வடக்குமுகம் [நாடகம்] – 3

அஸ்தினபுரியின் அரண்மனை

பீஷ்மர்: (உள்ளிருந்து வந்தபடியே) அமாத்யரே.

அமாத்யர்: அடியேன்.

பீஷ்மர்: காசிநாட்டு இளவரசி திரும்பி வருவதாகச் சொன்னார்கள். அவளை நேராக இங்கு இட்டுவரச் சொல்லுங்கள்.

அமாத்யர்: உத்தரவு (செல்கிறார்)

பீஷ்மர்: நாடகத்தின் மறுபக்கம் இனிமேல்தான் போலும்.

(வெளியே குரல்: ‘காசி நாட்டு இளவரசி அம்பாதேவி வருகை ‘)

பீஷ்மர்: புயல் வருவது போல! ஆம் அபடித்தான் . அவள் இயல்பு அது

(ஆனால் அம்பை மென்மையாக வெட்கி உள்ளே வருகிறாள்)

பீஷ்மர்: இளவரசிக்கு வணக்கம்.

அம்பை: (மெல்லிய குரலில்) தங்களுக்கு என் வணக்கம்.

பீஷ்மர்: தாங்கள் போன விஷயம் ?

அம்பை: அது பூர்வ ஜென்மம் போல. முடிந்த கதை.

பீஷ்மர்: (வியப்புடன்) சால்வனிடம் நான் பேசி . . .

அம்பை: வேண்டாம்.

பீஷ்மர்: சால்வன் அஞ்சியிருக்கக் கூடும்.

அம்பை: அந்தப் பேடியின் பெயரை மறுமுறை நான் கேட்க விரும்பவில்லை.

பீஷ்மர்: இளவரசி ! (மேலே பேச முடியாமல்) ஆனால் (ஆனால் பீஷ்மரின் முகம் மலர்ந்துவிடுகிறது. அதை அம்பை கவனிக்கிறாள்.)

அம்பை: நான் தங்களிடம் வந்திருக்கிறேன்.

பீஷ்மர்: தங்களை முறைப்படி சால்வனிடம் அனுப்பியமை இந்த நாடறிந்தது. இப்போது தாங்கள் . . . மேலும் அம்பிகையை பட்டமகிஷியாக அபிஷேகமும் செய்தாகிவிட்டது . . .

அம்பை: நான் வந்தது தங்களிடம்

பீஷ்மர்: தேவி!

அம்பை: தங்கள் ஆத்மாவுக்கும் என் ஆத்மாவுக்கும் நன்கறிந்த விஷயம் எதுவோ அதைப்பேச நான் வந்திருக்கிறேன்.

பீஷ்மர்: புரியவில்லை

அம்பை: உங்கள் ஆத்மாவுக்கு புரியும்

பீஷ்மர்:உங்கள் குறிப்பு புரிகிறது. ஆனால் நான் எப்படி உங்களை ?

அம்பை: நீங்கள் என்னை கவர்ந்து வந்தவர். சாத்திர முறைப்படி நீங்கள் என் கணவர்.

பீஷ்மர்: தேவி . . . நான் என் தாய்க்கும் தந்தைக்கும் அளித்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதனை நான் மீற முடியாது.

அம்பை: என்றென்றும் பிரம்மசாரியாக இல்லையா ?

பீஷ்மர்: ஆம். அது என் சபதம்

அம்பை: எதற்கு ? ‘

பீஷ்மர்: அது விதி

அம்பை: விதியல்ல, அது ராஜதந்திரம். மன்னர் சந்தனுவின் காலத்தில் இந்த இந்திரப் பிரஸ்தம் ஒரு சிற்றூர்தான். இதைச் சுற்றி காசியும் அங்கமும் பாஞ்சாலமும் பெரும் வலிமையுடனிருந்தன. படைபலத்தையும் உறவு பலத்தையும் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு சந்தனு மகாராஜா கங்கர் குல இளவரசி கங்கா தேவியை மணந்து உங்களைப் பெற்றார். பின்பு பாஞ்சாலத்தின் வலிமையைக் கண்டபோது படகுப்பலம் மிக்க பரதவர் குலத்தின் இளவரசி சத்தியவதியுடன் மண உறவு கொள்ள அவர் விரும்பினார். பரதவர் குல மன்னன் உங்களைக் கண்டு அஞ்சினான். ஆகவே சத்யவதி பட்டமகிஷியாக வேண்டும். என்றும் அவள் பெறும் பிள்ளைகள் மன்னர்களாக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தான். நிபந்தனையை மீற முடியாது. ஆனால் பரதவர் குலத்தின் படகுப்படை அஸ்தினபுரிக்கு தவிர்க்க முடியாத தேவை. மன்னருக்கு வேறுவழி இருக்கவில்லை . . .

பீஷ்மர்: இது நானே எடுத்த விரதம்.

அம்பை: ஆம். இல்லையேல் சந்தனு மன்னர் உங்களை தவிர்த்திருக்கக்கூடும்.

பீஷ்மர்: (ஏளனமாக சிரித்து) என்னால் மன்னனாக முடியாதென்கிறாயா ?

அம்பை: நிச்சயமாக ஆக முடியும். ஆனால் அஸ்தினபுரியின் மக்கள் உங்களை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். உங்களுக்கும் தம்பியருக்கும் போர் நடந்திருக்கும். அதில் பாரத வர்ஷத்து மன்னர்கள் பங்கு கொண்டிருப்பார்கள். போரும் அழிவும்தான் எஞ்சும். ஆனால் இன்று அஸ்தினபுரமே உங்கள் காலடியில் கிடக்கிறது. பாரதவர்ஷமே உங்களை மகாவிரதர் என்று போற்றுகிறது. . .

பீஷ்மர்: நான் என்றுமே போரைத் தவிர்ப்பவன்.

அம்பை: ஆம்; ஏனெனில் நீங்கள் ஆயுதங்களை அறிந்தவர்.

பீஷ்மர்: என்ன காரணத்துக்காக என்றாலும் நான் எடுத்த விரதம் எனக்கு முக்கியமானது. என் தந்தை மீதும் தாயின் குலம் மீதும் எடுத்த சத்தியம் அது. அதை நான் மீறவே முடியாது.

அம்பை: ஏன் ? இன்று அந்த விரதத்திற்கான தேவை எதுவுமே இல்லையே.

பீஷ்மர்: நான் சொல்லிவிட்டேன். அது என் விரதம்.

அம்பை: மகாவிரதர் என்ற பட்டத்தை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும் என்பதற்காகவா. . .

பீஷ்மர்: நான் அரசுப்பட்டத்தையே பெரிதாக எண்ணவில்லை.

அம்பை: ஏனெனில் அது உங்களுக்கு எளிது. ஆகவே அதில் அறைகூவல் ஏதுமில்லை. மகாவிரதர் பட்டம் உங்களை ரிஷியாக்குகிறது. தலைமுறைகள் தோறும் நீளும் பெரும் புராணக் கதாபாத்திரமாக்குகிறது . . .

பிஷ்மர்: (சிரித்து) பெண்ணே நீ இப்போது செய்து கொண்டிருப்பதென்ன என்று உனக்கே தெளிவிருக்கிறதா ? நீ அன்புக்காக வாதிடுகிறாய். உலகிலேயே இதற்குச் சமானமான மூடத்தனம் ஏதுமில்லை.

அம்பை: (சீற்றத்துடன்) நான் கெஞ்ச வேண்டுமா ?

பீஷ்மர்: அது பெண்களின் இயல்பு. ஆனால் அது உன்னால் முடியாது.

அம்பை: நான் ஏன் கெஞ்ச வேண்டும் ? நீங்கள் சொல்வது சாத்திரம் என்றால் அதன் உள்ளுறை என்ன என்று நான் கூறுகிறேன். அதில் என்ன பிழை ?

பீஷ்மர்: உன்னால் இதிலுள்ள பிழையை உணரவே முடியாது. (கடுமையாக) விவாதிக்கும் தோறும் நீ என்னிலிருந்து விலகி விலகிச் செல்கிறாய் . . .

அம்பை: (சொல்லிழந்து) நான் . . . நான் . . . (குரல் தணித்து) நான் தங்களிடம் . . . தங்கள்மீது . . .

பீஷ்மர்: (கடுமை மேலும் அதிகரித்து) உன் எண்ணம் எனக்குப் புரிகிறது. அது நடவாது.

அம்பை: ஏன் ? (அவள் முகம் உணர்ச்சி மிகுதியால் நெளிகிறது)

பீஷ்மர்: ஏனெனில் என் விரதம் . . .

அம்பை: (ஆக்ரோஷக் கூக்குரலாக) நிறுத்துங்கள். விரதமாம் . . . (மூச்சிளைக்க, தவித்து) வெறும் அகங்காரம். பிறருக்காக போடும் வேடம். சூதர்களுக்காக வாழும் வேடதாரி நீங்கள்.

பீஷ்மர்: நாம் இனிமேல் பேச ஏதுமில்லை என்று நினைக்கிறேன். (திரும்புகிறார்)

அம்பை: (சட்டென்று உடைந்து) தேவ விரதரே . . .

பீஷ்மர்: [அம்புபட்டவர் போல நின்று) என்ன ?

அம்பை: (தழுதழுத்த குரலில்) என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை இழந்தால் நான் அனைத்தையுமே இழந்தவளாவேன். (மண்டியிட்டு முகம் பொத்தி) நான் உங்கள் அடிமை. நான் சொன்ன அத்தனை சொற்களையும் மறந்து விடுங்கள். என் தாபத்தால் உளறி விட்டேன் . . . நான் உங்கள் தாசி. உங்கள் முன் . . .

பிஷ்மர்: (சிலை போல நின்று) நான் என் சொற்களை மீறுவதில்லை.

(அம்பை துடித்து தலைநிமிர்கிறாள். கண்ணீர் வழியும் கண்களுடன் அவரையே நம்ப முடியாமல் வெறித்துப் பார்க்கிறாள். முகத்தை மூடியிருந்த கரம் கீழிறங்கி வணங்குவது போல, பிரார்த்திப்பது போல மார்பில் இருக்கிறது.)

பீஷ்மர்: நீ போகலாம். உன்னை இனிமேல் நான் காண விரும்பவில்லை

[பிஷ்மருக்குப் பின்னால் இருண்ட மூலையில் அம்புப் படுக்கை மீது அவரது நிழல் தவிக்கிறது. எழ முயல்கிறது. அம்பை கண்களை பெருமூச்சுடன் துடைக்கிறாள் நிழல் தன் உடல் முழுக்க அம்புகளுடன் எழுந்து பீஷ்மரை நெருங்குகிறது. பதைபதைப்புமிக்க உடலசைவுகளுடன் பீஷ்மர் பின் நின்று பேச முற்படுகிறது.]

நிழல்: அவளுடன் பேசு. அவளை அழை. இது தான் தருணம். சில கணங்கள்தான். இனி மீண்டும் இத்தருணம் வரப்போவதில்லை. (பீஷ்மர் அதை கேட்கவில்லை. சிலையாக நிற்கிறார்.)

நிழல்: சொல். ஒரே வார்த்தைகள். சொல்லி விடு. இனி ஒரே ஒரு கணம்தான் . . . (பீஷ்மர் கேட்கவில்லை.)

நிழல் : (கோபத்துடன்) முட்டாள். இவள் நெருப்பு போன்றவள். உன்னை சுட்டெரித்து விடுவாள். அவமதிக்கப்பட்ட பிரியம் கடும் விஷமாக மாறிவிடும் என்றறியாதவனா நீ ?

(பீஷ்மர் மெல்ல, தர்ம சங்கடமாக அசைகிறார்.)

நிழல்: சொல். சொல்லி விடு. வேண்டாம் வேறு எதையும் சொல்ல வேண்டாம். நில் அம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்.

(அம்பை எழுந்து முந்தானையை சரி செய்து தலைமயிரை, ஒதுக்குகிறாள்.)

நிழல்: (பரிதவித்து) சொல். தேவவிரதா தயங்காதே. இந்த கணநேரத் தயக்கத்திற்காக உன் வாழ்நாள் முழுக்க தனிமையில் கண்ணீர் விடுவாய்

அம்பை: (அடைத்த குரலில்) நான் வருகிறேன். இனி தங்களைப் பார்க்க மாட்டேன்.

பீஷ்மர்: உனக்கு மங்கலம் நிறைவதாக!

அம்பை: (கடும் சீற்றத்துடன் தலை தூக்கி) என்ன ?

பீஷ்மர்: உனக்கு அனைத்து நலன்களும் நிகழட்டும்.

அம்பை: (கோபத்தில், ஆங்காரத்தில் முகம் கொந்தளிக்க) தங்கள் ஆசிக்கு நன்றி.

(அம்பை திரும்பிச் செல்கிறாள். நிழல் தலித்து சுற்றி வருகிறது.)

நிழல்: அவள் போகிறாள். அழை அழை .அம்பை என்று மட்டும் கூறு. (உரக்க) அம்பை நில்!

அம்பை: (நின்று திரும்பி) அழைத்தீர்களா ?

பீஷ்மர்: இல்லையே.

அம்பை: நான் ஒன்று சொல்லலாமா ? அதைச் சொல்லாமல் சென்றால் அச்சொற்கள் நெருப்பாகி என்னை எரித்து விடும். நீங்கள் என்னை மண்டியிட வைத்தீர்கள். என் ஆத்மாவை நெளியும் புழுவாக உணரச் செய்தீர்கள். அந்தக் கணம் உங்கள் அகங்காரம் தருக்கி நிமிர்ந்தது. (மிக அமைதியாக) அந்தக் கீழ்மைக்காக உங்களை நான் வெறுக்கிறேன். சால்வனைவிட உங்களை வெறுக்கிறேன். நானறிந்த மானுடர்களிலேயே கீழ்மகன் என்று உங்களை எண்ணுகிறேன். நீங்கள் . . .

பீஷ்மர்: (உக்கிரமாக சினம் கொண்டு) நிறுத்து! ஆம் நான் உன்னை ஏற்கவில்லை. ஏனெனில் நீ பெண்ணே அல்ல. எந்தப் பெண்ணும் தன் காதலை இப்படி அறிக்கையிடமாட்டாள். அதற்காக வாதிட மாட்டாள். நீ பெண்ணல்ல ஆண். போ, போய் கவசமும் கச்சையும் சல்லடமும் அணிந்து கொள். (தணிந்து, குரலிலும் கண்களிலும் மட்டும் குரோதமும் குரூரமும் எஞ்சியிருக்க) ஒன்று தெரிந்து கொள், பேடியான ஆணை பெண்கள் வெறுப்பது போலவே ஆண் தன்மை கொண்ட பெண்ணை ஆண்களும் வெறுக்கிறார்கள்.

(அம்பை ஒரு கணம் உறைந்து நின்று பிறகு வெளியே விரைகிறாள். பீஷ்மர் சட்டென்று தளர்ந்து நின்று, அவள் போன வழியே ஒரு அடி எடுத்து வைத்து, தயங்கி பின்னகர்கிறார். அவரது நிழல் சென்று அடங்குகிறது. வெளியே ஒரு வீரன் கூறும் வாழ்த்தொலி. பீஷ்மர் ‘உள்ளே வா ‘ என்கிறான்.]

வீரன்: (வந்து வணங்கி) பிரபு நான் தெற்குக் கோட்டைக் காவலன்.

பீஷ்மர்: சொல்.

வீரன்: காசி நாட்டு இளவரசி இப்போதுதான் சென்றார்கள். ரதம் எங்கும் நிற்காது புண்பட்ட பன்றி போல சென்றது.

வீரன்: அவர்களுடைய ரதம் ஒரு உப மண்டபத்தைத் தாண்டியபோது அங்கே தூங்கிக் கொண்டிருந்தஒரு பரதேசித்துறவி எழுந்து நின்று கைகளை நான் நோக்கி விரித்து அபசகுனமாக சில சொற்களைக் கூறியதாக சொல்கிறார்கள்.அவனை நம் வீரர்கள் உடனே கைதுசெய்துவிட்டார்கள்…

பீஷ்மர்: என்ன சொன்னார் அவர் ?

வீரன்: தங்களைப்பற்றி..

பீஷ்மர்: உம்

வீரன்: தங்களுக்கு இறுதி நாள் குறிக்கப்பட்டு விட்டதாக.

பீஷ்மர்: பிறகு ?

வீரன்: (தயங்கி) பிறகு என்னவோ பித்துச் சொற்கள் . . . அதை நானும் கேட்டேன்.

பீஷ்மர்: என்ன ?

வீரன்: பேடி என்பவன் வாழ்க்கைக்கு ஒரு பார்வையாளன் மட்டுமே என்றான். கடவுள்களும் பிசாசுக்களும் பேடிகள் என்றான். பிறகு மிக அபத்தமாக ஒரு வரி . . .

பீஷ்மர்: சொல்.

வீரன்: தன் ஆடிப் பிம்பத்தாலேயே ஒருவன் கொல்லப்பட முடியும் என்றான்.

பீஷ்மர்: அப்படியா சொன்னான். மீண்டும் சொல் . . .

வீரன்: தன் ஆடிப் பிம்பத்தாலேயே ஒருவன் கொல்லப்பட முடியும்.

பீஷ்மர்: அவர் எங்கே ?

வீரன்: இழுத்து வருகிறேன்.

பீஷ்மர்: வேண்டாம். அவரை உரிய மரியாதைகளுடன் நமது விருந்தினர் இல்லத்துக்கு இட்டுச் செல். மாலை விசித்திர வீரியனின் சபையில் அவர் எழுந்தருளட்டும். நம் நாட்டுக்கு வரும் ரிஷிகளுக்கு அளிக்கப்படும் எல்லா உபச்சாரங்களும் மரியாதைகளும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும். விசித்திர வீரியன் அவருக்கு பாதபூஜை செய்து அவர் ஆசியை பெற வேண்டும்.

வீரன்: (குழப்பதுடன்) உத்தரவு.

பீஷ்மர்: நீ போகலாம்.

(வீரன் தலை வணங்கி திரும்புகிறான்)

பீஷ்மர்: நில். (குரல் தழைய) அவரை நான் சந்திக்க விரும்பவில்லை.

வீரன்: அப்படியே

(வீரன் செல்கிறான் பீஷ்மர் கனத்த நடையுடன் திரும்பி மெல்ல அரங்கில் உலவி உறைந்து நிற்கிறார். அவரது அவர் தோளைத் தொடுகிறது.)

[மேலும்]

முந்தைய கட்டுரைஒரு புகைப்படம்
அடுத்த கட்டுரைஒரு கடிதம்