 12 அன்று கேரளத்தைச்சேர்ந்த அமரத்துவம் அடைந்த கன்னியாஸ்திரீ ஸிஸ்டர் அல்போன்ஸாவுக்கு வாத்திகனில் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் புனிதர் பட்டத்தை அதிகாரபூர்வமாக வழங்கினார். இந்தியாவின் முதல் புனிதை அல்போன்ஸம்மாள்.

பலவருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு நிகழ்வு இது.  ஏற்கனவே அல்போன்ஸம்மாள் ஒரு புனிதராகவே கேரளத்தில் பார்க்கப்படுகிறார். சிறுவயதிலேயே எனக்குப் பழகிய ஓவியமுகம் அல்போன்ஸம்மாளுடையது. பிரார்த்தனைகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த பிராயத்தில் உயிர்நண்பன் வற்கீஸ¤டன் இணைந்து பல மெழுகுவத்திகளை நானும் ஏற்றியிருக்கிறேன்.

என் அம்மா இன்னதென்று தெரியாத கடுமையான காய்ச்சலில் மரணத்தின் விளிம்பில் கிடந்த காலத்தில் அல்போன்ஸம்மா முன் மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உடைந்து அழுதிருக்கிறேன். பல படங்களில் நம்மைப் பார்க்காமல் வேறெங்கோ செவி மடுத்து அமர்ந்திருக்கும் கோலம் அல்போன்ஸம்மாளுக்கு உண்டு. ஆனாலும் இன்றும் எண்ணற்ற எளிய மக்கள், பெரும்பாலும் பெண்கள், வாழ்தலின் முடிவிலா துயரத்தை அவரிடம் முறையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இறைவனிடம் முறையிடுவதை விட நம்மில் ஒருவராக வாழ்ந்து நாமறிந்ததையெல்லாம் அறிந்து சென்ற ஒருவர் நமது வதைகளுக்கு இன்னும் நெருக்கமானவராக இருக்கிறார் போலும். இல்லையேல் நான் ஏன் அந்த வயதில் அத்தனை தெய்வங்களையும் விட்டுவிட்டு அம்மையை நாடவேண்டும்?

காலில் பட்ட காயம் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் வலியுடன் நேற்று அல்போன்ஸம்மாள் பற்றிய செய்தியை வாசித்தேன். அச்செய்தி பிறரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத உவகை ஒன்றை இரவெல்லாம் அளித்துக் கொண்டிருந்தது.  காலையில் அருமனையில் மேனகா ஸ்டுடியோ என்ற வெற்றிகரமான நிறுவனத்தை நடத்தும் வற்கீஸ¤க்கு போன்செய்தேன். சர்ச் வாசலில் வைத்து பேசினான். ”உனக்காகவும் பிரெயர் செய்திட்டுண்டு கேட்டுதா?” காலில் அடி என்பதைச் சொல்லவில்லை, திரும்ப சர்ச்சுக்குள் நுழைந்துவிடுவான். பதினொன்றாம் தேதி இரவில் வலியுடன் அல்போன்ஸம்மாவைப்பற்றி வாசித்தது ஒரு நல்ல தொடர்பாகத் தோன்றியது. ஏனென்றால் வலியின் வழியாகவே அல்போன்ஸம்மாளை ஒருவன் புரிந்துகொள்ள முடியும்.

கேரளமாநிலம் கோட்டயம் அருகே குடமாளூர் என்ற சிறிய கிராமத்தில் அல்போன்ஸம்மாள் பிறந்த வீடு உள்ளது. 1989ல் நான் அங்கே சென்றிருக்கிறேன். பழைய கேரள பாணியில் பூமுகமும் சுற்றுபுரையும் கொண்ட நாலுகெட்டு வீடு அது. அல்போன்ஸம்மாள் பிறந்தபோது சிறியதாக இருந்திருக்கலாம். இப்போது பெரிதாக எடுத்துக்கட்டப்பட்டிருக்கிறது. அங்கே 1910 ஆகச்ட் 19 ஆம் தேதி ஜோசப்பச்சன் – மறியாம்மா தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் அல்போன்ஸம்மாள். நான்காவது குழந்தை. இயற்பெயர் அன்னக்குட்டி. அல்போன்ஸம்மாள்ளுக்கு ஒருமாதம் தாண்டுவதற்குமுன்னரே தாய் இறந்துபோனாள். சிறுவயதில் பெரிய குடும்பத்தில் புறக்கணிப்பிலும் தனிமையிலும் வாழ்ந்தது அல்போன்ஸம்மாவின் ஆளுமையை தீர்மானிக்கும் அம்சமாக இருந்திருக்கிறது.

மிக இளம்வயதிலேயே துறவு அவரை கவர்ந்திருக்கிறது. சிறுவயதில் அன்னக்குட்டி மிக அழகாக இருந்ததாகவும் ஆனால் தன்னை மானுடர் மணக்கக் கூடாதென்பதற்காக அவரே தீயில் காலைவிட்டு எரித்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. 1927 மே 7 அன்று பிரான்ஸிஸ்கன் கிளாரிஸ்ட் [FCC] சபையில்  சேர்ந்தார் அல்போன்ஸம்மாள். 1928  ஆகஸ்ட் 2 ஆம் தேதி பாணாங்ஙானம் கிளாரா மடம் கோயிலில் அன்னக்குட்டி கன்னியாஸ்திரி ஆகி அல்போன்ஸா என்று பெயர் பெற்றார்.

கன்னி வாழ்க்கையில் ஒருபகுதியை அல்போன்ஸா ஆரம்பப்பள்ளி ஆசிரியையாகவே செலவிட்டிருக்கிறார். 1932 வாக்கில் வாகைக்காடு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். நோயுற்றிருந்த காலத்திலும் அவர் அதிகாரபூர்மவற்ற ஆசிரியையாகவே இருந்தார் .அவரது மாணவர்களில் பலர் இன்றும் இருக்கிறார்கள். அல்போன்ஸாவின் உயிர்தோழியான ஆர்ப்புக்கரை தொண்ணயம்குழி கரோட்டு போங்கவனம் தரவாட்டில் லட்சுமிக்குட்டியம்மா  98 வயதில் இன்றும் உயிருடன் இருக்கிறார். சிறுவயதில் தன் தோழி தனது வீட்டிலேயே நாட்கணக்கில் தங்கி விளையாடியதையும் சேர்ந்து பள்ளிக்கூடம் சென்றதையும் நினைவுகூர்கிறார். அவரது பேட்டிகள் மலையாள் இதழ்களில் வந்திருக்கின்றன

அல்போன்ஸம்மாவின் மாணவர் ஒருவரிடம் நான் நேரில் பேசியும் இருக்கிறேன். அவரைப்பற்றிய அவர்களின் நினைவுகள் மிக ஒளிபொருந்தியவையாக இருந்திருக்கின்றன. சிறுகுழந்தைகளுக்கு சககுழந்தையாகவும் விளையாட்டுத்தோழியாகவும் அவர் இருந்திருக்கிறார். ”என்னை அவர் ஐந்தாம் வகுப்பில் படிப்பித்தார். எனக்கு அவரை டீச்சராக ஞாபகமே இல்லை. நல்ல களித்தோழியாகத்தான் என் ஞாபகத்தில் இருந்தார்” என்று கோட்டயத்தில் 1988ல் நான் சந்தித்த பய்யங்கானம் ராகவன் நாயர் என்ற முதியவர் சொல்லியிருக்கிறார்.

அவரிடம் கல்விகற்ற சிறு குழந்தைகள் அவர்மேல் அளவிலாப்பிரியம் கொண்டிருந்தார்கள். அரைநுற்றண்டு தாண்டியும் அந்த நேரடி நினைவுகள் அவர்களில் நீடித்தன. உண்மையில் ஸிஸ்டர் அல்போன்ஸாவை புனிதராக அடையாளம் கண்டவர்கள் அக்குழந்தைகளே.  அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அக்குழந்தைகள் வழியாகத்தான் கேரளத்தில் மத எல்லை தாண்டி இந்துக்கள் நடுவேயும் அல்போன்ஸம்மாள் பெரும்புகழ் பெற்றார். இன்றும் அந்த செல்வாக்கு நீடிக்கிறது. 

ஆனால் இது ஒருபக்கம். மறுபக்கம் மிகக் கடுமையான உடல் உபாதைகளால் துன்புற்றவராக இருந்தார் அல்போன்ஸம்மாள். மீண்டும் மீண்டும் அவரை மலேரியா நோய் தாக்கியது. கடுமையான வயிற்றுவலியும்  மூட்டுகளில் முடக்குவாத நோயும் இருந்தது. நுரையீரல் வீக்க நோயால் கடுமையான நெஞ்சுவலியும் மூச்சுத்திணறலும் இருந்தன. ஒருவருடம் சுய நினைவிழந்த நிலையில் இருந்திருக்கிறார்.

ஸிஸ்டர் அல்போன்ஸம்மாள்வின் கவிதைகளும் டைரிக்குறிப்புகளும் மலையாளத்தில் பெருந்தொகுப்பாகக் கிடைக்கின்றன. 1986,87 களில் நான் பெரும் ஈடுபாட்டுடன் அவற்றை வாசித்திருக்கிறேன். கவித்துவம் ஏதுமில்லாத எளிய நேரடிப்பதிவுகளான அவ்வரிகள் இயற்கை அளிக்கும் அளவில்லாத உடல்வலியை ஆத்மா எதிர்கொள்ளும் விதத்தைக் காட்டும் மிகச்சிறந்த மானுட ஆவணங்கள் . அக்காரணத்தாலேயே அவை மாபெரும் ஆன்மீகப்பதிவுகளும் கூட.  

துன்பங்களை ஏற்றுக்கொள்வதில் அல்போன்ஸம்மாள்வின் மனம் பல பரிணாமங்களை அடைகிறது. முதல்கட்டத்தில் தன் பாவங்களுக்கும் குறைகளுக்குமான இறைத்தண்டனையாக அவ்வலியை அல்போன்ஸம்மாள் காண்கிறார். அவற்றுக்காக அவர் துயரம் கொள்கிறார். அவற்றின் முன் மண்டியிட்டு பிராத்தனைசெய்து தன்னை தூய்மைபப்டுத்திக்கொள்ள முயல்கிறார். பின்னர் வலி என்பதை இறைசக்தியின் ஆணை என்று அவர் ஏற்கிறார். அதன் வழியாக தான் ஆன்மீகமான படிகளில் மேலேறுவதையும் லௌகீக வாழ்க்கையின் பல தளங்களை விட்டு விலகி நின்று மெய்மையை நோக்குவதையும் காண்கிறார்.

ஆகவே வலியை இறைவனின் பரிசு என்றே பிற்கால கவிதைகளில் குறிப்பிடுகிறார். ‘இந்த நாளில் நீ எனக்களித்த இனிய காதல் பரிசை பெற்றேன்’ என்று அவர் சொல்வது உக்கிரமான உடல்வலியை என்பதை உணரும்போது ஒரு அபாரமான மனஎழுச்சியை அடைந்ததுண்டு நான். காரணம் அன்று நானும் உடலாலும் மனதாலும் சிதிலமாகி அழிவின் விளிம்பில் நின்றிருதேன். ‘எனக்கான சிலுவையை எனக்குக் கொடு’ என்ற அவரது பிரார்த்தனை மிகப்புகழ்பெற்ற ஒன்று 

கடைசிக் கட்டக் கவிதைகளில் அவர் மண்ணில் மலர்கள் விரிவதைப்போல தன்னில் வலி விரிவதை உணர்கிறார். அந்த வலியின்மூலம் கிறிஸ்து அவரது ஐந்து புனிதகாயங்கள் மூலம் அறிந்த வலிக்கு மிக அருகே அவரும் சென்றுவிட்டதாக எண்ணுகிறார். கடைசிக்கட்டக் கவிதைகளில் கிறிஸ்துவிடம் அல்போன்ஸம்மாள் கொண்ட சகஜபாவனை மிக வியப்பளிப்பது. கிறிஸ்துவுக்கு அருகே சென்றமையின் களியாட்டமும் உவகையும் வெளிபப்டும் கவிதைகள் கடைசியில் அவரால் எழுதப்பட்டிருந்தன.

சில கேரள இலக்கிய விமரிசகர்கள் அல்போன்ஸம்மாவின் மன அல்லல்களை மஸோக்கிய மனநிலை என்றும் கடைசியில் அவருக்கும் கிறிஸ்துவுக்கும் உருவான சமபாவனை உறவை ஒரு மனப்பிறழ்வுநிலை என்றும் விளக்க முனைந்துள்ளார்கள். அவையெல்லாம் பலவீனமான கருத்துக் கருவிகளை ஓர் உக்கிரமான அகநிலைமீது போட்டுப்பார்க்கும் முதிரா முயற்சிகள் என்று,  நான் அவற்றை முன்வைத்து வாதிடும் நண்பர் ஷாஜியை மறுத்துச் சொல்லியிருக்கிறேன்.[ நாத்திகரான ஷாஜியிடம் விவாதிக்க லூசி·பரால் மட்டுமே முடியும்.ஆனால் இருவரும் ஒரே தரப்பு.] அல்போன்ஸம்மாள் சென்றது ஒரு மன உச்சம். அதை மதத்துக்குள் வைத்தும் விளக்கலாம் வெளியே நின்றும் புரிந்துகொள்ளலாம். ஆனால் அது எளிய ஒரு வரையறைக்குள் அடங்குவதல்ல.

வலி மனிதனை உடல் மட்டுமாகச் சுருக்க முனையும் மகத்தான சக்தி. மனித ஆன்மாவுக்கு இயற்கை விடுக்கும் ஆகப்பெரிய சவாலே வலிதான். அந்த வலியின் முன் மண்டியிட்டு மன்றாடிக் கதறும் மனிதர்களையே நான் மீண்டும் மீண்டும் கண்டிருக்கிறேன். மனிதனின் விதியே அதுதான்.நாம் ஒவ்வொருவரும் முதுமையில் அந்த பெரும் கதறலுடன் நம் தோல்வியை ஒப்புக்கொண்டு நம் உடலை ஒப்படைக்கப்போகிறவர்கள் மட்டுமே. சிலரே அதை வெல்கிறார்கள். மண்மீது வாழும் பலகோடி மக்களின் பிரதிநிதியாக நின்று அந்த ராட்சத வல்லமைக்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் புனிதர்கள்.

‘இப்போது அம்மா அடைந்த நோயையும் துக்கத்தையும் பற்றி எல்லரும் சொல்றார்கள். காலையிலே குளித்து புன்னகையோடு துள்ளி வரும் அம்மாவை மட்டும்தான் நான் பார்த்திருக்கிறேன்’ என்று பய்யங்கானம் ராகவன் நாயர் சொன்னார். அப்புன்னகை அவர் பெற்ற வெற்றியின் பதாகை. அதை தன் டைரியில் அல்போன்சம்மா ‘வலியின் மென்மையான இசை’ என்று எழுதியிருக்கிறார்.

1946 ஜூலை 28 ஆம் நாள் தன் 36 ஆம் வயதில் அல்போன்ஸம்மாள் மரணம் அடைந்தார். அப்போது அந்த மரணம் பெரிதாகப்பொருட்படுத்தப்படவில்லை. அவத்து உடல் அடக்கத்துக்கு மிகச்சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். ஆனால் பின்னர் அவர் குழந்தைகளின் நினைவில் மறுபிறப்பு எடுத்தார். அவர்கள் அவரை மறக்கவே இல்லை. தங்கள் கனவுகளில் வந்தார் என்று காய்ச்சல் கண்ட குழந்தைகள் சொன்னார்கள். பய்யங்கானம் ராகவன் நாயர் டை·பாய்ட் கண்டு கிடந்த இளமைநாட்களில் ஜுரக் கனவில் அல்போன்ஸம்மாள் வந்து புன்முறுவல்செய்திருக்கிறார்.

அவரது கல்லறையில் வேண்டிக்கொண்டால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைப்பதாக குழந்தைகள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை சிலவருடங்களில் வலுப்பெற்றது. குழந்தைகளுக்கு நோய் வந்தால் பெற்றோர் அங்கே வேண்டுதல் செய்ய ஆரம்பித்தார்கள். மெல்லமெல்ல அல்போன்ஸம்மாள் மக்கள் மனதில் புனிதராக ஆனார். 1986 ல் இந்தியா வந்த போப் இரண்டாம் ஜான் பால் அல்போன்ஸம்மாவை முக்திபேறு பெற்றவராக அடையாளம் காட்டினார். இப்போது அவர் புனிதர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

மண்ணைப்போல அனைத்தையும் தாங்கி வளத்தை மட்டுமே அளிக்கும் இந்தியப்பெண்மையின் சித்திரத்தை நம் இலக்கியங்கள் மீண்டும் வரைந்து காட்டுகின்றன. ‘சர்வம்சஹை’ என்று சீதையை வருணிக்கும் வான்மீகி அவளை மண்ணின் மகளாகவே காட்டுகிறார். கம்பன் அவளுக்கு ‘புவி’ என்றே பெயர் சொல்கிறான். அல்போன்ஸம்மாள் இந்தியப்பெண்மையின் அலகிலாப் பொறுமைக்கும் கருணைக்கும் இன்னொரு மகத்தான சான்று. [  மறுபிரசுரம் முதல்பிரசுரம் அக்டோபர் 13 2008]

முந்தைய கட்டுரைபெண் எழுத்தாளர்கள் – மனுஷ்யபுத்திரன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41