கலைஞனின் உடல்

unnamed (1)
ஜெ

நான் முதன் முதலாக ஒரு தரமான பாடகரை நேரில் பாடக் கேட்டது ஊட்டியில் யுவன் பாடிய போதுதான். பின்னணி இசை இல்லை , முழுமையாக்கப் பட்ட கச்சிதம் இல்லை , பதிவு செய்யப் பட்ட நுணுக்கம் இல்லை , இருந்தும் அது நேரில் ஜீவனுடன் இருந்தது , இத்தனைக்கும் யுவன் முறையாக பயின்றவரும் அல்ல . இந்த மின் சாதனங்களற்ற கடத்திகளற்ற இசை அனுபவமே அதை இன்னமும் உயிர்ப்புடன் நிகழ்த்தியது , பெரும் பாடகர்களின் பதிவு இசைக்கு ஒரு மாற்று மேல் அதன் அனுபவம் எனச் சொல்லலாம் .

கமலை சந்தித்த போதும் அதுதான் நிகழ்ந்தது . இரண்டு நாட்கள் ஒரு பெரும் கலைஞனின் அசல் கலை அனுபவம் வாய்த்தது . திரைப் படத்தில் நாம் காணும் கமல் முதலில் அவராக வந்து படம் செல்லச் செல்ல அவர் இல்லாமல் ஆவர் அல்லது அவராகவே நீடிப்பார். அனால் நம் நேரில் கண்ட நமக்காக மட்டுமே நடித்த கமல் முதலில் வேறொருவராக வந்தார் , தான் இல்லாமல் ஆனார் மெல்ல இறுதியில் தான் தானானார். பின்னர் யோசித்துப் பார்த்ததில் அவர் நமக்கு நிகழ்த்திக் காட்டிய சுமார் 20க்கும் மேற்பட்ட சம்பவங்களில் அனைத்திலும் அவர் ஒரு பார்வையாளர் மட்டுமே அது எல்லாம் தான் காண பிறருக்கு நிகழ்ந்தது, எதிலும் குறிப்பிடும் படியான பங்கேற்பாளர் அல்ல அவர். நம் கண் முன்னே அசோகனாக ,சிவாஜியாக , நாகேஷாக , எம் ஜி யா ராக , காகா ராதா கிருஷ்ணனாக என அனைவராகவும் கணப் போதில் தோன்றி முற்றிலும் தான் இல்லாமல் ஆனார் , மனிதர்களுக்கு இடையே இருக்கும் சில நுட்பமான கூர்ந்து கவனித்தால் மட்டுமே நாம் அறியக் கூடிய அம்சங்களை அவதானித்துள்ளார் , அதை லேசாக சுட்டிக் காட்டினாலும் ஆச்சர்யப் படத் தக்க வகையில் நாமும் அவரை அறிகிறோம் , அந்நபர்களை நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை அப்போது தான் நாமும் அறிகிறோம்.

அவரை சந்தித்த போது தான் ஒன்று தோன்றியது , ஒரு மேம்பட்ட நடிகன் சற்று முயன்றால் பல்வேறு நபர்களை நிகழ்த்திக் காட்டி விடமுடியும் , பாவனை /வடிவ பேதங்ககளை நிகழ்த்துவது சாத்தியம் தான் ஆனால் உணர்வுகள் ஏறும் படிநிலையும் இறங்கும் படிநிலைகளையும் ஒரு பெரும் கலைஞனால் மட்டுமே நிகழ்ந்த முடியும். இயக்குனர் R C ஷக்தி உங்களின் மகாபாரதத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் போது க்ளாப்ஸ் அடிப்பதில் நெகிழத் துவங்கி , காமிரா துவக்கத்தில் ஒரு படி ஏறி , நடிகர் நடிக்கத் துவங்கும் போது மேலும் ஒரு படி ஏறி ஷாட் முடிந்ததும் உச்சகட்ட அழுகைக்கு சென்று உங்களை கட்டி தழுவி அழுத நிகழ்வு அபாரம் . உணர்வெழுச்சி ஒவ்வொரு படியாக ஏறி அதன் உச்சத்தை அடைந்து தளர்வதை நாம் கண்டோம்.

இன்னமும் சற்று நேரம் இருந்திருந்தால் கடவுளை நடித்துக் கட்டி ஒரு பிரபஞ்சத்தை கண்முன் படைத்தது விடுவாரோ என்ற அச்சத்துடன் தான் நான் விடை பெற்றேன்.

அசலைக் காட்டிலும் போலச்செய்தலில் உயர்ந்து படைப்பவன் ஒரு அசல் கலைஞன். கமல் ஒரு அசல் கலைஞன்.

கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைபுராவதியும் சுநீதியும்
அடுத்த கட்டுரைஅப்பாவுக்கு மூன்று கவிதைகள்