‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 1

பகுதி ஒன்று : மாமதுரை

[ 1 ]

ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் அவைக்காவலனால் வழங்கப்பட்ட பரிசில்பொருளைப்பார்த்து சற்றே திகைத்தபின் திரும்பி தன் முன்னால் நின்ற வயதான பாணரிடம் “ஐயா, தங்களுக்கு அளிக்கப்பட்டது எவ்வளவு?” என்றான். அவர் புலி சேர்ந்து போகிய கல்அளை போன்ற பல்லில்லாத வாயைத்திறந்து மகிழ்ந்து புன்னகை செய்து “அனைவருக்கும் ஒரே பரிசில்தான் இளம்பாணரே. எங்கள் அரசர் ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன் என்றுமே இரவலரிடம் வேறுபாடு நோக்குவதில்லை” என்றார்.

இளநாகன் “தாங்கள் பாணரா பாவலரா?” என்றான். அவர் “என்னை என் மைந்தன் அழைத்துவந்தான். அவனிடம்தான் கேட்கவேண்டும்” என்றார். இளநாகன் “சரி, இதை வேறுவிதமாகக் கேட்கிறேன். தாங்கள் ஓலையை பார்த்ததுண்டா?” என்றான். அவர் கறங்குபுள் என ஒலியெழுப்பிச் சிரித்து “தம்பி, எங்கள் ஊரெல்லாம் பனைமரம்தான். இளம்பனையோலையால் கூடைகள் செய்வோம். முதுபனையோலையால் வீட்டுக்கூரை அமைப்போம்…” என்றார். அருகே நின்ற முதியவரைத் தொட்டு “கண்ணரே, இதோ ஓர் இளம்பாணர் நாம் பனையைப்பார்த்ததுண்டா என்று கேட்கிறார்” என்று சொல்ல அவர் திரும்பி நகைத்தார். அவருக்கு வெண்பற்கள் இருந்தன.

“நான் கேட்கவருவது அதுவல்ல” என்று இளநாகன் மீண்டும் தொடங்கினான். கொஞ்சம் சிந்தனைசெய்துவிட்டு “தங்களுக்கு அகவலில் பயிற்சி உண்டா?” என்றான். அவர் முகம் மலர்ந்து “எப்படித்தெரியும்? எங்கள் தினைப்புனத்தில் நான்தான் மயிலோட்டுவேன். மயில்போலவே நான் அகவும்போது பெண்மயில்கள் எல்லாம் சிதறிஓடும். கூடவே ஆண்மயில்களும் சென்றுவிடும்… என்னை எங்களூரில் அகவன் என்றே அழைப்பார்கள்” என்றபின் வெண்பல்லரைத் தொட்டு “தம்பி நம்மைப்பற்றி அறிந்துவைத்திருக்கிறார்” என்றார்.

“ஐயா, தாங்கள் எதன்பொருட்டு இங்கே பரிசில் பெறுகிறீர்கள் என்று நான் அறியலாமா?” என்றான் இளநாகன். “என் மைந்தன் என்னை அழைத்துவந்தான். தலைப்பாகையும் குண்டலமும் அணிந்து இப்படி விசிறியை மடித்து பட்டில்சுற்றி கையில் வைத்துக்கொண்டு வந்து நின்றால் மூன்று செம்புநாணயங்களும் வயிறுமுட்ட குதிரைவாலிச் சோறும் அயிரைமீன் கறியும் கீரைக்கூட்டும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரவென்றே புளித்த மோரும் அளிக்கிறார்கள் என்று சொன்னான்” என்றார்.

“விசிறியா?” என்றான் இளநாகன். “ஆம்… இதோ அவன்தான் இதைச்செய்து அளித்தான்” என்று சொல்லி அவர் கையிலிருந்த சுவடிக்கட்டுபோன்ற நீள்பட்டுப்பொதியை அவிழ்த்து உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த கிழிந்த பழைய பனையோலை விசிறியைக் காட்டினார். “இதைத்தான் என் ஊரிலுள்ள அனைவருமே கொண்டுவந்திருக்கிறார்கள் இளைஞரே.”

“தங்கள் தலைப்பாகை கூட அழகாக உள்ளது” என்று இளநாகன் சொன்னான். அவர் புள் இமிழ் ஒலி எழுப்பிச் சிரித்து “தம்பி, நாங்களெல்லாம் வேளாண்குடிமக்கள். எங்களுக்கு ஏது தலைப்பாகை? இது என் மகளின் பழைய சேலை. அதை அவள் சுருட்டி தலையணைப்பொதிக்குள் வைத்திருந்தாள். ஒன்றை நான் எடுத்துக்கொண்டேன். என் மகன் ஒன்றை அவன் தலையில் கட்டிக்கொண்டான்?” என்றார்.

“தங்கள் குண்டலமும் எழிலுடையது” என்றான் இளநாகன். அவர் மேலும் சிரித்து பல்லரை கையால் தொட்டு “தம்பி நன்றாகவே ஏமாந்துவிட்டார். ஐயா, இது எங்கள் வீட்டுக் கன்றின் கழுத்துமணி. இதை பனைநாரில் கோத்து கடுக்கனைக் கழற்றிவிட்டு அந்தத் துளையில் கட்டி தொங்கவிட்டிருக்கிறேன். ஆகவேதான் நான் எதை ஒப்புக்கொள்ளும்போதும் என் காதில் மணியோசை கேட்கிறது!” என்றார்.

அப்போது கிழவரின் மைந்தன் தலைப்பாகையும் குண்டலமுமாக வந்து “தந்தையே, பரிசில் பெற்றவர்களுக்கெல்லாம் ஊண்கொடை அங்கே பந்தலில் நிகழ்கிறது. விரைவாகச் சென்றால் முதல்பந்தியிலேயே அமரமுடியும். மூன்றாம் பந்திக்குமேல் அக்காரஅடிசிலும் தேன்புட்டும் மிஞ்சாது என எனக்கு நம்பும்படியான செய்தி வந்துள்ளது” என்றான். கிழவர் உடனே தன் கீழாடை நுனியை தூக்கி இழுத்துக்கட்டி “உடனே செல்வோம்… நம்மை எவர் முந்திச்செல்வாரென்று பார்த்துவிடுவோம்” என்றார். திரும்பி இளநாகனை சுட்டி “இவ்விளவல் நம்மைப்பற்றி நன்கறிந்திருக்கிறார். இவரையும் அழைத்துச்செல்வோமே” என்றார்.

இளைஞன் ஐயத்துடன் நோக்கி “தங்கள் ஊர் எது?” என்றான். இளநாகன் “அகவன் மகனே! அகவன் மகனே! தலையணை பறித்த நன்னெடும்பாகை அகவன் மகனே! பாடுக பாட்டே! இன்னும் பாடுக பாட்டே! பழையன் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!” என்று கையைத் தூக்கிப் பாட பலர் திரும்பி நோக்கிச் சிரித்தனர். அவன் தன் தந்தை கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு விரைந்து விலகிச்சென்றான். கிழவர் “அவர் பாடிய அந்தப்பாடலை நாம் குறித்துக்கொள்ளலாமே. நம் குலத்தைப்பற்றியல்லவா பாடுகிறார்?” என்று சொன்னபடி பின்னால் சென்றார்.

அப்பால் ஊண்பந்தலின் வாயிலை மறித்த மூங்கில் விலக மக்கள் வெள்ளம் உள்ளே பிதுங்கி மிதித்து கூவி ஆர்ப்பரித்துச் செல்லும் ஒலி எழுந்தது. இளநாகன் புன்னகையுடன் அவற்றைப்பார்த்தபடி நின்றிருந்தான். மறுபக்கம் அரண்மனையின் பெருங்கதவம் திறக்க ஏவல்மைந்தர் எழுவர் வெளியே வந்து கொம்புகளையும் பறைகளையும் ஒலித்தனர். நிமித்திகன் உரத்தகுரலில் “ஐந்நிலத்தையும் வெண்குடையால் மூடி ஆளும் அரசன், மூவேந்தரும் அடிபணியும் மூத்தோன், தென்கடல் தொட்டு வடமலை ஈறாக மண்ணளக்கும் தண்கோலேந்திய கொற்றவன், தென்முடி என மணிமுடி சூடிய மன்னன் சேந்தூர் கிழான் தோயன்பழையன் எழுந்தருள்கிறார்!” என அறிவித்தான். கூடி நின்றவர்கள் கைகளைத் தூக்கி “வாழ்க! வாழ்க!” என்றனர்.

மங்கலப்பரத்தையர் எழுவர் அணித்தாலங்கள் ஏந்தி முன்னால் வர தொடர்ந்து சேந்தூர் கிழான் தோயன்பழையன் கனத்து உருண்டு தன்னை ஆரத்தழுவிய துணைபோலத் தெரிந்த பெருவயிற்றின் மீது மார்பிலணிந்த மணியாரம் சுருண்டு அமர்ந்திருக்க கைகூப்பி வணங்கியபடி வெளியே வந்தார். அவர் தலைக்குமேல் ஒருவன் வெண்கொற்றக்குடையைப் பிடித்திருந்தான். பழையனின் தலையில் பொன்னாலான மணிமுடி வைக்கப்பட்டிருந்தது. பழங்காலத்து மணிமுடியாதலால் அது சற்றுப்பெரிதாக இருந்தது. தலையில் சுற்றிய துணிமீது அதை அழுத்தி வைத்திருந்தார்.

அரண்மனை முற்றத்தில் மன்னனுக்காக போடப்பட்ட மலரணிப்பந்தலில் பழையன் வந்து நின்றபோது முரசுகளும் சங்குகளும் கிணையும் மணியும் சல்லரியும் முழங்கின. மன்னன் அருகே நின்றிருந்த நிமித்திகன் உரக்க “மாமன்னரின் பரிசிலைப்பெற்ற பாவாணர்கள் ஒவ்வொருவராக முன்னால் வந்து அவரை வாழ்த்திப் பாடலாமென மன்னர் ஆணையிட்டிருக்கிறார்” என்றான். அதை எதிர்பாராததுபோல அங்கே முற்றத்தில் கூடி நின்றவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

இளநாகன் கையைத்தூக்கி “நிமித்திகரே, நான் வாழ்த்துப்பா பாட விழைகிறேன்” என்றான். கூடிநின்றவர்களின் உடல்கள் எளிதாவதை உணரமுடிந்தது. பலர் கைநீட்டி இளநாகன் தோளைத்தொட்டு அவனை முன்னால் செலுத்தினர். கையில் தன் கிணைப்பறையும் முதுகில் தோல்மூட்டையுமாக இளநாகன் மணிப்பந்தல் முன் சென்று நின்றபோது அனைவரும் மெல்ல பேசிக்கொள்ளும் ஒலி கலந்து ஒலித்தது. நிமித்திகன் கையைக் காட்டி “அமைதி! இனி எவர் பேசினாலும் அவர்களுக்கு ஊண்பந்தலில் நுழைவு மறுக்கப்படும்” என்று சொன்னதும் அப்பகுதியெங்கும் பேரமைதி நிறைந்தது.

இளநாகன் மேடையேறி தன் முன் கூடியிருந்தவர்களை வணங்கி கிணைப்பறையில் மயில்நடைத் தாளத்தை வாசித்து அகவல் சந்தத்தில் உரத்தகுரலில் பாடத்தொடங்கினான்.

கொற்றக் குடையோய் கொற்றக் குடையோய்
புதுமழை கலித்த வெண்குடை அன்ன
பொல்லா பெருநிழல் கொற்றக்குடையோய்!
இன்சோறு மணப்ப சூழ்ந்தெழு ஞமலியின்
பெருநிரை அன்ன பாணர் குழுமி
தினைப்புனம் புக்க புன்செவிக் காரான்
ஓட்டுதல் எனவே பெருஞ்சொல் ஒலிக்கும்
மாண்புகழ் சிறப்பின் பழையன் முடிமேல்
கவிகை செய்யா கொற்றக்குடையோய்
வாழிய அம்ம நின்திறம் இனிதே.

கூடிநின்றவர்கள் கைகளைத் தூக்கி ‘வாழிய! வாழிய!’ என வாழ்த்தினர். இளநாகன் திரும்பி மன்னனை வணங்கினான். பழையன் தன் கைகளைத் தூக்கி “பாணரே பரிசில் பெற்றுக்கொண்டீரல்லவா?” என்றார். “ஆம் அரசே, மூன்று செம்புக்காசுகளை முறையே பெற்றுக்கொண்டேன்” என்றான். பழையன் உரக்க நகைத்து “ஆம், இன்னும் ஆயிரம் பாணர் வரினும் என்னால் இதே நாணயங்களை அளிக்க இயலும்… செல்க. உணவுண்டு மகிழ்க!” என்றார். அமைச்சர் பெருஞ்சாத்தனார் “அரசே” என ஏதோ சொல்ல வர பழையன் கையைக் காட்டி “வேறுபாணர்கள் பாடுவதென்றால் பாடச்சொல்லும் அமைச்சரே!” என்றார்.

இளநாகன் தலைவணங்கி தன் கிணைப்பறையுடன் கூட்டத்துக்குள் புகுந்து மறைந்தான். அமைச்சர் பெருஞ்சாத்தனார் “அரசே, நான் சொல்வதைக்கேளுங்கள்” என்றார். “பொறுங்கள் அமைச்சரே, அரசுசூழ்தலுக்குரிய நேரம் இதுவல்ல” என்று சொன்ன பழையன் “கற்றுச்சொல்லிகள் இந்தப்பாடலை எழுதிக்கொண்டீர்கள் அல்லவா?” என்றார். ‘ஆம்’ என்று மூன்று கற்றுச்சொல்லிகள் தலையசைத்தனர். “அவற்றில் இரண்டு ஓலைகளை பாணர்களுக்குக் கொடுங்கள். விறலியரும் பாணரும் அவற்றை தமிழ்நிலமெங்கும் பாடட்டும். ஓர் ஓலை நம் அரசு ஓலைநாயகத்திடம் அளிக்கப்படட்டும்” என்றார். “அவ்வண்ணமே ஆகுக” என்று சொல்லி வணங்கினர் கற்றுச்சொல்லிகள்.

மேலாடையை சுழற்றிப் போட்டுக்கொண்டு பழையன் எழுந்து கனத்த ஏப்பம் விட்டு “வைத்தியரே, இரவுணவுக்குமுன் நான் ஒரு மண்டை இஞ்சிமிளகு எரிநீர் அருந்தவேண்டுமென எண்ணுகிறேன். ஆவனசெய்யும்” என்று ஆணையிட்டுவிட்டு மெல்ல நடக்க அமைச்சர் பின்னால் சென்று “அரசே” என்றார். “பொறுங்கள் அமைச்சரே, ஆணைகளை இட்டுவிடுகிறேன்” என்றபின் திரும்பி அணுக்கப்பாங்கனிடம் “ஏழாவது அரசியை இன்று என் மஞ்சத்துக்கு வரும்படி சொல்லும்” என்றார்.

இடைநாழியில் நடக்கும்போது திரும்பி அமைச்சரிடம் “இனி அமைச்சுப்பணியைச் சொல்லும்… சொல்லவந்தது என்ன?” என்றார் பழையன். “அரசே, அந்த இளம்பாணன் பாடியது இசை அல்ல வசை” என்றார் பெருஞ்சாத்தனார். பழையன் நின்று திரும்பி ஒன்றும் துலங்காத விழிகளுடன் நோக்கி “வசையா? யார் மேல்?” என்றார். “அரசே, அவன் தங்களை வசைபாடிவிட்டுச் சென்றிருக்கிறான்.” பழையன் உரக்க நகைத்து “என்னையா? என்னை எதற்காக அவன் வசைபாடவேண்டும்? அவனுக்கு நான் மூன்று செம்புக்காசுகளும் வயிறுநிறைய ஊனுணவும் அல்லவா அளிக்கிறேன்?” என்றார்.

பெருஞ்சாத்தனார் “அரசே, பாணர்களை தாங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை. அவர்கள் செருக்கு மிக்கவர்கள். தங்கள் சொல்திறம் எங்கும் மதிக்கப்படவேண்டுமென விழைபவர்கள். இங்கே நீங்கள் அனைவருக்கும் ஒரே பரிசில் அளித்ததை அவர்கள் அவமதிப்பாகவே கொள்வார்கள்” என்றார். பழையன் சில கணங்கள் திகைத்து நோக்கிவிட்டு “அமைச்சரே, குடிகளனைவரையும் நிகரென நோக்குவதல்லவா கொற்றவனின் கடன்?” என்றார்.

“அரசே, செருகளத்தில் யானைமருப்பெறிந்த மறவனையும் வேலேந்தி வெறுமனே நிரைவகுக்கும் வீரனையும் நிகரென கொள்வோமா என்ன?” என்றார் பெருஞ்சாத்தனார். “அதெப்படிக் கொள்ளமுடியும்? களமறம் வணங்கத்தக்கதல்லவா?” என்றார் பழையன். “ஆம், அதற்குநிகரே சொல்திறமும். முதன்மைச்சொல்லாண்மை கொண்ட பாணனை அரசன் நூறு களம் கண்ட மறவனுக்கு நிகராக வணங்கி அமரச்செய்து சொல்கேட்டு பாராட்டி பரிசில் கொடுத்து வணங்குவதே தமிழ்முறைமை. இங்கே நீங்கள் கற்றோரையும் மற்றோரையும் நிகரென நிற்கச்செய்தீர்கள். வரிசையறியாப்பரிசிலை அவர்கள் நஞ்சென்றே எண்ணுவர்.”

“எல்லா பாணரும் சொல்கற்றவர்கள் அல்லவா? அதனாலல்லவா அவர்கள் குண்டலம் அணிந்திருக்கிறார்கள்? அதைக்கொண்டுதானே நாம் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்?” என்றார் பழையன். “அவர்களில் முதன்மைச்சொல் கொண்ட பாணன் வேறுவகை குண்டலங்கள் அணிந்திருப்பான் என்றால் அதைச் சொல்லவேண்டியவர் நீர் அல்லவா?” என்றார் பழையன் சினத்துடன். “இந்தச் சிறுவன் சொல்லிவிட்டுப்போனதன் பொருளென்ன, சொல்லும்!” பெருஞ்சாத்தனார் பேசாமல் நின்றார்.

“அவன் என் வெண்குடையை வாழ்த்தினான் என்று சற்றொப்ப நான் விளங்கிக்கொண்டிருக்கிறேன்…” என்றார் பழையன். “ஆம் அரசே, அவன் பாடியது பாணர்நாவில் வாழும் தொல்தமிழ் மொழி. நம் செவிமொழிக்குச் சற்றே அயலானது அது…” என்றார் பெருஞ்சாத்தனார். பழையன் சினத்துடன் “நீர் அதன் உண்மைப்பொருளைச் சொல்லும்” என்று உறுமினார்.

“அரசே, அப்பாடலின் பொருள் இதுதான். ‘கொற்றக்குடை ஏந்தியவனே, புதுமழையில் முளைத்த நாய்க்குடை போன்று சிறிய நிழலை அளிக்கும் கொற்றக்குடையை ஏந்தியவனே. இனிய சோற்றுமணம் அறிந்து வந்து சூழும் நாய்களின் கூட்டம்போல பாணர்கள் குழுமி தினைப்புனத்தில் புகுந்த சிறியசெவியுடைய எருமையை ஓட்டுவது போல பேரொலி எழுப்பும் பெரும் புகழ் கொண்ட பழையனின் மணிமுடிமேல் கவிந்திருக்கும் கொற்றக்குடையை ஏந்தியவனே. உன் சிறப்பு இனிதே வாழ்க'” என்றார் பெருஞ்சாத்தனார். அணிப்பரத்தையர் வாயைமூடிக்கொண்டு சிரிக்க பழையன் அவர்களை சினந்து நோக்கி திரும்பி அமைச்சரை நோக்கினார்.

சிலகணங்கள் திகைத்து வெறித்த விழிகளுடன் நின்ற பழையன் “பிடியுங்கள்… பிடியுங்கள் அந்த பாணச்சிறுவனை… இப்போதே அவன் என் காலடியில் கிடக்கவேண்டும்” என்று உடைந்த குரலில் கூவியபடி திரும்பி வெளிமுற்றம் நோக்கி ஓடினார். அவரைத்தொடர்ந்து அணிப்பரத்தையர் தாலங்களுடன் ஓட கொம்பும் சங்கும் ஏந்தியவர்கள் தொடர்ந்தனர். மன்னன் தோளிலிருந்து நழுவிய மேலாடையை எடுக்க ஒரு சேவகன் குனிய அவன் மேல் முட்டிக்கொண்டு பரத்தையர் தாலங்கள் பேரொலி எழுப்ப புரண்டு விழுந்தனர். வெண்குடையுடன் ஓடியவன் குடை நுனி வாயில்சட்டத்தில் முட்டிக்கொள்ள திகைத்து பின்னால் சரிந்தான்.

மணிமுடியை கையில் எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்த பழையன் உரக்க “இப்போது கவிதை பாடிய அந்த சிறுவனைப்பிடியுங்கள்… உடனே…” என்று ஆணையிட்டார். நூற்றுவர் தலைவர்கள் அவ்வாணையை ஏற்று திரும்ப ஒலிக்க படைவீரர்கள் வாள்களும் வேல்களும் ஒலிக்க பாணர்கூட்டம் நடுவே புகுந்தனர். கூச்சல்களும் ஓலங்களும் எழுந்தன. படைவீரர்கள் ஐயத்துக்குரிய பாணர்களை எல்லாம் இழுத்துக்கொண்டு வந்து அரசன் முன் நிறுத்தினர்.

பழையன் அவர்களின் முகங்களை மாறிமாறிப் பார்த்தார். அவரால் எந்த முகத்தையும் அடையாளம் காணமுடியவில்லை. “அமைச்சரே, அந்தப்பதர் இவர்களில் யார்? உடனே சொல்லும். தலையை வெட்டுவதா யானைக்காலில் இடறுவதா என்று முடிவுசெய்வோம்” என்றார். “அரசே, அவர் சிறுவர். இவர்களெல்லாம் அகவை நிறைந்த முதுபாணர்கள்” என்றார் பெருஞ்சாத்தனார். “ஆம். நான் குண்டலங்களையே பார்த்தேன்” என்றார் பழையன்.

“அரசே, அவன் தப்பிச்சென்றுவிட்டிருப்பான். நான் அவன் சொல்லை விளங்கிக்கொண்டுவிட்டேன் என அவன் அப்போதே உணர்ந்தான். ஆகவே உடனே இங்கிருந்து விலகிச்சென்றிருப்பான். அதற்கான நேரமும் அவனுக்கு நம்மால் அளிக்கப்பட்டது” என்றார் பெருஞ்சாத்தனார். “ஆம், ஆனால் அவன் எங்கே சென்றிருக்கமுடியும்? நம் நாட்டை விட்டு அவன் சென்றிருக்கமுடியாது… உடனே நம் ஒற்றர்கள் கிளம்பட்டும். பதினாறு வயதுக்குள் இருக்கும் அத்தனை பாணர்களையும் பிடித்து இங்கே கொண்டு வந்து சேருங்கள்… உடனே செல்லுங்கள்!” என்றார்.

“அரசே, பாணர்களை நாம் பகைக்க முடியாது. அவர்கள் மூவேந்தர்களாலும் புரக்கப்படுபவர்கள்” என்றார் பெருஞ்சாத்தனார். “அதைப்பற்றி நான் எண்ணப்போவதில்லை. உடனே என் முன் அந்தப்பாணன் வந்தாகவேண்டும். என் வெண்குடையை நாய்க்குடை என்றவனை என் கையாலேயே சாட்டையாலடிக்காவிட்டால் நான் மன்னனே அல்ல” என்றார் பழையன். அப்போது பேரொலி எழுந்தது. “என்ன ஒலி அது?” என்றார் பழையன் அதிர்ந்து. “பந்தியில் அக்கார அடிசில் நுழையும் ஒலி அது அரசே” என்றார் பெருஞ்சாத்தனார். பின் குரலைத் தாழ்த்தி “மணிமுடியை அவ்வாறு கையில் வைத்திருக்கலாகாது அரசே… உள்ளே செல்லுங்கள்” என்றார்.

பாடலைப்பாடி இறங்கியதுமே கூட்டத்துக்குள் சென்ற இளநாகன் அவ்வழியே யானைக்கொட்டிலுக்குள் சென்றான். தலைப்பாகையையும் குண்டலங்களையும் கழற்றி தலைப்பாகை துணியை கச்சையாகக் கட்டிக்கொண்டு கிணைப்பறையை அங்கேயே போட்டுவிட்டு மறுபக்கம் சென்று குறுஞ்சாலையில் இறங்கி விரைந்து விலகிச்சென்றான். ஊரில் எங்கும் மக்களே இருக்கவில்லை. அனைவரும் அரண்மனைக்கு விருந்துண்ணச் சென்றிருந்தனர். புல்வேய்ந்த சிறுவீடுகளின் முன்றில்களில் ஆட்டுப்புழுக்கைகளில் அணில்கள் ஆடிக்கொண்டிருக்க ஓரிரு எருமைகள் போதிய ஆர்வமில்லாமல் திரும்பிப்பார்த்தன. ஒரு எருமை மட்டும் ஏதோ வினவியது.

சேந்தூர் பாண்டியனுக்குக் கப்பம் கட்டிவந்த சிற்றரசு. மொத்தமாக எட்டு வீதிகளும் பன்னிரு தெருக்களும் கொண்டது. ஊர் நடுவே மரத்தாலான பெரிய அரண்மனை. ஊரைச்சுற்றி மண்ணைக்குவித்து சுவர் எழுப்பி மேலே முள்மூங்கிலை அடர்த்தியாக வளர்த்து சேர்த்துக்கட்டி வேலியமைத்திருந்தனர். கோட்டை வாயிலில் ஒரே ஒரு காவலன் ஈட்டியை சாய்த்து வைத்துவிட்டு மேலாடையை தரையில் விரித்து கண்மூடிப் படுத்திருந்தான். இளநாகன் கடந்துசென்றதை கோட்டைமேல் குந்தியிருந்த இரண்டு சேவல்கள்தான் பார்த்தன. அப்பால் மூன்றுகாலில் நின்று தூங்கிக்கொண்டிருந்த குதிரை அந்த ஒலிக்கு தோல் சிலிர்த்ததென்றாலும் கண்ணைத்திறக்க பொருட்படுத்தவில்லை.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

நடுப்பகலின் வெயில் மின்னிக்கிடந்த வயல்வெளியை விரைவாகக் கடந்து அப்பால் இருந்த குறுங்காட்டுக்குள் நுழைந்து புதர்கள் வழியாகச் சென்றபோதுதான் புரவிகளின் குளம்போசையைக் கேட்டான். புதர்களுக்குள் ஒடுங்கியமர்ந்து அவனைக் கடந்துசெல்லும் கனத்த கால்களை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் எழுந்து காடுவழியாகவே அடுத்த ஊருக்குச் சென்றபோது அங்கே பழையனின் வீரர்கள் ஊர்மக்களிடம் வினாக்களெழுப்பியபடி நிற்பதைக் கண்டான். இனிமேல் சேந்தூர் அரசின் எந்த சிற்றூருக்குள்ளும் நுழைய முடியாது என்று உணர்ந்துகொண்டான்.

காட்டுக்கிழங்குகளையும் காய்களையும் தின்று ஊற்றுநீரைக் குடித்தபடி, மரக்கிளைக் கவர்களில் துயின்றபடி, இளநாகன் சென்றுகொண்டிருந்தான். நான்காம்நாள் அவன் சேந்தூருக்கு மிக அப்பால் விரிந்த பொட்டல் பாதையில் சென்றுகொண்டிருந்த உமணர்குழு ஒன்றைக் கண்டான். பெரிய வெள்ளெருதுகளால் இழுக்கப்பட்ட பன்னிரு கனத்த சகடங்கள் உப்புச்சுமைகளுடன் சென்றன. அவற்றைச்சூழ்ந்து உமணர்கள் கைகளில் கூர்வேல்களும் விற்களுமாக நடக்க அவர்களின் உடைமைகளுடன் மூன்று சிறியவண்டிகள் பின்னால் சென்றன.

கைகளைத் தூக்கியபடி அவர்களை அணுகிய இளநாகன் தன்னை ஒரு கணியன் என்றும் தன்பெயர் இளநாகன் என்றும் அறிமுகம் செய்துகொண்டான். அக்குழு மதுரைக்குச்செல்வதை அறிந்து தானும் சேர்ந்துகொள்ளலாமா என்று கேட்டான். அவர்களின் தலைவன் இளநாகனை அருகே அழைத்து அவன் கைகளை விரித்து நோக்கினான். உழுபடையும் கொலைப்படையும் தேராத கைகள் கொண்டவன் அவன் என உணர்ந்ததும் “மதுரைக்குச் சென்று என்ன செய்யப்போகிறீர்?” என்று கேட்டான். “அங்கே பேரவையில் என் திறம் காட்டி பரிசில் பெறப்போகிறேன்” என்றான் இளநாகன். “இங்கே என் திறமறிந்து பரிசிலளிக்கும் மன்னரென எவருமில்லை.”

உரக்க நகைத்து உமணர்தலைவன் சொன்னான் “ஆம், சின்னாட்களுக்கு முன்புகூட இங்கே பழையன் அவையில் ஒரு பாணன் வரிசையறியா பரிசிலளித்தமைக்கு வசைபாடி மறைந்துவிட்டான் என்கிறார்கள்.” அவனைச்சூழ்ந்திருந்த உமணர்கள் நகைத்தனர். “கீரா, அந்தப்பாடலைப்பாடு” என்றான் தலைவன். இளையவனாகிய கீரன் புன்னகையுடன் தன் கையில் இருந்த மரப்பெட்டியில் தட்டியபடி “கொற்றக் குடையோய் கொற்றக் குடையோய்! புதுமழை கலித்த வெண்குடை அன்ன பொல்லா பெருநிழல் கொற்றக்குடையோய்!” என பாடத்தொடங்கினான்.

இளநாகன் புன்னகைசெய்தான். “வாரும்” என்றான் உமணர்தலைவன். “இன்னும் பன்னிருநாட்களில் நாம் பெருநீர் பஃறுளியைக் கடந்து தென்மதுரை மூதூரை அடைவோம். அங்கே உமக்குரிய பரிசில்கள் காத்திருக்கக்கூடும். மதுரை கல்வியின் நகரம். கல்விசேர்த்த செல்வம் ஒளிவிடும் நகரம்” என்றான். கீரன் பாடி முடித்ததும் ஒருவன் சிரித்துக்கொண்டு “பழையன் இந்தப்பாடலை தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பரப்ப அரும்பாடுபடுகிறான். நூற்றுக்கணக்கான வீரர்கள் வேல்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். அனைவரும் நகைத்தனர்.

“உணவு அருந்தினீரா பாணரே?” என்றான் தலைவன். இளநாகன் இல்லை என தலையசைத்ததும் கீரனை நோக்கி தலைவன் தலையசைத்தான். அவர்கள் அங்கே ஒரு ஆலமரத்தடியில் நுகமிறக்கி கொடுங்கால் ஊன்றினர். அங்கே சிறிய ஊற்று ஒன்று இருந்தது. வண்டியில் இருந்து பானையை இறக்கி வைத்து அதனுள் இருந்து அள்ளிய புளித்த கம்புக்கூழை கமுகுப்பாளை கோட்டிய தாலத்தில் அகப்பையால் அள்ளி வைத்து இளநாகனுக்கு அளித்தான் கீரன்.

இளநாகன் உண்ணும்போது கீரன் புன்னகையுடன் “அழகிய பாடல் பாணரே” என்றான். இளநாகன் கூழ் புரைக்கேறி இருமியபடி நிமிர்ந்தான். “உமது காதுத்துளைகள் நீண்டவை. குண்டலங்களை அணிந்தமையால் உருவான நீளம். நீர் தப்பி மதுரைக்கு ஓடுகிறீர்” என்று கீரன் புன்னகைசெய்தான். இளநாகன் பேசாமல் பார்த்தான். “அஞ்சாதீர்… எங்கள் குழுவில் இருக்கையில் எவரும் உம்மை ஏதும் செய்யமுடியாது” என்றான் கீரன். இளநாகன் புன்னகைசெய்தான்.

“எங்கு செல்கிறீர்? மதுரையில் எவரைப் பார்க்கவிருக்கிறீர்?” என்றான் கீரன். “எங்கு செல்வதென்று இன்னும் எண்ணவில்லை” என்றான் இளநாகன். “நேற்றிரவு துயிலாமல் மரத்தின் மேலிருக்கையில் எண்ணிக்கொண்டேன். வீரன் வாழ்வு சிறிது. மன்னன் வாழ்வு அதைவிடச்சிறிது. அவர்களைப் பாடிவாழும் பாணன் வாழ்வோ கால்களைக்க ஓடியும் காலடி நீளம் கடக்காத எறும்புக்கு நிகர் என…”

கீரனை நோக்கி எழுச்சி ஒளிவிட்ட விழிகளுடன் இளநாகன் சொன்னான் “எங்கும் இல்லை. வெறுமனே சென்றுகொண்டே இருக்கவேண்டுமென எண்ணுகிறேன். இச்சிறு மண்ணில் இன்றிருந்து நாளை மறையும் மக்களை பாடி சிறுவாழ்வு வாழலாகாது. மதுரை அல்ல என் இலக்கு. அது என் ஏணியின் முதலடி. நான் ஏறிச்செல்லவிழைகிறேன்.” கீரன் சிரித்து “எங்கே?” என்றான். “வடக்கே… அவ்வளவுதான் இன்று என் எண்ணம்” என்றான் இளநாகன். “அஸ்தினபுரிவரை சென்றுவிடுவீர்கள் போலிருக்கிறதே” என்றான் கீரன்.

அச்சொல் எழுந்த கணம் தலைவன் மணியோசை எழுப்பி “உணவுண்டவர்கள் எழுக! பொழுதடைய இன்னும் நேரமில்லை” என்றான். “நன்னிமித்தம்” என்றான் கீரன். “அவ்வாறே ஆகட்டும் கீரரே” என்றான் இளநாகன்.

முந்தைய கட்டுரைதேர்வு செய்யப்பட்ட சிலர்
அடுத்த கட்டுரைஆண்,பெண்,சமூகம் – இருகடிதங்கள்