கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். கேரளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் சேரர்கள் ஆண்ட பகுதிகள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.உங்கள் ஊரை பற்றி குறிப்பிடும் போது, சோழர் கால ஏரி மற்றும் சோழர் காலத்து வயல்வெளிகள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.அது சேரர்கள் ஆண்ட பகுதியா அல்லது சோழர்கள் ஆண்ட பகுதியா.

அன்புடன்,
அசோக்குமார்,உதகை.


அன்புள்ள அசோக் குமார்

தென்குமரி நாட்டின் வரலாற்றை இவ்வாறு சொல்லலாம். சங்ககாலத்தில் இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். ஆய் அண்டிரனின் கல்வெட்டு கிடைத்துள்ளது. வேளிர் மன்னர்களும் குறவ மன்னர்களும் பின்னர் ஆண்டார்கள். அவர்களின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன

அதன்பின்னர்தான் சேரர் ஆட்சி. அல்லது சேரர்களுக்கு வரிகொடுப்பவர்களாக ஆய்,வேளிர்  மன்னர்கள் இருந்திருக்கலாம்.

பின் தமிழக வரலாற்றில் கானப்படும் நீண்ட இடைவேளை.

அதன்பின் நாம் காண்பது இங்கே ஆண்ட சேர மன்னனாகிய பாஸ்கர ரவிவர்மனை ராஜராஜ சோழன் வென்ற கதையை. ‘காந்தளூர் சாலை கலமறுத்தருளிய’ என்ற புகழ்பெற வரி உள்ள கல்வெட்டு இதை குறிப்பிடுகிறது சோழர் ஆட்சி கிட்டத்தட்ட 300 வருடம் நீண்டது. பல ஆலயங்கள் கட்டப்பட்டன. ஏரிகள் வெட்டபப்ட்டன.

அதன்பின் பாண்டியர்கள் சோழர்களை வென்று குமரியை கைப்பற்றினார்கள். பாண்டியநாட்டை இஸ்லாமியர் [ முகமது பின் துக்ளக்கின் தளபதி] கைப்பற்றியபோது நாஞ்சில்நாடு தனியாட்சி அடைந்தது

சில சிறு நாடுகளாக இப்பகுதி ஆளப்பட்டது. இவை ஸ்வரூபங்கள் என்று சொல்லபப்ட்டன. அதில் ஒன்று திருப்பாம்பரம் ஸ்வரூபம்.

மதுரையில் இஸ்லாமியர் ஆண்டபோது இப்பகுதி இஸ்லாமியர் ஆட்சிக்குக் கீழே இருந்தது. இஸ்லாமிய தளபதி ஒருவர் திருவனந்தபுரத்தில் இருந்து இதை ஆண்டார்

அதன்பின் மதுரை நாயக்கர் ஆட்சிக்கு போயிற்று. குமார கம்பணனின் ஆட்சிக்கு. அதைதொடர்ந்து இப்பகுதி மதுரைக்கு கப்பம் கட்டும் சிறுநாடுகளாக இருந்தது

திருபாம்பரம் ஸ்வரூபம் பின்னர் திருவிதாங்கூர் ராஜ வம்சமாக ஆகியது. அவர்கள் தங்களை சேரர் வழித்தோன்றல் என்று சொல்லிக் கொன்டார்கள். அதற்கு ஐதீக பின்புலம் இருந்தது

மதுரையில் மீனாட்சி ராணி சந்தாசாகிபால் கொல்லப்பட்டு நாயக்கர் ஆட்சி முடிவுக்குவந்தபோது திருவிதாங்கூர் தனி நாடாகியது. மார்த்தாண்ட வர்மா மகாராஜா தனியாட்சியை நிறுவினார்

வெள்ளையர் கட்டுப்பாட்டுக்குச் செல்வது வரை இந்நிலை நீடித்தது

அ.கா.பெருமாள் எழுதிய தென்குமரியின் கதை என்ற நூல் [தமிழினி பிரசுரம்,சென்னை] உங்களுக்கு மிக உதவியாக இருக்கக் கூடும்.

**********

அன்புள்ள ஜெ,

சைதன்யா எடுத்த புகைபப்டங்கள் அருமையாக இருந்தன. பெரும்பாலான படங்களில் படச்சட்டம் சரியாக அமைந்திருந்தது. ஏதாவது ஒரு பொருளை முன்னால் கொன்டுவந்து எடுத்திருப்பது அவளுடைய கற்பனையைக் காட்டுகிறது. அழகான இடத்தில் வாழ்கிறீர்கள். வாழ்த்துக்கள்

 sri and sri

chennai

********


 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

இன்று காலை சில நிமிடத் துளிகள் என்னுடன் வார்த்தையாடிமைக்கு நன்றி. அப்பொது சொன்னது தான். தங்களின் “ஒவ்வொருநாளும்” படித்தேன். தங்களின் வழக்கமான எழுத்து நடையிலிருந்து விலகி யாதார்த்தமாகவே சுவையாக இருந்ததாய்ச் சொல்லலாம்.

வழக்கமாய் தங்களின் வாக்கிய அமைப்புகள், ” அட இப்படியுமா ஒரு மனிதனுக்குள் Thought Process ஓடும்” என்று எண்ண வைக்கும்.

இவ்வளவு ஆழமாய் யோசித்துக் கொண்டே இருக்க இயலுமா என்ற சந்தேகத்தைக் கூட எழுப்பியிருக்கிறது.

இது மாதிரி எதுவுமே இல்லாமல் சாதாரணமாய் “ஒவ்வொருநாளும்” நன்றாக இருந்தது

என்னைப் போன்றவர்கள் இப்படியான சாதாரணத்தை சிலாகிக்க எல்லா நாளையும் ஒவ்வொருநாளாய் சமைத்துத் தரலாகாதா?

அன்புடன்,

சந்திரமௌளீஸ்வரன்

Contact Details:
V.Chandramowleeswaran
Mobile :+91 98406-56627
————————————–
http://mowlee.blogspot.com/
www.mowlee.blogspot.com
http://vcmowleeswaran.googlepages.com/tamil
http://vcmowleeswaran.wordpress.com

http://cartoonkannan.wordpress.com
http://cartoonkannan.blogspot.com

முந்தைய கட்டுரைதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணன் கடிதம்