கண்ணதாசன், இசைப்பாடல்:கடிதங்கள்

கண்ணதாசனைப்பற்றிய உங்கள் பதிவில் சொன்ன விஷயங்களைப்பற்றி நான் தொடர்ச்சியாக சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு இசைபபடலில் நம்மால் உயர்ந்த கருத்துக்களை எந்த அளவுக்குச் சொல்ல முடியும்? இன்றைய கவிதை என்பது அதிகமும் அறிவார்ந்ததாக உள்ளது. அதை இன்றைய சினிமாப்பாடல் எந்த அளவுக்குக் கொண்டுவரமுடியும்? பீட்டில்ஸின் பாடல்வரிகள்தான் பொதுவாக உலக அளவில் மிகச்சிறந்த இசைப்பாடல்கள் என்று சொல்லப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் மிகவும் உணர்ச்சிகரமானவையாக உள்ளன. அவை ஒருவகை பிதற்றல்கள் என்று தோன்றுகின்றன. அந்தமாதிரி இருக்கும்போதுதானே நல்ல இசைபபடல் உருவாகிறது. ஆகவே அது அடிபப்டையிலேயே நல்ல கவிதைக்கு எதிரான விஷயமல்லவா?

 

சங்கர்

[மொழியாக்கம்]

 

 

அன்புள்ள சங்கர்,

 

உண்மையில் நல்ல கவிதையேகூட ஒருவகை பிதற்றல்தான். அறிவார்ந்த தளத்தில் இருந்து மேலே எழுந்து உணர்ச்சியாலும் ஆன்மீக எழுச்சியாலும் பிதற்றலாக ஆகும்போதெ உயர்கவிதை சாத்தியமாகிறது. கவிதையின் ஒரு சிறுபகுதிதான் அறிவார்ந்தது. மிச்சமெல்லாம் உணர்வெழுச்சியும் ஆன்மீக எழுச்சியும் கொண்டவையே. சிறந்த உதாரணம் பிரமிள் தேவதேவன் கவிதைகள்.

 

இசைப்பாடல் என்பதை நாம் கற்பனவாதக் கவிதை எனலாம். கற்பனாவாதக் கவிதைக்கு’ சின்னஞ்சிறு கிளியே’  என உணர்ச்சியால் உருகி வழியவும் ‘எங்கள் வேள்விக்கூடம் மீது ஏறுதே தீ தீ’  என்று  கொந்தளிக்கவும் உரிமை இருக்கிறது. இசைப்பாடல் அந்த உணர்ச்சியை இசையுடன் சேர்த்து இன்னும் கொஞ்சம் மேலே கொண்டுசெல்லலாம்.

 

இரண்டு தளங்களில் பா என்ற வடிவம் அதன் உச்சகட்ட அரற்றலை அடைய முடியும். ஒன்று தன்னிரக்கம், தனிமை., விரகம்.

 

வசந்தகாலக் கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்

கனவுகாணும் வாழ்க்கையாவும்

கலைந்துசெல்லும் மேகங்கள்

துடுப்புகூட பாரம் என்று

கரையைத்தேடும் ஓடங்கள்

 

இரண்டு காதலின் நெகிழ்வு,கனிவு –

 

பாடும்போதுதான் தென்றல்காற்று

பருவ மங்கையோ தென்னங்கீற்று

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

 

வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்த பாடல்கள். முதல் வகையில் செய்யுளின் சாயல் மிச்சமிருக்கிறது. இரண்டாவது வகை புதுக்கவிதையின்பாற்பட்டது. ஆனால் இரண்டுமே ஒரேமாதிரி இடத்தில்  நுண்ணுணர்வின் நுனிவரை சென்றுள்ளன.

 

இவற்றை கவிதையில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்?

 

ஜெ

 

 

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

கவிஞர் கண்ணதாசன் அவர்களைப் பற்றிய தங்கள் பதிவு, அதைத் தொடர்ந்த கடிதங்கள், என்று படித்துக் கொண்டே வருகையில், கடிதங்கள் பதிவின் கீழே தாங்கள் கொடுத்திருக்கும் சுட்டியைத் தொடர்ந்து அப்படியே தங்கள் கேள்வி-பதில் 69 பக்கத்திற்கும் சென்று இப்போது தான் படித்து முடித்தேன்.

தங்கள் பதிவுகளைப் படிக்கும் போது அவ்வப்போது வந்து போகிற எண்ணம் தான்; மீண்டும் வந்து போனது: நான் 15 வருடங்களுக்கு முன்பு இலக்கியம் (ஆங்கிலம்) பயின்ற காலத்தில், உங்களைப் போன்ற ஆளுமைகளின் அறிமுகமே இல்லாமல் போனதே என்கிற ஒரு ஆதங்கம்! நாங்களும் பாடத்திட்டத்தின்படி “Lyric” பற்றியும் பிற இலக்கிய வடிவங்கள் (literary forms) பற்றியும், மரபுக் கவிதை மற்றும் புதுக் கவிதை பற்றியும், இசை சார்ந்த பாடல் புனைவு (“Lyric” from the name of the musical instrument “lyre”)  மற்றும் இசை-வடிவம் சாரா புனைவுகள் பற்றியும் கற்றது நினைவில் உண்டு. ஆனால், தாங்கள் விவரிக்கும் போது, அதே கருத்துக்கள் ஓர் அறுவைசிகிச்சை நிபுணரின் கத்தியின் துல்லியத்துடன் (with the precision of a surgeon’s scalpel) வரையறுக்கப்படும் நேர்த்தி வியக்க வைக்கிறது! நன்றி!

கொஞ்சம் தயக்கத்துடனும், கற்றுக்கொள்ளும் மற்றும் குறைகளைக் களையும் நோக்கத்துடனும் தான் இவற்றைத் தங்கள் முன் வைக்கிறேன் (நான் இசையமைத்து அவற்றுக்கு எழுதிய பாடல்கள்):
http://www.blogswara.in/v4/02_Kaathirundhen.html
http://www.blogswara.in/v5/04_azhaithathu.html
http://www.blogswara.in/v5/12_poothaadum.html

தங்களது கேள்வி-பதில் 69 படித்து முடித்தவுடன் மனதில் எழுந்த ஐயம், நான் சரியான திசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேனா, அல்லது எனக்கு இப்படி எழுதுவது ஏதோ காரணத்தால் வசதியாக வருவதால் (அல்லது அப்படித் தோன்றுவதால்) இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேனா, என்பதே. (முக்கியமாக, தாங்கள் சொன்ன “சொல்லிச்சொல்லிக் காதுக்குப் பழகிய அணிகள்” என்கிற கோணத்தில்.)

மறுபக்கம், இது இயல்பாக வருவதாகத் தோன்றுகிறது; இதனை உடைத்து வேறு வகையில் சிந்திக்க அல்லது சிந்தனையை வடிக்க முற்படுவது எழுத்தில் ஒருவகையான செயற்கைத் தன்மையைக் கொண்டுவந்து விடுமா? [ஒப்பு நோக்க, metaphysical poetry எப்போதுமே புதுமை என்கிற பெயரில் ஒரு விதமான செயற்கைத் தன்மை (affectation) நீட்டிமுழக்கும் உவமைகள் (far-fetched similes), மிகைவாதங்கள் (hyperbole) போன்றவை கொண்டதாகவே பார்க்கப்படுகிறதே தவிர உள்ளபடியே புதுமைத்தன்மை கொண்டதாக அல்ல.]

இந்த இரு குழிகளுக்குள்ளும் விழாது தங்க நடுப் பாதையைத் (“golden middle path” – ரொம்ப மொழி “பெயர்க்கிறேனோ”?  :-/ ) தேர்ந்தெடுப்பது எப்படி? தங்கள் எண்ணங்கள் மேலும் வழிகாட்டலாக இருக்குமென நினைக்கிறேன்.

நன்றி.

அன்புடன்,
விஜய்.

 

அன்புள்ள விஜய்

 

நல்ல கேள்வி.. இதே கேள்வி எனக்கே ஒவ்வொரு முறை எழுதிமுடிக்கும்போதும் வருவதுதான். கலையை உருவாக்கும்போது மன எழுச்சியும் முடிந்ததுமே ஐயமும் எந்தக்கலைஞனுக்கும் வரும். அந்த ஊசல் வழியாக நீங்கள் எப்போதுமே கடந்துசென்றுகொண்டேதான் இருக்கவேண்டும்.

 

உங்கள் பாடல்களை கவனித்தேன். இசை இயல்பாக உள்ளது, ஆனால் நுண்கலையுடன் எப்போதும் இருந்தாகவேண்டிய புதுமை என்ற அம்சம் இல்லை. பாடல் என்றவகையில் இவை எளிதாக உள்ளன என்பதே என் எண்ணம்.

 

பாடல், இசை ஆகியவற்றைப்பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது.  ஆனாலும் பாடல் வடிவை ஒரு கவிதை வடிவாக எண்ணி சில சிந்தித்திருக்கிறேன்.

பா என்ற வடிவத்திற்கு மூன்று மன்னிப்புகள் உண்டு

1. அது பிற கவிதைகளை எடுத்தாளலாம்.

2. அது கற்பனாவாதத்தில் கொஞ்சம் அதிகமாகவெ போகலாம்

3. கொஞ்சம் தேய்வழக்குகளை பயன்படுத்தலாம். அன்பே, உயிரே என்றெல்லாம்.

 

ஆனால் பாடலில் ஒரு புதுமை தேவை. அதிகமாகக் கேள்விப்படாத சொற்சேர்க்கைகள் புதிய உவமைகள் இருக்கவேண்டும். இல்லையேல் அவை இசையின் இனிமையால் கேட்கப்பட்டாலும் சீக்கிரமே சலித்துவிடும்.

 

உதாரணமாக

 

நினைவோ ஒரு பறவை

விரிக்கும் அதன் சிறகை!

போன்ற ஒரு வரி இசை கொஞ்சம் பழகினாலும் நினைவில் நீடிக்கும். ஆனால் அப்படி ஒரு பொருளழகு இல்லாத வரிகள்  அவை அளிக்கும் அனுபவத்தை காலப்போக்கில் இழந்துவிடும். உதாரணமாக எனக்கு மிகப்பிடித்த இசை கொண்ட

 

சந்தா ஓ சந்தா

இவள் சம்மதம் தந்தா

என்ற வரியை எப்போது கேட்டாலும் எரிச்சல்தான்.

 

உங்கள் வரிகள் பெரும்பாலும் சாதாரணமாக உள்ளன என்று படுகிறது. புதியதாக எழுதவேண்டும் என எண்ணினால் எழுதிவிடலாம்

 

ஜெ

முந்தைய கட்டுரை‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..
அடுத்த கட்டுரைமாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்