வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்

அன்புக்குரிய தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களைப்போல், ஆழ்ந்த புலமையுள்ளோர் அதைக் காசாக்க நினைக்காமல், சக மனிதர்பால் பரிவும் நம்பிக்கையும் கொண்டு சீரிய ஆக்கங்களை வலைத்தளத்தில் சற்றும் சளைக்காமல் பதிவு செய்துவருவது சாலச்சிறந்த செயலாகும் – ஊர்நடுவே பழுத்த நிழல்தரும் மரம் தான் என் மனதில் தோன்றுகிறது.

அத்துடன், தங்கள் வலைத்தளமே ஒரு பொது மேடையாக உருவாகி பன்முகத்தன்மை கொண்ட செழுமையான கருத்துக்கள் வெளிப்படுத்துவதை நம்ப இயலாததொரு செயல்பாடாக வியப்புடன் நான் காண்கிறேன். தேர்ந்த நுட்பமும் கூரிய ஞானமும் தரும் செருக்கு சற்றுமின்றி, மிகச் சாமானிய கருத்துக்களுடனும், எள்ளல்களுடனும் மற்றும் ஏசல்களுடனும்கூட உரையாடித் தெளிவிக்கும் தங்களது பண்பு போற்றற்குரியது மட்டுமல்ல, பாடமாய்க் கற்றலுக்குமுரியது.

இக்கணத்தில் நான் தங்கள் முன் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இதுபோன்றதொரு குழாம் தங்களுடன் நேரடியாக உரையாற்ற, தங்கள் உரைகேட்க, ஆண்டிற்கு ஓரிருமுறையேனும் ஒரு பொது அரங்கில் வாய்ப்பு அளிப்பீர்களா ? இது சாத்தியமல்ல என்று சுருக்குவதற்கு பதிலாக, சாத்தியக்கூறுகளுக்கு அவசியம் உண்டு என்று உணரும் பட்சத்தில், இதர தேவைகளை நாம் பங்கிட்டுச் சந்திக்கலாம். –ஜெயமோகன் ரசிகர் கூட்டம் சேர்க்கிறார் – என்ற வசையை எதிர்கொள்வது உங்களுக்கொன்றும் பெரிய கவலையளிக்கக்கூடியதொன்றல்ல. சற்றே யோசிக்கவும்.

– ஜேயார்ஸி

அன்புள்ள ஜேயார்ஸி

அப்படி ஒரு ஆலோசனையை வேறு சில நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகளை என் செலவில் அமைக்கும் நிலையில் நான் இல்லை. செலவில்லாமல் இவற்றை அமைக்கவும் இயலாது. இதுவே முக்கியமான பிரச்சினை. இன்று தமிழ்நாட்டில் எங்கே சிலர் சந்திப்பதென்றாலும் அது செலவேறிய ஒன்றாகவே உள்ளது. ஏதேனும் வேறு சந்தர்ப்பங்களை ஒட்டி சாதாரணமாக சந்திப்புகளை உருவாக்க முடிந்தால் பார்ப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைவிவேக் ஷன்பேக் சிறுகதை – 3
அடுத்த கட்டுரைகடிதங்கள்