சுதந்திரதினம்-டிவி இல்லாமல்

நண்பர் கிருஷ்ணன் அனுப்பிய கடிதம் இது. வாசகர் கவனத்துக்காக.

         இமையம் யூத் அஸோஷியேஷன்
          இணைந்த கரங்கள் நற்பணி இயக்கம்
          இளைய ஆணிகள்
          பசுமை பாரதம்
          18-f, ECM lay out, SKC Road., Erode
          Ph. 9842771700, 9865916970.
 
அன்புடையீர்,
 
        நாங்கள் ஈரோட்டை மையமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ சமூகப்பணி இயக்கங்கள். கடந்த நான்கு வருடங்களாக எங்கள் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நாட்களில் தொலைக்காட்சிப்பெட்டிகளை அணைத்துவிடும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறோம்.  அதேபோல தொலைக்காட்சி நிறுவனங்களிடம் அந்த நாட்களிலாவது உணர்வுகளை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளான திரைநட்சத்திர பேட்டிகள் திரை செய்திகள் போன்றவற்றை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். திரைநட்சத்திரங்கள் திரைப்பணியாளார்கள் போன்றோரிடமும்  அந்நாட்களில் பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றை செய்யவேண்டாம் என்றுசொல்லிவருகிறோம்.

இந்த நாட்களிலாவது வெறும் பொழுதுபோக்கை தவிப்பது என்ற பொறுப்பு ஊடகங்களுக்கு தேவை என்பது எங்கள் எண்ணம். பொதுமக்களிடம் இருக்கும் இந்த மேலோட்டமான மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அந்நாட்களை வெறும் விடுமுறைநாட்களாக மட்டுமே காணும் மனநிலையாகும். இந்த நாட்டில் நடந்த விடுதலைப்போராட்ட வரலாற்றை இளையதலைமுறை முழுமையாகவே மறக்கும் நிலைக்கு நாட்டை இது கொண்டுசெல்லும்.

இதை உங்கள் இணையதளங்களில் பிரசுரியுங்கள். உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் இச்செய்தி கூடுமானவரை அதிக மக்களிடம் சென்று சேரட்டும். விடுதலைநாளை பயனுள்ள வழிகளில் செலவழிப்போம். அந்த நாளில் நம் தேசத்துக்காகவும் சமூகத்துக்காகவும் எதையாவது செய்வோம். குறைந்தது நாட்டைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்

அன்புடன்

கிருஷ்ணன்
செயலாளர்
இமையம்

பிறநிறுவனங்களுக்காகவும்

முந்தைய கட்டுரைதாமஸ்:மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிறிஸ்து:ஒருகடிதம்