வடக்குமுகம் [நாடகம்] – 5

[கர்ணன் அரங்கில் நுழைகிறான்)

கர்ணன்: பிதாமகரை வணங்குகிறேன்.

பீஷ்மர்: உனக்கு புகழ் உண்டாவதாக.

கர்ணன்: (அருகே வந்து) தாங்கள் என்னை ஒருபோதும் ஆயுளுடையவனாக இருக்கும்படி வாழ்த்தியதில்லை.

பீஷ்மர்: அது ஏன் என உனக்கே தெரியும்.

கர்ணன்: இங்கு வந்து தங்களை சந்திக்கலாமா கூடாதா என்று என் மனம் ஊசலாடியது.

பீஷ்மர்: உனக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். இந்த அம்புகள் அர்சுனனுக்குரியவை.

கர்ணன்: பிதாமகரே.

பீஷ்மர்: இனி நீ ஆயுதமேந்தலாம் அர்ஜுனனை வென்று அஸ்தினபுரியை கைப்பற்றலாம் . . .

கர்ணன்: பிதாமகரே நான் இங்கு வந்தது தங்களை வணங்க. தங்கள் ஆசி எனக்கு இல்லை என நான் நன்கு அறிவேன். தேரோட்டியின் மகன் அரியணையில் அமர்ந்ததை நீங்கள் ஏற்கவேயில்லை. உங்கள் ஏளனத்தையும் வெஞ்சொற்களையும் ஏற்றுத்தான் இந்நாள் வரை வாழ்ந்திருக்கிறேன். ஆயினும் உங்களை வந்து வணங்கவேண்டும் என்று என் மனம் சொன்னது. ஏனெனில் . . .

பீஷ்மர்: வணங்கி விட்டாயல்லவா ? நீ போகலாம்.

கர்ணன்: பிதாமகரே, இதைச் சொல்லாமல் இருந்தால் என்னால் எஞ்சிய வாழ்நாளை பெருஞ்சுமையுடன்தான் கழிக்க முடியும் . . . நான் உங்களை என்றுமே என் தந்தையின் இடத்தில்தான் வைத்திருந்தேன். உங்கள் வசைகள் எனக்குள் உள்ளூர ஆனந்தத்தை அளித்தன. அவை என்மீது படியும் உங்கள் கவனத்தின் தடயங்கள் என்று எண்ணுவேன். இந்தப் பிரபஞ்சத்தில் எனக்கென யாரும் இல்லை என்று உணரும் தருணங்கள் உங்கள் வசைச் சொற்களுக்காக அடங்காத தாகத்துடன் நான் அங்க நாட்டிலிருந்து வருவதுண்டு.

பீஷ்மர்: உன் மீதிருந்து நீங்காத பிரியம் கொண்ட இன்னொருவர் இவ்வுலகில் உண்டு கர்ணா. அதை நீ அறிவாயா ?

கர்ணன்: [பீஷ்மரின் குரல் மாறுபாட்டை உணர்ந்து] பிதாமகரே நீங்கள்….

பீஷ்மர்: குந்தி உன் தாய் என உனக்குத்தெரியுமா ?

கர்ணன்:தெரியும். ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் .. பிதமகரே உங்களுக்கு எப்போது இது தெரியும் ?

பீஷ்மர்: தேரோட்டி மகனாக நீ வந்து நின்ற கணமே எனக்குத் தெரியும். நீ, உன்முகம். உன் தந்தையையும் நான் அறிவேன்.

கர்ணன்: யார் அது ?

பீஷ்மர்: அதை நீ அறியவே போவதில்லை. ஐதீகங்களையும் நீ சூரியனின் புதல்வன்.

கர்ணன்: பிதாமகரே . . . நெறிமீறிப் பிறந்தவன் என்பதனாலா என்னை வெறுத்தீர்கள் . . .

பீஷ்மர்: (கோபத்துடன்) நிறுத்து.

கர்ணன்: (பதைப்புடன்) பிதமகரே.

பீஷ்மர்: யார் வெறுத்தது உன்னை ? (குரல் உடைய) கர்ணா என் வாழ்நாள் முழுக்க கனிவையும் காதலையும் வெறுப்பின் வடிவில் மட்டுமே வெளிப்படுத்த முடிந்திருக்கிறது எனக்கு . . . நான் சபிக்கப்பட்டவன். பெரும் சாபத்துடன் இவ்வுலகுக்கு வந்தவன். இந்தக் கரங்களில் ஒரு குழந்தையை நான் இதுவரை ஏந்தியதில்லை. (எழ முயன்று) அருகே வா (கை நீட்டுகிறார்)

கர்ணன்: பிதாமகரே என்னை மன்னியுங்கள் நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

பீஷ்மர்: (தொடமல்) இல்லையேல் வேண்டாம். இந்தக் கரங்களால் உன்னைத் தொட வேண்டாம்.

கர்ணன்: உங்கள் ஆசி கிடைத்தால் இப்பூமியில் நான் இழந்தவை முழுக்க சமன் பெற்று விடும் . . .

பீஷ்மர்: உன் தலைமீது கரம் வைத்து நான் என்ன சொல்வது ? நீண்ட ஆயுளா ? அரச போகமா ? புகழா ? – கர்ணா உனக்கென காத்திருப்பது என்ன ? நீ தலைமுறை நினைவுகளில் ஓயாத குற்ற உணர்வு மட்டும்தானா ? குழந்தை, உன்னைக் காணும்போதெல்லாம் என் அடிவயிறு பதைபதைத்தது எதனால் என்று நீ இப்போதாவது அறிகிறாயா ? உன்னைப் பார்க்கையில் என்மீதும் நான் சுமக்கும் இந்த வம்சபரம்பரை அடையாளங்கள்மீதும் கடும் துவேஷம் என்னில் நுரைத்தெழும். அதை உன்மீதே உமிழத்தான் நான் பழகியிருக்கிறேன். பின்பு ஆயுதசாலைக்குத் திரும்பி என் நெஞ்சின் மையமெனத் தெரியும். சரபிந்துமீது அம்புகளை ஏவுவேன். ரத்தம் வடிய, நிணம் சிதற . . .

கர்ணன்: அதிலெனக்கு இம்மியும் துயரம் இல்லை பிதாமகரே. பிறப்பில் ஒரு பிழை நிகழ்வது எளிய விஷயம்தானே ? உடல் ஊனம், மன ஊனம் . . . இந்தப் பிழைபட்ட கதாபாத்திரத்தில் இருந்து கொண்டு மிகச்சிறந்த நடிப்பை நான் வழங்கியிருக்கிறேன். அது போதும்.

பீஷ்மர்: மீண்டும் மீண்டும் நீ உன்னைச் சூழ்ந்திருப்பவர்களை உன் பெருந்தன்மையால் வென்று முன் செல்கிறாய். அவர்களை மேலும் சிறுமையாக்குகிறாய். குழந்தை, அதிரதனின் பின்னால் கையில் சம்மட்டியுடன் நீ வந்து நின்ற அந்த முதல் கணத்தில் உன் ஒளிமிக்க பார்வையாலேயே என்னை நீ வென்று விட்டாய். என்னை ஒரு புழுவாக உணரச் செய்தாய். இதோ இறுதியில் உன் அன்னையை. இனி களத்தில் உன் சகோதரர்கள் அனைவரையும் . . .ஆனால் உன் உள் மனதில் ஒரு தழல்த் துளி மிச்சமில்லையா என்ன ?

கர்ணன்: நீங்கள் கூறுவது என்ன என்று எனக்குப் புரியவில்லை பிதாகமரே

பீஷ்மர்: பற்பல வருடங்களுக்கு முன்பு கங்கை நதிக்கரையில் பரதவர் குலத் தலைவனும் என் தந்தையும் சாட்சி நிற்க நான் ஒரு சபதம் எடுத்தேன். எனக்குரிய அனைத்தையும், பிற்பாடு எனக்கு கிடைக்கவிருந்த அனைத்தையும் அந்தக் கணத்தில் துறந்தேன். ஆனால் அந்தச் செயல் மூலம் என்னைச் சுற்றியிருந்த அனைவரை விடவும் நான் உயர்ந்தேன். எந்த தருணத்திலும் அவர்களால் புறக்கணித்துவிட முடியாத அறத்தின் உருவமாக மாறினேன். ஆம், ஒரு வகையில் துறந்தவற்றைவிட பலமடங்கு அடைந்தேன். ஆனால் அன்றிரவு – குழந்தை, இதை என் வாழ்நாளில் முதன்முறையாக உன்னிடம் கூறுகிறேன் – நான் இழந்த மணிமுடிக்காக அன்று கண்ணீர் விட்டேன். இழக்க நேர்ந்த பெண்ணுக்காக பிறகு. வயது ஏற ஏற அச்சுமை பெருகியது. என் பிறக்காத குழந்தைகளுக்காக இந்தக் கரங்கள் ஏங்கின. பிறக்க நியாயமேயில்லாத பேரக்குழந்தைகளுக்காக இந்த முதியதோள்கள் எத்தனையோ தனித்த, கதைத்த, இருண்ட இரவுகளில் கண்ணீருடன் குலுங்கியிருக்கின்றன. (குரல் ஓங்க) நான் அடைந்தவை எல்லாம் வெற்றுப் பிரமைகள் என்று எண்ணியிருக்கிறேன். என் தோள்களில் எஞ்சும் இந்த வெறுமையுணர்வு . . . இலைகளும் பூக்களும் கால்களும் இல்லாத வெற்று மரக்கிளைகள் போன்ற இக்கரங்கள் . . . ஒரு பேரக்குழந்தையை தோளிலேற்றி அதன் மென்சருமத்தை உணர்ந்திருந்தால் என் ஆத்மா நிறைவுற்றிருக்குமா ? தெரியவில்லை. வெறும் உணர்வெழுச்சிகள் . . .

கர்ணன்: பிதாமகரே தங்கள் உணர்வுகள் தங்களிடமில்லை.

பீஷ்மர்: ஆம். எத்தனையோ வருடம் நான் போட்டு, காத்த அரண்கள் இன்று என்னிடமில்லை. நான் ஒரு மரமே அல்ல. முளைக்காது போன விதை மட்டும்தான். வானின் ஒலியும் மண்ணின் ஈரமும் காற்றின் மணமும் அறியாமல் கெட்டியான ஓட்டுக்குள் தனக்குள் தான் எனச் சுருங்கி ஓண்டிய வெற்று விதை. அதனால்தான் எனக்கு மனிதர்களின் கண்ணீர் புரியாமல் போயிற்றா ? என் உதிரத்தில் பிறந்த குழந்தைகள் இவர்கள் என்றால் ஒருவேளை இப்படி போர் புரிந்து அழிய விட்டிருக்கமாட்டேனா ?

கர்ணன்: இதில் நீங்கள் என்ன செய்திருக்க முடியும் ?

பீஷ்மர்: உண்மை. நான் என்ன செய்திருக்க முடியும் ? ஆனால் நான் இன்னமும் கனிந்திருக்கலாம். இன்னமும் கண்ணீர் விட்டிருக்கலாம் . .

கர்ணன்: தங்கள் கண்ணீர் என்னை துன்புறுத்துகிறது பிதாமகரே.

பீஷ்மர்: நீ ஒரு கணமேனும் இதே உணர்வுகளை அடைந்தில்லையா ? ஒவ்வொருமுறையும் நீ அர்ச்சுனன் மூன் தோல்வியை ஏற்றுக் கொண்டாய்.

கர்ணன்: நேர்மாறாக, பிதாமகரே. நான் வெளியே எரிந்து கொண்டிருக்கும்போதும் உள்ளே குளிர்ந்தடங்கிக் கொண்டிருந்தேன். கொடுக்கும்போது நான் பெற்ற மகிழ்வை அடையும் போது பெற்றதேயில்லை.

பீஷ்மர்: நீ வள்ளல். வள்ளலாகவே பிறந்தவன்.

கர்ணன்: அனைத்தையும் நான் பிறருக்கு அளிக்கும் நேரம் வரும் பிதாமகரே. வம்சத்தையும் குலத்தையும் அளித்துவிட்டேன். குந்தி வந்து கேட்டபோது வெற்றியை அளித்துவிட்டேன். இந்திரன் வந்து கேட்டபோது உயிரையும் ….இனி எஞ்சுவது ஒரு கடன். அதை துரியோதனனுக்கு அளித்துவிட்டால் என் வருகை நிறைவு பெறுகிறது . . .

பீஷ்மர்: ஏன் உன் அருகாமை என் உணர்வுகளை கூசிச் சுருங்க வைத்தது என்று இப்போது புரிகிறது. உன்னிடமிருந்து விடுபட்டவையெல்லாம் கனிகள் மரங்களை விட்டுச் செல்வது போல சென்றன. என்னை விட்டுச் சென்றவை பிஞ்சுகள் போல கசியும் காயங்களை விட்டு விட்டு . . .

கர்ணன்: தங்களை வணங்கிச் செல்ல வந்தேன்.

பீஷ்மர்: உனக்கு என் ஆசிகள்.

(கர்ணன் வணங்கி விடைபெறுகிறான்)

பீஷ்மர்: ஒரு முள் விலகியது போலிருக்கிறது. (வலியுடன் அசைந்து) அம்மா . . .

(நிழல்கள் திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்க்கின்றன. இரவுக் களத்தில் ஒலிகளில் வெகு தொலைவில் வேறு ஒரு மரணமுனகல்)

பீஷ்மர்: பூச்சிகள் எங்கும் நிரம்பி விட்டன. ஈசல்களா ? ஈசல்கள் எப்படி வரும், மழை பெய்யாமல் ? (கைகளை வீசி) ஆம் ஈசல்கள் தான். ஆனால் மழை . . . ! உதிர மழையில் எழுந்தவையா இவை ?

(ஒரு நிழல் எழுந்து ஏளனமாகச் சிரித்து அவர் அருகே வருகிறது)

நிழல்: அவை ஈசல்களல்ல மூடா. அவற்றை தர்மங்கள் நியாயங்கள் என்பர் அறிவுடையோர். பார், அவற்றின் இறகுகளில் உதிரத்தின் செந்நிற ஒளியை

(நிழல்கள் கூவிச் சிரிக்கின்றன)

பீஷ்மர்: போதும் நிறுத்துங்கள்.

(நிழல்கள் அமைதியடைகின்றன)

பீஷ்மர்: எத்தனை சிறிய வாழ்வு. ஒருநாள் புழு. மறுநாள் பறவை. அவ்வளவுதான். அவற்றின் உலகில் உணர்வுகளும் ஏக்கங்களும்கூட. அத்தனை சிறியவையாக இருக்கக் கூடும் . . . மிகச் சிறியவையாக. ஓர் இமைப்புக்குள் ஓடிமறைபவையாக . . .

(மிக மெளனமாக குதிரை வீரன் ஒருவன் செந்நிறக் கொடியுடன் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வெண்ணிறக் கொடி. மீண்டும் சிவப்பு. மீண்டும் கரிய கொடி.)

பீஷ்மர்: (தொடர்ந்து) சிறியவை என்றால் காலம் சிறிதாகிவிடுமா ? யானையின் காலம் என் காலத்தைவிடப் பெரிதா ? இந்த விண்மீன்களின் காலம் எது ? காலம் எத்தனை இருண்ட, எடைமிக்க சொல்!

(மீண்டும் கொடிகள் ஓடி மறைகின்றன)

பீஷ்மர்: இதே சொற்களை முன்பொருமுறை சொன்னேன். வெகுநாள் முன்பு . . . வபுஷ்டி நதியின் கரையில் . . .

(பீஷ்மரை அவரது நிழல் நெருங்கி வருகிறது)

துல்லியமான நதி நீரின் ஓட்டத்தைப் பார்த்து நின்ற போது . . . ஆம் இதே சொற்களை !இந்த நதியின் காலம் எது என . . . அப்போது நீரிலிருந்து என் ஆடிப்பிம்பம் எழுந்து வந்தது.

நிழல்: பீஷ்மா இதோ உன்னருகே மிக அருகே உள்ளது அந்த இடம். அந்த தருணம் . . . மீண்டும் ஒரு வாய்ப்பு.

பீஷ்மர்: எங்கே. ?

நிழல்: எழுக.

பீஷ்மர்: (எழுந்து) எங்கே ?

நிழல்: இதோ (பீஷ்மர் தன் உடைகளை களைகிறார். தாடியையும் தலை மயிரையும் களைத்து நிழலிடம் தந்து பட்டாடையும் கச்சையும் நகைகளையும் அணிந்து இளமைத் தோற்றம் கொள்கிறார்)

நிழல்: இதோ இந்த மெல்லிய திரைக்கு அப்பால் உள்ளது வபுஷ்டி நதியின் கரை. நீ மீண்டும் அங்கே செல்ல முடியும் நீ உன் வாழ்வில் தவறவிட்ட கணங்களில் ஒன்று அது . . .

(பீஷ்மர் ஒரு காலடி எடுத்து வைக்க அரங்கின் ஒளி மாறுபடுகிறது. நீரின் கலகல ஒலி. ஒளியின் நடனம்)

பீஷ்மர்: இந்த நதிக்கரையில் இப்படி நின்றது நாற்பது வருடங்களுக்கு முன்பு. அன்று தோள்களில் நான் அடையப்போகும் வெற்றிகள் திமிறிக் கொண்டிருந்தன. இன்று அடைந்த வெற்றிகளின் பாரம் (குனிந்து) அதே நதி. அதே மென்நீல நீரோட்டம். நிழல்களாடும் ஆழம். நதிக்கு காலம் இல்லையா என்ன ? ஒவ்வொரு கணமும் காலமின்மைதான் அதில் ஓடிக்கொண்டிருக்கிறதா ? என் முகம். அது நான் விரும்பியது போல இல்லை. நான் சொல்லாத சொற்களாலானதாக மாறிவிட்டிருக்கிறது அது.

(எதிரே நீர் பிளக்கும் ஒலியுடன் ஒருவன் எழுகிறான்)

பீஷ்மர்: யார், நில் (அம்பை உருவுகிறார்)

எழுந்தவன்: என் பெயர் சிகண்டி. பாஞ்சால மன்னனின் வளர்ப்பு மகன்.

பீஷ்மர்: அப்படி ஒரு வளர்ப்பு மகனைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லையே . . .

சிகண்டி: மகள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பீஷ்மர்: நீதானா அது ? இங்கு என்ன செய்கிறாய் ?

சிகண்டி: இங்குதான் நான் என் நாட்களைக் கழிக்கிறேன். இந்தக் காட்டிலுள்ள பழங்குடி மக்கள் சிறந்த வில்லாளிகள். இவர்களிடம் பயிற்சி பெறுகிறேன்.

பீஷ்மர்: (இகழ்ச்சியுடன்) நீ களம் புகுந்தால் எந்த ஆண்மகன் எதிர்க்க முன்வருவான் ?

சிகண்டி: என் எதிரியும் என்னைப்போலத்தான்.

பீஷ்மர்: அப்படியென்றால் சரி (சிரித்தபடி) யார் அவன் ?

சிகண்டி: அவன் பெயர் பீஷ்மன். அஸ்தினபுரியின் பிதாமகன் அவன் என்கிறார்கள்.

பீஷ்மர்: (ஒரு கணம் திகைத்து) உன் தாயின் பெயர் என்ன ?

சிகண்டி: அம்பை. காசி மன்னன் மகள்.

பீஷ்மர்: அவனுக்கு மணமாயிற்றா என்ன ?

சிகண்டி: இல்லை. தாங்கள் யார் ?

பீஷ்மர்: நான் ஒரு ஆயுதப்பயிற்சியாளன்.

சிகண்டி: யாருக்கு ?

பீஷ்மர்: அஸ்தினபுரியின் இளவரசர்களுக்கு.

சிகண்டி: ஆம். தங்களைப் பார்த்தபோதே தெரிந்தது, பெரும் வீரர் என்று. தாங்கள் எனக்கு திருணதாரண அஸ்திர வித்தையை கற்றுத்தர இயலுமா ? தங்களுக்கு அடிமையாகிறேன்.

பீஷ்மர்: எதற்கு ?

சிகண்டி: அது மிக அபூர்வமானது என்றார்கள். நான் அத்தனை விற்பயிற்சிகளையும் பெற்றாக வேண்டும். ஒரு போர் வரும். அன்று நான் பீஷ்மனின் மார்பை பிளப்பேன்.

பீஷ்மர்: நீயா ? பீஷ்மரையா ?

சிகண்டி: ஆம். ஏனெனில் நான் பிறந்ததே அதற்காகத்தான். நான் எய்யப்பட்டுவிட்ட அம்புதான் உத்தமரே. என்னை எய்தவள் என் அன்னை. அவள் இன்றில்லை.

பீஷ்மர்: என்ன ஆயிற்று ?

சிகண்டி: (சாதாரணமாக) எரி புகுந்துவிட்டாள்.

பீஷ்மர்: அவள் உன்னிடம் என்ன சொன்னாள் ?

சிகண்டி: நீங்கள் அஸ்தினபுரிக்காரர் என்பதனால் அறிந்திருப்பீர்கள். அம்பையின் ஆத்மாவை எள்ளி நகையாடினான் பீஷ்மன். எரியும் நெஞ்சுடன் அவள் முதலில் பாஞ்சால மன்னனை நாடி வந்தாள். காசியில் சுயம்வரத்திற்கு வந்த பெரிய மன்னன் அவன்தான். தன்னை ஏற்கும்படி அவனிடம் மன்றாடினான். பீஷ்மர் மீதுள்ள அச்சத்தால் அவன் அவளை ஏற்கப் பயந்தான். பிறகு அன்று சுயம்வரத்திற்கு மன்னர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று யாசித்தாள். அவள் வேண்டியது ஒரு குழந்தையை. தன் நெஞ்சின் நெருப்பை வளர்த்து அதில் பீஷ்மனை பலியாக்கும் ஒரு வாரிசை. எவருமே அதற்கு முன் வரவில்லை. ஏனெனில் பீஷ்மன் எதையுமே மன்னிக்காதவன். நிகரே இல்லாத வில்லாளி.

பீஷ்மர்: ஆம் அப்படித்தான் கேள்விப்பட்டேன்.

சிகண்டி: உடைந்த நெஞ்சுடன் அவள் காட்டுக்குச் சென்றாள். அவன் தலைமயிர் சடையாயிற்று. உடல் கறுத்து செதில்களேறின. நகங்கள் நீண்டு வளர்ந்தன. அவள் கண்கள் மட்டும் இரவில் சிறுத்தையின் கண்கள் போல சுடர்விட்டன ….

பீஷ்மர்: உன் தந்தை யார் ? (பொறுமையின்மையை மறைக்க சகஜபாலனை காட்டி) சூதர்கள் பாடாத கதாநாயகன் ?

சிகண்டி: யாரோ . . . ஒருவேளை ஏதோ காட்டு மிராண்டி. அவர்களிடம்தான் ஒருபோதும் அணையாத வன்மம் உறங்குகிறது… தர்மங்களாலும் கருணையாலும் நனையவிடப்படாத உக்கிரமான வன்மம். நான் பிறந்தபோது என் தாய்க்கு பித்து மிகவும் முற்றியிருந்தது. ஊர் ஊராக என்னை தூக்கிக் கொண்டு அலைந்தாள். மிருகங்கள் குட்டிகளை வளர்ப்பதுபோல ஊட்டினாள், பாதுகாத்தாள். அவள் காசி மன்னன் மகள் என யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. தெருக்களில் பிச்சையாக கிடைத்ததை உண்டாள் புழுதியில் படுத்து தூங்கினாள். நான் பெண் என்று அவள் அறிந்ததே வெகுநாள் கழித்து எனக்கு ஆறு வயது இருக்கும்போதுதான். அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முழு நிலவு நாள் அது. கிராமத்துக்கு வெளியே சுடுகாட்டின் ஓரம் ஓர் இடிந்த கல்மண்டபத்தில் அவள் இருந்தாள். ஊருக்குள் பிச்சையாக பெற்ற உணவுடன் நான் திரும்பி வந்தேன். அவள் மெல்ல தனக்குள் முனகியபடி முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தாள். சன்னதம் கொள்ளப் போகிறவள் போல . . .

(சிகண்டிக்கு பின்னால் ஒளி விழும் இடத்தில் அம்பை தள்ளாடியபடி வந்து அமர்வதை பீஷ்மர் காண்கிறார். சிகண்டி அதை அறிவதில்லை. அம்பை பயங்கரக் கோலத்திலிருக்கிறாள். முகத்தின்மீது சடைமுடிக் கற்றைகள் தொங்கியாடுகின்றன. கண்கள் சுடர்கின்றன)

சிகண்டி: அவள் அப்படி இருப்பதுண்டு. விறகை கருக்கி நொறுக்கி உண்ணும் தீ போன்றது அவளில் எரியும் அந்தக் குரோதம்.

(அம்பை கைகளை முஷ்டி பிடித்து நெரிக்கிறாள். உறுமுகிறாள். முனகிக் கொள்கிறாள். இடைவிடாது பெருமூச்சு விடுகிறாள். ஒரு வனதெய்வம் போலிருக்கிறாள்)

சிகண்டி: அன்று நான் உணவை அவளருகே வைத்துவிட்டு மெல்ல விலகினேன்.

அம்பை: (தலைதூக்கி சிகண்டியை உற்றுப் பார்க்கிறாள்) யார் நீ ?

சிகண்டி: நான் சிகண்டி . . .

அம்பை: [கூவலாக] யார் ?

சிகண்டி: ஆம், இப்பெயர் அவளறிந்ததல்ல. அவள் போட்டதல்ல…பிச்சை அளிக்கும் ஊர்க்காரர்கள் போட்டபெயர்…

அம்பை: (சட்டென்று கனிந்து) மகனே . . .

சிகண்டி: (குழம்பி) அம்மா நான் . . .

அம்பை: மகனே நீ யார் தெரியுமா ? நீ காசி மன்னனின் மகள் வயிற்றில் பிறந்தவன்.

சிகண்டி: அம்மா நான் உன் பெண்.

அம்பை: இல்லை நீ ஆண். நான் சொல்கிறேன் நீ ஆண் (வெறி ஏற) நீ ஆண்தான். நீ ஆண்தான். நீ ஆண்தான் . . .

சிகண்டி: ஆம் அன்னையே நான் ஆண்தான்.

அம்பை: மகனே நீ செய்ய வேண்டிய கடன் ஒன்று உள்ளது. உன் பிறவி நோக்கமே அதுதான்.

சிகண்டி: சொல்லுங்கள் அன்னையே; காத்திருக்கிறேன்.

அம்பை: (தணிந்த மெல்லிய குரலில்) இருபது வருடங்களாக முயல்கிறேன். என்னுள் எரியும் இந்த நெருப்பை அணைக்க என்னால் முடியவில்லை. இதை அணைக்க வேண்டுமென்றால் நான் காலத்தில் பின்னால் நகர வேண்டும். நான் அவன்முன் மண்டியிட்ட அந்தக் கணத்திற்கு மீண்டும் சென்று அக்கணமே அங்கேயே செத்து உதிர வேண்டும். இல்லை. இந்த நெருப்பு அப்போதும் அணையாது. இது எனக்குரிய அனைத்தையுமே எரித்து விட்டது. உடலையும் உயிரையும் ஆத்மாவையும் சாம்பலாக்கி விட்டது. என் மறுபிறப்பிலாவது இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். [தழுதழுத்து] என் விடுதலை உன் கரங்களில் இருக்கிறது…

சிகண்டி: நான் என்ன செய்ய வேண்டும் அன்னையே.

அம்பை: நீ அஸ்தினபுரியின் பிதாமகன் பீஷ்மனை கொல்ல வேண்டும்.

சிகண்டி: கொல்கிறேன்.

அம்பை: (திடுக்கிட்டு ஏறிட்டுப் பார்த்து) நீயா ? நீ . . . உனக்கு அவர் யாரென தெரியுமா ?

சிகண்டி: யாராக இருந்தாலும் சரி.. உங்கள் சொல் எனக்குக் கட்டளை…. நீங்கள் என்னிடம் பேசிய முதல் சொற்கள் இவை…

அம்பை: உன்னால் முடியுமா ? உன்…. ஆனால் உன்னால் முடிந்தாக வேண்டும் … எனக்கு வேறு எவரும் இல்லை.

சிகண்டி: நான் அதற்காக மட்டுமே வாழ்வேன்.

அம்பை: நீ அவனை களத்தில் கொல்ல வேண்டும். அவனுடைய கவசங்கள் மூடிய மார்பை உன் அம்புகள் பிளக்க வேண்டும்.

சிகண்டி: ஆம் அது நடக்கும்.

அம்பை: மகனே . . . நீ

சிகண்டி: ஐயமே தேவையில்லை அன்னையே. அது நடக்கும். விண்ணில் நிறைந்துள்ள தெய்வங்கள் அறிக. மண்ணில் நிரம்பியுள்ள மூதாதையர் அறிக. பஞ்சபூதங்கள் அறிக. இது உண்மை.

அம்பை: (ஆழ்ந்த அமைதியுடன்) ஆம். நீ அதை செய்வாய். (பெருமூச்சுடன் எழுந்து) நீ பாஞ்சால மன்னனிடம் செல். இதோ இந்த மோதிரத்தைக் காட்டு. உன்னை அவர் தன் குழந்தையாக ஏற்பார். (ஒரு மோதிரத்தை நீட்ட சிகண்டி பெற்றுக் கொள்கிறான்) மீதிக் கதைகளை சூதர் பாடல்களே உனக்குக் கூறும்.

சிகண்டி: நான் உங்களுக்கு வேறு என்ன செய்ய வேண்டும் அன்னையே.

அம்பை: இந்தப் பிறவியை நீ எனக்காக அளிக்கிறாய் மகனே. கடன் இனி என்னுடையதுதான். வரும் ஏழு பிறவிகளில் நான் உனக்கு சேயாகி இந்தக் கடனை கழிப்பேன். அதுவன்றி உனக்குத்தர இந்த அன்னையிடம் என்ன இருக்கிறது ? (விம்மி அழுகிறாள். அழுகை வலுத்து உக்கிரமான ஓசையற்ற குலுங்கல்களாக நீடிக்கிறது.)

சிகண்டி: (ஆறுதல் கூறும்விதமாக) பாஞ்சாலத்திற்கு தாங்கள் வருகிறீர்களல்லவா ?

அம்பை: (மெல்ல அமைதியாகி) இல்லை. என் பயணம் இங்கே முடிகிறது. (கை சுட்டி) இது காட்டாளர்களின் மயானம். சற்றுமுன் அந்தச் சிதையில் எரிபவன் முகத்தைப் பார்த்தேன். அவனுடன் நானும் எரிந்தாக வேண்டும்.

சிகண்டி: அம்மா!

அம்பை: உனக்கு வெற்றி கிடைக்கட்டும். என்னை மன்னித்துவிடு குழந்தை. (நடந்து செல்கிறாள். சிகண்டி பதற்றமும் பதைப்புமாக நிற்கிறான். ஆனால் பின் தொடர்வதில்லை. அம்பை சென்று மறைந்த திசையில் தீ சுடர் விட்டெழும் ஒலி. பெண் குரல் கதறல். பின் அமைதி.)

சிகண்டி: பாஞ்சாலனின் வளர்ப்பு மகள் ஆனேன். ஆனால் எவரும் எனக்கு வில்வித்தை கற்பிக்கவில்லை. எனவே இந்த காட்டுக்கு ஆண் வேடமிட்டு வந்து இவர்களிடம் வில்வித்தை பயின்றேன். அவர்கள் என்னை கண்டடையலாகாது என்பதனால் வைத்தியர் ஸ்தூனகர்ணருக்கு பெரும் பணம் தந்து என்னை ஆணாக்கிக் கொண்டேன்.

பீஷ்மர்: உன் இலக்கு நிறைவேறட்டும்!

சிகண்டி: தங்கள் ஆசி. சற்றுமுன் தாங்கள் ஓர் அம்பின் வால் நுனிமீது மறு அம்பை எய்து நிறுத்தக் கண்டேன். அதன் பெயர் திருணதாரண அஸ்திரம். அது மிக அபூர்வமானது. பரசுராமர் உருவாக்கியது. அதை நீங்கள் எனக்கு கற்பிக்க வேண்டும்.

பீஷ்மர்: நீ எப்படி அதைக் கோரலாம் ?

சிகண்டி: நியாயத்தின் பெயரால். அதைக் கொண்டே நான் பீஷ்மரைக் கொல்ல முடியும் என்று உன் மனம் கூறுகிறது. என் கதையை உங்களிடம் நான் கூறியது இதற்காகத்தான்.

பீஷ்மர்: நியாயம். அதன் பெயரில் கேட்டால் நான் மறுக்க முடியாது. வா.

சிகண்டி: (பாதங்களை வணங்கி) வணங்குகிறேன் ஆசாரியரே.

பீஷ்மர்: குலைந்து அவனை தொடப் போய் தவிர்த்து) உனக்கு வெற்றி கிடைக்கட்டும்

நிழல்: (பீஷ்மரை தோளில் தொட்டு) அவனிடம் சொல். நீ யாரென்று சொல் . . .

பீஷ்மர்: உன் அம்புகளை எடுத்துக் கொள்.

நிழல்: அவன் உன் மகன். உன் மகன். அவனைத் தொட்டால் உன் உதிரத்தில் பூக்கள் மலரும். மூடா தொடு அவனை.

சிகண்டி: (வில்லை தொடுத்து) சரி.

பீஷ்மர்: திருணதாரணம் என்பது புற்சரடுகளைப் போல அம்புகளை தொடுக்கும் கலை. இது உன் கட்டை விரலில் உள்ளது. உன் கட்டை விரலைக் கொண்டு நாணில் தெறித்து நிற்கும் அம்பின் சாய்வை கணிக்க வேண்டும்.

(அம்புப் பயிற்சியின் பலவிதமான அசைவுகள்)

பீஷ்மர்: ஒரே இலக்கை அணுகூட மாறாமல் மீண்டும் மீண்டும் தாக்கும் வித்தை இது. இதன் சூத்திரம் இதுதான் (காதில் கூறுகிறார்) இம்மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒன்றைக் குறிக்கும். முதல் எழுத்து அம்பின் பின்னிறகு. இரண்டாமெழுத்து கட்டைவிரல். மூன்றாம் எழுத்து காற்று .நான்காம் எழுத்து நாணின் ஒலிபேதம் . . .

நிழல்: மூடா சொல். இப்போதாவது சொல். நீ என் மகள் என அவளை மார்போடணைத்துக் கொள் . . .

பீஷ்மர்: எங்கே அம்பை விடு பார்க்கலாம்.

சிகண்டி: (அம்பை எடுத்து கண்மூடி தியானித்து எய்கிறான்) சரிதானே குருநாதரே (மீண்டும் மீண்டும் மீண்டும் அம்புகள்)

பீஷ்மர்: மிகச்சரி (ஒரு பெரும் மரம் முறிந்து பேரோலத்துடன் விழும் ஒலி) உன் இஷ்ட தெய்வம் நீ வில்லேந்துகையில் வந்து விடுகிறது

போலும். முதல் முறையாக இதை இத்தனை துல்லியமாக செய்தவன் பார்த்தன் மட்டுமே.

சிகண்டி: என் இஷ்ட தெய்வம் என் அன்னைதான். உன் உடலில் பெண்மையின் வடிவாக அவள் குடியிருக்கிறாள்.

பீஷ்மர்: உனக்கு வெற்றி கிடைக்கும். இந்த அம்புமுறையை நீ பீஷ்மரின் மார்பை பிளப்பாய்.

(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்)

[மேலும்]

 

 

 

 

முந்தைய கட்டுரைவடக்குமுகம் [நாடகம்] – 4
அடுத்த கட்டுரைஒரு பதிவு