அசோகமித்திரன்,வெண்முரசு,சென்னையில் சாதி

சார், நலமா?

உங்களுக்கு ரெண்டே ரெண்டு கடிதம்தான் எழுதினார். அதுக்கே யாரோ சூனியம் வெச்சிட்டாங்க. எங்க ‘தல’யோட வெப்சைட்டே போயிடிச்சி. பப்பு ஸோரோ அப்டேட்ஸ் இல்லாமே இனிமே நாங்கள்லாம் வாழ்க்கையில் என்னதான் பண்ணப் போறோம்னே தெரியலை. ஒரே நாளில் அனாதை ஆயிட்டோம் :(

அப்புறம்,

அசோகமித்திரனை வாசித்தல் நிகழ்வுக்கு போயிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்று. அசோகமித்திரனிடம் உங்களை முன்பு ஆசான் என்று சொல்லிக்கொண்ட இளம் எழுத்தாளர் ஒருவர் வெண்முரசை குறை சொல்லும் விதமாக (ஜெயமோகனுக்கு சரக்கு தீர்ந்துடிச்சி மாதிரி வார்த்தைகளை போட்டு) பேச ஆரம்பித்தார். உடனே அமி சொன்னது. “ஜெயமோகன் ரொம்ப பெரிய ரேஞ்சுக்கு போயிட்டாரு. எனக்குத் தெரிஞ்சு அவர் எழுதறதுதான் பெஸ்ட் பாரதம். இதுக்கு முன்னாடி நான் இவ்ளோ ஆர்வமா மகாபாரதத்தை படிச்சதில்லே”

அப்படி சொன்ன அமி, மூன்றே மாதத்தில் காலச்சுவடில் மாற்றிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அன்புடன்
யுவகிருஷ்ணா

krishna

அன்புள்ள யுவகிருஷ்ணா,

பழைய பன்னீர்செல்வமாக வருவார் என எதிர்பார்ப்போம்

*

நானே உங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்திருந்தேன். கைவலி. எழுதவில்லை. சென்னையின் சாதி பற்றிய உங்கள் கட்டுரை முக்கியமானது. என்னுடைய 1980களின் அனுபவம் அதுதான்.சென்னைக் குடிசைப்பகுதிகளில் தலித் என்னும் ஒடுக்குமுறை இருந்ததாக நான் அறியவில்லை. எவரும் எவரிடமும் சாதியைப்பேசிக்கொண்டதுமில்லை. அங்கே நான் கண்டது ஒரு வகையான கொண்டாட்டம் என்று சொன்னால் அடிக்கவருவார்கள். வம்பு,சண்டை,பாலுறவு,நட்பு , குடி,சாப்படு, தீனி எல்லாம் கலந்த ஒரு பெருங்கொண்டாட்டமாகவே எனக்கு அந்த வாழ்க்கை தோன்றியது. உண்மையிலேயே அது என்னை உள்ளே இழுத்து அங்கேயே போட்டுவிடுமோ என்று பயப்பட்டேன்.

தலித்துக்கள் கிராமத்திலிருந்து வந்து சென்னையின் குடிசைப்பகுதிகளுக்குள் வாழ்க்கையை அமைக்கும்போது அபாரமான விடுதலையையே உணர்கிறார்கள். தஞ்சையின் கிராமப்புறங்களில் அவர்கள் வாழும் வாழ்க்கையைவிட மட்டமானதே சென்னை வாழ்க்கை. அவர்கள் தினசரி குளிக்கமுடியாததை , நல்ல காற்றில் தூங்க முடியாததைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் திரும்பிப்போகமாட்டார்கள். காரணம் சென்னை சேரிகளில் ஒரு ‘சாதியற்ற’ சமூகம் உண்டு.

இந்தச் சேரிகளில் சாதியில் இருந்து உதிர்ந்த எல்லாருமே உண்டு. பிராமணர்களும். எல்லாருக்கும் ஒரே சாலையோரத் தூக்கம்.ஒரே டாஸ்மாக். சமீபத்தில் என் நண்பர் கொண்டவெள்ளை [மதுரை துப்புரவுத்தொழிலாளர் சங்கத்தலைவர்] பாதாளச்சாக்கடைக்குள் இறங்கி மலம் அள்ளப்போய் செத்துப்போன ஊழியர்களின் பட்டியலைச் சொன்னார். எல்லா சாதியினரும் உண்டு. ஒரு பிராமணரும்!

ஆனால் 80களுக்குப்பின் நிலைமை மாறிவிட்டிருக்கிறது. காரணம் அரசியல். சொல்லப்போனால் நில அரசியல். சென்னையின் நிலங்கள் விற்கப்படும்போது குடிசைவாசிகளுக்கு அதில் ஒரு பங்கு -மிரட்டல்பணம்- கிடைக்கிறது. அதை பெறும்பொருட்டு பல தலித் அமைப்புகள் அங்கே உருவாகியிருக்கின்றன. அவற்றில் சில உண்மையில் தலித் அமைப்புகள்.பல தலித் அமைப்புகள் மாதிரி. எந்த அமைப்பு எங்கே என்பதை அப்பகுதிச் சுவர்களைப்பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. மேலும் ஆராய்ந்து நீங்கள் எழுதலாம்.

*

TH5_ASHOKAMITRAN_1073524f

இளம் எழுத்தாளர்களின் சிக்கல்கள் பெரிது. முக்கியமானது தன் இடம் ஏது என்ற வினா. அவர்கள் முன்னத்திய எழுத்தாளர்களை நிராகரித்தே ஆகவேண்டும். அது இருவகையில். ஒன்று அவர்களைக் கடந்துசெல்வது. அவர்களை வாசித்து விமர்சித்து ஆராய்ந்து அவர்களின் போதாமைகளை உணர்ந்து அந்த இடைவெளி வழியாக மேலே செல்வது. அதுதான் ஆற்றல் உள்ளவர்களின் வழி. இன்னொன்று தானே கண்ணைமூடிக்கொண்டு இல்லை என்று கற்பனை செய்வது

நானெல்லாம் அசோகமித்திரனை வரிவரியாக நினைவு வைத்திருக்கிறேன். சமீபத்தில் அவரது இன்று என்ற நாவலைப்பற்றி எழுதும்போது வரிகளாகவே நினைவுகூர்ந்தேன். காரணம், நான் அவர் ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தை கடந்துவர முயன்ற தலைமுறை. அவரைக் கடந்து வர முடிந்த எழுத்தாளன். [1980ல களில் நான் கோணங்கி எஸ்ரா எல்லாம் அசோகமித்திரனைக் கவிழ்ப்பது பற்றி திருவண்ணாமலையில் – பவா செல்லத்துரை செலவில் – ரூம் போட்டு யோசித்திருக்கிறோம்]

ஆகவேதான் அவர் என்னை மதிக்கிறார். சென்ற பல வருடங்களில் அவர் என்னை பாராட்டிச் சொன்னதைப்போல எவரைப்பற்றியும் சொன்னதில்லை. ஜெயகாந்தன் இந்திரா பார்த்தசாரதி என அப்படி பாராட்டியவர்களின் பெரும்பட்டியலே உண்டு. காரணம் நாங்கள் சிலர் அவர்களை கடந்தோம் என்பது. அவர்தான் என்னை வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர், ஆனால் விஷ்ணுபுரம் வரும் வரை என்னை திரும்பியே பார்க்கவில்லை.

இன்னொருவழி, தன்மேல் நம்பிக்கையற்றவர்களுடையது. அது வாசிக்காமல் வம்புமூலம் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கை. ஒற்றைவரிகளைச் சொல்வது.எளியநக்கல்கள் எழுதுவது. பொத்தாம்பொதுவாக ஏதாவது சொல்வது. அதன்மூலம் ஒன்றும் நிகழாது. வாசகன் என்பவன் என்றும் இருப்பான்

இவர்கள் சொல்லும் பெரும்பாலான விமர்சனங்கள் எளிய அன்றாட வம்புகள் சார்ந்தவை. அரசியல் சரிநிலைகள் சார்ந்தவை. அழகியல் விமர்சனங்கள் அல்ல. முன்னோடி எழுத்தாளனை ஆராய்ந்து நுட்பமாக முன்வைக்கப்படுபவையும் அல்ல. அவற்றுக்கு மதிப்பே இல்லை.

வெண்முரசு என்றும் இங்கே இருக்கும். இங்கு எழுதப்படும் ஒட்டுமொத்த இலக்கியத்தையும் அதற்குள் வைக்கமுடியும். அதன்பின்னரும் அது விரிந்து கிடக்கும். பெரும் கனவுகளை ஏற்றுக்கொள்வது ஒன்றே பெரிய விஷயங்களைச் செய்வதற்கான ஆற்றலை அளிக்கிறது.வெண்முரசு இந்த ஒட்டுமொத்தப் பண்பாட்டையே திருப்பிஎழுதுகிறது.

அதுவெறும் செவ்வியல் அல்ல. இங்குள்ள அத்தனை யதார்த்த்வாதக் கதைகளைவிடவும் அதிக சமகால வாழ்க்கை அதற்குள் உள்ளது. அதை புறக்கணிக்கும் ஒரு சிறிய கும்பலைத் திரட்டிவிடமுடியும். அது ஆண்மையுள்ள எழுத்தாளனின் பணி அல்ல.அதை வாசித்த வாசகரை தன் எழுத்தையும் பொருட்படுத்த வைப்பதில்தான் அடுத்தகட்ட எழுத்தாளனின் சவால் உள்ளது

ஆனால் அது அத்தனை கடினமானதும் அல்ல. ஏனென்றால் காலம் மாறுவது அடுத்த தலைமுறைக்குச் சாதகமாக உள்ள பெரும் சக்தி. அசோகமித்திரனைக் கடந்தோம் என்பது மார்க்யூஸின், போர்ஹ்ஸின், உம்பர்த்தோ எக்கோவின் கைகளைப்பற்றிக்கொண்டுதான்.

அப்படி கடந்துசெல்லும் எழுத்தாளர்களைக் கண்டு கைகுலுக்கிவிட்டுச் செல்லும் அதிருஷ்டம் எனக்கும் வாய்க்குமென்றே நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைநோபல்-ஐரோப்பா-கடிதம்
அடுத்த கட்டுரைவாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்