ஒவ்வொரு நாளும்:கடிதங்கள்

கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் சுயசரித்திரக் குறிப்புகளை [ ஒவ்வொருநாளும் ] படித்தேன். நீங்கள் உங்களுக்கு பொருத்தமான முறையில் ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டு அமைதியாக வாழ்ந்தபடி உங்கள் வேலையை தீவிரமாகச் செய்கிறீர்கள். இந்த மாதிரியான வாழ்க்கை அமைந்ததை அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் அப்படி ஆவதில்லை. என்னுடைய ஊர் உடுமலை. எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். நான் அங்கே மலைகளில் ஏறுவதை மிகவும் விரும்பினேன். இப்போது நான் பூனாவில் இருக்கிறேன். இந்த ஊர் மிகவும் நெரிசலானது. அழுக்கும் குப்¨ப்பம் சத்தமும் உடையது. நான் உடுமலைக்கு போவது நடக்கவே நடக்காது. நான் தினமும் பத்து மணிநேரம் வேலைசெய்ய வேண்டும். இப்படி இருக்கும்போது எப்படி நான் என் வாழ்க்கையை திட்டமிட்டுக்கொள்ள முடியும்? எனக்குப்பிடித்தமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது? கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டுவதை மட்டுமே நான் செய்ய முடியும். நடுநடுவே கொஞ்ச நேரம் கண்டுபிடித்து எதையாவது படிப்பேன். நான் உங்கள் புத்தகங்களை படித்ததே இல்லை. இந்த இணையதளத்தை மட்டும்தான் படிக்கிறேன். திண்ணை தவிர இதை மட்டும் படிக்கத்தான் எனக்கு நேரம் இருக்கிறது. ஆகவே நேரம் கிடைக்கிறவர்கள் அதை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்று சொல்லுங்கள் அதுதான் சரி.

பழனிச்சாமி சண்முகம்

****

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் அன்றாட வாழ்க்கையைப்பற்றிய கட்டுரை நான் மிகவும் விரும்பிப் படித்த கட்டுரை. அன்றாடச் செயல்களில் உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்பதை நாம் கண்டுபிடித்தால் வாழ்க்கை மிகவும் இனிமையாக ஆகிவிடும் என்று எனக்கு தோன்றியது. எட்டாம் வகுப்பு பாடத்தில் ‘டாம் வைட் வாஷஸ் தி ·பென்ஸ்’ என்ற கதை இருந்தது. மார்க் டிவைன் எழுதிய கதை என்று நினைக்கிறேன். டாம் ஒரு சுவரை வெள்ளையடிப்பதை ஒரு விளையாட்டாக மாற்றி விடுகிறான். அதற்காக பையன்கள் அவனுக்கு பணமும் பரிசுகளும் அளித்து வெள்ளையடிக்க வருகிறார்கள். வாழ்க்கைக்கான முக்கியமான பாடம் இதிலே இருக்கிறது என்று நினைக்கிறேன். நல்ல கட்டுரை.

சாமிநாதன் குருசாமி

**

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் தினசரிவேலை பற்றி எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் மனைவியும் வாசித்தாள். ரசித்து வாழ்கிறார் என்று என்னிடம் சொன்னாள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. பத்துவருடம் முன்பு நான் என் நண்பர்களுடன் அந்த பகுதிக்கெல்லாம் வந்திருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை. மிகவும் அழகான இடம்தான். குமாரகோயிலுக்குப் போகும் வழியில் குளங்களில் தாமரைகள் பூத்துக் கிடந்ததை நினைவில் வத்திருக்கிறேன். குமாரகோயிலில் முருகன் சிலைகூட மிகவும் அழகாக இருந்தது. படிகளில் ஏறியதுமே மூல விக்ரகம் கண்ணில் படும். நேரத்தை திட்டமிடுவதன் வழியாக சிறிய வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. நீங்கள் எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. நீங்கள் எழுதுவதற்கு உங்கள் வாழ்க்கை மிகவும் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் அப்படி வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

குமார் அழகப்பன்

**
அன்புள்ள ஜெ,

நீங்கள் நாய்களைப் பற்றி எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். நான் ஒரு லாப்ர்டார் ஒரு ஜெர்மன் ஷெபர்ட் ஒரு டால்மேஷன் ஆகிய நாய்களை வைத்திருக்கிறேன். வீட்டுக்கு வந்ததுமே நாய்களுடன் கொஞ்ச நேரம் செலவிடும்போது நம்முடைய மனசு மிகவும் லேசாகிவிடுகிறது. நாய்களைப்பற்றி நீங்கள் சொன்னது மிகவும் உண்மை. அவற்றின் தலையில் தடவுவது அவசியம். அவற்றை படுக்க வைத்து அடிவயிற்றை தடவிக்கொடுக்கலாம். அப்போது நாய்கள் சின்ன குட்டிகளைப்போல நடந்துகொள்ளும். அந்த கொஞ்சலும் நாய்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொருநாளும் நாய் என்ன சாப்பிடுகிறது எவ்வளவு சாப்பிடவில்லை என்று நாயின் உரிமையாளர் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும். அது மிகவும் முக்கியம். வேலைக்காரர்களை வைத்து நாயை வளர்ப்பது போல முட்டாள்தனம் வேறு இல்லை. நீங்கள் லாப்ரடார் நாய் வளர்ப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.நாய்களிலேயே மிகவும் நட்புள்ள நாய் அதுதான். நீங்கள் சொல்வதுபோல சீக்கிரமே குண்டாக ஆகிவிடும் என்பதுதான் பிரச்சினை. இதய நோய் வந்துவிடும். ஆகவே மாட்டுகறி கொழுப்பு இல்லாமல்தான் கொடுக்க வேண்டும்.கீரைகள் கொடுக்க வேண்டும். லாப்ரடர் நாய்க்கு சீக்கிரமே கண்கள் தெரியாமல் ஆகிவிடும். அதற்காக அதற்கு வைடமின் ஏ அவசியம். லாப்ரடார் நாயை வளார்ப்பது போல மகிழ்ச்சியான விஷயம் வேறு ஏதும் இல்லை.

முருகேஷ்

*

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள்  வாழ்க்கைக்கட்டுரை நன்றாக இருந்தது. நீங்கள் நல்ல உடைகளைபோடுவதில்லை என்று படித்தபோது சங்கடமாக இருந்தது. ஆனால் அப்படி இருப்பதனால்தான் உங்களால் எல்லா வகையான மக்களையும் கண்டு பழகவும் அவர்களைப்பற்றி எழுதவும் முடிகிறது. நீங்கள் சமையல்செய்வதும் துணி துவைப்பதும் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. நல்ல எழுத்தாளனுக்கு எல்லாமே கொஞ்சம் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஜெயராமன்

888

திரு. ஜெமோ அவர்களுக்கு:

“ஒன்று தேவையில்லாத பொருளில்லாத விஷயங்களில் நம் நேரம் விரயமாகிக் கொண்டிருக்கும். நாம் விரும்பும், மதிக்கும் விஷயங்களுக்கு நேரம் இல்லாமலாகும்.” – இது அப்பட்டமான/அழுத்தமான உண்மை.

உங்கள் அன்றாட வாழ்க்கை என்னை பொறாமை கொள்ள வைக்கிறது. அதில் உள்ள எளிமை உங்கள் கட்டுப்பாட்டிற்கு மிக அதிகமாக உதவுகிறது என்று எண்ணுகிறேன். தாங்கள் “The Power of Now” என்ற நூலை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதன் மையக் கருத்து “Be Here Now” என்பதே. உங்களுக்கு தெரியாமலேயே (அல்லது தெரிந்தா?) நீங்கள் அத்தகு வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு படுகிறது.

அதன் (The Power Of Now) மையக் கருத்தைக் கொண்டு நான் எழுதிய ஒரு ஜென் கதை:
http://madsmusings.wordpress.com/2008/07/20/%E2%80%9Ctake-a-shower%E2%80%9D-a-zen-story/

நன்றி,
மாது
அன்புள்ள மதன்

தங்கள் கடிதம். சிலசமயம் திரும்பிப்பார்க்கும்போது சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதன் பிரச்சினைகள்தான் எல்லாமே என்று தோன்றும். நித்ய சைதன்ய யதியிட ஒருமுறை அவர் ஏன் துறவியாக இருக்க வேண்டுமென்று கேட்டேன். தன் வாழ்நாளில் தனக்குப் பிடிக்காத ஒன்றை எக்காரணத்தாலும் செய்ததில்லை. பிடிக்காத வேலையை அக்கணமே ராஜினாமா செய்வேன். பிடிக்காத இடத்திலிருந்து உடனே கிளம்பிவிடுவேன். பிடிக்காத நூலை உடனே நிறுத்திவிடுவேன் என்றார். சுதந்திரமே துறவு! சிறிதோ பெரிதோ துறப்பிலிருந்தே சுதந்திரம் வருகிறது. தன் எல்லைகளை வகுத்துக்கொண்டால்தான் சுதந்திரம். சுதந்திரத்தை ஒட்டியே மகிழ்ச்சியும் அமைகிறது.

ஜெயமோகன்

ஒவ்வொருநாளும்

முந்தைய கட்டுரைஎன்.எச்.47- தக்கலை
அடுத்த கட்டுரைகீதை கடிதங்கள்