கடற்கேரளம் – 3

சாலக்குடிக்கு மாலை வந்துசேர்ந்தோம். ஓர் ஓட்டலில் அறை போட்டோம். கேரளத்துவிடுதிகளைப்பற்றி எழுதப்போனால் அது இன்னொரு கொடுமை. பொதுவாகவே அங்கே விடுதிவாடகை அதிகம். சாலக்குடியிலேயே வாடகை சென்னையைவிட  அதிகம். ஆனால் சேவை என்பதற்கும் கேரள விடுதிகளுக்கும் சம்பந்தமில்லை. காலை ஏழுமணிக்குத்தான் ஊழியர்கள் வருவார்கள். அதற்குப்பிறகே டீ கூட கிடைக்கும். மாலை எட்டுமணிக்கு ஒரு மேனேஜரைத்தவிர எல்லா ஊழியர்களும் போய்விடுவார்கள். விடுதி முழுக்க முழுக்க அதில் குடியிருப்போரின் பொறுப்பிலேயே விடப்படும்.

கேரளத்தில் ஓட்டல்வேலை போன்றவற்றுக்கு ஆள் அதிகம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் வேலைபார்ப்பதில்லை. ஆகவே எத்தனைபெரிய ஓட்டல் என்றாலும் அழுக்கும் நாற்றமும்தான். சென்னையைப்போல மணிப்பூரில் இருந்தும் மேற்குவங்கத்தில் இருந்தும் ஆள் கொண்டுவந்து வேலைசெய்யவைக்க முயன்றார்கள். தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக அதுவும் நடைபெறவில்லை.

கேரளத்தில் ஓட்டல் பணியாளர் போன்றவர்களின் நடத்தையில் உள்ள ஒரு பாவனை கவனிக்கத்தக்கது. பல தமிழர்கள் இது தமிழர்களிடம் மட்டும் அவர்கள் காட்டுவது என எண்ணுவார்கள். உண்மையில் ‘மேலே’ உள்ள எல்லாரிடமும் கேரள வேலையாள் காட்டும் முகம்தான் இது. கேரளத்தின் இடதுசாரி இயக்கம் அடித்தள உழைப்பாளிகளுக்கு தன்முனைபையும் எதிர்காலக் கனவுகளையும் அளித்தது. அவனை கர்வம் கொண்டவனாக ஆக்கியது. ஆனால் எல்லா உழைப்பும் உழைப்பே என்று சொல்லிக்கொடுக்கவில்லை. அதில் நிலப்பிரபுத்துவ கால மனநிலையே நீடிக்கிறது. சாதாரண வேலைசெய்பவர்களுக்கு கூச்சம் அதிகம். அதிலும் படித்தவர்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

மலம்புழா

நவமுதலாளித்துவம் எந்த வேலையும் அந்த எல்லைக்குள் மட்டுமே முடிந்துவிடும் ஒன்று என்று வகுத்துள்ளது. வேலைநேரத்தில் முதலாளி முதலாளிதான் தொழிலாளி தொழிலாளிதான். அதற்கான விதிகளை கடைப்பிடித்தாகவேண்டும். வேலைநேரம் முடிந்தபின் முதலாலியை தொழிலாளி பெயர் சொல்லி அழைக்கலாம். வேலை ஒருவனின் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை. அதுவும் கேரள மனநிலையை வந்தடையவில்லை

விளைவாக கேரள அடித்தள உழைப்பாளி தாழ்வுணர்ச்சி கொண்டவனாக இருக்கிறான். தனக்கு மேலே உள்ளவர்களை வெறுக்கிறான். அவனுடைய தன்னகங்காரம் எப்போதுமே புண்படச்சித்தமாக இருக்கிறது. முன்கூட்டியே தன் அகங்காரத்தை விரித்து ஓர் அரண் ஆக்கிக்கொண்டிருக்கிறான். ‘எந்தா வேண்டே?’ என்று வந்து நிற்கும் சர்வரின் முகபாவனை உடல்மொழி அனைத்திலும் ஓர் அறைகூவல், அலட்சியம் தெரிவது இதனாலேயே. சில கேள்விகளுக்கு அவர்கள் பதிலே சொல்வதில்லை, தோளைக் குலுக்குவதுடன் சரி

மாடாயி

நண்பர் ஷாஜி ஒருமுறை எரணாகுளம் ஓட்டலில் ஒரு சர்வரால் அலட்சியமாகநடத்தப்பட்டார். மாட்டிறைச்சிக் கறியையும் பரோட்டாவையும்  அவர் முன் சறுக்கி வந்து நிற்க விட்டார் சர்வர். கோபம் கொண்ட ஷாஜி மொத்த மேஜையையே தூக்கி கவிழ்த்துவிட்டு காட்டுக்கத்தலாக கத்த ஆரம்பிக்க உரிமையாளர் வந்து ஷாஜியிடம் கெஞ்ச ஆரம்பித்தார். தொழிற்சங்கப்பிரச்சினை கிளம்பிவிடுமே என்று அவர் பதற சர்வர்களின் படை ஷாஜியை தாக்க கிளம்பி வர இரு சாரார் காலிலும் விழுந்து சமாதானம்செய்தார் உரிமையாளர்.

சாலக்குடி என்றாலே கலாபவன் மணி நினைவுக்கு வரும். அந்தக்காலத்தில் என்றால் சாலக்குடி நாராயணசாமி. கலாபவன் மணி அசல் மண்ணின் மைந்தர். சாலக்குடியில்தான் ஓய்வுநேரத்தில் முழுக்க இருப்பார். பெரியதோர் நண்பர் படை உண்டு. எங்கும் எதிலும் தென்படுவார். கோயில் திருவிழாக்களை நடத்துவார். சமூக நூலகத்தில் நாடகம் போடுவார். சமீபத்தில் சாலக்குடியில் குப்பைகள் குவிந்தபோது மணியும் நண்பர்களும் சேர்ந்து அவற்றை அள்ளி சுத்தம் செய்தார்கள்! மணி அந்த மக்களுக்கு நடிகர் அல்ல, நண்பர்.

மணி அவரது வீட்டில் ஏதோ குலதெய்வ பூஜைசெய்வதாக என்னுடன் வந்த நண்பர்கள் சொன்னார்கள். மணியின் தம்பி வந்து எங்களுக்கு தேவையானவற்றைச் செய்து மறுநாள் மணியின் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மறுநாள் மணியைப்பார்க்க மற்றவர்கள் சென்றார்கள். நான் என் தனிப்பட்ட நண்பர் ஒருவரை சாலக்குடியில் பார்க்க வேண்டியிருந்தமையால் செல்லவில்லை.

காலை பத்துமணிக்குக் கிளம்பி திரிச்சூர் வழியாக பாலக்காடு சென்றோம். அங்கிருந்து மலம்புழா அணைக்கட்டு. மலம்புழாவில் நீர் இருந்தது. ஆனால் சுற்றியிருந்த காடு வரண்டு சருகுக் குவியலாக இருந்தது. அந்தக் காட்டை நவோதயா ஸ்டுடியோ ஐம்பது வருடத்து குத்தகைக்கு எடுத்து அதில்தான் பல படங்களை எடுத்திருந்தது. அங்கே பழைய சினிமா கட்டிடங்கள் இடிபாடுகளாக கிடந்தன. வெயிலில் காடு வெண்தீயில் எரிவது போலிருந்தது. வியர்வை வழிய அணைக்கட்டுவரைச் சென்று பார்த்தோம். ஆழமான நீருக்கே உரிய அபாரமான நீல நிறம்.

பாலக்காட்டில் ஓர் ஓட்டலில் கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு கேவலமான மதிய உணவைச் சாப்பிட்டோம். அனேகமாக தமிழ்நாட்டில் எங்குமே அப்படி ஒரு உணவைச் சாப்பிட்டுவிட முடியாது. சாப்பிடவருபவர்கள் மீது கடுமையான அலட்சியமிருந்தாலொழிய அதை சமைக்க முடியாது.

வாடானப்பிள்ளி

நேராக கோழிக்கோடு சென்று தங்கிவிடுவதென்று திட்டமிட்டிருந்தோம். நடுவே உள்ள சிறிய கடற்கரைகள் வழியாகச் சென்றோம். வாடானப்பிள்ளி கடற்கரை வெண்மணல் விரிந்த அழகிய வளைவு. சுத்தமாக இருந்தது. ஆயுர்வேத சிகிழ்ச்சைக்காக கேரளம் வரும் பெரும்பாலான பயணிகள் இங்கே வருகிறார்கள். கேரளத்தில் கடற்கரையில் கவனத்தில்படுவதென்னவென்றால் முன்பு கடற்கரைகளில் இருந்த உக்கிரமான வறுமை இப்போது இல்லை என்பதே. அனேகமாக வீடுகள் எல்லாமே புதிதாக கட்டப்பட்டிருந்தன

வடக்காஞ்சேரி கடற்கரை வழியாக மாலை கோழிக்கோடு வந்தோம். ராஜகுமாரி ஓட்டலில் அறைபோட்டுக்கொண்டிருந்தபோது தெரிந்தமுகம். நடிகர் ஜெயராம் படப்பிடிப்பு முடிந்து உள்ளே வந்தார். சிரித்துக்கொண்டே நண்பர்களிடம் வந்து சில சொற்கள் பேசினார். உடம்பெல்லாம் மண்ணாக இருந்தது. சத்யன் அந்திக்காடின் புதிய படத்தின் படப்பிடிப்பு நடப்பதாகச் சொன்னார்.

சத்யன் லோகியின் நண்பர், எனக்கும் தெரிந்தவர். அவரது அறைக்குள் சென்று அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். மலையாள சினிமாவைப்பற்றி இலக்கியம் பற்றி. சத்யன் நிறைய வாசிக்கும் வழக்கம் கொண்டவர். அவரது முதல்படம் களியில் அல்பம் காரியம் 1978ல் வந்தது. கடந்த 32 வருடங்களாக சத்யன் மலையாளத்தின் ஹிட்மேக்கர் ஆக இருக்கிறார். மென்மையான நகைச்சுவை கொண்ட படங்களை எடுப்பவர். லோகி அவருக்காக பல படங்களை எழுதியிருக்கிறார்.

சத்யனின் கடைசிப்படமும் வெற்றிதான், பாக்யதேவதை சென்றவருடம் வந்தது. சத்யன் சில வருடங்களில் 4 படங்களைக்கூட இயக்கியிருக்கிறார். இப்போது வருடத்திற்கு ஒருபடம் என்று குறைத்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். லோகி இறந்தபின் சீனிவாசனுக்கும் நல்ல உடல்நிலை இல்லையென்றான பின் திரைக்கதைகளை தானே எழுதுவதாகச் சொன்னார் சத்யன்.

மறுநாள் காலை கிளம்பி வடகரை கடற்கரை வழியாக தலைச்சேரிக்குச் சென்றோம். இந்தியாவின் அழகிய கடற்கரைகளில் ஒன்று அது. கடல் இங்கே ஆழமில்லாமல் இருக்கிறது. தலைச்சேரி வழியாக மேலும் வடக்கே சென்று கண்ணனூர் அடைந்தோம். அங்கே மதிய உணவு. முதல்முறையாக சற்றே சுவையான உணவு.

எரிவெயிலில் கண்ணனூர்கோட்டையைப் பார்க்கச்சென்றோம். கண்ணனூர் கோட்டையை பழசிராஜாவில் ஆரம்பக்காட்சிகளில் வாசகர்கள் கண்டிருக்கலாம். போர்ச்சுகீசியர்கள் கட்டிய கடற்கோட்டை இது. பீரங்கிகளால் கடலைநோக்கிச் சுடும் வசதிக்காக கரையோர பாறைமேல் கட்டப்பட்ட கோட்டை . வெட்டுகல் என்று சொல்லப்படும் செம்மண்பாறையால் ஆனது. அதன் மேலிருந்து கடலைப்பார்ப்பது கிளர்ச்சியூட்டும் அனுபவம்

கண்ணனூர்கோட்டை

கண்ணனூரில் இருந்து மாடாயி கடற்கரைக்குச் சென்றோம். தாகா மாடாயி என்று ஓர் எழுத்தாளர் இருக்கிறார். தாகா ஏன் மாடானார் என்று கல்பற்றா நாராயணனிடம் கேட்டேன். அர்ஜுனன் கல்லாயி என்று ஓர் எழுத்தாளர் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மாடாயி கடற்கரை மீன் மணம் கமழ விரிந்திருந்தது

அன்று மாலை பய்யன்னூர் என்ற ஊரில் தங்கினோம். பெரிய விடுதி அங்கே இருந்தது. கேரளத்தில் ஒரு காலத்தில் சுற்றுலாத்தொழில் விஸ்வரூபம் கொள்ளப்போவதாக ஒரு நம்பிக்கை இருந்தபோது பணம் வைத்திருந்தவர்கள் விடுதிகளைக் கட்டித்தள்ளினார்கள். ஆனால் கேரளத்தின் சூழல் சுற்றுலாவுக்கு உகந்ததல்ல. குறிப்பாக வருடத்தில் இருநூறு முழு அடைப்பு — மிகையல்ல, 1995ல் 200 முழு அடைப்புகளுக்கு அறைகூவப்பட்டுள்ளது , வட்டார, கிராமிய, மாவட்ட, மாநில அடைப்புகள் — நடக்கும் சூழலில் அங்கே சென்றால் விடுமுறையில் பாதியை தெருவில்தான் கழிக்கவேண்டியிருக்கும்

பய்யன்னூர் விடுதி காலியாகவே இருந்தது. ஆகவே கொஞ்சம் பயமாகவும் இருந்தது. தூசடைந்த பெரிய அறையில் குளிக்கச் சென்றபோதுதான் உடலில் எத்தனை வெயில் பட்டிருக்கிறதென்ற எண்ணம் ஏற்பட்டது

[மேலும்]

முந்தைய கட்டுரைஉலோகம் – 14
அடுத்த கட்டுரை‘சந்திப்பு’ நூல் அறிமுக விழா