அஞ்சலி : பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

விஷ்ணுபுரம் நாவலின் வாசகராகத்தான் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் 1998 ஜனவரியில் எனக்கு அறிமுகமானார். அவர் எனக்கு எழுதிய நீண்ட கடிதம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர் தமிழகத்தின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர் என எனக்குத்தெரியும். ஆனால் இலக்கிய ஆர்வம் கொண்டவர் என்பது தெரியாது. அதன்பின்பு அவரைப்பற்றி அறிந்துகொண்டேன்.

விஷ்ணுபுரம் இருநூறுபிரதிகளுக்குமேல் வாங்கி பலருக்கும் அன்பளிப்பாக அளித்திருக்கிறார். அதைப்பற்றி பேசியிருக்கிறார். அவரது நிறுவனங்களில் என் நூல்கள் நிறையவே இருக்கும். விஷ்ணுபுரம் பற்றி தொடராக ஏழு கடிதங்கள் எழுதினார். அதன் உள்ளடுக்குகளைப்பற்றி, நுட்பங்களைப்பற்றி. அவரே கைப்பட பேனாவால் எழுதிய கடிதங்களை சேர்த்துவைக்கவேண்டுமென அப்போது தோன்றவில்லை

மகாலிங்கம் அவர்கள் என்னைச் சந்திக்கவிரும்பினார். நாலைந்துமுறை கூப்பிட்டபின் நான் கோவை சென்றேன். ரயில்நிலைத்துக்கே அவர் வந்திருந்ததை இப்போது எண்ணினால் பிரமிப்பாகவே இருக்கிறது. ரேஸ்கோர்ஸ் சாலையில் அவரது இல்லத்தில் எனக்கு ஒரு விருந்து அளித்தார். அன்று திருக்குறள் முதல் வள்ளலார் வரை, குமரிக்கண்டம் முதல் பிராமி லிபி வரை அவருக்கிருந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.எல்லாவற்றிலும் அவருக்கு ஆணித்தரமான கருத்துக்களும் அவற்றுக்குப் பின்புலமாக ஆய்வுகளும் இருந்தன. ஆய்வாளர்களுடன் தொடர்பும் இருந்தது.

அதன்பின் பத்து தடவைக்குமேல் நான அவரைச் சந்தித்திருக்கிறேன். பலமணிநேரம் விரிவாக பேசியிருக்கிறேன். பெரும்பாலும் சென்னையில்.என்னைவிட மூத்தவர். என்னைவிடக் கற்றவர். நான் எண்ணிப்பார்க்க முடியாத பொருளியல்நிலையில், சமூகப்படிநிலையில் இருந்தவர். ஆனால் இளைஞனாகிய என்னை ஒருபடி மேலான இடத்தில் வைத்தே நடத்தினார். ‘ஒண்ணு கேக்கட்டுங்களா?’ என்று பணிவாக அவர் என்னிடம் பேச்சை ஆரம்பிக்கும் விதம் என்னை எப்போதுமே அதிரவைக்கும்

அதைப்பற்றி ஒருமுறை நான் கேட்டேன். ‘நான் யாரா இருந்தாலும் ஜெயகாந்தன் ஆயிடமுடியுமா?’ என்றார். ‘நீங்கள் இருக்கிற இடத்தை, உங்ககிட்ட இருக்கிற எல்லாத்தையும் ஜெயகாந்தனா ஆகிறதுக்காக குடுப்பீங்களா?’ என்றேன். சிரித்தபடி ‘பிறவிப்படிகளிலே மேலேறிப்போய்த்தான் மோட்சம் அடையணும்னு இருக்கு. நான் போனபிறவியிலே செஞ்ச புண்ணியம் எங்கப்பாவுக்கு மகனா பிறந்து இப்டி இருக்கிறது. இந்தப்பிறப்பிலே புண்ணியம் செஞ்சிருந்தா அடுத்தப் பிறப்பிலே ஜெயகாந்தன் மாதிரி பிறப்பேன். அதுக்கடுத்து வள்ளலார்சாமி மாதிரி’ என்றார். அவர் மனதில் இலக்கியவாதிக்கு இருந்த இடம் அது.

அவருக்கும் எனக்கும் எப்போதும் தொடர்பிருந்தது. என் எல்லாப்படைப்புகளைப்பற்றியும் கடிதம் எழுதியிருக்கிறார். காடு,ஏழாம் உலகம் முதல் புறப்பாடு வரை. கொற்றவை, இன்றைய காந்தி இரண்டுக்கும் அவர் எழுதிய நீண்ட கடிதங்கள் எனக்கு முக்கியமானவை.

நான் சொல்புதிது நடத்தியபோது அவர் அளித்த விளம்பர நிதியுதவியே அதற்கான முதன்மை நிதியாதாரமாக இருந்தது. அனைத்து இதழ்களுக்கும் அவர் கடிதமெழுதி விமர்சனம் செய்திருக்கிறார். அவரது ஆசையின்படி நான் 1998 ல் ‘இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள்’ நூலை எழுதினேன். அதை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். அந்நூலில் அது அவரது ‘ஆணையின்’படி எழுதப்பட்டது என்று சொல்லியிருந்தேன். எழுத்தாளன் ஒருபோதும் அப்படிச் சொல்லக்கூடாது என அவர் கண்டித்தபின் அந்தச் சொல்லை விலக்கி விட்டேன்.

அவர் எனக்கு அளித்த இடத்தை ‘பயன்படுத்தி’க்கொள்ளலாகாது என்ற எண்ணம் இருந்தமையாலேயே அவரிடம் அதிகம் நெருங்காமலிருந்தேன். அந்த சுயமரியாதையை அல்லது அகங்காரத்தை அவர் புரிந்து கொண்டாரென்றாலும் அதில் அவருக்குச் சற்று வருத்தம் இருந்தது. ‘என்னை தவிர்க்க நெனைக்கிறீங்களா?’ என்று ஒருமுறை கேட்டார்.

அவரது பிரசுரங்களை கவனித்துக்கொள்ள முடியுமா என இன்னொருமுறை கேட்டார். அவரது ஊழியராக இருக்க நான் விரும்பவில்லை. விஷ்ணுபுரம் அமைப்புக்கு நிதியுதவிசெய்ய விரும்பினார். நான் அணுகவில்லை. அவரது நிழலில் இருப்பவன் என்ற அவதூறு என்னைப்பற்றி அக்காலங்களில் இருந்தது. விஷ்ணுபுரம் அமைப்பு அவரது ‘பினாமி’ அமைப்பு என்று சொல்லிவிடுவார்கள் என அஞ்சினேன். அதைப்பற்றியும் லேசான வருத்தத்துடன் எழுதியிருந்தார்

முதியவயதில் நோயுற்றபோது அவரை தொலைபேசியில்தான் அழைத்தேன். கடிதங்கள்தான் போட்டேன். நேரில் சந்திக்கச்செல்லவில்லை. அவர் இருந்த இடத்தின் உயரமே அதற்குக்காரணம். அவரது சாம்ராஜ்யத்தின் கீழ்ப்படிகளில் இருந்த எவருடனும் எனக்கு எந்த உறவும் இருக்கவில்லை. அங்கே என்னை அறிந்தவர் எவரேனும் இருக்கிறார்களா என்றும் தெரிந்திருக்கவில்லை.

கவுண்டர் என்ற சொல் எப்போதுமே எனக்கு அவர் முகத்தையே நினைவுக்குக் கொண்டுவந்தது. ஓர் இனக்குழுவுக்கு அதற்கென சில நற்பண்புகளுண்டு. வெறிகொண்ட உழைப்பு, மரபின்மேல் பற்று, கல்விமேல் பெரும் ஈடுபாடு, கலையிலக்கியவாதிகள் மேல் பிரியம், அறிவியல் போன்றவற்றில் புதியன மீது மோகம், கடைசிப்பைசா வரை பணம் வைத்து ஆடுவதற்கான துணிவு ஆகியவை கவுண்டர் பண்புகள் என நான் அவதானித்திருக்கிறேன். அவற்றின் உச்சமென இருப்பது எங்கிருந்தாலும், எவராக இருந்தாலும் நீங்காத பெரும் பணிவு. ‘கவுண்டர் குணம்’ என இப்படி வரையறுக்க முடியுமென்றால் அதன் மானுட உருவம் நா.மகாலிங்கம் அவர்களே.

அவருடனான என் உரையாடல்கள், நட்பு , நேரிலும் கடிதங்களிலும் பேசிக்கொண்ட கருத்தியல் முரண்பாடுகள் பற்றியெல்லாம் விரிவாக எழுதவேண்டும். தன் பெருந்தன்மையால் மனவிரிவால் என்னை தனக்கு இணையானவன் என்று ஒவ்வொருமுறையும் எண்ணவைத்த அந்த மாபெரும் பண்பைத்தான் இக்கணம் கண்ணீருடன் எண்ணிக்கொள்கிறேன். தலைவணங்குகிறேன்

முந்தைய கட்டுரைவெண்முரசு விவாதங்கள் இணையதளம்
அடுத்த கட்டுரைகிருஷ்ணமதுரம்