‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 2

கர்ணன் காலையில் துரியோதனனின் மாளிகைக்குச் சென்றபோது கூடத்தில் சுபாகுவும் ஜலகந்தனும் அமர்ந்திருந்தனர். அவனைக்கண்டதும் எழுந்து வணங்கி “மூத்தவர் படைக்கலச்சாலையில் இருக்கிறார் மூத்தவரே” என்றனர். “அழைத்துச்செல்லுங்கள்” என்றான் கர்ணன். அவர்கள் அவனை அழைத்துச்செல்லும்போது மெல்லிய புன்னகையுடன் “நெடுநாட்களுக்குப் பின்னர் கதாயுதத்தை கையில் எடுக்கிறார் இல்லையா?” என்றான். “ஆம், மூத்தவரே. அவருக்கு என்ன ஆயிற்று என்றே எங்களுக்கு அச்சமாக இருந்தது. குடிப்பதும் உறங்குவதுமன்றி எதையுமே அவர் நீணாளாகச் செய்யவில்லை. இப்போது மீண்டுவிட்டார்.”

கர்ணன் புன்னகையுடன் தலையசைத்தான். “விடிகாலையில் எழுந்து கதையை எடுத்தார். இன்னும் கீழே வைக்கவில்லை. ஏழுவருட இடைவெளிக்குப்பின் இப்படி ஒரேவிரைவாக ஈடுபடலாகாது என்று களப்பயிற்சியாளர் சொன்னார். ஆனால் மூத்தவர் எதையும் செவிகொள்ளவில்லை.” கர்ணன் இடைநாழியினூடாகச் செல்கையில் ஒரு தூணருகே ஆடியபடி நின்று ,கீழே விழுந்து கிடந்த சால்வையை குனியாமல் எடுக்க முயன்றுகொண்டிருந்த குண்டாசியைக் கண்டு ஒரு கணம் திகைத்து “அது யார், குண்டாசியா?” என்றான். குண்டாசி மிகவும் மெலிந்து தோளெலும்புகள் புடைத்து கைமூட்டுகள் திரண்டு எழுந்து, கழுத்தில் புடைத்த குரல்வளையுடன் எலும்புருக்கி நோயாளி போல் இருந்தான்.

”அவனால் பாண்டவர்கள் இறந்த விதத்தை தாளமுடியவில்லை” என்றான் ஜலகந்தன். கர்ணனுக்கு எவ்வளவு தெரியும் என அவன் ஐயப்படுவது தெரிந்தது. அவன் விழிகள் சுபாகுவின் விழிகளை தொட்டுச்சென்றன. கர்ணன் “ஆம், பெரிய சதிகளை முதிரா மனங்களால் தாள முடிவதில்லை” என்றான். சுபாகு அவனை அறியாமலேயே ஜலகந்தனை நோக்கிவிட்டு அருகே வந்து கர்ணனின் கைகளை பற்றிக்கொண்டு “என்னாலும் மாதக்கணக்கில் துயில முடியவில்லை மூத்தவரே. பித்துப்பிடித்தவனைப்போல இருந்தேன். இப்போதுகூட அவர்கள் என் கனவில் வருகிறார்கள். அவர்களுக்கு ஆலயம் அமைத்துவிட்டால் சரியாகிவிடும் என்றான் நிமித்திகன். ஆனால் பிதாமகர் பீஷ்மர் அதற்கு ஒப்பவில்லை. அவர் வேறு நிமித்திகர்களைக் கொண்டுவந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஆலயம் அமைத்தால் போதுமென்று சொல்லிவிட்டார்” என்றான்.

குண்டாசி கர்ணனை திரும்பி நோக்கினான். அவன் கண்கள் குழிந்து எலும்புவளையத்திற்குள் கலங்கிய சேற்றுக்குழி போல அசைந்தன. கன்ன எலும்புகள் புடைத்து ,பற்களுடன் மோவாய் முன்னால் எழுந்து ,அவன் முற்றிலும் இன்னொருவனாக தெரிந்தான். சுபாகு “பெருங்குடிகாரன். காலைமுதல் இரவு வரை குடிக்கிறான்” என்று மெல்ல சொன்னான். குண்டாசி கர்ணனை நோக்கி கைவிரலைச் சுட்டி சித்தம் அசைவிழந்து ஒருசில கணங்கள் நின்றான். பின்னர் “நீங்கள் கர்ணன்… ஆ!அங்கநாட்டரசே! அங்க மன்னரே! ஆ!” என்றான். சுபாகு “விலகு… தள்ளிப்போ” என்று கையை ஓங்கினான். குண்டாசி வாயில் வழிந்த எச்சிலை கையால் துடைத்து உதடுகள் கோணலாக இழுபட சிரித்து “ஆகா, அங்க மன்னர்! ஆ!” என்றான்.

கர்ணன் அவனிடம் ஏதும் பேசாமல் கடந்து சென்றான். குண்டாசி ”அங்க மன்னரே, நான் மதுவருந்தியது உண்மை. மது என்பது… ஆனால் அதை விடுங்கள். நல்லவர்கள் மது அருந்தலாம் என்று மருத்துவ நூல்கள் சொல்கின்றன. நல்ல உணவுக்குப்பின் மது என்பது… ஆனால் அதுவும் தேவையில்லை. நீங்கள் அங்க மன்னர். ஆனால்…” என்று சொல்லி சிரித்து “எனக்குத் தெரியும். நீங்கள் துரியோதன மாமன்னரை எரித்துக்கொன்றுவிட்டு அஸ்தினபுரியின் அரசனாக விரும்புகிறீர்கள்… அங்க மன்னரே, நில்லுங்கள்” என்று குழறினான். கர்ணன் அருகே வந்ததும் கைநீட்டி கர்ணனை பிடிக்கவந்தான். சுபாகு திரும்பி “போடா” என்று அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான்.

“ஆ” என்று கன்னத்தைப் பொத்தி அலறியபடி குண்டாசி நிலத்தில் குந்தி அமர்ந்தான். “எல்லோரும் என்னை அடிக்கிறார்கள்! அம்மா, என்னை அடிக்கிறார்களே! அம்மா!” என்று அழத்தொடங்கினான். கர்ணன் திரும்பி நோக்காமல் நிமிர்ந்த தலையுடன் நடந்தான். மறுபக்கம் படியிறங்கி உள் முற்றத்தை அடைந்தபோதே களத்தின் ஓசைகள் கேட்கத் தொடங்கின. “முன்கால், மறுகால், துதி, முன்கால், மறுகால், துதி, முன்கால், மறுகால்” என்று களத்தாசான் உரக்க வாய்த்தாரி சொல்லிக்கொண்டிருந்தார். கர்ணன் களத்தை அடைந்ததும் அனைவரும் திரும்பி நோக்கினர். துச்சாதனனிடம் கதை பொருதிக்கொண்டிருந்த சத்யசந்தனின் தோளில் கதை விழ அவன் ”ஆ” என்று அலறி பொத்திக்கொண்டு அமர்ந்தான்.

துச்சாதனன் ”எந்நிலையிலும் உன் விழி விலகக்கூடாது. கதை ஒரே ஒரு அடியைத்தான் தேடுகிறது. இரண்டாவது அடியை வாங்கும் உடல் கொண்ட வீரன் மிகக்குறைவே” என்றபின் “வருக மூத்தவரே, நேற்றே வந்துவிட்டீர்கள் என்றார் மூத்தவர்” என்றான். “ஆம், நேற்று முழுக்க காந்தார மாளிகையில் இருந்தேன்” என்றபடி கர்ணன் சென்று மரப்பீடத்தில் அமர்ந்துகொண்டான். அப்பால் நின்றிருந்த யுயுத்சுவை நோக்கி சிரித்து “இங்கே இவன் என்ன செய்கிறான்?” என்றான். துச்சாதனன் சிரித்து “அவன் ஒருநாள் இந்த அஸ்தினபுரியை ஆள்வான் என்று நிமித்தக்குரல் உள்ளது மூத்தவரே. கதையை கண்ணாலாவது பார்த்து வைத்திருக்கவேண்டும் அல்லவா?” என்றான்.

யுயுத்சு நாணத்துடன் புன்னகை செய்து அருகே வந்து வணங்கினான். அவன் மெல்லிய வெளிறிய தோள்களும் விலாவெலும்புகள் எழுந்த சற்று வளைந்த உடலும் கொண்ட இளைஞனாக ஆகியிருந்தான். “விதுரரின் புதிய செல்லப்பிராணியா?” என்று அவன் தோளை அடித்தபடி கர்ணன் கேட்டான். சிரித்தபடி துச்சாதனன் “ஆம், தருமர் மறைந்தபின்னர் இவனை தோளிலேற்றிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கவளம் உணவுக்கும் அறநூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவனை கொண்டுவந்துவிட்டார்” என்றான். சிரித்து அவன் தோளில் அடித்து ”பத்துநாள் பட்டினிபோட்டால் அந்த அறநூல்களை எரித்து சமைத்து உண்ணும் நிலைக்கு வந்துவிடுவான்” என்றான் கர்ணன்.

அந்நேரம் முழுக்க அவன் விழிகள் துரியோதனனையே நோக்கிக்கொண்டிருந்தன. வியர்வையின் மேல் புழுதி படிந்து கரைந்து வழிந்துகொண்டிருந்த உடலுடன் துரியோதனன் கனத்த கதையை சுழற்றி அடித்துக் கொண்டிருக்க அவனைச்சூழ்ந்து துச்சலனும் சுவர்மனும் சோமகீர்த்தியும் உபநந்தனும் சலனும் விகர்ணனும் துராதாரனும் வீரபாகுவும் நின்று கதைகளால் அடித்துக்கொண்டிருந்தனர். எட்டு கதைகளையும் அவன் தன் கதாயுதத்தால் தடுத்துக்கொண்டிருந்தான்.

மூச்சுவாங்க அவன் நிறுத்தி புருவங்களின் வியர்வையைத் துடைத்தபின் திரும்பி நோக்கினான். “தசைகள் உடைந்திருக்கும்…” என்றான் கர்ணன். “ஆம், நாளை கடும் வலி இருக்கும். நீராட்டறைக்கு இரு வைத்தியர்களை வரச்சொல்லியிருக்கிறேன்” என்றபடி துரியோதனன் அருகே வந்தான். பிறர் விலகிச் சென்றனர். அவர்கள் பேசிக்கொள்ள வசதியாக துச்சாதனன் பிற தம்பியரை மறுபக்கம் இருந்த சிறுகளத்திற்கு அழைத்துச்சென்றான். துரியோதனன் கர்ணனின் முன் இன்னொரு பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

“என்ன சொல்கிறார் மாதுலர்?” என்று துரியோதனன் வெயில் பரவிய செம்மண் முற்றத்தை நோக்கியபடி, விரல்களை நீட்டி விரித்துக்கொண்டு கேட்டான். “பாஞ்சாலத்திற்கு சுயம்வரத்துக்குச் செல்வதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால்…” என்றபின் சிலகணங்கள் தயங்கி “அவருக்கு ஐயங்கள் இருக்கின்றன” என்றான் கர்ணன். “என் மீதா? நான் பீமனிடம் தோற்பேன் என்றா?” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் கர்ணன். சினத்துடன் விழிகளைத் தூக்கிய துரியோதனன் “ஒருவாரம்… என் தசைகளை இரும்பென ஆக்கிக் காட்டுகிறேன்” என்றான். கர்ணன் புன்னகைத்து “அவன் எப்போதுமே இத்தகைய பயிற்சியில் இருந்துகொண்டிருப்பவன்” என்றான்.

“ஆம், ஆனால் அவன் வெறும் குரங்கு. நான் யானை. என் அறிவு பலமடங்கு பெரியது. பாரதவர்ஷத்தின் மாபெரும் கதாயுதஞானியின் மாணவன் நான்“ என்றான் துரியோதனன். கர்ணன் புன்னகையுடன் “அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் ஐயம்கொள்ள அடிப்படை இருக்கிறது என்கிறேன். பீமன் மட்டும் நமக்கு அறைகூவல் அல்ல. ஜராசந்தனும் வருகிறான். அவனும் மாவீரன் என்றே சூதர்கள் சொல்கின்றனர். அவனுக்கு ஆசுரகுலத்தின் கதாயுதமுறைகள் தெரிந்திருக்கலாம். இன்றுவரை அவனை நாம் எவரும் எந்தக் களத்திலும் பயிற்சியிலும் சந்தித்ததில்லை. அவன் யாரென்றே நாமறியோம்” என்றான்.

துரியோதனன் “ஆகவே?” என்று சினத்துடன் கேட்டான். “ஆகவே வாய்ப்புகளை மிகைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார் காந்தாரர்” என்றான் கர்ணன். துரியோதனன் அவனை சினம் மின்னிய சிறிய விழிகளால் நோக்கி சிலகணங்கள் கழித்து “அப்படியென்றால் நீ? உன்னை எவர் வெல்லப்போகிறார்கள்? அர்ஜுனனா?” என்றான். “இல்லை, அவனை நான் வெல்லமுடியும். நான் பரசுராமனிடம் வித்தைகற்று மீண்டிருக்கிறேன். அவன் வெறுமனே காடுசுற்றியிருக்கிறான்” என்றான் கர்ணன். “ஆனால் அங்கே இளைய யாதவன் வருகிறான் என்று ஒற்றுச்செய்தி வந்துள்ளது.”

துரியோதனன் “அவன் வில்லாளி அல்ல என்றுதானே சொல்கிறார்கள்” என்றான். தலையை அசைத்து, “அவனுடைய படைக்கலம் சக்கரம். ஆனால் அவன் வில்லில் இப்புவியில் இன்றிருக்கும் எவரைவிடவும் மேலானவன் என்று சொல்கிறார்கள் சூதர்கள்” என்றான் கர்ணன். “அவன் யாரென்றும் நாமறியோம். என்ன நிகழவிருக்கிறது என்று இங்கிருந்து இப்போது நம்மால் சொல்லிவிடமுடியாது என்பதே உண்மை.”

பெருமூச்சுடன் துரியோதனன் தளர்ந்தான். “என்ன திட்டம் வைத்திருக்கிறார் மாதுலர்?” என்றான். கர்ணன் “இன்று நீங்கள் பாஞ்சாலத்தின் சுயம்வரத்துக்கு அஸ்தினபுரியின் வெறும் இளவரசராகவே செல்ல முடியும். எந்த அடையாளங்களும் இல்லாதவராக” என்றபின் அழுத்தமாக “அதனால் கூட நீங்கள் வெல்லாமலிருக்கலாம்” என்றான். துரியோதனன் புரியாமல் பார்க்க “சுயம்வரங்கள் எங்குமே அதை நிகழ்த்தும் அரசனின் சிற்பிகளின் பங்களிப்புடன்தான் அமைக்கப்படுகின்றன. யார் வெல்லவேண்டும் என அந்த அரசன் பெரும்பாலும் முன்னரே முடிவெடுத்திருப்பான்” என்றான் கர்ணன்.

“அப்படி செய்யமாட்டார்கள். அது இழுக்கு” என்று துரியோதனன் சொல்ல கர்ணன் புன்னகையுடன் தலையை அசைத்து “அரசியலில் எதுவும் நிகழும்…” என்றான். “அது வஞ்சம்” என்று துரியோதனன் குரலை எழுப்ப “எரிமாளிகை அமைப்பதும் வஞ்சமே” என்றான் கர்ணன். துரியோதனன் திகைத்ததனால் உயர்ந்திருந்த அவன் கனத்த கைகள் உயிரற்றவை போல ஓசையுடன் தொடைமேல் விழுந்தன. கர்ணன் “அனைத்தும் அரசு சூழ்தலில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் ஏன் வாய்ப்புகளை அளிக்கவேண்டும்?” என்றான்

துரியோதனன் பெருமூச்சுடன் உடலைத் தளர்த்தி கால்களை நீட்டிக்கொண்டான். “காந்தாரர் அதற்குத்தான் திட்டமொன்று வைத்திருக்கிறார்” என்றான் கர்ணன். துரியோதனன் ஆர்வமில்லாமல் அமர்ந்திருந்தான். “நாம் கிளம்புவதற்குள் உங்களை அரசிளங்குமரராக அறிவிக்க வைக்கலாம் என்று எண்ணுகிறார்.” துரியோதனன் கசப்பான புன்னகையில் உதடுகள் கோணலாகி இழுபட “விளையாடுகிறாரா? ஏழுவருடங்கள் நடக்காததா இனிமேல்?” என்றான். “ஏழுவருடங்கள் இக்கனி கனிந்து வந்தது என்று ஏன் எடுத்துக்கொள்ளலாகாது?” என்றான் கர்ணன்.

“என்ன செய்யவிருக்கிறார்?” என்றபடி துரியோதனன் எழுந்துகொண்டு கைகளை தூக்கினான். “அரசரின் அவையில் பாஞ்சாலத்தின் சுயம்வரத்தைப்பற்றி சொல்லப்போகிறார். அது அரசர் காந்தாரத்திற்கு மகட்கொடை பெறச் சென்ற நிகழ்ச்சிக்கு நிகரானது. அன்று பீஷ்மபிதாமகர் அவரை அஸ்தினபுரியின் அரசிளங்குமரனாக அறிவித்துவிட்டுச் சென்றமையால்தான் அது நிகழ்ந்தது. இன்று அவர் மைந்தனுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரவிருக்கிறார். அரசருக்கு அது புரியும்.”

”அவர் ஏற்பதல்ல இங்கே வினா” என்று குனிந்து நிமிர்ந்தபடி துரியோதனன் சொன்னான். “நமது அவை ஏற்கவேண்டும். குலத்தலைவர் ஏற்கவேண்டும்… விதுரர் ஏற்கவேண்டும். அனைத்தையும் விட பிதாமகர் பீஷ்மர் ஏற்கவேண்டும்.” கர்ணன் புன்னகைத்து “அவர்கள் மறுக்கமுடியாத ஒரு இக்கட்டில் அகப்பட்டுக்கொள்ளும் இடம் ஒன்று அமைந்துள்ளது. அதை உணர்ந்துதான் காந்தாரரும் கணிகரும் இந்தத் திட்டத்தை அமைத்துள்ளனர்” என்றான்.

“இளவரசே, இன்று பாரதவர்ஷத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஆண்மகன் என்றால் அது இளையயாதவன்தான். பெண் என்றால் பாஞ்சாலன் மகள் மட்டுமே. அவளைப்பற்றி ஒவ்வொருநாளும் சூதர்பாடல்களை கேட்டுக்கேட்டு வளர்ந்திருக்கிறார்கள் நமது மக்கள். அவள் கைகளில் சங்கும்சக்கரமும் இருப்பதனால் அவள் பாரதவர்ஷத்தை ஆள்வது உறுதி என்று நிமித்திகர் சொல்கிறார்கள். அவள் இங்கே நம் நகரின் அரசியாக வரவேண்டுமென்ற ஆசை இங்குள்ள ஒவ்வொருவர் அகத்திலும் உள்ளது.”

கர்ணன் தொடர்ந்து சொன்னான்.“அதைவிட முதன்மையானது, அவள் பிற ஷத்ரிய அரசர்கள் எவருக்கும் உரிமைப்படலாகாது என்பது. அது ஓர் அச்சமாகவே இங்கே படர்ந்துள்ளது” துரியோதனன் புன்னகைத்து ”பாஞ்சாலன் மகளின் சுயம்வரம் பாரதவர்ஷத்தையே பதற்றமடையச்செய்துவிடும் போலிருக்கிறதே” என்றான். “அந்தப் பதற்றம் தொடங்கி பலமாதங்களாகின்றன. சுயம்வரத்திற்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டன என்று சூதர்கள் பாடத்தொடங்கி ஒரு வருடமாகிறது. அச்செய்தியை அறிந்த நாள்முதல் ஆட்டத்தின் இறுதிப் பகடைக்கு இருபக்கமும் நின்றிருப்பவர்கள் போலிருக்கிறார்கள் பாரதவர்ஷத்தின் மக்கள் அனைவரும்.”

”ஆம்… இது ஒரு முதன்மையான தருணம். வாய்ப்பானது” என்று சொன்னபடி இடையில் கையூன்றி துரியோதனன் எழுந்து நின்றான். “ஆனால், ஷத்ரியமன்னர்கள் அவளை கொள்ளக்கூடும் என்ற அச்சம் சென்ற சில மாதங்களாகவே இல்லாமலாகி வருகிறது என்று காந்தாரர் சொல்கிறார். அவளை இளைய யாதவனே வெல்லமுடியும் என பெரும்பாலும் உறுதி கொண்டுவிட்டார்கள்” கர்ணன் சொன்னான்.

“அது இயல்வதா? நீ என்ன நினைக்கிறாய்?” என்றான் துரியோதனன். “வீரம் மட்டுமே கணிக்கப்படும் என்றால் அவனன்றி எவரும் அவளை வெல்ல முடியாது” என்றான் கர்ணன். துரியோதனன் அவன் கண்களை நோக்கி நின்றான். “இளவரசே, அவன் ஒருவகையில் அமானுடன். அவனுக்கிணையாக இன்னொரு வீரன் இனி இப்பாரதமண்ணில் தோன்றப் போவதில்லை. புராணங்கள் சொல்லும் ராகவ ராமனுக்கு நிகரானவன்” என்றான் கர்ணன். “ஆனால் பாஞ்சாலன் அவனுக்கு மகள்கொடை கொடுக்க தயங்கலாம். அவன் யாதவன், பாஞ்சாலம் தொன்மையான ஷத்ரிய அரசு.”

துரியோதனன் பெருமூச்சுவிட்டு “ஆக, நமது குடிமுத்திரை மட்டுமே நமக்கு துணையாக உள்ளது” என்றான். “ஆம், இன்று நமது மக்கள் அனைவருமே யாதவ கிருஷ்ணன் பாஞ்சாலத்துக் கிருஷ்ணையை மணந்துசெல்லக்கூடும் என அஞ்சுகிறார்கள். அவன் அமைத்துள்ள மாநகரைப்பற்றியும், அங்கே குவிந்துகொண்டிருக்கும் செல்வம் பற்றியும் இங்கே ஒவ்வொரு நாளும் சூதர் பாடுகிறார்கள். அவனிடம் இல்லாதது குலக்குருதி ஒன்றே. பாஞ்சாலன்மகள் அதையும் அளிப்பாள். அவள் அரியணை முன் தலைவணங்க இங்குள்ள சிறிய ஷத்ரிய அரசுகளுக்கு அகத்தடை ஏதுமிருக்காது. அதையே இன்று யாதவன் நாடுகிறான்.”

“அத்துடன் பாஞ்சாலனின் பெரும்படையும் பன்னிரு படைத்தலைவர்களும் யாதவனுக்கு கங்கைக் கரையில் ஆதிக்கத்தை அளிக்கும். அவனிடமுள்ள குறைபாடு என்பது அவன் நாடு தென்கிழக்கே நெடுந்தொலைவில் உள்ளது என்பதே. கங்கைக்கரையில் பாஞ்சாலத்தின் துணை அவனுக்குக் கிடைக்கும் என்றால் சிந்துவெளியும் கங்கைவெளியுமாக ஆரியவர்த்தமே அவர்களிடம் சென்றுவிடும்.”

“அதன் முதல் பலியாடு அஸ்தினபுரியே என அறியாத வீரர் இங்கில்லை. பாஞ்சாலத்திற்கும் மதுராவிற்கும் நடுவே இருக்கிறது அஸ்தினபுரி. அப்படி ஒரு மணம் நிகழுமென்றால் ஆயிரமாண்டுகால நிறைவரலாறு கொண்ட அஸ்தினபுரி அழிந்தது என்றே பொருள்” என்றான் கர்ணன். ”யாதவன் பெருங்கனவுகள் கொண்டவன். இப்பாரதவர்ஷத்தை வெல்லவே அவன் விழைகிறான். ஒரு யாதவ அரசை அமைப்பதற்கல்ல. மேலும் குந்தியும் பாண்டவர்களும் கொல்லப்பட்டபின் அவனுக்கு அஸ்தினபுரியின் மேல் எந்தவிதமான பற்றும் இருக்க வாய்ப்பில்லை.”

“ஆகவே வேறு வழியே இல்லை. பாஞ்சாலன் மகளை அஸ்தினபுரி அடைந்தாகவேண்டும். யாதவன் அடையவும் கூடாது. இன்று இந்நகரின் அத்தனை உள்ளங்களும் விழைவது அதையே” என்று கர்ணன் சொன்னான். “இந்த நிலையில் யாதவனைவிட உங்களை ஒருபடி மேலாக பாஞ்சாலன் எண்ணுவதற்கான காரணம் ஒன்றே. நீங்கள் தொன்மையான ஷத்ரிய கொடிவழியில் முடிசூடவிருப்பவர் என்ற அடையாளம். அவ்வடையாளத்துடன் சென்றாலொழிய நீங்கள் அவளை வென்றுவர முடியாது.”

”அதை தந்தையிடம் அவர் ஏற்கும்படி சொல்லமுடியுமா?” என்றான் துரியோதனன். “அவரிடம் சிறிதுசிறிதாகச் சொல்லி புரியவைத்துவிட்டார்கள். இன்று அவர் உள்ளம் நம் பக்கம் வந்துவிட்டது.” துரியோதனன் முகம் மலர்ந்து அமர்ந்துகொண்டு கர்ணன் கைகள் மேல் தன் கைகளை வைத்து “உண்மையாகவா?” என்றான். “ஆம், உங்களுக்கு முடிசூட அவையில் பீஷ்மர் ஒப்புக்கொண்டார் என்றால் அவருக்கு முழு ஒப்புதலே என்று காந்தாரரிடம் நேற்று அவர் சொல்லிவிட்டார்.”

”பீஷ்மர் ஒப்புக்கொள்ள மாட்டார். பாண்டவர்கள் இறக்கவில்லை என அவர் விதுரரிடமிருந்து அறிந்திருப்பார்” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால் அதை அவரால் அரசரிடம் சொல்லமுடியாது. இக்கட்டில் இருப்பவர் விதுரர். நீங்கள் மணிமுடிசூட ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர் தன் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப யாதவ கிருஷ்ணன் பாஞ்சாலியை அடையவேண்டும் என விழைகிறார் என்றே பொருள் என்று அரசரை நம்பவைத்துவிட முடியும். உங்கள் மணிமுடிசூடலுக்கு எதிராக ஒரு சொல், ஓர் அசைவு விதுரரிடமிருந்து வெளிவந்தால் கூட மொத்த அவையுமே அவரை காட்டிக்கொடுப்பவர் என்று எண்ணும்படி செய்வார் கணிகர்.”

துரியோதனன் தலையசைத்தான். “அஸ்தினபுரியின் அரசப்பேரவையை நாளை மறுநாள் மாலையில் கூட்டும்படி அரசாணை சென்றுவிட்டது. குலத்தலைவர்கள் வந்து கூடுவார்கள். பேரவையில் ஒரே உணர்வுதான் இருக்கும். எப்படியேனும் பாஞ்சாலத்தை வென்றெடுப்பது, பாஞ்சால இளவரசியை அஸ்தினபுரியின் அரசியாக்குவது. அதற்குத் தேவையான எதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அதை மறுக்கும் எதையும் கடும் சினத்துடனேயே எதிர்கொள்வார்கள்” என்றான் கர்ணன். “அவை உங்களுக்கு முடிசூட்டப்படுவதை முழுமனதுடன் ஏற்கும் என்பது உறுதி. அதன்பின் பீஷ்மர் ஏதும் சொல்லமுடியாது.”

துரியோதனன் பெருமூச்சுவிட்டான். “இதைப்போல பல தருணங்கள் என் கைகள் வழியாக நழுவிச்சென்றிருக்கின்றன கர்ணா. அதுதான் எனக்கு அச்சமூட்டுகிறது” என்றான். கர்ணன் ”இளவரசே, இதுபோல ஒரு தருணம் இதற்குமுன் அமைந்ததில்லை” என்றான். “இன்றுவரை அஸ்தினபுரியின் பேரவை ஒரேகுரலில் உங்களுக்காக பேசியதில்லை. நாளை மறுநாள் அது பேசும். அவர்கள் அவைக்கு வந்து அமர்வதற்குள்ளாகவே அந்த முடிவை எடுக்கும் உணர்வெழுச்சிகள் அவர்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும்.”

“கணிகர் ஒன்று சொன்னார். அரசுசூழ்தலில் முதன்மையான ஞானம் அது” என்று கர்ணன் தொடர்ந்தான். “கல்லையும் மண்ணையும் வெற்றிடத்தில் இருந்து உருவாக்க முடியாது. அதைப்போலவே நியாயங்களையும் உணர்ச்சிகளையும்கூட ஏதுமில்லாமல் உருவாக்கிவிட முடியாது. உண்மையான சந்தர்ப்பம் ஒன்று அமையவேண்டும். அதன் மேல் நியாயங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்கலாம். அவற்றை மேலும் மேலும் வளர்த்து எடுக்கலாம் என்றார் கணிகர். அதைக்கேட்டு நான் சிலகணங்கள் வியந்து சொல்லிழந்துபோனேன்.”

கர்ணன் தொடர்ந்தான், “வெற்றிடத்தில் நியாயங்களை உருவாக்கலாமென நினைப்பவர்கள் பிறரது அறிவுத்திறனை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றார் கணிகர். ஒரு நியாயத்தை நாம் சொல்லத் தொடங்கும்போது கேட்பவர்களில் முதன்முதலில் உருவாகவேண்டியது நம்பிக்கை. கூடவே எழும் அவநம்பிக்கைகளையும் ஐயங்களையும் மெல்லமெல்ல களைந்து நம் நியாயத்தை நாம் கட்டி எழுப்பலாம். ஆனால் முதலில் அவநம்பிக்கை உருவாகுமென்றால் அடித்தளத்தில் விரிசல் விழுகிறது. கட்டி எழுப்பஎழுப்ப விரிசல் அகன்றபடியேதான் செல்லும்.”

“தருணங்கள் அமைவதற்காகக் காத்திருப்பதே அரசு சூழ்தலில் முதல் விதி என்று கணிகர் சொன்னார். இது அத்தகைய தருணம். இந்த நியாயங்கள் நாம் உருவாக்கியவை அல்ல. வரலாற்றில் எழுந்து வந்தவை. உண்மையிலேயே பாஞ்சாலத்தை அஸ்தினபுரி இன்று வென்றெடுக்கவில்லை என்றால் அழிவை நோக்கி செல்லும். இந்த நியாயத்துடன் நாம் நமது நோக்கத்தையும் இணைத்துக்கொள்கிறோம். நீந்தும் குதிரையின் வாலை பிடித்துக்கொள்வதுபோல என்றார் கணிகர்.” கர்ணன் புன்னகைத்து “இத்தருணத்துக்காகவே ஏழுவருடம் காத்திருந்தோம் என்று கொள்ளவேண்டியதுதான்” என்றான்.

“நான் இளவரசாக முடிசூடுவது நிகழ்ந்தால்கூட பாண்டவர்கள் திரும்பி வந்தால் மணிமுடியை அவர்களுக்கு அளிக்கவேண்டியிருக்கும் அல்லவா?” என்றான் துரியோதனன். “அஸ்தினபுரியின் மணிமுடியுடன் சென்று பாஞ்சாலியை நீங்கள் வென்றுவந்தால் எவரும் அதை சொல்லத் துணியமாட்டார்கள். பாஞ்சாலனும் அதை ஒப்பமாட்டான். உங்கள் தந்தை எண்ணினால்கூட எப்படிப்போனாலும் பாண்டவர்களுக்கு நாட்டின் ஒருபகுதியை அளிக்கும் முடிவையே எடுக்கமுடியும். தந்தை இருப்பதுவரை நாம் அதை அவர்களிடம் விட்டுவைக்கலாம்” என்றான் கர்ணன். “காந்தாரமும் பாஞ்சாலமும் இரு பக்கம் இருக்கையில் பாரதவர்ஷத்தை வெல்வது ஒன்றும் பெரிய வேலை அல்ல.”

“எண்ணும்போது அனைத்தும் எளிதாக இருக்கிறது” என்றான் துரியோதனன். “ஆனால் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. எதிரே அமர்ந்து ஆடிக்கொண்டிருப்பது விதி. அதன் விழிகளையும் விரல்களையும் காணாமல் ஆடவேண்டியிருக்கிறது.” கர்ணன் “பார்ப்போம், இம்முறை அதை வெல்லமுடியும்” என்றான். “கர்ணா, பாஞ்சாலன் அமைத்திருக்கும் போட்டி வில்வித்தை என்றால்?” என்றான். “நான் சென்று வெல்கிறேன்” என்றான் கர்ணன்.

”யாதவன் இல்லையேல் எவரும் எனக்கு நிகரல்ல. யாதவனே வென்றால்கூட நீங்கள் அவனை அங்கேயே போருக்கு அழைக்கலாம். அத்தனை ஷத்ரியர்களும் உங்களுடன் இணைவார்கள், அங்கே தன்னேற்பு அவையிலேயே அவனை வென்று கன்னியுடன் நாம் மீளலாம். அதுவும் ஷத்ரியருக்கு உகந்த முறையே” கர்ணன் சொன்னான். “நாம் வென்று மீண்டாகவேண்டும். அதற்குரிய நெறிமீறல்களைச் செய்தாலும் பிழையில்லை. வெற்றியால் அவற்றை ஈடுகட்டுவோம்.”

“மூதாதையர் அருள் துணை நிற்கட்டும்” என்றபின் “நான் நீராடி வருகிறேன். மாதுலரை சென்று பார்ப்போம்” என்று கைகளை உரசிக்கொண்டான் துரியோதனன். அவன் திரும்பியதும் அப்பால் நின்றிருந்த மகாதரன் வந்து வணங்கி “நீராட்டறையில் பரிசாரகி காத்திருக்கிறான் மூத்தவரே” என்றான். துரியோதனன் கனத்த காலடிகளை வைத்து நடந்தான். கர்ணன் உடன் நடந்தபடி “உங்கள் இளவல் குண்டாசியை பார்த்தேன்” என்றான்.

“ஆம், அவனை எண்ணி வருந்தாத இரவில்லை” என்றான் துரியோதனன். “அவனுள் ஓர் உடைவு நிகழ்ந்துவிட்டது. அதைவிட்டு மீள முடியவில்லை.” கர்ணன் “அவனை இதில் சேர்த்திருக்கக் கூடாது” என்றான். “கணிகர் நேர்மாறாக சொல்கிறார். அவனுடைய எல்லை தெளிவாகத் தெரியவந்தது நல்லதே என்கிறார்.” என்றான் துரியோதனன். கர்ணன் “அவர்கள் மீண்டு வந்தால் அவன் சென்று அவர்களுடன் சேர்ந்துகொள்வான்” என்றான்.

“இருக்கலாம்.கணிகர் அவன் நமக்கெதிரான முதன்மை சான்றுகூறி என்றார். அவனை கொன்றுவிடலாமென்று ஒருமுறை சொன்னார். வாளை உருவி அவர் கழுத்தில் வைத்து மறுமுறை அச்சொல்லை அவர் சொன்னாரென்று நானறிந்தால் அவரது தலை கோட்டைமுகப்பில் இருக்கும் என்றேன். திகைத்து நடுங்கிவிட்டார்” என்றான் துரியோதனன். “அவருக்கு தார்த்தராஷ்டிரர்களைப்பற்றி தெரியவில்லை. வாழ்வெனில் வாழ்வு சாவெனில் சாவு. நாங்கள் தனித்தனி உடல் கொண்ட ஒற்றை மானுடவடிவம்.”

துரியோதனன் சென்றதும் கர்ணன் கூடத்து இருக்கையில் அமர்ந்து தன் கைகளை நோக்கிக்கொண்டிருந்தான். அருகே வந்து நின்ற காஞ்சனதுவஜன் “தாங்கள் ஏதேனும் அருந்துகிறீர்களா மூத்தவரே?” என்றான். “குண்டாசி எங்கே?” என்றான் கர்ணன். ”மீண்டும் மது அருந்தி விட்டான். துயில்கிறான்” என்றான் காஞ்சனதுவஜன். கர்ணன் எழுந்து “அவனை எனக்குக் காட்டு” என்றான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

இருண்ட சிறிய அறையில் தாழ்வான மஞ்சத்தில் உடலை நன்றாக ஒடுக்கி ஒரு மூலையில் சுருண்டு துயின்றுகொண்டிருந்தான் குண்டாசி. அவன் எச்சில்கோழை மெத்தைமேல் வழிந்து உலர்ந்திருந்தது. அறைமுழுக்க புளித்த மதுவின் வாடை நிறைந்திருந்தது. கர்ணன் அவன் மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்தான். குண்டாசியின் மெலிந்து மூட்டு வீங்கிய கால்களை தன் கைகளால் மெல்ல வருடினான். சிடுக்குபிடித்த முடி விழுந்து கிடந்த சிறிய மெலிந்த முகத்தை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசென்னை, ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோயில்…
அடுத்த கட்டுரைராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்