கோவையில்…

சென்ற 22-6-2-2014 அன்று கோவையில் எனக்கு கவிஞர் கண்ணதாசன் நினைவு இலக்கியப்பரிசு வழங்கப்பட்டது. நான் 22 அன்று காலை கோவை எக்ஸ்பிரஸில் நாகர்கோயிலில் இருந்து கோவை வந்தேன். எனக்காக போடப்பட்டிருந்த தங்குமிடம் ராம்நகரில் இருந்தது. காலை ஒன்பதுமணி முதல் நண்பர்கள் வரத்தொடங்கினர். ஈரோடு, திருப்பூர், கோவைப்பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர். மாலைவரை தொடர்ந்து ஓர் இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சிபோல நடந்து கொண்டே இருந்தது.

இத்தகைய ஒருங்கமைக்கப்படாத உரையாடல்கள் குவியம் கொண்டிருக்காதென்பது குறை என்றால் இவை இவற்றின் தன்னிச்சைத்தன்மை காரணமாகவே உற்சாகமானவையாக அமையும் என்பது சாதகமான அம்சம். வெண்முரசு நாவலில் தொடங்கி சமகாலச் சர்ச்சைகள் வரை விவாதம் விரிந்துகொண்டே சென்றது. வழக்கமான விடுதிகள் போலன்றி இந்தத் தங்குவிடுதியினர் [செண்டர் பார்க் சர்வீஸ் அபார்ட்மெண்ட்ஸ்,37, என்.ஜி.என் தெரு,நியூ சித்தாபுதூர்] மிக வருகையாளர்களை தொல்லையாக கருதவில்லை. ஒரு கட்டத்தில் அறைக்குள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்து பேசிக்கொண்டிருந்தபோது தொடர்ந்து நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டுக்கொண்டே இருந்தனர்.

மாலை ஐந்தரை மணிக்கு விழா நடந்த கிக்கானி அரங்குக்குச் சென்றேன். அங்கே பழகிய பலநண்பர்களைப் பார்த்தேன். நீண்ட இடைவேளைக்குப்பின் சி.ஆர்.ரவீந்திரனையும் சுப்ரபாரதி மணியனையும் பார்க்கமுடிந்தது. எம்.கோபாலகிருஷ்ணன் அறைக்கு வந்திருந்தார். நாஞ்சிலைச் சந்திப்பது எப்போதுமே உற்சாகமானது. அவரது உற்சாகமும் கோபமும் இருபக்கங்களிலாக விரிவடைகின்றன என்று தோன்றியது. வாணிஜெயராமை நான் முன்னர் சற்றுத்தொலைவில் பார்த்ததுடன் சரி. கணவர் ஜெயராமுடன் வந்திருந்தார்.

விழாவில் புரவலர்களான கருமுத்து கண்ணன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் ஆகியோர் பங்குகொண்டார்கள். கருமுத்து கண்ணன் கண்ணதாசன் விருதை வழங்கினார். நாஞ்சில்நாடன் வாணி ஜெயராம் பற்றியும் என்னைப்பற்றியும் பேசினார். கண்ணதாசனின் மைந்தர் காந்தி கண்ணதாசன் ஆழமான குரலில் கண்ணதாசன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இசைக்கவி ரமணன் கண்ணதாசன்பாடல்களைப் பாடி உரையாற்றினார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த நந்தலாலா நகைச்சுவையுடன் பாடல்களைப் பாடிக்காட்டி கண்ணதாசனைப்பற்றி பேசினார். நான் சுருக்கமாக ஐந்துநிமிடம் நன்றி தெரிவித்து பேசினேன்.

விழாவில் மிகச்சிறப்பாக அமைந்தது வாணி ஜெயராமின் உரை. நல்லதமிழில் தடையின்றி கண்ணதாசன் பற்றிய நினைவுகளைப் பேசினார். அத்துடன் இருபது நிமிடங்கள் அவர் பாடிய கண்ணதாசன் பாடல்களை பாடிக்காட்டினார். பொதுவாக பின்னணிப்பாடகர்கள் தங்கள் பாடல்களை மேடைகளில் இசைக்குழு இல்லாமல் பாடுவதில்லை. பலமுறை எடுக்கப்பட்டு செப்பனிடப்பட்ட மூலப்பாடல்போல் அவை அமையாதென்பது ஒரு காரணம். பெரும்பாலான சினிமாப்பாடல்கள் குரலுடன் இசைப்பின்னணியும் இணைந்து முழுமைசெய்யும் மெட்டு கொண்டவை என்பது இன்னொரு காரணம். அத்துடன் சாதாரணமாக பேச்சுமேடைக்கு அமைக்கப்பட்டுள்ள ஒலியமைப்பு பாடுவதற்குப் பொருத்தமற்றது என்பதும் காரணம்.

வாணி ஜெயராம் எதையும் கருத்தில்கொள்ளவில்லை. அந்த அபாரமான தன்னம்பிக்கைக்குக் கராணம் அவர் மேடையில் மரபிசை பாடும் வழக்கம் கொண்டவர் என்பதுதான். அவரது கஜல், மீராபஜன் பாடல்கள் புகழ்பெற்றவை. தன் குரல்மேல் சிறந்த கட்டுப்பாடு அவருக்கிருந்தது. பழைய பாடல்களைப்பாடியபோது அவரது குரல் முற்றிலும் இளமையாகவே இருந்தது. இருபது நிமிடம் வெவ்வேறு பாடல்கள் வழியாக இளமைப்பருவத்தில் பயணம்செய்து மீண்ட அனுபவம் நிகழ்ந்தது. அதை அவரிடம் சொன்னேன்

அன்றிரவு ஒருமணிவரை நண்பர்கள் இருந்தனர். மறுநாள் காலையிலிருந்தே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இரவு எட்டரை மணிக்கு எனக்கு ரயில். அதுவரை. வெவ்வேறு நண்பர்கள் வந்தபடியும் சென்றபடியும் இருந்தனர். நினைவுகளை திரும்ப மீட்டும்போது எப்போதுமே பயணங்களுக்கு அடுத்தபடியாக நண்பர்களுடனான சந்திப்புகள்தான் உணர்வெழுச்சியுடன் எழுந்து வருகின்றன. அத்தகைய இரண்டு நாட்கள்.

முந்தைய கட்டுரைபெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25