இந்தியப்பயணம் 23, முடிவு

ஒரு பயணம் எப்படி முழுமைபெற வேண்டுமென்றால் அடுத்த பயணம் பற்றிய எண்ணத்துடன், திட்டத்துடன் தான். இந்தப்பயணத்தில் நாங்கள் திட்டமிட்டதைவிட அதிகமாகவே பயனம்செய்தோம். நினைத்ததைவிட அதிகமாகவே பார்த்தோம். ஆனாலும் முடிவில் ஏக்கமும் அதிருப்தியும்தான் எஞ்சியது. குறிப்பாக திரும்பிவரும் அவ்ழியில் நாங்கள் பார்க்காமல் விட்ட இடங்கள்தான் அதிகம். ராஜகிருஹம் முக்கியமான விடுபடல் என்றால் புவனேஸ்வர், அதன் அருகே உள்ள உதயகிரி குகைக்கோயில்களும் மேலும் விடுபடல். இன்னொரு முறை சென்னையிலிருந்து கடலோர ஆந்திராவழியாக புவனேஸ்வர் வந்து வங்கம் வழியாக அஸாம் சென்று வடக்கு பிகாரில் நுழைந்து வரவேண்டும் என்று ஒரு திட்டத்தைப் போட்டோம்.

செப்டெம்பர் 18 ல் புவனேஸ்வரிலிருந்து கிளம்பிய நாங்கள் எங்கும் நிற்காமல் நேராக விசாகப்பட்டினம் நோக்கி வந்தோம். ஒரிஸாவின் மலைப்பாங்கான சாலைவழியாக வந்தபோது அங்குள்ள வாழ்க்கையின் சித்திரம் – அல்லது ஒரு பிரமை- உருவாகியது. அதிகமும் குறுங்காடுகள் மண்டிய அகன்ற மலைப்பகுதி அது. கண்ணில்பட்டவர்கள் அனைவருமே மாடு மேய்க்கும் பழங்குடிகள். எங்களூரில் பனையோலையால் தொப்பிக்குடைசெய்து வைத்துக்கொள்ளும் பழக்கம் முன்பு இருந்தது. இப்போதும் வயலில் மழையில்வேலைசெய்ய அது மிக ஏற்றது. அதைப்போல சிறியதாகச் செய்து தொப்பியாக வைத்திருந்தார்கள். மரப்பட்டைகளை வெட்டிச்செய்த காலணிகள் -அவை அணிகளா என்ன?- இருந்தன. பெரும்பாலான பழங்குடிப்பெண்கள் ஜாக்கெட் அணியவில்லை. சிலர் இரும்பாலான நகைகளை அணிந்திருந்தார்கள். கரியமுகம் ,வெண்ணிறப்பற்கள்.

ஒரிஸாவின் பழங்குடிகளின் எண்ணிக்கை மிகப்பெரிது. அவர்கள் இன்றுவரை கடுமையான ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானவர்களாகவே இருக்கிறார்கள். அங்குள்ள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள் அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார்கள். அதச் சாதியினரே காங்கிரஸ் பாரதியஜனதா கம்யூனிஸ்டுகட்சி மூன்றிலும் பொறுப்பிலிருப்பவர்கள். அதிகார வற்கமும் அவர்களே. அறிவுஜீவிகளும் அவர்களே.

ஆகவே ஒரிஸாவின் ஆதிவாசிகளின் மீட்புக்கான வாசல்கள் முழுமையாகவே மூடப்பட்டுள்ளன. ஓர் உதாரணம் சொல்லலாம், அறுபது வருடம் முன்பு ஹிராகுட் அணை கட்டப்பட்டபோது வெளியேற்றப்பட்ட பழங்குடியினருக்கான இழப்பீட்டில் 10 சதவீதம் கூட இன்னும் அளிக்கப்படவில்லை. பழங்குடிகளுக்கான தொகைகள் ஊழல் செய்யப்பட்டன. இழுத்தடிக்கப்பட்டன. ஆவணங்கள் கோரி பழங்குடிகள் அலைக்கழிக்கபப்ட்டார்கள். இன்று அப்பபழங்குடிகள் நகரங்களில் பிச்சைக்காரர்களாக ‘கரைந்து’ போய்விட்டார்கள். [கெ.சி.நாராயணன் எழுதி நான் மொழியாக்கம்செய்த ‘பலியபாலின் பாடங்கள்’ என்ற கட்டுரை முன்பு ஞானியின் ‘நிகழ்’ இதழில் வெளிவந்தது. அதில் முழுமையான தகவல்கள் உள்ளன]

மலைகளில் சுள்ளிபொறுக்கியபடி பழங்குடிகள் நடந்துசென்றார்கள். ஒரு ரயில்வே கேட் அருகே வசந்தகுமார் சிலரை படம் எடுத்தார். அவர்களின் சிரிப்பு கண்களில் பொங்கியது. மலைச்சாலையில் வரும்போது காட்டுக்குள் இருந்து வேலைக்கு வந்த பழங்குடிப்பெண்கள் சாலையோரம் நின்று ரதஊர்வலம் வரும் கடவுளை சேவிப்பதுபோல தலைக்குமேல் கைகூப்பியும் தரையை தொட்டு கும்பிட்டும் லாரிகளில் லி·ப்ட் கேட்கும் காட்சி துணுக்குறச் செய்தது. நாம் கட்டி எழுப்பியிருக்கும் இந்த தேசியநாகரீகத்தின் காலடியில் அவர்கள் விழுந்து இரப்பதுபோல தோன்றியது.

ஒரிஸாவிலிருந்து கடலோர ஆந்திராவுக்குள் நுழைந்தபோது காட்சி மாறியது. பொதுவாகவே இந்தியாவில் ஒரு நிலை உண்டு. மேற்கு கிழக்குக் கடற்கரை ஓரங்கள்செல்வ வளம் கொண்டவை. நெருக்கமாக மக்கள் வாழ்பவை. நடுஇந்தியா கிட்டத்தட்ட காலியாகவே கிடக்கிறது. இப்பகுதியில் மக்கள் செறிந்த சாலைச்சந்திப்புகள். சரக்குகள் நிறைந்த கடைகள். செல்போன் விளம்பரங்கள். இன்றைய இந்தியாவின் காட்சி. இரட்டைச்சக்கர வாகனங்கள் நிறைய இருந்தாலே மத்தியவற்கம் வலுப்பெற்று வருகிறது என்றே பொருள். அத்தகைய பொருளியல் வளர்ச்சி இருக்குமிடத்தில் நாம் உடனே காண்பது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடைப்பெயர்கள்தான்.

விசாகப்பட்டினமருகே என்ற ஊரில் ஒரு விடுதியில் இரவு தங்கினோம்.சலியாத நெடும்பயணத்தால் களைப்பு. ஆனாலும் என் சட்டையை துவைத்து பேண்ட்டேன். இந்தப்பயணத்தில் நான் இரண்டு கால்சட்டைகளையும் இரண்டு சட்டைகளையும்தான் பயன்படுத்தினேன். அதிலும் ஒரு கருப்பு பாலியெஸடர் சட்டையை பத்துநாட்களுக்கும் மேலான போட்டேன். ஆனால் ஒருநாள்கூட அழுக்காகபோடவில்லை. இரவே துவைத்து பிழித்து உதறி தலைதுவட்டும் துண்டால் நன்றாக துடைத்து மின்விசிறிக்காற்றில் காயவிட்டுவிடுவேன். காலையில் புதியது போல எடுத்து போட்டுக்கொள்வேன்.

செப்டெம்பர் பத்தொன்பதாம் தேதி காலையில் கிளம்பி சென்னைநோக்கி விரைய ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட எண்ணூறு கொலோமீட்டர். பகல் முழுக்க பயணம்தான். ஆனால் சாலை மிக அற்புதமான நாலுவழிச்சாலை. நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில் செல்ல ஏற்றது. இந்தியாவில் நாங்கள் பார்த்த ஆகச்சிறந்த சாலை இதுதான். வழியெங்கும் தொழிற்சாலைகள், பாரமேற்றிய லாரிகள், நல்ல வீடுகள், மக்கள் நெரித்த சந்திப்புகள். ஆம், தெற்கு வாழ்கிறது வடக்கு தேய்கிறது!

கல்பற்றா நாராயணனிடம் இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் மற்ற நண்பர்களிடம். இளையராஜாவின் பழைய பாடல்கள் முந்நூறு இருந்தன. அவற்றை கேட்டோம். காலையில் ஒரு சாலையோரக்கடையில் இட்டிலி தோசை சாப்பிட்டோம். நெடுங்காலம் கழித்து சொந்த உணவுக்கு வந்துசேர்ந்த உணர்வை அளித்தது காரச்சட்டினி.

மாலையில்சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது சாலை விபத்து ஒன்றைப்பார்த்தோம். சாலைநடுச்சுவரில் முட்டி கோணலாக நின்ற  லாரி ஒன்றிலிருந்து  முன்கண்ணாடியின் உடைசல் வழியாக ஒரு சர்தார்ஜி வாழைக்குலை போல செத்து தொங்கிக்கொண்டிருந்தார். இந்த அதிவேகச்சாலைகளின் இயல்பே அதுதான். விபத்தென்றாலே வீரமரணம்தான்.

நள்ளிரவுதாண்டி சென்னைக்குள் நுழைந்தோம். சென்னை முகப்பிலேயே எங்களை போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். ‘எங்கே செல்கிறீர்கள் ,எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்றார். உள்ளே லைட் போடும்படிச் சொல்லி பரபரப்பான கண்களால் கூர்ந்து நோக்கினார். நாங்கள் திருப்பதி சென்றுவருவதாகச் சொன்னோம். செந்தில் அவர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் என்றார். மேலும் சில கேல்விகள். அதற்குள் ஏட்டு வந்து இன்னும் பரிசோதனை செய்துவிட்டு போங்கள் என்றார்.

எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் கிளம்பி மீண்ட இந்த 18 நாட்களில் ஒரு இடத்தில்கூட ஒருமுறைகூட போலீஸ் அல்லது வேறு எந்த அதிகார அமைப்பும் எங்களை தடுக்கவில்லை. எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. வண்டி எண்கூட குறிக்கபப்டவில்லை — டோல்கேட்டுகளில்தவிர. சொல்லப்போனால் நாங்கள் போலீஸையே பார்க்கவில்லை. கஜுராஹோவில் தடுத்து நிறுத்தி லஞ்சம்கேட்ட போக்குவரத்துக் காவலரைத்தவிர. செந்தில் இறங்கிச் சென்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்றதுமே போகச்சொல்லியும் விட்டார்கள். காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு தீவிரவாதிகளின் மிரட்டல் இருப்பதனால் கடும் காவல்போட்டிருந்தார்கள். எங்கும் காவலர்கள். பாதிபெர் தூங்கினார்கள். மீதிப்பேர் ஏறிட்டே பார்க்கவில்லை. நள்ளிரவுகளில் பல நகரங்கள் முற்றிலும் காவலில்லாமல் திறந்து கிடந்தன. இந்தியா எல்லாவகையான குற்றச்செயல்களுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் திறந்து விடப்பட்டிருக்கிறது, சென்னையைத்தவிர!

வசந்தகுமார்ரும் கல்பற்றாநாராயணனும் இறங்கிக் கொண்டு ஆட்டோ ரிக்ஷா பிடித்து விடைபெற்றுச் சென்றார்கள். கல்பற்றா நாராயணன் இரவு ஒருமணிக்கு ரயில் பிடித்து கோழிக்கோடுசென்றார். நாங்கள் செந்திலின் வீட்டுக்குச் சென்றோம். உடனேயே படுத்துக் கொண்டோம். நல்ல களைப்பில் பயணம் முடிந்து வந்து தூங்குவது ஒரு அபூர்வ அனுபவம். கண்டகாட்சிகள் எல்லாம் கலங்கி அற்புதமான ஒரு புது உலகம் பிரக்ஞையில் ஓடிக்கொண்டிருக்கும். என் அரைக்கனவில் நான் சிற்பங்களை கண்டுகொண்டிருந்தேன். மண்ணில் எவருமே செய்திராத அபூர்வமான சிற்பங்களை

 ஆடுமேய்க்கும் பழங்குடிப்பெண்…

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

கல்பற்றா நாராயணன். மலையாளக் கவிஞர்.  உரைநடையில் கவிதை எழுதுபவர்களில் முக்கியமானவர். அவரது கவிதைகள் பல இவ்விணைய இதழில் என்னால் மொழியாக்கம்செய்யபப்ட்டுள்லன

செந்கில். ஈரோட்டைச் சேர்ந்தவர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இலக்கிய வாசிப்பு கொன்டவர்.ஜாமீன் எடுத்துக்கொடுப்பது தொழில். எழுத்தாளர்களுக்கு இதுவரை எடுத்ததில்லை

சிவா. ஈரோட்டில் புகைபப்டப்பொருட்களுக்கான ஏஜென்சி வைத்திருக்கிறார். நல்ல இலக்கிய வாசாகர். சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளிலும் ஆர்வம் உண்டு. எங்கள் பயணங்கலில் முக்கியமான சாரதி

கிருஷ்ணன். ஈரோட்டு வழக்கறிஞர். அதி தீவிர இலக்கிய வாசகர். எதையும் மறுக்க வேண்டும், அம்மறுப்பை மீறி நம்மிடம் வந்துசேர்பவையே தகுதி கொண்டவை என்ற கோட்பாடு கொ ண்டவர். கோர்ட்டுக்கு வெளியிலும் வாதாடுபவர்

ரஃபீக் பாபு. ஓட்டுநர். அவரது செவர்லே டவேரா தான் எங்களை கொன்டுசென்றது. தண்ணீர் கண்ட இடத்தில் எல்லாம் காரை குளிப்பாட்டுவது பொழுதுபோக்கு. காரை கொஞ்சி முத்தமிடுவதும் உண்டு

ஆந்திராவின் காரம் ஊர் வந்துவிட்ட சேதியைச் சொன்னது. ஆந்திராவில் பெண் தொழில் முனைவோர் மிக அதிகம். பெரும்பாலான கடைகளை பெண்களே நடத்துகிறார்கள்

**

புகைபப்டங்களை எடுத்தவர் வசந்தகுமார். தமிழினி உரிமையாளர். எப்போதும் கம்மென்று இருக்க விரும்புபவர். எந்த படத்திலும் தோன்றுவதில்லை என்ற கொள்கை கொன்டவர். 

முந்தைய கட்டுரைபயணம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல்,கம்பன்:இருகடிதங்கள்