‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9

பகுதி இரண்டு : சொற்கனல் – 5

நாய்களின் குணம்தான் படைகளுக்கும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. நாய்கள் கூட்டமாக வேட்டையாடுவன என்பதனால் அவற்றுக்கு படைகளின் இயல்பு வந்ததா என மறுகணம் எண்ணிக்கொண்டான். பின்வாங்குபவற்றையே அவை மேலும் துரத்துகின்றன.

பாஞ்சாலர் பின்வாங்குகிறார்கள் என்பதே கௌரவர்களை களிவெறியும் கொலைவெறியும் கொள்ளச்செய்ய போதுமானதாக இருந்தது. தாக்குதலும் இறப்பும் முன்னைவிட அதிகரித்தன. பாஞ்சாலப்படையை முழு விரைவுடன் தாக்கி பின்னுக்குத்தள்ளிச்சென்றது கௌரவப்படை. அதுவரை வில்லேந்திப் போரிட்ட காலாள்படையினர் வேல்களும் வாள்களுமாக பாஞ்சாலப்படைமேல் பாய்ந்து தாக்கத் தொடங்கினர்.

பாஞ்சாலப்படை அஞ்சிய கணமே அதன் போரிடும் விரைவு குறைந்தது. அதன் விரைவு குறையக்குறைய அதன் அழிவு கூடியது. கூடிவரும் அழிவு அச்சத்தை மேலேற்றியது. கோபுரம் இடிந்துவிழும்போது இடிபாடுகளே மேலும் இடிப்பதைப்போல அதன் தோல்வியே மேலும் தோல்வியை கொண்டுவந்தது. பிணங்களை முன்னால் விட்டுவிட்டு பாஞ்சாலர்கள் பின்வாங்கிக்கொண்டே இருந்தனர்.

தோல்வியில் மனிதர்கள் விதியாகி வந்திருக்கும் பிரபஞ்சத்தை அறிகிறார்கள், வெற்றியில் தன்னை மட்டுமே அறிகிறார்கள் என்று துரோணர் முன்பொருமுறை சொன்ன வரிகளை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அக்கணம் வரை ஒவ்வொரு கௌரவப் படைவீரனும் தன் படைக்காகப் போரிட்டான். ஒன்றாவதையே வழியாகக் கொண்டிருந்தான். வெற்றியின் முகப்பில் அவர்கள் தனியர்களானார்கள், தங்களுக்காகப் போரிட்டனர். வாளைத்தூக்கியபடி அமலை ஆடினர். எம்பிக்குதித்து கூச்சலிட்டனர். அம்புபட்டு கைதூக்கி விழுந்தவர்களின் தலைகளைக்கூட வெறிக்கூச்சலுடன் வெட்டி வீழ்த்தினர்.

ரதத்தைத் திருப்பி பின்வாங்குவது என்பது தன் படைகளுக்கு ஓடும்படி ஆணைகொடுத்ததாக ஆகிவிடும் என்பதனால் துருபதனும் சத்யஜித்தும் முன்னோக்கி நின்று தொடர்ந்து போரிட்டனர். ஆனால் தங்கள் காலாள்படையிலிருந்து துண்டுபட்டு முன்னேறிவரும் கௌரவர்களிடம் சிக்கிவிடலாகாது என்பதையும் அறிந்திருந்தமையால் சக்கரங்களை பின்னோக்கி உருட்டியபடியே சென்றனர். குதிரைகள் பின்னோக்கி காலடி எடுத்துவைத்தபோது நடைதடுமாறி ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு கனைத்தன.

திரும்பும்படி ஆணைவருகிறதா என்று சத்யஜித் தமையனை ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டே இருந்தான். தோல்வி நிகழ்ந்துவிட்டது என்று துருபதன் அறிந்திருந்தான். ஆனால் அதை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை. மைந்தனுக்கு நிகரான இளையோரிடம் தோற்றபின் அவனுக்கு ஷத்ரிய சபையில் இளிவரலே எஞ்சுமென அவன் அறிந்திருந்தான். அங்கே சாகவே அவன் எண்ணினான்.

ஆனால் அவனைமீறி பாஞ்சாலப்படை பின்னால் சென்றுகொண்டே இருந்தது. நதி மணல்கரை இடிந்துவிழுந்து பின்னகர்வதுபோல சடலங்கள் விழ படை விளிம்பு பின்வாங்கியது. துருபதன் பின்னால் திரும்பி நோக்கினான். அவன் பின்னால் நோக்குவதே ஒரு தோல்வி என்பதுபோல பாஞ்சாலப்படை மேலும் பின்வாங்கியது. தன் சிறகுமுனையை கைவிட்டுவிட்டு துரியோதனன் கை நீட்டி உரக்க நகைத்தபடி துருபதனை நோக்கி வந்தான்.

“இளையவனே போர் முடிந்துவிட்டதா?” என்றான் பீமன். “இன்னும் ஒன்றை எதிர்பார்க்கிறேன் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். அவன் சொற்கள் முடிவதற்குள்ளாகவே கௌரவப்படைகளின் பின்பக்கம் வடக்கிலிருந்து பேரொலி எழுந்தது. முரசுகளும் கொம்புகளும் ஒலிக்க நூறு ரதங்கள் கொடிகள் பறக்க விரைந்துவந்தன. அவற்றை இழுத்த குதிரைகளின் பிளந்த வாய்கள் துல்லியம் அடைந்தபடியே வருவது தெரிந்தது. அவற்றுக்குப்பின்னால் ஐநூறு புரவிகள் பிடரி பறக்க வந்தன. அவற்றில் நீளமான மூங்கில் ஈட்டியை ஏந்திய வீரர்கள் அமர்ந்திருந்தனர்.

“யார் அவர்கள்?” என்று தருமன் கூவினான். “சிருஞ்சயர்கள்… கருஷரின் தலைமையில் வருகிறார்கள்” என்றான் அர்ஜுனன். தருமன் திகைத்து “அவர்கள் துரியோதனனை ஆதரிப்பதாக செய்திவந்தது என்றார்களே?” என்றான். “மூத்தவரே, இந்த மலைநிலத்தை அவர்கள் ஆயிரம் வருடங்களாக காத்துவருகிறார்கள். எத்தனை ஆதிக்கப்படைகளை கண்டிருப்பார்கள். அத்தனை எளிதாக குலத்தையும் மண்ணையும் விட்டுக்கொடுப்பவர்களாக இருந்தால் அவர்கள் இதற்குள் அழிந்திருப்பார்கள். அப்படி அழிந்த பல்லாயிரம் குலங்கள் இங்குள்ளன” என்றான் அர்ஜுனன்.

“ஏன் முரசுகளை முழக்குகிறார்கள்?” என்று தருமன் குழம்பியபடி கேட்டான். “துருபதன் சரணடையப்போகிறான் என்று எண்ணிவிட்டார்கள். ஆதரவுக்கு வந்துகொண்டிருப்பதை தெரிவிக்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “அந்த ஒலியின் விளைவை இப்போது பார்ப்பீர்கள்.”

பீமன் “ஆம், இனி கௌரவர் தப்பமுடியாது” என்றான். “ஏன், அவர்களின் படைகள் இன்னும் வீரியத்துடன்தானே இருக்கின்றன?” என்றான் தருமன். “மூத்தவரே, நம்பிக்கையிழப்பின் இறுதிக் கணத்தில் கிடைக்கும் நம்பிக்கை மாபெரும் ஆற்றலுடையது. அது ஒவ்வொரு பாஞ்சாலனையும் நூறுபேராக்கும். பாருங்கள்” என்றான் பீமன்.

கண்ணெதிரில் அந்த அற்புதம் நிகழ்வதை அர்ஜுனன் கண்டான். பாஞ்சாலர்கள் விற்களைத் தூக்கி ஆட்டியபடி பெருங்கூச்சலுடன் முன்னால் பாய்ந்து வந்தனர். கௌரவர்கள் பின்னால் எதிரிப்படைகள் வரும் செய்தியாலேயே நிலைகுலைந்துவிட்டிருந்தனர். அதேசமயம் துணைகண்டு எழுந்து வந்த பாஞ்சாலர்களின் கட்டுக்கடங்காத வெறியை எதிர்கொள்ளவும் முடியவில்லை.

சிருஞ்சயர்களின் புரவிப்படை கௌரவர்களின் பாதுகாப்பற்ற காலாள்படைக்குள் புகுந்தது. நீண்ட மூங்கில் ஈட்டிகளால் மீன்களைக் குத்துவதுபோல கௌரவர்களை குத்திப்போட்டனர். அதில் அவர்களுக்கு தனித் தேர்ச்சியிருப்பதை அர்ஜுனன் கண்டான். மார்புக்கவசத்துக்கும் தலைக்கவசத்துக்கும் நடுவே தெரிந்த கழுத்துஎலும்புகளின் குழி மேலே இருந்து பார்க்கையில் வசதியான இலக்கு. அதில் ஈட்டிகள் சிக்கிக் கொள்வதுமில்லை. ஒரே ஒருமுறை குத்தி அதிகம் இறக்காமல் உடனே ஈட்டியை எடுத்தனர். குத்துபட்டவனின் மூச்சு நெஞ்சுக்குள் இருந்து வெளியேற அவன் துளைவிழுந்த தோல் பானைபோல துவண்டு முழந்தாளிட்டான்.

அவர்களின் ஈட்டிகள் இருமுனைகொண்டவை. குத்திய ஈட்டியை மேலே தூக்கி எடுப்பதற்குப்பதில் சுழற்றி மறுமுனையால் குத்துவது எளிது. ஈட்டிகள் அலையலையாகச் சுழன்றன. அவர்கள் சென்றவழிகளில் கௌரவர்கள் விழுந்து குதிரைக்குளம்புகளால் மிதிபட்டுத் துடித்தனர். சிலகணங்களிலேயே கௌரவர்களிடமிருந்த வெற்றிவெறி மறைந்தது.

பாஞ்சாலப்படை முழுமையாகவே கௌரவர்களை வளைத்துக்கொண்டது. காலாள்படையினர் சிருஞ்சயர்களை நோக்கித் திரும்பியபோது தேர்களுடன் கர்ணனும் துரியோதனனும் கௌரவர்களும் பாஞ்சாலர்கள் நடுவே சிக்கிக்கொண்டனர். “பார்த்தா, செல்வோம்” என்றான் தருமன். “இன்னும் சற்று நேரம்” என்றான் அர்ஜுனன். “பார்த்தா, கௌரவர்கள் எவரேனும் இறந்துவிடக்கூடும். பலருக்கு கடுமையான காயமிருக்கிறது” என்றான் தருமன். “இறக்கட்டும்… ஆனால் அவர்கள் நம்மை ஒருகணமேனும் இறைஞ்சவேண்டும்” என்றான் அர்ஜுனன். பீமன் தன் கதையை உயர்த்தி “ஆம் பார்த்தா… அதுதான்” என்று கூவி நகைத்தான்.

ஒருகணம் அங்கிருந்து வந்து சுழன்றுபோன காற்றில் பச்சைரத்த வாசனை இருந்தது. அது கௌரவர்களின் ரத்தம் என நினைத்தபோது அர்ஜுனன் சிலிர்த்துக்கொண்டான். அவன் கைகால்கள் அதிரத்தொடங்கின. இந்தக்கணத்தை எப்படிக்கடப்பேன் என்பதுதான் என் முன் உள்ள அறைகூவல். என் முதல் தேர்வு. இதை நான் கடந்தால் வென்றேன். “பார்த்தா, தீராப்பழி வந்துசேரும்… அவர்கள் நம் குருதி” என்றான் தருமன். அர்ஜுனன் விழிகளை நிலைக்கவிட்டு இறுகி நின்றான்.

கௌரவர்கள் முழுமையாக சூழ்ந்துகொள்ளப்பட்டனர். நதிக்கரைச்சேற்றில் செல்வதுபோல பிணங்களின் மேல் சிருஞ்சயர்களின் ரதங்கள் ஏறிச்சென்றன. கர்ணனும் துரியோதனனும் சிருஞ்சயர்களின் ரதங்களால் சூழப்பட்டனர். துரியோதனனை விட்டு விலகாதவனாக துச்சாதனன் போரிட்டான். களத்தில் அம்புபட்டு துச்சலன் சரிவதைக் கண்டு “துச்சலன்… அந்தக் காயம் பலமென்று நினைக்கிறேன்… நீ வராவிட்டால் போ. நான் போய் அவர்களுடன் இறக்கிறேன்” என்றான் தருமன்.

“மூத்தவரே, அவர்கள் நம்மை அழைக்கட்டும்” என்றான் அர்ஜுனன். மேலும் மேலும் சூழ்ந்துகொள்ளப்பட்ட துரியோதனனை நோக்கி சினத்துடன் நகைத்தபடி துருபதன் முன்னேறினான். “இல்லை, இனிமேல் இங்கிருப்பதில் பொருள் இல்லை. அவர்கள் நம்மவர்” என்றான் தருமன். “மூத்தவரே, கடைசிக்கண உதவி என்பதன் ஆற்றலை நமது படைகளுக்கும் அளிப்போமே” என்றான் அர்ஜுனன்.

தன்னைச்சூழ்ந்த வில்லாளிகளை எதிர்கொண்டபடி துரியோதனனை நோக்கிச்செல்ல முயன்றான் கர்ணன். அதைக்கண்டதும் கருஷனும் சத்யஜித்தும் அவனை இருபக்கமும் சூழ்ந்துகொண்டு தடுத்தனர். துருபதனின் அம்புபட்டு துச்சாதனன் தேர்த்தட்டில் சரிந்தான். அவனை சாரதி விலக்கிக்கொண்டு செல்ல துருபதன் துரியோதனனின் ரதசக்கரத்தை பிறையம்பால் உடைத்தான். கோடரியம்பால் அதன் அச்சை விடுவித்தான். ரதம் உடைந்து உருண்டோட கனத்த கவசங்கள் மண்ணில் அறைபட துரியோதனன் களத்தில் விழுந்தான்.

கர்ணன் தன் சங்கை எடுத்து ஊத கௌரவர்களின் எரியம்பு ஒன்று வானிலெழுந்தது. அர்ஜுனன் புன்னகையுடன் “கிளம்புவோம் மூத்தவரே” என்றான். இருகைகளையும் தூக்கி “அனைத்து முரசுகளும் முழங்கட்டும். அனைவரும் முடிந்தவரை பேரோசையிட்டுச் செல்லவேண்டும்” என்றான். “ஆணை” என்றான் பிரதீபன்.

முரசும் கொம்பும் முழங்கியதும் பிரதீபன் “வெற்றி!” என்று கூவியபடி ரதத்தில் முன்னால் பாய்ந்தான். ”சந்திரகுலம் வாழ்க! அஸ்தினபுரி வாழ்க!” என்று கூவியபடி பாண்டவர்களின் படை புல்சரிவில் பாய்ந்து விரைந்தது. எரியம்புகளைத் தொடுத்தபடியும் முரசுகளை முழக்கியபடியும் அவர்கள் சென்றனர்.

அந்தப்பேரோசை சிருஞ்சயர்களை திகைக்கச்செய்தது. அதேகணம் கௌரவர்கள் படை முழுக்க ஒரு துடிப்பை உருவாக்கியது. ஒரு படையே கம்பளிப்பூச்சி போல உடல் சிலிர்ப்பதை அர்ஜுனன் கண்டான். வில்நுனிகளில் வேல்முனைகளில் கவசங்களில் அந்த அசைவு ஓடிச்சென்றது. இழந்த நம்பிக்கை நுரைத்தெழ அவர்கள் உரக்கக் கூச்சலிட்டு ஒருவரோடொருவர் இணைந்துகொண்டனர். அவன் நெருங்கிச்செல்லச் செல்ல கௌரவர்களின் திரள் இறுகி மீண்டும் வடிவம் கொண்டது.

மொத்த நாடகமும் மறுபக்கமாகத் திரும்புவதை அர்ஜுனன் புன்னகையுடன் கண்டான். சிருஞ்சயர்கள் திகைத்துக்கலங்கி பின்னால் திரும்பினர். அவன் எண்ணிய எல்லைவந்ததும் வில்லை எடுத்து முதல் தொடுப்பிலேயே கருஷனின் வாய்க்குள் அம்பைச் செலுத்தி தொண்டைக்குள் இறக்கினான். வாயும் கண்ணும் மட்டுமே கவசத்துக்குமேல் திறந்திருந்த கருஷன் அந்த அம்பை இருகைகளாலும் பற்றியபடி தேரில் சரிந்தான்.

அர்ஜுனனின் அடுத்த அம்பு அவன் கண்ணில் பாய்ந்தது. அவன் குனிந்து தேர்த்தட்டில் சரிய தலைக்கவசம் விலகிய இடைவெளியில் அடுத்த பிறையம்பு புகுந்து தலையை வெட்டியது. அடுத்த அம்பு அந்தத் தலையை மேலே தூக்கியது. அடுத்தடுத்த அம்புகள் அதை விண்ணில் தூக்கிச் சுழற்றின. முதல் அம்பு தன் கையிலிருந்து இயல்பாக எழுந்து சென்றதை அதன் பின்னர்தான் அறிந்தான். அந்த எண்ணம் அவன் அகத்தை துள்ளச்செய்தது.

அர்ஜுனன் போருக்கும் பயிற்சிக்கும் வேறுபாட்டை உணரவில்லை. இங்கும் அம்புகளும் இலக்குகளும்தான். சில கணங்களுக்குப்பின் இலக்குகள் மட்டும்தான் இருந்தன. அவன் இருக்கவில்லை. அவன் இல்லாததனால் இறப்பு குறித்த அச்சமும் எழவில்லை. பிறர் போர் வேறுபட்டது என உணர்வதற்கான காரணம் ஒன்றே, அது உயிரச்சம். அவன் கைகளிலிருந்து அம்புகள் சென்று அந்தத் தலையை தொட்டுத் தொட்டு மேலேற்றிக்கொண்டிருந்தன.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

மேலே எழுந்த கருஷனின் தலையைக் கண்டு சிருஞ்சயர்கள் திகைத்து ஓலமிட்டனர். தலை மண்ணில் விழுந்த இடத்தில் வீரர்கள் அஞ்சி விலகி ஓடினர். சிருஞ்சயர் குலத்தின் அடுத்த தலைவனாகிய சபரனின் தலை தொடர்ந்து வானிலெழுந்ததும் ஓலங்கள் கூடின. இன்னொரு தலைவனாகிய பத்மனின் தலை சுழன்று மேலெழுந்து சென்று சபரனின் தலைமேலேயே விழுந்தது.

அர்ஜுனன் சிருஞ்சயர்களின் தலைவர்களை மட்டும் தொடர்ந்து தாக்கினான். இன்னொரு தலைவனாகிய பிருஹத்பாலன் தலை மேலெழுந்து சுழன்றதைக் கண்டதும் சிருஞ்சயர்கள் அனைவருமே தளர்ந்து ஒருவரோடொருவர் முட்டிமோதினர். இறப்பைக்குறித்த அச்சம் ஒவ்வொருவரையும் தனியாளாக்கியது. அவர்கள் படையாக அல்லாமல் ஆயினர்.

சிருஞ்சயர்களின் அழிவை ஓரக்கண்ணால் கண்ட துருபதன் தன் அம்புகளால் சுற்றி வளைத்து வைத்திருந்த துரியோதனனை விட்டுவிட்டு தன் படைகளை நோக்கித் திரும்பி ஒன்றுகூடும்படி கட்டளையிட்டான். கொடிகள் அக்கட்டளையை வானில் சுழன்று கூவின. ஆனால் அதற்குள் அவர்களின் வியூகம் சிதறிவிட்டிருந்தது.

“இளையவனே, முதல் அடியிலேயே அவர்களின் நம்பிக்கையை நொறுக்கிவிட்டோம்” என்று தருமன் கூவினான். அவன் ரதத்துக்குப்பின்னால் நகுலனும் சகதேவனும் அம்புகளை விட்டபடி ஒற்றைக் குதிரை ரதங்களில் தொடர்ந்து சென்றனர். பின்மதியத்தின் சாய்ந்த வெயிலில் படைக்கலங்கள் நதியலைகள் போல மின்னி கண்களைக் கூசச்செய்தன.

பீமன் சிருஞ்சயர்களை நெருங்கி சென்றவேகத்திலேயே கதாயுதத்தால் மண்டைகளை உடைக்கத் தொடங்கினான். அவனுடைய கதாயுதத்தின் அளவும் விசையும் எவராலும் எதிர்க்கக்கூடுவதாக இருக்கவில்லை. அவனுடைய ஒரு அடிக்குமேல் வாங்கும் உடலை எவரும் கொண்டிருக்கவில்லை. எடைமிக்கவற்றுக்கு இருக்கும் மூர்க்கம் அவனிடமிருக்கவில்லை. மிகநளினமாக அவன் கதாயுதம் சுழன்றது.

தொலைவிலிருந்து நோக்கியபோது ஒரு மலர்செண்டு என்றே தோன்றியது. எப்போதும் அது பின்னந்தலையையே தாக்கியது. மண்டையோடு இளகித்தெறிக்க சிதறிய மூளையுடன் வீரர்கள் தள்ளாடி நின்று சரிந்து துடித்தனர். யானை கிளைகளை ஒடிப்பதை தொலைவிலிருந்து நோக்கினால் மலர்கொய்வதுபோலிருக்கும் என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

அந்த விரைவிலும் தான் இரண்டாகப்பிரிந்திருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். ஒரு பார்த்தன் போர்புரிந்துகொண்டிருந்தான். இன்னொருவன் அந்தக்களத்தை நுணுக்கமாக நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அம்புகள் சென்று தொடுவதற்குள்ளேயே இலக்கின் இறப்பை கண்டுவிட்டிருந்தான். கொந்தளிக்கும் உடல்களின் அலையடிக்கும் படைக்கலங்களின் நடுவே அவன் அகம் அசையாமல் நின்றுகொண்டிருந்தது.

அதற்குள் தன் படைகளை திரும்பச்செய்த சத்யஜித் புரவிகள் பின்னால் வர ரதத்தில் பீமனை நோக்கி வந்தான். ரதத்தில் கதையுடன் அமர்ந்து போரிடுபவனை அவன் முதன்முதலாகப்பார்த்தான். பீமன் அம்புகளுக்கு அஞ்சவில்லை. அவன் அணிந்திருந்த கனத்த இரும்புக்கவசத்தை மீறி அம்புகள் அவனை ஒன்றும் செய்யவில்லை. தன் கதாயுதத்தை கையில் இரும்புச்சங்கிலியால் கட்டியிருந்தான். தேவைப்படும்போது கதை அவன் கரங்களிலிருந்து பறந்தும் சுழன்றது.

அதை சத்யஜித் உணர்வதற்கு முன்னரே பீமன் தன் கதையால் ஓங்கி அறைந்து அவன் ரதத்தை நொறுக்கி மரச்சிம்புகளாக தெறிக்கவிட்டான். இரண்டாவது அடியில் ஒரு குதிரை தலையுடைந்து தெறிக்க எஞ்சிய ஒற்றைச்சக்கரத்தை இன்னொரு குதிரை இழுத்துக்கொண்டே சென்றது. அதிலிருந்து பாய்ந்து இறங்கிய சத்யஜித் தன் துணைத்தளபதியின் ரதத்தை நோக்கி ஓடினான்.

பீமனிடமிருந்து சத்யஜித்தைக் காப்பதற்காகச் சூழ்ந்துகொண்ட புரவிப்படையினர் அவனை நோக்கி ஈட்டிகளைப் பாய்ச்சினர். அவன் குனிந்து அவர்களின் குதிரைகளின் தலைகளை கதையால் அறைந்து உடைத்தான். அவை அலறியபடி கீழே விழுந்து காலுதைக்கையில் நிலத்தில் தெறித்து நிலைகுலைந்து ஈட்டியை ஊன்றி எழும் வீரன் தலையை இரும்புக்கவசத்துடன் சேர்த்து உடைத்தான்.

சற்றுநேரத்தில் பீமன் உடல்கவசம் முழுக்க குருதி சொட்டத் தொடங்கியது. கதாயுதத்தைச் சுழற்றியபோது மூளைச்சதையும் நிணமும் குருதியும் வளைந்து தெறித்தன. அவன் கண்ணற்ற காதற்ற கொலையந்திரம் போலிருந்தான். அவன் நெருங்க நெருங்க படைவீரர்கள் பின்வாங்கி சிதறி ஓடினர். கதாயுதத்துடன் முன்வந்த பாஞ்சாலத்தளபதி கிரீஷ்மனின் கதை முதல் அடியில் உடைந்தது. அவன் தலை அடுத்த அடியில் குருதிக்குமிழியாக உடைந்து காற்றில் சிதறித் தெறித்தது. மானுட உடலென்பது எத்தனை அற்பம் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

துரியோதனனைச் சூழ்ந்திருந்த படைகளை தன் அம்புகளால் வீழ்த்தி அச்சடலங்களாலேயே ஒரு வேலியை அவனைச்சுற்றி உருவாக்கியபடி அர்ஜுனன் நெருங்கிச்சென்றான். வேலிக்குப் பின்னால் நின்ற பாஞ்சால வீர்ர்கள் துரியோதனனை நோக்கி அம்புகளை ஏவிக்கொண்டிருந்தனர்.

சத்யஜித் தன் வில்லை எடுத்தபடி இன்னொரு தேரில் ஏறி அவன் பின்னால் வர துருபதன் முன்னால் வந்தான். இருவரின் அம்புகளாலும் சூழப்பட்டு அர்ஜுனன் தேர்த்தட்டில் நின்றான். அகல்நுனியில் தீத்தழல்போல அவன் உடல் நெளிந்து நடனமிட்டது. அவனை அம்புகள் நெருங்க முடியவில்லை. அவனை வீழ்த்திவிடலாமென்று எண்ணி மேலும் மேலும் பாஞ்சாலர்கள் அவனைச் சூழ்ந்தனர்.

மறு எல்லையில் போரிட்டுக்கொண்டிருந்த பிரதீபன் அர்ஜுனனை சத்யஜித்தும் துருபதனும் சூழ்ந்துகொண்டதைக் கண்டு நாணொலியுடன் விரைந்து வந்தான். அவனுடைய அம்புகள் துருபதனைத் தாக்க அவன் திரும்பி அவன்மேல் அம்புகளை தொடுத்தான். ஒரு அம்பு அவன் தலைக்கவசத்தை மேலேற்றியது. அர்ஜுனன் அந்த ஆபத்தை உணர்ந்து சங்கை எடுத்து ஊதுவதற்குள் துருபதனின் அம்பால் பிரதீபனின் தலை வெட்டுண்டு தெறித்தது.

உச்ச விரைவில் வந்த ரதத்தில் அவன் தலையில்லாத உடலில் கைகள் வில்லுடன் அசைந்தன. பிரதீபனின் தலையற்ற உடல் சாரதிமேல் சரிய அவன் கடிவாளத்தை இழுத்ததும் ரதம் குடைசாய்ந்து உருண்டோடியது. கீழே விழுந்தபின்னரும் பிரதீபன் போரிடும் அசைவுடன் இருந்தான்.

பாஞ்சாலப்படையிடமிருந்து துரியோதனனை மீட்டு தேரிலேறச்செய்த கர்ணன் விகர்ணனை அப்பகுதியை பார்க்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து நாணொலியுடன் அர்ஜுனனை நோக்கி வந்தான். கர்ணனின் உரத்த குரலைக்கேட்ட சத்யஜித் திரும்பி அவனை எதிர்கொண்டான். காலால் தேர்த்தட்டை ஓங்கி அறைந்தபடி அம்புகளை விட்டான்.

கர்ணனின் அம்பால் சத்யஜித்தின் கவசம் பிளந்து தெறித்தது. அவன் அம்பு நெஞ்சில் படாமல் குனிந்தபோது அவன் தலைக்கவசத்தை கர்ணன் உடைத்தெறிந்தான். அடுத்த அம்பு அவன் தோளைத்தாக்கியது. மார்பில் தாக்கிய அம்புடன் சத்யஜித் தேர்த்தட்டில் விழுந்ததும் அவனுடைய சாரதி ரதத்தைத் திருப்பி படைகளுக்குள் ஊடுருவிச்சென்று மறைந்தான்.

கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே துருபதன் நின்றான். இறுதிக்கணத்தில் துருபதனில் கூடிய வெறி அர்ஜுனனை வியப்படையச்செய்தது. வில்வித்தையில் முழுமையான அகஅமைதியே அம்புகளை குறிதவறாமல் ஆக்குமென அவன் கற்றிருந்தான். ஆனால் உச்சகட்ட வெறியும் அதையே நிகழ்த்துமென அப்போது கண்டான். அப்போது துருபதனின் அகமும் ஆழத்தில் அசைவற்ற நிலைகொண்டிருந்ததா என எண்ணிக்கொண்டான்.

துருபதனின் இரு கரங்களும் புயல்தொட்ட காற்றாடியின் கரங்கள் போல கண்ணுக்குத்தெரியாதவை ஆயின. அவன் அம்புகள் கர்ணனின் ரதத்தின் தூணிலும் முகட்டிலும் இடைவெளியில்லாமல் தைத்தன. கர்ணனின் தோள்கவசம் உடைந்து தெறித்தது. அதை அவன் உணரும் முன்னரே இடது தோளில் அம்பு தைத்தது. கர்ணன் கையை குருதியுடன் உதறினான். குருதிவழியும் விரல்களுடன் அம்புகளை எடுத்து தொடுத்தான். அவன் அம்பு பட்டு துருபதனின் மைந்தன் துவஜசேனன் ரதத்தில் இருந்து தெறித்து மண்ணில் உருண்டான்.

அர்ஜுனன் துருபதனின் கவசத்தை பிளந்தெறிந்தான். அவன் திரும்பி இன்னொரு கவசத்தை எடுப்பதற்குள் தலைக்கவசத்தை உடைத்தான். இன்னொரு அம்பு துருபதனின் சிகையை வெட்டிவீசியது. இரு சிறு அம்புகளால் அவனுடைய குண்டலங்களை அறுத்தெறிந்தான். துருபதனின் வில்லும் அம்பறாத்தூணியும் உடைந்து தெறித்தன. தேர்த்தட்டில் அவன் வெறும் கைகளுடன் திகைத்து நின்றான்.

அப்பால் நாணொலியுடன் தந்தையின் துணைக்கு வந்த மைந்தன் சித்ரகேது கர்ணனின் அம்புபட்டு தேர்த்தட்டிலிருந்து விழுந்தான். அவன்மேல் அவன் தம்பி பிரியதர்சனின் ரதத்தின் குதிரைகள் ஏறி இறங்கின. பிரியதர்சன் தரையிலிருந்து எழுவதற்குள் அவன் கவசத்தின் இடைவெளியில் புகுந்த கர்ணனின் அம்பு அவனை வீழ்த்தியது.

துருபதனின் இன்னொரு மைந்தன் உக்ரசேனனை கர்ணனின் அம்பு இரு துண்டுகளாக்கியது. தலையும் ஒருகையும் ரதத்தில் இருந்து உதிர்ந்தன. எஞ்சிய பகுதி தேர்த்தட்டில் கிடந்து துள்ளியது. குருதி கொப்பளித்த கழுத்தில் இருந்து குமிழிகள் வெடிக்க மூச்சு ஒலித்தது.

துருபதன் திரும்பி தன் மகனை நோக்கினான். அவனை இறுக்கி நிறுத்தியிருந்த அனைத்தும் தெறித்தன. ‘ஆ!’ என்ற ஒலியுடன் அவன் இடத்தோள் அதிர்ந்தது. தள்ளாடி தேர்த்தட்டின் தூணில் சாய்ந்துகொண்டு கைகளைத் தூக்கினான். கொடிக்காரன் அவனை இன்னொரு முறை நோக்கி உறுதிப்படுத்திக்கொண்டபின் வெள்ளைக்கொடியைத் தூக்கி ஆட்டினான். கொம்பு ஒன்று மூன்று குறுகிய ஒலிகளை எழுப்பியது.

அதுவரை அங்கே அத்தனைபேரையும் அவர்களின் உயிராற்றலின் உச்சகட்டத்தில் ஆட்டுவித்த தெய்வம் ஒரே கணத்தில் விலகிச்சென்றது. ஆட்டுவிக்கும் விரல் ஓய்ந்து பாவைகள் தளர்வதுபோல ஓங்கிய வேல்களையும் வாள்களையும் தாழ்த்தி வில்களை கீழே சரித்து அனைவரும் அடங்கினர். அருவி நிலைத்ததுபோல ஓசையின்மை எங்கும் நிறைந்தது.

மறுகணம் கௌரவப் படையினரும் பாண்டவப்படையினரும் தங்கள் படைக்கலங்களை வானுக்குத் தூக்கி வீசிப்பிடித்து கைகளை வீசி எம்பிக்குதித்து ஆர்ப்பரித்தனர். “அஸ்தினபுரி வென்றது! குருகுலம் வென்றது!” என்று கூச்சலிட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டனர். பின்னர் ஓடிச்சென்று பாஞ்சாலர்களையும் தழுவிக்கொண்டனர். குருதி வழியும் தோள்கள் வழுக்கி வழுக்கி தழுவிப்பிரிந்தன. அழுகையும் சிரிப்பும் கலந்து எழுந்தன.

பாஞ்சாலர்கள் இறுக்கமழிந்து மெல்ல நகைத்து அந்தக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். சிலகணங்களில் அஸ்தினபுரியின் படைகளும் பாஞ்சாலப்படைகளும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டாடி கூவிச் சிரித்து ஆர்ப்பரித்தனர்.

அந்த ஒலியின் நடுவே அர்ஜுனன் தன் இடைக்கச்சையை ஒரு கையால் அவிழ்த்தபடி தன் ரதத்திலிருந்து பாய்ந்து இரு புரவிகளின்மேல் கால்வைத்து தாவிச் சென்று துருபதனின் ரதத்தட்டை அடைந்தான். துருபதன் அவன் வருவதை எதிர்பார்க்காமல் “பாண்டவரே” என்று ஏதோ சொல்லவருவதற்குள் அவன் கையைப்பற்றி முறுக்கி பின்னால் கொண்டுசென்றான். தோளில் ஓங்கி அறைந்து குனியச்செய்து இன்னொரு கையைப்பற்றிப் பிடித்து முறுக்கி இரு கைகளையும் இணைத்து தன் கச்சைத்துணியால் சேர்த்துக்கட்டினான்.

“பாண்டவரே என்ன இது?” என்று துருபதன் கூவினான். அர்ஜுனன் அவன் முழங்காலை உதைத்து அவனை மடியச்செய்து கட்டை இறுக்கினான். “பாண்டவரே!” என்று நம்பமுடியாதவனாக துருபதன் கூவினான். “இளைய பாண்டவரே, இப்படி எவரும் செய்வதில்லை. இது முறையல்ல” என்று கர்ணன் தன் ரதத்தில் நின்றபடி கூவினான். “அரசருக்குரிய மதிப்பை நாம் அவருக்களிக்கவேண்டும்…” என்றான்.

தருமன் ரதத்தில் பாய்ந்துவந்தபடி “அர்ஜுனா விடு” என்றான். மூச்சிரைக்க “இது என் குருநாதரின் ஆணை…” என்றபடி துருபதனைப் பிடித்து ரதத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றான். தேரிலிருந்து மண்ணில் விழுந்து கால்கள் பின்ன எழுந்து அவனை தொடர்ந்துசென்றான் துருபதன்.

“தம்பி வேண்டாம்… நாம் அவரை ரதத்தில் கொண்டுசெல்லலாம்… இது என் ஆணை” என்று கூவியபடி தருமன் தன் ரதத்தில் இருந்து குதித்து ஓடிவந்தான். “மூத்தவரே, விலகுங்கள். இல்லை என்னுடன் போர் புரியவாருங்கள்” என்றான் அர்ஜுனன். தருமன் திகைத்து நின்றான். பாஞ்சாலர்களும் அஸ்தினபுரியின் வீரர்களும் மெல்ல ஓசையடங்கி திகைத்த முகங்களுடன் அசைவற்று நின்றனர்.

துருபதனை இழுத்துச்சென்று தன் தேரின் கடைக்காலில் கட்டினான் அர்ஜுனன். தேரிலேறி சாரதியிடம் “செல்க!” என்றான். பதைத்து நின்ற பல்லாயிரம் விழிகள் நடுவே அவன் தேர் கீழே நெளிந்த உடல்கள் மேல் ஏறி இறங்கி உருண்டுசென்றது.

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைகுருதியின் ஞானம்
அடுத்த கட்டுரைவியூகங்கள்