இசை, பாடல், கண்ணதாசன் வைரமுத்து- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

விஜய் என்பவர் கொடுத்த சுட்டிகளில் பாடல்களை கேட்டேன். மிகவும் நன்றாக இருப்பதாக தோன்றுகிறது. மெட்டுக்கள் இனிமையாக இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் புதுமையான ராகங்களில் முயற்சி செய்திருக்கலாம். இது ஏற்கனவே செய்யப்பட்ட பின்னப்பட்ட வேலிகளிலிருந்து வெளிவராத ஒரு இசை முயற்சி. நன்றாக இருக்கிறது ஆனால் இளையராஜா/வித்யாசாகர் சாயல் மிக அதிகமாகத் தெரிகிறது.

இசையமைப்பாளர் தேவா ஒருமுறை சொன்னார் – இசையமைப்பாளரிடம் எதாவது ஒரு பாடலை கேசட்டில் கொடுத்து அதுபோலவே வேண்டும் என்று கேட்கிறார்கள் – அதுபோல என்ன அதையே வைத்துக்கொள் என்று பின்ணனி இசையை மட்டும் மாற்றித்தந்துவிடுகிறார்கள் – பாடல்களில் சாயல் அப்படியே இருக்கிறது என்று. இது எடுத்தாண்ட ராகங்கள் காரணமாகவும் இருக்கலாம்.

ரீதிகௌள ராகத்தை பல்வேறு பாடல்களில் பலர் பயன்படுத்தியிருந்தாலும் ரஹ்மான் கொடுத்தபோது அதை கையாண்ட விதம் அதை வேறுபடுத்திக்காட்டியது. இவர்களும் கொஞ்சம் அதிக சிரத்தை எடுத்து செய்திருந்தால் மிக நன்றாக அமைந்திருக்கும்.  இது ட்ரிக் தானே. ஓரளவு சுலபம்தான்.

இசையமைப்பாளர் விஜய்க்கு வாழ்த்துக்கள். குறிப்பாக காத்திருந்தேன் பாடலும், அழைத்தது யாரோ பாடலும் நன்றாக இருந்தது. முரளி, ஜோசப் குரல்கள் நன்று. முரளியின் குரலில் பாவங்கள் எளிதாக வரும்போல இருக்கிறது. ஜோசப்பின் குரல் ஆண்தன்மையுடன் இருக்கிறது. சிந்துஜா குரல் மிகவும் சிறப்பாக இருந்தது. அனைவருக்குமே நல்ல தெளிவான உச்சரிப்பு வாய்த்திருக்கிறது. லட்சியங்களை எட்ட வாழ்த்துக்கள்.

ஒஹ்.. சொல்ல மறந்துவிட்டேன். விஜய் சார் இசையமைப்பதோடு நிறுத்திக்கொள்வது பெட்டர் என்று தோன்றுகிறது. பாடவேண்டாமே? ஒரே ஒரு பாடலை வைத்து முடிவு செய்யக்கூடாதுதான் ஆனாலும்…!!!

-ராம்

***

அன்புள்ள ராம்

நீங்கள் சொல்வது பெரிய பாராட்டு. விஜய் மகிழ்ச்சி அடைவாரென நினைக்கிறேன். தமிழில் சினிமாப்பாட்டு தவிர பிற மெல்லிசைக்கே இடமில்லாமலிருப்பதனால் எத்தனையோ திறன்கள் வீணாகி போகின்றன

ஜெ

***

இசை பற்றிய உங்கள் பதிவினை சமீபத்தில்தான் படித்தேன் இசை நம்மை மென்மையக்குவது என்பது ஒரு புறம் கர்நாடக இசை போன்ற செவ்வியல் இசைகள் நம்மை மிகு உணர்ச்சி கொண்டவர்களாகவும் ஆக்கிவிடுகிறது என்பது என் சொந்த அனுபவம் பாலகுமாரனும் இதேபோல் .

இது பற்றி உங்கள் பார்வை என்ன

கோமதி சங்கர்

***

அன்புள்ள கோமதி சங்கர்

இதைப்பற்றி மிக கடுமையான அபிப்பிராயம் சொன்னவர் என்றால் தல்ஸ்தோய்தான். தேவையில்லாத உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு இசை நம்மை ஆளாக்குகிறது என்றார். அந்த இசையமைபபளான் அந்த உணார்ச்சிகளுக்குச் செல்ல ஒரு காரணம் அவன் வாழ்க்கையில் உள்ளது. காரணமே இல்லாமல் நாமும் அந்த மனநிலைக்குச் செல்வதற்குப் பெயர்தான் இசை என்பது கிழம் சொன்ன விமரிசனம்.

நேற்று நான் என் நண்பர் கெ.பி. வினோதுடன் பேசிக்கொண்டிருந்தேன். அபாரமான செவிப்புலன் கொண்ட ஆசாமி. சங்கீதமே தெரியாது. ஒருசிலமாதங்களுக்கு முன்னால் இணையத்தில் சும்மா கேட்க ஆரம்பித்தவர் அப்படியே உள்ளே போய் நூறு ராகங்களை அடையாளம் கண்டுகொள்பரவாக ஆகிவிட்டார். தினம் பலமணிநேரம் கேட்கிறார்.

அவரிடம் இசை குறித்து பேசிக்கொண்டிருந்தேன். இசை நம்மை மென்மையாக்குகிறது. ஒத்திசைவுகளுக்காக ஏங்குபவராக ஆக்குகிறது. ஆகவே இசை கேட்காதபோது கொஞ்சம் எரிச்சல் கொண்டவராக ஆக்கக்கூடும்

அதைவிட முக்கியமானது, இசை அறிவார்ந்த செயல்பாடுகளின் மறு தரப்பு என்பது. இசையில் மிதமிஞ்சி மூழ்கினால் பின்னர் காலம் கண்ணெதிரே காணாமல் போகும். அறிவார்ந்த ஆன்மீகமான வளர்ச்சியே இல்லாது வருடங்கள் கடந்துசெல்லும். காரணம் இசை தூய கலை.

கலையம்சம் இல்லாத வெறும் சிந்தனை நம்மை வரட்டு கர்வியாக ஆக்கும். அறிவம்சம் இல்லாத கலை நம்மை மந்தமான எளிமையான மனிதர்களாக ஆக்கும். இரண்டுமே தவறானவை. இசை கேட்பவர்கள் அதேயளவுக்கு தீவிரமான  அறிவார்ந்த கல்வியிலும் ஈடுபாடு கொண்டிருப்பதுதான் நல்ல வழி.

சிறந்த இசைவாணர்களில் கணிசமானவர்கள் குழந்தைத்தனமானவர்கள். கனிந்த குழந்தைத்தனம் அல்ல, முதிராத குழந்தைத்தனம். அடம், சுயமைய நோக்கு எல்லாம் கொண்டவர்கள். இன்னொருசாரார் பயங்கரமான அற்பர்கள். கல்வி அளிக்கும் முதிர்ச்சி இசையுடன் இணையவில்லை என்றால் ஆபத்துதான்

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன்,

இசையைப்பற்றி உங்கள் கருத்துக்களை வாசிக்கிறேன். இசையைப்பற்றி தெரியாது என்கிறீர்கள். இசை கேட்பதாகவும் சொல்கிறீர்கள். இந்த முரண்பாடு எனக்குப் புரியவில்லை.

சாம் செல்வராஜ்

***

அன்புள்ள சாம்

நான் இசை கேட்பது என் இன்பத்திற்காக. இதற்கு அப்பால் ஒரு கலை குறித்து கருத்து சொல்ல வேண்டுமானால் கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்

1. அந்தக் கலையின் பின்புலம், அதன் பரிணாமம் ஆகியவற்றைப் பற்றிய அறிதல்

2.அந்தக் கலையின் வகைபேதங்களைப் பற்றிய புரிதல்

3.அந்தக்கலையை தொழில்நுட்பரீதியாக கொஞ்சமேனும் அறிந்திருத்தல்

4.அந்தக்கலையை புறவயமாக பார்க்கும் திறமை. தத்துவார்த்தமாகவும் தொழில்நுட்பம் சார்ந்தும் அணுகும் தன்மை

இவ்வாறு இருந்தால் மட்டுமே கருத்து சொல்ல வேண்டும். நம்முடைய கருத்து  அக்கலையை ரசிப்பதற்கான பயிற்சியை அளிப்பதாக இருக்க வேண்டும்

ஆகவேதான் நான் சினிமா, இசை, ஓவியம் குறித்தெல்லாம் விமரிசனங்களைச் சொல்வதில்லை

ஜெ

***

அன்புள்ள ஜெ,

கண்ணதாசன் பாடல்களில் உள்ளூர ஒரு இசை உள்ளது இல்லையா? அதாவது அதை சும்மா வாசித்தாலே ஒரு இசை தெரிகிறது.

நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்

என் மகராணி உனைக்காண தனியாக வந்தேன்

அல்லது

தேன் சிந்துதே வானம்

உனை எனை தாலாட்டுதே

போன்ற வரிகளிலேயே சங்கீதம் உள்ளதே… அந்த மாதிரி உள்ளே சங்கீதம் வைரமுத்து பாடல்களில் உள்ளதா என்ன? இசையமைப்பாளர்தான் அந்த இசையை அவர் பாடலில் நுழைக்கிறார்?

அரவிந்த் கணேசன்

***

அன்புள்ள அரவிந்த்

எனக்கு எழுதும் பன்னிரண்டாவது அரவிந்த் நீங்கள்.

வைரமுத்து பாடல்களிலும் உள் இசை உண்டு என்பதே என் எண்ணம். பழைய பாடல்களின் இசையமைப்பு வேறு இப்போதுள்ளது வேறு. பழைய பாடல்கள் ஒரு மெட்டு, அந்த மெட்டின் பல்வேறு வேறுபட்ட வடிவங்களாக அடுத்த வரிகள் என அமைந்திருக்கும். இப்போது இசை இன்னமும் சிக்கலானது. ஆகவேதான் வரிகளும் கொஞ்சம் சிக்கலாக உள்ளன. ஆனால் உள்ளூர இசை இருக்கிறதென்றே நான் நினைக்கிறேன்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இசையுள்ள வரிதானே? ஆனால் அடுத்த வரி தன்னா தானா தானா தானா என்றிருந்தால்

பள்ளிகூட நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்

என்றுதானே வர முடியும்?

ஜெ

***

முந்தைய கட்டுரைகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு
அடுத்த கட்டுரைகடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் – 2