உலோகம் – 16

 அன்று பகல் முழுக்க என்னைச் சித்திரவதைச் செய்தார்கள்.  என் உடலை நோக்கி ஒரு சிறிய கருவியை கொண்டுவந்தபோது அது என் தொடையில் இருந்த குண்டை அடையாளம் கண்டுகொண்டு  ரீ ரீ என்றது. ஸ்ரீவஸ்தவா குனிந்து கருவியின் திரையை கூர்ந்து பார்த்தார். என்ண்டைம் ‘வாட்டீஸ் இட்?” என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த நிமிடம் அவருக்கே புரிந்ததுபோல புன்னகைத்தார்.

 

”ராவ், ஹி ஹேஸ் எ மெட்டல் இன் ஹிம்” என்றார் ஸ்ரீவஸ்தவா. ராவ் அவர் சொல்வதன் பொருள் சரியாக விளங்காமல் புன்னகைசெய்தான்.  ”அவனுடைய உலோகம் உருகி வழியட்டும்”  என்றார் ஸ்ரீவஸ்தவா. ராவ் என் முன் வந்து நின்று என்னைக் கூர்ந்து பார்த்தான். ஸ்ரீவஸ்தவா வெளியேறிய கதவு மூடியபோது நான் மெல்ல திடுக்கிட்டேன். ராவ் அந்த அசைவில் மகிழ்ந்து புன்னகை செய்தான்.

மிக நிதானமாக என்னை அவன் வதைக்க ஆரம்பித்தான். என்னை நிலத்துடன் பதிக்கப்பட்ட அந்த பெரிய நாற்காலியில் நைலான்பட்டைகளால் இறுக்கமாகக் கட்டினான். என் உடலில் இதயம் மட்டுமே இயங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அவன் வயலின் பெட்டி போலிருந்த கரிய பெட்டியை திறந்து பலவகையான கருவிகளை எடுத்து என் முன் பரப்பி வைத்தான். ஒவ்வொரு கருவியாக எடுத்து சரிபார்த்தான். சிலவற்றை மின் தொடர்பியில் செருகினான்.

வதை மிக மெல்ல ஆரம்பித்தது. கனத்த மெல்லிய குரலில் ராவ் எல்லாவற்றையும் சொல்லிவிடும்படி என்னிடம் சொன்னான். நான் பேசாமலிருந்தபோது என்னை ஓங்கி அறைந்து என் முகத்தில் காறி உமிழ்ந்தான்.  வெறுப்பு ததும்பும் சொற்களில் என்னை மிரட்டினான். பின்னர் மெல்ல மெல்ல வதைகள் அதிகரித்தன. என் உடலில் பல இடங்களில் சதைக்குள் கொதிக்கும் ஊசிகள் நுழைந்தன. என் பற்களில் கூசக்கூச டிரில்லிங் கருவி துளைத்து உள்சதையை துருவி என்னை அதிர்ந்து துடிக்கச் செய்தது.  

ராவுக்கு துணையாக இன்னொருவன் வந்துசேர்ந்தான். இரண்டாமன் ஒல்லியாக பனைநாரால் இறுக்கி முடையப்பட்டவன் போலிருந்தான். கழுத்து முழுக்க ரத்தக்குழாய்கள் புடைத்துப் பரவியிருந்தன. உந்திய பெரிய முட்டைக்கண்கள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு பொதுவான அன்றாடச் செயலைச் செய்வது போல என்னை வதைத்தார்கள். என் உடல் வலிதாங்கும் எல்லையை மிகவிரைவாகவே எட்டிவிட்டது. என் உதடுகளை நானே கடித்து இறுக்கிக் கிழித்துக்கொண்டேன். என் நகங்கள் என் உள்ளங்கைக்குள் புகுந்து ரத்தகாயமாகியின.

ராவ் என் முன்னால் தன் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து என் கண்களை நோக்கிச் சொன்னான் ”சர்க்கார், இந்த சித்திரவதை நீங்கள் உண்மையைச் சொல்லும் வரை நிற்காது… நாங்கள் உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரை இதுவரை இப்படி வதைத்திருக்கிறோம். எல்லாருமே வாய் திறந்திருக்கிறார்கள்…”

நான் அவன் கண்களை என் நீர்வழியும் கண்களால் பார்த்தேன். பேச ஆரம்பித்தபோது வீங்கிய என் உதடுகள் ஒத்துழைக்காமல் அசைந்தன. ”நான் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்…அதைச் செய்கிறேன்…” ராவின் கண்களில் ஒரு சிறு ஏமாற்றம் மின்னிச் செல்வதைக் கண்டுகொண்டேன். அவன் நாற்காலியை பின்னால் தள்ளிவிட்டு எழுந்து ஒரு குறடை எடுத்து என் முன்காட்டினான். நான் அதைப்பார்ப்பதை தவிர்த்தேன். பின்பு என் கண்களை இழுத்து அதில் நட்டேன். சாதாரண  ஆணிபிடுங்கும் கிடுக்கிதான். அவன் அதை என் முன் சிலமுறை விரித்துக் காட்டியபின் என் இடது கையை இழுத்து சுட்டுவிரல் நகத்தை அதன்நுனியால் கவ்வினான்.

என் குதவாய்கூசியது. இப்போது நான் அதையே பார்க்கவேண்டும் என்பதே நடைமுறை. அதை அஞ்சி பார்வையை விலக்கினால் நான் வலிக்கு அடிப்பட ஆரம்பிக்கிறேன். அதில் கவனத்தை நிறுத்தவேண்டும், ஆனால் அது என் உடலல்ல என்பது போல என்னை விலக்கிக் கொள்ளவும் வேண்டும். அலறலாம் , அழலாம். ஆனால் வலியை நீக்கிக்கொள்ள எதையுமே செய்யக்கூடாது. அந்த வலியில் அக்கணம் முழுமையாக மூழ்கிக்கிடக்க வேண்டும். அதுதான் வலியை எதிர்கொள்ள மிகச்சிறந்த வழி என்பது.

வலியில் திளைக்கையில் காலமில்லாமலாகிவிடுகிறது. அனுபவங்கள் தலைகீழாகிவிடுகின்றன. கைகள் தீயால்சுடப்படும்போது கால்களில் வலி தெறிக்கின்றது. இனம்தெரியாத ஒலிகள் காதில் வெடிக்கின்றன.  விதவிதமான நாற்றங்களை நாசி அறிகிறது. நாம் நம் வாயால் கூவுவதை நாமே கேட்டு துணுக்குறுகிறோம். சம்பந்தமே இல்லாத சொற்கள். நான் ”போறேன்….நான் போறேன்…அம்மா அம்மா” என்று கூவிக்கொண்டிருந்தேன். எங்கே? என்னுள் நின்று இதை வியப்பது யார்? இரண்டாக, நான்காக பிரிந்த மனம் ஒன்றை ஒன்று கவனித்தபடி தங்கள் திசைகளில் சிதறிப்பரவுகிறது. உச்ச வலி என்பது உச்சகட்ட போதை.

ராவ் அந்தக்குரடால் என் நகத்தை கையிலிருந்து பிடுங்கி உருவி எடுத்தான். பல்லைப்பிடுங்கும் மருத்துவர்போல. ரத்தம் படிந்த சிப்பி போலிருந்த அதைத் தூக்கி என்னிடம் காட்டினான். என் சுட்டுவிரலில் வலி உயரழுத்த மின்சாரம்போல அலையலையாகத் தாக்கிய பின் சட்டென்று நிலைத்தது. ஒரு கணநேரக் குளுமை. விரல் ஈரக்களிமண்ணால் ஆனதுபோல கிடந்தது. நீர்ப்படலத்துக்கு அப்பால் ராவ் அந்த நகத்தை குறடின் நுனியில் ஏந்தி என்னிடம் ஆட்டிக் காட்டிவிட்டு சிரித்தான். சட்டென்று அதை என் வாய்க்குள் போட்டான். உப்புக்கரித்த ரத்த வீச்சத்துடன் பிளுபிளுவென்ற சதைத்துணுக்குடன் என் நாவில் பட்டது. நான் அதை துப்பியபோது வீங்கிய உதடுகளால் விசைகூட்ட முடியாமல் அது என் மார்பில் விழுந்தது.

அவன் இன்னொரு விரலைப்பற்றி அதில் குறடைவைத்ததும் என் மூளையில் முன்பு நான் பேசியபோது அவன் கண்களில் தெரிந்த அந்த ஏமாற்றம் மின்னிச் சென்றது. அந்தவழி மிக அருகே விரியத்திறந்து கிடந்திருக்கிறது என்று உணர்ந்த வியப்பு என்னை அதிரச்செய்தது. ”நோ..நோ… நான் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்…நான் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்…” என்று ஆங்கிலத்தில் கதறினேன். கதற ஆரம்பித்ததுமே கதற விழைந்து என்னில் நிறைந்திருந்த துன்பம் மடை திறந்தது. கண்ணீர் விட்டபடி ரத்தம் வழிந்த கைகளைக் கூப்பியபடி ”விட்டுவிடுங்கள்…எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்….விட்டுவிடுங்கள்…வேண்டாம்” என்றேன்.

ராவ் முகத்தில் ஏமாற்றம் நன்றாகவே தெரிந்தது. நாற்காலியில் அமர்ந்தபடி ”ம்” என்றான். நான் தழுதழுத்த குரலில் நான் இயக்கத்தை சேர்ந்த கொலையாளிதான் என்றும் பொன்னம்பலத்தாரைக் கொல்வதற்காகவே யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்பினேன் என்றும் அதற்காகவே என் இயக்கம் என்னை டெல்லிவரை கொண்டு வந்து சேர்த்தது என்றும் சொன்னேன். ராவ் என்னையே பார்த்துக்கொண்டிருந்தபின் ”ஏன் கொல்லவில்லை?” என்றான். ”எனக்கு இன்னும் உத்தரவு வரவில்லை” என்றேன். ”எப்படி உத்தரவு வரும்?” என்றான் ராவ். ”தெரியாது…வரும் என்று சொன்னார்கள்…” ராவ் என்னையேகூர்ந்து பார்த்து சில நிமிடங்கள் இருந்தான். பின்னர் ”உன்னிடம் ஏதாவது சிக்னலர் இருக்கிறதா?” என்றான். ”இல்லை…அது இருந்தால் சோதனையில் மாட்டிக்கொள்வேன் என்றார்கள்” என்றேன்.

மேலும் சிலநிமிடங்கள் அமைதிக்குப் பின் ராவ் எழுந்தான். நான் இருகைகளையும் நீட்டி ”ராவ்…நான் எல்லாவற்றையும் ஒத்துக்கொள்கிறேன். நான்தான் அந்தக்கொலையாளி. நானேதான். எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் சொன்னபடிச் செய்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்.. ”என்றேன். ராவ் லேசாகத் துப்பிவிட்டு வெளியே சென்றான். அந்த நரம்பு ஆள் என்னை பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தான். தூரத்தில் எங்கோ பறவை ஒலிகள் கேட்டன. ஒரு பழங்கால கிளாக் டாங் டாங் என்று இருமுறை அடித்தது. பகலா இரவா தெரியவில்லை.

நான் என் முழங்கால்கள் மேல் மடிந்து அழ ஆரம்பித்தேன். அழுகை எனக்கு அப்போது மிகவும் தேவைப்பட்டது. என் மொத்த மனமும் விம்மல்களாக தேம்பல்களாக மாறி வெளியே கொட்டிக்கொண்டிருந்தது. அழுது ஓய்ந்து முழங்காலிலேயே முகத்தை வைத்துக்கொண்டு வெறுமைபடர்ந்த மனத்துடன் அமர்ந்திருந்தேன். நான் அப்போது உணர்ந்த அமைதியை வேறெப்போதும் உணர்ந்ததில்லை. அனைத்துமே எளிமையாக முன்னால் கிடந்தன. அஞ்சவேண்டிய ஏதுமில்லை உலகில். வலிக்கு அப்பால் செல்லும் மனிதநிலை ஏதுமில்லை. மரணம், அது ஒரு அதிர்ச்சியின் கணம் மட்டும்தான்.

என்னை சுவாமி கண்டிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பார் என உணர்ந்திருந்தேன். அவரது மனம்  முழுக்க ஏமாற்றம் நிறைந்திருக்கலாம். ஒரு கையில் காபியுடன் திரையில் என்னைப்பார்த்துக்கொண்டு என்ன செய்வதென்று அறியாமல் சிந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் ஆட்டம் முடிந்துவிட்டது. வலிதாளமுடியாமல் தனக்குச் சம்பந்தமில்லாத ஒன்றை ஒப்புக்கொண்டிருக்கும் கோழையை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நான் இனிமேல் எவ்வகையிலாவது அவருக்குப் பயன்படுவேனா என்று மட்டும் அவர் மனம் ஓடும். பயனில்லை என்றால்… ஆனால் எனக்கு பயம் வரவில்லை. நான் உணர்ந்த வெறுமை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக தெரிந்தது அவ்வளவுதான்.

நான் அப்படியே தூங்க ஆரம்பித்துவிட்டேன். என் இளமைநாட்களுக்குச் சென்று உற்சாகமாக நீர்க்கொழும்பு கடற்கரையில் பையன்களுடன் மணலை அள்ளி வீசி கத்தி கூச்சலிட்டு விளையாடினேன். மீன்பிடிப்படகுகளுக்குள் பதுங்கிக்கொண்டு திருடன்போலீஸ் விளையாடினோம். எப்போதுமே பழைய காக்கி கால்சட்டை போட்டிருக்கும் குலம் என்னை கண்டுபிடித்துவிட்டான். ஓவென்று அவன் கத்த என்னைநோக்கி மற்ற போலீஸ்பையன்கள் ஓடிவந்தார்கள். நான் படகிலிருந்து எம்பி மணலில் குதித்து ஓட ஆரம்பித்தேன்.

பின்பக்கம் சிரிப்பொலிகள் துரத்தின. நானும் சிரித்துக்கொண்டுதான் இருந்தேன். என் பக்கவாட்டில் நீல நிறமாக ஒளி சுருண்டு அலையாக ஆகி கரைநோக்கி வந்து ஒரு மாபெரும் புடவையை விரித்து பரப்பி பின் இழுப்பது போல அலையடித்தது. என் விழியிமைகளுக்குள் காட்சிகளின் ஒளி நிறைந்து ததும்பிக்கொண்டிருக்க அறைக்குள் நடமாட்டங்களை உணர்ந்தேன். மெல்லிய பேச்சொலிகள்.

பின்பு என்னை யாரோ கூப்பிடுவதை உணர்ந்து விழித்துக்கொண்டபோது அறைக்குள் ராவ் நின்றிருந்தான். ”கிளம்பு” என்றான். நான் எழுந்தபோது நிற்க முடியாமல் தள்ளாட அவன் என் தோள்களைப் பற்றிக்கொண்டான். நோயுற்ற நண்பனை தூக்கிச் செல்பவன் போலிருந்தான். வெளியே சென்று பழைய அரசு அலுவலகத் திண்ணை போலிருந்த அந்த வராந்தாவில் நடந்து நாங்கள் வந்த காரிலேயே ஏற்றிக்கொண்டான்.

ராவ் என்னருகே ஏறியதும் ”வாண்ட் எ டிரிங்க்?” என்றான். நான் தலையசைத்தேன். அவன் ஒரு கோக் டின்னை நீட்டினான். நான் அதைத்திறந்து நுரைநீரை இழுத்துக்குடித்தேன். நீர் செல்லும் வழியை எனக்குள் குளுமையாக உணர்ந்தேன். என் வாயின் காயங்கள் மேல் அதன் ஜிர்ரிப்பு இதமாக இருந்தது. குடித்து முடித்ததுமே வயிறு எம்பியது. இருமுறை குமட்டல் போல அதிர்ந்தபின் அமைதியாகி அந்த டப்பாவை காரின் பக்கவாட்டில் வைத்தேன்.

சாலைகள் விடிகாலைப்பனியில் செத்து விரைத்த கருநாகங்கள் போலக் கிடந்தன. கட்டிடங்கள் பனிப்படலம் போர்த்தியிருக்க மரங்கள் அசைவே இல்லாமல் நின்றன. எங்கே செல்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன். அனேகமாக இதுதான் என் கடைசிப்பயணம். இன்னும் சற்று நேரத்தில் நான் சுடப்படக்கூடும். அடையாளம் தெரியாத பிணமாக மின்மயானத்தில் எரியலாம். அல்லது டெல்லியைத் தாக்கவந்த தீவிரவாதியாக நடுத்தெருவில் சுட்டுத்தள்ளப்பட்டு வரலாற்றில் இடம்பெறலாம். நான் புன்னகை செய்துகொண்டேன்.

கொஞ்சநேரத்தில் நாங்கள் செல்லும் திசை எனக்குப் புலப்பட ஆரம்பித்தது. பொன்னம்பலத்தாரின் வீடு நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தோம். என் மனம் கொஞ்சநேரம் பரபரப்படைந்தது. எதற்காக என்னை வரச்சொல்லியிருக்கிறார் ? அவர் கண்முன் என்னைக் கொல்லப்போகிறார்களா? இல்லை அவரது பெண் முன்னால் நான் வதைக்கப்படுவேனா?

நான் பெருமூச்சுடன் சாய்ந்தமர்ந்துகொண்டேன். இனிமேல் எதிலுமே பொருள் இல்லை. இந்த ஆட்டத்தில் இனி நான் செய்வதற்கும் ஏதுமில்லை. கண்களைமூடிக்கொண்டாலும் ஒளி வழியாக சாலைநகர்வதை  உள்கண் கண்டுகொண்டிருந்தது. தலை கொஞ்சம் சுழல்வது போலிருந்தது. நான் எங்காவது படுத்து தூங்க விரும்பினேன். எங்காவது என்னை சாய்த்து புதைத்துக்கொள்ள விரும்பினேன்.

கார் பொன்னம்பலத்தாரின் இல்லத்தை நெருங்கி உள்ளே சென்றபோது நான் நிமிர்ந்து அமர்ந்தேன். என் சிந்தனைகளைக் கோர்த்து என்னை நிதானப்படுத்திக்கொண்டேன். கார் நின்றதும் ராவ் இறங்கி தன் கனத்த கைகளை என் தோளில் வைத்து ”ஸாரி பிரதர்…இதெல்லாம் என் தொழில்…உங்களுக்கே தெரியும்..” என்றபின் பெரிய பற்களைக் காட்டி புன்னகை செய்தான். நான் தலையசைத்தேன்.

சிவதாசன் வந்து என்னை வரவேற்றார். என்னுடைய கோலத்தை அவர் கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை. ”லைப்ரரியிலே இருக்கார்” என்று சுருக்கமாகச் சொல்லி என்னை இட்டுச் சென்றார். நான் குளிர்ந்த கூடத்தைத் தாண்டி என்னுடைய பிரதிபலிப்பு சுவர்களில் அசைய மௌனமாக நூலகம் நோக்கிச் சென்றேன்.

நூலகத்தில் பொன்னம்பலத்தார் செய்தித்தாள்களை வாசித்துக்கொண்டிருந்தார். நிமிர்ந்து என்னைப் பார்த்தபோது அவர் முகத்தில் ஒருகணம் திகைப்பைக் கண்டேன். என் கோலம் அப்படி இருந்திருக்கக் கூடும். சட்டென்று எழுந்து என்னை நோக்கி வந்தார். அவரது வேகத்தில் நான் அதிர்ந்து ஒரடி பின்னால் வைத்தேன். பொன்னம்பலத்தார் அவரது பெரிய கைகளால் என்னை ஆரத்தழுவி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டார். அவரது வெம்மையான உடலை, விபூதி வாசனையை நான் உணர்ந்தேன். என் உடல் தொய்ந்து களைத்து அவருடன் ஒட்டிக்கொண்டது.

”ஸொறி…ஸொறி…” என்று மெல்லியகுரலில் சொன்னார் பொன்னம்பலத்தார். ”எனக்கு ஒண்டுமே தெரியாது…ராத்திரி ரெண்டுமணிக்குத்தான் சுவாமி போன்பண்ணிச் சொன்னவர். நானறிஞ்சு ஒண்ணும் நடக்கயில்லை…நான் உம்மை என் சொந்த சகோதரனாத்தான் நினைக்கிறன்…நம்புங்கோ” என்றார். அழுகைகலந்த குரல் உடைந்து நின்றுவிட்டது. நான் ”பரவாயில்லை” என்றேன்.

அவர் என்னை அணைத்துச் சென்று அமரச்செய்தார். நாற்காலியை இழுத்து என்னருகே போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டார். ”எனக்கு எல்லாத்தையும் சொன்னவங்கள்… நீரும் வைஜெயந்தியும் பேசின பேச்சுக்க ரெக்காடையும் குடுத்தவங்கள்.” நான் நிமிர்ந்து பார்த்தேன். அவர் என் தோளைத்தட்டி ”நீர் என்னைக் கொல்ல நினைக்கயில்லை…அது எனக்கு தெரியும்…  உம்ம மனசு எனக்கு தெரியும்…நான் உம்மை சந்தேகப்படயில்லை” என்றார். என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது

அவர் என் கன்ணீரை மெல்லத் துடைத்தார். ” அவை உம்மைகொல்லணும் எண்டு திட்டமிட்டினம். நீர் பிரயோசனப்படமாட்டீரெண்டு அவைக்கு தோணிட்டுது…நீர் இயக்கத்திலை இல்லை, சாதாரணமா தப்பிவந்தவர்தான் எண்டு தெரிஞ்சதுக்குப் பிறவு உம்மை வைச்சுக்கோண்டு என்ன செய்யறது? நான் சொன்னவன், அவரை எனக்கு தெரியும், தெரிஞ்சுதான் வச்சிருந்தனான், என்ர ஆளை எனக்குக் குடுத்துப்போடுங்கோ எண்டு கேட்டனான்…சுவாமிக்கு மனசில்லை. சுவாமி ஒண்ணையுமே மிச்சம் வைக்காம முடிக்கிற ஆள். நான் மேலிடத்திலே பேசுவேன் எண்டு சொன்னபிறவுதான் விட்டவங்கள்”

நான் அவர் கைகளை என் நடுங்கும் கைகளால் தொட்டேன். அவர் என் கைகளைப் பிடித்தபோது ‘ஆ’ என்றேன். அவர் குனிந்து பார்த்து நகமில்லாத என் விரலைப் பார்த்தார். நடுங்கியபடி கைகளை பின்னுக்கிழுத்துக்கொண்டு ”முருகா!” என்று கூவினார். ”என்ன செய்தினம்? என்ன செய்தினம் உம்மை?” என்றார்

நான் மெல்லிய புன்னகையுடன் ”பரவாயில்லை…விடுங்கோ…விடுங்கோ புரபசர்” என்றேன். ”இல்லை…இந்தமாதிரி செய்து போட்டினம்… எப்டி என்னைக் கேக்காம செய்தினம்…நான் இப்பவே இதை டி.ஜிகிட்டே கேக்கிறன்…என்னெண்டு நினைச்சுப்போட்டினம்..” என்றார் அவர். கண்கள் கலங்கி கன்னத்தில் கண்ணீர் வழிய பெரிய முகம் அடக்கப்பட்ட அழுகையில் துடித்தது. ”விடுங்க புரபசர்…இதை நீங்க பெரிசு பண்ணினா எனக்குத்தான் ஆபத்து… இந்த மட்டுக்கும் சரியான நேரத்திலை வந்து காப்பாத்தினீங்கள்…”

பொன்னம்பலத்தார் பெருமூச்சு விட்டு ”ஓம் ஓம்” என்றார். ”முருகனருளாலே சரியான நேரத்திலை எனக்கு விஷயம் தெரிஞ்சுபோட்டுது…இல்லையின்னா…சரி, உமக்கு விதியிருக்கு” என்றார். நான் அவரையே பார்த்தேன். ”கோப்பி குடிக்குறீரோ?” ”ஓம்” என்றேன். அவர் எழுந்து சென்று அழைப்பு மணியை அழுத்தினார். சேவகனிடம் இரண்டு காப்பிக்குச் சொன்னபின் ”கொடுமை…”என்று தலையை உலுக்கினார்.

நான்பேசாமல் அவரையே பார்த்திருந்தேன். ”எதுக்காக இந்தக் கொடுமையெல்லாம்…நம்ம இனத்துக்கு இந்த நூற்றாண்டிலே இதையெல்லாம் அனுபவிக்கணுமெண்டு விதியிருக்கோ? எனக்கு ஒண்டுமே புரியயில்லை…எவ்ளவு ரத்தம் எவ்ளவு வலி… என்னால முடியயில்லை…எங்கேயாவது ஓடிப்போனாப் போருமெண்டு நினைக்கிறன்…என்னால இதுக்குமேலே தாங்க முடியாது…” என்றார்.

நான் ”வைஜெயந்தி எங்கே?” என்றேன். அவர் என்னை நேராகப் பார்த்து ”அவளும் சந்திராவும் அஜ்மீருக்குப் போயாச்சு…என்னையும் அஜ்மீருக்கு போகச்சொல்லியிருக்கிறவங்கள்…” என்றார். நான் தலைகுனிந்து ”ஸொறி புரபசர்” என்றேன். ”என்னத்துக்கு ஸொறி? எல்லாம் நியாயம்தான். அவ என்னைக் கொல்லணுமெண்டு கேட்டதுகூட நியாயம்தான்…அவகிட்ட அதைத்தான் சொன்னேன். இந்த நரகத்திலை இருந்து வேறே எப்டி தப்புறது தம்பி? இந்த எரிதீயிலே  எத்தனைநாள்தான் வாழுறது? அவ என்ன செஞ்சாலும் அதெல்லாம் நியாயம்.நான் நித்திரை கொள்ளையிலே என் கழுத்திலே கத்தியை வச்சு வெட்டினாலும் கூட அதிலை ஒரு நியாயம் இருக்கு…எனக்கு அது தெரியுது…”

அவர் என்னை நெருங்கி மெல்ல ”நான் அவைகிட்ட பேச ஆரம்பிச்சிட்டேன்…” என்றார். நான் ஜில்லிட்ட குரலில் ”ஆர் கிட்ட?” என்றேன். ”இயக்கத்துக்க கிட்ட. ஒரு லிங்க் வந்தது…இங்க ரோவிலே ஆர் ஆர் இருக்கினமெண்டு எல்லா தகவல்களையும் சொன்னா என்னை விட்டுடலாமெண்டு சொன்னவங்கள். நான் சில தகவல்களைச் சொன்னனான். மிச்சம் தகவல்களை என்னை யூரோப்புக்கு எடுத்தவங்களெண்டால் சொல்லுறன் எண்டு சொன்னவன்” நான் அவரையே பார்த்தேன். ”எல்லாம் நல்லபடியா வந்தா இந்த மாசம் கடைசியிலே நான் கிளம்பிடுவேன் தம்பி…இங்காலை இவங்களை விட்டுப்போட்டுத்தான் போகணும்…  ஆனா ஆரையும் கைவிட்டிட மாட்டேன். வெளீயே போனா உமக்கும் வைஜெயந்திக்கும் எல்லாம் ஒரு ஏற்பாடு செய்யாம போக மாட்டேன்…நான் போனபிறவு ரோ உங்களை ஒண்டும் செய்யாது…”

நான் பெருமூச்சு விட்டேன். காபி வந்தது. அடிபட்ட உதடுகள் வலியில் அதிர நான் காபியை உறிஞ்சி மெதுவாகக் குடித்தேன். மெல்ல மெல்ல பொன்னம்பலத்தார் நிதானமடைந்தார். அவரது உற்சாகம் மீண்டது ”முருகனருளாலே எல்லாம் நல்லபடியா நடக்குது…அவைக்கு இங்காலை உள்ள சில தகவல்கள் வேணுமெண்டு நினைக்குறன். அதை நான் குடுக்க ஏலும். அதுக்கு விலையா என்ர உசிரை அவை குடுக்கினம்…  தம்பி உமக்கு தெரியாதது இல்லை. எனக்கு இப்ப என்ர உசிர் மட்டும்தான் வேணும்…. நான் ஆரும் சாகவேணுமெண்டு நினைக்கயில்லை…எல்லாரையும் வாழவைக்கணுமெண்டுதான் நினைக்குறன்…எனக்கு ஒரு விஷன் இருக்கு… எப்ப்டியெண்டு சொல்ல ஏலாது. ஒரு சாதாரண விஷன். இதெல்லாம் இனிமே அதிககாலம் போகாது. எதுக்கும் ஒரு முடிவு உண்டுதானே? இன்னும் மேலேபோனா பத்து வருசம். அதுக்குள்ள இந்த இயக்கம், பெடியள், துவக்கு, சயனைடு, ஆர்டிஎக்ஸ் எல்லாம் இல்லாம ஆயிடும். எல்லாரும் எல்லாரையும் மறந்து போடுவாங்கள்…. அந்த காலம் வரை எப்டியாவது பல்லைக்கடிச்சுட்டு உசிரோட இருந்திட்டா போரும். இந்த ஆட்டத்திலை உசிரோடை இருக்கிற ஆக்கள்தான் ஜெயிச்சவங்கள்…நான் உசிரோடை இருக்க விரும்பறன்…”

நான் அவரையே பார்த்துக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தேன். ”நான் இங்காலை இவளை விட்டுப்போட்டு போறன்… நீர் இவளை பாத்துக்கிடும்…” சட்டென்று என் கைகளைப் பிடித்துக்கோண்டு ”நீர் இவளை மேரி பண்ணினாக்கூட எனக்கு சம்மதம்தான். நீர் சைவர்தானே. மத்தபடி அந்தஸ்தெல்லாம் ஒண்டும் எனக்கு முக்கியமில்லை. நீர் இவளை லவ் பண்றீரெண்டு நினைக்கிறன். இல்லையெண்டால் என்னைக் கொல்லுறனெண்டு சொல்லியிருக்க மாட்டீர்…” நான் தளர்ந்து நாற்காலியில் சாய்ந்துகொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.

”இண்டைக்கு கனக்க வேலை கிடக்கு. நீர் போயி ரெஸ்டு எடுத்துட்டு மதியம் தாண்டி வாரும்” என்றார் பொன்னம்பலத்தார். நான் சரி என்று எழுந்து சற்றே தள்ளாடியபின் சுவரை பிடித்து நின்றேன்.  

பொன்னம்பலத்தார் சட்டென்று நினைத்துக்கொண்டு அந்த துப்பாக்கியை மேஜை இழுப்பில் இருந்து எடுத்து என்னிடம் நீட்டினார் .’ உமது அறையிலே இருந்து ரோ ஒபிஸர்ஸ் இதை எடுத்தவங்கள். நாந்தான் இதை அவருக்கு குடுத்தனான் எண்டு சொல்லி வாங்கி வைச்சனான்… நீர் இத்தனைநாள் குண்டு உள்ள துவக்கோடை என் பக்கத்திலை இருந்திருக்கிறீர். நீ என்னை கொல்ல வந்தவர் எண்டு அவை சந்தேகப்படினம்….” என்று சிரித்தார். அழுத குழந்தைகள் சிரிப்பது போல் இருந்தது

நான் கைநீட்டாமல் நின்றதனால் அவர் அதை என் கையில் வைத்து ”இது உமது கையிலை இருக்கட்டும்” என்றார். நான் அதை வாங்கிக்கொண்டேன்

எனக்கு காதுக்குள் ஒரு ரீங்கரிப்பும் கண்களில் அடிக்கடி விழிக்கோளம் அதிவதுபோல சிறிய ஒளிவெடிப்புகளும் இருந்தன. குமட்டல் எடுத்தது. ஆனாலும் எங்கும் பிடிக்காமல் நடந்து வெளியே வந்தேன். காவலுக்கு நின்ற கூர்க்கா ஜவான் தலைகுனிந்து வணங்கினான்.

 என் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டேன்.  இடுப்பில் துப்பாக்கி உறுத்தியது அதை எடுத்து படுக்கையில் என்னருகே போட்டேன். கண்மூடி கண்ணுக்குள் ஓடிய ஒளியலைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.மெத்தை பெரியதோர் குழியாக என்னை இழுத்து கீழே கீழே கொண்டுசென்றபடியே இருப்பதாகப் பட்டது. நினைவுகள் குழம்பி குழம்பிக் கரைந்தன. நான் எதையோ எண்ணினேன். முக்கியமான ஒரு சிந்தனை. ஆனால் அது கையெட்டும் தூரத்தில் நழுவியது. அதை பிடிக்க முயன்றவனாக தூங்கிப்போனேன்

எழுந்தபோது முதல் நினைப்பாக அதுதான் மனதில் வந்தது. அந்த சிந்தனை, அது என் செல்போனைப் பற்றியது. பொன்னம்பலத்தார் இயக்கத்திடம் பேசியிருந்தாரென்றால் கண்டிப்பாக எனக்கு ஏதேனும் செய்தி வந்திருக்கும். நான் எழுந்து கழிப்பறைக்குள் சென்று கழிவுத்தொட்டிக்குள் கைவிட்டு துழாவி அந்த பொட்டலத்தை எடுத்தேன். அதை திறந்து செல்போனை ஆன் செய்தேன். சில கணங்கள் கழித்து அது சிக்னல் பெற்றது. சிறிய ஒளியதிர்வுடன் செய்தி இறங்கியது. நான் அதை நடுங்கும் விரல்களால் வாசித்தேன். ‘Do’ .

ஆழ்ந்த பெருமூச்சுகளுடன் சில கணங்கள் அமர்ந்துகொண்டேன். செல்போனின் பின்பக்கத்து மூடியை திறந்து உள்ளிருந்து சயனைட் கேப்ஸ்யூலை எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டேன். செல்போனின் சிம்கார்டை ஒடித்து நீரில் போட்டு அடித்து உள்ளே செலுத்தியபின் அதை நீரில் போட்டு விட்டு வெளியே வந்து, என் சட்டையையும் கால்சட்டையையும் அணிந்துகொண்டு, படுக்கையில் கிடந்த துப்பாக்கியை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு,வெளியே வந்தேன். வெயிலில் கண் கூசியது. நேராக நடந்து பொன்னம்பலத்தாரின் இல்லம் நோக்கிச் சென்றேன்.

நேராக பொன்னம்பலத்தாரின் அறைக்குள் நுழைந்தேன். செல்லும்வழியில் தானே பூட்டும் கதவை உள்ளிருந்து சாத்திவிட்டேன். பொன்னம்பலத்தார் செல்போனில் பேசியபடியே என்னை திரும்பிப் பார்த்து ஆச்சரியமான கண்களுடன் வரும்படிச் சைகை காட்டினார். நான் அக்கணமே அவரை நோக்கி சுட ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான்.

*

இந்த வாக்குமூலம் இப்படி முடியும் என நீங்கள் எதிர்பார்க்காதது அல்ல. ஆனால் சொல்லிவந்து இப்படி முடிக்கும்போது நீங்கள் சற்று அதிர்ச்சி அடைந்து பின்னால் சாய்ந்துகொண்டு முகவாயை வருடியபடி என்னைப்பார்க்கிறீர்கள். நீங்கள் என்னை கவனித்துக்கொண்டு என்ன சிந்திக்கிறீர்கள் என்று என்னால் சொல்லிவிட முடியும். பொன்னம்பலத்தாரை நான் ஏன் கொன்றேன், அந்த முடிவை எப்போது எடுத்தேன் என்று சிந்திக்கும் உங்கள் மனம் சென்று தொடும் இயல்பான இடம் அது. அவரைக் கொன்றது வழியாக சட்டத்தை மீறி என்னை நீங்கள் கொல்லமுடியாத இடத்துக்கு நான் சென்றுவிட்டேன்.  இனி என்னை நீங்கள் நீதிமன்றத்தில்தான் நிறுத்த முடியும், விசாரணை செய்ய முடியும். பலபத்தாண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வரலாம். ஒருபோதும் என்னை உங்கள் சட்டம் கொல்லாது.

ஆனால் அதுவல்ல காரணம். இதை நான் எப்படி உங்களுக்குச் சொல்வேன். உங்கள் நாட்டில் உங்கள் அலுவலகத்தில் உங்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அதை உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நான் அவரைக் கொன்றதற்கு ஒரே ஒரு காரணம் தான் — எனக்கு கொல்லும்படி உத்தரவு வந்தது. விசை அழுத்தப்பட்ட துப்பாக்கி செய்வதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது.

இந்த குறிப்பை நீங்கள் முடித்துவிடலாம். ஒரு மனிதன் எங்கே எப்போது வெறுமொரு ஆயுதமாக ஆகிறான் என்று நீங்கள் உங்கள் தனிப்பட்ட டைரியில் எழுத ஆரம்பிக்கலாம்.  நாளை உங்கள் சுயசரிதையில் விளக்கலாம். எந்த நுட்பமான கருவியும் எல்லைக்குட்பட்ட இயக்கவிதிகளால் ஆனதுதான். முற்றிலும் ஊகிக்கக்கூடியதுதான். ஆனால் மனிதன் அப்படியல்ல. எல்லையிலாது மாறும் இயக்கவிதிகள் கொண்டவன், அவனாலேயே  ஊகிக்க முடியாத அகம் கொண்டவன். அப்படிப்பட்ட ஒரு மனிதன் முழுமையாகவே  ஒரு கருவியாக ஆவதென்பது சாத்தியமா? சாத்தியம் என்பதற்கு நான் உதாரணம். இங்கே உங்கள் கண்முன்னால்…

ஆனால் அப்போதுகூட உங்கள் மூளையை ஒரு சிறு கேள்வி நெருடிக்கொண்டே இருக்கும். அந்த கேள்வியை இந்த ஆவணத்தில் எழுதாவிட்டால் மட்டுமே இந்த வழக்கை நீங்கள் முடிக்க முடியும். சோபாவுக்குக் கீழே பொன்னம்பலத்தாரின் உடல் கிடந்தது.அவரது மூக்குக் கண்ணாடி மட்டும் திவானுக்கு அடியில் வெகுதூரம் தள்ளிச்சென்று சுவரோரமாகக் கிடந்தது. விழுந்தவரின் உடலில் இருந்து அது அவ்வாறு தெறித்திருக்க நியாயமில்லை.

அதற்கான காரணத்தை நான் உங்களிடம் சொல்லப்போவதில்லை. நான் கீழே விழுந்த பொன்னம்பலத்தார் துடிப்பதை அரைக்கணம் பார்த்தேன். என்னுள் அப்போது ஏதோ நிகழ்ந்தது. அந்த வேகத்தில் அவரது தலையை என் காலால் எத்தி உதைத்தேன். அப்போது கதவு உடைபடும் ஒலி கேட்க தப்பி பின்னால் ஓடினேன்.

ஏன் அப்படிச் செய்தேன் என்பதற்கான காரணத்தை என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க நான் யோசிப்பேன், மிக அந்தரங்கமாக.

[முற்றும்]

முந்தைய கட்டுரைஉலோகம் – 15
அடுத்த கட்டுரைஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?