‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63

பகுதி ஒன்பது : பொன்னகரம்

[ 5 ]

துரோணர் நள்ளிரவில் எழுந்து வெளியே வந்ததுமே ஏகலவ்யனை நோக்கினார். வில்லாளிக்குரிய நுண்ணுணர்வால் அவன் முற்றத்துக்கு வந்ததுமே அவர் அறிந்திருந்தார். சாளரம் வழியாக அவன் முகம் தெரிந்ததையும் தன்னெதிரே இருந்த இரும்புநாழியின் வளைவில் கண்டுவிட்டிருந்தார். அந்தச்சிறுவன் யாரென்று அரைக்கணம் எண்ணிய அவரது சித்தத்தை அதற்குள் சுழன்றடித்த சுழல்காற்றுகள் அள்ளிக்கொண்டு சென்றன. பின்னர் தன்னுணர்வுகொண்டதும் அவர் வெளியே அவன் அமர்ந்திருப்பதை உணர்ந்து எழுந்து வந்து கதவைத் திறந்தார். அவன் எழுந்து கைகூப்பி நின்றான். அவர் பார்வையிலும் உடலிலும் அசைவேதும் எழவில்லை. “யார் நீ?” என்றார்.

ஏகலவ்யன் பணிந்து “நான் நிஷாதன். ஆசுரநாட்டு கருடகுலத்து அரசன் ஹிரண்யதனுஸின் மைந்தன். என் பெயர் ஏகலவ்யன்” என்றான். “ம்ம்?” என்று துரோணர் கேட்டார். “தங்கள் பாதங்களைப் பணியும் உரிமையை அளிக்கவேண்டும்” என்றான் ஏகலவ்யன். துரோணர் பேசாமல் நின்றார். ஏகலவ்யன் குனிந்து அவர் பாதங்களைத் தொடப்போனபோது விலகி “நில்! எதற்காக வந்தாய்?” என்றார். ஏகலவ்யன் தன் வில்லை எடுத்துக்காட்டி “இதை தங்களிடம் கற்கவந்தேன்” என்றான். “இது மலைவேடர்களுக்குரியதல்ல… நீ செல்லலாம்” என்றார் துரோணர். “உத்தமரே…” என ஏகலவ்யன் தொடங்க “மூடா, வில்வேதம் தேர்ந்தவர்கள் மட்டுமே தீண்டத்தக்கது இது… செல்!” என்று துரோணர் உரக்கச் சொன்னார். முதல் பார்வைக்குப்பின் அவர் அவனை நோக்கி ஒருகணம்கூட பார்வையை திருப்பவில்லை.

ஏகலவ்யன் வில்லின் நாணை இழுத்தபோது அவர் உடலில் அந்த ஒலி எழுப்பிய அசைவைக் கண்டான். அவனுடைய முதல் அம்பு காற்றிலெழுந்ததும் அடுத்த அம்பு அதைத் தைத்தது. மூன்றாவது அம்பும் முதலிரு அம்புகளுடன் மண்ணிலிறங்கியது. “ம்ம்” என்று துரோணர் உறுமினார். “மலைவேடனுக்கு இதுவே கூடுதல். செல்!” என்றார். “உத்தமரே, இந்த வில்லின் தொழில் இதுவல்ல என அறிவேன். மூன்று அம்புகளும் ஒரே சமயம் எழும் வித்தை இதிலுள்ளது. அதை நான் கற்கவேண்டும். தாங்கள் அதை எனக்கு அருளவேண்டும்” என்றான். துரோணர் சினத்துடன் “வேடனுக்கு எதற்கு வில்வேதம்? இனி ஒரு கணமும் நீ இங்கிருக்கலாகாது… செல்!” என்றார்.

“நான் வித்தையுடன் மட்டுமே இங்கிருந்து செல்வேன். இல்லையெனில் இங்கேயே மடிவேன்” என்றான் ஏகலவ்யன். துரோணர் பல்லைக்கடித்து “சீ!” என்றபின் உள்ளே சென்று கதவைமூடிவிட்டார். ஏகலவ்யன் அங்கேயே அமர்ந்திருந்தான். காலையில் அஸ்வத்தாமன் எழுந்ததும் அவனைப்பார்த்துவிட்டான். இரவில் நடந்த உரையாடலை அவன் கேட்டிருந்தான் என்பதை அவனுடைய பார்வையிலேயே ஏகலவ்யன் உணர்ந்தான். துரோணர் எழுந்து வெளியே வந்ததும் அஸ்வத்தாமன் அவர் பின்னால் சென்றான். ஏகலவ்யன் இடைவெளிவிட்டு அவர்களைத் தொடர்ந்தான்.

ஒரு சொல்கூடப்பேசாமல் தலைகுனிந்து துரோணர் நடந்தார். அவர் நீராடி எழுந்து திரும்பும்போதும் ஏகலவ்யன் பின்னால் இருந்தான். அவர் குடிலுக்கு மீண்டதும் அஸ்வத்தாமன் அவருக்கு உணவை எடுத்துவைத்தான். அவர் அந்த தாலத்தையே சற்றுநேரம் நோக்கிவிட்டு எழுந்துகொண்டார். அஸ்வத்தாமன் ஓடிச்சென்று அவருக்கு புலித்தோலை எடுத்துப்போட்டான். அவர் அதன் மேல் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டார்.

அவர்மீது காலைவெளிச்சம் பரவியது. அவரது நரையோடிய கூந்தலும் தாடியும் ஒளிவிட்டன. அப்பால் கைகளைக் கட்டியபடி அஸ்வத்தாமன் அவரையே நோக்கியபடி நின்றுகொண்டிருந்தான். நேர்முன்னால் ஏகலவ்யன் காலைமடக்கி நாய்போல அமர்ந்து அவரை நோக்கிக்கொண்டிருந்தான். காலையொளி எழும் தடாகம்போலிருந்தார் துரோணர். அவரது சருமம் செவ்வொளிகொண்டிருந்தது. ஆனால் உதடுகள் நடுங்குவதையும் கைவிரல்கள் அதிர்வதையும் ஏகலவ்யன் கண்டான். மூடிய கண்களுக்குள் கருவிழி உருண்டுகொண்டே இருந்தது.

சற்றுநேரத்தில் தலையை அசைத்து அவர் பல்லைக்கடித்து தன் கைகளை நோக்கியபின் எழுந்து நேராக காட்டுக்குள் சென்றார். அஸ்வத்தாமன் அவர் பின்னால் செல்ல ஏகலவ்யன் தொடர்ந்து சென்றான். அவர் விரைந்த நடையுடன் காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தார். புதர்களை ஊடுருவிச்சென்று அடர்ந்த இலைத்தழைப்புக்குள் நுழைந்து தர்ப்பைக்காடு நோக்கிச் சென்றார். அருகே கங்கை பெருகிச்சென்றுகொண்டிருக்க தர்ப்பைக்காட்டில் காற்றும் அலைகளுடன் ஒழுகியது.

துரோணர் தர்ப்பைக்காட்டுக்குள் சென்று புல்லில் முகம் அழுத்தி குப்புறப்படுத்துக்கொண்டார். அவர் முழுமையாகவே புல்லுக்குள் மறைய அவர் இருக்குமிடம் ஒரு வெற்றிடமாகவே தெரிந்தது. சிறிய மைனாக்கள் இரண்டு புதருக்குள் இருந்து எழுந்து அவரை நோக்கி வந்து சுற்றிச்சுற்றிப் பறந்து குரலெழுப்பின. பின்னர் அப்பால் கிளையில் சென்று அமர்ந்துகொண்டன. ஏகலவ்யன் அங்கே நின்றபடி அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவனருகே நின்ற அஸ்வத்தாமன் அவனை ஒரு கணம் கூட திரும்பிநோக்கவில்லை. அவ்வப்போது ஒலியெழுப்பியபடி காற்று வந்து அஸ்வத்தாமனின் ஆடையைச் சுழற்றி கடந்துசென்றது.

துரோணர் “அன்னையே” என்று முனகியபடி புரண்டுபடுத்தார். அஸ்வத்தாமன் பல்லைக்கடித்து ஒரடி எடுத்துவைத்தபின் அப்படியே நின்றான். “அன்னையே!” என்று துரோணர் மீண்டும் குரலெழுப்பினார். வரும்வழியில் வில்லுடன் ஓடியவனைத்தான் ஏகலவ்யன் எண்ணிக்கொண்டான். அவன் உடலில் தைத்த அந்த விஷ அம்புதான் இவருடலிலும் என்று எண்ணிக்கொண்டான். அதை எடுத்து குளிர்ந்த பச்சிலைச்சாறால் அந்தப்புண்ணை ஆற்றமுடிந்தால் நன்று. அவனுடைய மலைக்குடிகளில் ஆழ்ந்த புண்ணையும் ஆற்றும் குலமருத்துவர்கள் உண்டு. அவன் தன் கற்பனைகளில் அவரது கலைந்த தலையை தன் மடிமேல் எடுத்து வைத்துக்கொண்டான். அவரது கால்களை தன் மார்போடணைத்துக்கொண்டான். “என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் குருநாதரே, தங்கள் வலியனைத்தையும் எனக்களியுங்கள் உத்தமரே” என்று கூவிக்கொண்டான்.

மாலைவரை அங்குதான் கிடந்தார் துரோணர். இரவு கனத்துவர அஸ்வத்தாமன் திரும்பி அவனைநோக்கியபின் சிலகணங்கள் தயங்கிவிட்டு குருகுலத்தை நோக்கிச் சென்றான். மீண்டு வரும்போது அவன் கையில் ஒரு பந்தம் இருந்தது. அதைக்கொண்டு அவன் ஒரு சிறிய நெருப்பை உருவாக்கினான். ஏகலவ்யன் அந்தத் தழலை நோக்கிக்கொண்டு அப்படியே நின்றிருந்தான். அந்தத் தழல்செம்மையில் தர்ப்பையின் இதழ்களும் தழல்கள் போலத் தெரிந்தன. அதன் மீது அவர் எரிந்துகொண்டே இருப்பதாகத் தோன்றியது. நெருப்பு கனலாகியது. அஸ்வத்தாமன் அதனருகே வில்லுடன் நின்றுகொண்டே இருக்க ஏகலவ்யன் அசைவில்லாது நின்றிருந்தான். காலைக்குளிர் எழுந்தது. விடிவெள்ளி கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல தெரிந்தது. கரிச்சான் காட்டுக்குள் இருந்து ஒலித்தபடி காற்றில் எழுந்து இருளில் நீந்தியது.

துரோணர் எழுந்து அவர்கள் இருவரையும் பார்க்காதவர் போல கங்கை நோக்கிச் சென்றார். தர்ப்பைத்துகள்களும் மண்ணும் படிந்த கரிய குறிய உடலுடன் அவர் ஒரு நிஷாதனைப்போலத் தோன்றினார். அவரைக் கண்ட முதற்கணமே எழுந்த அக எழுச்சிக்கான காரணம் அதுவா என ஏகலவ்யன் எண்ணினான். அவர் ஒரு பிராமண குருநாதரல்ல, ஆசுரநாட்டின் ஒரு குலமூத்தார் என அவன் அகம் எண்ணிக்கொண்டதா? அவனைக் கண்டதும் அவரது அகமும் அதைத்தான் நினைத்ததா? அவன் அவரைப் பின் தொடர்ந்து சென்றான். அவனுக்கு முன்னால் அஸ்வத்தாமன் சென்றுகொண்டிருந்தான்.

துரோணர் நீரில் இறங்கியதும் எங்கு வந்தோம் என்ன செய்கிறோம் என திகைத்தவர் போல சிலகணங்கள் அசையாமல் நின்றார். குனிந்து நீரைநோக்கினார். நீரிலாடும் அவரது படிமத்தின் விழிகள் ஏகலவ்யன் விழிகளை சந்தித்தன. அலையிலாடிய அவர் முகம் எதையோ சொல்ல வாயெடுப்பதுபோல, புன்னகையில் வாயும் கன்னமும் விரிவதுபோலத் தோன்றியது. ஏகலவ்யன் அவனை அறியாமலேயே புன்னகைசெய்தான்.

சினந்து திரும்பிய துரோணர் “நான் உன்னிடம் சொன்னேனே, உனக்கு என்னால் கற்பிக்கமுடியாதென்று. சென்றுவிடு… இக்கணமே சென்றுவிடு” என உரத்த உடைந்த குரலில் கூவினார். “நீசா, நிஷாதா, நீ வில்வேதம் கற்று என்ன செய்யப்போகிறாய்? குரங்குவேட்டையாடப்போகிறாயா?” அவர் மூச்சிரைப்பதை, நீட்டிய அவரது கரம் நடுங்குவதை ஏகலவ்யன் கண்டான். “உன் நாடு மகதத்தின் சிற்றரசு. நீ நிஷாதன். அஸ்தினபுரியின் எதிரி நீ. அஸ்தினபுரியின் ஊழியனாகிய நான் உனக்கு கற்பிக்கமுடியாது.”

“உத்தமரே, நான் தங்கள் ஆணைக்கு கட்டுப்படுகிறேன். தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் என் வேதமாகவே கொள்கிறேன்” என்றான் ஏகலவ்யன். “சீ! இழிபிறவியே, உன்னிடம் நான் சொல்கோர்ப்பதா? விலகு. உனக்கு நான் அளிக்கும் ஞானம் என்றேனும் அஸ்தினபுரிக்கும் ஷத்ரியர்களுக்கும் எதிராகவே எழும்… ஒருபோதும் உனக்கு நான் கற்பிக்கமுடியாது” என்றார் துரோணர்.

ஏகலவ்யன் கூப்பிய கைகளுடன் கலங்கி வழிந்த கண்களுடன் நின்றான். அவனை நடுங்கும் தலையுடன் நோக்கிய துரோணர் குனிந்து கங்கையில் ஒரு கைப்பிடி நீரை அள்ளி “இதோ கங்கையில் ஆணையிடுகிறேன். உனக்கு நான் குருவல்ல… போ” என்றார். ஏகலவ்யன் திகைத்து அந்த நீர்ப்படிமத்தை நோக்கினான். அதற்குள் ஒளிவிடும் ஓர் வில்லை அவனை நோக்கி நீட்டியபடி அவர் நின்றுகொண்டிருந்தார்.

அவன் அவரை நோக்கி “உத்தமரே” என்றான். “போ! போ!” என்று துரோணர் மீண்டும் கூவினார். “செல்கிறேன் குருநாதரே… இனி தங்கள் முன் வரமாட்டேன். என் பிழைகளை பொறுத்தருள்க!” என்று சொல்லி நிலம் தொட்டு வணங்கி ஏகலவ்யன் திரும்பி கங்கைமேட்டில் ஏறி தர்ப்பை மண்டிய கரைக்குள் நுழைந்தான்.

நெடுநேரம் அவன் சென்றுகொண்டே இருந்தான். எங்குசெல்கிறோம் என்ற உணர்வே இல்லாதவன் போல. பின்பு மூச்சுவாங்க நின்றபோது அவன் தனக்குள் துயரமோ வஞ்சமோ இல்லை என்பதை, ஒரு வியப்பு மட்டுமே இருப்பதை உணர்ந்தான். அப்படியே ஒரு சாலமரத்தடியில் சென்று அமர்ந்துகொண்டான். கங்கை அசைவேயற்றதுபோல கிடந்தது. அதன்மேல் பாய்கள் புடைத்த படகுகள் மேகங்கள் போல அசைவறியாது சென்றுகொண்டிருந்தன. தலைக்குமேல் காற்றிலாடும் மரங்களின் இலைத்தழைப்பை, பறவைக்குரல்களை கேட்டுக்கொண்டிருந்தான். பின்னர் அப்படியே படுத்து கண்களை மூடிக்கொண்டு துயிலத் தொடங்கினான்.

துயின்று எழுந்தபோது மதியமாகிவிட்டிருந்தது. பசியை உணர்ந்தவனாக அவன் எழுந்து கீழே நின்ற ஒரு நாணலைப் பிடுங்கி வீசி ஒரு பறவையை வீழ்த்தினான். அம்பை கல்லில் உரசி நெருப்பெழச்செய்து அதை வாட்டி உண்டான். கைகழுவுவதற்காக கங்கைக்குச் சென்று குனிந்தபோது தன் நிழல் நீளமாக விழுந்துகிடப்பதை வியப்புடன் நோக்கியபடி எழுந்தான். நிழல் அவனுடைய அசைவைக் காட்டவில்லை. அலைகளின் வளைவுகள் சீர்பட்டதும் அவன் அப்படிமத்தைக் கண்டான், அது துரோணர்தான். கனிந்த புன்னகையுடன் அவர் அவனை நோக்கினார். அவனும் புன்னகையுடன் மிகமெல்ல “குருநாதரே” என்றான்.

அவர் மூன்றுவிரல்களைக் காட்டி ஏதோ சொன்னார். அவன் “குருநாதரே” என்று சொன்னதுமே அவர் சொல்லவருவதைப் புரிந்துகொண்டான். “ஆம், ஆம் குருநாதரே!” என்று கூவியபடி துள்ளி ஓடி மேடேறி தன் வில்லை எடுத்தான். விரல்களுக்கிடையே மூன்று அம்புகளை எடுத்துக்கொண்டு கட்டைவிரலால் பெரிய நாணையும் சுட்டுவிரலால் நடுநாணையும் சிறுவிரலால் சிறுநாணையும் பற்றி மூன்றையும் ஒரேசமயம் இழுத்து அதேகணம் வில்லை வலக்காலால் மிதித்து வளைத்து மூன்றுநாணிலும் மூன்று அம்புகளையும் ஏற்றி ஒரே விரைவில் தொடுத்தான். மூன்று அம்புகளும் அவற்றின் எடைக்கும் நீளத்திற்கும் ஏற்ப ஒன்றின் பின் ஒன்றாகச் சென்றன.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

சற்று தயங்கியபின் மீண்டும் அம்புகளைத் தொடுத்து வில்லை பக்கவாட்டில் சாய்த்து மேலே தெரிந்த கனி ஒன்றை நோக்கி விட்டான். கனமான முதல் அம்பு சென்று கனியை வீழ்த்தியது. கனி சற்றுத் தள்ளி பறந்துகொண்டிருக்கையிலேயே இரண்டாம் அம்பு அதை மேலும் முன்கொண்டு சென்றது. மூன்றாம் அம்பு மேலும் முன்னால் கொண்டு சென்றது.

மீண்டும் அம்புகளைச் செலுத்தி ஒரே இலக்கை மூன்று தொலைவுகளில் மூன்று காலங்களில் மூன்று அம்புகளால் அடிக்கும் வித்தையைத் தேர்ந்துவிட்டு ஏகலவ்யன் வில்லைத்தாழ்த்தி வானைநோக்கி தலையைத் தூக்கி அவனுடைய குலத்துக்குரிய வெற்றிக்குரலை எழுப்பினான். விடாய் அறிந்து ஓடிவந்து கங்கைநீர் நோக்கிக் குனிந்தபோது நீருக்குள் புன்னகையுடன் தன்னை நோக்கிய துரோணரைக் கண்டான்.

ஊர்கள் வழியாக மூன்று மாதகாலம் பயணம்செய்து ஹிரண்யவாகாவை அடைந்து அதன் வழியாக அவன் ஹிரண்யபதத்துக்கு மீண்டபோது அவன் கலைந்த தலையும் அழுக்குடையுமாக பித்தன்போல தனக்குள் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய குலத்தைச்சேர்ந்த ஒரு வீரன்தான் அவனை முதலில் அடையாளம் கண்டுகொண்டான். திகைத்து வாய்திறந்து நின்ற அவன் திரும்பி இருகைகளைவீசி கூச்சலிட்டபடியே ஓடினான்.

சிலகணங்களுக்குள் சந்தைவெளியே அவனைச்சுற்றிக் கூடிவிட்டது. எவராலும் பேசமுடியவில்லை. அவன் பாதங்கள் மண்ணில் பதிகின்றனவா என்றுதான் அவர்கள் விழிகளனைத்தும் பார்த்தன. அவன் கங்கையில் விழுந்து முதலைகளால் உண்ணப்பட்டுவிட்டான் என்று ஹிரண்யபதத்தில் எண்ணியிருந்தனர். அவனுக்கான அனைத்து இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டுவிட்டிருந்தன.

திரும்பி வந்த அவனை குலமூத்தார் எதிர்கொண்டழைத்து ஒன்பது அன்னையரின் ஆலயத்தில் அமரச்செய்து, வெட்டப்பட்ட கோழியின் புதுக்குருதியால் அவனை முழுக்காட்டி , ஹிரண்யவாகா நதியின் நீரால் அவனை ஒன்பதுமுறை நீராட்டி அவனுக்கு ஹிரண்யாஸ்திரன் என்று புதியபெயரிட்டு குலத்துக்குள் மீட்டனர். அவனைத் தூக்கிக்கொண்டு முழவுகளும் முரசுகளும் கொம்புகளும் முழங்க நடனமிட்டபடி மாளிகைக்கு கொண்டுசென்றனர்.

ஒற்றைமைந்தனை இழந்ததாக எண்ணிய அவன் தந்தை அவன் மறைந்த மறுநாளே படுக்கையில் விழுந்து மெலிந்து உருமாறியிருந்தார். அவன் வந்த செய்தியைக் கேட்டதும் அவன் அன்னையின் முகம் சுருங்கி கண்கள் அதிர்ந்தன. அவள் திடமான காலடிகளுடன் ஹிரண்யவாகா கரைக்கு வந்தாள். ஆலயத்து முகப்பில் அமர்ந்திருந்த அவனைக் கண்டதும் ஏனோ அவள் திகைத்து வாய்பொத்தி நின்றுவிட்டாள். மைந்தனை நெருங்கவோ தீண்டவோ ஒருசொல்லேனும் பேசவோ அவள் முற்படவில்லை. அவள் விழிகள் சற்று சுருங்கின, பின்னர் திரும்பி நடந்துவிட்டாள். அவள் குடியில் பெண்கள் அழுவதில்லை.

அவனுடைய தந்தையை கட்டிலில் இருந்து தூக்கிக்கொண்டுவந்து திண்ணையில் அமரச்செய்திருந்தனர். அவனைக் கண்டதும் அவர் நடுங்கும் கைநீட்டி ஓசையின்றி அழுதார். அவரது உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. அருகே சென்று அவர் பாதங்களைப் பணிந்த மைந்தனை அவர் குலுங்கி அழுதபடி மெலிந்த கைகளால் மார்புடன் அணைத்துக்கொண்டார். அவனிடம் அவர் “எங்கு சென்றாய்?” என்றார். “குருநாதரைத்தேடி” என்று அவன் சொன்னான். “கண்டுவிட்டாயா?” என்று அவர் கேட்டார். “ஆம், அவரை என்னுடன் அழைத்துவந்துவிட்டேன்” என்றான் ஏகலவ்யன். அவர் திகைப்புடன் அங்கே நின்ற மற்றவர்களை நோக்கினார். அவர்களும் திகைத்துப்போயிருந்தார்கள்.

மீண்டு வந்தவன் சென்றவன் அல்ல என்று அவன் தந்தை ஐயுற்றார். அவனுள் அறியாத வேறேதோ ஆன்மா குடியேறி வந்திருக்கிறது என்று அனைவருமே எண்ணினார்கள். அவன் ஒருநாள் கூட மாளிகையில் தங்கவில்லை. தன் பழைய தோழர்கள் எவரையும் தன்னிடம் நெருங்கவிடவில்லை. அன்னையிடமும் தந்தையிடமும் ஓரிரு சொற்களை மட்டுமே சொன்னான். அவன் விழிகள் அலைந்துகொண்டே இருக்க காற்றில் பறந்தெழ விழையும் துணிபோலத்தான் அப்போது அவர்களுடன் இருந்தான்.

எந்நேரமும் அவன் ஹிரண்யவாகா நதிக்கரையின் குறுங்காட்டிலேயே இருந்தான். அவன் தனக்குத்தானே பேசிக்கொண்டு வில்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான் என்றனர் அவன் தோழர்கள். அவனுடன் கண்ணுக்குத் தெரியாத எவரோ இருக்கிறார், அவரை அவன் நீருக்குள் பார்க்கிறான் என்றார்கள். அவனைக்காண அவன் குலத்தவர் கூடி வந்து மரங்களில் மறைந்து நின்று பார்த்து மீண்டனர். அவனைப்பற்றிய பேச்சே காடுகளெங்கும் இருந்தது.

முதலில் அவனைப்பற்றிய வியப்பும் அச்சமும் இருந்தது. பின்னர் அவனை அவ்வண்ணமே அனைவரும் எடுத்துக்கொண்டனர். ஹிரண்யபதம் தன் வழக்கமான தாளத்துக்குத் திரும்பியது. அவன் ஆடியில் தன்னைக்கண்ட குருவிபோல மீளமுடியாத வளையம் ஒன்றுக்குள் சென்றுவிட்டான் என்று அவன் தந்தை உணர்ந்தார். ஆனால் அவன் மானுடர் எவருக்கும் கைவராத வில்திறன் கொண்டிருந்தான். பறக்கும் பறவையின் அலகில் இருக்கும் சிறிய புழுவை மட்டும் அம்பால் பறித்தெடுக்க அவனால் முடிந்தது. அவன் அனுப்பிய அம்பு கங்கை நீரில் மிதந்த மீன்களில் பன்னிரண்டு மீன்களை கோர்த்து எடுத்து மேலே வந்து மிதந்தது. அம்பினால் அவன் செய்யமுடியாதது ஏதுமில்லை என்றனர் குலப்பாடகர்.

அவனுக்காக செய்யப்பட்ட பூசனைகளும் ஒழிவினைகளும் பயனற்றனவாயின. மலைத்தெய்வங்கள் அவனுடலில் கூடியிருந்த வில்தெய்வத்திடம் தோற்று பின்வாங்கின. அவனுக்கு அம்பும் வில்லும் சலிப்படையும் நாளுக்காக ஹிரண்யதனுஸ் காத்திருந்தார். ஒவ்வொருநாளும் அவனுடைய விரைவு கூடிக்கூடிச்செல்வதைக்கண்டு அவரது குலமூத்தார் அவன் அம்பில் தேர்ச்சிகொள்ளும்போதே அவனை ஆளும் அந்த கண்ணுக்குத்தெரியாத தெய்வம் விலகிச்செல்லும் என்றனர்.

நாட்கள் மாதங்கள் வருடங்கள் என காலம் செல்லச்செல்ல அவன் தன் வில்லுடன் மட்டுமே வாழ்ந்தான். உடலெங்கும் மண்ணும் அழுக்குமாக, நீண்டு வளைந்த நகங்களும் மட்கிய சடைமுடிக்கற்றைகளுமாக காட்டிலேயே இருந்தான். அவன் பார்வையிலும் தெய்வங்களுக்குரிய கடந்த நோக்கு குடியேறியது. அவன் இதழ்களில் தெய்வங்களுக்குரிய அனைத்தையும் அறிந்த மானுடரை எண்ணாத பெரும்புன்னகை விரிந்தது.

ஒவ்வொருநாளும் அவனைப்பற்றிய செய்திகளை அவன் தோழர்கள் வந்து ஹிரண்யதனுஸிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர் அமைதியிழந்து சினமும் கொந்தளிப்பும் கொண்டவரானார். காலையில் தன் அவைக்கு வந்த அரசியிடம் “உன் மைந்தன் அரசு சூழ்தலைக் கற்கவேண்டிய காலம் வந்துவிட்டது. இன்று அவனை பித்தன் என்று நம் குலமூத்தாரின் சபை எண்ணுகிறது. அவனை விலக்கிவிட்டு இன்னொரு குலமைந்தனை என் வழித்தோன்றலாக நீராட்டவேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்” என்றார்.

தவிப்புடன் “எக்கணமும் அதை என்னிடம் வந்து முறைப்படி அறிவிப்பார்கள். அவர்களின் ஆணையை என்னால் மீறமுடியாது” என்றார். “அவன் நான்குவருடங்களில் ஒருநாள் கூட இங்கே வந்ததில்லை. நம் முகத்தை ஏறிட்டுநோக்கியதில்லை. நம் குலமும் நகரும் இங்கிருப்பதையே அவன் அறிந்திருக்கிறானா என்று ஐயமாக இருக்கிறது…”

அரசி தலைகுனிந்து சாளரம் வழியாக வெளியே நோக்கி அமர்ந்திருந்தபின் பெருமூச்சுடன் “அவர்கள் சொல்வது முறைதானே?” என்றாள். ஹிரண்யதனுஸ் திகைத்து “என்ன சொல்கிறாய்? அவன் நம் மைந்தன்” என்று கூவினார். “ஆம், ஆனால் நம் மைந்தனைவிட நமது குலம் நமக்கு முதன்மையானது. இவன் பித்தன் என்பதில் என்ன ஐயம்? இவனிடம் இக்குலத்தின் தலைக்கோலை எந்த நம்பிக்கையில் நீங்கள் அளிக்கமுடியும்?” என்றாள்.

மேலும் சினத்துடன் ஏதோ சொல்லவந்த ஹிரண்யதனுஸ் மறுகணம் அவள் சொன்னதன் முழுப்பொருளையும் உள்வாங்கி தளர்ந்து நின்றபின் சென்று பீடத்தில் அமர்ந்துகொண்டார். அவர் விழிகளில் இருந்து நீர்வழியத்தொடங்கியது. உதடுகளை அழுத்தியபடி அவர் ஏதோ சொல்லமுற்பட்டு கையை மட்டும் அசைத்தார். அவர் நெஞ்சிலோடும் எண்ணங்களை அரசி சொல் சொல்லாக அறிந்துகொண்டாள்.

“அவர்களின் ஆணைப்படி செய்யுங்கள்” என்று அரசி மீண்டும் சொன்னாள். “அவன் இறந்துவிட்டிருந்தால் எத்தனை துயர் இருந்திருக்கும். நம் தெய்வங்கள் நம் மீது அருளுடன் இருக்கின்றன. இதோ கண்ணெதிரே நம் மைந்தன் உயிருடன் இருந்துகொண்டிருக்கிறான். அதுவே நமக்குப்போதும்.” ஹிரண்யதனுஸ் துயரத்துடன் தலையை ஆட்டி “இதற்கு அவன் இறந்திருக்கலாம். இறப்பின் துயரிலிருந்து நாம் மீண்டிருப்போம், இவனை இப்படிப் பார்க்கும் துயரத்தில் இருந்து நமக்கு மீட்பே இல்லை” என்றார். அரசி பெருமூச்செறிந்தாள்.

“நாம் இக்கட்டில் இருக்கிறோம். நேற்றுமாலை மகதத்தில் இருந்து தூதர் கிளம்பிவிட்டார் என்றார்கள். தளபதி அஸ்வஜித்தே நேரில் வருகிறார் என்றால் அது சிறியசெய்தி அல்ல” என்றார் ஹிரண்யதனுஸ். “அவர் என்னிடம் குருதிதொட்டு வில்மேல் வைத்து ஆணையிடும்படி கோருவார். மகதத்தின் ஆணையை ஹிரண்யபதம் மீறமுடியாது. ஆசுரம் ஒரு செத்த யானை. இதை இன்று எறும்புகள் எடுத்துச்செல்கின்றன… நம் முன்னோர்கள் விண்ணவர்களை ஆண்டகாலத்தில் அம்புகூட்டத்தெரியாமல் நிலக்காடுகளில் வாழ்ந்த பேதைகள் நமக்கு ஆணைகளுடன் மலையேறி வருகிறார்கள்.”

“அவரது நோக்கம் என்ன?” என்று அரசி கேட்டாள். “மகதம் உலைமேல் வைத்த நீர்க்கலம் போல கொதித்துக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள் ஒற்றர்கள். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. மாமன்னர் பிருஹத்ரதர் முதுமை எய்திவிட்டார். அவரது மைந்தர் ஜராசந்தருக்கு இளவரசுப்பட்டம் கட்ட விழைகிறார். அதற்கு அங்கே அரசசபையில் எதிர்ப்பிருக்கிறது” என்றார் ஹிரண்யதனுஸ். “ஏன்?” என்று அரசி எழுந்து அருகே வந்தாள். “அவர்தானே மணிமுடிக்குரிய முதல் மைந்தர்?” என்றாள். ஹிரண்யதனுஸ் “ஆம், ஆனால் என்றும் எங்கும் குலம்நோக்கும் முறைமை என ஒன்றிருக்கிறதே?” என்றார் .

“அவர் காசிநகரத்து அரசிக்கு பிரஹத்ரதரின் குருதியில் பிறந்தவர் அல்லவா?” என்றாள் அரசி. “ஆம். ஆனால் அவரை வளர்த்தவள் நம் குலத்தைச்சேர்ந்த ஜராதேவி. அவளுடைய குடிப்பெயராலேயே அவர் ஜராசந்தன் என்று அழைக்கப்படுகிறார். அசுரகுலத்துக் குடிப்பெயர் கொண்ட ஒருவனை ஏற்கமுடியாதென்று அங்கே ஷத்ரியர் சொல்கிறார்கள். ஷத்ரிய இளவரசியருக்குப்பிறந்த பிருஹத்ரதரின் பிற மைந்தர்கள் மூவர் இணைந்து போர்தொடுக்கவிருக்கிறார்கள். வைதிகர் சிலரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் நம்முடைய நூற்றெட்டு குலங்களும் தன்னுடன் இருக்கவேண்டும் என்று ஜராசந்தர் விரும்புகிறார்” என்றார் ஹிரண்யதனுஸ்.

“ஆம், அதுதானே முறை. அவர் எவ்வகையிலானாலும் நம் குலத்துக்குக் கடன்பட்டவர். நாம் அவரது குலம்” என்றாள் அரசி. “ஆனால் மகதத்தில் ஜராசந்தர் ஆட்சிக்குவருவதை அஸ்தினபுரி விரும்பவில்லை. ஜராசந்தர் ஆற்றல்மிக்கவர், அவருக்கு நூற்றெட்டு அசுரர்குலத்து ஆதரவும் இருக்குமென்றால் அவரை வெல்லமுடியாது என்று அஸ்தினபுரியை ஆளும் விதுரர் எண்ணுகிறார். ஒருமாதம் முன்னரே ஜராசந்தருக்கு ஆதரவாக ஹிரண்யபதத்தின் படைகள் செல்லக்கூடாது என்று சொல்லி ஆணை வந்திருக்கிறது.”

“ஆணையா?” என்றாள் அரசி. “ஆம், ஆணைபோல. ஆசுரநிலத்தின் தனிமையை அஸ்தினபுரி மதிக்கிறது என்றும் தொல்புகழ்கொண்ட ஹிரண்யாக்‌ஷரின் நாடு அவ்வண்ணமே திகழவேண்டும் என்றும் விதுரர் எழுதியிருந்தார். அதன்பொருள் நாம் மகதத்துக்கு படைகளனுப்புவது அஸ்தினபுரிக்கு எதிராகப் போர்தொடுப்பதாகும் என்பதுதான். ஆகவேதான் நான் மகதத்துக்கு ஓலை அனுப்ப சற்று தயங்கினேன். அதனால் ஜராசந்தர் அவரது தளபதியையே நேரில் அனுப்புகிறார்…”

“நாம் செய்யவேண்டியது ஒன்றே. மகதத்தின் தூதரை நம் குலக்குடியினர் அனைவரும் கூடிய அவையில் வரவேற்போம். அவர் தன் தூதை அங்கே சொல்லட்டும். அங்கிருக்கும் குலமூத்தார் என்ன சொல்கிறார்களோ அதை நாம் செய்வோம்” என்றாள் அரசி. “ஆம், அதுவே சிறந்த வழி…” என பெருமூச்சுவிட்ட ஹிரண்யதனுஸ் தெளிந்து “எப்போதுமே சரியான வழியை சொல்கிறாய்… நீ இல்லையேல் நான் இந்த முடியை தலையில் ஏந்தியிருக்கமாட்டேன்” என்றார்.

அவள் புன்னகையுடன் “நம் மைந்தன் படைகளை நடத்துவான் என்று அங்கே அவையில் சொல்லுங்கள். அவர்கள் அவனிடம் சென்று அதைக்கோருவார்கள். அவன் ஏற்காவிட்டால் அவர்களே அவனை குலநீக்கம் செய்வார்கள். நம் மைந்தனை நாமே குலநீக்கம் செய்தபழிக்கு ஆளாகவேண்டாம்” என்றாள்.

“அதுவும் சிறந்த வழிதான்” என்று சொன்ன ஹிரண்யதனுஸ் எழுந்து வெளியே தெரிந்த இளவெயிலை நோக்கியபடி “நம் மைந்தன் ஒருவேளை வில்லுடன் போர்முகப்பில் நிற்பான் என்றால் அதன்பின் மகதமும் அஸ்தினபுரியும் நம்மைக் கண்டு அஞ்சும்… ஒருவேளை ஹிரண்யபதம் இந்த பாரதவர்ஷத்தையே ஆளும்” என்றார்.

அரசி மெல்லிய புன்னகையுடன் “மைந்தர்களைப் பெற்றவர்களின் கனவுகள் முடிவதே இல்லை” என்றாள். “ஆம், கனவுகள்தான். இவனை மடியில் இருத்தி நான் கண்ட கனவுகளை நினைக்கையில் எனக்கே வெட்கம் வந்து சூழ்கிறது” என்றார் ஹிரண்யதனுஸ். அவள் முகம் கனிந்து “அனைத்தும் நிகழும். தெய்வங்கள் நம்முடன் இருக்கும்” என்றாள்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 5
அடுத்த கட்டுரைதமிழகத்தின் கற்காலங்கள்