‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59

பகுதி ஒன்பது : பொன்னகரம்

[ 1 ]

நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும் பல்லாயிரம் கோடிப் புழுக்களே, இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள். வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள். மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே நெளிந்து நெளிந்து வாழ்ந்து இறந்து பிறந்து இறந்து நீங்கள் அறிந்ததென்ன?

சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு. அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம். ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர். கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல். எழாத நாகபடம். கொல்லாத விஷம். புழுவாகி வந்ததுதான் என்ன?

நீந்தி நெளிந்து வளைந்து துடிக்கும் பல்லாயிரம்கோடிப் புழுக்களே, இப்புவியின் உயிரானவர்கள் நீங்கள். விழியின்மையில், செவியின்மையில், சிந்தையின்மையில், இன்மையில் திளைத்துத் திளைத்து நீங்களறியும் முடிவின்மையும் நெளிந்துகொண்டிருக்கிறது.

ஆழத்தில் காத்திருக்கிறீர்கள். குடல்மட்டுமேயான பெரும்பசியாக. பறப்பவையும் நடப்பவையும் நீந்துபவையும் அனைத்தும் வந்துவிழும் உதரத்தின் ஆழ்நெருப்பு.

எரியும் ஈரம். நிலைத்த பயணம். பருவடிவக் கிரணம். தன்னைத் தான் தழுவி நெளியும் உங்களால் உண்ணப்படுகின்றன அனைத்தும். உங்களையே நீங்கள் உண்கிறீர்கள். வளைந்து சுழிக்கும் கோடுகளால் பசியெனும் ஒற்றைச் சொல்லை எழுதி எழுதி அழிக்கிறீர்கள்.

வைஸ்வாநரனே, உன் விராடவடிவுக்குமேல் குமிழிகளாக வெடித்தழிகின்றன நகரங்கள், நாடுகள், ஜனபதங்கள். வந்து, நிகழ்ந்து, சென்று, சொல்லாகின்றன மானுடக்கோடிகள். சொல் நெளிந்துகொண்டிருக்கிறது. தன்னைத் தான் சுழித்து. சுழி நீட்டி கோடாக்கி. ஒன்று கோடியாகி கோடி ஒன்றாகி எஞ்சுவது இருப்பதுவேயாகி. ஈரத்தில் நெளிகிறது சொற்புழுவெளியின் பெருங்கனல்.

‘ஓம்! ஓம்! ஓம்!’ மீட்டிமுடிந்த முழவு அதிர்ந்து அடங்கியது. சிவந்த விழிகளுடன் ரௌம்யர் எவரையும் பார்க்காமல் சிலகணங்கள் விழித்தபின் கண்களை மூடிக்கொண்டார். சில கணங்கள் கழித்தே இளநாகன் தன்னைச்சூழ்ந்திருந்த காட்டின் முழக்கத்தைக் கேட்டான். பெருமூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டு அருகே எரிந்த தழல்குவையின் வெம்மையை உடலில் வாங்கிக்கொண்டான். மெல்ல முனகியபடி ரௌம்யர் தழலின் செவ்வெளிச்சத்துக்கு அப்பால் விரிந்த இருளுக்குள் மூழ்கி விலகினார்.

நீள்மூச்சுடன் பூரணர் முன்னகர்ந்து எரியும் தாடியுடன் ஒளியிலெழுந்தார். இளநாகன் அவரை நோக்கிக்கொண்டு அசைவிலாது கிடந்தான். அர்க்கபுரியில் அருணரைப்பிரிந்து அவன் சிசுபாலபுரிக்கு வந்து அங்கிருந்து கரைவணிகர்களுடன் மேதினிபுரிக்கு வந்தான். வழியெங்கும் மஹுவாவின் பித்து நிறைந்த கள்ளை அருந்திக்கொண்டே இருந்தான். குமட்டும் மலர்வாசனை மெல்லமெல்ல நறுமணமாகியது. அவன் உடலில் ஊறி குருதியில் ஓடி வியர்வையிலும் அது நிறைந்தது. அதன் பின் எங்கும் எப்போதும் அவனுக்கு அதுவே கிடைத்தது. அவனைக் கண்டதுமே இலைத்தொன்னையில் மஹுவாவை ஊற்றி ‘செல்’ என்று சொல்லி அனுப்பினர்.

“இத்தனை எளிதாகக் குடைசாயக்கூடியதா இவ்வுலகு?” என்று அவன் பொங்கி இருமி நகைத்தான். அவனுடன் இருந்த ரௌம்யரை அவன் உத்தர தோசாலியில் கண்டுகொண்டிருந்தான். “இளைஞனே, இப்புவி என்பது என்ன? விண்ணில் பறந்துசென்றுகொண்டிருந்த ஒரு பெரும் யானையின் தசைத்துண்டு இது. தெய்வங்களின் போரில் வெட்டுண்டு கீழே விழுந்து வெட்டவெளியில் நின்றது. அவர்கள் போர் முடிந்து இதை நோக்கும்போது இது பூசணம் நிறைந்து புழுத்து அடர்ந்து நெளிவதைக் கண்டனர்.” இருமி கோழையைத் துப்பி அவர் சிரித்தார் “புழுவெளி! ஆஹ்!”

ஆசுரநாட்டுக்கான பயணத்தில் பூரணர் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். “பாடுக பாடல். வென்றவனின் மறத்தையும் வீழ்ந்தவனின் திறத்தையும் தெய்வங்களின் அறத்தையும். பாட்டெல்லாம் கள்ளே. கள்ளெல்லாம் கதையே” என்று சொல்லி பூரணர் நகைத்தார். “புழுக்களனைத்தையும் தின்ற ஒரு பெரும்புழுவின் கதையை நான் அறிவேன். இறுதிப்புழுவையும் தின்றபின் அது திகைத்து நின்றது. உண்ணப்புழுவில்லாமல் முடிவிலாது கிடந்த அது தன் வாலை தான் விழுங்கியது. ஓம் ஓம் ஓம்!”

பொருளின்மையின் விளிம்பில் நின்று இப்பாலும் அப்பாலுமென தத்தளிக்கும் பாடல்களையே ரௌம்யர் பாடினார். வெறும் வார்த்தைகள். எதையும் சுட்டாத விவரணைகள். பிறந்து அக்கணமே காற்றில் கரைந்து மறைந்தது. தெளியத்தெளிய மதுவருந்தியபடி மலைக்குடிகள் வாழ்ந்த காடுகளின் வழியாகச் சென்றனர். “சித்தம் ஒரு பெரும்புழு. அதை உலரவிடக்கூடாது. வற்றும்தோறும் கள்ளூற்றுவோம்” என்று ரௌம்யர் கூவ பெரிய மரக்குடுவையில் மஹுவாக்கள்ளை வைத்திருந்த மலைக்குடிப்பெண் வாயைப்பொத்தி நகைத்தாள். “புழுக்களே, சிறகின்மைக்காக குடியுங்கள். காலின்மைக்காக குடியுங்கள். சொல்லின்மைக்காக குடியுங்கள். எஞ்சுவதேதுமில்லாதவர்களே அந்த விடுதலையை மஹுவாவால் கொண்டாடுங்கள்!”

காட்டுச்சாலையின் ஓரம் தெரிந்த பாறையின்மேல் சுள்ளி அடுக்கி கல்லுரசி நெருப்பிட்டு சூழ்ந்து அமர்ந்ததும் ரௌம்யர் பாடத்தொடங்கினார். “வென்றவனைப்பாடும் சூதர்களே, உங்கள் சொற்களில் பொன் விளைக. உங்கள் மனைவியரில் மைந்தர் விளைக. உங்கள் கன்றுகளில் அமுது எழுக. உங்கள் நிலங்களில் பசுமை நிறைக. வீழ்ந்தவனைப்பாடும் சூதர்களே, உங்கள் சொற்களில் குருதி விளைக. உங்கள் மனைவியரில் வஞ்சம் கருவுறுக. உங்கள் கன்றுகளில் குருதி ஊறுக. உங்கள் நிலங்களில் நடுகற்கள் எழுக!”

“வென்றவனையும் வீழ்ந்தவனையும் தழுவி நின்றாடும் வெற்றுக் காலத்தைப் பாடும் சூதர்களே, உங்கள் சொற்களில் இருள் நிறைக. உங்கள் மனைவியரில் மறதியும் கன்றுகளில் காயும் நிலங்களில் பாழும் விளைக. உங்கள் கள்குடங்களோ என்றும் வற்றாதிருப்பதாக! ஆஹாஹ்ஹா!” ரௌம்யர் வெடித்து நகைத்துக்கொண்டு நடுநடுங்கும் கைகளை விரித்தார். காறித்துப்பி தவழ்ந்துசென்று தன் முழவை எடுத்தார். “காலரூபிகளே, கனிவறியா புழுக்களே! இதோ என் பாடல்!”

இளநாகன் தன்னை நோக்கி இறங்கி வந்த விண்மீன்களை நோக்கினான். அவை இறங்கி தாழ்ந்து மிக அருகே வந்தன. அவன் பொங்கிப்பொங்கி நகைத்துக்கொண்டு அவற்றை கையால் அள்ளப்போனான். அவை ஒளிரும் புழுக்களென்று அறிந்தான். கரியசதைச்சதுப்பின் அழுகலில் அவை நெளிந்து திளைத்தன. சிரித்துக்கொண்டு அவன் அவற்றை அள்ளப்போக அவை விலகின. அவன் மேலும் மேலும் கைநீட்ட அவன் படுத்திருந்த பூமி பெரும் படகுபோலச் சரிந்தது.

அவன் நகைத்தபடி அதைச் சரித்துச் சரித்துக்கொண்டு செல்ல அது முற்றிலும் கவிழும் கணத்தில் அவனுக்கு மறு எல்லையில் நெடுந்தொலைவில் இடி என ஓர் முழவோசை விழுந்தது. அவனிருந்த பூமி அதிர்ந்தது. மேலும் மேலும் முழவொலிகள் பெரிய கற்பாறைகள் போல விழுந்துகொண்டே இருந்தன. அவற்றின் அதிர்வை ஏற்று ஏற்று பூமி சமன் பட்டது. அப்பால் அந்த முழவோசைகள் பெரிய மலைபோல எழுந்து நின்றன. அதன் அடிவாரத்தில் நெருப்பிட்டு பூரணர் அமர்ந்திருந்தார். அவன் எழுந்து அவர் அருகே சென்று புன்னகைத்தான். அமர்ந்துகொள் என அவர் கைகாட்டினார். அவன் புன்னகை செய்தான்.

“இது மகாபலி ஆண்ட மண் என்கிறார்கள்” என்றார் பூரணர். “ஆசுரநாடு என இதை புராணங்கள் சொல்கின்றன. மகாபலியின் மகோதயபுரம் இங்குதான் இருந்தது என்கிறார்கள். இன்று ரிக்‌ஷக மலையிலும் அதைச்சுற்றிய காடுகளிலுமாக நூற்றெட்டு மலைக்குடிகள் வாழ்கின்றன. அவர்களனைவருக்கும் முதல்மூதாதையென மகாபலி குடிமையங்கள் தோறும் மண்ணுருவாக அமர்ந்திருக்கிறார். ஆவணிமாதம் திருவோண நாளில் அவருக்கு ஊனும் மஹுவாக் கள்ளும் படைத்து குலம்கூடி வணங்குகிறார்கள்.”

“மகாபலி மண்ணின் ஆழத்தை நிறைத்து விரிந்திருப்பதாக அவர்கள் சொல்வார்கள். மண்ணை அகழ்ந்துசென்றால் அவரது பாறையாலான உடலில் சென்று தொடமுடியும். மாபெரும் கிழங்குபோல அவர் மண்ணுக்கடியில் முடிவில்லாது விரிந்துகிடக்க அவரது உடலில் இருந்தே அனைத்து மரங்களும் பாறைகளும் மலைகளும் முளைத்தெழுந்திருக்கின்றன. மரங்களில் செம்மலர்களாகவும் பாறைகளில் செம்பாசியாகவும் மலைகளில் செம்முகில்களாகவும் எழுவது அவரது குருதி. மரங்களின் கனிகளும் பாறையின் ஊற்றும் மேகங்களின் மழையும் அவரது கருணை.”

இளநாகன் விழுந்துகொண்டே இருப்பதாக உணர்ந்தான். இருள் பசைபோல அவனை உள்ளிழுத்துச் சூழ்ந்து அழுத்தி மேலே பொழித்து விழுங்கி விழுங்கிக்கொண்டு சென்றது. கல்லால் ஆன மடியொன்றில் அவன் விழுந்தான். அது தசையின் வெம்மைகொண்டிருந்தது. அவன் புரண்டு அதில் முகம்புதைத்துக்கொண்டபோது ‘தூங்கு குழந்தாய்’ என்னும் குரலைக் கேட்டான். தெரிந்த குரல். ‘நீங்கள் யார் எந்தையே?’ என்றான். ‘நான் ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன்’ என்றது குரல்.

மறுநாள் வெயிலெழும்போதே அவர்களும் எழுந்தனர். மலைச்சுனையில் நீராடி குடுவையில் எஞ்சிய மஹுவாவை அருந்தி காட்டுக்கிழங்குகளையும் காய்களையும் பறித்து உண்டு நடக்கத் தொடங்கினர். ரௌம்யர் தன்னுள் ஆழ்ந்து தலைகுனிந்து நடக்க பூரணர் சொல்லிக்கொண்டே வந்தார் “ஆசுரநாட்டின் எல்லைக்குள் ஷத்ரியர் நுழையமுடியாது. அவர்களின் கால்கள் இங்கே படுமென்றால் இங்குள்ள அனைத்துப் பூச்சிகளுக்கும் விஷக்கொடுக்குகள் முளைக்கும், அனைத்து நதிகளிலும் விஷம் பெருக்கெடுக்கும், காற்றில் விஷமூச்சு பறக்கும் என்கிறார்கள்.”

“மண்ணில் நுழைந்த மகாபலி மாமன்னரின் ஆணை அது” என்றார் பூரணர். “விண்ணெழுந்து செல்பவர்கள் மானுடரின் மூதாதையர். அசுரகுலத்து மூதாதையர் சருகுகள்போல விதைகள்போல மண்புகுகிறார்கள். விண்ணுலகமென்பது அவர்களுக்கில்லை. வேர்களும் புழுக்களும் வாழும் கீழுலகமே அவர்களுக்குள்ளது. எனவே நெருப்பல்ல, நீரே அவர்களின் தூதன். வேள்வித்தீயில் அவர்கள் அவியிடுவதில்லை. ஓடும் நீரில் பலியை கரைக்கிறார்கள். துயரெழுந்தால் விண்நோக்கி அவர்கள் கைவிரிப்பதில்லை, மண்மேல் முகம்பொத்தி வீழ்ந்துவிடுகிறார்கள். ஆசுரம் விண்ணற்ற நாடு. வானவர் குனிந்து அஞ்சிநோக்கும் பெருங்காடு.”

மகாபலியின் கதையை பூரணர் சொன்னார். “ஆழத்தில் நெளியும் புழுக்கள் அன்றொருநாள் மண்ணிலிறங்கி வந்த ஒருவனைக் கண்டன. கோடிக் குவிநுனிகள் அவன் உடலைத் தொட்டும் வருடியும் முகர்ந்தும் அவனை அறிந்தன. ‘யார் நீ?’ என்றான் புழுக்களின் விராட ரூபன். ‘நான் மண்ணிலிறங்கிய இன்னொரு புழு. இனி உங்கள் பேருலகில் முடிவிலிவரை நெளிவேன்’ என்றான் அவன். ‘உன் பெயரென்ன? இங்கு எவரும் உயிருடன் வருவதில்லை? உணவை உண்ணும் வாய் எங்களுக்கில்லை’ என்றான் விராடன்.

‘என் பெயர் பலி. என் எல்லையற்ற வல்லமையால் என்னை மகாபலி என்றனர் மண்ணோர்’ என்று அவன் சொன்னான். ‘பிரம்மனில் பிறந்த மரீசியின் மைந்தனாகிய காசியபபிரஜாபதிக்கு திதியில் பிறந்தவர்கள் தைத்யர்கள். எங்களை அசுரர்கள் என்றனர் விண்ணோர். அசுரகுலத்து உதித்த ஹிரண்யகசிபுவின் மைந்தர் பிரஹலாதர். அவரது மைந்தர் விரோசனரின் மைந்தன் மகாபலியாகிய நான். அசுரகுலத்தின் பேரரசன். விண்ணோர் அஞ்ச மண்ணாண்டவன். மூத்தோர் கண்ட சொற்களெல்லாம் என் மாண்பு கூறவே என்றானவன்.’ மகாபலி தன் கதையைச் சொல்ல விராடன் முடிவிலா நெளிவாகக் கேட்டிருந்தான்.

பூரணர் சொன்னார் “சாக்‌ஷுஷ மன்வந்தரத்தில் மகோதயபுரத்தை தலைநகராக்கி ஆண்ட அசுரகுலத்து மாமன்னனை மகாபலி என்றனர். அசுரகுலத்து பேராசான் சுக்ரர் அவன் அவையிலமர்ந்தார். நூறு மலைகளை கோட்டைகளாகக் கொண்ட மகோதயபுரம் பொன்னாலான மாளிகைகளில் மணிகளே ஒளிவிளக்குகளாக அமைய விண்ணவர் வந்து இமையாவிழியால் நோக்குவதாக இருந்தது. இந்திரனின் அமராவதி அதன் முன் மணிமுன் உப்பென ஒளியிழந்தது.”

சுக்ரரின் நெறியுறுத்தலை ஏற்று நூறு அஸ்வமேத வேள்விகளைச் செய்தான் மாமன்னன் மகாபலி. அந்நூறு வேள்விகளின் செல்வத்தையும் குவித்து விஸ்வஜித் என்னும் பெருவேள்வியைச் செய்து முடித்தான். அவனை இந்திரனுக்கு நிகரானவனாக அரியணை அமர்த்தினார் சுக்ரர். வேள்விதெய்வம் நெருப்பிலெழுந்து அவனுக்கு இந்திரனின் வியோமயானத்துக்கு நிகரான உக்ரயானம் என்னும் ரதத்தையும் வஜ்ராயுதத்தையும் வெல்லும் உக்கிரம் என்னும் வில்லையும் ஒருபோதும் அம்பொழியாத இரு அம்பறாத்தூணிகளையும் காலைச்சூரியனின் ஒளிகொண்ட பிரபை என்னும் கவசத்தையும் அளித்தது.

அவன் தாதனாகிய பிரஹலாதன் எப்போதும் வாடாத சோபை என்னும் மலர்மாலையையும் குரு சுக்ரர் பர்ஜன்யம் என்னும் பெருசங்கையும் பிரம்மன் அக்‌ஷம் என்னும் ஒளிமிக்க மணிமாலையையும் அளித்தார்கள். அவற்றைச் சூடி அவன் அரியணையமர்ந்தபோது அவன் அழகைக்கண்டு அவன் அன்னை உடலெங்கும் விழிநீர் வழிய ஒரு மாமலையாக மண்ணில் எழுந்தாள். அவள்மேல் ஆயிரம் அருவிகள் ஓசையிட்டிறங்கின.

விஷ்ணுவிடம் முரண்பட்டு தேவர்கள் வலிகுன்றியிருந்த காலத்தைக் கண்டறிந்த சுக்ரர் தேவருலகை வெல்ல மகாபலியிடம் சொன்னார். நால்வகைப் படைகளுடன் மேகப்படிக்கட்டில் ஏறிச்சென்று மகாபலி விண்ணவரை போரில் வென்று இந்திரபுரியை வென்றான். அவனை பிரஹலாதரும் சுக்ரரும் சேர்ந்து மணிமுடியும் செங்கோலும் அளித்து இந்திரனின் சிம்மாசனத்தில் அமரச்செய்தனர். அறமழிந்தால் அசையும் இந்திரனின் அரியணை அவன் அமர்ந்தபின் காலத்தை அறியாத பெரும்பாறைபோல் அமர்ந்திருந்தது.

மகாபலியின் சினத்துக்குத் தப்பிய இந்திரனும் தேவர்களும் விண்ணகத்தின் எல்லைகளுக்கே ஓடினர். செவ்வொளி சிந்தும் பிரபையை மார்பிலணிந்து இடியோசை எழுப்பும் உக்கிரமெனும் வில்லை ஏந்தி உக்ரயான தேரில் ஏறி பர்ஜன்யமெனும் சங்கை ஊதியபடி மகாபலி அவர்களை துரத்திவந்தான். தப்ப வழியில்லாத தேவர்கள் மும்மூர்த்திகளையும் கூவியழைத்து அழுதனர். பின் தங்கள் அன்னையாகிய அதிதியை அழைத்தபடி கைகூப்பினர். தேவமாதாவாகிய அதிதி ஒரு பெட்டைக்கோழியாகி வெளியை நிறைக்கும் வெண்பெருஞ்சிறகுகளால் தன் மைந்தரை அள்ளி அணைத்து உள்ளே வைத்துக்கொண்டாள்.

அவள் முன் வந்து நின்று மகாபலி அறைகூவினான். ‘இக்கணமே தேவர்களை விடவில்லை என்றால் உன் சிறகுகளை வெட்டுவேன்’ என்று முழங்கிய அவன் குரலைக்கேட்டு எரிகடல் எனச் சுடர்ந்த செந்நிற அலகைக் குனித்து விண்மீன் விழிகளால் நோக்கி அதிதி தன் இறகொன்றை உதிர்த்தாள். பல்லாயிரம்கோடி யோசனை தொலைவுக்கு விரிந்தகன்ற வெண்முகிலென விழுந்த அந்த இறகின் காற்று பெரும்புயலாக மகாபலியைச் சுழற்றிக்கொண்டு வந்து மண்ணில் வீழ்த்தியது.

மைந்தருக்கு இரங்கிய அன்னை அதிதி தன் கணவரான காசியபபிரஜாபதியிடம் மகாபலியை வெல்லும் மைந்தனைப் பெறவேண்டும் என்று கேட்டாள். ‘மகாபலியை வெல்பவன் விண்ணுருவோன் மட்டுமே. அவன் உன் மைந்தனாகுக’ என்றது திசைகளாகி விரிந்துகிடந்த காசியபரின் இடிக்குரல். அவ்வண்ணம் அதிதி கருவுற்று ஒரு சிறு வெண்முட்டையை ஈன்றாள். அதைத் திறந்து வெண்ணிறச் சிற்றுருகொண்ட மைந்தன் வெளிவந்தான். மூன்றடி உயரமே இருந்த அவனை குனிந்து நோக்கி புன்னகைத்து அன்னை வாமனன் என்றழைத்தாள்.

தன்னை வெல்ல ஒருமைந்தன் பிறந்திருப்பதை சுக்ரர் கணித்த சுவடிகளிலிருந்து அறிந்தான் மகாபலி. மண்ணிலிறங்கி தன் அன்னை பூத்து நிறைந்திருக்கும் இந்த மலையடிவாரத்தை அடைந்து சுக்ரர் முன்னிற்க இறப்பை வெல்லும் மிருத்யுஞ்சய வேள்வியை தொடங்கினான். தன் அரியணையை, செங்கோலை, கருவூலத்தை, நாட்டை, உறவுகளை, வெற்றியை, புகழை அவ்வேள்வியில் மூதாதையருக்கு பலியாக்கினான். இறுதியில் எடுத்த தர்ப்பையால் தானெனும் உணர்வை பலியாக்கும்கணம் அங்கே கூனுடலும் குறுநடையும் சிறுகுடையுமாக வந்த பிராமணன் ஒருவனைக் கண்டான்.

‘நாடிலாதவன். குடியிலாதவன். நிற்கவோர் மண்ணிலாதவன். நால்வேதமறிந்த வைதிகன். எனக்கு கொடையளித்து வேள்வி நிறைவுசெய்க’ என்றான் வாமனன். வேள்விநிறைவுசெய்யும் அக விரைவில் ‘எதுவேண்டுமென்றாலும் சொல்’ என்று மகாபலி உரைக்க ‘என் குற்றடி தொட்டளக்கும் மூவடி மண் அளிப்பாயாக!’ என்றான் வாமனன். ‘அவ்வண்ணமே ஆகுக!’ என்று சொல்லி நிறைகுடுவை நீருடனும் தர்ப்பையுடனும் கிழக்கு நோக்கி நின்றான் மகாபலி. நீட்டிய வாமனனின் கையில் நீரூற்றி ‘அளித்தேன் மூன்றடி மண்ணை’ என்றான்.

கிழக்கு நோக்கி நின்று கைகூப்பிய வாமனன் ‘ஓம்’ என்று ஒலித்தான். அவ்வொலி பல்லாயிரம் இடியோசையென எழுந்து திசைசூழ இமயமுடியென அவன் உடல் எழுந்து விண்முட்டுவதை மகாபலி கண்டான். ‘ஓம்’ என மேகங்கள் ஒலிக்க அவன் சிரம் வானாகி விரிவதை அறிந்தான். ‘ஓம்’ எனும் ஒலி தன்னுள்ளே ஒலிக்க அவன் வெளியாகி நிறைவதை உணர்ந்தான். ’முதலடியால் மண்ணளந்தேன். அடுத்த அடியால் விண்ணளந்தேன். இதோ என் மூன்றாம் அடி. அதைவைக்க இடமெங்கே?’ என்ற குரலை தன் ஆப்த மந்திரம் போல ஆழத்தில் கேட்டான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

‘பரம்பொருளே, இச்சிரம் மட்டுமே இனி என்னுடையது’ என்று மகாபலி முழந்தாளிட்டு தலைகவிழ்த்தான். அதிலமர்ந்த பாதங்களுக்கு அப்பால் குரல் ஒன்று கேட்டது ‘முழுமையின் தொடுகை இது. இனி விண்ணுலகம் உனக்குரியது.’ கைகூப்பி மகாபலி சொன்னான் ‘நான் என் மூதாதையர் உறங்கும் மண்ணுக்குள் புகவே விழைகிறேன்.’ அவன் தலைமேல் அழுந்திய வானம் ‘அவ்வாறே ஆகுக’ என்றது. அவன் இருளில் அமிழும் ஒளிக்கதிர் என மண்ணுக்குள் மூழ்கிச்சென்றான்.

“ஆயிரம்கோடிப் புழுக்கள் துதிக்கை மட்டுமான யானைகளென அவனை வாழ்த்தின. அவனுடலைத் தழுவிய பல்லாயிரம் கோடி வேர்கள் அவன் உடலின் மயிர்க்கால்கள் தோறும் இறங்கி அவன் குருதியை உண்டன. அவற்றில் எல்லாம் அவன் அகம் அனலாக ஊறி ஏறி தண்டுகளில் வெம்மையாகி மலர்களில் வண்ணமாகி கனிகளில் சுவையாகியது. தன் கோடானுகோடிமைந்தரின் கால்களை காலம்தோறும் மார்பில் ஏந்திக்கொண்டிருக்கும் பெரும்பேறு பெற்றவனானான் மகாபலி.”

அன்று மாலை அவர்கள் ஓங்கிய மரங்கள் சூழ்ந்த அஹோரம் என்னும் மலைக்கிராமத்தைச் சென்றடைந்தனர். மரவுரியில் ஓடிய தையல்நூல் என புதர்களை ஊடுருவிச்சென்ற சிறுபாதையின் ஓரம் நின்றிருந்த மரத்தின் பட்டையில் ஒரு செதுக்கடையாளத்தைக் கண்ட ரௌம்யர் சுட்டிக்காட்ட பூரணர் அதை நோக்கியபின் “அவ்வழியில் ஒரு மலைக்குடி உள்ளது” என்றார். “அவர்கள் அயலவரை ஏற்பார்களா?” என்றான் இளநாகன். “பாணரை ஏற்கா பழங்குடி இல்லை” என்ற பூரணர் மேலும் அடையாளத்தை நோக்கி முன்னால் நடந்தார்.

பன்னிரு அடையாளங்களுக்குப்பின் அவர்கள் அஹோரத்தின் முகப்பில் நடப்பட்ட குடிமரத்தைக் கண்டனர். பன்றித்தலைகளும் மலர்க்கொடிகளும் பின்னிச்செல்வதுபோல செதுக்கப்பட்ட தேவதாருவின் தடி பாதையோரமாக நடப்பட்டிருந்தது. அதனருகே நின்ற ரௌம்யர் தன் முழவை எடுத்து மீட்டத்தொடங்கினார். அப்பால் மலைக்குடியின் அருகே மரத்தின் மீது கட்டப்பட்ட ஏறுமாடத்தில் முழவொலி எழுந்தது. பின் ஊருக்குள் முழவொலித்தது.

தோலாடைகளும் கல்மாலைகளும் அணிந்து, உடலெங்கும் நீறுபூசி, நெற்றியில் முக்கண் வரைந்த மூன்று மலைக்குடிமக்கள் புதர்களுக்குள் எழுந்து அவர்களை நோக்கினர். அவர்களில் முதியவர் அவர்களிடம் ஆசுரமொழியில் “யார் நீங்கள்?” என்றார். ரௌம்யர் “புழுக்கள்” என்றார். முதியவர் புன்னகைசெய்து “வருக!” என்றார். பிற இருவரும் அருகே வந்து வணங்கி அவர்களை ஊருக்குள் கொண்டுசென்றனர்.

அந்த மலைக்குடியின் அனைத்துக் குடில்களும் மரங்களுக்குமேல் அமைந்திருந்தன. வீடுகளை இணைத்தபடி சுற்றிவந்த கயிற்றுப்பாலங்கள் வானத்துத் தெருக்களென தோன்றின. மாலையில் மேய்ச்சலில் இருந்து திரும்பிய செம்மறியாடுகளை பரணில் ஏற்றி கயிற்றால் இழுத்து மேலேற்றி மரங்களுக்குமேல் அமைக்கப்பட்டிருந்த தொழுவங்களுக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். குடில்களுக்குக் கீழே தூபச்சட்டியில் தைலப்புற்களை அடுக்கிக்கொண்டிருந்தனர் சிலர். தலைக்குமேல் எழுந்த குழந்தைகள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டன.

அசுரர்களின் நூற்றெட்டு குலங்களில் ஒன்றான வராககுலத்தின் தந்தர் குடியின் தலைவராகிய பூதரின் குடிலில் அன்றிரவு அவர்கள் தங்கினர். குடில்களுக்கு நடுவே எழுப்பப்பட்ட உயர்ந்த மண்பீடத்தில் களிமண் குழைத்துச்செய்த பேருருவாக மகாபலி படுத்திருந்தார். அவர் உடலின் மீது பசும்புற்கள் முளைத்து நரம்புகள் என வேர்கள் அவர்மேல் பின்னிச் செறிந்திருந்தன.

அந்தி எழுந்ததும் அவர் முன் எண்ணைப்பந்தம் ஏற்றி ஊனுணவும் கள்ளும் படைத்து வணங்கினர். பூதரின் குடில்முன் மரப்பலகை முற்றத்தில் அமர்ந்து உணவுண்டு மதுவருந்திக்கொண்டிருந்தபோது இளநாகன் மரங்கள் வழியாக விரிந்துபின்னிய சாலையில் ஓடிவிளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களிருந்த மலைவிளிம்புக்கு அப்பால் பெரும்பள்ளமாக இறங்கிச்சென்ற மலைச்சரிவு இருளில் மறைந்து பின் ஒரு மலையாக எழுந்து மரங்கள் சூடி பெரும்பாறைகளை ஏந்தி நின்றது.

இளநாகன் அந்த மலையில் ஒரு மெல்லிய உறுமல் கேட்டதைப்போல் உணர்ந்தான். அவன் நோக்கியிருக்க உச்சிமலைப்பாறை ஒன்று அசைந்து கீழிறங்கி நின்றது. திகைத்து அவன் எழுந்தபோது பூதர் நகைத்து “அது மண்ணுக்குள் எங்கள் முதல்மூதாதை மகாபலி அசைந்தெழும் அதிர்வு” என்றார். குளிர்ந்த காற்று ஒன்று அவர்களைக் கடந்துசென்றபோது “அது அவரது நெட்டுயிர்ப்பு. எங்கள் நூற்றெட்டு குலங்களின் ஆயிரத்தெட்டு குடிகளும் அளித்த பலியை அவர் உண்டு மகிழ்கிறார்” என்றார்.

இளநாகன் “ஆம், மைந்தர்களை சிலநாள் தாதையர் உணவூட்டுகிறார்கள். பின்னர் மைந்தர்கள் முடிவிலிவரை அவர்களுக்கு உணவூட்டுகிறார்கள்” என்றான். பூதர் நகைத்து “எந்தை இம்மண்ணுக்குள் பரவி விரிந்திருக்கிறார். மிக ஆழத்தில் எங்கோ அவர் இருக்கிறார். ஆனால் அவரை மிக அருகே உணரும் தருணமொன்றுண்டு. உறவாலும் சுற்றத்தாலும் தேற்றமுடியாத, ஒளியாலும் காற்றாலும் நீராலும் ஆற்றமுடியாத, எச்சொற்களும் தொட்டுவிடமுடியாத பெருந்துயரை ஒருவன் அடைந்தான் என்றால் அவன் இந்தமண்ணில் முகம் சேர்த்து படுக்கும்போது எந்தையின் குரலைக் கேட்பான்” என்றார்.

“மாற்றிலாத பெருந்துயர் மனிதனை புழுவாக்குகிறது. தன்னைத்தான் தழுவிச் சுருளச்செய்கிறது. நெளிதலும் குழைதலும் துடித்தலுமே இருத்தலென்றாக்குகிறது. பல்லாயிரம்பேர் நடுவே தனிமை கொள்கிறான். தழலாக நீராக தவிக்கும் விரலாக அவன் ஆகிறான். அவன் குரல் அவிகிறது. வெட்டவெளியும் ஒளியும் அவனை வதைக்கின்றன. ஒளிந்துகொள்ளவும் ஒடுங்கிக்கொள்ளவும் அவன் தவிக்கிறான். புதைந்து மறைய அவன் விழைகிறான்.”

இளநாகன் “அத்தகைய பெருந்துயர் எது மூத்தாரே?” என்றான். “பெருந்துயர்கள் மூன்று. நோய், இழப்பு, அவமதிப்பு” என்றார் பூதர். “அவற்றில் முதலிரண்டும் காலத்தால் ஆற்றப்படுபவை. காலமே காற்றாகி வந்து வீசி எழுப்பிக்கொண்டிருக்கும் கனல் போன்ற பெருந்துயர் அவமதிப்பே.” குவளையில் எஞ்சிய மஹுவாமதுவை நாவில் விட்டுவிட்டு பூதர் பெருமூச்சுவிட்டார். “அத்தகைய பெருந்துயர் கொண்ட ஒருவன் ஒருமுறை இவ்வழிச்சென்றான். உயிருடன் தோல் உரித்து வீசப்பட்ட சாரைப்பாம்பு போல அவன் விரைந்தான். பின்பு மண்ணில் விழுந்து புழுவெனச் சுருண்டுகொண்டான்.”

“அப்போது எந்தை மண்கீறி எழுந்து ஒரு சாலமரமாக அவனருகே நின்று அவன் தலைமேல் தன் கைகளை வைத்தார். கலங்கியழியும் கண்களுடன் அவன் நிமிர்ந்து அந்தக் கைகளைப் பற்றிக்கொண்டான். அவன் நெஞ்சுலைய எழுந்த விம்மலால் இக்கானகம் விதிர்த்தது. எந்தையின் பெருஞ்சொல் பாறையுருளும் ஓசையாக எழுந்து மலையடுக்குகளில் எதிரொலித்தது. அவன் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து தென்திசை நோக்கிச் சென்றான்” பூதர் சொன்னார். “அவனை வழியில்கண்டு வினவிய எங்கள் குலத்தவரிடம் அவன் பெயர் கர்ணன் என்றான்.”

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைவெளியே செல்லும் வழி – 1
அடுத்த கட்டுரைஅறம் – சிக்கந்தர்