ஈராறுகால் கொண்டெழும் புரவி – 3

[3]

சாஸ்தான்குட்டிப்பிள்ளை முதன்முதலில் நாகம்மையின் உடலைப் பார்த்தபோது ”இது ஏம்ளா இப்டி இருக்கு ?” என்று கேட்டார். .நாகம்மை நொடித்து” பின்னே எப்டி இருக்கும்ணு நெனக்கியோ? வேறெ கண்டிட்டுண்டோ? ” என்றாள் .

அவருக்கு கொஞ்சநேரம் கையும் காலும் எதுவும் ஓடவில்லை. ”நான் எங்க கண்டேன் ? ஆனா…”

நாகம்மை வாரிச்சுருட்டி” என்ன ஆனா?” என்றாள்

“இப்பிடி இருக்கு?”

“பின்ன எப்பிடி இருக்கணும்?’

“இல்லே …உறக்கையின் கனி நிகரென இலகிய முலைமேல்- ண்ணாக்குமெ அருணகிரிநாதர் சொன்னது.. இது வலதுகாளை எடக்காளையக்காட்டிலும் மூப்புமாதிரி இருக்கே… “

“அவன் கண்டான் .. பெரிசா” என்றாள் நாகம்மை

சாஸ்தான்குட்டிப்பிள்ளை மேலும் தமிழாய்ந்து ”இணைமுலைண்ணு வேற சொல்லுதானே?” என்றார்

“கல்லோ கலயமோ கண்டிருப்பான். இஷ்டமானா பாருங்கோ… சும்மா….” என்றாள் அவள்

ஒருவாரம் பிள்ளைக்கு ஊடே தமிழ் வந்து தொந்தரவு செய்தது.  இருதோளுற்று அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ

உதட்டை மென்று பல் இடுகுறிகளும் இட்ட பிறகு அவரே கற்றுக் கொண்டார். பின் உடலின் தூலவிசித்திரங்களை மொழி தொட முடியாதென்று அறிந்தார். தொடமுயலும்தோறும் மொழி வேறு வகை உடல்களையே உருவாக்குகிறது. சருமத்தின் வரிகளும் வெண்விரிசல்களும் மடிப்புகளும் கருமைகளும் ……

அணைத்துப்படுக்கையில் “என்னாண்ணு இப்பிடி பாக்கியோ? ” என்றாள் அவள்

“பாத்து தீரமாட்டேங்கே” என்றார் பிள்ளை.

“அதுக்காச்சுட்டி இருவத்துநாலு நாழியுமா பாத்துட்டிருக்கது ?நாலாளு கண்டா என்ன நெனைப்பாக? நேத்தைக்கு களத்திலே வச்சு அப்பிடி உத்து பாக்கியோ. வேலம்மை அக்காவும் சரஸ்வதியக்காவும் பாத்துபோட்டு முணுமுணுங்கியாவ.. சிரிக்காவ…  எனக்கானா ஐயேண்ணு ஆயிப்போச்சு.. “

‘உனக்கு பிடிக்கல்லியா?’

“பிடிக்கல்லண்ணு இல்ல. ஆனா ஒரு இது வேணுமில்லா. இப்டியா ?”

“என்ன இது… கெட்டின பெண்டாட்டி .. பாக்காமப்பின்ன? இந்த ரோமம் இருக்கே.. இது மனுஷ சருமம் முழுக்க விதவிதமா பரவி என்னா வெளயாட்டு காட்டுதுங்கே?காவியத்த படிச்சு முடிக்கலாம், இதுக்க வரையெழுத்த வாசிச்சுமுடிச்சவன் இருக்கமாட்டான். கம்பனும் அருணகிரியுமொண்ணும் இதுக்க வெளயாட்ட கண்டு பாடிக்கிட மாட்டான். …”

‘போரும் பெனாத்தினது…” அவள் எழுந்து தலைமயிரை சுட்டிக்கட்ட ” அய்யோ ” என்றார் அவர்

“என்னது?”

“உனக்க கையில பாத்தியா? இங்க தோளில.. முத்தின செம்மூங்கில்மேல ஒரு வரியோடியிருக்குமே… அதமாதிரி…”

“செரியான கிறுக்கு…” என்று நாகம்மை கதவைத்திறந்தாள்.

“ஏளா ஒரு நிமிசம்ட்டி … இந்தா ஒரு நிமிசம் பாத்துக்கிடுதேன்…”

இரண்டுவருடம் இடைவெளியில்லாமல் பார்த்தும் நாகமையை பிள்ளை ஓரளவேனும் பார்த்துமுடிக்கவில்லை . பிறகு இருந்து நினைத்தால்கூட அவள் முகம் நினைவு வராது. கனவுபோல முனையும் தோறும் கலையும். ஆனால் எதிர்பாராத கணத்தில்  அவள் உடலின் ஒருபகுதி ஒரு கோணத்தில் துளித்துல்லியம் துலங்கி எழும். பிறகு மண்டை மார்பில் முட்டும்படி நாட்டுச்சாராயம் குடித்தால்தான் தூங்க முடியும்.

வேப்பம்குச்சி உணர்வுகொண்ட பிறகு பிள்ளைக்கு மது தேவையில்லை என்றாயிற்று. நடக்கும்தரை ஒரு கண்ணாடி வெளியென்றானது போல. மிருகங்களின் பறவைகளில் கண்கள் வழியாக அறிந்த சொற்களில் அறியாத விஷயங்கள் தெரியவந்தன. குச்சியுடன் அலைந்து திரிந்து எட்டாம் நாள் பஞ்சைத்தலையும் வெடித்த உதடுகளும் புழுதிப்பாதங்களுமாக சாமித்தோப்புக்குச்சென்று சேர்ந்தார்.

அய்யாவுநாடார் விறகுக்காக தென்னைமட்டைகளை பிளந்து வெயிலில் போட்டுக் கொண்டிருந்தவர் “வாருமே பிள்ளை…மடை பொட்டியாச்சுண்ணு தோணுதே…” என்றார்.

“என்னால முடியல்ல… என்னால முடியல்ல” என்றார் பிள்ளை

“உம்மட்டே ஆருவே கம்பத்தூக்கச் சொன்னா? செயிச்சாச்சுல்லா .. தூக்கிப்போட்டுட்டு சோலிமயிரப் பாரும்…”

பிள்ளை சாணித்திண்ணையில் அமர்ந்தார்.

‘மோரு குடிக்கேரா?” நாடார் “டெயிசியே மக்களே” என்றார்.

பெரிய கரிய உதடுகள் கொண்ட பெண் “ஓமப்பா” என்ற படி எட்டிப்பார்த்தது

“மோரு எடு குட்டீ”

செம்புநிறைய மோரை குடித்ததும் மெல்ல சாத்தான்குட்டிப்பிள்ளை அடங்கினார்.

“பத்து கேள்விக்கு ஒரு சொம்பு மோரு பதில் சொல்லிப்போடும் பாத்துக்கிடும்” என்றார் நாடார் மீண்டும் அரிவாளை எடுத்தபடி” அப்பம் உமக்கிப்ப ஊணுமில்ல உறக்கமும் இல்ல… “

பிள்ளை “எனக்கு வேற நெனைப்பே இல்ல . இப்பம் நான் காலுவைக்க நிலமில்ல” என்றார். சட்டென்று சீறிய விசும்பலுடன் ”என்னால முடியல்ல…எனக்கு நிக்க முடியல்ல” என்று அழுதார்.

நாடார்  இன்னொரு மட்டையை எடுத்து பிளந்தபடி பேசாமல் இருந்தார். அழுது ஓய்ந்ததும் பிள்ளை”நான் போறேன். இந்த கம்பும் தண்ணிவித்தையும் ஒண்ணும் எனக்கு செரிவராது… நான் போறேன்…” என்றார்.

“நீரு ரெசக்கெட்டும் பாசாணக்கெட்டும் படிச்சவருல்லா…? ” என்றார் நாடார்.

“அது இப்பிடி இல்ல”

“அது நீரு கெட்டுத கெட்டாக்குமே. அப்பம் உம்ம கெட்டு நல்ல உறப்பாத்தான் இருக்கும். தான் சிக்கல்லேண்ணா சிலந்தி உலகத்த சிக்கவைக்க வலைகெட்டும். ஆனா இது தண்ணிக்க கெட்டுல்லா… ம்ம்ம் ” நாடார் அரிவாளால் முதுகை சொறிந்தார். ” நல்ல வெயிலு. ஆனியாடீல இந்த வெயிலுண்ணா இனி கிருசி நெறைஞ்சதுதான். என்னெங்குதீரு? ” என்றார்

“என்ன இதிலேருந்து அறுத்துவிட உம்மால முடியுமா?”

“இஞ்ச பாரும் வே. ஒரோ பிராயத்துக்கும் உலகம் ஓரோண்ணாக்கும் . ஒருவயசுக் குட்டிக்கு உள்ள உலகமில்லே ரெண்டு வயசுக் குட்டிக்கு. கரஞ்சு விளிச்சா கஞ்சி வந்துடுமுண்ணு குட்டிக நெனைக்கும், நீரு நெனைக்க முடியுமா வேய் ? உம்ம உலகம் மாறியாச்சு. நடந்து வந்திட்டேரு.. இனி நீரு பொறகால போக முடியாது பாத்துக்கிடும்…”

“இல்ல நாடாரே.. இந்த உலகம்…. உள்ளதச்சொன்னா கண்ணாடிக்குப்பிக்குள்ள கெடக்கமாதிரி இருக்கு எல்லாம் . ஒண்ணு பத்தாகி பத்து நூறாகி… ஓய் ,இவ்வளவு பெரிய வலைக்கோலத்துக்குள்ள நாம மனுசங்க இங்க என்னவே செய்யுதோம்? “

“அது உமக்கென்னத்துக்குவே ? அறிஞ்சா என்ன செய்வீரு ?”

“அறியலாமே. அறியாம இருந்தா இதில இருக்கமுடியல்லியே…”

“அறிஞ்சவன் அமைவான். செரி, உம்மகிட்டே ஒண்ணும் சொல்லி பிரயோசனமில்ல . உமக்கொரு யோகமிருக்கு.நம்ம ஆசான் சொல்லுவாரு மொத்தம் ரெண்டு பூலோகம் உண்டூண்ணு ஒரு மண்புழு நினைச்சுதுண்ணுட்டு . ஒண்ணு அது திங்கப்போற மண்ணு, இன்னொண்ணு அது திண்ணு வெளிக்கெறங்கின மண்ணு . அப்டியாக்கும் கத… மீனும் கெளங்குமுண்டு. சோறு திங்குதேரா? “

சாப்பிட்டுவிட்டு திண்ணையிலேயே பாய்போட்டு படுத்தார் பிள்ளை. நாடார் காய்ப்பேறிய கனத்த பெரிய கைகளால் அவர் நெற்றியைத்தொட்டு ” உறங்கும்” என்றார்.

“உறக்கமே இல்ல…எட்டுநாளாச்சு அசந்து உறங்கி…”என்றார் பிள்ளை.

“உம்ம சிந்தையில பாதிய நம்ம கிட்ட குடுத்துப்போடும்” என்றபடி அவர் நெற்றியிலிருந்து கையை எடுத்ததும் தலை சட்டென்று விசையிழந்து இலகுவாகியது. தரை மீது உடலின் அழுத்தம் குறைந்தது.

“இப்பம் நீரு சாத்தாங்குட்டிப்பிள்ளை இல்ல . ஒரு புழுவாக்கும். சும்மா பூவில இருக்க புழு. இல்லாட்டி கனியிலே இருக்க புழு. பீயில இருக்கபப்ட்ட புழுவுண்ணும் வையும். புழுவுக்கு எல்லாம் ஒண்ணுதான்…என்னவே?” என்றார்.

பிள்ளை மெல்ல தூங்கிவிட்டார். கனவில் நாகமையைக் கண்டார் . அவளுடைய வலிமையான திரண்ட தொடைகள் இடுப்பில் இணையும் இடத்தில் மென்மையான சதைவரிகள் , மென்மயிர்ப்பரப்பு எழுந்த அடிவயிற்றுக் கதுப்பு. பிள்ளை வேப்பம்குச்சியை அவள் வயிறுமீது வைத்தார். பேச்சுக்குரல்கள் கேட்டன. ஒளிரும் கண்களும் காலடியோசைகளும் . மிகவும் தெரிந்தகுரல்கள் , சில தெரியாத குரலகள்.” ஆரு?”  என்றார் பிள்ளை செவிகூர்ந்து. ”ஆராக்கும் ?” என்றார் ”அய்யே…” என அவள் குச்சியைத் தட்டிவிட்டாள். அவளது மார்புகளுக்கு மேல் குச்சியை வைத்தார்.

உள்ளே ஒரு அசைவு. நதிகளின் சுழிப்பி. அச்சத்துடன் பிள்ளை ”அய்யோ ” என்றார். குச்சி விலக அவள் கோபத்துடன் பாய்ந்தெழுந்து அதை தட்டிவிட்டாள். அவமதிக்கபப்ட்டவள்போல சீறிய மூச்சும் ஈரமான கண்களுமாகப் பார்த்தாள்.

பிள்ளை எழுந்து ரத்தம் கட்டிய கண்களுடன் அமர்ந்து பரட்டைத்தலையை வருடினார்.

குளித்து , நரைகலந்த அடர்மயிர் அகன்ற மார்பில் ஈரத்துடன் அருகே அமர்ந்த நாடார் “நல்ல உறக்கமா வோய் ?” என்றார்.

“சொப்பனம்”

‘செண்ணு குளிச்சுட்டுவாரும் . நல்ல மீன் கறியுண்டு . தின்னுட்டு மேல ஒரு தூக்கத்தப் போடும். காலம்ப்ற எல்லாம் தெளிஞ்சுப்போயிடும்”

“இங்க இருக்கப்பதான் தூக்கம் வருது “

”நமக்கு படிப்பில்லல்லா ? எழுத்தறியா ஏடறியா சொல்லு . அதுக்கு இருக்க கல்லிலே பீடமுண்டு . எழுதின எழுத்துக்கு தண்ணியிலாயக்கும் பீடம். பத்தினிப் பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்க சிதைவுகள் செய்தவர்… ஹெ ஹெ ஹெ!”

“திருமூலர் சொல்லாக்குமே” என்றார் பிள்ளை வியந்து.

“ஆரு சொன்னா என்ன ?நம்ம ஆசான் அண்டுகோடு ஞானப்பிரகாசம் வாத்தியாராக்கும் எனக்குச் சொன்னது “

மீன்கறி சேர்த்து சோறுண்டுவிட்டு இரவில் சாணிமெழுகிய களமுற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்தார்கள்.  மேலே நட்சத்திரங்கள் விரிந்த வானில் ஒரு மூலையில் பிறை நிலா.

“மண்ணைப்பாக்க வேப்பம்கம்பு வச்சிருக்கேரு. விண்ணைப்பாக்க வச்சிருக்கேராவே?”

“விண்ணைப்பாக்க முடியுமா?” என்றார் பிள்ளை

“விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்தங்கிருந்தது ” என்றார் நாடார். “தேடாதேரு. தேடிக் கிட்டுத ஒண்ணுமே தேடுகதுக்குண்டானது இல்லை. தேடிவாறதே செல்வம். ஆக்கம் அதர்வினாய் செல்லணும்ணாக்கும் சொல்லு. கேட்டேரா? ”

பிள்ளை வானையே பார்த்து கிடந்தார். விண்மீன்கள் அடியற்ற ஆழம் கொண்ட கடலில் மிதந்து கிடந்தன. அருகே இருப்பவையெல்லாமே திடமாக , அர்த்தம் கொண்டவையாக இருக்கின்றன. அகலுதோறும் அருவமாகின்றன, அர்த்தமிழக்கின்றன. அருகமையே வடிவமும் பொருளுமாகின்றதா என்ன? விண்மீன்களின் நடுக்கம் விண்மீன்களின் வண்னமெனும் பிரமை விண்மீன்கள் கோடானுகோடியென்றாலும் ஒவ்வொன்றிலும் சூழ்ந்துள்ள தனிமை . விண்மீன்களின் மௌனம் .

‘நான் விட்டுடுதேன்” என்றார் அவர்.

நாடார் அதை கேட்டதாகத் தெரியவில்லை. தூங்கிவிட்டார் என்று எண்ணி திரும்பிப் பார்த்தார். நாடார் அருகே கிடந்தாலும் அவர் அங்கே இல்லை என்றே பிள்ளையின் உட்புலன்கள் சொல்லின. உடல் நெடிது நீண்டு கிடந்தது. திறந்த கண்கள், மென் மூச்சு. ஆனால் அவர் அங்கே இல்லை.

மன எண்ணங்களை எண்ணி எண்ணி தவிக்க அவரையே பார்த்திருந்தார். எங்கே சென்றிருக்கிறார்? விண்மீன்களிலா, இல்லை அவற்றுக்கிடையேயான அடியற்ற ஆழ இருளிலா? சிறகாட்டும் தென்னை, சிலுசிலுக்கும் பூவரசு எல்லாவற்றுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சொல்லப்படமுடியாதது.

பின் மெல்ல நாடார் வந்தார். அவரது வருகையை உடனே உள்மனம் உணர முடிந்தது . ஒரு மூச்சொலி . அழைக்க எண்ணினார். ஆனால் அழைக்கவில்லை. தூக்கம் வருமென்று நம்பி அங்கே படுக்கமுடிந்தது.  அதுவே போதுமென்றிருந்தது.

[மேலும் ]

முந்தைய கட்டுரைஜோதி பாஸு
அடுத்த கட்டுரைஇலங்கை, இறுதிப்போர்.