ஞானக்கூத்தன் பற்றி இசை

உன்னதங்களின் பொந்திற்குள் புகுந்துவிளையாடும் எலிக்குஞ்சு

[ஞானக்கூத்தன் கவிதைகளை முன்வைத்து .. ]

DSC_3492[1]

2000 க்கு பிறகு தமிழ்கவிதைகளுக்குள் நிகழ்ந்த பெருவிளையாட்டுக்களுக்கு ஒரு விதத்தில் சி.மணி, ஞானக்கூத்தன் ஆகியோர் துவக்கப்புள்ளிகள். ஞானக்கூத்தனின் விளையாட்டு சி.மணியைக்காட்டிலும் வெளிப்படையானதும் எளிமையானதுமாகும். மரபின் காதும் நவீன மனமும் கொண்டவை என ஞானக்கூத்தன் கவிதைகளைச் சொல்லலாம்.இவரின் சில கவிதைகள் தனிப்பாடல் திரட்டின் கவிதைகளை நமக்கு நினைவூட்டுபவை. ஆனால் பல தனிப்பாடல்களுக்கு கவிதை அந்தஸ்து கிடையாது. அவை வெற்றுவிளையாட்டுகள். ஞானக்கூத்தன் கவிதைகளில் உள்ளது ”விளையாட்டு பாவனை”.

“ ஊர்புகழும் மார்கழியை
ஏன் டிசம்பர் கைவிட்டுப் போகிறது.

என்றொரு சிறிய கவிதை..

பார்க்க ஒரு “ சுவாரஸ்யமான துனுக்கு “ போல தென்படும் இவ்வரிகளுக்குள் புத்திஜீவிகள் என்றும், கலையாளுமைகளென்றும் போற்றப்படும் மனிதர்களின் துயரவாழ்க்கை அலையடிப்பதை காணமுடிகிறது. ஊரே அடிவிழுந்து வணங்கியும் என்ன டிசம்பருக்கு வேண்டியது மார்கழியிடம் இல்லை போலும் ?

எனது நவீனக்கவிதை வாசிப்பின் துவக்கத்தில்,

“ பொய் சொல்லாமல் சொல்லுங்கள்
உங்கள் குசுவிற்கு நீங்களே
மூக்கைப்பொத்திக்கொண்டதுண்டா ?

என்றொரு வரியைப் படித்தேன்.படித்தமாத்திரத்தில் மூக்கைப்பொத்திக்கொண்டேன். கவிதை என்கிற உன்னதத்தில் இருந்து எழுந்த கெட்ட நாற்றத்தை என்னால் ஜீரணிக்க இயலவில்லை.

தமிழ்சினிமா 1931 ல் பேசத்துவங்கியதாக சொல்கிறார்கள் அதன் கதாநாயகர்களில் யாருக்கும் 80 ஆண்டுகளாக குசு வரவில்லை. கடைசியில் 2011 ஆம் ஆண்டு தோழர் தனுஷும், தோழர் செல்வராகவனும் சேர்ந்து அந்த “ சின்ன காற்று புரட்சியை “ நிகழ்த்திக்காட்டினார்கள். இந்தப் புரட்சியை நாயகி பாவத்திற்குள் நகர்த்துவதற்கு குறித்து நம்மால் யோசித்துப்பார்க்கவே முடியவில்லை. இப்படியாக நாம் மாசற்றதற்கு ஏங்குகிறோம். மாசற்றதையும் மகத்தானதையும் ரொம்பவும் ஆராதிக்கிறோம். மாசற்ற அழகு.. மகத்தான அன்பு… மாசற்ற கவிதை.. மகத்தான சித்தாந்தம்.. மாசற்ற மொழி.. மகத்தான தலைவர் ..என. இப்படியாக நாம் பளிங்கில் கீறல்களைப் பொறுப்பதில்லை. லட்சியத்தின் உடலில் ஒரு சின்ன அழுக்குத்திட்டைக் காட்டினால் ” பார்க்கமாட்டேன் “ என்று நாம் தலையைத் திருப்பிக் கொள்கிறோம்.

ஆனால் ஞானக்கூத்தன் அவற்றை கண் திறந்து பார்க்கிறார். புனிதங்கள் எப்படி எல்லா லூட்டிகளையும் அடித்துவிட்டு புனிதங்களாகவே இருக்கின்றன என்பதை அவர் பார்க்கிறார். அங்கிருந்து எழுகிறது அவர் சிரிப்பு. அங்கிருந்து எழுகிறது அவர் கவிதை. அங்கிருந்து தான் அவர் நடராஜருக்கு நிபந்தனை விதிக்கிறார். ”ஆடலரசே ! எப்படியாயினும் ஆடு.. உன் ஆட்டத்தில் திக்குகள் எல்லாம் சிதறட்டும்.. ஆனால் என் எண்ணெய்ப்புட்டி சிதறிவிடக்கூடாது. அது நடக்காதவரை உனக்கு என் மேசையில் இடமுண்டு.” அது நடக்காத வரைதான் உனக்கு என் மேசையில் இடம் என்று கட்- அண்ட் – ரைட்டாக சொல்லிவிடுகிறார்.

“ எல்லா மொழியும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில் ஒன்று “

என்று நிதானமாக பேசுகிறார்.

எல்லோரும் குடியானவன் ஏமாற்றப்பட்ட கதையை சொல்லிக்கொண்டிருக்கையில் ஞானக்கூத்தன் குடியானவன் ஏமாற்றிய கதை ஒன்றை சொல்கிறார். அப்படி சொல்ல அவருக்கு பூரண உரிமையும் சுதந்திரமும் உண்டு. அந்தச் சுதந்திரத்தை வெளிப்படையாகவும் தைரியமாகவும் கைக்கொண்டவர் ஞானக்கூத்தன். கலை எப்போதும் விடுபடல்களை கோர்த்தெடுக்கவே விரும்புகிறது. அதுவே அதன் ஆதார குணம் என்கிற வகையில் ஞானக்கூத்தனின் சர்சைக்குரிய கவிதைகள் விவாதங்களுக்கான முக்கியத்துவத்தை பெறுகின்றன. பெரும்பான்மையின் பலத்தில் நிற்கும் சமூகநீதியல்ல கவிதையின் நீதி. அது முழுமுற்றான நீதிக்கே ஏங்குகிறது. அதன் கையிற்கு அவ்வளவு உயரம் எட்டுகிறதோ இல்லையோ அது அந்தக்கொம்பை தொட்டுவிடத்தான் எம்பி எம்பிக்குதிக்கிறது.

கவிதையின் ”உம்மனாம் மூஞ்சியை” சிரிக்க வைத்த பெருமை ஞானக்கூத்தனுக்கு உண்டு. பேசிக்கொண்டிருந்த நவீனகவிதையை பாட வைத்த பெருமையிலும் அவருக்கு பங்குண்டு. அவருடைய சில கவிதைகள் புரியும்முன்னே நம்மை மயக்கிவிடும் மாயம் கொண்டவை. சில கவிதைகளை வாசித்து முடித்ததும் ஒரு பாட்டுப்பாடி முடித்த மனமகிழ்ச்சி நம்மை தொற்றிக்கொள்கிறது. இந்த இன்பத்திற்காகவும் அந்தக் கவிதைகளை அர்த்தசுமையின்றி திரும்ப திரும்ப வாசிக்கலாம்.
பவழமல்லி என்றொரு கவிதை…

பவழமல்லி
கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா
மாடிக்கொட்டைக்குப் போய் விடுவார் அப்பா
சன்னத்தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத்தம்பி தூங்கிவிடும்
சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் – மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி

கதைமுடிந்து தாய்திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழுநிலவில்- அந்த நேரத்தனிமையிலே
என் நினைப்புத் தோன்றுமோடி ?

இந்தக்கவிதையை காதலில் இல்லாதவர்களும் வாசிக்கலாம். காதலில் உள்ளவர்களுக்கு சுவை அதிகம். உவமைகள் என்னை அரிதாகத் தான் ஈர்க்கும். ஞானக்கூத்தன் கவிதைகளில் என்னை ஈர்த்த சில உவமைகளை என் சந்தோசத்திற்காக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

” …………………………………….
……………………………………….
தோப்புபனைகள் தொலைவாக
தாழைப்புதர்கள் உரசாமல்
நடக்கும் அவரைத் தெரிகிறதா ?

கையில் கொஞ்சம் நிலமுண்டு
ஸ்டேஷன் மாஸ்டர் கொடி போல
உமக்கு இருந்தால் தஞ்சையிலே
நீரும் நடப்பீர் அது போல “
( காலைநடை )
“ ஊதாமசியில்
வெள்ளைத்தாளில் பதித்த
இடதுகைப் பெருவிரல் மாதிரி
விண்ணில் மேகத்திட்டுக்கள் “

( நெல் மேல் வரைந்த “ அ” )

உவமையல்ல ஆயினும் இந்த “ போல “ வும் என்னைக் கவர்ந்தது.

“ இரயிலின் கடைசிப்பெட்டியின் பின்புறம் போல்
சோகம் தருவது உலகில் வேறேது ?
( கடைசீப்பெட்டி )

DSC_3501[1]

பகடி செய்யும் கவிஞனுக்கு ஒரு பெரிய சிக்கலுண்டு.. அவன் என்ன சொன்னாலும் அதைப் பகடி என்பார்கள். துரதிருஷ்டவசமாக பகடியின் நிழல் அவனின் அநேக எழுத்துக்களில் எங்கேனும் ஒரு மூலையில் விழுந்தும் தொலைத்து விடுகிறது. அவன் மழையில் வழுக்கி விழந்தான் எனில் அவனுடைய வாசகன் கைகொடுத்து தூக்கி விட்ட படியே ”பிரமாதம் சார்.. பகடியாக வழுக்கி விழுந்தீர்கள் “ என்று சொல்வான். பிறகெப்படி பொச்சுக்காயத்தைக் காட்டுவது. ”மிக்க நன்றி” என்று சொல்லிவிட்டு நகர வேண்டியது தான். தான் விசைப்பலைகையில் கண்ணீர் சிந்தி எழுதிய வரிகளைப் படித்துவிட்டு ஊர் விழுந்துவிழுந்து சிரிப்பதை அவன் பார்க்கிறான். அப்படி சிரிப்பதில் அவனுக்கு வருத்தம் ஏதுமில்லை.ஒரு விதத்தில் அவன் விரும்பியதும் அதையே.

ஆனால் அவன் எழுதுவது கவிதை என்றும் கவிதையின் குணாம்சம் வெறுமனே சிரிப்புக்காட்டுவது அல்ல என்றும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ”அந்திமம்” என்கிற ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று உண்டு.. அந்தக் கவிதையிலும் ஒரு சின்ன சிரிப்பு சாயல் உண்டு தான். ஆனால் அந்தக் கவிதைக்குள் இருப்பவன் ஒரு நிராசையான மனிதன். அவன் தன் வாழ்வு இன்னும் தொடங்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அது முடிந்து விட்டதாக சொல்கிறார்கள்.. ” கிளம்பு …கிளம்பு “ என்று அவசரப் படுத்துகிறார்கள். அவன் விழிக்கடை நீருடன் ” போக மாட்டேன் “ என்று அங்கேயே நிற்கிறான்…

அந்திமம்

பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்
மரம்பட்ட
சாலைக்கென்னை
அனுப்பும் முன்
பேரைக் கொஞ்சம்
சோதித்துப் பாருங்கள் ஸார் .

‘ இலைமேல் எழுதும் இந்தியன் “ கவிதையை தமிழகஅரசு தன் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்க நான் ஆணையிடுகிறேன்… சரி.. பரிந்துரைக்கிறேன்.. சரி.. கோருகிறேன்.. சரியப்பா.. கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே அழுகிப்போன ஆப்பிளை ஃப்ரிஜில் தூக்கி வைத்துவிட்டு ”கெட்டுப்போய்விடப்போகிறது.. கெட்டுப்போய்விடப்போகிறது..” என்று நாம் தவிக்கும் தவிப்பிருக்கிறதே … பிரமாதமான நடிப்பு. சார், வழக்கமாக சொல்லிக்கொள்ளும் நொண்டிச்சமாதானம் தான். அந்த நீக்ரோ பெண்ணைக் கட்டித்தழுவிக்கொண்ட முட்டாள்களால் – நமது சந்தோஷத்திற்காக அவர்கள் கொஞ்சநேரம் முட்டாள்களாக இருக்கட்டும் _ தங்களைப்போல அந்தக் கணத்தை இப்படி உறையவைக்க முடியவில்லை இல்லையா? நீங்கள் பாரீஸ்நகரத்தையே வெட்டிக் கொண்டு வந்துவிட்டீர்கள் அல்லவா ? நமக்கு வாய்த்ததெல்லாம் இப்படி பத்து.. பத்து வரிகளைத் தவிர வேறென்ன சார் ? ஒரு கவிதையுடன் இந்த உரையை நிறைவு செய்ய நினைக்கிறேன். கவிதை ஞானக்கூத்தனுடையதல்ல என்னுடையது..

அவரும் நானும்

இந்தாருங்கள், ஓர் உன்னதம் என்று
அவரிடம் நான் நீட்டிக்காட்ட
அவரதை நுனுகிப்பார்த்து
“யுரேகா.. யுரேகா… “
என்று
வெற்றிக்களிப்பில் கூச்சிலிட்டார்.

அங்கே பாருங்கள், ஓர் உன்னதம் என்று
நான் கண்டு சுட்டிக்காட்ட
அவரதை கூர்ந்து நோக்கி
“யுரேகா.. யுரேகா… “
என்று
மகிழ்ச்சியில் கெக்கலித்தார்.

வேறெங்கும் போக வேண்டாம்..
உங்கள் பக்கத்தில் பாருங்கள், ஓர் அதிஉன்னதம்
என்று நான் முகஞ்சிவந்து சீறி எழ
“யுரேகா.. யுரேகா… “
என்றவர்
பொறுமையாய் முனுமுனுத்தார்.

ஐயா,

ஓட்டை இல்லாததென்று வையத்தில் ஒன்றுமில்லை
சரிதான் விடுங்கள் என்றேன்.
உன்னதங்களைக் கட்டிக்கொண்டு நானழுவதென்றும்
ஓட்டைகளைக் கட்டிக்கொண்டு அவரழுவதென்றும்
சமரசம் கண்டது சர்ச்சை.

[28-12-2014 அன்று கோவையில் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்குவதை ஒட்டி நிகழ்ந்த விழாவில் ஆற்றப்பட்ட உரை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74
அடுத்த கட்டுரைவிழா கடிதங்கள் 2