ராஜம் கிருஷ்ணன்- கடிதம்

[embedyt]http://www.youtube.com/watch?v=ICaj2RLgoVI[/embedyt]

அன்புள்ள ஜெ,

ராஜம் கிருஷ்ணன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுமையாலும், தனிமையாலும் பீடிக்கப்பட்டு சில ஆண்டுகளாக படுக்கையில் இருந்தார். நண்பர் கடலூர் சீனு சொல்லி பலமாதங்களுக்கு முன்பு ஒருநாள் அவரைச் சென்று பார்த்தேன். அவரைப் பார்த்துக்கொள்ள அமர்த்தப்பட்டிருந்த செவிலி, பாட்டியம்மா ஐந்து வருடங்களாக இங்கேயிருக்கிறார் உங்களுக்கு இப்போதான் தெரியுமா என்றார்.

அவரைச் சேர்த்திருந்த முதியோர் இல்லத்தினர் அவரது உடல்நலன் கருதி அவரை ராமச்சந்திராவில் சேர்த்திருப்பதாகச் செவிலி கூறினார். மருத்துவமனை இயக்குநரின் நேரடி பொறுப்பில் சேர்க்கப்பட்டிருப்பதால் நன்றாக அவரை நாங்கள் கவனித்துக்கொள்வதாகவும், அவ்வப்போது சில பெரிய ஆட்கள் அவரை வந்து பார்த்துச் செல்வதாகவும் கூறினார்.

ராஜம் கிருஷ்ணனிடம் உங்கள் வாசகர் என் அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் பெயரைக் கேட்டு தன் மனதிற்குள் அடிக்கடி சொல்லிப்பார்த்துக் கொண்டார். அவருக்கு அதி இரத்த அழுத்தம் மற்றும் கால்களின் சிரை நாளங்களில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதால் அதிக வலி இருப்பதாகவும் செவிலி கூறினார். அடிக்கடி உங்களை வந்து பார்க்கிறேன் என்று விடைபெற்றேன்.

பின்னர் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு மீண்டுமொருமுறை அவரைக்காணச் சென்றேன். இம்முறை மிகவும் உடல்நலம் குன்றியிருந்தார். மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவரது கேட்கும்திறன் மிகக் குறைந்திருந்தது. ஆனால் என் கைகளை இறுகப்பற்றிக்கொண்டார். கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. கூர்மையான கண்கள், தீர்க்கமாக என்னை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்தார். அவரது கண்களை என்னால் சந்திக்கமுடியவேயில்லை. பின்னர் வருவதாக சொல்லி விலகிவந்தேன். அவரது முற்றிலும் கைவிடப்பட்ட தனிமை நிலை அன்று நெடுநேரத்திற்கு என்னை ஆட்கொண்டிருந்தது.

தங்கவேல்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6
அடுத்த கட்டுரைரத்தம்- கடிதங்கள்