‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27

பகுதி ஆறு : அரசப்பெருநகர்

[ 2 ]

அக்னிவேசரின் குருகுலத்திற்கு துரோணன் சென்றுசேர்ந்தபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அக்னிவேசர் அப்போது இமயமலைப் பயணம் சென்றிருந்தார். அவரது முதல் மாணவரான வியாஹ்ரசேனர்தான் குருகுலத்தை நடத்திவந்தார். அவரிடம் மைந்தனை ஒப்படைத்துவிட்டு விடைபெறும்போது விடூகர் அவன் கையைப்பற்றிக்கொண்டு “குழந்தை, நீ இங்கே உன் தந்தை உனக்கு குறித்த கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். இங்கே உனக்கு உவப்பாக இல்லை என்றால் நான் மீண்டும் வந்து அழைத்துச்செல்கிறேன். இங்குள்ள எந்த ஒரு சேவகரிடம் நீ செய்தி சொல்லி அனுப்பினாலும் போதும்” என்றார்.

துரோணன் திடமான குரலில் அவர் கண்களை நோக்கி “தேவையில்லை” என்றான். அவன் முற்றிலும் இன்னொருவனாக இருப்பதை உணர்ந்த விடூகர் “நான் மூன்றுமாதத்துக்கு ஒருமுறை அமாவாசையன்று உன்னைப்பார்க்க வருகிறேன்” என்றார். “உத்தமரே, எனக்கு நீங்கள் அளித்த உணவுக்காகவும் உங்கள் நெஞ்சுக்குள் நீங்கள் என்னை மகனே என அழைத்துக்கொண்டமைக்காகவும் வாழ்நாள் முழுக்க நன்றியுடன் இருப்பேன். எப்போது இவ்வெளிய கைகளில் நீரள்ளி ஒளிநோக்கி விட்டாலும் உங்கள் பெயரை உச்சரிக்காமலிருக்கமாட்டேன்” என்றான் துரோணன். விம்மியபடி விடூகர் அமர்ந்து அவனை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டார்.

“இறுதிமூச்சின்போது தாங்களும் என் பெயரை உச்சரியுங்கள் உத்தமரே” என்றான் துரோணன். விடூகர் கண்ணீர் வழிய உடைந்த குரலில் “என் மைந்தா… நீ என்னுடன் வந்துவிடு. நான் இருக்கும் வரை நீ தனியனல்ல. நீ என்னுடன் இரு…” என்றார். துரோணன் புன்னகையுடன் “நான் என்னுள் வைத்திருக்கும் காயத்ரியுடன் சமையற்கட்டில் வாழ முடியாது உத்தமரே” என்றான். அவர் அவன் விழிகளை ஏறிட்டு நோக்கினார். “ஆம்…” என்றார். “நான் எளிய சமையற்கார பிராமணன். தர்ப்பையைத் தீண்டவும் தகுதியற்றவன்.”

துரோணன் அவர் கண்களைத் துடைத்து “செல்லுங்கள். என்னை இனிமேல் நீங்கள் வந்து பார்க்கவேண்டியதில்லை. எனக்கான உங்கள் கடன்களை முடித்துவிட்டீர்கள்” என்றான். விடூகர் பெருமூச்சு விட்டு சால்வையால் முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றார். “வருகிறேன். நீ அனைத்து நலன்களையும் பெற்று நிறைவுடன் வாழவேண்டும்” என்றார். அவர் புல்மண்டிய பாதையில் சற்று நடந்ததும் துரோணன் அவருக்குப்பின்னால் ஓடி “சென்றுவருக தந்தையே” என்றான். அவர் உடல் அதிர திரும்பி நோக்குவதற்குள் திரும்பி குருகுலத்தின் குடில்களுக்குள் ஓடி மறைந்தான்.

மூன்றுவருடங்கள் துரோணன் அக்னிவேசரின் குருகுலத்தில் வளர்ந்தான். அங்கிருந்த ஷத்ரிய மாணவர்கள் அவனை மடைப்பள்ளியில் சேவைக்கு வந்த விடூகரின் மைந்தன் என்றே எண்ணினார்கள். அவனும் மடைப்பள்ளிக் குடிலில்தான் உண்டு உறங்கினான். அரசகுலத்து இளைஞர்களுக்கு விற்பயிற்சியில் அம்புகள் தேர்ந்துகொடுத்தான். அவர்களின் ஆடைகளை துவைத்தும், குடில்களை தூய்மைசெய்தும், பூசைக்குரிய மலர்களையும் கனிகளையும் கொண்டுசென்று அளித்தும் சேவைசெய்தான். அவர்களுக்கு உணவுபரிமாறினான். ஏவலர்களை இழிவுசெய்து பழகிய அரசகுலத்தவர்களான அவர்கள் சிறிய தவறுக்கும் அவன் தலையை அறைந்தனர். அவன் குடுமியைப்பிடித்துச் சுழற்றி வீசினர். அவனை எட்டி உதைத்து முகத்தில் உமிழ்ந்து இழிசொல்லுரைத்தனர்.

அவனுடைய பெயர் அனைவருக்குமே நகைப்பூட்டுவதாக இருந்தது. அவனுடைய கரிய சிறு உருவம் வெறுப்பை ஊட்டியது. ஆயுதப்பயிற்சியின்போது அவனை ஓடச்சொல்லி போட்டி வைத்து அவன் குடுமியை அம்பெய்து வெட்டினார்கள். அவன் கொண்டுசெல்லும் கலத்தை கவணால் கல்லெறிந்து உடைத்து அவன்மேல் நெய்யும் தயிரும் கஞ்சியும் வழியச்செய்து கூவி நகைத்தார்கள். ஒருமுறை நான்கு மாணவர்கள் அவனை ஒரு பெரிய மண்குடத்துக்குள் போட்டு கயிற்றில் கட்டி வில்பயிலும் முற்றத்தில் மரத்தில் கட்டித் தொங்கவிட்டனர். குடத்தில் எழுந்து நின்று கீழே தன்னைநோக்கி நகைக்கும் முகங்களை அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.

அக்னிவேசர் திரும்பிவந்தபோது அங்கிருந்த அனைவரும் அவனை சமையற்காரனாகவே எண்ணியிருந்தனர். அவரிடம் அவனைப்பற்றி எவரும் சொல்லவில்லை. பலமுறை அவனை அவர் கண்டபோதும் அவரும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் சமையற்காரச்சிறுவனாகிய அவனை ஷத்ரிய இளைஞர்கள் அவமதிப்பதையும் அடிப்பதையும் அவர் கண்டு அதற்காக அவர்களை கண்டித்தார். ஆனால் ஷத்ரியர்கள் தங்கள் ஆணவத்தாலேயே ஆற்றலை அடைகிறார்கள் என்றும் அவர் அறிந்திருந்தார். வியாஹ்ரசேனரிடம் அவர்களை கட்டுப்படுத்தும்படி ஆணையிட்டார்.

அதன்பின்னரும் ஒருமுறை அவன் குடிநீரை தாமதமாகக் கொண்டுவந்தமையால் சினமுற்ற மாளவ இளவரசன் மித்ரத்வஜன் அவன் கன்னத்தில் அறைவதை தன் குடிலுக்குள் நின்றபடி கண்டார். அவர் மாளவனை கண்டிப்பதற்காக வெளியே வந்தபோது அவரெதிரே வந்த துரோணனின் முகம் சற்றுமுன் அவமதிக்கப்பட்டதன் சாயலே இல்லாமலிருந்ததைக் கண்டு திகைத்தார். அவரை வணங்கி கடந்துசென்ற சிறுவனை சிந்தனையுடன் நோக்கி நின்றார்.

பின்னர் ஒருநாள் அதிகாலையில் கங்கைக்கு நீராடச்சென்றிருந்தபோது தனக்கு முன்னால் அவன் நின்று தர்ப்பைகளைப் பிய்த்து நீரில் வீசிக்கொண்டிருப்பதை அக்னிவேசர் கண்டார். இவ்வேளையில் சிறுவன் ஏன் விளையாடுகிறான் என்று எண்ணி அவனறியாமல் நின்று அவனை நோக்கினார். அவன் அவரது அசைவை காணவில்லை. அவனைச்சூழ்ந்து நிகழ்வன எதையும் உணரவில்லை. தன் இடக்கையில் தர்ப்பைத்தாள்களை வைத்திருந்தான். வலக்கையால் அவற்றை எடுத்து நீர்ப்பரப்பைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்.

காலைநீரில் கங்கையில் செல்லும் நீர்க்குமிழிகளை அவன் தர்ப்பைகளை வீசி உடைத்துக்கொண்டிருந்தான். நீர்நுரையில் கொத்துக்கொத்தாகச் செல்லும் குமிழிகளில் ஒன்றை உடைக்கும்போது பிறகுமிழிகள் ஏதும் உடையவில்லை என்று கண்டு அவர் திகைத்து அவனருகே சென்றார். அவன் அவரைக்கண்டு வணங்கியபோது “உன் தந்தை பெயரென்ன?” என்றார். “நான் பரத்வாஜரின் மைந்தன். தங்களிடம் தனுர்வித்தை கற்க அனுப்பப்பட்டவன்” என்றான் துரோணன். அவனை இரு கைகளாலும் அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொண்டு உவகை எழுந்த குரலில் “பாரதத்தின் மகத்தான வில்லாளி ஒருவன் தன்னை என் மாணவன் என்று பின்னாளில் சொல்லும் பேறுபெற்றேன்” என்றார் அக்னிவேசர்.

அக்னிவேசர் அவனை கைத்தலம் பற்றி அழைத்துவந்ததைக்கண்ட ஷத்ரிய இளைஞர்கள் திகைத்தனர். அன்றைய தனுர்வேத வகுப்பில் அவனை அவர் முன் நிரையில் அமரச்செய்தபோது ஷத்ரியர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அக்னிவேசர் கேட்டார் “வில் என்பது என்ன?” வில் என்பது வானத்தின் வளைவு என்றான் ஒருவன். மலைச்சிகரங்களின் வடிவம் என்றான் இன்னொருவன். நாகம் என்றான் பிறிதொருவன். அறம் என்றும் வீரம் என்றும் வெற்றி என்றும் சொன்னார்கள் பலர். அக்னிவேசர் துரோணனிடம் கேட்டார் “பரத்வாஜரின் மைந்தனே, நீ சொல்.”

துரோணன் எழுந்து “வில் என்பது ஒரு மூங்கில்” என்றான். மாணவர்கள் நகைக்கும் ஒலிக்கு நடுவே தொடர்ந்து “மூங்கில் என்பது ஒரு புல்” என்றான். அக்னிவேசர் புன்னகையுடன் “அம்புகள்?” என்றார். “அம்புகள் நாணல்கள். நாணலும் புல்லே” என்றான் துரோணன். “அப்படியென்றால் தனுர்வேதம் என்பது என்ன?” என்றார் அக்னிவேசர். “வில்வித்தை என்பது புல்லும் புல்லும் கொண்டுள்ள உறவை மானுடன் அறிந்துகொள்வது.” அக்னிவேசர் தலையசைத்தார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்?” என்றார். துரோணன் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால் ஆனது” என்றான் .

அக்னிவேசர் திரும்பி தன் மூத்தமாணவனாகிய மாளவ இளவரசன் மித்ரத்வஜனிடம் “இவனை என்ன செய்யலாம்?” என்றார். “பிரம்மனில் இருந்து தோன்றியதும் ஐந்தாவது வேதமுமான தனுர்வேதத்தைப் பழித்தவனை அம்புகளால் கொல்லவேண்டும்” என்று அவன் சொன்னான். “அவ்வண்ணமே செய்” என்றபின் துரோணனிடம் “உன் புல் உன்னை காக்கட்டும்” என்றார் அக்னிவேசர். மாளவன் தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுப்பதற்குள் துரோணன் தன் முதுகுக்குப்பின் கச்சையில் இருந்த தர்ப்பைக்கட்டில் இருந்து இரு கூரிய தர்ப்பைகளை ஒரே சமயம் எடுத்து வீசினான். மாளவனின் கண்ணுக்கு கீழே கன்னச்சதைகளில் அவை குத்தி நிற்க அவன் அலறியபடி வில்லை விட்டுவிட்டு முகத்தைப்பொத்திக்கொண்டான். அவன் விரலிடுக்கு வழியாக குருதி வழிந்தது.

அனைவரும் திகைத்த விழிகளுடன் பார்த்து நிற்க அக்னிவேசர் புன்னகையுடன் சொன்னார் “இதையும் கற்றுக்கொள்ளுங்கள் ஷத்ரியர்களே. கணநேரத்தில் மாளவனின் கண்களை குத்தும் ஆற்றலும் அவ்வாறு செய்யலாகாது என்னும் கருணையும் இணைந்தது அந்த வித்தை. கருணையே வித்தையை முழுமைசெய்கிறது.” மாளவனை நோக்கித் திரும்பி “உன் இரண்டாம் ஆசிரியனின் காலடிகளைத் தொட்டு வணங்கி உன்னை அர்ப்பணம் செய்துகொள். அவன் அருளால் உனக்கு தனுர்வேதம் கைவரட்டும்” என்றார் அக்னிவேசர்.

மாளவன் குருதி வழிந்த முகத்துடன் வந்து துரோணன் அருகே தயங்கி நின்றான். துரோணன் நின்றிருந்த தோரணையைக் கண்டு அக்னிவேசர் புன்னகையுடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார். மாளவன் அவன் பாதங்களைப் பணிய துரோணன் “வெற்றியுடன் இருப்பாயாக” என்று பிராமணர்களுக்குரிய முறையில் இடக்கைவிரல்களைக் குவித்து வாழ்த்தினான். வியாஹ்ரசேனர் தவிர அக்னிவேசரின் அனைத்து மாணவர்களும் வந்து அவனை வணங்கியபோது தயக்கமேதுமின்றி நிமிர்ந்த தலையுடன் சற்றே மூடிய இமைகளுடன் அவன் வாழ்த்துரைத்தான்.

அன்றுமுதல் அக்னிவேசரின் முதன்மை மாணவனாக துரோணன் மாறினான். பகலெல்லாம் அவருடன் அனைத்துச்செயல்களிலும் உடனிருந்து பணிவிடை செய்தான். இரவில் அவரது படுக்கைக்கு அருகே நிலத்தில் தர்ப்பைப்பாய் விரித்துத் துயின்றான். அவர் அவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுப்பதை மாணவர்கள் எவரும் காணவில்லை. அவர் மெல்லியகுரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லும் சொற்களை விழிகள் ஒளியுடன் நிலைத்திருக்க கூப்பி நெஞ்சோடு சேர்க்கப்பட்ட கரங்களுடன் கேட்டுக்கொண்டிருந்தான். அவர் சொல்லும் மந்திரங்களை அவரது உதடுகளை நோக்கி அதேபோல உதடுகளை அசைத்து சொல்லிக்கொண்டான். அவரிடமன்றி எவரிடமும் உரையாடாமலானான்.

வெள்ளிமுளைப்பதற்கு முன்னர் அவன் எழுந்து மெல்லியகாலடிகளுடன் கங்கைக்கரைக்குச் சென்று தன் வில்லில் தர்ப்பைப்புல்லை அம்புகளாக்கி பயிற்சி செய்வதை நெடுநாட்களுக்குப்பின்னர்தான் அங்கநாட்டு இளவரசன் பீமரதன் கண்டு பிறருக்குச் சொன்னான். அவர்கள் இருளுக்குள் சென்று அவனை தொலைவிலிருந்து நோக்கினர். மரங்கள் கூட நிழல்கூட்டங்களாக அசைந்துகொண்டிருந்த இருளுக்குள் துரோணன் கனிகளை அம்பெய்து வீழ்த்தி அவை நிலத்தை அடைவதற்குள்ளேயே மீண்டும் மேலெழுப்பிக் கொண்டுசென்று விண்ணில் நிறுத்தி விளையாடுவதைக் கண்டு திகைத்தனர்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“அவனுக்கு குருநாதர் அருளியிருப்பது தனுர்வேதமே அல்ல. தனுவையும் சரங்களையும் கட்டுப்படுத்தும் தீயதேவதைகளை உபாசனைசெய்யும் மந்திரங்களையே அவனுக்களித்திருக்கிறார். ஆகவேதான் அவன் பின்னிரவில் வந்து வில்பயில்கிறான். இப்போது விண்ணில் அக்கனிகளை நிறுத்தி விளையாடுபவை இருளைச் சிறகுகளாகக் கொண்டு வானில் உலவும் அக்கரியதெய்வங்களே” என்றான் உக்ரசேனன் என்னும் இளவரசன். இருளுக்குள் மரங்களை குலைத்தபடி வந்த காற்று அவர்களின் முதுகுகளைத் தீண்டி சிலிர்க்கச்செய்தது.

அதன்பின் அவர்கள் எவரும் துரோணன் விழிகளை ஏறிட்டு நோக்கும் துணிவுபெறவில்லை. அவன் எதிரே வருகையில் அவர்கள் தலைகுனிந்து விலகி கைகூப்பி நின்றனர். அவர்களுக்கு அவனே வில்வித்தையின் பாடங்களைக் கற்பித்தான். வகுப்புகளில் அவன் மிகச்சில சொற்களில் அவர்களிடம் பேசினான். சொற்கள் குறையக்குறைய அவன் சொல்வது மேலும் தெளிவுடன் விளங்கியது. அவனை முன்பு அவமதித்தவர்கள், அடித்தவர்கள் அவன் பழிவாங்கக்கூடுமென அஞ்சினர். ஆனால் சிலநாட்களிலேயே அவன் அவர்கள் எவரையுமே ஏறிட்டும் நோக்குவதில்லை என்பதைக் கண்டு அமைதிகொண்டனர்.

முற்றிலும் தனியனாக இருந்தான் துரோணன். நான்குவயதில் அங்கே வந்தபின் அக்னிவேசரின் தவக்குடிலைவிட்டு அவன் வெளியே செல்லவேயில்லை நீராடுகையில் கங்கையைக் கடக்க ஒருகை கூட எடுத்து வைக்கவில்லை. குருகுலத்து முகப்பிலிருந்து தொடங்கி செந்நிற நதிபோல வளைந்தோடி அப்பால் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்ற பாதையில் ஒரு கால்கூட எடுத்து வைக்கவில்லை. பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து முதற்சாமத்தில் துயிலும் தன் நாள்நெறியில் அவன் ஒருமுறை கூட வழுவவில்லை. அந்த மாறாநெறியாலேயே அவன் முற்றிலும் அங்கிருந்த பிறர் பார்வையிலிருந்து மறைந்துபோனான். அவர்களறிந்த துரோணன் நாளென இரவென நிகழும் இயற்கையின் ஒரு முகம்.

அவனும் எவரையும் அறியவில்லை. அவனுடன் பயின்ற மாணவர்கள் ஒவ்வொருவராக கல்விமுதிர்ந்து குருகாணிக்கை வைத்து வாழ்த்துபெற்று இடத்தோளில் எழுந்த வில்லும் வலத்தோளில் அம்பறாத்தூணியுமாக விடைபெற்றுச் சென்றனர். அவர்களை அழைத்துச்செல்ல வந்திருந்த அரசரதங்கள் குருகுல முற்றத்தில் செருக்கடித்து கால்மாற்றும் பொறுமையிழந்த புரவிகளுடன் நின்றன. அணிப்படகுகள் கொடிமரத்தில் கட்டப்பட்ட பாய்கள் துடிக்க அலைகளில் எழுந்தமைந்து நிலையழிந்து காத்திருந்தன. அவர்களுக்காக வந்திருந்த அரசதூதர்களும் அமைச்சர்களும் அக்னிவேசரை வணங்கி அவர் காலடியில் விரிக்கப்பட்ட புலித்தோலில் பொன்னும் மணியுமாக காணிக்கையிட்டு வணங்கி விடைகொண்டனர்.

விடைபெற்று விலகும் இளவரசர்கள் துரோணனைக் கண்டு நெடுநாட்களுக்குப்பின் அவனை அகத்தில் உணர்ந்து திடுக்கிட்டனர். பின்னர் அவனருகே வந்து பணிந்து “குருபாதங்களைப் பணிகிறேன் துரோணரே. தாங்கள் விழையும் காணிக்கையை அடியேன் தர சித்தமாக உள்ளேன்” என்றனர். துரோணன் புன்னகையுடன் “உனது வாளும் வில்லும் அந்தணரையும் அறவோரையும் ஆவினங்களையும் என்றும் காத்து நிற்கட்டும். அதுவே எனக்கான காணிக்கை. வெற்றியும் செல்வமும் புகழும் திகழ்வதாக!” என வாழ்த்தினான். அவனுடைய சொற்களால் அத்தனை ஷத்ரியர்களும் உள்ளூர சினம்கொண்டனர். தலைவணங்கி சென்னிமேல் அவனுடைய மஞ்சளரிசியையும் மலரையும் பெற்றுக்கொண்டு நடக்கையில் அவர்களுடைய உடலெங்கும் அந்தச்சினமே எரிந்துகொண்டிருந்தது.

அவர்கள் சென்றவழியிலேயே புதிய ரதங்களிலும் புதிய படகுகளிலும் இளம்மாணவர்கள் வந்திறங்கினர். விழித்த பெரிய கண்களும் குடுமிச் சிகையில் சூடிய மலருமாக அமைச்சராலோ தளபதியாலோ கை பிடித்து வழிநடத்தப்பட்டு அவர்கள் குருகுலத்துக்குள் வலது காலடியை எடுத்து வைத்தனர். “நிலம்தொட்டு வணங்குங்கள் இளவரசே, இது உங்கள் ஞானபூமி” என்று சொல்லப்படுகையில் அவர்கள் திகைத்து சுற்றுமுற்றும் நோக்கியபின் கையிலிருந்த பொருட்கள் கீழே விழாமல் நெஞ்சோடு பிடித்துக்கொண்டு குனிந்து நிலம்தொட்டு சென்னியிலணிந்தனர்.

அக்னிவேசர் முன் வந்து நிற்கும் அத்தனை இளவரசர்களும் அவரது மெலிந்த முதிய உடலைக் கண்டு அவநம்பிக்கைகொண்டு திரும்பி தலைதூக்கி தங்களுடன் வந்தவர்களை நோக்கினர். அவர்கள் மெல்லியகுரலில் “குருபாதங்களை வணங்குங்கள் இளவரசே” என்று சொன்னதும் அக்னிவேசரின் முகத்தை நோக்கியபடி குனிந்து பாதங்களை சிறுகைகளால் தொட்டு வணங்கினர். அக்னிவேசருக்கு காணிக்கைகள் வைத்து வாழ்த்து பெற்றதும் அவர்கள் வியாஹ்ரசேனரை வணங்கியபின் அக்னிவேசரின் இடப்பக்கம் நின்றிருக்கும் துரோணரை நோக்கி ஒருகணம் தயங்கினர். அக்னிவேசர் “பரத்வாஜரின் மைந்தரும் என் மாணவருமான துரோணரை வணங்குங்கள்” என்று சொன்னதும் விழிகளுக்குள் ஒருகணம் வியப்பு ஒளிர்ந்து அடங்கும்.

அந்த கணத்தை துரோணன் வெறுத்தான். அதைக் கடந்துசெல்ல ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு வகையில் முயன்றான். பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு அக்கறையின்மை தெரியும் உடலுடன் நின்று அவர்கள் அருகே நெருங்கியதும் கலைந்து திரும்பினான். கனிந்த புன்னகையுடன் அவர்களை நோக்கி நின்று அவர்களின் பார்வை பட்டதும் புன்னகையுடன் கைநீட்டி அழைத்தான். எதுவும் வெளித்தெரியாத சிலைமுகத்துடன் நின்று உணர்வேயின்றி அவர்களை எதிர்கொண்டான். ஆனால் ஒவ்வொருமுறையும் அவர்களின் விழிகளில் மின்னிச்செல்லும் வியப்பு அவனில் நஞ்சூட்டப்பட்ட அம்புபோலத் தைத்தது. நாட்கணக்கில் அவனுக்குள் இருந்து உளைந்து சீழ்கட்டியது.

அந்தவியப்பை ஒவ்வொருவரும் கடக்கும் முறையை அவன் மிகநுட்பமாக கண்டிருப்பதை அத்தருணம் தன்னுள் மீளமீள காட்சியாக ஓடும்போது உணர்வான். சிலர் ஏற்கெனவே அதை உய்த்தறிந்திருந்தவர்களாக நடிப்பார்கள். சிலர் செயற்கையான இயல்புத்தன்மையை உடலிலும் கண்களிலும் கொணர்வார்கள். சிலர் நிமிர்வை சிலர் பணிவை முன்வைப்பார்கள். ஒவ்வொருவருள்ளும் ஓடும் சொற்களை மட்டுமே அவன் பருப்பொருள் என பார்த்துக்கொண்டிருப்பான். “பரத்வாஜரின் மைந்தனா?” வணங்கி மீண்டபின் அவன் பார்வை அவர்களிடமிருந்து விலகியதும் வளைக்கப்பட்ட மூங்கில் நிமிர்வதுபோல அவர்களுக்குள் எழும் என்ணத்தை தன் உடலால் அவன் உணர்வான். அவனுடைய பிறப்பு நிகழ்ந்த விதம். தன் முதுகுக்குப்பின் உடைகள் உரசிக்கொள்ளும் ஒலியில் மூச்சொலியில் கேட்கும் அந்தப் புன்னகை அவனை கூசி உடல்குன்றச்செய்யும்.

பின்னர் அவன் கண்டுகொண்டான், அத்தருணத்தை வெல்லும் முறையை. அவர்கள் அவனை அவமதிப்பதற்குள்ளாகவே அவன் அவர்களை அவமதித்தான். நிமிர்ந்த தலையும் இளக்காரம் நிறைந்த நோக்குமாக அவன் அவர்களை நோக்குவான். தன் பாதங்களைப் பணியும் இளவரசர்களை குனிந்தே நோக்காமல் இடக்கையால் வாழ்த்தி அவர்கள் அளிக்கும் காணிக்கைகளை கண்முனையால் நோக்கி மிக மெல்லிய ஒரு நகைப்பை உதடுகளில் பரவவிடுவான். அந்நகைப்பு அவர்களை திகைக்கச்செய்யும். அதன் காரணமென்ன என்று அவர்களின் அகம் பதறி துழாவுவதை உடலசைவுகள் காட்டும். அங்கிருந்து செல்லும் வரை அவர்களால் அதிலிருந்து வெளிவரமுடியாது. அவர்களின் பார்வைகள் அவனை வந்து தொட்டுத்தொட்டுச் செல்லும். அவன் அவர்களை மீண்டுமொருமுறை விழியால் சந்திக்கவே மாட்டான்.

ஐந்து வயதுமுதல் ஏழுவயதுக்குள் உள்ள ஷத்ரியகுலத்துச் சிறுவர்களே குருகுலத்துக்கு வந்துகொண்டிருந்தனர். வில்பயிற்சிக்கு அவர்கள் நுழைவதற்கு முன்பாக இளம்கைகள் வேறெந்த தொழிலுக்கும் பயின்றிருக்கலாகாது என்று சொல்லப்பட்டது. குறிப்பாக அவர்கள் ஏடெழுதவும் இசைக்கருவிகளை இசைக்கவும் பயிலக்கூடாதென்று நெறி இருந்தது. இளம்மாணவர்களின் பயிலாத மென்கரங்களை வியாஹ்ரசேனர் தன் கனத்த கைகளால் பற்றி வளைத்துப்பார்த்தபின்னரே அங்கே அவர்களை சேர்த்துக்கொள்வார். மாணவர்கள் குருகுலத்துக்கு வந்தபின்னர் இரண்டுவருடகாலம் ஒவ்வொருநாளும் காலைமுதல் இரவு வரை விழித்திருக்கும் நேரமெல்லாம் கைவிரல்களுக்குத்தான் முதற்பயிற்சி அளிக்கப்பட்டது.

“அம்பைத் தொட்டதுமே அதை உணர்பவன் அதமன். அவன் உடல் பயிற்சியை பெற்றிருக்கிறது. அம்பருகே கைசென்றதுமே அதை உணர்ந்துகொள்பவன் மத்திமன். பயிற்சியை அவன் அகமும் பெற்றிருக்கிறது. அம்பென எண்ணியதுமே அம்பை அறிபவன் உத்தமன். அவன் ஆன்மாவில் தனுர்வேதம் குடியேறியிருக்கிறது” என்று அக்னிவேசர் சொன்னார். “எந்த ஞானமும் உபாசனையால் அடையப்படுவதே. அதன் நிலைகள் மூன்று. ஞானதேவியிடம் இறைஞ்சி அவளை தோன்றச்செய்தல் உபாசனை. அவளை கனியச்செய்து தோழியாகவும் தாயாகவும் தெய்வமாகவும் தன்னுடன் இருக்கச்செய்தல் ஆவாகம். முழுமை என்பது தான் அவளேயாதல். அதை தன்மயம் என்றனர் மூதாதையர்.”

ஆகவே அக்னிவேசரின் குருகுலத்தில் ஏழுவயது கடந்தவர்களையும் பிறகுருகுலங்களில் பயின்றவர்களையும் ஏற்பதில்லை. அது அனைவருமறிந்தது என்பதனால் எவரும் அவ்வாறு வருவதுமில்லை. எனவே வில்பயிற்சி முடிந்து கங்கையில் நீராடிக்கொண்டிருந்த துரோணன் பெரிய பாய்களை மெல்லக் குவித்து சுருக்கியபடி அரசஇலக்கணங்கள் கொண்ட படகு ஒன்று குருகுலத்தின் படகுத்துறையை அணைவதைக் கண்டு எழுந்து நோக்கியபோது அதிலிருந்து பதினைந்து வயதான ஓர் இளைஞனும் அவனுடன் அவனுடைய தளபதியும் மட்டும் இறங்கிச்செல்வதைக் கண்டு வியப்புடன் கரையேறி உடலைத் துவட்டி ஆடையணிந்து குருகுலமுகப்பை நோக்கிச் சென்றான்.

அக்னிவேசர் ஓய்வெடுக்கும் நேரம் அது. அவர் நீண்ட மஞ்சப்பலகையில் கால்நீட்டி ஒருக்களித்துப் படுத்திருக்க ஒரு மாணவன் பிரஹஸ்பதியின் வித்யாசாரம் நூலை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தான். கண்களை மூடி தாடியை நீவியபடி மெல்லத் தலையசைத்து அக்னிவேசர் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார். முற்றத்தில் கேட்ட ஓசைகளில் கலைந்து எழுந்து சைகையால் ‘சென்று பார்’ என்று மாணவனிடம் சொன்னார். அவன் வெளியே சென்று அவர்களிடம் பேசுவது கேட்டுக்கொண்டிருந்தது. தட்சிண பாஞ்சாலத்து சிருஞ்சயகுலத்து அரசன் பிருஷதனின் மைந்தன் யக்ஞசேனன் என்பது அவ்விளைஞனின் பெயர் என்றும் உடன்வந்திருப்பவர் அவனுடைய அமைச்சர் பார்ஸ்வர் என்றும் அக்னிவேசர் அறிந்துகொண்டார்.

மாணவன் உள்ளே வந்து சொல்வதற்குள்ளாகவே “அவர்களை சபையில் அமரச்செய்க” என்றபடி அக்னிவேசர் எழுந்தார். முகம்கழுவி சால்வை அணிந்து அவர் சபைக்குச் சென்றபோது மரப்பீடத்தில் அமர்ந்திருந்த அமைச்சரும் இளைஞனும் எழுந்து அவரை வணங்கினர். அவர் அமர்ந்ததும் பார்க்ஸ்வர் “தனுர்வேதஞானியாகிய அக்னிவேசரை வணங்குகிறேன். நாங்கள் உத்தர பாஞ்சாலத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார். அக்னிவேசர் “தெரியும்… கேட்டேன்” என்று சொல்லி “உங்கள் நோக்கம் இங்கே இவ்விளைஞரைச் சேர்ப்பதாக அமையாது என எண்ணுகிறேன். நான் இங்கே விரலும் மனமும் முதிர்ந்த மாணவர்களை சேர்த்துக்கொள்வதில்லை” என்றார்.

பார்ஸ்வர் முகம் குனிந்து “அதை முன்னரே அறிந்திருந்தோம். எனினும் எங்களுக்கு வேறுவழியில்லை. தாங்களறியாதது அல்ல, எங்கள் நாடு இன்று இரு குலங்களால் ஆளப்படும் இரு நாடுகளாகப் பிரிந்து வலுவிழந்து கிடக்கிறது. இருபக்கமும் மகதமும் அஸ்தினபுரியும் எங்களை விழுங்க எண்ணி காத்திருக்கின்றன. இத்தருணத்தில் இளவரசரின் கையில் தங்கள் ஆசிகொண்ட வில் இருப்பதுமட்டுமே எங்களுக்கு காவலாக அமையும்” என்றார். அக்னிவேசர் “பார்ஸ்வரே, பாரதவர்ஷத்தில் இக்கட்டில் இல்லாத அரசு என்பது எதுவும் இல்லை. காட்டில் ஒவ்வொரு ஓநாயும் வேட்டைமிருகம். எனவே ஒவ்வொன்றும் இரையும்கூட. நான் என் நெறிகளை மீறமுடியாது. நெறிகளை ஒருமுறை மீறினால் பிறகு அவை நெறிகளாக இராது” என்றபின் எழுந்தார்.

கைகூப்பி நின்றிருந்த யக்ஞசேனன் “என் நலனுக்காக நான் எதையும் கோரவில்லை தவசீலரே. என் குடிமக்களுக்காக அருளுங்கள்” என்று சொல்லி அவர் கால்களை தொடப்போனான். “வேண்டாம். மாணவனாக நான் உன்னை ஏற்காதபோது அந்நிலையில் என் கால்களை நீ தொடலாகாது. உன் கைவிரல்களைப்பார்த்தேன். அவை கணுக்கள் கொண்டுவிட்டன. அவற்றை இனி இங்குள்ள பயிற்சிகளுக்காக வளைக்க முடியாது. நீ போகலாம்” என்றபின் திரும்பி வியாஹ்ரசேனரிடம் “இவர்கள் தங்கி இளைப்பாறி திரும்பிச்செல்ல ஆவன செய்யும்” என்று கூறி சால்வையை சுழற்றிப்போட்டபடி உள்ளே சென்றார் அக்னிவேசர். வாசலில் நின்று திரும்பி “துரோணன் வந்ததும் என்னருகே வரச்சொல்லுங்கள்” என்றார்.

அமைச்சர் திரும்பி யக்ஞசேனனை நோக்கி மெல்லியகுரலில் “முனிவர் சினம் கொள்ளலாகாது இளவரசே” என்றார். வியாஹ்ரசேனர் பார்ஸ்வரிடம் “குருநாதர் இப்போது சொன்ன இச்சொற்களே இறுதியானவை என்று உணருங்கள் அமைச்சரே. இங்கு இதுவரைக்கும் ஏழுவயதுக்கு மேற்பட்ட எவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டதில்லை” என்றார். யக்ஞசேனன் கண்ணீருடன் உதடுகளை அழுத்திக்கொண்டு பெருமூச்சுவிட்டான். பார்ஸ்வர் “பாஞ்சால மக்களின் ஊழ் அவ்விதமென்றால் அவ்வாறே ஆகுக. பாதம்பணிந்து கேட்போம், எங்கள் குலதெய்வம் கனிந்தால் குருவின் கருணை அமையும் என்றெண்ணி வந்தோம்” என்றார். துயரம் நிறைந்த புன்னகையுடன் “நாங்கள் இப்போதே திரும்பிச்செல்கிறோம். குருபாதங்களை மீண்டும் பணிந்து விடைகொள்கிறோம்” என்றார்.

அவர்கள் திரும்பி வெயில் பரவிக்கிடந்த வெளிமுற்றத்துக்கு வந்து கங்கைக்கரைப்பாதை நோக்கிச் சென்றனர். குளியல் முடிந்த ஷத்ரிய மாணவர்கள் ஈர ஆடைகளுடன் கங்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். பாஞ்சாலத்தின் கொடியை படகில்பார்த்துவிட்டிருந்த இளவரசர்கள் சூதர்களின் மொழிவழியாக அறிந்திருந்த யக்ஞசேனனை காண விரும்பி, அதன்பொருட்டு வந்ததுபோல தோற்றமளிக்காமலிருக்க இயல்பாகப் பேசியபடி அவ்வழியாக வந்தனர். அவர்களின் விழிகளை சந்திக்காமல் இருக்க யக்ஞசேனன் தன் தலையைத் தூக்கி பார்வையை நேராக எதிரே மரங்களின் இலைத்தழைப்புக்கு அப்பால் தெரிந்த கங்கையின் ஒளியலையில் நாட்டியபடி நடந்தான். பார்ஸ்வர் ஒவ்வொரு இளவரசருக்கும் முகமன் சொல்லி வணங்கியபடி அவன் பின்னால் வந்தார்.

எதிரே கையில் தர்ப்பையும் ஈர மரவுரியாடையுமாக வந்த துரோணனைக் கண்டதும் யக்ஞசேனன் விலகி வழிவிட்டு சில அடிகள் எடுத்துவைத்து கடந்து சென்றான். பின்னர் திரும்பி கைகளைக் கூப்பியபடி “பிராமணோத்தமரே” என்று உரக்கக் கூவினான். அந்தப்பாதையில் சென்றுகொண்டிருந்த அத்தனைபேரும் திரும்பிநோக்கினர். திகைத்து நின்ற துரோணனை நோக்கி ஓடிவந்த யக்ஞசேனன் “பிராமணோத்தமரே, நான் உங்கள் அடைக்கலம். உங்கள் நாவிலோடும் காயத்ரிமேல் ஆணையாகக் கேட்கிறேன். என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். இங்கே என்னை மாணவனாக்குங்கள்” என்றபடி அப்படியே முழங்கால் மடிந்து மண்ணில் அமர்ந்து துரோணனின் பாதங்களை பற்றிக்கொண்டான்.

ஷத்ரிய இளைஞர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். கலிங்கநாட்டு இளவரசன் ருதாயு சினத்துடன் பற்களைக் கடித்து கைமுட்டிகளை இறுக்கியபடி மெல்ல முனகினான். அந்தச்சிறு ஓசையை கேட்டதும் துரோணனின் அகத்துள் ஒரு மென்முறுவல் விரிந்தது. இடதுகையை மான்செவி போலக் குவித்து யக்ஞசேனனின் தலைமேல் வைத்து “எழுக இளவரசே. உங்களுக்கு நான் அடைக்கலம் அளிக்கிறேன். வெற்றியும் செல்வமும் புகழும் திகழ்க” என்று வாழ்த்தினான். யக்ஞசேனன் எழுந்து “என் நாட்டுக்கும் இனி தாங்களே காவல் பிராமணோத்தமரே” என்றான். “அவ்வண்ணமே ஆகுக” என்றான் துரோணன். புன்னகையுடன் “இங்கு நீங்கள் மாணவராக சேர்ந்துகொள்ளலாம்” என்றான்.

முந்தைய கட்டுரைகாந்தியும் ‘கற்பழிப்பும்’
அடுத்த கட்டுரைதோழிக்கு ஒரு கடிதம்